தீர்த்தம்

 விதவிதமான வண்ணங்களில் நெகிழிக் குடங்களை அவசரம் அவசரமாக  கழுவிக்கொண்டிருந்தாள் கல்யாணி.அவளது அவசரத்தில் தெருக்குழாயில் வரும் தண்ணீர் சீக்கிரமே நின்றுவிடுமென்ற பயமும் இரண்டு நாட்களாக காணாமல் போய்விட்ட தனது பசு மாட்டை விரைவாகத் தேடிச் செல்ல வேண்டுமென்ற கவலையும் தெரிந்தது.வீட்டுக்கு வீடு தனித்தனியாய் தெருக்குழாய் வைத்திருக்கும் அந்த தெருவில் கல்யாணிக்கு மட்டும்  அந்த வசதி தற்காலிகமாய் கை விட்டு போயிருந்தது.அதனால் அவள் பக்கத்து வீடான பூமாரியின் குழாயில்தான் சமீபமாய் தண்ணீர் பிடித்து வருகிறாள்.பூமாரி வாங்கி முடித்த மிச்ச தண்ணீரைத்தான்  வாங்கி வாழ்வோட்ட வேண்டிய நிலை கல்யாணிக்கு.சில நாட்களில் கல்யாணி போதுமான தண்ணீரை வாங்கி முடிப்பதற்குள் குழாய் நீர் நின்றுபோய் விடும்.அப்படியான நாட்களில் போதாத தண்ணீர் அவள் கண்களில் கண்ணீராய் வந்து முட்டி நிற்கும்.வாரத்தில் இரண்டு நாட்கள் நிம்மதியாய் தண்ணீர் பிடிப்பதே அவளுக்கு அதிசயம்தான்.

       இன்றைக்கும் அப்படித்தான். தண்ணீர் கவலையுடன் பசு மாடு காணாத கவலையும் சேர்ந்துகொண்டு கல்யாணியின் காலை நேர படபடப்பைக் கூட்டியது.குடங்களை கழுவியவாறே இடப்பக்கமாக திரும்பி மாடு கட்டியிருக்கும் கட்டுத்தறியைப் பார்த்தாள்.அதன் வெறுமை எங்கும் தேடிக் கிடைக்காத அவளது கண்களின் வெறுமையை நினைவூட்டியது.அப்படியே வலது புறமாக திரும்பி வீட்டின் திண்ணயில் கிடந்த புற்களைப் பார்த்தாள்.அவளைப்போலவே அதுவும் வாடியிருந்தது.தண்ணீரை குடம் குடமாய் சுமந்து வந்து ஊற்றியவளின் நினைவெல்லாம் பசு மாட்டின் பிரிவே தளும்பி வழிந்தது.ஒரு வழியாய் அன்றைக்கான தண்ணீரை சேகரித்து முடித்தவுடன் ‘அப்பாடா..என்று அமரப் போனவளின் இதயம் ‘அம்மா..’ என்ற பசு மாட்டின் குரலாய் துடித்தது.இரண்டு நாட்களாய் தேடித்தேடி அவளது கால்களும் பாதைகளும் தேய்ந்துபோனதுதான் மிச்சம்.அலைச்சலின் அசதியால் இரவின்  தூக்கம் இல்லாமல் போனது.  வீட்டு வேலையும் ஒன்றும் ஓடாமல் எல்லாம் போட்டது போட்டபடி கிடந்தது.கல்யாணியின் கணவனும் வேலைக்குப் போய் வந்த நேரம்போக மற்ற நேரங்களில் அவன் பங்கிற்கு தேடிக்கொண்டுதான் திரிந்தான்.

         எல்லா திசைகளிலும் தேடி அலைந்தவளுக்கு இன்னும் கீழத்தெரு மட்டும் பாக்கியிருந்தது.நேற்று தேடிவிட்டு வரும் வழியில் வாரியூர் வெற்றிலைக் குறிகாரரை பார்த்துவிட்டு வந்தாள்.’ஒன்னோட மாடு இந்நேரம் வண்டியேத்தி அறுப்புக் கடைக்கு போயிருக்கும்’ என மை தடவி கை விரித்த குறிகாரரின் வார்த்தைகளைக் கேட்டு மயங்கி விழுந்தவளை தண்ணீர் தெளித்து தெளிய வைத்து அனுப்பி வைத்திருந்தார்கள்.கல்யாணிக்கு இரண்டு நாட்களாக சரியான உறக்கமில்லை.எல்லா தெருவிலும் ஒரு இடம் மிச்சமில்லாது தேடிவிட்ட மாடு கீழத்தெருவில் நிற்பதாக பசியால் இருண்டுபோன அவளது கண்களில் தெளிவாக நிழலாடியது.உள்ளூரிலேயே திருமணமும் செய்துகொண்ட கல்யாணி பிறந்ததிலிருந்தே ஒரேயொரு முறைதான் கீழத்தெருவிற்குள் சென்றிருக்கிறாள்.அவள் ஏழாம் வகுப்பு படிக்கையில் கூடப் படித்த கீழத்தெரு பிள்ளைகளின் விடாப்பிடியான பாச அழைப்பில் சென்றது.அதுவும் அவள் வீட்டுக்கு தெரியாமல்.பிறகு எப்போதாவது் தவிர்க்க முடியாத நேரங்களில்  தண்ணீர் பிடிக்க சென்றிருக்கிறாள்.அதுவும் கீழத்தெருவின் முதல் வீட்டோடு சரி.உள்ளுக்குள் எல்லாம் அவள் அடியெடுத்து வைத்ததில்லை.ஆனால் தற்போது தனது அன்பு மிகுந்த பசு மாட்டின் பிரிவினைத் தாங்காது  அவளது உள் மனம் கீழத்தெருவினுள் சென்று தேடுமாறு கெஞ்சியது. ‘மாடு போனால் போய்ட்டு போகுது அதுக்காக அந்த தெருவுக்குள்ள போறதா..’ என்று மூளை மல்லுக்கட்டியது.

       கல்யாணி பசுமீது கொண்ட பாசத்தால் கீழத்தெருவிற்குள் சென்று தேடுவது என முடிவெடுத்தாள்.அவளின் தெரு ஆட்கள் யாருமே கீழத்தெரு பக்கம் அடியெடுத்து வைப்பதில்லை.விவசாய வேலைக்கோ அல்லது வேறு காரியங்களுக்கோ கீழத்தெரு ஆட்களின் சகாயம் தேவைப்பட்டால் ஊரின் பிரதான சாலையிலிருந்து பிரியும் கீழத்தெரு சாலையின் முகப்பில் நின்று சத்தம் கொடுப்பார்கள்.அவ்வளவுதான்.ஆனால் இதுமாதிரி ஆடு மாடு தேடிச் செல்வது போன்ற தவிர்க்க முடியாத காரியங்களுக்கு கீழத்தெருவிற்குள் கல்யாணியின் தெரு ஆட்கள் செல்வதென்பது எப்போதாவது அரிதாய் நடக்கும்.

        கல்யாணியின் தெருக்காரர்கள் பெரும்பாலும் செருப்பு போட்டு நடக்கும் பழக்கமுடையவர்கள் அல்ல.அவர்கள் வெளிக்கு இருக்கச் செல்லும் நரகல் நிறைந்த தைல மரக் காடுகளுக்குக்கூட செருப்பணிந்து செல்பவர்களில்லை.ஆனால் கீழத்தெருவிற்குள் செல்வது என்றால் அவர்கள் கட்டாயமாய் செருப்பணிந்துதான் செல்வார்கள்.அது அந்த ஊர்க்காரர்களின் மனதில் ஊறிப்போன விசயம்.இதற்காகவே கல்யாணியின ஊர்க்காரர்கள் காலணிகளை வாங்கி வீட்டுக்குள்ளே பத்திரமாய் வைத்துக்கொள்வதுண்டு.கல்யாணி தனது வீட்டுப் பரணில் கிடந்த புதுச் செருப்பை எடுத்து போட்டுக்கொண்டாள்.தனது வீட்டு வாசலைத் தாண்டி பிரதானச் சாலைக்கு வந்ததும் காலணிகளை கழட்டிவிட்டு கிழக்கு பக்கமாக இருக்கும் தனது குலசாமி கோவிலை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு உதட்டிற்குள் முனகியவாறே கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.மீண்டும் செருப்பை மாட்டிக்கொண்டு விறுவிறுவென நடந்து சென்றவள்  கீழத்தெரு சாலையும் பிரதானச் சாலையும் சந்திக்கும் முச்சந்தியில் நின்றுகொண்டு  கீழத்தெருவின் முதல் வீட்டை நோக்கி..’அடியே மலரு ஏமுட்டு பசு மாட்ட காணோம் அங்குட்டு எங்கயும் நிக்கிதாதுடி..’என சத்தம் போட்டாள்.அந்த சத்தத்தில் கொஞ்சம் பாசமும் எதிரொலிக்கவே செய்தது.பூமாரியின் வீட்டுக் குழாய் கைவிரித்துவிடும் நாட்களிலெல்லாம்  கல்யாணிக்கு மலர் வீட்டுக் குழாய்தான் தாகம் தீர்த்தனுப்பும் பேரூற்று.அவளும்  கல்யாணி தண்ணீர் கேட்டு வரும் தருணங்களில் தான் பிடித்துக்கொண்டிருக்கும் குடத்தை எடுத்துக்கொண்டு வாஞ்சையோடு வழிவிடுவாள்.அவள் அவ்வாறு செய்ததில் இன்னொரு காரணமும் இருக்கவே செய்தது. கீழத்தெரு மக்கள் மேலத்தெரு மக்களால் பொதுவாக எல்லாவற்றிலும் ஒதுக்கப்படுவதால் புறக்கணிப்பின் வலியை அறிந்தவர்கள்.அந்த வலியின் ரணத்தை யாருக்கும்  கடத்திவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள். கீழத்தெரு மக்களின் அந்த உணர்வுதான் மலர் கல்யாணியை தண்ணீருக்காக காக்க வைக்காமல் செய்தது.மலர் அவ்வப்போது வழங்கிய அந்த தண்ணீரின் ஈரம்தான் கல்யாணி கொடுத்த சத்தத்திலும் கலந்திருந்தது.இன்னும் இரண்டு முறை சத்தங்கொடுத்தபிறகுதான் மலர் எட்டிப் பார்த்தாள்.’இந்த பக்கம் வந்தமாரி தெரியலயே யக்கா..எதுக்கும் ஒரு எட்டு உள்ள வந்து பாருங்கக்கா..’ வாஞ்சை தடவிய வார்த்தைகளால் அழைத்தாள் மலர்.

       சிலிர்த்த உடலை சற்று ஆசுவாசப்படுத்தியபடி பசுவின்மேல் பாரத்தை போட்டுக்கொண்டு முகத்தை சுளித்தவாறே கீழத்தெருவிற்குள் அடியெடுத்து வைத்தாள கல்யாணி.அவள் முன்பு பார்த்த கீழத்தெரு இப்போது வெகுவாக மாறிப்போயிருந்து.ஆங்காங்கே கழிவு  தண்ணீர் தேங்கிக் கிடக்கும் மண் சாலை இப்போது பளபளக்கும் சிமெண்ட் சாலையாக மாறிப்போயிருந்தது.முன்பிருந்த குடிசை வீடுகளும் காலணி வீடுகளும் குறைந்துபோய் விதவிதமான காரை வீடுகள் முளைத்து இருந்தன.சில வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன.தெருவிற்குள் தென்பட்ட மனிதர்களின் தோற்றமும் முற்றிலுமாக மாறிப்போயிருந்தது.பசு மாட்டை வெறித்தபடி தேடிக்கொண்டிருந்த அவளது பார்வையில் நாம்தான் இன்னும் மாறாமல் இருக்கிறோமோ என்ற யோசனை தெரிந்தது.

        கல்யாணியின் அலைச்சல் வீண் போகவில்லை.அவள் நினைத்ததுபோலவே கீழத்தெரு பொன்னன் வீட்டின் பின்புறம் மாடு கட்டிக்கிடந்தது.தனது மாட்டைப் பார்த்த மகிழ்ச்சியில் அவளுக்கு இரண்டு நாட்களின் பசிதான் முதலில் எட்டிப் பார்த்தது.பொன்னன் வீட்டு ஆட்களிடம் எப்படி கெஞ்சிக் கேட்பதென தயங்கியவள் சற்று தைரியத்தை வரவழைத்தவளாய் சென்று  பசு மாட்டை பாசத்தோடு தடவிப் பார்த்தாள்.இரண்டு நாட்களின் பட்டினியின் சுவடு தெரியாமல் செழிப்பாய் நின்றது பசு.அதற்கு சாட்சியாய் கிடந்தன பசும்புற்கள்.பொன்னன் வீட்டு ஆட்கள் தன் வீட்டு மாடாக நினைத்து இரை போட்டிருக்கின்றனர் என  மகிழ்ந்தவள் மனதிற்குள் ‘அவர்கள் நல்லாருக்கனும்’ என்று வேண்டிக் கொண்டிருக்கும்போதே கடைப்பக்கம் சென்றிருந்த பொன்னன் வாசலில் மிதிவண்டியில்  வந்து இறங்கினான்.

         ‘என்ன ஆத்தா..ஓமுட்டு மாடுதானா..எமூட்டு பூரா வெள்ளாமயயும் தின்னு தீத்தது’  பொன்னனின் குரலில் அழுத்தமான ஆதங்கம் தெரிந்தது.

என்ன சொல்வதென தெரியாமல் கைகளை பிசைந்துகொண்டு நின்றாள் கல்யாணி.

      ‘எங்க தெரு மனுசனுங்க செத்தாக்கூட எட்டிப் பாக்காது ஒங்க சனம் ஆனா ஒங்களோட  ஆடு மாடு காணலனா மட்டும் ஓடி வந்துருவிய..’ பொன்னனின் பேச்சு ஒரு கணம் அவளது அடி மனதை அசைத்துப் பார்த்தது.

‘சரி ஆத்தா.. புடிச்சுட்டுப் போ  ஓம் மாட்ட..ஒங்க தெரு ஆட்டு மாட்டுக்காச்சும் எங்க வெள்ளாம புடிச்சுருக்கேங்கிற சந்தோசத்துலதான் புடிச்சு கட்டிப்போட்டேன்.’வாஞ்சையாய் சொன்னான் பொன்னன்.

     கையெடுத்து நன்றி சொல்ல நினைத்தவள் ஏதும் செய்யாது காலெடுத்து நடந்தாள் தனது மாட்டை அவிழ்த்துக்கொண்டு.

          வீடு வந்து சேர்ந்த கல்யாணிக்கு பசி குடலைத் தின்றது.ஆனால் அவளது பசியும் பாவம்தான்.ஏனெனில் கீழத்தெருவிற்குள் சென்று வந்தால்  குளித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் போக வேண்டுமென்பது அவளது தெருக்காரர்களின் தீராத நம்பிக்கை.அவளது எண்ணத்தை கீறிக்கொண்டு வந்த அவளது பாவப்பட்ட பசி “..அதற்காகத்தானே கால்களில் செருப்பணிந்து சென்றாய்” என செந்தமிழில் கேட்டது.பசியின் வாயை அடைப்பவளாய் கல்யாணி சொன்னாள்.’செருப்பு போட்டு போனா கால் தீட்டுதானே கழியும் முழுத்தீட்டும் போகனுமுனா குளிச்சாதானே ஆகும்’.தான் மட்டும் குளித்தால் போதுமென்று நினைத்தவளுக்கு மாட்டையும் குளிப்பாட்டினால்தான் மனது ஆறுமெனத் தோன்றியது.மாட்டை அவிழ்த்து அதன் ஒவ்வொரு பாகமாய்  குளிக்க வைத்தவளுக்கு வால் பகுதியில் தண்ணீர் ஊற்றும்போது அவள் சிந்தனை வால் பிடித்துக்கொண்டு கடந்த காலத்திற்குள் பயணித்தது.கல்யாணி திருமணம் ஆகி வந்த புதிதில் அவளது தெரு தண்ணீர் தொட்டியின் மோட்டார் பழுதடைந்து போனதில் பத்து நாட்கள் மேலத்தெரு மக்களே அல்லோகலப்பட்டுப்போனது. அந்த பத்து நாட்களிலும் கீழத்தெரு தண்ணிரில்தான் மேலத்தெருவின் வாழ்க்கை வற்றாது ஓடியது. அப்போதெல்லாம் கல்யாணி வீட்டுக்கென்று தனிக்குழாய் இருந்தது. அதனால் தண்ணீர் கவலை பெரிதாக அவளை வாட்டியதில்லை.திடீரென்று மோட்டார் பிரச்சினை வந்ததால் திக்குமுக்காடிப்போன கல்யாணியும் மேலத்தெரு சனங்களும் விடிந்து எழுந்தால் கீழத்தெரு மக்களின் முகத்தில்தான் விழிக்க நேர்ந்தது. 

       மேலத்தெரு மக்கள் தண்ணீர் பிடிக்க வந்ததில் தங்களுக்கு  குறைவான அளவே தண்ணீர் கிடைக்கிறது என வருத்தப்பட்டாலும் இந்த அருங்காட்சியை காண காத்திருந்ததுபோலவே கீழத்தெரு மக்களின் பார்வையிருந்தது.மேலத்தெரு மக்களும் தங்களின் வாழ்வில் இப்படியான நிலை எட்டிப் பார்க்குமென்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.எந்த தண்ணீரால் அவர்கள் தங்கள் மீதான தீட்டை கழுவி வந்தார்களோ அதே தண்ணீராலேயே இப்போது தீட்டாக நேர்வதாக அவர்கள் நொந்துகொண்டனர்.அப்படியும் சிலர் வேறு ஊரிலிருந்தெல்லாம் தண்ணிர் கொண்டு வந்து  வீம்புக்கு குடித்து வந்தார்கள்.ஆனால் கல்யாணி கீழத்தெரு நீரால்தான் தனது குடும்பத்தின் தாகத்தை தீர்த்தாள்.அவள் மோட்டார் பழுதான முதல் நாள் கீழத்தெரு குழாயடி சென்று தண்ணீர் பிடிக்கையில் கீழத்தெரு பெண்களில் சிலர் “காலங்காத்தால  காக்கைக கரஞ்சது இந்த மேலத்தெரு விருந்தாடிக வர்றதுக்குதானா..”என்று கிண்டலடித்தனர்.அவர்களின் இந்த கிண்டல் பேச்சை கல்யாணி உள்ளூற ரசிக்கவே செய்தாள்.அடியெடுத்து வைத்த முதல் நாள்தான் அவளுக்கு கீழத்தெரு செல்ல தயக்கமாக இருந்தது.அடுத்தடுத்த நாட்களில் தண்ணீரின் தேவை அவளை பிடறியில் தட்டி ஓடச் செய்தது.கீழத்தெரு பெண்களும் தங்களின் தண்ணீர் தேவையை குறைத்துக்கொண்டு மேலத்தெரு ஆட்கள் தண்ணீர் வாங்குவதையே திருவிழா வேடிக்கையாய் பார்த்து ரசித்தனர்.

      முதல் நாள் முதல் குடத்தை கீழத்தெருவிலிருந்து கொண்டு வந்து தனது வீட்டில் வைத்த கல்யாணி முதலில் குடிக்கிற தண்ணீரை  வீட்டுக்குள் வைத்துவிடலாமென்று நினைத்தாள்.ஆனால் அவ்வாறு வீட்டுக்குள் போக வேண்டுமென்றால் குளித்துவிட்டுத்தான் போக முடியும் என்ற தீட்டு நம்பிக்கை அவளது மூளையில் தீயாய் தோன்றி சட்டெனச் சுட்டது.உடனே அவள் கொண்டுவந்த முழுக்குடத்தில் பாதி குடத்து நீரை தலைக்கு ஊற்றிக்கொண்டு மீதமுள்ள அரைக்குடத்தை வீட்டினுள் குடிக்க கொண்டு சென்றாள்.உடனே மீண்டும் துவட்டிக்கொண்டு கால்களில் செருப்பை மாட்டிக்கொண்டு கீழத்தெரு ஓடி நீர் கொண்டு வருவதற்குள் தாவு தீர்ந்துதான் போனது. இப்படியாக அவள் அன்றைய நாள் மூன்று முழுக்குடம் நீர் குடிக்க சேர்ப்பதற்குள் கீழத்தெரு குழாய் வாயை மூடிக்கொண்டது. அன்று கல்யாணி குளிப்பதற்கும் துவைப்பதற்கும் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்கும் பட்ட பாடு சொல்லி மாளாது. அவளின் அன்றைய பரிதவிப்பை பார்த்தவர்களுக்கு  நினைக்கத் தோன்றியிருக்கும். தண்ணீரால் மூன்றாம் உலகப்போர் வருகிறதோ இல்லையோ ஆனால் மனித அமைதியும் ஒற்றுமையும் தண்ணீரால்தான் சாத்தியமாகும் என்று.

      கல்யாணி இரண்டாம் நாள் தனது தண்ணீர் பிடிக்கும்  செயல் திட்டத்தை மாற்றினாள்.முதலில் புழக்கத்திற்கான தண்ணீரை வாங்குவதென்றும் பிறகு குடிப்பதற்கான குடங்களை வெளியிலேயே வைத்துவிட்டு பின்னர் குளித்துவிட்டு  வீட்டினுள் எடுத்து வைத்துக்கொள்வதென மரத்தடியில் நின்றவாறு ஆழ்ந்து யோசித்து முடிவெடுக்கவும் காகமொன்று அவளின்மீது எச்சமிடவும்  சரியாக இருந்தது.அய்யய்ய..என்றவள் காகத்தின் இச்செயல் தனது சிந்தனையின்மீது விழுந்த நரகல் என்றே  நினைத்துக்கொண்டாள்.

அடுத்தடுத்த நாட்களில் குடிப்பதற்கு  தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடாகிப்போனது.இதனால் குளிப்பதை பற்றியெல்லாம் சிந்திக்க முடியாத நிலையே மேலத்தெரு மக்களுக்கு ஏற்பட்டது.கீழத்தெரு போய் தண்ணீரும் பிடிக்க வேண்டும் அதேவேளையில் குளித்துவிட்டும் வீட்டுக்குள் போக வேண்டுமென்ற இக்கட்டான நிலையில் மேலத்தெரு மக்கள் மாட்டிக்கொண்டிருந்த நேரத்தில்தான் கிழவியொருத்தி சொன்னாள்..’கீழத்தெருவுக்க்குள்ளே போய்வந்து குளிக்காது வீட்டுக்குள்ள போறதுக்கு ஒரு குறுக்கு வழி இருக்கு’என்று.மேலத்தெரு மக்களின் நெஞ்சில் நீர் வார்த்த கிழவியின் வார்த்தைகளை தெருவோடு சேர்ந்து கேட்க ஆவலோடு காத்திருந்தாள் கல்யாணி.கிழவி சொன்னாள்’..குளிச்சிட்டு உள்ளப்போறதுக்கு சமானந்தான் பசு மாட்டு வால உருவி கும்புட்டு போறதும்..’கிழவி கூறியதுதான் தாமதம்.மொத்த  சனமும் பசு மாட்டின் வாலைத் தேடி ஓடியதை நினைத்துப் பார்த்த கல்யாணிக்கு சிரிப்புதான் வந்தது.

பசு மாட்டை குளிப்பாட்டி முடித்து கட்டுத்தறியில் கட்டியவள் மிச்சமிருந்த தண்ணீரில் தன்னையும் நனைத்துக்கொண்டாள்.குளித்து முடித்து வீட்டினுள் நுழைகையில் ஒரு மணி சங்கின் ஓசை அவளது பசியடைத்த காதுகளில் கேட்டது.அலைந்த அலைச்சலுக்கு சாப்பிட்டதும் நன்றாக உறங்கிப்போனாள்.வீட்டிலிருந்த காலிக் குடங்கள் கனவில் வர விருட்டென விழித்தவள் நாளை காலை பூமாரியின் தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு அதற்குள்மேல் உறக்கம் வரவில்லை.

 பூமாரி ஒரு நேரத்தைப்போல ஒரு நேரம் இருக்கமாட்டாள்.சில நாட்களில் சீக்கிரமே தனக்குத் தேவையான தண்ணீரை பிடித்துக்கொண்டு கல்யாணிக்கு வழி விடுவாள்.சில நாட்களில்  தண்ணீரை பிடித்து செடிகளுக்கு ஊற்றுவது, துணி துவைப்பது,வீடு கழுவுவது என வேண்டுமென்றே செய்து கொண்டிருபபாள்.அதுமாதிரியான நேரங்களில் அவளிடம் கெஞ்சாத குறையாத தண்ணீர் கேட்டு நின்று கொண்டிருப்பாள் கல்யாணி.பூமாரியை பொறுத்தவரை தான்தான் கல்யாணிக்கு குடி நீர் வழங்கும் பூமாதேவி என்று நினைப்பு.கல்யாணியை அவ்வப்போது அலைக்கழிப்பதில் அவளுக்கு அப்படியொரு அற்ப சந்தோசம்.பக்கத்து வீட்டுக்காரி பூமாரி இப்படி நடந்துகொள்ளும் தருணங்களில் கல்யாணிக்கு கீழத்தெரு மலரின் நினைப்பு வந்து போகும்.கல்யாணி தண்ணீர் பிடிக்கச் சென்றதும் மலர் அவளை ஒரு குடம் நிரம்பும் நேரத்திற்குமேல் காக்க வைக்காதது நினைவில் அலையாடும்.கல்யாணிக்காக அவள் தனது தண்ணீர் தேவைகளை குறைத்துக் கொள்பவளாகத் தெரிந்தாள்.அதன் காரணமாக கல்யாணிக்கு அவளையும் அறியாமல் மலரின்மேல் அன்பின் தேனூற்று ஊறத்தொடங்கியிருந்தது.’பச்சத்தண்ணிக்கு இந்த பாடு படுத்துறாளே..’என பூமாரியின்மீது புழுங்கும் நிலைமைகளில் கல்யாணி தனது வீட்டுக்காரன்மீது பொரிந்து தள்ளுவாள்.’எத்தன நாள் தான்யா நானு அவகிட்ட அசிங்கப்பட்டுகிட்டு கெடக்குறது.ஒத்த பைப்பு போட துப்பில்ல ஒனக்கெல்லாம் எதுக்குயா குடும்பம்’ என கிழித்தெடுப்பாள்.அவளின் வசவுகளுக்கு பயந்து அவனும் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி சமாளிப்பான்.பாவம் அவனும் என்ன செய்வான்.எல்லா முயற்சிகளும் எடுத்துகொண்டுதான் இருக்கிறான்.ஆனால் ஏதோ காரணத்தால் அது தட்டிக்கொண்டே போய்கிறது.பஞ்சாயத்து அலுவலகத்தில் சொல்லி மூன்று வருடம் முடியப்போகிறது.அந்தா..இந்தா என அலைக்கழிக்கிறார்கள்.போன வருடம் வரை புது பைப் லைன் புதைக்கப் போகிறோம் என இழுத்தடித்தார்கள்.இதோ இப்போது ஏதோ அரசாங்கம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய புதுத்திட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் அதன் வேலைகள் விரைவில் தொடங்கப்போவதாகச் சொல்லி தாமதப்படுத்துகிறார்கள்.பஞ்சாயத்து தலைவரை ஒன்றும் சொல்ல முடியாத கோபத்தில் கல்யாணி ‘அந்த ஓங்கி டிரைவர் ஒன்னுமில்லாம போயிடுவான்..’ என திட்டித் தீர்ப்பாள்.அவள் அப்படி திட்டுவதற்கும் காரணம் இருந்தது.கல்யாணி மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை தனது வீட்டிற்கு சொந்தமான குழாயில் தண்ணீர் பிடித்துப் புழங்கி  நிம்மதியாய் இருந்தாள்.ஒருநாள் சாலை விரிவாக்கப் பணிக்காக வந்திருந்த ஓங்கியானது தவறுதலாக கல்யாணியின் ‘பை்பை’ பதம் பார்த்துவிட்டது.தண்ணீர் பிடிக்கும் மேல் குழாய்தான் உடைந்திருக்கும்..சரிசெய்து கொள்ளலாமென முதலில் நினைத்திருந்தவளுக்கு பிறகுதான் தெரிந்தது தண்ணீர் தொட்டியிலிருந்து வரும் பிரதான குழாயும் நொறுங்கியிருந்தது.அன்றுமுதல் அந்த ஓங்கிக்காரனை அவள் திட்டாத நாளில்லை.அவளது கணவனும் வேலை நேரம் போக பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அலைந்துகொண்டுதான் இருக்கிறான்.அவர்களும் ஏதோதோ காரணம் சொல்லி காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.தண்ணீர் கவலைகளை  கண்ணீரோடு நினைத்துக்கொண்டே புரண்டு புரண்டு படுத்திருந்தாள் கல்யாணி.

      கல்யாணியும் மாடும் குளித்ததில் நேற்று அவள் அரைகுறையாக பிடித்து வைத்த தண்ணீர் சுத்தமாய் தீர்ந்துபோனது.காலையிலேயே மொத்த காலிக்குடங்களையும் அள்ளிக்கொண்டு அவள் பூமாரியின் குழாயடிக்கு வந்தாள்.பூமாரி எப்போதும் அவளது காலை வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுதான் சௌரியமாக தண்ணீர் பிடிக்க வருவாள்.அதற்குள் ஓடிப்போய் இரண்டு குடங்களை பிடித்துவிட்டால் லாபமென நினைத்த கல்யாணி குழாயை திறந்து குடத்தை வைத்தாள்.என்ன நினைத்தாளோ பூமாரி ஓடிவந்து பாதியை நெருங்கி நிரம்பிக் கொண்டிருந்த கல்யாணியின் குடத்தை தூக்கி எறிபவளாய் தூரத்தில் வைத்தாள்.அப்படி செய்ததோடு மட்டுமில்லாது ‘அப்படி அவசரமா தண்ணீ புடிக்குறதுன்னா சொந்தமா பைப்ப போட்டு வச்சுங்குங்கடி..அதுக்கு வக்குல்லனா வாங்கி முடிச்ச மிச்ச தண்ணிய மூடிக்கிட்டு புடிச்சு குடிங்கடி..’ என்று சாடையாக சொல்வதுபோல கல்யாணியின் முகத்தில் அறையாத குறையாகச் சொன்னாள் பூமாரி.அந்த வார்த்தைகளின் வலி தந்த அடங்காத கோபத்தை தனது அத்தனை காலிக்குடங்களிலும் நிரப்பி எடுத்து வீடு வந்தாள் கல்யாணி.ஒரே தெருக்காரி. அதுவும் சொந்தக்காரி என்றுகூட பாராது சாதாரண தண்ணீருக்கு சகட்டுமேனிக்கு் பேசிய பூமாரியின் உறவை இன்றையோடு தலைமுழுக நினைத்தவள் அதற்குகூட ஒரு குடம் தண்ணீர் இல்லாத தனது நிலை யாருக்கும் வரக்கூடாதென வேண்டிக் கொண்டு அழுதாள்.தலை முழுகுவதைப் பற்றி எண்ணிய கல்யாணிக்கு கீழத்தெரு மலர் ஏனோ நினைவில் வந்துப்போனாள்.’ ‘இத்தனைக்கும் அவ புழங்கக்கூடாத தெருக்காரி..வேத்தாளு ஆனா அவளுக்கு இருக்குற பாசத்துல கொஞ்சமாச்சும் இந்த பூமாரி முணடைக்கு இருக்கா..’என பூமாரிமீது வசை மாரி பொழிந்தாள் கல்யாணி.

        அன்றைக்கு அப்படி திமிரெடுத்துப்பேசிய பிறகு பூமாரியின் குழாயடியை ஏரெடுத்தும் பார்ப்பதில்லை கல்யாணி.அவள் தெருவில் வசித்த அடுத்தடுத்த வீடுகளின் குழாய்களில் பிச்சையெடுக்காத குறையாய் ஒவ்வொரு குடமாய் பிடித்து வந்து வாழ்வோட்டி வந்தாள்.அப்படியாக ஒரு வீட்டின் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கையில் அவள் குழாயிலிருந்து வழியும் தண்ணீரைப் வெறித்தவாறு பார்த்துக்கொண்டேயிருந்தாள்.’ஏன் நம்மூரு குழாயில தண்ணீ கொஞ்சமா ஒன்னுக்கு போறதுமாறி வடியுது..ஆனா மலர் வீட்டு பைப்புல தண்ணீ போர்செட்டு கணக்கா கொட்டுதுனு’ நினைத்துப் பார்த்தாள்.அதனை தனது கணவனிடமும் அன்றிரவு மறக்காமல் கேட்டாள். ‘நம்ம ஆளுங்கள்ல சிலபேரு யாரு எப்படியோ போறாங்க தமக்கு தண்ணீ கெடச்சா போதுங்குற சுயநலத்துல மொத்த தண்ணீயயும் மோட்டார் வச்சு உறஞ்சு புடுறாங்கடி..இப்டி அவுங்க பன்றதால மத்தவங்க  பைப்புல கொஞ்சூண்டு தண்ணீதான் வருது’ அவன் சொன்ன நிமிடம் கல்யாணிக்கு மேலத்தெரு மக்கள்மீது மேலதிக எரிச்சல் வந்தது.அவளது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு கல்யாணியின் கணவன் அசதியில் உறங்கிப்போனான்.ஆனால் கல்யாணிக்குத்தான் அவளது மனதில் தோன்றிய அடுக்கடுக்கான கேள்விகளால்  உறக்கமே வரவில்லை.அவள் நினைவில் என்னென்னவோ தோன்றியது.அவள் சிந்தனை தெருவிட்டுத் தெரு தாவியது.’இந்த பஞ்சாயத்து பெரசன்டு நம்ம சாதிக்காரன்..மூனு வருசமா அலையுறோமே..அவன் மனசு கொஞ்சமாச்சும் எறங்கி இந்த பைப்ப போட்டுக் குடுத்தானா..எடுபட்டபய, இந்த பூமாரி சிறுக்கி இருக்காளே அவளும் நம்ம சனந்தானே அவ என்னவோ எதிரி் கணக்கா  என்னயப் பாக்குறா..இந்த மேலத்தெரு மொத்தமும் ஒத்த சாதினுதானே சொல்லிக்கிறானுங்க அவுங்களுக்குள்ளயே எத்தன ஏற்றத்தாழ்வு..போட்டி..பொறாமை..இதுல வேற மோட்டார் வச்சு தணணீய சுயநலமாஉறிஞ்சி தனது சாதிக்காரங்களுக்கே வஞ்சன பண்ணுறானுங்க..என்ன எழவுக்குத்தான் இந்த சாதி மயிரெல்லாம் என நினைத்துக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கிப் போனாளென்று தெரியவில்லை.     

 காலையில் தூங்கி எழுந்த கல்யாணி காலிக்குடங்களை கொண்டுபோய் மலர் வீட்டுக் குழாயடியில் வைத்தாள்.திரும்பி வரும்போது கிழக்கில் உதித்து வந்த சூரியனைக் கும்பிட செருப்பை கழட்ட எத்தனிக்கையில்தான் உணர்ந்தாள் அவள் செருப்புப் போட மறந்து மலர் வீட்டுக் குழாயடிக்கு சென்று வந்தது.சற்று நேரங்கழித்து மலர் வீட்டுக் குழாயிலிருந்து நிறைகுடமொன்றை தூக்கி வந்தவள் குடிப்பதற்காக அந்த தண்ணீரை வீட்டிற்குள் கொண்டு சென்றாள்.ஆனால் இபபோது கல்யாணி குளித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் செல்ல வேண்டுமென்பதை வேண்டுமென்றே மறந்திருந்தாள்.அவள் குடிப்பதற்காக  வைத்த நெகிழிக்குடத்தை ஒரு நிமிடம் நின்று பார்த்தாள்.அது வானவில் வண்ணங்களில் அவ்வளவு அழகாய் தெரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.