kamagra paypal


முகப்பு » அரசியல், சமூகம்

வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர்

க்ஸிங்ஸியாங்(Xinjiang) மாகாணத் தலைநகரான உரும்சி(Urumqi) எங்கும் பீதி நிறைந்துள்ளது. நகரமெங்கும் பெண்களின் கதறலைக் கேட்க முடியும். வெகுஜன மக்கள் தங்கள் கையில் கோடாலிகளுடன் வலம் வருவதை சர்வ-சாதாரணமாகக் காணமுடியும். யாரும் எந்நேரமும் தாக்கப்படலாம். ஹன் சீனர்கள் உய்குர் சீனர்களையும், உய்குர் சீனர்கள் ஹன் சீனர்களையும், மக்கள் காவல்துறையையும், காவல்துறை மக்களையும், ஒவ்வொருவரும் மற்றவரை அஞ்சுகின்றனர். திடீரென முளைக்கும் பேரணிகளும், அதைத் தொடர்ந்த வன்முறைகளும், உயிரிழப்புகளும் நகரத்தை பயத்தின் கொடிய நரகத்திற்குள் தள்ளிவிட்டது. ஹன் சீனர்கள் மற்றும் உய்குர் சீனர்களுக்கு இடையே நடைபெறும் இந்த வன்முறையில், பிற சிறுபான்மை குழுக்களான உய்(Hui) சீனர்களும் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தங்கள் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இளைஞர்கள்(பெண்களும்) திடீரென காணாமல் போவதை மிக சகஜமாக ஏற்றக் கொள்ளவும் மக்கள் பழகியிருக்கிறார்கள்[1]. தன்னுடைய அடுத்த கணம் எப்படி இருக்கும் என்ற கேள்வி நகரத்தின் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. “குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் தூக்கிலிடப்படுவார்கள்”, எனும் சீன கம்யூனிஸ கட்சி தலைவர் லீ ஜீ-யின் அறிவிப்பு மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்படுகிறது. இந்நகரத்தை அவ்வளவு எளிதாக பயத்தின் பிடியிலிருந்து விடுவித்துவிட முடியாதபடி அரசின் நடவடிக்கைகள் உள்ளன.

(c) http://www.spiegel.de

(c) http://www.spiegel.de

—000OOOOooo—

மார்ச் 14, 1992இல் லெப்டினண்ட் ஜெனரல் ஜாவெத் நாஸிர் என்பவர் ஐ.எஸ்.ஐ என்ற பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்திலேயே இன்றைய சீனாவின் ஜிஞ்சியாங் மாநிலத்தில் நடக்கும் கலவரங்களுக்கான விதை ஊன்றப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்போது ஐ.எஸ்.ஐ என்ற இந்த உளவு நிறுவனமே தாலிபான்களது முக்கியமான துணையாக இருந்தது. இவர் உருவாக்கிய பெஷாவர் ஒப்பந்தத்தின் பின்னர் ஆப்கானிய போராளிகள் ஒப்புக்கொண்டபடி ஷிப்கத்துல்லா மொஜாதிதி என்பவரின் தலைமையில் முதன்முதல் ஆப்கானிய முஜாஹிதீன் அரசு அமைக்கப்பட்டது. போஸ்னியாவின் முஸ்லீம்களுக்கு பாகிஸ்தானிலிருந்து ஆயுத சப்ளை செய்யப்பட்டது. இவரது ஆதரவின் கீழ், தப்லீகி ஜமாத் என்ற பாகிஸ்தானிய இஸ்லாமிய அமைப்பு மிகப்பெரிய அமைப்பாக வளர்ச்சி பெற்று உலகெங்கும் தன் கிளைகளை நீட்டியது. ரகசியமாக பல நாடுகளுக்கு ஆயுதங்களும் தீவிரவாத இஸ்லாமிய பிரச்சாரகர்களும் அனுப்பப்பட்டனர். பல நாடுகளும் தீவிரமாக இவரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசை கேட்டுகொண்டனர். அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு இவரை பதவியிலிருந்து நீக்கவேண்டும், இல்லையேல் பாகிஸ்தானை பயங்கரவாத அரசு என்று அறிவிப்போம் என்று பாகிஸ்தான்

அரசை கேட்டுக்கொண்ட பின்னர், மே 1993இல் இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

கட்டாய ஓய்வு பெற்றதும் இவர் தப்லீகி ஜமாத்தில் முக்கிய அதிகாரியாக பதவியேற்றார். தப்லீகி ஜமாத் ஒரு ரகசிய அமைப்பு. இது பத்திரிக்கைகளையோ அல்லது தொலைக்காட்சிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை. இதன் முழு பிரச்சாரமும் ஒருவரோடு ஒருவர் பேசும் பேச்சுக்களின் மூலமாகவே நடைபெறுகிறது. நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை, வசூலிப்பதில்லை என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் அது பாகிஸ்தானிய அரசின் நேரடி ஆதரவு உள்ள அமைப்பு. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இன்று பாகிஸ்தானிய அரசின் எல்லா நிலைகளிலும் இருக்கின்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், முன்னாள் ஜனாதிபதி முகம்மது ரபீக் தரார், முன்னாள் ஜனாதிபதி பரூக் லகாரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பல கிரிக்கெட் வீரர்களும், எழுத்தாளர்களும் இதில் உள்ளனர். பாகிஸ்தானியர் மட்டுமே இந்த அமைப்பில் இல்லை. இது உலகளாவிய அமைப்பு. இந்தியாவில் இது ஏராளமான கிளைகளை கொண்டிருக்கிறது. பங்களாதேஷில் இது ஒரு வலிமையான அமைப்பு.

இந்த அமைப்பினரே 1990களில் க்ஸிங்ஸியாங் மாநிலத்தில் ஊடுருவினர். அங்கிருந்து பல வீகர் இன முஸ்லீம்கள் தரைவழியாக கொண்டுவரப்பட்டு பாகிஸ்தானில் பயிற்சி தரப்பட்டனர். இவர்கள் திரும்பிச்சென்று க்ஸிங்ஸியாங் மாநிலத்துக்கு தீவிரவாத இஸ்லாமை கொண்டுசென்றனர். பொருளாதார ஏற்றததாழ்வுகளும், தீவிரவாத இஸ்லாமும் ஊன்றிய விதைகளையே இன்று க்ஸிங்ஸ்யாங்கில் கலவரமாக பார்க்கிறோம்.

—000OOOOooo—

Map of Xinjiang (c) http://www.chinanewtravel.com/

Map of Xinjiang (c) http://www.chinanewtravel.com/

க்ஸிங்ஸியாங் மாநிலம் சீனாவின் மேற்கு ஓரத்தில் இருக்கிறது. இதன் நிலப்பரப்பு மொத்த சீனத்தின் ஆறில் ஒரு பங்கு. 1949-ல் சீனாவின் படையெடுப்பிற்கு முன்பு வரை, உய்குர்கள் இந்த பகுதியை தனி அரச அதிகாரத்துடன் ஆண்டுவந்தனர். இங்கு வாழும் வீகர் இன முஸ்லீம்கள் சுன்னி இஸ்லாமைச் சார்ந்தவர்கள். துருக்கி வகை மொழி பேசுபவர்கள். ஆனால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இவர்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக ஆகிவிட்டனர். திபெத்தில் எவ்வாறு ஹன் சீனர்கள் ஆக்கிரமித்து அங்கிருந்த திபெத்தியர்களை சிறுபான்மையினராக ஆக்கினார்களோ அதே போல இந்த க்ஸிங்ஸியாங் மாநிலத்திலும் இங்கு வாழ்ந்த வீகர் இனத்தவர்கள் சிறுபான்மையினராக ஆகியுள்ளனர். 1990-ல் நடைபெற்ற உய்குர்களின் எழுச்சியை தொடர்ந்து, சீன அரசு ராணுவ பலத்தாலும், ஹன் சீனர்களின் குடியேற்றத்தின் மூலமும் க்ஸிங்ஸியாங் நிலப்பகுதியை முற்றிலுமாக தனது அதிகாரத்திற்கு உட்படுத்தியது. 1950-களில் தொடங்கி, சீன அரசு இப்பகுதியில் ஹன் சீனர்களின் குடியேற்றத்தை பலவகையிலும் ஊக்குவித்து வந்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளில், இப்பகுதியின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்திலிருந்து தற்போதைய 40 சதவீதமாக ஹன் சீனர்களின் ஜனத் தொகை அதிகரித்திருக்கிறது. மாநில தலைநகரான உரும்சி-யில் வாழ்பவர்களில் சுமார் 75 சதவீதத்தினர்கள் ஹன் சீனர்களே. ஹன் சீனர்கள் பணக்கார வர்க்கமாகவும், வீகர் இனத்தவர்கள் தட்டுமுட்டு சாமான்கள் கழுவுபவர்களாகவும் இந்த பகுதிகளில் வசிக்கிறார்கள். பெரும் நகரங்கள், நகர் சார்ந்த பகுதிகள், அனைத்திலும் ஹன் சீனர்களும், மாறாக வீகர் இனத்தவர், விவசாயம் செய்பவர்களாகவும், கிராமப்புறங்களில் வசிப்பவர்களாகவும் உள்ளனர். பொருளாதார ரீதியாக இப்பகுதி பெரும் வளர்ச்சி பெற்றிருந்தாலும் தங்கள் வாழ்நிலை விளிம்பு நிலைக்கு தள்ளபடுவதால், சீன அரசாட்சியின் மீதான உய்குர்களின் கசப்பு அதிகரிக்கவே செய்தது.

இயல்பிலேயே தங்களுக்கென தனி அடையாளத்தையும், கலாச்சார ரீதியாக தனித்துவம் பெற்றிருந்த உய்குர்கள், எக்காலத்திலும் தங்கள் மீதான சீன அரசின் அடக்குமுறையை சிறிதும் விரும்பவில்லை. வரலாற்றில் உய்குர் மக்கள் அவர்களின் கலைதிறனுக்காக பெரிதும் புகழப்படுபவர்கள். குறிப்பாக அவர்களின் இசைத் திறமை மிக பிரசித்தம். ரவப்(Rawab) எனும் இசைக் கருவி உய்குர் இன மக்களின் தனித் தன்மையை பறைசாற்றும். கலையில் மட்டுமல்லாது உய்குர் நகரங்கள் பலவும் கடந்த 2000 வருடங்களாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்களாக விளங்கிவந்தன. ஆனால், சீன அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, உய்குர் மக்களின் வாழ்நிலை பெருமளவு தாழ்ந்தும், மேலும், அவர்களின் கலாச்சாரமும் சீனா அரசாங்கத்தின் பெரும் அச்சுறுத்தலுக்கும் உள்ளானது. உய்குர் மக்கள் அவர்கள் தாய் மொழியை தவிர்த்து, சீன மொழியில் தங்கள் படிப்பை மேற்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டனர். இதனால் கலாச்சார ரீதியாகவும் தங்கள் அடையாளம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளவதை கண்டு மனம் வெதும்பினர்.

இன்று திபெத்தைவிட முக்கியமான பிரதேசமாக க்ஸிங்ஸியாங் சீனாவால் பார்க்கப்படுவதன் முக்கிய காரணம், இங்குள்ள இயற்கை எரிவாயுவும், இதன் கேந்திர முக்கியத்துவமும். இந்த இடத்தின் வழியேதான் சீனாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் தரைவழி போக்குவரத்து நடைபெற்றாகவேண்டும். அதுமட்டுமின்றி மத்திய ஆசியாவிலிருந்து சீனாவுக்குள் வரக்கூடிய எண்ணெய் குழாய்கள், எரிவாயு குழாய்கள் இந்த மாநிலத்தின் வழியேதான் வந்தாகவேண்டும். சமீபத்தில் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எண்ணெய் குழாய், எரிவாயு குழாய் திட்டத்தை இந்தியா கை கழுவி விட்டது. ஆகவே, இந்த குழாய் திட்டத்தில் சீனா ஆர்வம் காட்டுகிறது. இந்த எரிவாயு குழாய்களும் இந்த மாநிலத்தின் வழியேதான் சீனாவுக்குள் வந்தாக வேண்டும். ஆகவே இந்த மாநிலத்தில் உள்ள வீகர் இனத்தவர்களை அங்கிருந்து காலி செய்வதற்கு வெகுகாலமாகவே திட்டமிட்டு செயலாற்றி வருகிறது சீன அரசாங்கம். அங்கு வாழும் வீகர் இனத்தவர்கள் அங்கிருந்து சீனாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கலாம் என்று அதற்கு பணம் வேறு கொடுக்கிறது. மத்திய சீனாவிலிருந்து ஹன் சீனர்கள் இந்த மாநிலத்தில் குடியேற சீனா பணம் தருகிறது. இது போன்ற முறைகள் மூலம் தற்போது பாதிக்கும் மேல் ஹன் சீனர்களே இங்கு வசிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இங்கு வீகர் – ஹன் சீனர்கள் கலவரம் வரும் என்று எதிர்பார்த்தே திட்டங்களையும் சீன அரசாங்கத்தில் உள்ளவர்கள் வகுத்திருப்பார்கள் என்று தோன்றுவதில் ஆச்சரியமில்லை.

—000OOOOooo—

ஜூலை 5 ஆம் தேதி ஹூ ஜிந்தாவ் (சீன கம்யூனிஸ்டு கட்சி ஜெனரல் செக்டரடரி) ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொண்ட அதே நாளில் க்ஸிங்ஜியாங் மாநில தலைநகர் உரும்சியில் கலவரம் வெடித்தது. 156 பேர் கொல்லப்பட்டனர். 816 பேர் படுகாயம் அடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் ஹன் சீனர்கள். இதன் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீகர் இனத்தினர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கலவரத்தின் தன்மையை மற்றும் சீன அரசாட்சிக்கெதிரான எதிரிகளின் கொடுஞ் செயல்களை உலகிற்கு உணர்த்த சீன அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு நிருபர்களை அழைத்துச்சென்று இப்பகுதியைக் காட்டியது. அந்த வெளிநாட்டு நிருபர்கள் முன்னிலையில் இருநூறுக்கும் மேற்பட்ட உய்குர் இன பெண்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டுமென்று போராட்டம் நடத்தினர்.  அடுத்த நாள் ஆயிரக்கணக்கான ஹன் சீனர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீகர் இனத்தவர்கள் மீது கடும் தாக்குதல் தொடுத்தனர். இதன் பின்னர் க்ஸிங்ஸியாங் கம்யுனிஸ்டு கட்சி தலைவர் வாங்க் லெக்வான் “அரசாங்கத்தை நம்புங்கள், நாங்கள் பிரச்னையை கையாளுவோம்” என்று ஹன் சீனர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். PAP (People’s Armed Police) ஆயுதம் தாங்கிய மக்கள் போலீஸால் இந்த நிலையை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என்று, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மக்கள் விடுதலை படை (People’s Liberation Army சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வமான் பெயர்!) இங்கு குவிக்கப்பட்டுள்ளது.  போலிஸ் ராணுவம் அனைத்தும் ஹன் சீனர்கள் நிரம்பியது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. க்ஸிங்ஸியாங்குக்கு வெளியிலும் உள்ளேயும், ஹன் சீனர்கள் ரத்தத்துக்கு ரத்தம் என்று உணர்ச்சி பொங்கிக்கொண்டிருக்கின்றனர். ஜூ ஜிந்தாவ் மட்டுமே ராணுவ கட்டளை பிறப்பிக்கக்கூடிய ஒரே சர்வாதிகாரம் படைத்தவர் என்பதால், அவர் அவசர அவசரமாக தனது பிரயாணத்தை இடைநிறுத்தி சீனா திரும்பியுள்ளார்.

சமூகப் பிரச்சினைகளை கையாளவதில் பெரும்பாலும் மிதவாதிகளாக இருந்த உய்குர் இஸ்லாமியர்கள், கடந்த சில வருடங்களாக, மத்திய கிழக்கு மற்றும் பாகிஸ்தான் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களால் அடிப்படைவாத இஸ்லாமுடனான அறிமுகம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த கலவரங்களுக்கு காரணமாக பாகிஸ்தானை சீன அரசாங்கம் சுட்டவில்லை. ஆனால், சீனாவால் நாடுகடத்தப்பட்டு. அமெரிக்காவில் வாழும் உய்குர் இன பெண்மணியான ரெபியா கதீரை அது கை காட்டியுள்ளது. இதன் காரணம், அமெரிக்காவை எச்சரிப்பதுதான் என்பது வெளிப்படை. சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும், அதன் எதிரிகளான தைவான் திபெத் போன்ற பிரச்னைகளில் சீன எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளதாகவும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளை சீனா குற்றம் சாட்டிவந்துள்ளது.

ஆனால் சீனா உலகுக்குச் சொல்ல நினைப்பது போல இது அமெரிக்காவின் சதியால் நடந்துவரும் கலவரமாகத் தெரியவில்லை. இது சீனா கொண்ட பாகிஸ்தானின் நட்பாலேயே நடந்தது. வெளியிலிருந்து பார்ப்பவருக்கு சீனாவின் அசுர வளர்ச்சி ஆச்சரியத்தை தந்தபோதிலும், சீன அரசின் மீதான சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டவர்களின் கசப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. சீனா தனது தற்காலிக பொலிவை இழக்க ஆரம்பித்துள்ளது.

[1] http://www.nytimes.com/2009/07/20/world/asia/20xinjiang.html?_r=2&hp=&pagewanted=all

Comments are closed.