தீட்டு

‘இருபத்தொன்று…இருபத்திரெண்டு…இருபத்தி மூன்று..ஊகூம். முடியாது. நகரவே முடியாது. உடல் நடுங்கியது. கம்பை இறுகப் பிடித்துக் கொண்டார். ரொம்பத் தாகமாயிருந்தது. ஒரு சொம்புத் தண்ணீராவது வறண்ட நாக்குக்குக் குடித்துவிட்டு வந்திருக்கலாம். இருபத்தி நான்கு…இருபத்தி ஐந்து…’ கால்கள் பலமே இல்லாமல் நடுங்கின. தள்ளாடினார். கம்பை இறுகப்பற்றியபடி உடல் எடை காலில் தங்காமலிருக்க முயற்சி செய்தார். பிடிமானம் தவறி அப்படியே முன்னால் விழ நடு நெற்றி நங்கென்று தார் ரோட்டில் முட்டியது. இரத்தம் சுற்றுலா வந்த் கூட்டம்போல படர்ந்தது. ‘அப்பாடி. இனி கடைக்குப் போக வேண்டியதில்லை. ஆ….சிகரெட்’. நெஞ்சு நிறைய காற்றை இழுத்து ஊதினார்.

ஊமை வலிகள்

இதனால் அடிக்கடி அவனுக்கு வயிற்றில் வலி வந்துவிடுகிறது. பாமா தியேட்டர் ரோட்டில் உள்ள இரண்டாவது சந்தில் ஒரு பாட்டி தொக்கம் எடுத்துவிடும். எலும்புத் துண்டுகளும், முடியுமாய் வந்து விழும். முடிக்கொத்தைப் பார்க்க முதலில் அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அது ஒரு பெண் தலைவாரி முடித்தவுடன் சுருட்டிப்போடும் முடிகள் அளவுக்கு இருந்தது. ஒருமுடியானாலும் தொண்டையில் தட்டிவிடுமே எப்படி இவ்வளவு முடி வயிற்றுக்குள் போனது என்று ஆச்சரியம். எப்படியோ வயிற்றுவலி நின்றுபோனதால் அந்தப் பாட்டியை நம்பினான்.