- ஜகன்னாத பண்டித ராஜா
- ஜகன்னாத பண்டித ராஜா -2
- ஜகன்னாத பண்டித ராஜா -3

இனியும் தொடர்ந்து காணப்போவது பாமினி விலாஸத்தின் அடுத்தடுத்த இரு பாகங்களையே! அடுத்து வருவது ‘கருணாவிலாஸ’ எனும் பகுதி. இந்நூலின் ஸ்லோகங்கள் காதலியின் இழப்பினால் விளைந்த சோகத்தைப் பிழிந்தெடுத்து வெளிக்கொணர்கின்றன. ஆகவே, இவை கட்டாயமாக ஜகன்னாதரின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சோகத்தின் / இழப்பின் வெளிப்பாடுகளே எனலாம்.
பாகம் 3: கருணாவிலாஸ:
இப்பகுதி 19 ஸ்லோகங்களை மட்டுமே கொண்டது.
1. ஓ மனமே! இப்போது விதி உன்னிடம் கொடுமையாக உள்ளது
என நீ யாரிடம் உனது வருத்தத்தைக் கூறுவாய்?
உனது நண்பர்களில் ரத்தினம் போன்றவள் (மனைவி)
சுவர்க்கத்திற்குச் சென்றபிறகு யார் உனது வருத்தத்தை
ஆறுதலளிக்கும் சொற்களால் நீக்குவார்?
2. அந்தோ! ஓ அன்பானவளே! முன்போல நீ ஏன்
என்னை வந்து திடீரென எதிர்கொண்டு வரவேற்று,
என்னை உன் புன்னகையால் மகிழ்வித்து,
காதலின் மந்திரிகளான அன்பான பார்வையாலும் சொற்களாலும்
எதிர்கொண்டு வரவேற்பதில்லை?
3. புலன்கள் அனுபவிக்கும் பொருட்களை மறந்துபோய் விட்டன;
சிரமப்பட்டுக் கற்ற கல்வியும்கூட என்னிடமிருந்து
முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டது;
ஆனால் அந்த மான்விழியாள் மட்டும்
வழிபாட்டுக்குரிய கடவுளைப்போல் எழுந்தருளி
என் மனதிலிருந்து மறைவதில்லையே!
4. நீ துரிதமாக மங்களகரமான மோக்ஷ நிலைக்குச் சென்றபோது,
கருணையுள்ளம் கொண்டவளே,
(உன்னிடம் குடியிருந்ததென நான் அறிந்திருந்த)
அந்தக் கருணையையும் நீ விட்டொழித்தனையோ ?
ஓ பெண்மணியே, அதனால்தான், யாருடைய அழகான பார்வை
காலைநேர நீலோத்பலத்தின் பெருமையை உடைத்தெறியுமோ,
அந்தப் பார்வைகளால் என்னை நீ நோக்குவதில்லை.
5. ஓ அழகானவளே! நீ என்னைவிட்டுவிட்டுத் தனியே
சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டாய் என நான்
உன்னைப் பற்றி எண்ணும்போது எனது உள்ளம்
சுக்குநூறாக உடைகின்றதே; ஏனெனில் நீ
திருமணத்தின்போது கால் வழுக்கிவிடும் எனப் பயந்தவாறே
என் கரத்தைப் பற்றிக்கொண்டு அம்மிக்கல்லின்மீது ஏறினாய் அன்றோ?
(அந்தச் சிறிய சம்பவத்திற்கே என் துணை, அருகாமை உனக்கு வேண்டியிருந்ததே, இப்போது எப்படி நீ தனியே மோக்ஷத்தை நோக்கிப் பயணப்பட்டாய்? என வருத்தம் மேலிடக் கேட்கிறார் கவிஞர்).
6. எனது சிந்தையிலிருந்து அந்தப் பெண்மகள் மறைவதேயில்லை;
ஏனெனில் அவள் எனது கவிதைகளைப் போன்று
குற்றங்கள் அற்றவள்;
இனிமையான குணங்களைக் கொண்டவள்;
உணர்வுகளாலும் அன்பினாலும் ஆட்கொள்ளப்பட்டவள்
(ரஸம், பாவம்);
அணிகளால் (மொழியின் வர்ணனைகளால்) அலங்கரிக்கப்பட்டவள்;
செவிக்கு இதமான சொற்களைப் பேசும் குரலையுடையவள்;
(சொற்கள் கோர்க்கப்பட்ட தொடர்கள்);
எண்ணத்திற்கு இனிமையானவள்.
அன்பான மனைவியைத் தான் இயற்றும் இனிய கவிதைக்கு ஒப்பிடுகிறார் ஜகன்னாதர்.
7. ஓ அன்பே! என் உயிரைப் போன்றவளே,
தாமரை மலர்களின் பெரும் கவலை குறைந்தது,
நிலவின் வட்ட வடிவம் இணையில்லாத நளினத்தை அடைந்தது,
குயில்களின் குரல்கள் ஓங்கிவிட்டன,
அனைத்தும்
நீ இந்த இடத்திலிருந்து சென்றுவிட்டபடியால்.
8. பெருமைமிகும் இந்திரனைப் போல சந்தோஷங்களை
எனக்கு சில நாட்களே அனுபவிக்கக் கொடுத்துவிட்டு,
நிலையாமையையுடைய மின்னல் கீற்றுகள்போல நீ
துரதிர்ஷ்டசாலியான எனது கரங்களினின்றும் திடீரென
நழுவிச் சென்று விட்டாய்;
இது எவ்வாறு உளதெனில் ஒரு அரசனின் ராஜ்யபாரம்
அவனிடமிருந்து கைநழுவியது போல உள்ளது.
9. ஓ பெண்ணே! யாருடைய தொடைகள் கரத்தின் பின்புறத்தை
மணிக்கட்டிலிருந்து சிறுவிரல் அடிவரை ஒத்துள்ளதோ,
நான்செய்த ஏதேனும் அறியாத தவறால் நீ
சினத்தால் பாதிக்கப்பட்டாயா? ஏனெனில் நீ
அன்பான விசுவாசமுள்ள துணைவியாயிருந்தும்
என்னைப் புறக்கணித்து விட்டு தொலைதூரத்திலுள்ள
உனது தோழியின் (முக்தி, மோக்ஷம்)
வீட்டிற்குச் சென்றுவிட்டாயே?
10. ஓ இனிமையான நடத்தை கொண்டவளே,
அமிர்தத்தின் சாரம் போன்ற உன் இனிய விளையாட்டுகள் இல்லாமல்,
என் சிந்தையில் கவிதை வரிகளாக மாற்றப்படும்
எனது நல்ல கவிதைகள் எவ்வாறு மனத்திற்கு
வனப்புடையதாகவும் கவர்ச்சியானதாகவும் இருக்கும்?
11. ஓ அஞ்சி நடுங்கும் கண்களை உடையவளே!
நீ இப்போது இறந்து விட்டபடியால்,
முழுநிலா இரவு, அழகின் உச்சத்தை அடைகின்றது;
ஏனெனில் நீ இந்த பூமியை உனது ஒளிமயமான
இனிய புன்னகையால் அலங்கரித்தபடி இருந்தவரை
இந்த இரவு கவிஞர்களின் பணிக்கு உதவாததாக இருந்தது.
12. எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்பவள்,
எனது இல்லத்தை ஆளும் தேவதை,
எப்போதும் மங்களகரமானவற்றுடன் சம்பந்தம் கொண்டவள்,
என்மீது அமுதத் துளிகளைத் தன் மென்மையான
புன்னகையால் தெளித்து,
என்னை எப்போதும் தன் கண்கள் எனும்
மலர்ந்த தாமரை மலர்களால் வழிபடுபவள்,
எனது அன்பிற்கினியவள், எனது உள்ளத்தைவிட்டு
மறையாமல் இருக்கிறாள்.
13. ஓ மான்குட்டியின் விழிகளைக் கொண்டவளே!
தற்சமயம் நீ சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டதனால்,
என்னை மண்ணில் எறிந்து விட்டனையா?
நீ இந்த உலகில் வாழ்ந்தபோது என்னை
"ஓ இனிமையானவரே" "ஓ தெய்வமே"
"ஓ அழகானவரே' என விளிப்பதன் மூலம்
சுவர்க்கத்திற்கே அழைத்துச் சென்றாய்.
15. ஓ, தாமரைக் கண்ணாளே, நீ எத்தனை அழகானவளாய் இருந்தாலும்,
ஈமத்தீ உன்னை எரிக்காமல் விடவில்லை,
ஏனெனில் உன்னுடைய பொன்னையும் விஞ்சும்
ஜ்வலிப்பினாலும் எல்லையற்ற புனிதத்தன்மையாலும்
நீ அதனுடைய ஜ்வாலைகளின் ஒளியை
எப்போதும் பின்தள்ளி விடுவதனால்
அது உன்னிடம் மிகவும் கோபம் கொண்டிருந்தது.
16. அவள் கண்களில் உண்டாகும் வலியை
ஒரு கற்பூரக்கட்டிபோல நீக்கி விடுபவள்;
கழுத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்
மலர்ந்த தாமரைமலர்களாலான மாலை போல்பவள்;
ஒரு அழகான கவிதைபோல
மனதில் களிப்பை உண்டாக்குபவள்;
மற்ற பெண்மணிகளால் கடவுளைப்போல
கொண்டாடி வழிபடத் தக்கவள்.
இப்படி ஒர் கணவன் கூறி உருகுவதற்கு அந்த மனைவி எத்தனை பெருமைக்குரியவளாக இருந்திருக்க வேண்டும். அற்புதமான இணையர் இவர்கள் என உணர்கிறோம்.
17. அன்பே, சொல்வாய், எப்படி நீ, உன்
கணவனையன்றி மற்ற எவரையும்
அன்போடு கனவிலும் நோக்காதவள்,
இப்போது கிளம்பிச் சென்றுவிட்டாய்.
அந்தோ! அந்த குணம் குறிகளற்ற
இன்னொருவனை அடைவதற்காகவா?
இங்கு அந்த இன்னொருவன் 'ப்ரம்மன்' (கடவுள்) ஆவான்: அவனே சத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன்.
19. அமுதமாகப் பொழியும் அந்தத் தீங்குரலைக் கேட்பதற்கு,
உயர்ந்த மனிதர்களால் போற்றப்படும்
வடிவைக் கொண்டவளுக்கு;
மிக்க கருணை நிரம்பிய வித்தியாசமான
செய்கைகளைக் கொண்டவளுக்கு,
யாருடைய மனதில்தான் இவற்றையெல்லாம்
போற்ற ஆவல் எழாது?
இப்பாடல்கள் அனைத்துமே துயரமான எண்ணங்களைக் கொண்டவை. அன்பான காதலியின் இழப்பினால் உருகும் காதல் கணவனின் தாபச் சொற்கள் இவை. ஆழ்ந்து படித்தால் கண்களில் நீர் வழியும்.
இவற்றைப் படித்தவுடன் நினைவிற்கு வந்தது ஒரு புறநானூற்றுப் பாடல்தான். காதற் கொழுநன் உயிரிழந்துவிட்டபோது அவன் மனையாள் பாடும்விதமாக அமைந்த இப்பாடலைப் பாடிய பெண்பால் (?) புலவர் யாரென அறியக் கிட்டவில்லை. ஆகவே இது 'தனிமகள் புலம்பிய முதுபாலை' எனப்படுகிறது.
'பிணத்தைப் புதைக்கும் தாழி செய்து தரும் கோமகனே,
என் காதலனுக்குப் புதைதாழி செய்கிறாய்.
வண்டியின் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள
வெண்மையான சிறு பல்லி சக்கரம் சுழலுமிடமெல்லாம் செல்லுகிறது.
அதுபோல என் காதலன் காட்டில் செல்லுமிடமெல்லாம்
அவனோடு ஒட்டிக்கொண்டு நானும் சென்றேன்.
அவன் இறந்த பின்னர் அவனை இட்டுப் புதைக்கும் தாழியில்
அவனுடன் என்னையும் இடுவதற்காக அகலமுள்ளதாக
பிணத்தாழி செய்வாயாக.' எனும் பொருள் அமைந்த பாடல்.
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த வெமக்கு மருளி 5
வியன்பல ரகன்பொழி லீமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே. (புறநானூறு- 256)
நினைக்க நினைக்க வியப்பாக உள்ளது. உயர்ந்த கவிஞர்களின் எண்ணங்கள் எவ்வாறு ஒரே மாதிரியாக உள்ளன? அருமையான இலக்கிய விருந்து.
பாகம் 4. சாந்தவிலாஸ:
பாமினி விலாசத்தின் கடைசிப்பகுதிதான் சாந்தவிலாஸ. இது 33 ஸ்லோகங்க (செய்யுள்களை) கொண்டது. இந்த ஸ்லோகங்கள் ஜகன்னாதர் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் எழுதினவையாக இருக்கக்கூடும். ஏனெனில் இதில்
தம் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்;
தாமியற்றிய செய்யுள்களின் இனிமையை, நயத்தை, உயர்வாகப் பெருமிதத்துடன் பேசுகிறார்; கிருஷ்ணனின் திருவடிப் பெருமையைப் புகழ்ந்தேத்துகிறார்.
ஒரேயொரு செய்யுள் தனது மகனின் இறப்பைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. கங்கை, யமுனை நதிகளின் பெருமையைப் பேசுகிறார். ஸ்லோகங்களைக் காண்போம்.
1. இந்த எனது மனம் காட்டுத்தீயாகப் படரும்
ஜ்வாலைகளின் வீச்சினால் அலைக்கழிக்கப்பட்டு
புலன்களின் இன்பம் எனும் பெருங்காட்டினூடே சுழித்துச் சுழல்வது;
அது அனைத்து இனிமையின் இருப்பிடமானதும்,
அழகென்பது எப்போதும் அதிகரித்துக் கொண்டே உள்ளதுமான
முகுந்தனின் முகம் (க்ருஷ்ணன்) என்னும் நிலவைக் கண்டதும்
சகோரப்பறவை போல நடந்து கொள்ளவேண்டும்.
சகோரப்பறவை நிலவின் கதிர்களையே உண்டு உயிர்வாழும் என ஒரு நம்பிக்கை. அதுபோலத் தானும் க்ருஷ்ணனைப் பற்றிய எண்ணங்களிலேயே இருக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறுகிறார்.
3. நூற்றுக்கணக்கான நித்யமான ஒளிவீசும்
மின்னல்களினால் சூழப்பட்டும்
மானிடர்களின் புதுப்புதுக் கவலைகளை
அவர்கள் நினைக்கும்போது மட்டும் தன் கருணையினால்
விலக்கியும் வைக்கும் காளிந்த மலையின் மகளான
யமுனையின் கரைகளிலுள்ள மரங்களில் ஓய்வெடுக்கும் அந்த
அற்புதமான மேகக்கூட்டங்களைப்போல
எனது சிந்தையின் எண்ணங்கள் உருவெடுக்கட்டும்.
4. காளிந்த மலையின் மகளான யமுனையின்
விளிம்புகளை ஒளிப்படுத்தும் தமால மரம்
அடிக்கடி வருவதும் செல்வதுமான பயணங்களின் களைப்பை
மானிடர்களிடமிருந்து களைவதும்,
வரிசையான அதிசயமான இனிய கொடிகளால் சூழப்பட்டதுமானது;
அது விரைவில் எனது துயரங்களை முற்றிலும் போக்கடிக்கட்டும்.
இங்கு கோபிகளை இனிய கொடிகளாக உருவகிக்கிறார். தமாலமரமானது ஸ்ரீக்ருஷ்ணன்; செல்வதும் வருவதுமான பயணம் பிறப்பும் இறப்புமாகும். மறுபடி மறுபடி பிறந்து உழலும் வாழ்வின் களைப்பினை க்ருஷ்ணன் எனும் தமால மரத்தின் நிழல் போக்கிக் களையட்டும் என்கிறார்.
இதுவும் முந்தைய ஸ்லோகமும் (3) ஸ்ரீமந்நாராயணீயத்தின் ஸ்லோகமொன்றை நினைவு படுத்துகின்றன. இதனை இயற்றிய ஸ்ரீ நாராயண பட்டத்ரி உபநிஷதங்களே கோப கன்னிகைகளின் வடிவில் கிருஷ்ணனைச் சூழ்ந்து நிற்கின்றன எனக்கூறுகிறார். 'அக்ரே பச்யாமி' எனத் துவங்கும் நாராயணீயத்தின் கடைசி தசகம், முதல் ஸ்லோகம்.
அக்ரே பச்யாமி தேஜோ நிபிடதர கலாயாவலீ லோபனீயம்
........................
ஆவீதம் நாரதாத்யைர்விலஸத் உபநிஷத் ஸுந்தரீ மண்டலைச்ச.(100-1)
5. ஓ தெய்வமே! நான் ஒரு வெட்கமற்ற பிறவி (ஜந்து),
தற்பெருமையால் நிரம்பியவன்,
நீ கூறிய இனிய அமுதம்போன்ற சொற்களைக்
கனவிலும் கூட எண்ணிப்பார்ப்பதில்லை.
இவ்வாறு நான் நூற்றுக்கணக்கான தவறுகளை இழைத்திருந்தாலும்
நீ என்னை உன்னுடையவனாகக் கருதுகிறாய்.
ஓ யாதவர்களின் தலைவனே!
உன்னிலும் கருணை நிரம்பியவர்கள் ஒருவருமில்லை,
என்னைவிடச் செருக்கு மிகுந்தவர்களும் ஒருவருமில்லை.
இங்கு கடவுள் கூறிய சொற்களாக உபநிஷதங்களைக் கொள்ள வேண்டும் என சர்மா அவர்களின் விளக்கவுரை கூறுகிறது. ஆனால் ஸ்ரீ க்ருஷ்ணன் தன் வாயால் உரை செய்தது பகவத்கீதை அல்லவா? ஆகவே அதாகவும் கொள்ளலாம்.
6. பாதாள லோகத்திற்கோ அல்லது கடவுள்களின் தலைநகருக்கோ
அல்லது மேரு மலையின் உச்சிக்கோ செல்க:
பல கடல்களைக் கடந்தாலும் உனது ஆசைகள் முடிவதேயில்லை.
ஆனால் நீ மன, உடல் வருத்தங்களாலோ,
முதுமையாலோ வருந்தினால், பரமானந்தத்தை விழைந்தால்,
உனது நாவை ஒரு மருந்திற்குப் பழக்கிக்கொள்,
அதாவது : "ஸ்ரீ க்ருஷ்ண" எனும் சொல்.
மற்றவற்றினால் என்ன பயன்?
கிருஷ்ண எனும் நாமமே பிறவிக்கு / முக்திக்கு அருமருந்து என போதிக்கிறார். 'பிணியே, பிணிக்கு மருந்தே' எனும் அபிராமி பட்டரின் சொற்கள் நினைவிற்கு வருகின்றனவா?
9. ஓ மனமே, இதனை நான் உன் நலனுக்காகக் கூறுகிறேன்.
நீ ஒரு காட்டில் மாடுகளை மேய்க்கும் மேகநிற வண்ணன்
ஒருவனுடன் நட்பு கொள்ள வேண்டாம்.
ஏனெனில் அவன் உன்னைத்
தனது மோகனப் புன்னகையால் மயக்கி
எல்லாத் திசைகளிலும் தனது இனிமையான அழகினைப் பரப்பி
உன்னையும் உனது விருப்பத்திற்குள்ளானவற்றையும்
அழித்து விடுவான்.
மிக அழகான கற்பனை. நிந்தாஸ்துதி எனலாமா? ஸ்ரீ க்ருஷ்ணனைப் பழிப்பது போலப்பேசி அவனைப் புகழும் அழகே அழகு. ஜகன்னாத பண்டிதரின் மேதாவிலாசத்தை, காளிதாசனுக்கு அடுத்த இடம் இவருடையதென்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!
10. ஓ நாவே! நீ இனிப்பான பொருட்களை ரசிப்பவனானால்,
உன்னை 'க்ருஷ்ண' எனும் பெயரைக் கூறப் பழக்கிக் கொள்;
ஏனெனில் அது திராக்ஷைப் பழங்களைவிட
அதிகம் இனிப்பைக் கொண்டது,
ஆழ்மனத்தில் பதிந்துவிட்டால் விவரிக்க இயலாத
அபரிமிதமான அன்பை அவனிடம் பெருக்கும்;
தொண்டையில் இருந்தாலோ, மொத்தமாக
உள்ளத்து அறியாமையைத் துரத்திவிடும்.
இத்தகைய உயரிய கற்பனைகள், அதாவது நாவினை விளித்து அது இன்னொரு தனி உயிர் எனக்கருதிக் கூறும் கருத்துக்கள் மிக இனிமையானவை. அற்புதமான ,பெருமைக்குரிய கவிஞர்கள் இவ்வாறு பாடுவதை நாம் வெவ்வேறு மொழிகளில் அறிந்துள்ளோம்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவையில் 'நாராயணா என்னா நாவென்ன நாவே" எனக் கூறியிருப்பார். அற்புதமான வரிகள் அவை!
அதே போல, புரந்தரதாஸரும் தமது பாடலொன்றில் 'ஹரி நாம ஜிஹ்வெயொளிர பேக்கு' அதாவது 'ஹரியின் நாமத்தை நாவிலிருத்திக் கொள்ள வேண்டும்' என்பார்.
உயர்ந்த சிந்தனைகள் உயர்ந்த உள்ளங்களிலிருந்துதான் உற்பத்தியாகின்றன.
19. ஓ மனமே, கவலைகளை எல்லாம் ஒழித்துவிட்டு
முதுமையில் ஏன் உறங்குகிறாய்?
(அல்லது)
நிம்மதியாக உறங்குவாய்;
அன்னை கங்கை உன்னருகே விழித்திருக்கிறாள்,
இதனை கங்கைக்கரையிலமர்ந்து ஜகன்னாதர் எழுதியிருக்கக் கூடும்.
21. ஓ என் மனமே, உலகவாழ்க்கை எனும் குழியினுள்
என்னை ஏன் தள்ளுகின்றாய்?
மன்மதனை அழித்தவனின் (சிவபெருமானின்)
தாமரைமலர்ப் பாதங்களில்
நான் எப்போதும் பணிந்து கிடக்கிறேன்.
இதனைச் செய்வதால் உனது மகனை இழந்த
சோகம் மறையப்போவதில்லை.
இந்த ஒரு பாடலே ஜகன்னாதர் தனது மகனையும் இழந்தார் எனத் தெரிவிக்கிறது.
22. இதிலும் அடுத்த பாடலிலும் ஒரு அழகிய கருத்தைக் காணலாம்.
ரகுவம்சத்தவனின் தலைவனைத்
தொலைவிலிருந்து கண்ணுற்றபோதே முனிவர்கள்
அது ஒரு மரகத மரமாஅல்லது தமால மரமா என
ஐயங்கொண்டனர்.
23. இது யமுனை நதியா? இல்லை!
ஏனெனில் அது நீரால் நிறைந்திருக்கும்.
இது மரகதங்கள் வீசும் ஒளியா? இல்லை.
ஏனெனில் அவை, அந்த ஒளி எவ்வாறு இனிமை தரும்?
காட்டில் வாழும் எவரால் ராமனின் தேககாந்தியைக்
கண்டுகளிக்கும் ஆவலில் இந்த
சந்தேகங்கள் முதலில் எழுப்பப்பட்டன?
கம்பராமாயணப் பாடல் நினைவிற்கு வருகின்றதா?
வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோமர கதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோஇவன் வடிவென்பதோர் அழியாவழ குடையான்.
ராமனின் அழகு எல்லையற்றது. அதனை மையோ என மைச்சிமிழிலோ, மரகதமோ என ஓரிடத்திலோ, மறிகடலென அது இருக்கும் இடத்திலோ, மழைமுகிலெனக் கார்காலத்திலோ அடக்க முடியாது. அதனால் ஐயோ, இந்த வடிவழகை எவ்வாறு விவரிப்பது? இவன் அழியா அழகுடையவன் எனத் தன் இயலாமையைக் கம்பர் கூறுகிறார் என்பார் கி. வா. ஜ. அவர்கள்.
அதே போல ஜகன்னாத பண்டிதரும் இது கருநிற யமுனை நதியோ? (யமுனா நதியின் நீர் கருமை நிறமுடையது), மரகத ஒளியோ என ராமனைக் கண்டவர்கள் எண்ணினார்கள் எனக் கூறுகிறார். தொடர்பே இருந்திராத பெரும் புலவர்களின் வாக்கில் ஒத்த கருத்துக்கள் உதிக்கும் அதிசயம்தான் என்னே!
தமால மரம் என்பது (Cinnamomum tamala) இலவங்க மரத்தைக் குறிக்கும். இதன் ஆழ்ந்த பச்சைநிற இலைகளால் இது, இராமன் அல்லது கிருஷ்ணனின் தேக நிறத்துடன் ஒப்பிடப்படுகிறது. ராஸலீலை சம்பந்தமான கதைகளில் இவை தமால மரங்களிடையே பிருந்தாவனத்தில் நிகழ்வதாகக் கூறப்படும்.
29. தேன், திராக்ஷை, அந்த அமுதம், அல்லது
அமுதம்போலும் இனிக்கும் மங்கையின் இதழ்கள் ஆகியன
சில பொழுதுகளில், அனைவருக்கும்
மகிழ்ச்சியை அளிப்பதில்லை.
ஆனால், அந்தோ,
அந்த மந்தபுத்தியுள்ள மனிதர்கள்,
உயிருடன் இருப்பினும் இறந்தவர்களுக்கு ஒப்பானவரே
ஜகன்னாதனின் சொற்கள் அவர்களுக்கு
ஆனந்தம் தராவிடில்.
தனது கவிதைகள் அப்பழுக்கற்றவை, அதிசயமானவை, உயர்வானவை எனும் பெருமிதம் இதில் தொனிப்பதனைக் காணலாம்.
32. சாஸ்திரங்களைக் கற்றாகிவிட்டது;
ஒரு நாளின் கடமைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன;
தில்லி பாதுஷாவின் ஆதரவில் வாழ்வின் பெரும்பகுதியைக்
கழித்தாயிற்று; இப்போது,
எல்லா விருப்பங்களையும் விட்டுவிட்டு,
மதுராவில் விஷ்ணு என்னால் வழிபடப்படுகிறார்.
அதனால், பண்டிதர்களுள் மிகச் சிறந்தவன்
எல்லா விதங்களிலும் செய்ய வேண்டியவற்றை
வியக்கத்தக்க வகையில் செய்து முடித்துவிட்டான்.
தன்னைப் பற்றியும், தன் வாழ்வைப் பற்றியும் ஜகன்னாதர் இறுதியாக எழுதிய குறிப்புடன் இந்நூல் முடிவடைகின்றது. அற்புதமானதொரு படைப்பு இது. தாம் எழுதிய ரஸ கங்காதர: எனும் இலக்கண நூலுக்கு எடுத்துக்காட்டுகளாக இப்பாடல்கள் அனைத்தும் அமைந்தாலும். ஜகன்னாதரின் வாழ்க்கயைப் படல் பிடித்துக் காட்டவும் இவை தவறவில்லை. அற்புதமான ஒரு கவிஞன் தன் அந்தரங்கங்களை, தனது மன ஓட்டங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்ட நூல் என்பதனால் ஆச்சரியமே மிகுகின்றது.
(வளரும்)
~~~~~~~~~~~~~~~~~
References:
1. புற நானூறு- பாடல் 256.
2. ஸ்ரீமந்நாராயணீயம்- ஸ்ரீ நாராயண பட்டத்ரி.
3. அபிராமி அந்தாதி- அபிராமி பட்டர்
4. சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்
5. புரந்தரதாஸர் கீர்த்தனைகள்
6. அழியா அழகு- கி. வா. ஜ. அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை