எறும்புகளின் ஜீனோம், யானை டாக்டர், செயற்கைக்கால் யானை

இங்கே கீழே தரப்பட்டிருக்கும் வீடியோவில் சில சுவாரசியங்கள் இருக்கின்றன. சென்ற வாரத்தில், அதீதமான நோயெதிர்ப்பாற்றல் கொண்டிருக்கும் அர்ஜெண்டீனிய எறும்புகளின் ஜீனோம்கள் படிக்கப்பட்டிருக்கின்றன. இதைக்குறித்து Calacadamey-யைச் சேர்ந்த எறும்பு நிபுணர் Dr.ப்ரையன் ஃபிஷர், இந்த எறும்புகளின் ஜீனோம்களைப் புரிந்துகொள்வதன் மூலம் மனிதர்களும் இந்த எறும்புகளைப் போல, தங்கள் வியாதிகளை எதிர்க்கும் அதீதமான நோயெதிர்ப்பு சக்தி பெறும் வழிகளைக் கண்டறியலாம் என்கிறார். ‘ஹோபி’ என்ற தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பழங்குடியினரிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதன்படி, ஏற்கனவே மனித இனம்  இந்த உலகத்தில் மூன்று முறை இருந்ததாகவும், மூன்று முறையும் உலக அழிவின்போது, சில தெரிவு செய்யப்பட்ட அறிவாற்றல் கொண்டவர்கள் பூமிக்கடியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ஒருவேளை, பூமிக்குள்ளே பல நகரங்களையே கட்டி தானியங்களை பத்திரமாக சேகரித்து வரும் அறிவாற்றலும், அதீதமான நோயெதிர்ப்பும் கொண்ட அர்ஜெண்டீனிய எறும்புகளைத்தான் அப்படிக் கருதினார்களா என்ற சுவாரசியமான கேள்வியோடு முடிகிறது இந்த வீடியோ.

ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய ‘யானை டாக்டர்’ என்ற சிறுகதையில் மிகவும் சிந்திக்கத்தக்க, கவனத்தில்கொள்ள வேண்டியதொரு விஷயத்தைக் குறித்து எழுதியிருக்கிறார். காட்டுக்குள் நுழையும் மனிதர்கள், காட்டையும், காட்டுயிர்களையும் வெகு உதாசீனமாக நடத்துவதை பிரச்சாரமாக இல்லாமல் நெகிழ்ச்சியான சிறுகதையாகத் தந்திருக்கிறார். குறிப்பாக, காட்டுக்குள் குடித்துவிட்டு உடைத்துவீசும் மது பாட்டில்கள் யானைகளின் கால்களைப் பதம் பார்த்து, அவற்றின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் இழிசெயலையும் பதிவு செய்திருக்கிறார். ஜெயமோகன் ஆவணப்படுத்தியிருக்கும் வால்பாறைக் காடுகள் மட்டுமில்லாமல், முதுமலைப்பகுதிக்குள் வெகு வேகமாகச் செல்லும் வாகனங்கள் அடிபட்டு பல மான்கள், அரிதான சிங்கவால் குரங்குகள் போன்றவை வருடந்தோறும் உயிரிழந்துவருகின்றன.

காட்டுக்குள் நுழையும் குடிகாரர்கள் மட்டுமல்ல, ஆயுதமேந்தும் போராளிகளுமே யானைகளின் உயிர்களுக்கு எமன்கள்தான். தாய்லாந்தில் காட்டில் பதிக்கப்பட்டிருந்த கன்னிவெடியில் கால்வைத்துச் சிதறி, காலை இழந்த ஒரு யானைக்கு செயற்கைக் கால் பொருத்தி மீண்டும் நடக்க வைத்திருக்கிறார்கள். அதைக் குறித்ததொரு நெகிழ்ச்சியான வீடியோ செய்திக்குறிப்பை கீழே பார்க்கலாம்.