
சில சமயங்களில்
மனிதர்கள் நமக்கு வரம்புகள் சில உண்டு..
உலகிலனைத்தையும் தெரிந்து
அறிந்து புரிந்து கொள்ள இயலாது.
ஆனால் நம்மைப் பற்றி
நமக்குள் இருக்கும் பிம்பம்
அதை ஏற்காது.
நம் பிம்பத்தை நாமே உடைத்துவிடவேண்டும்.
சிலவற்றைத் தெரிந்துகொண்டு புரிந்துகொண்டு
நாமென்ன செய்யப் போகிறோமென்று
சிலசமயங்களில் இருக்கவும் தெரியவேண்டும்.
பெண்களின் மனதைப் புரிந்து கொண்ட
ஒருவன் – ஒருவன்- உலகிலுண்டா?
பிள்ளைப் பூச்சியை
தொப்புளில் வைத்துக்கொண்டு
அரசாண்ட மன்னருண்டா?
இறைவன் இருக்கிறானா இல்லையா
வாதத்தில் முடிவுண்டா?
வாழ்வின் பொருள் இதுதானென்று
உறுதியாய் சொல்லமுடிந்ததுண்டா?
தனக்குத்தானே பேசாதிருக்க
காரணமில்லாமல் சிரிக்காதிருக்க
சிலசமயங்களில்
வந்தோமா வாழ்ந்தோமா சென்றோமா
என்றிருக்கவும் தெரியவேண்டும்.
சொர்க்க ரதம்
ஒருவன் பொரியிறைக்க
ஒருவன் சங்கூத
இருவர் பறையடிக்க
மூவர் வழிநெடுக பூவிறைக்க
நால்வர் ஆட்டம்போட
ஐவர் கம்பு சுற்ற
ஒருவன் வெண்ணீறு பூசி
செத்த பிணத்தை சுமந்து செல்லும்
சொர்க்கரதத்தின் முன்னே செல்ல
சுடலை அருகிருக்க
தொலைவான மயானத்துக்கு
ஏன் செல்கிறது ஊர்வலமென்று
கடல் கடந்து வந்த உறவினன் கேட்டான்.
நம் ஜாத -இடுகாட்டில் புதைக்கச் செல்கிறோமென்றது
சாகும் பிணமொன்று.
பிற்போக்கு
பிரபஞ்சத்தின் எல்லையற்ற விரிவில்
நான் ஒரு பறவையின் அலகில்
ஒட்டிய ஒற்றைக் கேழ்வரகு.
முடிவிலியான அதன் இயக்கத்தின் முன்
என் இயக்கம் கண்ணிமைப் பொழுது.
பிரபஞ்ச சக்தியின்முன் என் சக்தி
ஒரு எறும்பின் சக்தியென்பதால்
அந்தப் பராசக்தியை வணங்குகிறேன்.
கருவுக்கு ஒரு பை வைத்து
அதற்குள் என்னை வைத்து
தன்னைப்போல
என்னுள் ஐம்பூதங்களை வைத்து
என்னைப்போல்
கோடி மனிதர்களைப் படைக்கும்
அந்தப் பராசக்தியை நான் வணங்குகிறேன்..
உடலைவிட்டு பிரியும் உயிர்
இப்படித்தானிருக்குமென்று
மனிதன் காணமுடியாதவரை
நான் பிரபஞ்ச சக்தியை பராசக்தியை வணங்குவேன்.
எனக்கு நான் உண்மையாக இருப்பேன்.
பிற்போக்கு லேபிள்கள் என் மயிருக்குச் சமம்.