
ஆன்லைனில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்தார் கும்பமுனி. ஆதித்திய கரிகாலனைக் கொன்றவரார், கொலையேதானா, தற்கொலையா, விபத்தா, அயல் கண்டத்துச் சதியா, ஹாராக்கிரியா என்ற பிரச்னை ஆழிப் பேரலையாய் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பது. ‘சோத்துக் கவலை இல்லாட்டா சூத்துக் கவலை’ என்பது சொலவம். எத்தனை முண்டிதமோ, மண்சோறோ, குறியறுத்துக் குலதெய்வத்தின் தலைமீது சொரிதலோ! நாடே தீப்பற்றி எரியும் போல! முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் காந்தியைக் கொன்றவரெவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறாரா என்பவையே விடைகாண இயலாத நூல்புட்டுச் சிக்கல். இதில் ஆயிரம் ஆண்டுகள் முன்பு செத்தவரைப் பற்றிய இன்று கலை இலக்கிய அரசியல் கவலை என எரிச்சலுற்றார் கும்பமுனி.
‘அது மாத்திரம் இல்லடோ இவம்மாரோட கவலை! சொப்பன தாரகை நடிச்ச படம் எத்தனை கோடி அள்ளும்? முருங்கைக்காய்த் துறை அமைச்சருக்கு வைப்பாட்டியுடன் என்ன ரசக்குறைவு? கிரிக்கெட்லே மன்மதன் அணி வெல்லுமா? கத்தரிக்காய்த்துறை மந்திரி கேமரூன்லே இரண்டாயிரம் ஏக்கர் தோட்டம் வாங்கீருக்காராமே, உண்மையா?’ என்று மறுகால் பாய்ந்தது கும்பமுனியின் உள்மனது. சவம், அவனவன் கவலை அவனவனுக்கு!
“இதக்கேடா இருக்குண்ணா அதை என்னத்துக்குப் போட்டு நோண்டுகேரு பாட்டா? இரும்பு பிடிச்சவன் கையும் சிரங்கு வந்தவன் கையும் சும்மாவே இருக்காதுண்ணு சொல்லுகது சரியாத்தாலா இருக்கு?” என்று சலித்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை.
“ஆயிரம் கோடி செலவாக்கி ஆராய்ச்சி நடக்குல்லாவே!” என்று சமாளித்தார், கும்பமுனி.
“அது ஆராய்ச்சி இல்ல பாட்டா… தொடையிடுக்கிலே கைவிட்டுச் சொறிஞ்சு கொடுத்துட்டு காசு உண்டாக்கப்பட்ட சங்கதியாக்கும்” என்றார் கண்ணுபிள்ளை.
கண்ணுபிள்ளையைப் போன தலைமுறையில் சரக்கடித்துச் செத்த சிறுபத்திரிகை எழுத்தாளனின் ஆவி பிடித்து அலைக்கழிக்கிறது போலும் என்று உத்தேசித்துச் சிரித்தார் கும்பமுனி.
“இந்த நக்கல் சிரிப்பெல்லாம் வேண்டாம் பாட்டா. நான் உம்மைப் பத்திப் பேட்டி குடுத்தேன்ணா நாடே நாறிப் போயிரும் பாத்துக்கிடும்” என்று சினந்தார் கண்ணுபிள்ளை.
“அதுக்கு ராத்திரி மூணு மணிக்கு நான் எவளுக்கும் – நீ பாரதப் பேரெழில், உன் யாப்பு எமிலி டிக்கின்சனுக்கு சமானம். நீ நாவல் எழுதினா ஆல்பர் காம்யு, பிரான்ஸ் காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ், லியோ டால்ஸ்டாய், பியோதர் தாஸ்தாவெஸ்கி, மக்சிம் கார்க்கி, இவான் துர்கேனிவ், ஐசக் பாஸ்விஸ் சிங்கர், சொல் செனிட்சின், வில்லியம் ஃபாக்னர், எர்னஸ்ட் ஹெமிங்வே எவனும் கிட்ட நிக்க முடியாது – என்றெல்லாம் வாட்ஸ் ஆப் அனுப்புகேனா வேய்?”
“அதென்ன பாட்டா, இதுல இந்திய எழுத்தாளர் எவன் பேரும் இல்லே!’’
“அதுக்கும் படிச்சிருக்கணும்லாவே! இதுன்னா பேரு தெரிஞ்சாப் போரும்…”
“இவாள் எல்லாரும் நாவல் எழுதீருக்காளா பாட்டா?”
“அதுபற்றி எவனுக்குக் கவலைவேய்? பேரு சொன்னால் போராதா? அப்பம் திம்பேரா குழி எண்ணுவேரா?”
“இதுலே எதாம் பேரு விட்டிராமப் பாத்துக்கிடும்… பொறவு நீரு பிள்ளைமாரு எழுத்தாளன் பேரு மாத்திரம் சொல்லுகேருண்ணு எவனும் திறனாய்வுக் கலாநிதி கட்டுரை எழுதுவான்…”
“அதைப்பத்தி எல்லாம் வெசனப்பட்டு முடியுமாவே? அஞ்சாறு வருசத்துக்கு முந்தி பாத்துக்கிடும். ‘கொள்ளிடக்கரை’ இதழாசிரியர் நம்ப நண்பர். அவுரு வேண்டி விரும்பிக் கேட்டுக்கிட்டாருண்ணு ஒரு பொம்பிளைப் பிள்ளை எழுதின கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிக் குடுத்தேன். அந்தப் பிள்ளையை நமக்குத் தெரியாது. கேட்டதும் இல்லே, பாத்ததும் இல்லே… சமூகநீதிப் பேராசிரியர் ஒருவர் இதழாசிரியருக்கு ஃபோன் போட்டுக் கேட்டாராம் – அந்தப் பிள்ளை பிள்ளைமாராண்ணு? கேட்டேரா? இதுவரை தமிழில் சகலகலாவல்லி சன்மான் விருது வாங்கினவா எந்த சாதிக்காரருண்ணு தெரியுமா உமக்கு?”
“பாட்டா, வேண்டாம்… சொன்னாக் கேளும்… வெனைய வெலை குடுத்து வாங்குகேரு… அதுக்கு இப்பம் வேற ஒரு சொலவம் உண்டே… ஆம்… சொந்தச் செலவிலே சூனியம் வைக்கது…”
“சரி, சவத்தை விடும்… கட்டஞ்சாயா போடுகதிலே நீரு கில்லாடி! அதுக்கு உமக்கு ஒரு பாரத கலா ரத்னா விருது குடுக்கலாம்…” என்று வாசலீன் தடவினார் கும்பமுனி.
“அதுக்கெல்லாமா குடுப்பா?” என்றார் தவசிப்பிள்ளை.
“அதிரசம் ஆள் வச்சு சுடப்பட்டவனுக்கு எல்லாம் புண்டரீகத் திரு குடுக்கானுகவே!”
“கட்டன் வேணும்ணா அதைச் சொல்லும். இந்தக் குசும்பு வேலை நம்மள்ட்டே வேண்டாம், மனசிலாச்சா!” என்று சொல்லியவாறு தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை குசினிப் பெரைக்குள் நுழைந்தார்.
பதினெட்டு ஆண்டுகள் மூத்த க்ளென் ஃபிடிஷ் சிங்கிள் மால்ட் விஸ்கி மோந்து பார்ப்பது போன்றும், காதலித்த பெண்ணுடன் முயங்கும்போது அவள் கைக்கிடையை மோந்து பார்ப்பது போன்றும், கும்பமுனி தவசிப்பிள்ளை மேல்துண்டால் தாங்கிக் கொணர்ந்து கொடுத்த கடுப்பம் கூடிய கட்டன் சாயாவை மோந்து பார்த்து, சூடு பொறுக்கப் பொறுக்க ஒரு சின்ன உறிஞ்சு உறுஞ்சினார். கலவியின் உச்சம் கண்ட மெய்ப்பாடு அவரிடம்.
“வாவ், செம, வேற லெவல், சான்சே இல்லே… கட்டன் போடுகதிலே உம்மை அடிச்சுக்க முடியாதுவே” என்று சிலாகித்து வியந்தோதினார் கும்பமுனி.
“பாட்டா! நாஞ்சில் நாடன் பெய எழுதின ‘நெல் எது, களை எது?’ கட்டுரை படிச்சிட்டேரா? ” என்றார் தவசிப்பிள்ளை.
“நான் எதுக்குவே வாசிக்கணும் அந்த கிறுக்குப் பிடிச்ச பயலை எல்லாம்? சீமப்பயவே! அவன் தன்னை தேவநேயப் பாவாணர், ம.இல. தங்கப்பாண்ணு நினைச்சுக்கிட்டுக் கெடக்கான். ஆனை தூறுதுண்ணு ஆட்டுக்குட்டி தூறுனாக்க அண்டம் கிழிஞ்சுரும் ஆமா!”
“இல்ல பாட்டா… நீரு வாவ், செம, வேற லெவல்ணு சொன்னாப்பிலே நெனச்சேன்! உமக்கும் அந்தச் சீக்குப் புடிச்சுற்றுணு”
பேசிக் கொண்டிருக்கும் போதே, கும்பமுனி வீட்டு முற்றம் தாண்டிய பனங்கருக்கு மட்டை படலைக் கதவின் முன்பாக நவீன வாகனம் ஒன்று வந்து நின்றது. தானேதும் மக்கள் சேவையில் இல்லையே ரெய்டு வருவதற்கு என்றெண்ணிக் குமைந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத தெரு என்பதால் எவர் வீட்டுக்கு வந்த கார் என்றாலும் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம், எவர்க்கும் இடைஞ்சல் இல்லை. போக்கு மாடு ஏதாவது சாணமும் மூத்திரமும் கலங்கிய சேற்று வாலால் வீசினால்தான் உண்டு.
ஓட்டுநர் இறங்கி, பின் இருக்கைக் கதவு திறந்து பிடித்துக் கொள்ள, அறுபது வயது மதிக்கத்தக்க நாரீமணி பேருடம்பைக் காரில் இருந்து இறக்கி, நின்று துப்பட்டாவை நேர் செய்து, கையால் கேசம் ஒதுக்கி, நடந்து, படலைக் கதவைத் தள்ளித் திறந்து, கும்பமுனி வீட்டு முற்றத்தில் பாதம் பதித்தாள். ‘அரவிந்த மலரின் நீங்கி அடியிணை படியில் தோய திரு’ நடந்து கும்பமுனி நிலையம் கொண்டிருந்த படிப்புரை வாசலை அடைந்தாள்.
குனித்த சிரைத்த புருவம், சாயம் பூசிய செந்துவர் வாய், எடுத்துக் கட்டிய பார இளநீர், பருத்த இடை…
தேர்தல் காலமும் இல்லை. சோப்பு, ஷாம்பு, பவுடர் விற்பனைப் பெண்ணும் இல்லை. விந்து முந்தாமல் இருக்கவும், ஆண்குறி எட்டு அங்குலம் நீளம் பெறவும் அலைபேசியில் விளம்பரமாய் விளித்ததைத் தாண்டி தற்போது வீடுவீடாக விற்பனைக்கு இறங்கி விட்டனரோ என அஞ்சினார் கும்பமுனி. ஒரு வேளை மத்திய அரசின் கர்பர் யோஜ்னா எனும் புதிய திட்டமாக இருத்தலும் கூடும்.
‘வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்’ என்ற இளங்கோவின் வரியும், ‘இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க’ எனும் கம்பனின் வரியும் துலங்க, கைப்பை சுமந்து மருங்கு அசைய நடந்து வந்தாள்.
தவசிப்பிள்ளை ஒரு குசும்புச் சிரிப்புடன் கும்பமுனியைப் பார்த்தார்.
“அப்பிடிப் பாக்காதேயும் ஓய்! அதுக்குள்ள பிராயமா நமக்கு?”
“ஆமாமா… ஆனா காலத்திலே அடிச்சு முறிச்சிட்டேரு… மனுசனுக்க அலவலாதித்தனம்…” என்று முனகினார் தவசிப்பிள்ளை.
மெல்லடி நடந்து வந்தவள், படியில் ஏறி, கும்பமுனியின் சற்றே சாய்வான சூரல் நாற்காலியின் முரண் திசையில் கிடந்த பிளாஸ்டிக் கசேரியில் அமர்ந்தாள். அமர்ந்தவள் மேலே பார்த்தாள், மின்விசிறி நான்று கிடந்தால் போடச் சொல்லலாம் என. தவசிப்பிள்ளை நினைத்துக் கொண்டார் – வாட்ஸ் ஆப் அல்லது யூட்யூப்காரன் எவனும் வீடியோ எடுத்தால், ஆதிக்க சாதிக்காரரான கும்பமுனி, ஒடுக்கப்பட்ட சாதிக்காரியைப் பிளாஸ்டிக் செயரில் உட்கார வைத்தார் என எழுதுவான் என.
வந்து அமர்ந்திருந்த பேரிளம்பெண் பருவத்தாளை கும்பமுனி கூர்ந்து அவதானித்தார். ‘ரேஷன் கார்டே அடமானத்தில் இருக்கும் நம்மகிட்டே நன்கொடை கேட்டு எவரும் வர வாய்ப்பில்லே. வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை சீசனும் இல்லே. தமிழறிஞர் பென்சனும் கிடையாது… ஒரு வேளை ஏதாவது வங்கியில் இருந்து ராஷ்ட்ரீய லோன் அதாலத் ஏதும் இருக்கலாம். அல்லது தாடகை மலை அடிவாரத்தில் கேட்டட் கம்யூனிடி வில்லாக்கள் கட்டறோம், வாங்குங்க எனக் கேட்டு வந்திருக்கலாம்’ என்று ஓடியது கும்பமுனியின் மனப் புரவி.
சம்பிரதாயமாக, தவசிப்பிள்ளையிடம், “மேடத்துக்கு ஒரு கிளாஸ் வெள்ளம் குடுவே!” என்றார். கொணர்ந்து கொடுத்த பானைத் தண்ணீரைக் கையில் வாங்கி, தம்ளரை வைக்க டீப்பாய் – தீன்பாய் – முக்காலி இல்லாத காரணத்தால், படிப்புரைச் சுவரின் திண்டில் வைத்தாள்.
அம்மையாரே தொடங்கட்டும் என பார்த்திருந்தார் கும்பமுனி. ஒருவேளை ஏதாவது யூட்யூப் சேனல் நேர்காணலாக இருக்கலாம் என்று ஆத்ம சாந்தி அடைந்தார்.
“சார்! என்னை உங்களுக்குத் தெரியாது – மேலாங்கோட்டு இசக்கி அம்மன் கோயிலுக்குப் போற பாதையிலே புதுசா ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல் இருக்குல்லா, அதன் ஓனருக்கு ஒய்ஃப்” என்று தொடங்கினார் அம்மையார்.
‘அங்க எதாம் பிரபஞ்சத் தமிழ் மாநாடு தொடங்கப் போறதாட்டு இருக்கும்… ஒரு நாளும் இல்லாத திருநாளா நம்மளைப் போல உள்ள ஆளுகளையும் மாநாட்டுக்கு கூப்பிட வந்திருக்கா போல இருக்கு…’ என்று நினைத்தார் கும்பமுனி.
தொடர்ந்து, ‘எவ்வளவு பெரிய கொம்பு மொளச்ச படைப்பாளியா இருந்தாலும் பிரபஞ்சத் தமிழ் மாநாட்டுலே கலந்து கொள்ள அழைக்கப்படணும்ணா விண்ணப்பப் படிவம் பூர்த்தியாக்கி அனுப்பணும்… நாலஞ்சு சிபாரிசு கடிதம் இணைக்கணும்… ஆளுங்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினராகவோ, அனுதாபி ஆகவோ இருக்கணும். பொறவு வாசிக்க உபதேசித்திருக்கும் 2468 சொற்களுக்கு மிகாத கட்டுரையின் சுருங்கிய வடிவம் 347 சொற்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பணும் பரிசீலிக்க… அதெல்லாம் நாம ஒண்ணும் செய்யலியே’ என்று ஒத்தி வைப்புத் தீர்மானமும் வரைந்தார் கும்பமுனி.
கும்பமுனியின் சிந்தனைச் சிற்றாற்றுப் பாய்ச்சலை அறிந்து கொள்ளாமல் அம்மையார் தொடர்ந்தார்.
“நான் சின்னப்பிள்ளைலே இருந்தே பொஸ்தகமும் கையுமாத்தான் திரிவேன் பாத்துக்கிடுங்கோ! இப்பம் அநேகம் பேரு கக்கூஸ் சீட்டில உக்காந்து வாட்ஸ் ஆப் பாக்காள்ளா… நான் அப்பவே கையிலே புக்தான் வச்சிருப்பேன்…”
“ஓ! என்னெல்லாம் படிப்பியோ?”
“எல்லாத் தொடர்கதையும் படிப்பேன்… பெறவு சினிமாப் பாட்டெல்லாம் மனப்பாடம்… கவிதைண்ணா கொள்ளைப் பிரியம்”
“மேற்கொண்டு?”
“மனசிலாகல்லே…”
“வயிறு நெறையது வரைக்கும் பருப்புச் சோத்தையே திம்பேளா? சாம்பார், தீயல், புளிசேரி, ரசம், சம்பாரம் ஏதும் ஊத்திக்கிட மாட்டேளா?”
“நீங்க என்னத்த சம்பந்தமில்லாமப் பேசுகியோ? பார்க்கின்சன் உண்டா உங்களுக்கு?”
“அது ஒண்ணுதான் பாக்கி” என்றார் தவசிப்பிள்ளை உள் நகையுடன்.
ஒரு ஒத்து தீர்ப்பு மனோநிலையில், கும்பமுனி – “சரி! சவத்துப் பாட்டைத் தள்ளுங்கோ… நீங்க வந்த காரியத்தைச் சொல்லுங்கோ…” என்றார்.
அம்மணியார் சற்று மேற்கூரையைப் பார்த்தார். பனங்கைகளும், கொல்லம் ஓடுகளும், நூலாம்படைகளும், குழவிக்கூடும், ஆயிரம் கோடி பட்ஜெட்டில் காதல் காட்சியில் ஓடிப்பிடிக்கும் நாயக நாயகிபோல் கலவிக்கு முன்மொழியும் பல்லிகள் நடமாட்டமும் தெரிந்தன.
“வெக்கையா இருக்குண்ணா ஒரு வீசாறி தரட்டா?” என்றார் தவசிப்பிள்ளை அருட்பெரும் கருணையுடன். சும்மாவா சொன்னார் ஔவைப்பாட்டி ‘தயையும் கொடையும் பிறவிக் குணம்’ என்று. அம்மணியார் தவசிப்பிள்ளையைப் பொருட்படுத்தவில்லை. நகுலன் கேட்டது போல், சந்நிதானத்தின் சமீபத்தில் நிற்பவரைக் கடவுள் எனக்கொளல் தகுமோ?
சற்றுநேரம் சாலையோரம் நின்ற தன் வாகனத்தை வெறித்துவிட்டு அம்மணியார் உரைக்கலானார் – “அப்பப்பம் நான் கொஞ்சம் ப்பொயட்ரி எழுதுவேன் வெளையாட்டுப் போல… கேட்டேளா!”
குயுக்தியுடன் கும்பமுனி குறித்துக் கொண்டார் – கவிதை எழுத்தே இப்போது பலருக்கும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் சமாச்சாரம் ஆகிவிட்டது என்று. தமிழ்க் கவிதையை சகலகலாவல்லி காக்க என வேண்டிக் கொண்டு – “ஓ! அப்பிடியா! நல்ல காரியம்” என்றார்.
“எல்லாமே ரெண்டு வரி, மூணுவரி கவிதைதான். இப்பம் எனக்கு ஒரு யோசனை பாத்துக்கிடுங்கோ. நம்ம ஓட்டல்லே டபுள் ரூம், சூட் எல்லாம் சேத்து எழுவத்திரண்டு ரூம் இருக்கு… எல்லாமே ஏசிதான். எல்லா ரூம்லேயும் நாலு செவுருலேயும் நம்ம கவிதைகளைப் பெரிய எழுத்திலே, ஓவியரைக் கொண்டு எழுதி பிரேம் போட்டு மாட்டுனா என்னாண்ணு… வீட்டுக்காரர்ட்டே கேட்டேன். சும்மா காலண்டர், கடவுள் படம், அழகிகள் படம், இயற்கைக் காட்சிண்ணு மாட்டுகதுக்கு நம்ம கவிதைகளையே எழுதி மாட்டுனா நல்லதுதான் அப்பிடீண்ணாரு…”
“ஆனா தமிழ் தெரியாதவனும் ரூம் எடுத்துத் தங்க வருவான்லா…” என்றார் தவசிப்பிள்ளை மாற்றுக் குரலாக.
“அதைப் பார்த்தா முடியுமா? இப்பம் நம்ம ரெஸ்டாரெண்ட்லே புட்டு – கடலைக்கறி, ஆப்பம் – மசால்கறி, இடியாப்பம் – புளிசேரி, தேங்காய்த்தோசை – மிளகாய்ப் பொடி, சினை இட்லி, வெந்தயக் கொழுக்கட்டை, வேகவச்ச மரச்சீனிக் கெழங்கு எல்லாம் ரெடி பண்ணுகோம்… கிச்சடி, பாவ்பாஜி, பாக்ரி, வடா பாவ், டால் தட்கா எல்லாம் போடுகதில்லேல்லா… அதுபோலத்தான்”
“ஆமா! அதும் ஒரு பாயிண்ட்தான்” எனப் புறமுதுகிட்டார் தவசியார்.
“சரிங்கம்மா… இப்பம் நான் அதுக்கு என்ன செய்யணும்? எனக்கு ஓவிய எழுத்தும் வராது… பிரிண்ட் எடுத்து பிரேம் செய்யப்பட்ட தொழிலும் தெரியாது” என்றார் கும்பமுனி.
“இந்த ஃபைல்ல ஒரு ஆயிரத்து முன்னூற்றுச் சொச்சம் கவிதை இருக்கு… இதுலேருந்து, 72x4=288, உத்தேசமா ஒரு முன்னூறு கவிதை செலக்ட் பண்ணித் தரணும்…”
“அதாவது வறுத்த நெலக்கடலைலே ரெண்டு கொட்டை, மூணு கொட்டை கடலை பொறுக்குகது மாதிரி” என்று தவசிப்பிள்ளை ஆய்வு நிபுணர் கருத்து சுட்டிச் சென்றார்.
அவரைப் பொருட்படுத்தாமல் அம்மையார் மேற்சென்றார். “தேர்ந்தெடுக்கும்போது அப்பிடியே கொஞ்சம் கவிதைகளையும் கை பாத்திருங்க ஐயா!”
தவசிப்பிள்ளை மனதுக்குள் பொருமினார், ‘பாட்டா எழுதப்பட்ட 654-வது முன்னுரைக்கான வாய்ப்பு இல்லாமப் போச்சே!’ என்று.
ஏ-4 அளவில் புதிய வெள்ளைத்தாளில், ஒரு பக்கம் மட்டும், பக்கத்துக்கு ஒரு கவிதையாகத் தட்டச்சு செய்யப்பட்ட கவிதைகள் அடங்கிய பெரிய பாக்ஸ் ஃபைலைத் தூக்கி வந்து ஓட்டுநர் முன்பே கொடுத்து விட்டுப் போனதைக் கும்பமுனியிடம் கொடுத்தார் அம்மையார்.
“ஒண்ணும் திறுதி இல்லே கேட்டேளா! வெப்ராளப்படாம, ஆற அமர வாசிச்சு செலக்ட் பண்ணுங்கோ… நீங்க விரும்பின கரெக்க்ஷன்ஸ் எந்த மடியும் மாய்ச்சலும் இல்லாம செய்யலாம்” – என்றார். தொடர்ந்தும் மொழியலானார்-
“பின்னேயும் ஒரு காரியம். நீங்க செய்கிற காரியம் எனக்கு சாமானியமானது இல்லே… அதுனால நீங்க செய்யப்போற காரியத்துக்காக, நீங்க எப்பம் எங்க ஓட்டலுக்கு வந்தாலும் சாப்பாடு இலவசம். தங்கினாலும் முறிக்கு வாடகை போட மாட்டோம்… எல்லாம் கம்பனி கணக்குத்தான். நீங்க இதுலே கூச்சப்படதுக்கோ, அறச்சு நிக்கதுக்கோ ஒண்ணுமில்லே பாத்துக்கிடுங்கோ…”
கும்பமுனி மோனத் தவத்தில் ஆழ்ந்தார். தவசிப்பிள்ளைக்கும் அஃதே நிலை. எங்கிருந்து என்ன சொல்லித் துவங்குவது என்றும் தெரியவில்லை. அம்மணியார் எதிர்ப்பும் மறுப்பும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்.
“அப்பம் நான் புறப்படட்டா? மூணு கெழமை கழிச்சு இதே நேரத்துக்கு வாறன் என்னா?” என்று கூறி எழுந்து காரை நோக்கி நடந்தார்.
‘வேணும்னா சக்கை வேரிலேயும் காய்க்கும்’ என்று முனகினார் தவசிப்பிள்ளை.
நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று, வேலியோரத்தில் நின்ற பூலாத்திச் செடி மூட்டு நிழலில் முடங்கிக் கிடந்த வைரவன் என நாமம் தாங்கிய தெருப்பட்டி, கும்பமுனியையே பார்த்துக்கொண்டு இருந்தது.