காமரூபம்

கச்சாரிப் படித்துறை அவ்வளவு சுத்தமாக இல்லை. அஸ்ஸாம் தலைநகரான குவாஹாட்டியின் (Guwahati) ஒரு பிரதான சாலையை ஒட்டி, மண்ணைடக்கப்பட்ட கிழிந்த பிளாஸ்டிக் கோணிகள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி உருவாக்கிய, சிறு படிகள் வழியாக கீழிறங்கினால் சிமெண்ட் நிற மணல் விரவிக் கிடக்கும் நதி தீரம். தேங்கிய நீரின் வாடை நாசியை துளைத்தது. பிளாஸ்டிக் குப்பைகள் ஆங்காங்கே மண்டிக் கிடந்தன. சிறிது தூரத்தில் டயர்களால் ஆன தோரணங்கள் வெளியே தொங்க வண்ணங்கள் வெளிறிய படகுகள் நீரில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தன. கரையோடு மரப் படகுகள் உராசும் சத்தம் மெல்லிய முனகல் போல கேட்டுக் கொண்டிருந்தது. மேட்டில் இருக்கும் சாலையில் இருந்து ஒரு குழாய் மூலமாக கழிவு நீர் ஒரு சிறு கருப்பு அருவி போல நதியின் ஒரு ஓரத்தில் வீழ்ந்து, கலந்து கொண்டிருந்தது. 

நூறு, நூற்றைம்பது பயணிகள் கொண்ட ஒரு படகில் ஏறிக் கொண்டோம், மெதுவாகக் கரை விட்டு நகர்ந்தோம். சிறிது நேரத்தில் நாங்கள் இது வரை கண்ட காட்சிகள் அனைத்தையும் தனது பிரம்மாண்டத்தால் மனதில் இருந்து அழித்தது பிரம்மபுத்திரா நதி. கரையில் கண்ட அழுக்கும், வீச்சமும் சிறு துளியாகி இப் பெருக்கில் உருவிழந்தது. அகண்ட காவேரியை கண்டு பழகிய கண்களை கூட மலைக்க  வைத்தது இந்த நதியின் விரிவு. இத்தனைக்கும் மானசரோவர் அருகே உற்பத்தியாகும் இப் பெரு நதியின் அகலம் குவாஹாட்டியின் அருகே குறுகுகிறது. 

பல நூறு மைல்கள் திபேதன் பீடபூமி வழியாக நகர்ந்து நாம்சே பார்வார் மற்றும் ஞாலா பெரி போன்ற பெரும் மலைகளின் ஊடே பாம்பு போல ஊர்ந்து, மேலும் முன் நகர முடியாமல்,  சட்டென்று தென் திசை திரும்பி போ சாங்பொ பள்ளத்தாக்கில் பெரும் கோபத்துடன் பாய்ந்து, அருணாச்சல் பிரதேஷ் வழியே, அஸ்ஸாமில் நாங்கள் நின்றிருக்கும் இடம் சேர்கிறது. பல மைல்கள் கடந்து வந்த களைப்போ என்னவோ மெதுவாகத் தான் பாய்கிறது இங்கே.

படகில் இருந்தவர்கள் பல கோணங்களில் தங்களை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். சியாமீஸ் இரட்டையர்கள் போல, தோள்கள் சேர்ந்து, தலைகள் ஒட்டி, மேல்தட்டின் தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து செல்ப்பீ எடுத்து கொண்டிருந்தது ஒரு வடக்கத்திய ஜோடி. நீரில் படிந்த அவர்களின் நிழல்களை கூட புகைப்பட சட்டத்திற்குள் கொண்டு வர சாய்ந்தும், நிமிர்ந்தும், நெளிந்தும் நடத்திய நடனம் வயிற்றில் புளியை கரைத்தது. படகின் உள்ளே சினிமா கொட்டகை போல வரிசையாய் அமைந்த இருக்கைகளில் சிறுவர்கள் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்க ‘கீ கோர்ச்சென்’, ‘கோத்தேய் ஜாக்சென்’ என்று  கேள்விகளால் பிள்ளைகளை அடக்க முயன்று தோற்றனர் பல தாய்மார்கள். நாங்கள் பார்த்து கொண்டிருக்கையிலேயே சக பயணி போல தென்பட்ட ஒருவர் கொண்டு வந்த பையை அவிழ்த்து சிப்ஸ், ஐஸ்கிரீம் விற்கும் வியாபாரியாக திடீரென்று உருமாறினார். சிறிது நேரத்திலேயே காலி சிப்ஸ் பொட்டலங்கள் நதியில் மிதக்கத்  தொடங்கின. 

கலங்கிய, பழுப்பு நீரை வெட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தது படகு. மறு கரை தென்படவில்லை. கடலைப் போல பெரும் நீர் பரப்பு. குவாஹாட்டியை தொட்டுக் கொண்டு ஓடும் இந்த நதியின்  ஆழத்தில் பல சரித்திர நிகழ்வுகள் சத்தமில்லாமல் மூழ்கிருக்கின்றன. 

பெரும் வீரனும், வியூகவாதியும் அசாம் பிரதேசத்தை பல நூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த அஹொம் (Ahom) அரச வம்சத்தினரின் தளபதி லசித் போர்புகான் (Lachit Borpukhan) இந்திய சரித்திரத்தில் ஒரு மின்னல் வெட்டு போல் ஒளிர்ந்தது இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சராய் காட் என்னும்  நதி தீரத்தில் தான்.

1671 ஆம் ஆண்டு முகலாய பேரரசன் அவுரங்கசீப்பின் தளபதியும் ராஜ்புத் வம்சத்தின் மன்னருமான ராம் சிங் தலைமையில் குவாஹாட்டி பிரதேசத்தை மீட்டெடுக்க பெரும் படை ஒன்று பிரம்மபுத்திரா நதியில் குவிந்தது. பெரும் கப்பல் படையை கொண்டு வந்த முகலாயர்களை எதிர்க்க முடியாமல் அஹொம் படையினர் திணறி பின்னடைந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்த லசித்தின் செவிகளுக்கு இச் செய்தி பேரிடியாக இறங்கியது. மருத்துவர்களின் அறிவுரையை புறக்கணித்து விட்டு படகேறி நதி வந்தடைந்த லசித்தை கண்ட அஹொம் படையினர் உற்சாகம் அடைந்தனர். படைகளின் முழு பலத்தையும் சராய் காட்டில் குவித்தார் லசித்.  அஹொம் படகுகள் முகலாயர்களின் போர் படகுகளை சுற்றி வளைத்தன. படகுகளை ஒன்றோடு ஒன்று கட்டி நதி மீது பாலம் போல அமைத்து முகலாயா படையின் பின் புறத்திலிருந்தும் தாக்குதலை துவக்கினார் லசித். போர் தராசு நிலை மாறியது. குவாஹாட்டியை மீட்டெடுக்க வந்த முகலாய படை வெறும் கையுடன் திரும்பியது. இந்த வீரனின் சிலையை அஸ்ஸாமின் பல்வேறு இடங்களில் காணலாம். பிரம்மபுத்ரா நதியின் நடுவே கூட ஒன்று உண்டு.   

பத்து நிமிடத்தில் எங்கள் இலக்கான பீகாக் தீவை அடைந்தோம். உலகில்  நதியில் அமையப் பெற்றுள்ள தீவுகளிலேயே இது தான் சிறியது. மரங்கள் போர்த்திய சிறு குன்று. இதன் உச்சியிலே உமானந்தா என்று அழைக்கப்படும் ஒரு சிவன் ஆலயம் உள்ளது. அஹொம் அரச வம்சத்தில் பெரும் கீர்த்தியுடன் விளங்கிய கதாதர்சிங்கா 1690 களில் இந்த ஆலயத்தை நிறுவினார். ஆனால், 1897 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் பழைய ஆலயம் பெரிதும் சேதம் அடைந்தது. உள்ளூர் வியாபாரிகள் ஆலயத்தை மீண்டும் எழுப்பினர். குன்றின் உச்சியில் நீரில் நனைந்த செம்மண் நிறத்தில் எழுப்பப்பட்டிருந்த கோபுரம் அவர்களின் கைங்கர்யமே. 

கோவில் வளாகத்தில் சிறு சன்னதிகள் அங்கும் இங்கும் தென்பட்டன.  சூரிய பகவான் பளபளக்கும் வெள்ளை நிற டைல்ஸ் பதித்த ஒரு சன்னதியில் நின்று கொண்டிருந்தார். மற்றொரு பகுதியில் இடப்பக்கம் சென்ற ஒரு சிறு பாதையின் முடிவில் இன்னொரு சன்னதி. ஆனால் மூடியிருந்தது. பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின் எந்த தெய்வம் நின்று அருள் புரிந்து கொண்டிருந்ததோ தெரியவில்லை. இரண்டடி உயரத்தில் ஒரு மூஞ்சூறு சிலை கை கூப்பியபடியே வெட்ட வெளியை நோக்கி இருந்தது. ஒரு மரத்தடியில் சிவலிங்கமும், விநாயகர் சிலையும் தென்பட்டது. இந்தக் கோவிலின் அமைப்பு எங்களுக்கு பிடிபடவில்லை. நூறு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பம் சன்னதிகளின் இருப்பையும் மாற்றி விட்டதோ என்ற ஐயம் எழுந்தது.  

இங்கே உமானந்தா லிங்கமாக வணங்கப்படுகிறார். கீழிறங்கும் படிகள் கொண்ட ஒரு பாதாள அறையில் தான் இந்த சன்னதி உள்ளது . சாமந்தி பூக்களால் அர்ச்சிக்கப்பட்டு தரையில் இருந்தே எழுந்து இருக்கும் அழகான சிறிய லிங்கம். மங்கிய எண்ணை விளக்குகளின் வெளிச்சத்தில் சன்னதி சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த திரிசூலம் மின்னியது. ஆழி சூழ் பரப்பில் ஒரு சிறு மரு போல முளைத்திருக்கும் தீவின் முகட்டில் உள்ள ஒரு பாதாள அறை சன்னதியில் அமைதியாக சில நிமிடங்கள் நின்றோம். சன்னதி வாசலில் தொங்கிக் கொண்டிருந்த மணி ஒலித்தது. எங்கள் பின்னே பலர் நிற்கிறார்கள் என்று உணர்ந்து அவர்களுக்கு வழிவிட்டோம்.

Xxx

இந்தியாவில் வளர்ந்து வரும் சிறு நகரகங்களில் குவாஹாட்டியும் ஒன்று. விமான நிலையத்திலிருந்து செல்லும் பாதையின் இருபுறமும் பச்சையும், கிராமீயமும் கலந்த காட்சிகள். பாதையின் நடுத்தடுப்புகளில் வண்ண மலர்கள். மலர்களின் வண்ணமும் செடிகளின் திரட்சியும் யாரையோ வரவேற்க நட்டு வளர்த்ததைப் போல தோன்றியது. எங்களின் யூகம் சரி தான். இன்னும் சில தினங்களில் ஏதோ ஒரு ஜி 20 நிகழ்ச்சி நடைபெறப் போவதற்கான அறிவிப்பை சுமந்தபடி பல வண்ண பதாகைகள் கண்ணில் பட்டன. 

சிறிது நேரத்திலேயே நகரம் விரிவடைந்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படலாயின. சாலையின் இரு புறங்களிலும் செம்மண் நீட்சிகள், சமன் செய்ய உதவும் உருளை இயந்திரங்கள், லாரிகளில் பொருத்தப்பட்டு ஒரு அச்சில் மெதுவாக சுழலும் சிமெண்ட் கலப்பிகள், பாதையோர நீள் பள்ளங்கள் என்று காட்சிகள் மாறின. 

சட்டென்று எங்களின் கார் ஒரு மண் சுமக்கும் ஊர்தியைத் தாண்டி, சாலையோர மண் மேட்டில் வளைந்து, கட்டப்படும் பாலத்தை சுமந்து கொண்டிருக்கும் இரும்பு சாளரங்களை உரசாமல் இரண்டு மூன்று வாகனங்களை பின் தள்ளிவிட்டு லாவகமாக முன்னேறியது.

‘நான் சென்னைக்கு ரெண்டு, மூணு முறை வந்திருக்கேன்’ என்றார் எங்கள் காரோட்டி. ஏதோ இப்பொழுது செய்த சாகசங்களை எல்லாம் அவர் சென்னையில் தான் கற்றது போல

‘அப்படியா’ என்றேன்.

‘ஆமாம், டிரக் ஒட்டிக்கிட்டு இருந்தேன்…கோயம்பத்தூர், சேலம்…எல்லாம் போயிருக்கேன்’ என்றார் டிரக்குகளை வளைத்த இந்தக் கைகளுக்கு இந்த சிறிய தகர டப்பா எம்மாத்திரம் என்று தோன்றியது.

விடுதி சேர்ந்த எங்களை பார்த்து ‘ கோவிலுக்கு நாளை காலையிலே சீக்கிரம் கிளம்பிடுங்க, இல்லைனா டிராபிக்ல மாட்டுவீங்க’ என்றார்

சரி என்றோம்.   

Xxx

பொதுவாகவே வட கிழக்கு மாநிலங்களை பற்றிய நமது பார்வை மிகவும் குறுகியது. தேயிலைத் தோட்டங்கள், ஆதிவாசி இனக் குழுக்கள், அவற்றின் இடையே ஏற்படும் பூசல்கள், பல நாட்கள் நீடிக்கும் கடையடைப்புகள், அந்த மாநிலங்களில் இருந்து வேலை தேடி வந்து சென்னை அல்லது மற்ற பெருநகரங்களில் இருக்கும் அழகு நிலையங்களில் பணி புரியும் பெண்கள் என்று சில துண்டு செய்திகளை வைத்து நம் மனதில் அம் மாநிலங்களை பற்றிய ஒரு எளிமையான கோட்டோவியத்தை வரைந்து வைத்திருக்கிறோம். இச் சித்திரம் நம் அறியாமையின் விளைவே. வடகிழக்கு மாநிலங்கள் நம் தொன்மக் கதைகளிலும், வரலாற்றிலும் பல்வேறு வகையில் பிணைந்திருக்கின்றன.

நம் புராணங்களில் அசாம் மாநிலம் மற்றும் அதை சுற்றி உள்ள பிரதேசங்கள் ப்ரக்ஜ்யோதிஷா என்றும் பிற் காலத்தில் காமரூபா என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஆட்சி புரிந்த பல மன்னர்கள் தங்களை மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த பெரும் ஆளுமைகளின் வழித்தோன்றலாக கருதியிருக்கின்றனர்.  நரகா அல்லது நரகாசுரன் என்ற மாமன்னன் இதில் முதன்மையானவன். கிருஷ்ணர் இவனை வதைத்த பின்னர் இவனது மகன் பாகதத்தனுக்கு முடி சூட்டினார். மகாபாரத யுத்தத்தில் வயோதிகத்தால் தளர்ந்த முகத் தசைகளை நெற்றியோடு சேர்த்து கட்டி கௌரவர்கள் சார்பில் போர் புரிந்தது இந்த பாகதத்தன் தான். 1824 ஆம் ஆண்டு ஆங்கிலோயர்கள் கையில் வரும் வரை இந்த பிரதேசத்தை வர்மன், சாலஸ்தம்பர்கள், அஹொம் என்று பல பேரரசுகள் ஆண்டிருக்கின்றன. சைவம், வைஷ்ணவம், சாக்தம், மற்றும் பல தொல்குடி மதங்கள் தழைத்த இடம் இது. இதை நிரூபிக்கும் வகையில் அசாம் முழுவதும் பல நூறு ஆலயங்களின் சிதிலங்கள் காணக் கிடைக்கின்றது. ஆனால், இவற்றிற்கெல்லாம் திலகமாக அமைந்திருப்பது, குவாஹாட்டியில் இன்றும் வழிபாட்டில் இருக்கும் காமாக்யா ஆலயம்.   

பெரும் மதங்கள் திரண்டு உருவாகுவதற்கு முன்பே கூட இந்த இடம் ஒரு புனித ஸ்தலமாக இருந்திருக்கிறது. காமாக்யாவின் தோற்றம் மற்றும் எழுச்சியை ஆராய்ந்த பேராசிரியர் ககாடீ, இப் பகுதியை சேர்ந்த முது குடிகளான கிராடர்கள் இந்த தெய்வத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆராதித்து வந்தனர் என்று குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் இது  சாக்த மதத்தின் மிக முக்கியமான பீடமாக உருவெடுத்தது. தெய்வங்கள் சேர்ந்து ஆடும் ஒரு நாடகத்தின் முக்கிய களமாக மாறியது இந்த இடம்.  

சதியின் இறப்பால் பெரும் துயருற்ற சிவன் அவளது உடலை தோளில் சுமந்து பித்தனாக திரிந்து கொண்டிருந்த காலத்தில் விஷ்ணு சதியின் உடலை 51 கூறுகளாக வெட்டி நிலமெங்கும் வீசியதாகப் புராணங்கள் கூறுகின்றன. சதியின் யோனி வீழ்ந்த இடம் தான் காமாக்யா. சதியின் யோனி வீழ்ந்த குன்றின் நிறம் நீலமாக மாறியது. சிவனை குறிக்கும் இந்தக் குன்றே நீலாஞ்சல் என்று அழைக்கப்படுகிறது. காளிகா புராணம் இங்கே உறையும் தேவியை தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வம் என்றும் இவளே மஹாமாயை என்று சிலாகிக்கிறது. ஆதி மன்னன் நரகனை காமரூபத்தில் உறையும் இவளைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நீ வணங்காதே என்று விஷ்ணுவே கட்டளையிட்டதாக காளிகா புராணம் கூறுகிறது.

Xxx

காமாக்யா ஆலயம் அமைந்திருக்கும் நீலாஞ்சல் ஒரு சிறிய குன்று. காரில் சில நிமிடங்களில் ஏறிவிடலாம். கார்கள் நிற்கும் இடத்திலிருந்து சற்று நடந்து படியேற வேண்டும். எல்லாத் திருத்தலங்களையும் போல இங்கேயும் சிறு கடைகள் பாதைகளை நெருக்குகின்றன. தங்க நிற இழையோடிய சிவப்பு வண்ண மேலாடைகள், வளையல்கள், மோட்டிச்சூர் லட்டுகளை மாலையாகக்  கட்டியது போல சாமந்தி பூ சரங்கள், கைகளில் கட்டிக் கொள்ள பல வண்ண சரடுகள் என்று பாதையின் இரு புறத்திலிருந்தும் நிறங்கள் நம் கண்களை நிறைக்கிறது.

‘மா கீ பர்ஷாத் லேகே ஜாயியே’ என்று இனிப்புகளும் உலர்பழங்கள் அடைக்கப்பட்ட சிறு பிளாஸ்டிக் பெட்டிகள், சிறு குங்கும பொட்டலங்களை அடங்கிய ஒரு கூடையை பலர் நம் முன் நீட்டுகிறார்கள். தேவியிடம் வைத்து அதை பிரசாதமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் நமக்கும் இந்த பூஜா விதானங்களுக்கும் அவ்வளவு ராசி கிடையாது. 

‘அம்பாளுக்கு பூ வாங்கிட்டு போங்க சார், பெருமாளுக்கு துளசி மாலை வாங்கிட்டு போங்க சார்’ என்று தமிழ் நாட்டில் பல கோவில்களின் வாயிலில் கேட்ட கெஞ்சல்/மிரட்டல்களுக்கு பணிந்து  வாங்கிக் கொண்டு போய் கூட்ட நெரிசலில் சிக்கி வெறும் நாரோடு பல முறை திரும்பி வந்த அனுபவம் இருந்ததால், இவற்றை வாங்குவதில்லை. 

Xxx

காமாக்யா ஆலயத்தின் கட்டமைப்பு பல காலகட்டங்களில் உருவான கட்டிடப் பாணிகளின் கலப்பு. பல வடிவத் தாள்கள் ஒன்று சேர்த்து பல வண்ணச் சரடுகள் கொண்டு தைக்கப்பட்ட ஒரு விசித்திரமான புத்தகம் போல உருவகப் படுத்திக்கொள்ளலாம். கருவறை மேல் எழும்பி இருக்கும் கோபுரம் இந்தப் புத்தகத்தின் மேல் அட்டை. வெறும் கோட்டோவியமாக துவங்கி, பின்பு வண்ணங்கள் நிரப்பப்பட்டு, வடிவம் மாறி, இப்பொழுது நம் கண் முன்னே புடைத்து, மேலெழும்பி, நீலாச்சல் மலையில் பூத்த ஒரு கல் புஷ்பம் போல மலர்ந்து நிற்கிறது. இந்த ஆலயத்தின் தோற்றம் காலத்தின் பனி சூழ்ந்த வைகறைப் பொழுதில் மறைந்திருந்தாலும் அதன் தோற்றத்தை விளக்க திரண்டு வந்த கதைகள் பல. 

அஸ்ஸாமின் தொன்மக் கதைகளின் நாயகன் மாமன்னன் நரகன் இங்கே உறையும் தேவியிடம் காதல் வயப்பட்டு அவளை மணமுடிக்க விரும்புகிறான். ஆனால் தேவியோ தான் இருக்கும் குன்றின் கீழிருந்து மேலே பக்தர்கள் நடந்து வர ஒரு படிக்கட்டை ஒரே இரவில் கட்டிக் கொடுத்தால் அவனை மணப்பதாக வாக்களிக்கிறாள். நரகன் செயல் வீரன். ஏறக்குறைய படிக்கட்டு முழுவதையும் ஒரு இரவில் கட்டி விட்டான். இன்னும் சிறிது தான் பாக்கி. ஏது, இவனை தான் திருமணம் செய்து கொள்ள விட நேரிடுமோ என்று எண்ணிய தேவி, சேவல் ஒன்றை ஏவி விட்டாள். அது விடியல் வருவதை அறிவிப்பது போல கொக்கரித்தது. மனமுடைந்த நரகன் தான் தோற்று விட்டதாக எண்ணி வருத்தத்துடன் திரும்பி விட்டான். இன்று நீலாஞ்சல் மலையின் மேற்கு பகுதியில் மேக்கேல உஜுவா பாத் என்று அழைக்கப்படும் முடிவடையாத படிக்கட்டே நரகன் கட்டியது என்று தொல் கதைகள் கூறுகின்றன.

காலத்தின் மூடுபனி சற்றே விலகி வரலாற்றின் மிதமான வெளிச்சம் விழத் துவங்கிய 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு (உமாச்சல் மலை கல்வெட்டு) ஒன்றில் சுரேந்திர வர்மன் என்ற மன்னனால் இங்கே ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது என்ற தகவல் இருக்கிறது. அதன் பின்னர் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த ஆலயத்தை பற்றி எந்த செய்தியும் இல்லை. இந்த நீண்ட இடைவேளைக்கு பிறகு நரநாராயணன் என்ற மன்னன் கிபி 1565 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை மீண்டும் எழுப்பி புதுப்பித்தான் என்று சில கல்வெட்டுகள் சொல்கின்றன. கடந்த 400 ஆண்டுகளில் பல அஹொம் மன்னர்களின் ஆதரவுடன் கருவறை ஒட்டி சில மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன. காளி, தூமாவதி, சின்னமஸ்தா போன்ற தச மஹாவித்யாக்களுக்கும் இந்த கோவில் வளாகத்திலேயே சிறு கோவில்கள் உண்டு.

கோவில் வளாகம் சிறியது. நடக்கும் பகுதிகள் மேட்டில் இருக்க பிரதான ஆலயம் சற்று கீழிறங்கி இருக்கிறது. ஒன்றின் பின் ஒன்று ஒட்டி இருக்கும் நான்கு கட்டமைப்புகளை இங்குக் காணலாம்; நடமந்திர, பஞ்சரத்னா, சலண்டா மற்றும் இவற்றையெல்லாம் உயிரூட்டும் விசை போல அமைந்திருக்கும் கருவறை. இந்த கட்டமைப்புகள் வெவ்வேறு காலகட்டங்களில் உருவானவை என்பதை அவற்றின் கட்டிடப் பாணி, கூரைகளின்  வடிவம், சிற்பங்கள் போன்றவற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம். 

கருவறையின் அடித்தளம் கருங்கல்லில் அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த அறையின் மேல் இருக்கும் கோபுரம் நாகரா கட்டிடப் பாணியில் இருந்திருக்கிறது. கோனார்க் சூரியனார் கோவில் கோபுரம் போல. நாம் இப்பொழுது இந்த ஆலயத்தில் காண்பது 15 ஆம் நூற்றாண்டில் உருவான முகாலயப் பாணி குவிமாட கோபுரம். 16 கோணங்களை வெட்டி செல்லும் பல சிறு அடுக்குகள் கொண்ட முழுவதும் செங்கலால் வேயப்பட்ட கோபுரம். கருவறையின் வெளிச் சுவர்களில் புடைப்பு சிற்பங்கள் அணிவகுக்கின்றன. பைரவர், வீணையை கைகளில் சுமந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி, கௌரி, உமா என்று வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன. சில சிற்பங்களின் முகவாகு சதுரமாக, நாசி மலர்ந்து தண்டு சற்று உள்ளடங்கி கம்போடிய கோவில்களில் காணப்படும் சிற்பங்களை நினைவு படுத்துகின்றன. 

பெரும் வெள்ளைப் படகை கவிழ்த்து வைத்தது போல கூரை அமைக்கப் பெற்றிருந்த நடமந்திரம் ‘கஜபிருஷ்ட’ அமைப்பில் உள்ளது. அதாவது ஒரு யானையை பக்கவாட்டில் இருந்தோ அல்லது பின்னால் இருந்து பார்த்தால் தெரியும் அமைப்பு.

Xx

இந்தக் கோவிலில் வி ஐ பி தரிசனத்திற்கு ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து நாங்களும் சில மணி நேரங்களுக்கு வி ஐ பி கள் ஆனோம். நாங்கள் காசு கொடுத்து வி ஐ பி பட்டம் வாங்கினாலும் தரிசனத்திற்கு என்னமோ சிறிது நேரம் காத்து தான் இருந்தோம். திருப்பதி தரிசன அமைப்பை நினைவு படுத்தும் வகையில் ஒன்றுக்கொன்று ஒட்டி இருக்கும் சிறு அறைகளில் போடப்பட்டுள்ள இருக்கைகளில் சற்று நேரம் அமர்ந்திருந்தோம். ஆனால் திருப்பதி அளவு காத்திருக்கவில்லை. ஜூன் மாதத்தில் மூன்று நாட்கள் நடக்கும் அம்புபாச்சி திருவிழாவின் கடைசி நாள் கூட்டம் விழி பிதுங்கும் என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெரியவர் ஒருவர் தெரிவித்தார். 

சிறிது நேரத்தில் வரிசை நகரத் தொடங்கியது. கோவில் வளாகத்தை ஒரு பாதி சுற்று சுற்றி, படிகள் ஏறி, இறங்கி, இரும்பு தடுப்புகள் வழியே பக்தர்களின் வரிசை பாம்பு போல ஊர்ந்தது.  தங்கக் காகித ஜரிகை இட்ட சிவப்பு துணியை தலையை சுற்றிக் கட்டி கொண்டு வட இந்தியாவில் இருந்து வந்த பக்தர்களின் ‘ஜெய் மாதா தீ’ கோஷம் குறுகிய பாதையில் எதிரொலித்தது. மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் சிறு பறவைகள் போல திருஷ்டி பொட்டிட்ட குழந்தைகள் பெற்றோர்களின் தோள்களில் அமர்ந்து இந்த ஆரவாரத்தை மையிட்ட கண்கள் விரித்து பார்த்துக் கொண்டிருந்தன. 

வரிசை இடப்பக்கம் திரும்பி நான்கு வாயில்கள் கொண்ட ஒரு அறையில் நுழைந்தது. கருவறையை ஒட்டி இருக்கும் சலண்டா என்று அழைக்கப்படும் மண்டபம் இது தான். அறையின் நடுவில் பன்னிரண்டு தூண்கள் சூழ அமையப்பெற்ற ஒரு செவ்வக மேடையில் காமாக்யா அன்னையும் காமேஸ்வரனும் மூர்த்தங்களாக காட்சி அளிக்கின்றனர். இவை உற்சவ மூர்த்திகள் போல தென்பட்டது.  

‘யே மாதா ஒர் ஷிவ் ஜீ’ என்று தெய்வங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார் மேடையில் இருந்த பூஜாரியான பாண்டா. சக்தியின் கதையை சொல்ல ஆரம்பித்தவர் ‘இவனுக்கு இந்த கதையெல்லாம் எங்கே புரியப் போகிறது’ என்று நினைத்தாரோ என்னவோ பாதியில் நிறுத்தி விட்டு என் கைகளை பற்றி அங்கே பார் என்று மேடையின் ஒரு மூலையை காண்பித்தார். அங்கே மலர்களும், மற்ற பூஜா திரவியங்களும் சூழ ஒரு எருமையின் தலை இருந்தது. மெல்லிய சாம்பல் நிற ரோமங்கள் அடர்ந்த முகத்தின் பக்கவாட்டில் வளைந்த சிறு மரக்கிளை போல தென்பட்ட கொம்புடன் கூடிய தலை. பொம்மையோ என்று எண்ணம் தோன்றி மறைவதற்குள் ‘மா கேலியே பலிதான்’ என்று பாண்டா என் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். காமாக்யா ஆலயத்தில் உயிர் பலி அங்கே செய்யப்படும் பூஜைகளில் முக்கிய பங்கு வகுக்கிறது. பலியிடுவதற்கென்றே ஆலய வளாகத்தில் ஓர் இடம் உள்ளது. 

சலண்டா மண்டபத்தின் தூண்களிலும், சுவர்களிலும் பல வித சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சரியாக பார்க்க இயலவில்லை. சூழ்ந்திருக்கும் கும்பல் நம்மை கருவறையை நோக்கி தள்ளுகிறது. பலி இடப்பட்ட எருமைத் தலையில் கோலிக் குண்டுகள் போல பளபளத்து கொண்டு இருந்த கண்கள் மட்டும் இந்தச் சிற்பங்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தன.

கருவறைக்கு செல்ல குறுகிய படிகளில் கீழ் இறங்கினோம். மெல்லிய இருள் எங்களை சூழ்ந்தது. குகை என்று மட்டும் தெரிந்தது. எண்ணை  விளக்குகளின் சுடரில் சிவப்பு மேலாடை அணிந்த ஒரு பாண்டா கீழே அமர்ந்திருப்பது மங்கலாக தெரிந்தது. குகையின் ஒரு புறத்திலிருந்து சரிந்த பாறை ஒன்றில் ஒரு சிறிய கரும் பிளவு. அதை எப்பொழுதும் நனைந்தபடியே இருக்கும் வற்றாத ஒரு ஊற்று. இவையே சக்தியின் மூல ஸ்தானம். பாண்டா என் கையை பிடித்திழுத்து பாறையில் ஆவிர்பவித்திருந்த  சக்தியின் மேல் வைத்தார். என் கை விரல்கள் இறையை ஸ்பரிசித்தன. சில்லிட்ட நீர் விரல்களை நனைத்தது. சில நொடித்துகள்களுக்கு மனம் வெறுமையானது.    

மலையின் முகட்டில் உள்ள பாறையில் இயற்கையாய் ஏற்பட்ட ஒரு விரிசலை  யானை முதல் எறும்பு வரை ஜனித்து வெளி வரும் இந்த பிரபஞ்சத்தின் ‘ஊனமில் யோனியாக’  விரித்தெடுத்து  அண்டத்தையும், பிண்டத்தையும் கோர்க்கும் சரடின் முடிச்சுகளை, புனிதத் தலங்களாக, தீர்த்தங்களாக, ஆலயங்களாக வார்த்தெடுத்த நம் கலாச்சாரம் சற்று மலைக்க வைக்கிறது. எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பி செல்ல தயாராக இருப்பது போல ஆலய வளாகத்தில் குங்குமம் அப்பிய ஆடுகளும், புறாக்களும் ஆங்காங்கே திரிந்து கொண்டிருந்தன.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.