- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- காணும் பேறைத் தாரீரோ?
- இறை நின்று கொல்லுமோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
かくとだに
えやはいぶきの
さしも草
さしも知らじな
もゆる思ひを
கனா எழுத்துருக்களில்
かくとだに
えやはいぶきの
さしもぐさ
さしもしらじな
もゆるおもひを
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: அமைச்சர் சனேகதா
காலம்: பிறப்பு தெரியவில்லை. இறப்பு கி.பி. 998.
இத்தொடரின் 26வது பாடலை (காணும் பேறைத் தாரீரோ?) இயற்றிய இளவரசர் ததாஹிராவின் கொள்ளுப்பேரன் இவர். பிற்காலத்தில் ஜப்பானின் சிறந்த 3 எழுத்து வரைகலை நிபுணர்களில் (calligraphy masters) ஒருவராகத் திகழ்ந்த யுக்கினாரியுடன் அரசவையில் ஒரு விவாதத்தில் ஈடுபட்டார். சனேகதாவின் மழை பற்றிய கவிதை ஒன்றை யுக்கினாரி ஏளனம் செய்ததால்தான் இச்சண்டை உருவானது என்றாலும் பேரரசர் இச்சிஜோ இதனால் கோபமுற்று கி.பி 995ல் சனேகதாவைத் தொலைதூர மாகாணத்துக்குப் பணியிட மாற்றம் செய்தார். அந்த மாகாணம் அப்போதைய தலைநகர் கியோத்தோவுக்கு வடக்கே இருந்த முட்சு ஆகும். தற்போதைய அவோமோரி மாகாணம். 3 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் அங்கேயே இறந்துவிட்டார். இச்செய்திகள் கோஜிதான் (பழங்கால நினைவுகள்) என்ற 13ம் நூற்றாண்டுப் புதினத்தின் மூலம் நமக்குத் தெரியவருகிறது.
இத்தொடரின் 62வது பாடலை இயற்றிய பெண்பாற் புலவர் செய் என்பவரை அரண்மனைப் பணியில் இருந்தபோது காதலித்து வந்தார். சனேகதா ஒரு கவிஞரும் கூட என்பதால் இவரை இடமாற்றம் செய்தபோது ‘கவித்துவம் மிக்க இடங்களைப் பார்த்து வாருங்கள்’ என்று நையாண்டியாகக் கூறிப் பேரரசர் இச்சிஜோ இவரை வழியனுப்பினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக இவரது தனிப்பாடல் திரட்டு நீங்கலாக 68 பாடல்கள் பிற இலக்கியங்களில் இடம்பெற்று உள்ளன. இடைக்காலத்தைச் சேர்ந்த காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றிருக்கிறார்.
பாடுபொருள்: காதலைக் கவிதை வாயிலாக வெளிப்படுத்தல்.
பாடலின் பொருள்: உன்னை எத்தனை தீவிரமாகக் காதலிக்கிறேன் என்று கூற விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை. எனக்குள் எத்தகைய வேதனை இருக்கிறது என்பதையோ இபுக்கி மலையின் மூலிகையைத் தோலின்மேல் வைத்து எரித்ததுபோல் என் இதயம் கனன்று கொண்டிருக்கிறது என்பதையோ உன்னால் உணரமுடியாது.
வார்த்தை விளையாட்டுகள் நிறைந்த ஓர் அகப்பாடல். சனேகதா ஒரு கவிஞர் மட்டுமல்ல. தான் இருக்குமிடத்தைக் கலகலப்பாக்கிச் சுற்றியிருப்போரை ஈர்க்கக்கூடிய ஆளுமையைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஒருவர் ஒரு பெண்ணுக்குக் காதல்கடிதம் தருகிறார் என்றால் அப்பெண் எப்படி மகிழ்ந்திருக்கவேண்டும்! ஆனால் ஏனோ இவரது காதல் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இப்பாடல் ஜப்பானின் தாவரவியல் குறிப்பையும் மருத்துவமுறை ஒன்றைப் பற்றிய தகவலையும் தருகிறது. தற்போதைய கிஃபு மற்றும் ஷிகா மாகாணங்களுக்கு இடையில் இபுக்கி என்றொரு மலை அமைந்துள்ளது. இதில் பல அரிய மூலிகைகள் இருக்கின்றன. சுமார் 1200 வகைத் தாவரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். ஆர்ட்டெமிசியா என்னும் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து மோக்ஸா என்றொரு மருந்தை எடுத்து அதைத் தோலின் மேற்புறத்தில் அல்லது மிக அருகில் வைத்து எரித்தால் நாட்பட்ட வலிகள் முதலான பல நோய்கள் குணமாவதாக அக்குபஞ்சர் போன்ற கீழ்த்திசை மருத்துவமுறைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தமுறை மிகுந்த வலியையும் எரிச்சலையும் தரக்கூடியது. காதல்வலிக்கு இதை உவமையாகக் கூறியிருக்கிறார் கவிஞர்.
இப்பாடலில் சில சொற்கள் இரட்டுற மொழிதலாகப் (சிலேடையாக) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, えやはいぶき என்ற சொல்லின் இறுதியில் வரும் いぶき என்பதற்கு இயூபெக்கி – சொல்ல வேண்டியது என்றும் இபுக்கி – மலையின் பெயர் என்றும் இருபொருள் கொள்ளலாம். சஷிமொ என்ற சொல் மூன்றாம் அடியிலும் நான்காம் அடியிலும் இருவேறு பொருள்களில் பயின்று வந்துள்ளது. மூன்றாம் அடியில் இபுக்கி மலையில் வளரும் ஒரு புல்லின் பெயராக வருகிறது. நான்காம் அடியில் தெரியாது என்ற சொல்லுடன் சேர்ந்து இந்த அளவுக்குக் கூட உனக்குத் தெரியாது என்ற பொருளில் வருகிறது. இத்தகைய ஒரு பாடலின் வழியாக ஒரு பெண்பாற் புலவருக்குக் காதல் கடிதம் தீட்டினால் அதை ஏற்காமலும் இருப்பாரோ?
வெண்பா:
காதலதன் ஆழமும் காணவோ உள்ளமதன்
வேதனை கூறவோ ஏலாமல் – ஏதமிகு
மூலிகைத்தீ அன்ன வலியும் உணரோய்
அறியாயென் உள்ளத் துணர்வு
ஏதம் – துன்பம்