
(1)
அப்பால் கேட்கும்
இழந்த தன்குரலை
மீண்டும் கண்டடைந்து
நீள் துயிலிலிருந்து
மீளக் காத்திருக்கும்
தொல்வாழ்வை
இரகசியமாய்த்
தன்னுள் பதுக்கித்
தவித்திருந்த
நிலத்தின் துயர் தீர
அகழ்ந்தாய்த் தெரியும்
அகழ்வின் ஆழ்குழியில்
தினம் தினம்
புதிதாய்ப் பிறக்கும் சூரியன்
தடுக்கி வீழ்கிறான்.
சினந்த சூரியனின்
சுடுங்கதிர் பட்டு
புதைவில்
ஆண்டாண்டுகளாய்ச்
செழித்திருந்த இருட்காடு
பற்றி எரிய
அடைந்து கிடந்த
தொல்வாழ்வு
கண் கூசி விழிக்கிறது.
எப்போதிருந்தோ,
முன்பு தனக்குரியோனின்
மீளுயிர்ப்புக்கோ
அல்லது இனி தனக்கோர்
புத்துருவைத் தரிப்பதற்கோ
காத்திருப்பது போலுள்ள
எலும்புக்கூடொன்றின் மண்டையோட்டுக்குள்
அதன் பதிவு அழியாது
பொதிந்திருப்பதாய்த்
தோன்றுகிறது.
புதிய வெளிச்சத்தில்
பதறிச் சிறகடிக்கின்றன
அன்று வாழ்வு வாழ்ந்த கணங்கள்.
தான் வேரோடிய முன் கணமும்
தன்னுள் வேரோடப் போகும் பின் கணமும்
தன்னுளொன்றித் தன்னையுணரும்
தற்கணம் அவற்றின்
தொடர்ச்சியாய்த் தெரிகிறது.
தற்கணத்தின் விளிம்பில் நின்று
தூண்டில் போட
தொல்கணமொன்று
பிடிபடுவது போல்
உணர்வாகிறது.
இக்கணத்தில் என் இருப்பு
எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மையே
வரலாற்றில் தன் இருப்புமென்று
கரிம வயதில்
குறிப்புணர்த்துகிறது அது .
இக்கணத்தின் சாயையில்
அக்கணத்தை உணர்கிறேன் நான்
என் சாயையில் என் நிழலை நான்
உணர்வது போல்.
(2)
முன்பு நிகழ்காலமாயிருந்து
தற்போது இறந்தகாலமாகிய
இறந்தகாலம்
தனக்குப் பின்பு இறந்தகாலமாகப் போகும்
தற்போதைய நிகழ்காலத்தை
எட்டிப் பார்க்காமல்
இருப்பதில்லை போல்,
அகழ்வின் புதைகுழியில்
சயனிக்கும் எலும்புக்கூடு தன்
நீளுறக்கம் கலைந்து என்னைக்
கூர்ந்து நோக்குவது போல் உணர்கிறேன்.
அதை விட
அதிகபட்ச இருப்பாய்த் தெரிகிறேனா
அதற்கு நான்?
அப்படியானால்
என்னை விட அது
அடிப்படையான இருப்பென்று-
இருப்பில்லையாயல்ல
என்பது போல்-
தெரிவிக்கிறதா எனக்கு
அது?
அதற்கு
இறந்தகாலச் சாயையில்
நிகழ்கால இருப்பாய்
நான் தெரியுமளவு
எனக்கு நிகழ்காலச் சாயையில்
இறந்தகால இருப்பாய்
அது தெரிய
எது
என் காலம்
மட்டும்?
யார்
நான்
மட்டும்?
(3)
அவரவருக்கு அவரவர் காலம்
முடிவில்லையாய் இல்லையாயினும்
யாவருக்கு யாவரின் அனைத்துக் காலமென்று
முடிவில்லையாய் இல்லாமல்
முடிந்து விடுவதில்லை
தொடர்ச்சியில்-
அவரவர் வாழ்வென்றில்லாது
யாவரின் வாழ்வும் அனைத்தாய்
வாழ்வு வாழும் வாழ்வாய்
முடிந்து விடுவதாயில்லையாகிறது.
தொல்வாழ்வு விட்டுப் போகும்
தடயங்களில் தான் தொடர்வதன்றி
துண்டிப்பதில்லையாய்த்
தோற்று விடுகிறது காலம்.
தான் மண் மூடிவிட்டதாய்க்
காலம் மயங்கும் மேட்டுநிலத்தினுள்
நெட்டுயிர்க்கின்றன
தொல்லெச்ச நினைவுகள்.
ஏனெனில் அகழ்வில் கண்விழிக்கும்
அவற்றின் உறைபனிக் கரங்கள்
தற்கணத்தில் என்னைத் தீண்டுவதை
உள்ளுணர்கிறேன்;
உணர்ந்து சிலிர்க்கிறேன்.
என்றென்றுமாய்க்
காலத்தின் தொடர்ச்சியென்பதை,
என்றென்றுமாய்
வாழ்வின் தொடர்ச்சியாகவே
அனுமானிக்கிறேன்.
நான் வாழும் வரை
’நான்’ ஊதிப் பறக்க விட்டு
’நான்’ இல்லையாய்-
இல்லையாய் வெடிக்கும்
கற்பனை பலூன்தானா
என் காலம்?
உன் காலம்?
எது
தன்னளவில்
தனக்குத் தானே
என்றென்றும் காலமாயிருக்கும்
காலம்?
(4)
என்றிருந்தோ
ஒரு தொந்தம்?
இன்றில்லா முன்னோர்
எவர் எவருடனோ
ஒரு பந்தம்?
தொல்புதைவின்
தொன்றிருந்தா
என் தொடர்ச்சி?
வென்று விடத் தான்
பார்க்கிறேன் காலத்தை-
இறவாமையிலல்ல-
இறவாமை
முடியாது என்பதினும்
இறக்காது முடிவில்லாது
மூத்துக் கொண்டே இருப்பதென்பதில்-
அதைவிட இறப்பு
விரும்பத்தக்கதாகி விடுகிறது.
ஒருவேளை இறவாமை
ஊசியில் கோர்க்க
முற்றும் நூலற்று விடாததாய் –
மீந்திருக்கும் வாழ்வின் சாரமோ
ஒன்றிணைக்கும் கண்ணியாய்
உயிர்ப்பின்னல்
விரி வலையில்?
காலத்தின் கைப்பிடித்து
கண் விழிக்கிறது புதைநிலம்
அகழ்வில்-
இற்றலென்று இறத்தல்
முற்றும்
அற்றலல்ல என்று
சாட்சியாய்-
உள்ளுணரச்
சூக்குமமாய்-
(5)
முப்பரிமாண
வெளியோடு
கைகுலுக்கும்
ஒரு பரிமாணக்
காலம்
முன்னோக்கி மட்டுமே
அம்பு எய்யும்
அரைக்குருடு.
பாயும் நெடுநதி போல்
பின் திரும்பிப் பார்க்காது
பயணிக்கும்
அது விட்டுப் போன
அது வாழ்ந்த வாழ்வு
புகலடைகிறது
புக்கு நிலத்தினுள்.
அணையா அதன்
மூச்சுக் கனல்
வரலாற்றை
அழிக்க விடுவதில்லை.
கால நடைவழியில்
என்றாவது ஒரு நாள்
நிலந் திறக்கச் செய்கிறது அது.
வரலாற்றின் இது வரை
வாசிக்கப்படாத பக்கங்கள்
வாசிக்கப்படுகின்றன அப்போது.
குறிப்பு: கீழடி அகழாய்விடத்தைக் கண்ட தாக்கத்தில் எழுதிய கவிதை.