மிளகு   அத்தியாயம் ஐம்பத்தேழு

மிர்ஜான் கோட்டை 1605

 மிங்குவுக்கு இது மூன்றாவது முறை பிரசவ வலி கண்டது.   ஒவ்வொரு தடவை வலிக்கும்போதும் உள்ளறையில் இருந்து வேதனை முனகல் கேட்டு மிங்குவின் கணவர் பைத்யநாத் வைத்தியர் உள்ளே ஓடிப் போய் நோக்குகிறார். 

அங்கே இருக்கும் மருத்துவச்சி ராஜம்மா அவரை வாசலுக்குக் கை சுட்டி மிதமான குரலில் சொல்கிறாள் – ”மருமகனே, நீங்க ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கலாம். ஆனா இப்படி வைத்தியர் பெண்டாட்டிக்கும் பிரசவம் பார்க்கறது  இந்த மருத்துவச்சிதான். எப்போ உங்களை உள்ளே கூப்பிடணுமோ அப்போ கூப்பிடறேன். அதுவரை வாசல்லே இரும்”.   வைத்தியரை வெளியே விரட்டாத குறையாக அனுப்பி வைக்கிறாள். 

பத்து நிமிடம் சென்றிருக்கும். ஆச்சா? ரகசியம் பேசும் குரலில் விசாரித்தபடி வைத்தியர் திரும்பவும் உள்ளே ஓடி வருகிறார். மருத்துவச்சி ராஜம்மா இல்லை என்று தலையசைக்கிறாள்.  

”அது வந்து, பனிக்குடம் உடைஞ்சு அவள் சத்தம் போட்ட மாதிரி கேட்டது”. 

”பனிக்குடம் உடைஞ்ச  பொண்ணு சத்தம் போடறது தான் உங்களுக்கு கேட்டு அனுபவம். எனக்கு உடைஞ்சது என் கர்ப்பத்திலேன்னு சுய அனுபவம். பதறாமல் போய் உக்காருங்கோ. நான் பார்த்துக்கறேன். எப்போ கூப்பிடணுமோ அப்போ கூப்பிடறேன்”. 

பனிக்கால இரவாக இருந்தாலும் வைத்தியருக்கு வியர்த்துக் கொட்டியது. நடுவயதைத் தொடும்போது ஏற்பட்ட கர்ப்பம். மிங்குவுக்கு முப்பத்தைந்து வயது. வைத்தியரோ நாற்பதைத் தொட்டாகி விட்டது. இந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்டால் இரண்டு பேருக்கும், ஏன், குழந்தை வளரும்போது அதற்கும், கஷ்டம் இல்லையா? 

வைத்தியரும் மிங்குவும் கர்ப்பத்தில் முடிவு பெறாத உடல் சேர்க்கையையே எப்போதும் கடைப்பிடிப்பது என்று தீர்மானித்துச் சென்ற இரண்டு வருடமாக செயல்பட்டார்கள். என்ன செயல்பட்டோம் என்று வைத்தியர் அதிசயித்தார். செயல்படாமல் இருந்தோம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

நாள் பார்த்து சம்போகம், அவ்வப்போது அணைப்பு என்று உபத்திரவமில்லாமல் போய்க்கொண்டிருந்த தாம்பத்ய ஜீவிதம், போன காமன் பண்டிகை ராத்திரி அவரும், மிங்குவும் அரிசி மது அருந்தியதும் விழித்தெழுந்து, இப்போது மருத்துவச்சி வந்து வீட்டுக்குள் சட்டமாக உட்கார்ந்து வைத்தியரை அதிகாரம் செய்வதில் முடிந்து கொண்டிருக்கிறது. 

இன்னும் ஒரு மணி அல்லது ரெண்டு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும். வீடே மாறப் போகிறது  அப்புறம். மிங்கு ரெண்டு மாதமாவது மகாராணியின் நம்பிக்கைக்குரிய தாதியாக பணி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி குழந்தையைப் பராமரிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் அவள் வேலைக்குத் திரும்ப வேண்டும். 

ராஜாங்க வைத்தியராக தான் இருப்பதை விட, மிங்கு சென்னபைரதேவி ராணியம்மாவின் பிரத்யேக தாதி என்பது மிர்ஜான் கோட்டையிலேயே சக்தி வாய்ந்த ஒரு உத்தியோகம். அதை எப்படியும் தன் வைத்தியக் குடும்பத்தில் தக்கவைக்க வேண்டும் என்று வைத்தியர் தீர்மானித்திருக்கிறார். 

வைத்தியர் மறுபடி வீட்டுக்குள் அரைகுறை இருட்டில் பார்க்கிறார். மருத்துவச்சி வெற்றிலை பாக்கை சின்னஞ்சிறு தாம்பூல உரலில் டொக்டொக்கென்று இடிக்கிற சத்தமும், சில்வண்டு இரையும் சத்தமும் தவிர அமைதியான ராத்திரி அது.

மிங்குவை எப்போது முதல் தடவையாகப் பார்த்தது? வைத்தியர் நினைவுகளைக் கிளறிக் கொண்டிருந்தார்.  

அவருடைய தந்தையார் அரிந்தம் வைத்தியர் காலமாகி அம்மா பூமித் தேவியம்மாள் சித்தங்கலங்கி ஆகாரம் உட்கொள்வது, மல மூத்திராதிகளைக் கிரமமாக வெளியேற்றுவது போன்ற தினசரி காரியங்களைக் கூட நிறைவேற்ற முடியாமல் போக, அடுத்த ஐந்து வருடம் தாயாருக்கு பணிவிடை செய்வதே முக்கியக் கடமையாகக் கொண்டிருந்தார் பைத்யநாத் வைத்தியர். 

ராஜாங்க வைத்தியர் என்பதால் ராணியம்மாவோ, அப்பக்கா மகாராணியோ பயணம் வைக்கும்போது கூடவே போக வேண்டி வந்தது. அம்மாவை தனித்து விட்டுப்போக சிரமமாகி, அடிக்கடி அண்டை அயலார் தயவை நாட வேண்டியிருப்பதும் அவர்களுக்குத் தொந்தரவானது. 

ஒரு தீர்வாக அம்மாவைக் கவனித்துக்கொள்ள தாதியை ஏற்பாடு செய்யத் தீர்மானித்தார். தாதி பணிக்கு நிறையப் பெண்கள், அறுபது கடந்தவர்கள் வந்தார்கள். ஆனால் சித்தம் கலங்கிய பெண்மணிக்கு ஆதரவாக இருப்பது, குளிக்க வைத்து , உடைமாற்றி, சமைத்து, ஆகாரம் செய்வித்து, எத்தனை தடவை சொன்னாலும் முகம் சுளிக்காது கழிப்பறைக்குக் கூட்டிப் போய், சுத்தம் செய்துவிட்டுத் திரும்பக் கூட்டி வருவது என்று அத்தனை பணியும் அலுப்போ, கோபமோ இல்லாமல் செய்யத் தயாராக யாரும் வரவில்லை.

 அப்போது தான் செண்பகலட்சுமி என்ற செம்பா, நான் தாதியாக இருக்கேன் என்று மனுப் போட்டாள். மிதமாக அழகான பெண். மிதமான உயரம். மிதமாக வடிவான உடல். மிதமாக ஒலிக்கும் குரல். ரொம்பவே ஏழைப்பட்ட குடும்பம். ராஜாங்க வைத்தியருடைய தாயாருக்குத் தாதி வேலை. மாசம் ஐம்பது வராகன் சம்பளம். மூன்று வேளை சாப்பாடு என்று கேட்டபோது வைத்தியரின் அம்மாவைப் பார்க்காமலேயே சம்மதம் சொல்லி விட்டாள் செம்பா. 

பத்தே நாளில் அம்மா செம்பா செம்பா என்று அனைத்துக்கும் அவளையே சார்ந்து இருக்க ஆரம்பித்து விட்டாள். இரண்டே மாதத்தில் நிம்மதியும் சந்தோஷமுமாக இறந்தும் போனாள். 

அடுத்த மாதம் சம்பளம் வராது என்ற விசனத்தோடு இருந்த செம்பாவை தனக்கு வாழ்நாள் முழுக்கத் தாதியாக இருக்க முடியுமா என்று ஏகமான வெட்கமும், நாணமும், தயக்கமுமாகக் கேட்டார் வைத்தியர். செம்பா ரொம்ப அழகான பெண் என்று அவருக்கும், வைத்தியர் கொஞ்சம் மூத்திருந்தாலும் கம்பீரமான புருஷர் என்று செம்பாவுக்கும் தோன்றத் தொடங்கியிருந்த காலநேரம் அது. 

செம்பா சரி என்றாள். அவள் குடும்பமும் சரி என்றார்கள். மிங்கு வீட்டுக்கார மாமா என்று தெருக் குழந்தைகள் பாட்டுப் பாடி வைத்தியரை பகடி பண்ண, மிங்கு என்றால் மூக்கு தட்டையான சீனத்துப் பெண் என்று வைத்தியருக்கும் தெரிய வந்தது. மிங்கு தானோ? அழகான சீனத்தி என்று அவர் மனம் சொன்னது. 

அதற்கு அடுத்த மாதம் மிங்குவுக்கு ராணியம்மாவின் அந்தப்புரத்தில் தாதியாக நியமனம். வைத்தியர் சிபாரிசு செய்து வைத்திருந்தது உத்தியோகமாகக் குதிர்ந்தபோது வைத்தியரோடு அவளுக்குக் கல்யாணமும் ராணியம்மா நேரடி ஆசியோடு நடந்தேறியது. அது இரண்டு வருடம் முன்பு. 

அவள் வீட்டில் இல்லத்தரசியாக வந்த நாளில் அவருக்கான அரண்மனை ஊதியத்தை மகாராணி இரண்டு மடங்காக உயர்த்தி அரசுத் தகவல் வந்தது. 

அந்த மூக்கு அதிர்ஷ்ட நாசி என்று சிரமப்பட்டு அதைத் தேடிக் கண்டுபிடித்துக் கிள்ளும்போதெல்லாம் சொல்வார் வைத்தியர். கிள்ள மூக்கு மட்டுமா இருக்கிறது என்று கையை விலக்கிவிடுவாள் மீங்கு. அவளுக்கும் மீங்கு என்ற பெயர் பிடித்துப்போனது.

மருமகப்புள்ள! ஓ வைத்தியரே!

 மருத்துவச்சி ராஜம்மா வாசல் கதவுப் பக்கம் நின்று கூப்பிட்டது காதில் விழ வைத்தியர் அவசரமாக வீட்டுக்குள் நடந்தார்.

பனிக்குடம் இப்போ தான் உடைஞ்சது. இனி எந்த நேரமும் பிரசவம் நடக்கும். முதல்லே இங்கே ரெண்டு தீபம்  கொண்டு வந்து வையுங்க வைத்தியரே. அப்படியே பெரிய பாத்திரத்திலே மஞ்சள் கரைச்ச தண்ணியும் வேணும். அதிலே நாலு கொழுந்து வேப்பிலை போட்டுக் கொண்டாங்க, விரசா வேணும்

வைத்தியர்தான் நோய் கண்டவரையோ உறவுக்காரர்களையோ வென்னீரைக் கொண்டுவா, நல்லெண்ணெய் எடுத்து வா, சூரணத்தை இருப்புச் சட்டியில் இளம் சூட்டில் வாட்டி எடுத்துவா, கட்டுப்போட துவைத்த வெள்ளை வேட்டியைக் கிழித்து எடுத்து வா என்று விரட்டுவார். இது பரவாயில்லை, நோயாளியோட மூத்திரம் கொஞ்சம் எடுத்து வா, அவர் கழியற மலம் கொஞ்சம் எடுத்து வைங்கோ. பார்த்துட்டு தூர போட்டுடலாம் என்று அசாத்தியமாகக் கருதப்பட்ட மருத்துவ கோரிக்கைகளை வைப்பார். 

மருத்துவச்சி திரும்ப உள் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். என்னாத்தா வேணும்? பணிவோடு கேட்டார் வைத்தியார். மருமகனே, வெத்திலை, பாக்கு, இடிக்கற உரல் அங்கே தான் வெளியிலே இருக்கு. கொஞ்சம் எடுத்தாங்க.

வைத்தியம் பார்த்து முடித்துப் புறப்படும்போது வைத்தியரின் மருந்துப் பையைச் சுமந்து கொண்டு வாசல் வரை அவரோடு நடப்பது பெரிய மனுஷர்களும், அதிகாரிகளும், தளபதிகளும், பிரதானிகளும், கல்விச்சாலை அதிபர்களும் கூடச் செய்ய விரும்பும் பெருமைக்குரிய செயல். இங்கே உரல்.  

இந்தோ இருக்கு உங்க உரல். இடிச்சுத் தரட்டா என்று வைத்தியர் வினயமாகக் கேட்டார். அதை நான் தான் பண்ணனும் என்று உரலை வாங்கிக்கொண்டு உள்ளறைக்குப் போய்விட்டாள் மருத்துவச்சி. அவள் பின்னால் போவதா வேண்டாமா என்ற குழப்பம் வைத்தியருக்கு.

வரச் சொன்னேனே என்று திரும்பிப் பார்த்து மருத்துவச்சி கைகாட்டினாள். வைத்தியர் மருந்துப் பெட்டியோடு உள்ளே போக, அது எதுக்கு, வெளியே வச்சுட்டு வாங்க மருமகனே என்று அன்பொழுகச் சொன்னாள். அவரும் திரும்பிப் போய் மருந்துப் பெட்டியை வெளியே இறக்கி வைத்துவிட்டு உள்ளே ஓடினார். எதுக்கும் இருக்கட்டும். அதை எடுத்துட்டு வாரும் என்று நேரெதிர் தீர்மானத்தை அடுத்து வெளியிட்டாள் மருத்துவச்சி ராஜம்மா. 

வரும் கோபம், அலுப்பு, சோம்பல் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளியே மறுபடி போனார் வைத்தியர். அவர் வரும்போது தரையில் கால் நீட்டி உட்கார்ந்து மருத்துவச்சி சொன்னாள் –

 தலை தட்டுப்பட நேரம் வந்தாச்சு மருமகனே. மீங்கு முக்கு. நல்லா முக்கு. உள்மூச்சை அடக்கிப் பிடிச்சு மெல்ல வெளியே விடணும். சொல்லுங்க மருமகனே சொல்லுங்க. நல்லா முக்கணும்

உரலில் மிச்சமிருந்த இடித்த தாம்பூலத்தை வாயில் அடக்கிக்கொண்டு, இது மாதிரி ஆயிரம் பிரசவம் பார்த்த அனுபவம் குரலில் தொனிக்கச் சொன்னாள் மருத்துவச்சி.  

மூச்சு அடக்கி பத்து எண்ணு செம்பா. அவள் எப்படி எண்ணுவாள்?

 வாய்க்குள்ளே எண்ணிக்கோ. இப்போ முக்கு. 

வைத்தியர் தரையில் படுத்து அவளோடு சரிக்கு சரியாக முக்கியபடி மருத்துவச்சியைப் பார்க்க, பார்த்து, கக்கூசு போயிடப் போறீங்க மருமகனே என்று சிரித்தாள்.

இதைத்தான் சொன்னாங்களோ, அத்தி பிள்ளை பெற அத்தன் மருந்து தின்னான்னு. ஓவென்று மருத்துவச்சி மட்டும் சிரித்தாள். 

வந்தாச்சு நான் என்று மிங்கு வயிற்றின் கீழ் அசைவு.

 குழந்தை மெல்ல தலை முதலில் வெளிவரப் பார்த்து நின்ற மருத்துவச்சி ஆச்சரியத்தைச் சொல்லும் குரல் எழுப்பினாள். மயில் அகவும் ஒலி அது. எத்தனை தடவை பிரசவிக்கப் பண்ணினாலும், ஒவ்வொரு முறையும் அவளுக்கு அது ஆனந்தகரமும் ஆச்சரியமுமானது தான் என்று அவள் பார்வை சொன்னது.

குழந்தை தலைமேல் கை வெச்சுக்கிட்டிருக்கு. பாருங்க மருமகனே. அதை அங்கே இருந்து இடுப்புக்கு கொண்டு வரணும் என்றபடி சிசுவின் கையைத் தலையில் இருந்து அகற்ற மருத்துவச்சி தன் கையை அதன் அருகே கொண்டு போனாள். பிஞ்சு விரல்கள் உடனே அவள் கைவிரலைப் பற்றிக்கொண்டு விட்டன.

சுகப் பிரசவம். மிங்கு களைப்பில் மூடிக் கொள்ளும் கண்களை சிரமத்தோடு திறந்து பார்க்க அவளுக்கு முன் வைத்தியர் குழந்தையை அரையில் தொட்டுப் பார்த்து ஆண் குழந்தை என்று அறிவிக்கிறார். சின்ன அரிந்தம் பிறந்துட்டார் என்று ஆனந்தமாக அடுத்து அறிவிக்கிறார். மிங்குவின் கண்கள் அசதியில் மூடியுள்ளன. 

மருத்துவச்சி ராஜம்மா தன் விரலை சிசுவின் விரல் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள பூவை கையில் இருந்து எடுப்பது போல்  விலக்கப் பார்க்கிறாள். சின்ன அரிந்தம் கையை விடுவேனா என்று முரண்டு பண்ணி அழுகிறான். 

மருமகனே தொப்புள் கொடியை எடுத்துடறீங்களா? நான் தான் எடுப்பேன். உங்க மகன் எழுந்திருக்க விடமாட்டேன்னு கையைப் பிடிச்சுட்டிருக்கானே 

அவள் கேட்கும் போதே மருத்துவப் பெட்டியில் இருந்து சுத்தம் செய்து வைத்திருந்த கத்தரியை எடுக்கிறார் வைத்தியர். லாகவமாக தொப்புள் கொடியை வெட்டி அகற்றி தாயையும் சேயையும் பிரித்தெடுக்கிறார். 

குழந்தை விரல்களை விடுவிக்க அவற்றை இதமாகத் தடவுகிறாள் ராஜம்மா. ஒரு வினாடி சும்மா இருந்து மருத்துவச்சியின் விரல்களை அணைத்துப் பிடித்தபடியே அவை துவள்கின்றன.

நல்லபடிக்கு கொடி வெட்டிட்டீங்க மருமகனே, பாருங்க, என்ன செஞ்சாலும் உங்க மகன் என் கையை விட மாட்டேன்கிறானே என்ன பண்ணலாம்? 

மருத்துவச்சி விசாரிக்கிறாள். வைத்தியர் மனதில் பல தீர்வுகள் எழுந்து வருகின்றன.

கைக்கு மேலே புறங்கையிலே ஒரு சொட்டு பாலைத் தடவலாம் என்கிறார் வைத்தியர். மிங்குவின் மார்பகத்தில் கை வைக்கிறார். உள்ளங்கையில் சில துளிகள் தாய்ப்பால். இதை வைக்கலாம் என்கிறார் வைத்தியர். 

இல்லே மருமகனே, தாய்ப்பால் பிறந்ததும் குடிக்கத்தான் முதல்லே தரணும். அதை புறங்கையிலே வைக்கறது முலைப்பாலுக்குச் செய்யற அவமரியாதை என்று கையை விடுவித்துக் கொள்ளாமல் கட்டிலில் மலர்த்திய சிசுவின் அருகே உட்கார்கிறாள் மருத்துவச்சி.

மிங்குவை எழுப்பி பிள்ளைக்கு பால் தரச் சொல்லலாமே. வைத்தியர் கேட்கிறார்.

தூங்கறா பாவம். இதோ அவளா எழுந்துடுவா பொறுங்க மருமகனே. பூ விரல் என் கிழட்டு விரலைப் பிடிச்சு கன்னிப்போயிடப் போகுது. பாவம். சமத்து இல்லியோ. பாட்டி கையை விடுடா. 

வேறே என்ன பண்ணலாம் சொல்லுங்க ராஜம்மா அக்கா

 சித்தெறும்பு கடிச்சதுலேயும் பத்திலே ஒரு பங்கு தான் சுள்ளுனு இருக்கணும். சின்னஞ்சிறுசு விரல் பொறுத்துக்கற மாதிரி லேசானதிலும் லேசானதா இருக்கணும். 

மருத்துவச்சி சொல்ல, சிக்கிமுக்கி கல்லிலே உரசி ஒரு சின்ன தீப்பொறி உண்டு பண்ணட்டா என்று கேட்கிறார் வைத்தியர். 

மங்களகரமான குழந்தை பிறப்பு நடந்திருக்கு. இனிப்பு கொடுத்து கொண்டாட வேண்டிய தருணம். தீப்பொறி எல்லாம் சூரிய அம்சம். இந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றது இல்லே. இதை அடுத்த வீட்டு நாராயணி அம்மாள் சொல்கிறாள். 

குழந்தை பிறந்தது தெரிந்து தெருவே வைத்தியர் வீட்டில் குழுமியிருக்கிறது. 

பிள்ளையை பார்த்துட்டு வெளியே போய் நில்லுங்க. இங்கே சந்தடியும் மூச்சுக் காற்றும் சிசுவுக்கு ஆகாது. 

மருத்துவச்சி ராஜம்மா குரல் உயர்த்த வைத்தியர் எல்லோரையும் வெளியே பாய் விரித்து உட்கார வைக்கிறார். மஞ்சள் கரைத்த தண்ணீரில் ஒரே ஒரு கையைப் பதனமாக உபயோகித்துக் குழந்தைக்கு குளியல் நடத்துகிறாள் மருத்துவச்சி. 

மருமகனே, என்ன பண்ணப் போறீங்க? உங்க மகன் என் கையை விட்டாத்தான் நான் மீதி செய்ய வேண்டியதெல்லாம் செய்ய முடியும். நீர் பிரியணும் முதல்லே. அவனுக்கு இல்லே. எனக்குதான்.  

அவள் களைப்பையும் நீர் பிரிய அவசரத்தையும் பொறுத்தபடி கையைக் குழந்தை விரலோடு வைத்துக்கொண்டு சிரிக்கிறாள். மீங்கு கண் விழித்து என்ன ஆச்சுங்க என்று வைத்தியரைக் கேட்க, உனக்கு ஒண்ணுமில்லே என்று கையை விடுவிக்காமல் மீங்குவுக்கு முலையூட்டத் தருகிறாள் மருத்துவச்சி.

 நான் பார்த்துக்கறேன் ராஜம்மா பாட்டி நீங்க உங்க கையை எடுத்துக்குங்க என்கிறாள் மீங்கு விஷயம் புரியாமல். பால் சுரந்துவர, குழந்தை கையை மருத்துவச்சி கையிலிருந்து பிரிந்து விடாமல் பற்றியபடி, பருகுகிறது. துயிலத் தொடங்குகிறது. 

வாசலில் சத்தம். மிர்ஜான் கோட்டை பாதுகாப்பு அதிகாரி இரண்டு வீரர்களோடு உள்ளே வந்து வாழ்த்துகள் சொல்கிறார் வைத்தியருக்கும் மிங்குவுக்கும். அவள் பதில் சொல்வதற்குள் உறங்க ஆரம்பிக்கிறாள். 

ராணியம்மா வந்துட்டிருக்காங்க என்றபடி பாதுகாப்பு அதிகாரி அறைக்குள், தோட்டத்தில் எல்லாம் யாராவது ஒளிந்திருக்கிறார்களா, வெடிமருந்து வைத்திருக்கப் பட்டிருக்கிறதா என்று சோதனை செய்கிறார் என்பது ஒற்றர் படை அதிகாரியுமான வைத்தியருக்குப் புலப்படுகிறது. வீட்டுக்குள் ஐந்து பேர் தவிர வேறு யாரும் இருக்க வேண்டாம் என்று கெடுபிடி வருகிறது. வைத்தியர், மிங்கு, சிசு, மருத்துவச்சி, அடுத்த வீட்டம்மா என்று ஐந்து பேர். மற்றவர்கள் உள்ளே வந்து பார்த்துவிட்டு உடனே வெளியே போகலாம்.

பாதுகாப்பு அதிகாரி வெளியே சென்றபிறகு மிங்கு வைத்தியரை விசாரிக்கிறாள் – குழந்தைக்கு ஒண்ணுமில்லையே. ஒண்ணுமில்லே செம்பா ஏன் அப்படி கேக்கறே? இல்லே, ராஜம்மா பாட்டி இன்னும் குழந்தையோட இருக்காங்களே. பிரசவிச்ச அப்புறம் அவங்க இங்கே என்ன பண்றாங்க?

வைத்தியர் மருத்துவச்சியைப் பார்த்தார். சொல்லலாமா என்று கேட்பது போல் இருந்தது அது. மருத்துவச்சி தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். நானே சொல்றேன் என்ற தொனி. 

அது வேறே ஒண்ணுமில்லே மிங்கு செம்பா. உன் பிள்ளைக்கு என்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு. என் கையை விட மாட்டேங்கறான். குழந்தையை சற்றே உயர்த்திக் காட்டினாள் ராஜம்மா.

வைத்தியர் அதை பெரிய அதிர்ச்சிக்குரிய சம்பவமாக மிங்கு காணாமல் இருக்க, ஒண்ணுமில்லை என்று சிரிக்கிறார். அவர் சிரிக்கிறார் என்று ராஜம்மாளும். அவர்கள் சிரிப்பதால் உள்ளே வந்த அண்டை அயல் பெண்மணிகள் இருவரும் சிரிக்கிறார்கள். குழந்தை அழுகிறது.  

மீங்கு வைத்தியரை மெதுவான குரலில் கேட்கிறாள் – என் பிள்ளை ராஜம்மா பாட்டி மேலே பிரியம் எல்லாம் வச்சு என்னை கவனிக்காதா? 

வைத்தியர் இதற்கும் சிரிக்கிறார். இதெல்லாம் ஒரு கவலையா செம்பா? அவன் தூங்க ஆரம்பிச்சா கையை விட்டுடுவான். தூங்கற நேரம் தான். நீ கவலையை விடு என்கிறார். 

அவருக்கும் மனதுக்குள் பயம். மருத்துவச்சி கையை பிறந்த சிசு தூங்கும்போதும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால்?

 மருத்துவச்சி சரி பாலை ரெண்டு சொட்டு வையுங்க என்று தன் முந்தைய தீர்மானத்தை மாற்றிச் சொன்னாள். பால் கொண்டு வந்து கையில் வைத்து, கைத்தண்டையில் வைத்து, புறங்கையில் மெல்லத் தேய்ந்து என்னென்னமோ செய்து பார்க்கிறார் வைத்தியர். மருத்துவச்சி கையை விடவே மாட்டேன் என்கிறது சிசு.

குழந்தை திரும்ப அழுதது. தூக்கம் வருது தூங்கத் தெரியலே என்றாள் கையைப் பார்த்தபடி ராஜம்மா. மீங்கு புரியாத தொனியில் ஏதோ பாதி சொல்லி குரலைத் தாழ்த்தி அழ, வாசலில் சத்தம் பெருகிக் கொண்டிருந்தது. 

ஏதோ நினைத்துக் கொண்டதுபோல் வைத்தியர் தன் பட்டு சரிகை அங்கவஸ்திரத்தைக் கொண்டு குழந்தையின் கையை மூடி வைக்கிறார். மருத்துவச்சி ராஜம்மா கையும் அங்கவஸ்திர பட்டு மென்மைக்குள் மறைகிறது. ராணி வராங்க என்று வைத்தியர் அவளிடம் சொல்கிறார்.

ராத்திரி பதினொரு மணிக்கு உறங்கும் நேரம். அதைத் தள்ளிப்போட்டு மகாராணி வந்து கொண்டிருக்கிறார் ஒரு சாதாரண தாதி பிரசவித்ததற்கு நேரில் வந்து வாழ்த்த. தெருவே வைத்தியர் வீட்டு வாசலில் ராணியம்மாவை வரவேற்கக் காத்திருக்கிறது. குழந்தை பிறந்த வீட்டில் மங்கல நடவடிக்கையாக ஆரத்தி கரைத்துச் சுற்றப் பெண்கள் பிடவைத் தலைப்பை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு நிற்கிறார்கள்.

வரிசையாக மூன்று சாரட்டுகள் ஐந்து நிமிட இடைவேளையில் வந்து நிற்கின்றன. மிர்ஜான் கோட்டையில் மகாராணி வசிக்கிறார் என்பதோடு அவருடைய பிரியத்துக்குரிய வைத்தியரும் மனைவியும் கூட கோட்டைக்குள் வசிப்பதால், நடந்து கூட வந்திருக்கலாம். மொத்தம் பத்து நிமிடம் தான் பிடித்திருக்கும். ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அதை அனுமதிப்பதில்லை என்பதால் ரதங்கள் குதிரை பூட்டி வரவேண்டியிருக்கிறது. 

அரசியார் பத்து இருபது அடி போய்வரக்கூட, கோட்டைக்குள்ளேயே கூடுதல் பாதுகாப்பு வேண்டியுள்ளது என்பதை தெருவில் கிசுகிசுத்த குரலில் பேசும் வயதானவர்கள் இருமலை அடக்கிக் கொண்டு மேல் துண்டால் வாய் பொத்தி வாசல் திண்ணைகளில் தூக்கக் கலக்கத்தோடு காத்திருக்கிறார்கள். 

மூன்று சாரட்கள் வருவது வாடிக்கை. இவற்றில் எந்த ரதத்தில் ராணியம்மா இருப்பார் என்பதும், எங்கே போக வேண்டும் என்பதும், ரதங்கள் புறப்படும் நிமிடம் தான் கோட்டை பாதுகாப்பு அணிக்கு சொல்லப்படும். இன்றைக்கு முதல் சாரட்டில் இருந்து சென்னபைரதேவி மிளகு மகாராணி இறங்குகிறாள். 

ஜெயவிஜயீ பவ என்று மிளகுராணியை வாழ்த்தும் குரல்கள் இரவின் அமைதியைக் கலைத்து விட்டு உற்சாகமாக ஒலிக்கின்றன. வைத்தியர் வெற்றிலை, பாக்கு, சர்க்கரை, மஞ்சள், பழங்கள் என்று மங்கலப் பொருட்களோடு ராணியை வரவேற்கிறார். 

என்ன உன் குருநாதர் திரும்பியிருக்காரா, உங்கப்பா உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்காரான்னு கேட்கறேன் என்று சொல்லியபடி படியேறி வரும் மகாராணி முன் சாஷ்டாங்கமாக வணங்குகிறார் பைத்யநாத் வைத்தியர்.

ஆசிகளும் வாழ்த்தும் சொல்லி மகாராணி விசாரிக்கிறாள் – மீங்கு உறங்கிட்டிருக்காளா? 

இல்லேம்மா எழுந்திருக்க முயற்சி செஞ்சுட்டிருக்கா என்று உள்ளே பார்த்தபடி சொல்கிறார் வைத்தியர். மகாராணி உள்ளறைக்குள் நுழைய அவசரமாக மருத்துவச்சி எழுந்து நிற்கப் பார்த்து கையை மறைத்த அங்கவஸ்திரம் விலக, கட்டிலில் சாய்கிறாள். குழந்தை குழந்தை என்று மிங்கு அழும் குரலில் கை காட்டுவதற்குள் ராணி கட்டிலில் கிடத்திய சிசுவை நகர்ந்து உருளாமல் நிலையாக வைக்கிறாள். மருத்துவச்சி கையை இன்னும் விடாமல் சின்ன அரிந்தம் தொடர்ந்து அழுகிறான்.

 நல்ல பிரசவம் தானே, மருத்துவச்சி கையைத்தான் குட்டி வைத்தியன் விட மாட்டேங்கறான் போல இருக்கு. ராணி சொல்கிறாள். ஒரு வினாடியில் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு துணி வைத்து மூடியிருந்த குழந்தைக் கையைப் பார்க்கிறாள். பிஞ்சு விரல்கள் இறுகப் பிடித்திருந்த மருத்துவச்சியின் விரலை விலக்கிப் பார்க்கிறாள். அது இறுகியே இருக்கிறது.

வைத்தியா, வீட்டுலே மிளகு பயிர் பண்ணியிருக்கியா? 

அவள் வைத்தியரைக் கேட்கிறாள். ராத்திரி பதினொரு மணிக்கு மிளகு பயிர் பற்றி விசாரிப்பது கேட்டு வைத்தியருக்கு ஆச்சரியம் அதிகரிக்கிறது. பயிர் பண்ணியிருக்கேன் அம்மா என்று பணிவாகச் சொல்கிறார். 

அதிலே ஒரு பிஞ்சு மிளகுக் கதிரை மிளகு முத்து உதிராமல் எடுத்துக்கிட்டு உடனே வா. 

வைத்தியர் இருட்டில் வெளியே ஓட, பின்னாலேயே மகாராணியின் வீரர்கள் கொளுத்திப் பிடித்த தீவட்டியோடு போகிறார்கள்.

மிளகுக் கொடியிலிருந்து ஒரு இளம்கதிர் மிளகு முத்துக்களோடு உள்ளறைக்கு வருகிறார் வைத்தியர். அதை வாங்கி குழந்தை விரல்களில் மருத்துவச்சி விரல்களுக்கு மேல் பிடித்தபடி வைக்கிறாள் மகாராணி. 

சிறு குமிழியை உடைப்பதுபோல் ஒரு மிளகு முத்தைத் தன் கட்டைவிரலும் ஆள்காட்டி விரலும் கொண்டு நசுக்கி உடைக்க மிக மெல்லிய வாடையும் சத்தமுமாக அது உடைகிறது. பிடித்திருந்த சிசுவின் கை அவசரமாக பின்வலிக்கப்பட்டு சிசுவின்  இடுப்பில் அமர்கிறது. மீங்குவும் வைத்தியரும் சிரிப்பும் சந்தோஷமுமாக நிற்கிறார்கள்.

மகாராணி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள் மீங்கு.  வைத்தியன் வீட்டிலேயே வந்து மருத்துவம் பண்ணியிருக்கேன். எனக்கென்ன தரப் போறே மீங்கு? மகாராணி சிரித்தபடி கேட்கிறார்.

“ஒரு மரக் குடுவை நிறைய பாலும் ஷர்பத்தும் வைத்து உறைய வைத்த சுவையான பனிப் பழக் கட்டிகள், மகாராணி அம்மா” என்கிறாள் மிங்கு. 

“அதோடு குளிகைகளும், லேகியமும் சூரணமும்” என்றபடி மிளகு ராணி வைத்தியரைப் பார்க்கிறாள். ஆமாம் அம்மா என்று தலையைக் குனிந்து சிரிக்கிறார் அவர்.

Series Navigation<<  மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறுமிளகு  அத்தியாயம் ஐம்பத்தெட்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.