பாஸ்கலின் பந்தயம்

faith-and-reason

ஒருமாதமாகவே ஏர்ல் ஆனந்தம் தனியாகத் தூங்குகிறான், செலஸ்டி மாடியிலும், அவன் கீழே நூலகத்தை ஒட்டிய விருந்தினருக்கான அறையிலும். ஜுன்பெர்ரி கல்லூரியின் இயற்பியல் பிரிவில் டென்யுர் (நிரந்தர பேராசிரியர் பதவி) கிடைக்க வேண்டுமே என்கிற தவிப்பில், ‘என்னைத் தொந்தரவு செய்யாதே!’ என்று அவள் சொன்னதைக் கட்டளையாக ஏற்றான். தவிப்பு எதிர்பார்த்ததுதான். டென்யுர் தேர்வில் முக்கால்தூரம் தாண்டுவது என்பது இல்லை. கிடைக்காவிட்டால் கல்வியாண்டு முடியும்போது வேலையிலிருந்து விலகி வேறு இடம் தேடவேண்டும். முப்பத்திநான்கு வயதில் ஆரம்பக்கட்டத்துக்கு மறுபடி போக வேண்டும். கடந்த ஆறாண்டுகளில் அவள் சாதித்ததை வரிசைப்படுத்தி, வகுப்புப் பாடங்களிலிருந்து ஆராய்ச்சிவரை எதிர்கால திட்டங்களை விவரித்து, சமுதாயத்துக்கு எப்படி உதவுவது என்று யோசிக்க நேரமும் ஆழ்ந்த கவனமும் அவசியம். சனி ஞாயிறு உட்படி எல்லாநாளும் பகல் மாலை நேரங்களை கல்லூரியில் செலவிட்டாள். வாரநாட்களில் அவன் வேலைக்குப் போகும்வரை அவளிடமிருந்து எந்த சத்தமும் வராது. இரவில் அவள் சிந்தனைகளில் குறுக்கிடாதிருக்க தனித்தனி அறை. வார இறுதியில் ஒருசில நிமிடங்கள் அவன் கண்ணில்படுவாள். அப்போதும், “எப்படி போகிறது?” “இன்னும் சிலநாள்தான்” என்கிற சம்பிரதாய வார்த்தைகள். வீட்டிற்குள்ளேயே சிறுபிரிவு. அது அவர்களின் நல்லுறவுக்கு அவசியம் என்றே ஆனந்தம் நினைத்தான். அவன் அம்மா பிறந்த வீட்டை பகைத்துக்கொண்டு அப்பாவை மணந்தவள். ‘ஒரு நாலுநாளாவது உங்களையெல்லாம் விட்டுப்பிட்டு தனியா போறத்துக்கு ஒரு இடமில்ல’ என்பது அவளுக்கு பெரியகுறை. செலஸ்டியும் அப்படித்தான். அவனைப் பிரிந்துசெல்வது ஆண்டுக்கு ஒருமுறை ஏபி மாநாட்டின்போது, மூன்று இரவுகள். அதுவிட்டால், அவள் அண்ணன் பாட்ரிக் வீட்டுக்கு, ஒரு நாள்.

இன்று அவளுக்கு டென்யுர் வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் அவன் தனியாகப் படுத்திருக்கிறான்.

தோலின் நிறத்திலிருந்து இருவருக்குள் எத்தனையோ வித்தியாசங்கள். செலஸ்டி காகேஷியன், ஆனந்தம் திராவிடன். அவளுக்கு எல்லா நாளும் எல்லா வேளையும் இறைச்சி வேண்டும். மாடு, பன்றி, கோழிக்குஞ்சு, மீன், நண்டு என்று உயிரினங்களில் வித்தியாசமில்லை. அவன் செங்கல்பட்டில் வளர்ந்தபோது தினத்துக்கொரு பாதி முட்டை, வாரத்துக்கொரு வேளை மட்டன் பிரயாணி. அதற்குமேல் குடும்ப நிதிநிலமை அனுமதித்ததில்லை. இப்போதும் அந்தப் பழக்கம். வீட்டில் அவரவர்களுக்கு பிடித்த உணவு. பீட்ஸா வாங்கும்போது ஒருபாதியில் பெப்பரோனி, இன்னொரு பாதியில் ஆட்டுக்குட்டி இறைச்சி, அது இல்லாவிட்டால் வெறும் காய்கள். நூற்றியெழுபது செமீக்குள் குறுகிய உடற்கட்டு அவனுக்கு. யு.எஸ். வந்ததிலிருந்து அறுபது கிலோ. மிஞ்சிப்போனால் ஒன்றிரண்டு இந்தப்பக்கம், அந்தப்பக்கம். அவளுக்கு குயின் சைஸ் ஆடைகள். உடலின் கொழுப்பு முப்பது சதத்துக்குமேல். திடீரென்று, “நான் ரொம்ப குண்டு இல்லை? ஏர்ல்!” என்று கேட்பாள். நிஜத்தை சொல்லாமல், “பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லையே” என்றோ, “கொஞ்சம் குறைக்கலாம்” என்றோ சமாளிப்பான். பத்துபவுண்டுகளை இழக்கும் முடிவுடன் மூன்றுமாதம் டயட் உணவு. சாக்லேட், வறுவல், ஐஸ்க்ரீம், வெண்ணெய் கிடையாது. அந்த சமயத்தில் அவளுக்காக ஆனந்தமும் அவற்றுடன் காய்விடுவான். எடை இழந்த சந்தோஷத்தில் அதிகமாக சாப்பிட்டு ஒரு வாரத்தில் திரும்ப பழைய உருவம்.

பாங்க்கில் தனித்தனி கணக்கு. அவரவர் வருமானத்தில் செலவு. நான்கு படுக்கை-அறைகள் கொண்ட வீட்டை கடனில் வாங்காமல் வாடகைக்கு எடுத்து வாடகையையும் பகிர்ந்துகொண்டார்கள். அவளுக்கு வீடு நிறைய சாமான்கள் வாங்கி நிரப்ப ஆசை. புத்தகங்களைத் தவிர வேறெதுவும் இல்லாத அவனுடைய புத்தக அறையின் எளிமையில் அவள் குறுக்கிட்டதில்லை. அவளுடைய ஆடைகளையும் காலணிகளையும் அடுக்க இரண்டு அறைகள். அவன் உடைகளுக்கு பத்து ஹாங்கர்கள் போதும். கராஜில் நிற்கும் சமீபத்திய லெக்சஸ் அவளுடையது. படிப்பை முடித்தபோது வாங்கிய கரோல்லாவுக்கு இன்னும் ஆயுள் மிச்சமிருந்ததாக அவன் நினைத்தான்.

இவை எதுவும் அவர்கள் உறவை பாதித்தில்லை. காரணம்? ஒரு முக்கியமான நோக்கில் இருவருக்கும் ஒற்றுமை. அதுதான் அவர்களை அறிமுகப்படுத்தி பிறகு இணக்கமாக இருக்க வைத்தது. அதைப்பொறுத்தவரை அவர்களுக்குள் மனவேறுபாடு வரவே முடியாது என்று ஆனந்தம் நினைத்திருந்தான்… இன்றுவரை.

கார்னீகி-மெலன் பல்கலைக்கழக மாணவர் செய்தித்தாளின் தலையங்கப்பகுதியில், ‘குவெய்ட் போர் அவசியமா?’ ‘மாணவ வாழ்க்கைக்கு கார் தேவையா?’ போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகள் இடம்பெறும். மாணவர்களின் கருத்துகளை அறிய ஆனந்தம் அவற்றை மேலோட்டமாகப் படிப்பதுண்டு. இயற்பியல் ஆராய்ச்சி மாணவி ஒருத்தியின் கட்டுரை ஆனந்தத்தை மிகவும் கவர்ந்தது. அதன் பொருள் புதிதல்ல. ஆனால், எழுதப்பட்டதுதான் அதிசயம்.

“ஹாய், செலஸ்டி வாட்ஸ்கி! நான் ஆராய்ச்சி மாணவன் ஏர்ல். நானும் உன்னைப்போல் முன்னாள் கிறித்தவன்.”

“அப்படியா? இன்டரஸ்டிங்.”

“உன் கட்டுரை என் மனதில் நினைவு அலைகளை எழுப்பியது. அதைப்பற்றி பேசலாமா?” என்று ஏதோ விஞ்ஞான அறிக்கையை அலச விரும்புவதுபோல் கேட்டான்.

“ஷுர். நீ எங்கே இருக்கிறாய்?”

“பேகர் ஹால்.”

“இன்னும் பத்த நிமிடங்களில் வருகிறேன். எந்த அறை?”

“நானே கட்டடத்தின் வாசலில் காத்திருக்கிறேன்.”

எதிர்பார்த்து நின்றிருந்தவனும், கண்களை ஓட்டி வந்தவளும் ஒருவரையொருவர் அடையாளம்காண அதிக நேரமெடுக்கவில்லை. ஷீன்லி பார்க்கில் மதிய உணவைத் தின்னும்போது பரஸ்பர அறிமுகம். பிறகு, பேசிக்கொண்டே நடந்தார்கள். அவள் நீலம் மங்கிய குட்டைப்பாவாடையிலும் சுருங்கிய வௌ;ளை சட்டையிலும். அவன் ஜீன்ஸிலும், ஸ்டீலர் டி-சட்டையிலும். நான்குநாள் தாடி வேறு. அதனால் அந்த சந்திப்பை ‘டேட்’ என்று சொல்வது சரியில்லை.

கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் அவள் சொன்னபோது உயிர் பெற்றன.

“நான் விசுவாசமான கத்தோலிக குடும்பத்தில் பிறந்தேன். ஏழுபேரில் நான் கடைக்குட்டி. என் கடைசி அண்ணன் பாட்ரிக் என்னைவிட ஆறு வயது பெரியவன். அவனிடம் மட்டும் கொஞ்சம் ஒட்டுதல். நான் பள்ளியில் சேருவதற்குமுன்பே மற்றவர்கள் வீட்டிலிருந்து வெளியே போய்விட்டார்கள். பாவம், நரகம், சந்தேகமற்ற விசுவாசம் என்ற எல்லா கத்தோலிக கொள்கைகளும் எனக்கு அத்துப்படி. நான் வளர்ந்த பகுதியில் எங்களைப்போல் நிறைய போலிஷ் மக்கள். எல்லோருக்கும் போப் கடவுளுக்கு சமானம். அதனால் என் பழுப்புக்கூந்தலைப்போல கத்தோலிக்கமும் என்னுடன் பிறந்ததாக நினைத்தேன்.”

“என் அப்பா காலத்தில்தான் மதமாற்றம் நடந்தது. அதனால் அவருக்கு கிறித்துவத்தில் ஈடுபாடு அதிகம். நானும் உன்னைப்போல் கடைக்குட்டி. பிறக்கும்போதே நான் கிறித்தவன். அதனால் குடும்பத்தில் எனக்குப் பெருமை.”

“மன்னிப்பு பெறுவதற்காக சின்னசின்ன பாவங்களை, சில சமயங்களில் கற்பனையாகக்கூட, எழுதிவைப்பேன். இப்போது நினைத்தாலும் வேடிக்கை.”

“அவநம்பிக்கை எப்போது ஆரம்பித்தது?”

“எனக்கு பதின்மூன்று வயதிருக்கலாம். அம்மாவும் நானும் மாலுக்கு சென்றோம். கடைகளைச் சுற்றிவிட்டு களைத்துப்போய் உட்கார்ந்தோம். அடுத்த பெஞ்ச்சில் ஒரு நிறைமாத கர்ப்பிணி. தள்ளுவண்டியில் ஒன்றரை வயதுக்குழந்தை. அதைத்தவிர சின்னஞ்சிறிசுகள் மூன்றிலும், நான்கிலும். அவர்களைப் பார்த்ததும் என் அம்மாவுக்கு தன்னைப்பற்றி சொல்லத் தோன்றியிருக்கலாம். என் பிரசவத்தின்போது மிகவும் கஷ்டப்பட்டதாக சொன்னாள். முதல் நான்கு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்ததும் குழந்தை பெறுவதை அத்துடன் நிறுத்திவிட்டு பாதியில் விட்டுப்போன படிப்பைத் தொடர அவளுக்கு ஆசை. ஆனால், அது நடக்கவில்லை. அப்போதுதான் கருத்தடை மாத்திரை புழக்கத்தில் வர ஆரம்பித்திருந்தது. போப் அதற்கு ஒப்புதல் தரவில்லை. அப்பாவும் ஆதரவாக இல்லை. அதைக் கேட்டதும் பெண்ணின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாத சர்ச்சின் மீது மதிப்பு குறையத் தொடங்கியது.”

“அப்புறம்…”

“அவநம்பிக்கை வந்ததும் சர்ச்சின் முறையற்ற காரியங்கள் தெரியவந்தன. அறிவியல் படித்ததும் மதப்புத்தகத்தில் சொன்னதெல்லாம் சரியா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பி.எஸ்.ஸின்போது பிற மதத்தினருடன் பழகி பரந்த மனப்பான்மை வந்தது. சர்ச்சிற்கு போவதை நிறுத்தினேன். அதை கவனித்த என் பெற்றோர்கள் அதிகம் கவலைப்படவில்லை. நான் ஹரே க்ருஷ்ணாவில் சேரவில்லையே யென்று திருப்திப்பட்டார்கள். ஏழு குழந்தைகளில் ஒரேஒரு வழிதப்பிப்போன ஆடு. விரைவில் மயக்கம் தெளிந்து வீட்டுக்கு திரும்பிவிடும் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். தியரிடிகல் ஃபிசிக்ஸில் ஆராய்ச்சி தொடங்கியதும் நாத்திகத்தின் கண்ணோட்டத்தில் உலகைப் பார்த்தேன். போன கிறிஸ்மஸ்ஸின் போது வீட்டில் சொல்லிவிட்டேன். அப்பாவுக்கு அசாத்திய கோபம். என்னை சரியாக வளர்க்கவில்லை என்று பச்சாதாபம். அம்மாவும் என் கட்சியில் இல்லை. அங்கே இருந்த நான்கு நாளும், என்னை எப்படி வழிக்கு கொண்டுவரலாம் என்று தலைக்குத்தலை பேச்சு. என்னால் பொறுக்க முடியவில்லை. கிறிஸ்மஸ்ஸுக்கு முதல்நாளே திரும்பிவந்தேன். இனி வீட்டுக்குப் போனால் ஒரு இரவுக்குமேல் தங்கமுடியுமா என்பது சந்தேகம்தான்.”

சிறிதுநேரம் மௌனமாக நடந்தார்கள்.

“நான் தத்துவத்தில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றதும் மேலும் படித்து பைபிளுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். அவருக்கு ஏமாற்றம் தராமல் தியாலஜியில் டாக்டர் பட்டம் வாங்க பாஸ்டோரல் யுனிவெர்சிடிக்கு சென்னையிலிருந்து வந்தேன்.”

“வெய்ன்ஸ்வில், வர்ஜினியாவில் இருக்கிறதே?”

“அதுதான். நம்பிக்கையை பல ஆண்டுகளில் கொஞ்சம்கொஞ்சமாக நீ இழந்திருக்கிறாய் என்று தெரிகிறது. எனக்கு ஒரோயொரு செமிஸ்டர்தான். மதம் என்பதே ஆத்மா, சொர்க்கம், பூர்வ ஜென்மம், இயற்கை விதிகளை இஷ்டத்துக்கு மீறிய அற்புதங்கள் என்ற மாயச்சீட்டுகளை வைத்துக்கட்டிய கோபுரம். எல்லா சீட்டுகளும் அந்தந்த இடத்தில் இருக்கும்வரைதான் அதற்கு ஒரு உருவம். ஒன்றை எடுத்தால் முழு கோபுரமும் சரிகிறது, ஒரு நாத்திகன் உருவாகிறான்.”

“ம்ம். சுவாரசியமான கண்ணோட்டம். உனக்கு எது அந்த சீட்டு?

“ஒட்டகம்.”

“வாட்?”

“என் அப்பா சரித்திர ஆசிரியர் என்பதால் எனக்கு வரலாறு விருப்பப்பாடம். பாடத்துக்கு அவசியமில்லாத புத்தகங்களையும் படிப்பது வழக்கம். ஆதிகால இடப்பெயர்ச்சிகளில் ஒட்டகவரிசைகள் பயன்படுத்தப்பட்டன என்று பைபிளில் சொல்லப்படுகிறது. முப்பது நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ஒட்டகங்கள் அந்த அளவுக்கு புழக்கத்தில் இல்லை. ஏப்ரஹாம் எகிப்து சென்றதும் அங்கிருந்து திரும்பியதும் கற்பனை என்றால் பைபிளில் வேறெது சரித்திரத்துக்கு முரண்பாடாக இருக்கும் என்று ஆராய ஆரம்பித்தேன்.”

“பொதுவாக அறிவியல்தான் நாத்திகத்துக்கு வழிசெய்யும் என்பார்கள். உனக்கு சரித்திரமா? விசித்திரம்தான்.”

“ஆண்டவனின் திருவிளையாடலை யாரே அறியவல்லார்!” என்று கேலியாகச் சிரித்தான். “பைபிளின் கதைகளும், கிரேக்க ஹிந்து புராணங்களைப் போல, நிஜமான இடங்களையும், ஒருசில சரித்திர மனிதர்களையும் வைத்து ஜோடித்த கற்பனை என்று தெரிந்ததும் கடவுள் நம்பிக்கை போய்விட்டது. பாஸ்டோரல் சர்ச் கொடுத்த பணத்தில் படிப்பைத் தொடர்வது நியாயமில்லையென இங்கே வந்தேன்.”

“உன் அப்பாவுக்கு ஏமாற்றமோ?”

“பொதுவாக அப்பாக்களைவிட அம்மாக்களுக்குத்தான் மதத்தில் அதிக ஈடுபாடு என்று இந்தியாவில் சொல்வது வழக்கம். என் அம்மா என்னைப் புரிந்துகொண்டாள். ‘நீ நல்லவனாக இருந்தால் போதும், கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் என்ன?’ என்றாள். ஆனால், சென்றமுறை இந்தியா போனபோது அப்பா என்னோடு பேசக்கூட இல்லை. அந்த விதத்தில் எனக்கு வருத்தம்.”

 boy_and_camel

இப்படித் தொடங்கிய நட்பு காதலாக பரிணமித்து ஏழாண்டுகளுக்குமுன் அவர்கள் பிஎச்.டி முடித்தபோது சட்டப்படி திருமண உறவாக மாறியது.

அன்று காலையில் அவள் எழுந்து குளிக்கும் சத்தம் கேட்டுத்தான் ஆனந்தம் விழித்தான். அவனைப் பொறுத்தவரையில் அன்றைய கூட்டம் வெறும் சம்பிரதாயம். அவளுக்கு டென்யுர் கிடைத்ததும் அதை கொண்டாட அவளுக்குப் பிடித்த ‘டெக்சஸ் ஸ்டேக் ஹவுஸி’ல் விருந்துக்கு சொல்லியிருந்தான். பிறகு, நார்த் கரோலைனாவின் கடற்கரையை ஒட்டிய தீவில் நான்கு நாள் விடுமுறைக்கு ஏற்பாடு.

அவள் இறங்கி வருவதற்குள் சீஸும், முட்டையும் நடுவில் வைத்து சுட்ட சான்ட்விச்.

“தாங்க்ஸ் ஏர்ல்!”

கூந்தலை அளவாகப் பரப்பி, சாம்பல்நிற பான்ட்-சூட்டில் பெரிய உடலை அடக்கி, முகத்தில் ஆர்வத்தை வெளிக்காட்டினாள். முன்பின் தெரியாதவளைப் பார்ப்பதுபோல் இருந்தது. ஒருமாதம் நீண்டகாலம் போல் தோன்றியது. “யு ஆர் எலிகன்ட்” என்றதும் புன்னகைத்தாள். “உன் தோற்றத்துக்கே டென்யுர் தரவேண்டும்.”

தினப்படி நியதிக்கு மாறாக ஆனந்தம் அவளை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றான், அவளுடைய லெக்சஸில். டிசம்பருக்கு ஜுன்பெர்ரியில் சற்று குளிர் அதிகம்தான். ஒன்பது மணிக்கு முன்னதாகவே அறிவியல் கட்டடத்தின் வாசலில் காரிலிருந்து இறக்கிவிடுமுன், “குட்லக்!” வாழ்த்துடன் ஒருமுத்தம். ஆங்கில மேஜர் அல்லாத மாணவர்களுக்கான எழுத்துத்திறன் வகுப்பும், மதங்களின் வரலாற்றை விளக்கும் தத்துவ வகுப்பும் ஆனந்தத்தை செலஸ்டி பற்றி அதிகம் யோசிக்கவிடவில்லை. அலுவலக அறைக்குத் திரும்பியபோது பதினொன்றரை. தொலைபேசியில் செய்தியை அறிவிக்கும் விளக்கு எரியவில்லை. பதினோரு மணிக்குள் எல்லாம் முடிந்திருக்க வேண்டுமே. அவள் அலுவலகத்தை அழைத்தான், பதிலில்லை. ஒருவேளை, நல்லவிதமாக முடிந்ததைக் கொண்டாடுகிறார்களோ. அவனும் அதில் கலந்துகொண்டால் போகிறது. அறிவியலுக்கான இடத்தில் காரை நிறுத்திவிட்டு மார்டின் ஹால் நோக்கி நடந்தான். வாசற்படிக்கட்டில் குளிரைப் பொருட்படுத்தாமல் சாம்பல்நிற பான்ட்-சூட். அவன் அருகில்வந்து நின்றபிறகும் அவள் அவனை கவனிக்கவில்லை.

“செலஸ்டி! எப்படி போயிற்று?”

ஏறிட்டுப்பார்த்தாள், பதில் சொல்லவில்லை. அவன் கேள்வி காதில்விழுந்ததா அல்லது விழுந்தும் அவளுக்கு புரியவில்லையா என்ற சந்தேகத்தில் மறுபடி கேட்டான்.

“வீட்டிற்கு போனதும் சொல்கிறேன்” என்று எழுந்தாள்.

உண்டு, இல்லை என்று சொல்ல ஏன் தாமதம்? காருக்கு நடந்து அதில் வீடு திரும்பும்வரை அவள் முகத்தில் எதாவது தெரிகிறதா என்று ஆனந்தம் தேடினான். ஏமாற்றத்தைவிட கவலைதான் அதிகம். டென்யுர் கிடைக்காவிட்டால் வேறொரு இடம் தேடிப்போகிறது. அவனுக்கும் ஜுன்பெர்ரியை விட்டு அவளைத் தொடர்ந்து இன்னொரு வேலைக்கு போவதில் மறுப்பு இல்லை. ஏன் கவலைப்பட வேண்டும்?
வீட்டிற்குள் நுழைந்து ஜன்னல் திரைகளை மூடினாள்.

“சோஃபாவில் உட்கார்!”

அவன் எதிரில் வந்து நின்றாள்.

“குட் நியு+ஸ், பாட் நியு+ஸ்.”

நல்ல சேதி என்னவென்று தெரியும். மோசமான செய்தி என்ன?

“கமிட்டியின் முன் எல்லாவற்றையும் திட்டமிட்டபடி விவரித்தேன், சந்தேகங்களுக்கு பதில்சொன்னேன். அவர்கள் முடிவை விவாதிக்க என்னை வெளியே அனுப்பியபோது நான் ஓய்வறைக்கு சென்றேன். அங்கே செக்ரடரி விட்னி. அவளுக்கு கான்சர் என்று ஒரு மார்பை வெட்டிவிட்டார்கள். அவளைப் பார்த்ததும் ஒருமாதமாக என் மார்புகளை அழுத்தி சோதிப்பது விட்டுப்போனது நினைவுக்கு வந்தது. அங்கேயே…” அழுகை வாக்கியத்தை பாதியில் நிறுத்தியது.

மேல் கோட்டு, வௌ;ளை சட்டை, கடைசியில் ப்ராவை அவிழ்த்தாள்.

“என்னுடைய இடது மார்பில்…” மறுபடி அழுகை.

அவன் துழாவிப்பார்த்தான். சந்தேகத்துக்கு இன்னும் சிலதடவைகள். காகித வௌ;ளையான
இடதுமார்பின் வெளிப்புறத்தில் ப்ளுபெர்ரி பழத்தை பதித்ததுபோல் ஏதோ கையில் தட்டுப்பட்டது.

அவனுக்கு உடலில் ஆசை கிளர்ந்தாலும் நிலையை உணர்ந்து அது அடங்கிவிட்டது.

அவள் வருடாந்திர ‘செக்-அப்’புக்குச் செல்லும் ஜுன்பெர்ரி விமன்ஸ் க்ளினிக்கை அழைத்தான். உடனடியாக கவனிக்க வேண்டுமென கேட்டான். சம்மதம் கிடைத்தது.

“லெட் அஸ் கோ!”

கல்லூரி வளாகத்தை ஒட்டிய இரண்டு மாடிக் கட்டடம். செலஸ்டியை நர்ஸ் சோதனைக்கு அழைத்துச் சென்றாள். காத்திருக்கும் நேரத்தில் டெக்சஸ் உணவகத்தையும், கடற்கரைத் தீவின் செவன்த் இன்னையும் அழைத்து ரிசர்வேஷனை ரத்து செய்தான். மனதை வெற்றிடமாக்க வெளியே பார்த்தான். மதிய உணவு சாப்பிடாததை வயிறு சிலதடவைகள் நினைவுபடுத்தி, பிறகு அதனால் பலனில்லையென முயற்சியை கைவிட்டது.

“டாக்டர் உங்களை அழைக்கிறார்.”

உள்ளே மருத்துவ கௌனில் கவலை முகத்தோடு செலஸ்டி. செவ்வக ஒளிப்பரப்பில் மாட்டிய மாமோக்ராம். அதில் கிரகணப்படம் போல் ஒருசிறு வட்டம். டாக்டருக்கு சோக செய்தியை பலமுறை அறிவித்த பழக்கம். குரலில் ஆதரவையும், நம்பிக்கையையும் கலந்து, “கட்டி இருப்பது உண்மை, ஆனால் அது ஆபத்தில்லாத வெறும் கட்டியாக இருக்கலாம்” என்றார்.

ஆனந்தம் சற்று நிம்மதியடைந்தான்.

“உடனே அதை வெளியே யெடுத்து ‘பயாப்ஸி’ செய்வது நல்லது. இங்கே வசதியில்லை. எனக்கு ட்யுக் டாக்டர் ஒருவரைத் தெரியும்” என்று அவர் அங்கிருந்தே யாருடனோ தொடர்பு கொண்டார்.

“அவரை பேஜ் செய்திருக்கிறார்கள்.”

இன்னும் சில நீண்ட நிமிடங்கள். உரையாடல் தொடர்ந்ததும், “நாளை காலை எட்டு மணிக்கு?” என்று ஆனந்தத்தைப் பார்த்தார்.

“கட்டாயம் அழைத்துப்போகிறேன்.”

ஒப்புதலை எதிர்முனைக்கு தெரிவித்ததும் ஆண்கள் இருவரும் அறைக்கு வெளியே வர செலஸ்டி உடை மாற்றினாள்.

குற்ற உணர்வை போக்கிக்கொள்ள, “ஒரு மாதத்திற்குமுன் கட்டிக்கான அறிகுறி இருந்ததாக நினைவில்லை” என்றான் ஆனந்தம்.

“வேகமாக வளர்ந்ததால் அது கான்சர் இல்லையெனத் தோன்றுகிறது.”

செலஸ்டி வெளிப்பட்டதும் டாக்டர் வரவேற்பிடம்வரை வந்து விடைகொடுத்தார்.

“பயாப்ஸி நெகடிவாக இருக்குமென்று நம்புவோம்.”

“தாங்க்ஸ் டாக்டர்!”

காருக்குள் அமர்ந்ததும் அதுவரை கட்டுப்படுத்திய செலஸ்டியின் அழுகை பிரவாகமாக கொட்டியது. ஆனந்தம் அவளை கட்டிக்கொண்டான். “எல்லாம் சரியாகிவிடும்” என்று திருப்பித்திருப்பிச் சொன்னான்.
அழுகையை கட்டுப்படுத்தி, “நான் சொல்லப்போவது ஆச்சரியமாக இராது என்று நம்புகிறேன்” என்று ஆரம்பித்தாள்.

அதிர்ச்சி தரும் விஷயம் எதுவாக இருக்கும்? “எதுவானாலும் இப்போது எதற்கு?” என்றான்.

“சிலகாலம் போகட்டுமென நேற்று நினைத்தேன். இன்று எல்லாம் மாறிவிட்டது. இது சரியான தருணம்.” இடைவெளி கொடுத்து, “நான் ஏசுவை திரும்ப கடவுளாக ஏற்க முடிவுசெய்துவிட்டேன்” என்றாள்.
கஷ்டம் வரும்போது கடவுளை நினைப்பது எதிர்பார்த்ததுதான், ஆனால் இத்தனை வருஷம் கழித்து ஏன்?

“அவர் முழுக்க என்னைக் கைவிட்டு போய்விடவில்லை. உண்மையில் நான்தான் அவரை விரட்டினேன். அடிமனதில் ஒளிந்திருந்தவரை இப்போது திரும்பவும் கண்டுபிடித்தேன்.”

“நீ இப்போது மிகவும் பயந்து போயிருக்கிறாய். நிதானமாக யோசித்து…”

“ஒருமாதமாகவே என் மனம் அமைதியில்லாமல் இருந்தது. டென்யுருக்கு உழைத்தபோது இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று மனதில் ஒரேகுழப்பம். கல்லூரிக்கான என் எதிர்காலத் திட்டத்தில் கடவுள் பெயர் எங்கும் இல்லை. மதத்தின் அடிப்படையில் அமையாத அறிவியல் அஸ்திவாரம் இல்லாத கட்டடம். எத்தனை நாளைக்கு தாங்கும்?”

“அறிவியலும் சமயமும் முரண்பாடான வாதங்கள். இரண்டிற்கும் பொதுவான கருத்துக்கள் எதுவுமில்லை.” மதத்தின் கட்டுப்பாட்டில் வளர்ந்த மாணவர்களிடம் பரிணாமத்தை ஏற்பதற்காக பிரயோகிக்கும் காரணங்களை மனைவிடமே சொல்ல வேண்டிவரும் என்று அவன் நினைக்கவில்லை. அவளும் அதைக் காதில் போடாமல் தொடர்ந்தாள்.

“கடவுளை நம்ப ஆரம்பித்ததிலிருந்து புனர்ஜென்மம் எடுத்ததுபோல் இருக்கிறது.”

“ஒவ்வொரு நாளுமே நாம் புதிதாகப் பிறந்தோம் என்று வைத்துக்கொள்வோம்.” அதற்கு கடவுள் நம்பிக்கை அவசியமில்லை என்பது தொக்கிநின்றது.
பேச்சு தொடராமல் மௌனம் நீடிக்கவே, ஆனந்தம் காரைக் கிளப்பி கட்டடத்தை சுற்றிவந்து தெருவில் சேருவதற்குமுன் நின்றான்.

“வலது பக்கம் போ!”

“வீட்டிற்கு இடது பக்கம்தானே திரும்ப…”

“தெரியும். அந்த வழியில்தான் நியு ஷெபர்ட் சர்ச் இருக்கிறது.”
அவள் விருப்பப்படியே காரை செலுத்தினான். அந்த வழியில் செல்வது அந்த காருக்கு அதுதான் முதல்தடவை. நாலைந்து விளக்குகளுக்குப்பிறகு சர்ச் ஸ்ட்ரீட்டில் திரும்பி கண்ணாடிக் கட்டடத்தின் முன்னால் நிறுத்தினான். அந்த சர்ச்சை அதுவரை அவன் நேரில் பார்த்ததில்லை. ஞாயிறு காலை பொய்க்கு பழக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சப்பைக்கட்டுகளையோ, ‘நிபுணர்களின்’ அரைவேக்காடன கருத்துகளையோ கேட்க போரடித்தல் கிறித்தவ சான்னலை பார்ப்பதுண்டு. நிகழ்ச்சியின் முதலில் நியு ஷெபர்ட் சர்ச்சின் வெளித்தோற்றம், பிறகு போதனை, கடைசியில் ப்ரார்த்தனை. பாஸ்டருக்கு அரசியல்வாதியின் தோற்றம், ஒருகாலத்தில் அறிவியல் படித்ததால் அதில் நிபுணத்துவம் இருந்ததாக காட்டிக்கொள்பவர். பிரசங்கத்தை பாஸ்கலின் பந்தயத்திலிருந்து தொடங்குவது அவருக்கு ரொம்பப்பிடிக்கும்.

விஞ்ஞானிகள் கடவுள் இருப்பதையோ இல்லாததையோ இதுவரை நிரூபிக்கவில்லை, இனியும் நிரூபிக்கப்போவதில்லை. அதனால், இரண்டுக்கும் பாதிபாதி சாத்தியம் என்று, ஒரு பேச்சுக்கு, வைத்துக்கொள்ளலாம். கடவுள் இருப்பது உண்மையானால் விசுவாசிகளுக்கு நிரந்தர சொர்க்கம், அவர் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை, ஆனந்தமாக வாழ்ந்த திருப்தி. ஆனால் நாத்திகன் பாடு இரண்டு வழிகளிலும் திண்டாட்டம். கடவுள் இல்லையென்றால் அர்த்தமற்ற வாழ்க்கை, இருந்தால் இறந்தபின் முடிவற்ற நரகம். இப்போது சொல்லுங்கள்! யாருக்கு இழப்பு?
அதைக் கேட்கும்போதெல்லாம், ‘நான் இறந்தபின் கடவுளை சந்திக்க நேர்ந்தால் அரசியல் நோக்குடன் புனையப்பட்ட நூல்களை புனிதமென ஏற்காத என்னை அவர் பாராட்டத்தான் செய்வார். நம்பிக்கை இல்லாததால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை’ என்று அவரிடம் சொல்ல ஆனந்தத்துக்கு ஆசை.
காரிலிருந்து இறங்குவதற்காக செலஸ்டி கதவைத் திறந்தாள்.

“என்னுடன் வருகிறாயா?”

நேரடியாக மறுக்காமல், “ட்யுக் பெயர்பெற்ற மருந்தகம். டாக்டர்கள் உன்னை குணப்படுத்துவது நிச்சயம்” என்றான்.

“எனக்காக… இதை செய்யக்கூடாதா? செலவில்லாத இன்ஷுரன்ஸ்.”

“நாளை பயாப்ஸி என்ன சொன்னாலும் நான் உனக்குத் துணையாக இருப்பேன். இந்த வாக்குறுதியைத் தவிர வேறென்ன வேண்டும்?”

“ஏசுவை ஏற்பதில் உனக்கு என்ன நஷ்டம்?”

“முழுமனதாக ப்ரார்த்தித்தால் சரி. பொய்யாகச் செய்வதில் என்ன லாபம்?”

“ஒருகாலத்தில் விசுவாசமாகத்தானே இருந்தாய். பத்து வருஷமாகத்தானே நாத்திகன்.”

“நான் கோபத்தினாலோ, பாவம் செய்வதற்காகவோ கடவுளை விடவில்லை. அவசியமில்லை என்பதால்தான்.”

“இப்போது அவசியம் ஏற்பட்டிருக்கிறது.”

உரையாடல் மறுபடி மௌனத்தில் முடிந்தது.

காரிலிருந்து இறங்கி சர்ச்சை நோக்கி நடந்தாள். அவள் வருவது ஜன்னல் வழியாக தெரிந்திருக்க வேண்டும். பாஸ்டர் கதவைத்திறந்து அவளை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார்.
முன்னறிவிப்பில்லாமல் உருவான பிரச்சினைக்கு என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை.
அவர்களுக்குள், மனதில் தங்காத எத்தனையோ சிறு சச்சரவுகள். எதுவும் ஒருவேளைக்குமேல் நீடித்ததில்லை. ஒன்றுமட்டும் சமாதானத்தில் முடிய இரண்டுநாள் எடுத்தது. நான்காவது திருமண நாளை அவன் மறந்துவிட்டான். அதொன்றும் அதிசயமல்ல. திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி காட்டுவதுபோல் அவள் ஆயிரம் டாலர் வௌ;ளை கௌனிலும், அவன் கறுப்பு கோட் பான்ட்ஸிலும் பிரகாசிக்க, பெரிய சர்ச்சின் கும்பலுக்கு நடுவில் அந்த வைபவம் நடக்கவில்லை. ஒரு பப்ளிக் டென்னிஸ் கோர்ட், ஒரே மாதிரியான டென்னிஸ் ஆடை. கிறித்தவ மதத்தின் பற்பல பிரிவுகளுக்கு பொதுவான ஒரு பாஸ்டர். நீச்சல்குளம், ஹாங்க்-க்ளைடிங் திடல் என்று கூப்பிட்ட இடத்துக்கு வருகிறவர். செலஸ்டியையும் ஆனந்த்தத்தையும் இணைத்துவைத்து, “டென்னிஸ் இரட்டையர் ஆட்டத்தில் இருவரும் கண்ணுக்குத் தெரியாத ஆறடி கயிற்றில் கட்டியதுபோல் ஒன்றாக நகர்ந்து ஆட வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல நீங்களும் பாசக்கயிற்றில் இணைந்து வாழவேண்டும்” என்ற வாழ்த்தியதும் முடிந்துவிட்டது. மனதில் தங்காத ஒருமணி நேரம். ஆனந்தத்துக்கு மறக்காதநாள் அவளுடன் ஷீன்லி பார்க்கில் முதன்முறை நடந்தது. நியாயமாகப் பார்த்தால் அதைத்தான் கொண்டாட வேண்டும்.

அதுவரை கிட்டத்தட்ட ரூம்-மேட் போல இருவரும் வாழ்ந்ததாகத் தோன்றியது. அதனால் அவனிடம் அவநம்பிக்கை தோன்றியிருக்கலாம். இனி இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தான். டென்யுர் கிடைத்ததால் இப்போதிருக்கும் வீட்டை விலைக்கு வாங்கி இருவர் பெயரிலும் பதிவு செய்யலாம். செலஸ்டியும் கருத்தடை மாத்திரையை நிறுத்திவிடுவாள். குழந்தை இருவரையும் இணைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் சிறிதுநேரம் செலவிட்டான்.

செலஸ்டி உள்ளேசென்று இரண்டுமணியே ஆகியிருக்கும். அவர்கள் இருப்பதாக நினைத்த முன்னறையில் விளக்கு எரியத் தொடங்கியது. அவளுடன் சென்றிருக்க வேண்டுமோ என்று யோசிக்கையில் வாசற்கதவு திறந்தது. செலஸ்டியும் பாஸ்டரும் வெளியே வந்தார்கள். “காட் ஈஸ் ஆல்வேஸ் வித் யு” என்று அவர் வாழ்த்தியது காதில் விழுந்தது. பிறகு அவன் பக்கம் திரும்பி கையசைத்தார். அவனும் சுமுகமாக கையாட்டினான். செலஸ்டியின் முகத்தில் மயான அமைதி. பார்க்கவே பயமாக இருந்தது. எதுவும் பேசவில்லை. அவர்கள் வசித்த தெருவின் மற்ற வீடுகள் சான்டா க்ளாஸையும், பெங்குவினையும் பிரகாசமாகக் காட்டியபோது அவர்கள் வீடு மட்டும் இருளில் மூழ்கியிருந்தது. காரிலிருந்து இறங்கி அவள் முதலில் வீட்டில் நுழைந்தாள். அவன் நுழைந்தபோது மாடி அறையின் கதவை அடித்து சாத்தும் சத்தம். அவன் படியில் ஏறாமல் கீழேயே நின்றான். மரத்துப்போன வயிறு எதையும் விரும்பிக் கேட்கவில்லை. ஒரு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தான்.

அவளுக்கு என்பதால் அவன் கடவுளிடம் அக்கறை காட்டவில்லையோ என்று மனசாட்சி குறுகுறுத்தது. அவனுக்கே நுரையீரலில் புற்றுநோய் என்றால்… வந்தால்தான் தெரியும். ஆபத்தில் பொய் தவறில்லை. மறுநாள் எழுந்ததும் நாத்திகத்தை, அவளுக்காகவாவது, விட்டுவிடுவதாக அவளிடம் சொல்ல தீர்மானித்ததும் கொஞ்சம் தூக்கம் வந்தது.

வீட்டிலிருந்து கிளம்பி கோல்ட்ஸ்பரோ, பிறகு நெடுஞ்சாலை எழுபது. ட்யுக் மருந்தகத்தை அடைய இரண்டுமணியாவது ஆகும். அதனால் ஆறுமணிக்கு முன்னதாகவே கிளம்பினார்கள். அலாரம் வைத்து ஐந்துமணிக்கு ஆனந்தம் எழுந்தபோதே செலஸ்டி சமையலறையில் தயாராக இருந்தாள். அவளுக்காக காரை கிளப்பி சூடாக்கி வைத்தான். அவளிடம் கைப்பையைத் தவிர, பின்-இருக்கையில் வைத்த சிறு பயணத்துக்கான தோள்-பை. அன்றே திரும்பிவிடலாமே இரண்டாவது பை எதற்கு? கேட்க பயமாக இருந்தது. விருந்துக்குப் போவதுபோல் நீண்ட ஆடை, அதிகப்படியான ஒப்பனை. தோற்றத்திலிருந்து கோபமா, கவலையா, அல்லது கைவிட்ட மனநிலையா எதுவென்று ஊகிக்கமுடியில்லை. ஊரைத்தாண்டுவதற்குமுன் ஒரு நாய் திடீரென்று தெருவில் நுழைந்து ஆனந்தம் வேகத்தைக் குறைக்குமுன் வண்டியில் மோதி தரையில் விழுந்தது. அதன் விதியை நினைத்து ஆனந்தத்துக்கு வருத்தம். தலையைத் திருப்பி செலஸ்டியைப் பார்த்தான். கண்கள் திறந்திருந்தாலும் அவள் அதை கவனிக்கவில்லை. அவனுடன் பேசவில்லை முந்தைய நாளின் மௌன யுத்தம் தொடர்ந்தது. இரண்டு மணி யுகமாக நீண்டது.

ட்யுக் புற்றுநோய் மருந்தகத்தின் முகப்பில் நோயாளிகளை இறக்கிவிடும் இடத்தில் நிறுத்தினான். முதன்முறையாக அவள் அவன்பக்கம் திரும்பினாள்.

“செலஸ்டி! நீ இறங்கு! நான் காரை நிறுத்திவிட்டு வருகிறேன்.”

“அவசியமில்லை. ஏர்ல்! இதுதான் நம் கடைசி சந்திப்பு.” வார்த்தைகளுக்கு நடுவில் இடைவெளிவிட்டு சொன்னாள்.

“செலஸ்டி! நான் துணைக்கு இருக்கிறேன். உனக்கு சரியாகிவிடும்.”

“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. கவலையை நான் எப்போதோ விட்டுவிட்டேன். நம் எதிர்காலங்கள் வெவ்வேறு திசைகளில், இணைய வழியே இல்லை. நான் இங்கேயே விடைபெறுகிறேன். நீ வீட்டிற்குத் திரும்பிப் போகலாம்.”

வார்த்தைகளின் அர்த்தம் புரிந்ததும் அவள் மனதை மாற்ற என்ன சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை. குரலின் உறுதி மாற்றத்துக்கு இடம் தரவில்லை. இருந்தாலும், “செலஸ்டி! ப்ளீஸ். தீவிர முடிவெடுக்க இது நேரமில்லை” என்றான்.

“இதுதான் சரியான நேரம். நன்றாக யோசித்துதான் முடிவெடுத்திருக்கிறேன். எனக்கு கான்சரா இல்லையா என்பது முக்கியமில்லை. எதுவானாலும் எனக்குத்துணை இனி ஏசு கிறித்துதான்” என்று சொல்லிக்கொண்டே காரிலிருந்து இறங்கினாள்.

“தாங்க்ஸ் ஃபார் எவரிதிங். பை!”

கைப்பையையும், தோள்-பையையும் எடுத்து நடந்தாள். அவனும் இறங்கி காரின் கதவைத் தாங்கி நின்றான். அவளைத் தொடரலாமா என்று எண்ணினான். அவள் வேகமாக கதவைத்தாண்டி உள்ளே சென்றுவிட்டாள்.

நாத்திகத்தில் இழப்பு இல்லை என்கிற ஆனந்தத்தின் கணக்கு பிசகிவிட்டது. அவன் இழந்துவிட்டான். இழப்பு எதுவென்று யோசிப்பதற்குள், காவலாளி அவசரப்படுத்தவே காருக்குள் அமர்ந்து அதை நகர்த்தினான். அவன் திரும்பிப் போகவேண்டிய இடம் கடல்களையும், பாலைவனங்களையும் தாண்டி தொலைவில் எங்கோ…