வேணு தயாநிதி கவிதைகள்

கூடல்

புதிதாய் வாங்கிய 
போத்தலின் ஷாம்பு  
தலைக்கு வைத்து 
அலம்பும்போது 
கோடை வெயிலின் மணம் 
சக்கூரா நிறையும் வசந்தம் 
அழகிய பல்வரிசை கொண்ட வெண்ணிற அழகிகள்
உடனே நிறைவேற சாத்தியம் கொண்ட காதல்கள், 
சிறிய பூக்கள் தூவிய
படுக்கை விரிப்பின்
வெம்மையான கூடல்கள்,
கவித்துவங்கள் ஏந்தி 
சிந்தனை குமிழிகளாக 
மாலை புல்வெளியின் மேல் 
கவிந்து செல்லும் மேகங்கள்.
அனைத்தும் கரைந்து 
வீராணம் நீரில் 
நுரைத்து குமிழியிட்டு 
குழாய்வழி 
மூன்று மாடி இறங்கி 
சாக்கடை சென்று 
இறுதியில் அடையும்
இவை 
எதையும் உணரா  
இந்தியப்பெரும் கடலை.

புத்தர் விமான நிலையத்தில் காத்திருக்கிறார் 

குழந்தையை எரித்த தீ
பயிர்களைக் காயவிட்டு 
புயலாகி 
கரையைக் கடந்த பருவமழை
கொலைகாரனின் மனம்
துரோகியின் சுவாசம், பிணம்
ஆகியவற்றை ஆராய்பவன்

உட்கார்ந்துகொண்டே தூங்குபவன்
தூங்கமுடியாமல் விழித்திருப்பவன்
வேலையை விட்டவன், தேடிச்செல்பவன்
மாற்றிக் கையெழுத்திட்டவன்
லாட்டரியில் பரிசு கிடைத்தவன்
வாழ்க்கையை 
சூதாட்டத்தில்  விட்டவன்
கடைசி நொடியில்
தங்கப்பதக்கத்தைத் தவறவிட்டவன்

காற்று வாங்கச்சென்று
காதலை வாங்கியவன்
மதுக்கிண்ணத்தில் மீதம் வைப்பவன்
முதல் முறையாக முத்தமிட்டவன்
காதலியைக் கொன்றவன்
நண்பனின் மனைவியை காதலிப்பவன்
திருமணத்திற்குச் செல்பவன்
மணமுறிவு பெற்றவன்

தகப்பன் சாக காத்திருப்பவன்
மகளின் பிறந்த நாளை 
மறந்து விட்டவன்
அநாதைப்பிணத்தை தூக்கிச் சென்றவன்
பத்து வருடமாகப் பாடாத இசைஞன்
காதலிக்கப்போய் துறவியானவன்
திடீரென ஒருநாள் 
காணாமல் போனவன்
வாழ்க்கையை
கலையிடம் கையளித்துவிட்டவன்

ஆகியோரின் கணங்களை
கணக்குப் பார்த்து
எண்ணிக்கொண்டிருக்கிறது

ஒலிக்காதது போல் ஒலிக்கும்
இசை கேட்டு
தலைக்குமேல் நிற்கும்
கடிகாரம்.

பட்டுப்புழுவின் துன்பம்
தோண்டியெடுத்தவனின் துயரம்
நெய்தவனின் கற்பனை
சமைத்தவனின் வியர்வை
அறுத்தவனின் கருணை
விற்றவனின் சாதுர்யம்
காதல் பயம் கோபம் குரோதம்
ஏதோ ஒரு ரசாயனம் ஆகியவற்றை
சுமந்து செல்கின்றனர் 
பெண்கள் 


கடைசியாக ஒருமுறை
அழகு பார்த்து கண்ணாடியை
மூடிவைக்கிறாள்
அழகிய முன்பற்கள் 
கொண்ட அவள்

எதிரே
அறிமுகமில்லாத குழந்தை ஒன்று
புன்னகைக்கிறது
அறிவிப்பாளன்
வரப்போகும் விமானத்தை
அறிவிக்கிறான்

யாரோ ஒருவர்
தவறவிட்ட விமானம்
பறவையாகிதலைக்குமேலே
பறந்து செல்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.