தெய்வநல்லூர் கதைகள் -12

This entry is part 12 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

நான் யூகித்தபடியே அன்று மாலை பிரேமை பெரியகோவிலுக்கு (உமையொருபாகன் கோவில்) நாங்கள் அழைத்துச் செல்ல வேண்டும். மெஜூரா சங்கீதாவை அழைத்து வருவார். பிரேமையும், சங்கீதாவையும் பேசச் செய்து விட்டால் விஷயங்கள் சரியாகி விடும் என சிவாஜி சொன்னார். கூடவே யாருக்கும் இது தெரியக்கூடாது எனவும், குறிப்பாக சம்பந்தப்பட்ட இருவருக்கும் தெரியவே கூடாது எனவும் சொன்னார்.  எந்த இடத்தில் இருவரும் சந்திக்க வேண்டும் என்ற திட்ட செயல்முறையையும் விளக்கினார். அதன்படி உள்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் ஆறுமுக நயினார் சன்னதி தெரிவு செய்யப்பட்டது. இதற்கு நடுவே எங்கள் அணியின் மு மா, நாங்கள் இருவரும் ஏதோ செய்கிறோம் என்பதை குறிப்பால் உணர்ந்து என்ன செய்கிறோம் என கேட்டுக்கொண்டே இருந்தார். பிரேமிடமே சென்று தான் கேட்கப்போவதாக மு மா மிரட்ட ஆரம்பித்ததும் சிவாஜி வேறு வழியின்றி எங்கள் ஏற்பாடுகளை சொல்ல வேண்டியதாயிற்று. 

சிவாஜி மு மா விடம் தான் காரணங்களை தனியே விளக்குவதாகச் சொல்லி மறுநாள் இடம், நேரம் குறித்தார். கூடவே முதல்நாள் மாலை நியூஸ் சந்திரனிடம் சற்று நேரம் தனியாகப் பேசினார். என்னிடம் கூட என்னவென்று சொல்லவில்லை. மு மா விடம் நாங்கள் இந்த ஏற்பாடுகளைச் சொன்னாலும் பிரேம் அழுததையோ, அதற்கு காரணமான வாகை மரத்தடி சந்திப்பைக் குறித்தோ சொல்லவில்லை. மு மா இந்த அத்தியாயத்தை வாசிக்காத இந்த நொடி வரை அவருக்கு சம்பவங்களின் உள்ளடுக்குகள்  தெரியாது. சம்பவங்களின் உள்ளடுக்குகள்  தெரியாத நிலையிலேயே மு மா பிரேம்-சங்கீதா சந்திப்புக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். அந்த எதிர்ப்புக்கான தகுந்த காரணங்களை விளக்குமாறு உயர்மட்டக் குழு (சிவாஜி, நான், நியூஸ்  சந்திரன், உயர்மட்டக் குழு தற்காலிக உறுப்பினர் சேமியா மற்றும் நிரந்தர உறுப்பினர் செண்பக விநாயகர்) கேட்டபோது மு மா முன்வைத்த காரணங்களை மூன்றாகச் சுருக்கி சொல்லலாம். 

  1.  அணியினர் அனைவரது ஒப்புதலையும் பெறாமல் குழுவின் சில உறுப்பினர்கள் மட்டும் தன்னிச்சையாக செயல்படுவது (தன்னையும் உயர்மட்டக் குழுவில் சேர்க்காமல் இருப்பது )
  2. பிரேம் எனும் ஒற்றை உறுப்பினரின் பெருமையை மீட்பதற்காக மொத்தக் குழுவினரையும் பணிகளில் ஈடுபடுத்துவது ( நானும்  ஊளப்பால் கூட சண்ட போட்டு அவன்ட்ட பேசாம இருந்தேம்லா. அப்ப நீங்கல்லாம் இப்டிதான் எனக்கு ஏண்டுகிட்டு வந்தியளால?)
  3. முதலிரண்டு காரணங்களை விட முக்கியமாகக் கருதும் மூன்றாவது – “பொட்டப்புள்ளயள்ட்ட போயி கெஞ்சுனா நமக்கு என்னல மரியாத இருக்கு? நானொண்ணும் சூடு, சொரணங்கெட்டு போவல…” 

மு மா இவ்வாறாக பேசுவார் என்பதை எதிர்பார்த்திருந்தாலும் இவ்வளவு விரைவாக வாயால் வாள் வீசுவார் என்பதை ஜீரணிக்க முடியாத என்னால் உடனடியாக அவருக்கு எதிர்வினை ஆற்ற முடியவில்லை. ஆனால் வழக்கம் போல சிவாஜி இதற்கும் தயாராகவே இருந்தார். “ சரிடே, இப்ப என்ன செய்யணும்ங்க?” என அவரது வழக்கமான நிதானப் போக்கை இன்னும் நிதானமாக்கி கேட்டார். மு மா பதில் தாக்குதலையே எதிர்பார்த்திருந்ததால் இந்த கையுரலில் வெற்றிலை இடிக்கும் கிழவித்தனமான எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை. ஆகவே உடனடியாக பதில் இன்றி பதட்டமடைந்தார்-“ பிரேம் பொட்டப்புள்ளைகள்ட்ட பேசக்கூடாது. அம்புட்டுத்தான்”. 

“பிரேம் அந்தப் புள்ளைய்கள்ட்ட பேசக்கூடாதா? சங்கீதா கிட்ட பேசக்கூடாதா?” – சிவாஜி கிழவி வாளை உறையிலிருந்து உருவும் ஒலி எனக்கு மட்டும்தான் கேட்டது. பதட்டத்தில் மு மா தன் தற்காப்பை மறந்திருந்தார்.

 “ஆமா, அவன் சங்கீதாகிட்ட பேசக்கூடாது.”   

“அதென்னடே அவன் சங்கீதாட்ட மட்டும் பேசக்கூடாது? மத்த புள்ளையள்ட்ட பேசுனா ஒனக்கு சொரணங்கெட்டு போவாதோடே?” – கிழவியின் வாள்வீச்சு மு மா வின் முகத்தில் கீறலை உண்டுபண்ணி விட்டது. கசியும் ரத்தம் மு மா வை நிலையிழக்கச் செய்ய ஆரம்பித்தது –“ அந்தப் புள்ள சங்கீதாவ பிரேம்தான மாட்டி வுட்டான். இப்ப எதுக்கு அவ கூட பேசணும்ங்கான்? இவன் ஒவ்வொரு மட்டமும் மாத்தி மாத்தி  எதையாச்சும் செய்வான். நாமளும் இவனுக்கு ஒவ்வொரு மட்டமும் ஏண்டுக்கிட்டு நிக்கணுமால? “

“அவன் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்துருக்கான். நம்ம அணிய முதல் எடத்துல கொண்டு வச்சிருக்கான். சார்கள்ட்டயும், டீச்சர்கள்ட்டயும் நமக்கு நல்ல பேர் எடுத்துக் கொடுத்துருக்கான். நாம அவனுக்கு செஞ்சா என்னடே தப்பு?”- கிழவி வாளை உறையில் இடாமலேயே வெற்றிலை போட ஆரம்பித்தாள். 

கிழவியின் நிதானம் மு மாவை நிலையிழக்க வைத்தது – “அதுக்குன்னு ? பிரேம் சங்கீதா கிட்ட பேசாம இருந்தாத்தான் எல்லாருக்கும் நல்லது.” 

கிழவி வாளை விடக் கூர்மையான காதுகளை உடையவள் –“ எல்லாருக்கும் நல்லதுன்னு யாருடே சொன்னா? சேமியா, நம்ம அணிக்காரங்க யாராவது அப்டி சொன்னானுவளான்னு கேளுல”. சேமியா காலெடுத்துத் திரும்பிய நொடியில் மு மா பதற்றமடைந்தார்- “நம்ம அணியிலருந்து யாரும் சொல்லல.. “ சேமியா தேங்கி நின்றார். 

“அப்ப வேற யார்டே சொன்னா?” – கிழவியின் கைவாள்நுனி மு மா வின் தொண்டையைத் தொட்டு நின்றது. மு மா திகைப்படைந்தார். சிவாஜி நியூஸை எறிட்டார். நியூஸ் சந்திரன் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு சொன்னார் –“ ஊளப்பால் தானல சொன்னான்?”. மு மா திகைப்பிலிருந்து ஆத்திரத்துக்கு மாறுவது தெரிந்தது. “என்னல ? வெளையாடுதீங்களா? அவனுக்கும் எனக்கும் என்னல பேச்சு? நீதான் பாத்தியோ. மயிராண்டி ..”

நியூஸ் அரைக்கண்ணால் சிவாஜியைப் பார்த்து விட்டு “முந்தாநேத்து சாயந்திரம் புளிய மரத்தடில ஊளப்பாலு உன்கிட்ட பிரேமையும், சங்கீதாவையும் பேச வைக்க சிவாஜி ஏண்டுகிட்டு வாரான். அவன அரவங்காட்டாம இருக்க வச்சா மூணு நாளைக்கு சீம்பாலு தாரேன்னு உன்கிட்ட சொன்னான். நீ அஞ்சு நாளைக்கி தருவியான்னு கேட்ட. அவனும் சம்மதிச்சாம்லடே.” சதித் திட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் மறைவிடங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அம்மறைவிடங்களுக்குள்      மறைவிடங்கள் இருக்கலாகாது எனும் உளவுச் செயல்பாட்டின் அடிப்படையை மு மா மறந்திருந்ததன்  விளைவே சிவாஜி கிழவி வாளை மு மா தொண்டைக்குழி வரை கொண்டு நிறுத்தியது. புளிய மரத்தடியின் ஒரு பாதி நம்மை மறைப்பது போலவே மறுபாதியும் இன்னொருவரை நம்மிடமிருந்து மறைக்கும் என்பதை மு மா, ஊளப்பால் இருவருமே கவனத்தில் கொள்ளாததால் மறுபாதி மரத்தில் மறைந்த மா முருகனாகிய ஈத்தக்குச்சி வழியே இச்சதி உயர்மட்டக் குழுவின் கவனத்திற்கு வந்தது.  மு மா வியூகத்தில் மாட்டிய அபிமன்யு நிலையை அடைந்தார். 

“ஏல மு மா, அம்புட்டு  பண்டம் தினோமும் தின்னும் ஒனக்கு கொதி ஆறலையால? ஊளப்பாலு உங்கிட்ட கேட்டதே தெண்டிலு ஏவி விட்டுத்தாம்ல. பிரேமும் சங்கீதாவும் சண்டையா இருக்க வரைக்கும் ஒழுங்கா படிக்க மாட்டாங்கன்னி அவம் கணக்கு போடுதாம், சரியா படிக்காட்டி நம்ம அணிக்கு மரியாத கெடையாதுன்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு, ஒனக்குத் தெரியலையால ? அஞ்சு நாளு அவம் பண்டந்தருவானா ? சரி, பெறகு ? தினோம் பண்டம் கொடுக்க பிரேம விட அஞ்சு நாளு பண்டங்கொடுக்கவன் ஒனக்கு பெரிய சேக்காளி ஆயிட்டானோடே?” – கிழவி வாள்முனையை ஊசிமுனையாக்கி மு  மா வின் வர்மப் புள்ளிகளை மட்டுமே   தொட்டு விளையாடினாள். 

மு மா தலை கவிழ்ந்து நின்றார். சிவாஜி மேலும் ஒன்பதரை நிமிடங்கள் உரையாற்றி மு மா வின் பதிலை எதிர்பார்த்து நின்றார். மு மா தனக்கு வாயில் புண் இருப்பதாகவும் சீம்பால் தின்பதே அதற்கு மருந்து என்பதால் தான் அவனிடம் பேசியதாகவும், மெய்யாகவே தனக்கு பிரேம் மேல் காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை என்றும் தன்னிலை விளக்கமளித்தார். மேலும் ஊளப்பாலிடம் அவ்வாறு பேசி சீம்பாலை மட்டும் பெற்றுக்கொண்டு அவன் சொல்வதைச் செய்யாமல் அவனை ஏமாற்றி விடும் நல்ல உள்நோக்கமும் தன்னிடம் அப்போது இருந்ததாகவும், இப்போதும் இருப்பதாகவும் கூடுதல் விளக்கமும் அளித்தார். கூடவே தன்னை சரியாகப் புரிந்து கொள்ளாத அணியினர் தன்னை புண்படுத்துவதாகவும் தான் மிகுந்த மன உளைச்சல் அடைந்து விட்டதாகவும் கூறி கண்கலங்க முயற்சித்தார். முயற்சி திருவினையாகும் முன்பே இரு கேள்விகள் முறையே நியூஸ், சேமியாவிடமிருந்து வந்தன. 1. “ நீ அவ்ளோ நல்லவன்னா நாங்க கேக்கதுக்கு முன்னக்கூட்டியே நீயே வந்துல்லடே சொல்லிருக்கணும் , நாங்க கேக்க வரைக்கும் ஊளப்பாலு உங்கிட்ட பேசுனான்னு நீ சொல்லாமத்தான இருந்த ?”    2. “அவன் சொன்ன மாதிரி கேக்கக்கூடாதுன்னு நெனச்சிருந்தா இப்ப எதுக்கு எங்கள நச்சு புடிச்சு என்ன நடக்குதுன்னு கேட்டுகிட்டு, கேட்டு முடிச்ச  பொறவு பிரேம் சங்கீதாகிட்ட பேசக்கூடாதுன்னு ஏன்  சொன்ன ? “ 

மு மா அம்பு சென்று தைத்த இடத்தில் இலக்கை வரைந்து விடும் ஆற்றலை பயில முயன்றவர். தான் நடந்ததைச் சொல்வதற்காகவே இப்படி கோபத்துடன் பேசுவதாக நடித்து தனியே அழைத்து வந்து சொல்லவிருந்ததாகவும், அதற்கு முன் தள்ளியிருந்து சிங்கியும், சோறுதின்னியும் தன்னை உளவறிவார்களோ என ஐயப்பட்டே அவர்களை நம்பச் செய்யும் நோக்கில் தான் இவ்வாறாக பேசியதாகவும் அவர்கள் விலகி விட்டதாகத் தெரிந்ததும் தான் உண்மையை உரைக்கவிருந்ததாகவும் அதற்குள் குழுவினர்  பொறுமையிழந்து தன் நட்பின் கற்பை ஐயப்பட்டு விட்டதாகவும் குமுறினார். சிவாஜிக்கு மு மா வை “அந்தப்படிக்கே (in statu quo)” விட்டுவிட மனமில்லை. ஆனால் மு மா வை பணிய வைக்கும் பிடி கிட்டாமல் கை பிசைந்த நேரத்தில் நான் களம் புகுந்தேன் – “எல்லாஞ்சரிடே மு மா, நீ செஞ்சதத்தானடே நியூசு சொன்னான். அது நெசந்தான? பின்ன எதுக்கு அவன மயிராண்டின்னு கெட்ட வார்த்த சொல்லி ஏசுன ? “ சிவாஜி முகத்தில் பட்டவாரத்தி அம்மை கூடி வந்தது தெளிவாகத் தெரிந்தது. குழுவின் அடிஅடிஅடிப்படை விதியாகிய “குழும உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தை சொல்லி வசவு பேசக்கூடாது” என்பதை நினைவு கூர்ந்து அதனை மீறிய  மு மா நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டுமெனவும், அதற்கு முன் “மாப்பு மன்னிப்பு, தோப்பு மன்னிப்பு” என்ற மும்முறை மன்னிப்பு மன்றாடலை நியூஸிடம் கேட்க வேண்டுமென்றும் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். மு மா மன்றாட்டை நிகழ்த்த நியூஸ் அதை ஏற்றுக் கொண்டவராக தலையசைக்க சிவாஜி புன்னகை பூத்து  மு மா மீதான மேல் நடவடிக்கை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து அவையைக் கலைத்தார். இது வெளியே தெரிய வேண்டாம் என்ற மு மா வின் கோரிக்கைக்கு  அவர் இனி நடந்து கொள்ளும் விதமே அதை முடிவு செய்யும் என சிவாஜி சொன்னது அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது. இவை அனைத்தும் நிகழ்ந்த மறுநாள்தான் பிரேமும், சங்கீதாவும் சந்திக்க இருந்த நாள். 

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் நாங்கள் வழக்கமாகவே கோவிலுக்குச் செல்லும் நாள். ஆகவே கோவில் வாயில் அருகே இருக்கும் புதிதாகக் கட்டப்பட்ட  ஐயப்பன் சன்னதி அருகே வழக்கமாக சந்திக்கும் இடத்தில் மாலை 6 மணிக்கு சந்திக்கலாம் என நான் அறிவித்ததை பிரேம் ஐயப்படவில்லை. ஆனால் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் தவிர பிறர் கோவிலுக்கு வரப்போவதில்லை என்பது பிரேம், சங்கீதா தவிர எல்லோருக்கும் தெரிந்திருந்தது. பிரேம் சொன்ன நேரத்திற்கு ஐயப்பன் சன்னதி வந்தபோது சிவாஜி மட்டுமே அங்கிருந்தார். வேட்டை விலங்கை உணர்ந்த இரை விலங்கின் முதல் நொடியை பிரேமின் உள்ளுணர்வு அடைவதற்குள் முன்னேற்பாட்டின்படி நான் உள்ளிருந்து வருபவன் போல தூண் மறைவிலிருந்து வெளியே வந்தேன் – “ சிவாஜி, சீக்கிரம் வா, வெளிப் பிரகாரத்துல மாங்கா பறிக்காங்க.  எல்லாருக்கும் மாங்கா ஒண்ணு கொடுக்கார் ஓதுவார் சாமி. பிரேம், நீயும் சீக்கிரம் வா” என அவசரப்படுத்தினேன். 

எனது தயக்கமின்மை பிரேமுக்கு சற்று நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். இயல்பாக உள்ளே நுழைந்த எங்களுடன் இணைந்து கொண்டார். கொடிமரம் அருகே  வெளிப்பிரகாரம் செல்ல எத்தனித்த பிரேமை ஓதுவார் சாமி உள்பிரகாரத்தில் இருப்பதாகக் கூறி உள்ளே அழைத்தேன். 

ஏற்கனவே சொன்னபடி 10 நிமிடங்கள் முன்பாகவே சங்கீதாவை அழைத்து வந்து விட்ட மெஜூரா முருகன் சன்னதியில் தான் ஷஷ்டி கவசம் சொல்வதாக வேண்டுதல் என்று சொல்லி நிறுத்தி வைத்திருந்தார். ( லேட்டாலாம் ஆகாது சங்கீதா, 10 நிமிஷத்துல சொல்லி முடிச்சிருவேன் (ஆன்மிக தர்க்க ரீதியில் காக்க வைத்தல்)–  ஆமா, சொல்லியாச்சுதான் , ஆனா மூணு மட்டம் சொல்லுதேன்னுதான் வேண்டுதலு, அதனால இன்னும் கொஞ்ச நேரம் (கெஞ்சு கொஞ்சல்) – ஏன் இந்த  தூணுக்கு பின்னாடி   உக்காந்து சொல்லணும்னா இந்தத் தூண்லதான மயில் செதுக்கிருக்கு, அது முருகன் வாகனம்லா (அப்பதான் மேக்கேருந்து வாற பிரேம் கண்ணுல படாம இருப்பீங்க (சிவாஜி- மெஜூரா கூட்டுச்சதி ) – மெஜூரா பொம்பள சிவாஜியாக மாறி சங்கீதாவை அணைக்கட்டி வைத்திருந்த திறம் இவை என அறிக). 

ஆறுமுக நயினார் சன்னதி ஏறியதும் வலப்புற இரண்டாம் தூணுக்கு முதுகு காட்டி வடக்கு நோக்கி அமர்ந்திருந்த சங்கீதாவையும், மெஜூராவையும் பிரேம் முதலில் கவனிக்கவில்லை. ஓதுவார் எங்கே என்ற கேள்வியுடன் திரும்பிய அவர் கண்களில் “கேர்ள்ஸ்” இருவரும் பட்டதும் பிரேம் சட்டென திரும்பி சிவாஜியை முறைத்தார். நான் அப்போதுதான் ஆறுமுகரை வாழ்விலேயே முதல்முறையாக புதிதாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் பிரேமின் கனலுமிழ் கண்களிலிருந்து தப்பினேன்.  சங்கீதாவும் அதே பார்வையை  அப்படியே மெஜூரா மேல் வீச கவச உடை தடுப்பு வீரர்கள் போல கனல் பாதிக்கா வண்ணம் இருவரும் நின்றனர். பிரேம் கையை சிவாஜியும், சங்கீதா கையை மெஜூராவும் இறுகப் பற்றியிருந்ததால் அவர்களால் நகர இயலவில்லை. 

முதலில் எதிர்வினையாற்றியது சங்கீதாதான். எங்களை நோக்கி முதல் அடி எடுத்து வைத்ததுமே மெஜூராவின் கைப்பிடி இளகியது. நெருங்கி வந்தவர் ஒரே நேரத்தில் இருதிறத்திலும் பாயும் அம்பு போல சிவாஜி, மெஜூரா மேல் பார்வை வீசி “ நீங்கல்லாம் தான் சேந்து இப்டி செய்ததா ?” என மலையாளமிழில் முடித்தார். என் பக்கம் பார்வை வராமைக்கு அறிஞர் நாகசாமியை வெல்லும் நோக்கில் ஆறுமுக ஆய்வை தொடர்ந்து நான் மேற்கொண்டிருந்ததே காரணம். பிரேம் முதல் தூணில் கீழ்பட்டையில் செதுக்கப்பட்டிருந்த நாக பந்தத்தையே வெறித்துக் கொண்டிருக்க சங்கீதாவின் பார்வை அவரைத் தொட்டது. மிகச் சரியாக அந்த நொடியில் மெஜூரா சிவாஜியை கண்களால் அழுத்த சிவாஜி என் ஆழ்ந்த ஆய்வை அவரது விரலால் என் விலாவில் குத்தி முடித்து வைத்து கண்களால் இழுத்துச் சென்றார். நாங்கள் மூவரும் விலகி அடுத்த சன்னதியாக சனீஸ்வரன் தனி ஒருவன் என எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு சென்று நின்று கொண்டோம். 

உள் பிரகார சுற்றுப் பாதை  கருவறை, அர்த்த , முன் மண்டபம் வரையிலான கட்டிடத்தை சுற்றி செவ்வக அமைப்பி‌ல் இருக்க சுற்றுப்பாதை ஓரத்தில் மூன்றடிக்கு  உயர்த்தப்பட்ட நீண்ட தாழ்வாரத் திண்ணைகள் இருக்கும். தாழ்வாரத்துக்கும் மையக்கோவில் கட்டிடத்துக்கும் நடுவேதான் சுற்றுப் பாதை. இந்தத் தாழ்வாரங்களில்தான் நாயன்மார்கள், சப்த மாதர்கள், ஜுரதேவர் ஆகியோர் தெற்கு சுற்றிலும், (தெற்குசுற்று மேற்கை முட்டும் சந்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் கன்னி மூல கணபதி)  சோமாஸ்கந்தர் , பஞ்ச லிங்கங்கள், காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, மகா லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு, ஆகியோரை மேற்கு சுற்றிலும் காணலாம். மேற்கு சுற்று வடக்கு சுற்றில் முட்டித் திரும்புமிடத்தில்தான் கிழக்கு நோக்கி நயினார் மயில் மீது அமர்ந்திருப்பது.  இந்த இரு சன்னதிகளுக்கும் சுற்றிலிருந்து நான்கு படிகள் ஏறிச் சென்றுதான் நேர் தரிசனம் பெற முடியும் என்பதால் “பெசல் வேண்டுதலைகள்” இல்லாதோர் திண்ணை ஓரமாக நின்று வேலிக்கு வெளியே தலைநீட்டும் வெள்ளாட்டின் மெய்ப்பாடுகளைக் காட்டி கணபதியை, நயினாரை கடைக்கண்ணால் வணங்கிச் செல்வது உள்ளூர் மரபு.   இறைவனை கடைக்கண் நோக்கச் சொல்லி இறைஞ்சும் பக்தி இலக்கிய கவிராயர்களை சொல்லடைவிலிருந்து நெஞ்சடைவிற்கு கொண்டு செல்லும் விதமாக இறைவனுக்கே கடைக்கண் பார்வை விடும் பக்தர்கள்  தெய்வநல்லூரில் மட்டுமே உண்டு.    

சொல்லிவருவதால் வடக்கு சுற்றையும் சொல்லி விடுதல் நலம். ஒப்பு நோக்க வடக்கு சுற்றில் மூன்றே தெய்வங்கள்தாம். திசைச் சந்தியில் அமர்ந்த நயினார், நயினாரின் நேர் பார்வையில் அவருக்கு “சைடு” காட்டியவாறு நிற்கும் சனீஸ்வரர், சற்று தள்ளி நான்கு கரங்கள் கொண்ட துர்க்கை, வடக்குச் சுற்று கிழக்கோடு முட்டும் இடத்தில் நாலு படிகள் இருக்க நீங்கள் சன்னதியோ என ஏறிச் சென்றால் ஆழங்கண்டு வாசியோக பந்தம் நிகழ்ந்து ஊழ்வினையறுத்து உம்பருலகு ஏகும் வாய்ப்பு உண்டு என்பதால் வெளிச்சம் இல்லாதபோது இங்கே கவனம் தேவை. ஏனென்றால் இங்கே தீர்த்தக் கிணறுதான் இருக்கும்.   கீழ் சுற்றில் சந்திரனும், சூரியனும் இருப்பார்கள். நாங்கள் எப்போதும் கும்பலாக கோவிலுக்கு வந்து நயினார் சன்னதியில் கூட்டமாக சஷ்டி கவசம் சொல்வதும் , பேசிக் கொண்டிருப்பதும் வழக்கம் என்பதால் நாங்கள் கும்பலாக அங்கே நிற்பது எவரையும் ஐயப்பட வைக்கவில்லை. அந்த இடத்தை இடையூறற்ற சந்திப்புக்கு தேர்ந்தெடுத்த சிவாஜியை உங்களாலும் பாராட்டாமல் இருக்க முடியாது.  

நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் சங்கீதாதான் பேச ஆரம்பித்தார். பிரேம் கண்களை நிமிர்த்தவே இல்லை. நான் சற்று பதட்டமான போது மெஜூரா கண்களாலேயே என்னை “அரவங்காட்டாம இரிடே” என்றார். நயினாரை சுட்டிக் காட்டி சங்கீதா ஏதோ சொல்ல பிரேம் நிமிர்ந்து பார்த்தார். இரு நிமிடங்களில் பிரேம் திணறலோடு ஏதோ சொல்ல முற்படுவதையும் சங்கீதா இடத்தோளை ஒட்டி தலையை எதிர்புறமாய் மெல்லச் சுழட்டி ஆதரவாய் மறுப்பதையும் பார்த்தோம். அடுத்த இரு நிமிடங்களில் பிரேம் திணறலின்றி பேசுவதையும் சங்கீதா புன்னகையுடன் பார்த்திருப்பதையும் பார்த்து நான் சிவாஜியிடம் மகிழ்வாகத் திரும்பினேன். சிவாஜியும், மெஜூராவும் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகை பூக்கக் கண்டேன். இருவரும் ஒருசேர  என்னை நோக்கி எனக்கும் புன்னகை வழங்க நானும் இருவருக்கும் வழங்கும் முயற்சியில் அதிகமாக பற்களைக் காட்டிவிட்டதாக ஒரு ஐயம் இப்போதும் இருக்கிறது. அடுத்த ஐந்தாம் நிமிடத்தின் முடிவில் இருவரும் எங்களை நோக்கி கைகாட்டி புன்னகைப்பது தெரிந்ததும் மெஜூராதான் முதலில் அவர்களை நோக்கி ஓடிச் சென்றார். சிவாஜியும், நானும் நகர முயல்வதற்குள் மூவரும் எங்கள் அருகே வந்து விட்டனர். சனீஸ்வரனின் நேர்பார்வையில் நாங்கள் என்ன செய்வதென தெரியாமல் மாறி மாறி புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டோம். 

இதனை அடுத்து வந்த ஒவ்வொரு நாட்களும், எட்டாம் வகுப்பின் முழு ஆண்டும் இன்று நினைத்தாலும் உடம்பின் ரத்தச்சர்க்கரை அளவை கூட்டிக் கொண்டே  சென்று  ரத்த அழுத்தத்தை தியானத்தில் ஆழ்ந்த யோகியின் அளவுக்கு குறைத்தும் வைக்கக் கூடிய மாயத்தைச் செய்தவை. 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பில் எந்த வகுப்பை மறக்க முடியாத வகுப்பாக குறிப்பிடுவீர்கள் என்று கேட்டால் நாங்கள் அனைவருமே எந்த தயக்கமும் இன்றி எட்டாம் வகுப்பை குறிப்பிடுவோம். இனி வரவிருக்கும் நாட்கள் இனிய நாட்கள்…

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் 11

One Reply to “தெய்வநல்லூர் கதைகள் -12”

  1. மீண்டு திரும்ப இயலா, அநேகமாய் அனைவரும் திரும்ப விரும்பும் இளமை, இனிதாய் அமைவது வரம். நிச்சயமாய் இதுவே உங்கள் அனைவரின் சியமந்தக மணி. எங்களுடனும் பகிர்வதறகு நன்றி. அடுத்த அத்தியாயத்திற்கு 1 மாதம் காத்திருப்போம். காத்திருப்பதை காதாலைப்போல் இனிமையாக்க வேறில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.