
மணி ஒன்பதே கால்! இப்போதுதான் வீட்டு வேலையெல்லாம் முடித்துக்கொண்டு படுக்கையறைக்குள் மனைவியும் நுழைந்தாள். கூடவே தலையை தொங்க விட்டபடி மகனும்! இருக்கும் உளைச்சலில் இவன் வேற என்பது போலிருந்தது. மறுபடியும் மொபைலை எடுத்து வாட்சப்பை ஸ்க்ரோல் செய்தேன். குறிப்புணர்ந்தவளாய், “உன் ஃபிரெண்டுக்கிட்ட பேசுனியா?” என்று கேட்க, முறைத்தேன்.
“எங்கிட்ட மட்டும் நல்லா முறை!” தன் பங்கிற்கு அவளும் என்னை கொன்றுப் போட்டுப்விடுவது போல் பார்த்தாள். அவளை எதிர்கொள்ள முடியாமல் பையனை என் பக்கம் படுக்க வைத்துக் கொள்ள எத்தனித்தேன், வாடிய மரிக்கொழுந்து போல வந்து என்மேல் விழுந்தான். அவனுடைய சோர்வு நன்றாகவே புரிகிறது. இன்று ஸ்கூல் ஃபீஸ் கட்டியிருக்க வேண்டும். ‘லஞ்சுக்குள் டாடி வந்து கட்டி விடுகிறேன்’ என்று நம்பிக்கையூட்டிதான் அவனை பள்ளியில் இறக்கிவிட்டு வந்தேன். ஆனால் படுபாவி இந்த முறையும் அவன் என்னை ஏமாற்றியிருந்தான், அவசரம் என்று போன மாதம் என்னிடமிருந்து கடன் வாங்கிய நண்பன்.
நண்பன் என்று சொன்னாலும் பாலாஜியும் நானும் அவ்வளவு நெருக்கமெல்லாம் இல்லை. கல்லூரி இறுதி நாட்களில், ஒரு அரசு ஆராய்ச்சி மையத்தில் நான் ப்ரோஜெக்ட் பண்ணிக்கொண்டிருந்தபோது, சக உறுப்பினர்களாக மற்ற மற்ற கல்லூரிகளிருந்தும் மாணவர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். கல்லூரி பேதமின்றி பழகியதில் எங்களுக்குள் புதிய புதிய நட்பு வட்டங்கள் உருவாயின. அப்படி என்னோடு பழகி வந்தவர்கள் கவின், ஜெகன், ரெஜினா, மற்றும் தீன தயாளன். அதில் கவினுடைய கிளாஸ்மேட்தான் இந்த பாலாஜி.
அவ்வப்போது எங்களோடு வந்து ஒட்டிக்கொள்வான். அப்பவும் கூட மற்றவர்களிடம் நடந்துகொள்வது போல அவனிடம் பெரிதாக எதுவும் பேசியதில்லை. இருந்தாலும் முழுதாக தவிர்த்துவிடவும் குறிப்பிட்ட காரணங்கள் என எதுவும் அப்போது இருந்ததில்லை. அந்த இரண்டு மூன்று மாதங்கள் இன்னொரு புதிய கல்லூரியில் நாங்களெல்லாம் கிளாஸ்மேட்ஸாக மாறியது போலொரு புத்துணர்வுதான். இதில் என்னதான் குறுகிய கால பழக்கம் என்றாலும் கவினும் ரெஜினாவும் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒரு அங்கமாக மாறிப்போனார்கள்.
அங்கே ரெஜினா போல எத்தனையோ பெண்கள் இருந்திருந்தாலும், அவளை போல யாரும் இருக்கவில்லை அதாவது பழகவில்லை. அப்படியே பழகியிருந்தாலும் அவள் போல் யாரும் பிற ஆண்களோடு கலகலப்பாக இருந்ததில்லை.
கவின் கிட்டதட்ட மன்மதக்குஞ்சு. அதற்கு தகுந்தாற்போல் அவனிடம் அப்போதே ஒரு ஸ்ப்ளெண்டர் பைக்கும் இருந்தது. இந்த இரண்டு மூன்று மாதத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு வர வைத்திருந்தான். அவனுடைய பர்சனாலிட்டி ஒரு பலம் என்றால் அந்த பைக் பெண்களை பிக் அப் பண்ண இன்னொரு முக்கியமான அஸ்திரமாக இருந்தது. அப்போது ஒவ்வொரு சனி ஞாயிறுகளில் மெரினாவில் ஜோடிகளின் எண்ணிக்கை கூடியதில் இவனுக்கும் பங்கிருந்தது. உண்மையில் பெண்தோழிகளை விட ஆண் நண்பர்களுக்கும், தன்னைச் சுற்றி வைத்துக்கொள்ளும் கலகலப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தேயிருந்தாலும் அவனை மன்மதக் குஞ்சு என்றே அழைப்போம்.
இப்போதிருக்கும் மனநிலையில், பாலாஜியைப் பற்றிதான் அதிகம் சொல்லியிருக்க வேண்டும் ஆனால் அவனைப் பற்றி நினைத்தால் இவர்களின் ஞாபகமும் வந்துவிடுகிறது. அவனை பற்றி சொல்ல நினைத்தாலும் அப்போது நடந்தவகைளில் தொடர்புப்படுத்தி சொல்ல அதிகம் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக அத்தனைக்கும் சேர்த்து இப்போது என்னை நன்றாகவே புலம்பவிட்டிருக்கிறான் படுபாவி.
ப்ராக்ஜெக்ட் முடிந்த பிறகு, இறுதியாண்டு தேர்வுகளும் வந்துவிட்டன. அப்புறம் வேலைத்தேடல், வேலையில் சேர்தல் என வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் நகர்ந்து, ஒரு கட்டத்தில் எல்லோருடைய நேரத்தையும் பயனுள்ளதாக ஆக்கக்கூடிய ஃபேஸ் புக் வந்து பிரபலமாகிக்கொண்டிருந்த ஒரு நன்னாளில்தான் நண்பர் பாலாஜியும் நட்பு அழைப்பு விடுத்திருந்தார். எல்லோருக்குமே இந்த முகநூல் தொடர்பிலில்லாத, தொடர்புகொள்ள முடியாத நண்பர்களை மீண்டும் தொடர்பு எல்லைக்குள் மீண்டும் கொண்டு வந்திருந்தாலும், பாலாஜியின் வருகை அவ்வளவு பற்றையும், பரவசத்தையுமெல்லாம் தந்துவிடவில்லை. நண்பர் அவ்வப்போது தனது மகளுடான புகைப்படங்களை பகிர்வார். நாமும் ப்ளூ லைக் போட்டு நகர்ந்துவிடுவது வழக்கம். பிறந்த நாள்களில் வாழ்த்துகள் போட்டு முறைகள் செய்வதும் வழக்கம். அவ்வளவுதான் அதற்கு பிறகான பழக்கம்.
அதனை தொடர்ந்து சமூக வலைத்தள பரிணாம வளர்ச்சியின்படி ஒரு நட்பு வட்டம் வாட்சப்பிலும் உருவாக்கப்பட்டது. ஒரு ஏழெட்டு நண்பர்கள் இணைந்திருந்த அந்த குழுவிற்கு அட்மினும் அவரே. தலைவன்தான் பெரும்பாலும் பிள்ளையார் சுழி போட்டு ஒவ்வொரு நாளையும் தொடங்கி வைத்துக்கொண்டிருந்ததும். அவர் புண்ணியத்தில்தான் பல ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட நண்பர்களின் முகங்களையும் காண கிடைத்தது, அதனால் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. மற்றவர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், ரெஜினா அங்கேயும் கலகலப்பாகவே இருந்தாள். நானும் முடிந்தவரை முயற்சி செய்தேன். ஆனால் அந்த சிற்சிலரிலும் சயின்டிஸ்ட், பேராசிரியர், தொழிலதிபர்கள் என ஆளுக்கொரு தகுதி கனத்தோடு இருந்ததால், அந்த கலகலப்பிற்கு ஈடுகொடுக்க அவர்களால் முடியவில்லை. அல்லது அதை அமெச்சூராக கருதினர். முடிவு? வந்தே பாரத்தை இழுத்துச் சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸை போல அன்னார் கொஞ்ச காலம் பணியாற்றினார். அதற்கும் ஒரு நாள் விபூதியடிக்கப்பட்டு அடுத்த ஆயுத பூஜை வரும் வரை ஒரு மூலையில் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்புறம் அந்த ரீயூனியன் போதையெல்லாம் முற்றிலும் தணிந்து, எல்லோரும் தங்களுடைய தினசரிகளில் மூழ்கிப்போனதில், மற்றவர்களைப் பற்றி யோசிக்கவெல்லாம் நேரம் கிடைத்திடவில்லை.
பிறகு, பல மாதங்கள் கழித்து நமது நண்பர், மிஸ்டர் பாலாஜி ஒரு நாள் மெஸ்ஸெஞ்சரில் ‘ஹாய் ப்ரோ!’ என்று கையசைத்தார். அவரிடம் பெரிதாய் பேச என்ன இருக்கிறது என்று உடனே நான் பதிலளிக்கவில்லை. விடாமல் நண்பர் வாட்சப்பிற்கும் வந்தார். தற்செயலாக அவருக்கு டபுள் ப்ளூ டிக் தெரியும் அளவிற்கு நான் பொறுப்பற்று அந்த சமயத்தில் நடந்துக் கொள்ள நேரிட்டதால் வேறு வழி? ‘ஹாய் நண்பா.. நலமா..’ என்று ஒரு மரியாதை நிமித்த விசாரிப்பை நானும் அனுப்பி வைக்க, ஆரம்பித்தது அஷ்டமத்து சனி!
‘ரொட்டேஷனுக்காக அவசரமாக ஒரு முப்பதாயிரம் தேவைப்படுகிறது, நீ கண்டிப்பாக தந்து உதவ வேண்டும்; நிச்சயம் இரண்டு நாட்களில் உனது வங்கிக்கணக்கில் செலுத்தி விடுவேன்’ என்று கைக்கூப்பி அவன் கேட்டதை அகக்கண்ணால் இந்த போதி தர்மரும் உணர்ந்து, உதவ நினைத்தாலும் முடியாத சூழல். ஏனென்றால் அது எனது மகன் பள்ளிக் கட்டணத்திற்காக மூன்று நான்கு மாதங்களாக சேர்த்து வைத்திருக்கும் பணம். இருந்தாலும் அவன் இப்படிப்பட்ட கோரிக்கையோடு என்னை அதுவரை அணுகியதேயில்லை வேறு. அதனால் சட்டென மறுக்கவும் முடியவில்லை. சங்கடமாக இருந்தாலும் என் நிலைமையை புரிய வைத்தேன். உடனே அதெல்லாம் பயப்பட வேண்டாம், சொன்ன தேதிக்குள் தந்துவிடுகிறேன் என்று உத்திரவாதம் கொடுத்தான். கொஞ்சம் பலத்த யோசனைக்கு பின் அனுப்பி வைத்தேன். கவினும் ஒருமுறை இவன் ஹாஸ்ப்பிடஸ், கல்விக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு தேவையான அறிவியல் உபகரணங்களை விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கூறியிருந்ததும் ஞாபகத்திற்கு வரவே, தொழில் செய்பவன் எப்படியும் கொடுத்துவிடுவான் என்ற நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் என்னை உதவி செய்ய வைத்தது.
அவன் தருவதாக கூறிய இரண்டு நாள் இப்போது சரியாக ஒரு மாதமாகிவிட்டது! நேற்று பையனுக்கு ஃபீஸ் கட்ட கடைசி நாள். பாலாஜி இப்போது தான் தர வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தாலும் வேறு ஏற்பாடு ஏதும் செய்திருப்பேன். ஆனால் இன்று நாளை என ஒவ்வொரு வாரமும் இழுத்தடித்துக் கொண்டிருந்தான். எனக்கு இரண்டாவது வாரத்திலேயே அவன் மீதான நம்பிக்கையை இழக்க தொடங்கிருந்தாலும், அவனுக்கு என்ன கஷ்டமோ, என்ன சூழ்நிலையோ என்ற பச்சாதாபமும் தோன்றியது. டெலிவரி செய்த இன்ஸ்டருமெண்ட் எதுக்கும் இன்னும் வர வேண்டிய தொகை இன்னும் கொடுக்கப்படாமல் இழுத்தடிப்பட்டிருக்கலாம், தொழில் நொடித்திருக்கலாம் என நானே என்னை சமாதானபடுத்திக்கொள்ள துவங்கினேன். கொடுத்தது தவறில்லை, ஆனால் முன்னெச்சரிக்கையாய் நான் ஃபீஸ் கட்ட ஏதாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என நானே எனது பொறுப்பின்மையை பற்றி குறைப்பட்டுக்கொண்டேன். என்ன செய்வதென அறியாது, அரசு பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது என்று தனியாக அமர்ந்து கொண்டு மனைவியை சம்பந்தமில்லாமல் திட்டிக்கொண்டிருந்தேன்.
இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்? என்ன மெசேஜ் அனுப்பினாலும் காலையிலிருந்து அவன் பதிலளிவில்லை. ஆகையால் நான்தான் இனி ரெடி பண்ண வேண்டும். நாளையாவது கட்டணத்தை கட்டிவிட வேண்டும் என்று நினைத்திருக்கும்போதுதான் கவினுடைய ஞாபகம் வந்தது.
கவின் ஓரளவு அவ்வப்போது தொடர்பில் இருந்துக்கொண்டிருப்பவன்தான். நேரடி தொடர்புகள் இல்லாவிடிலும் யாஹூ மெயில், ஆர்குட் என்று காலத்திற்கேற்ப பயணித்து இதோ இப்போது முகநூல் முதல் வாட்சப் வரை அந்த நட்பு எப்படியோ ஒரு வழியில் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அவனும் பாலாஜியும் ஒரே இடம் என்பதால், என்னை விட அவனுக்கு அவனுடைய சூழ்நிலை தெரிந்திருக்க கூடுமென இன்று மாலை தொடர்பு கொண்டேன். பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பிறகு பாலாஜி எப்படி இருக்கிறான், தொழிலெல்லாம் அவனுக்கு எப்படி போகிறது என்று கேட்டேன். அவனுக்கு பொறித்தட்டியவன் போல, “ஏதும் காசு குடுத்தியா?” என்று நேரிடியாவே கேட்டான். விபரம் சொன்னேன்.
‘ஸாரி டா க்ரூப் ல நீயும் இருந்தத மறந்தே போயிட்டேன், சொல்லிருந்தாவது நீயாவது தப்பிச்சிருப்ப’ என்று சொன்னது என்னை திடுக்கிட வைத்தது.
‘என்னடா சொல்றே..!’ என்று மேலும் அதிர்ச்சியாகி விசாரித்த போது,
‘எங்கிட்ட ஐம்பதாயிரம், ரெஜினாக்கிட்ட ஐம்பதாயிரம், அப்புறம் எங்க க்ளாஸ்மேட்ஸ் சதீஷ்கிட்ட அம்பதாயிரம், மகேஷ்கிட்ட எழுபதாயிரம்னு நிறைய பேர்ட்ட இப்டி வாங்கியிருக்காண்டா, இன்னும் யார் யார்லாம் இருக்காங்கன்னு தெரியல! சத்தியமா உன்னோட பேரு என் நெனப்புக்கே வரலடா, வந்திருந்தா உன்னையாவது காப்பாத்தியிருக்கலாம்..’ என்று கவின் சொல்லிக்கொண்டே போக என்னால் என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன். மூன்று நான்கு மாதங்கள் வயிற்றை கட்டி வாயைக்கட்டி குருவி சேர்ப்பது போல சேர்த்த காசது. ஏற்கனவே ஹோம் லோன், கிரெடிட் கார்டு லோன் என்று நான் ஒவ்வொன்றையும் இழுத்தடித்து போராடிக்கொண்டிருக்க, இப்போது யாரிடமாவது கடன் வாங்கி ஃபீஸ் கட்டினாலும் அதை எப்படி உடனே அடைப்பது என்ற கவலை என்னை மேலும் கவலை கொள்ள வைத்தது.
கவின் அனைவரிடத்திலும் நட்பு பாராட்டுபவன் என்றாலும் மிகவும் விபரமானவனும் கூட அதனால், “நீ எப்புர்றா ஏமாந்த?” என்று கேட்க, “அதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா டென்ஷன் தலைக்கு ஏறும்டா! நீயாவது பரவால்ல அவனை பத்தி முழுசா தெரிஞ்சிக்காம கொடுத்த, எனக்கு ஓரளவு தெரியும் ஆனா ரொம்ப வருசமா டச்லேயே அவன் இல்ல. அப்புறம் இப்பவும் அப்படியேவா இருக்க போறான்னு.. சட்டுன்னு உதவின்னு கேட்ட உடனே உன்ன போலவே நானும் கொடுத்துட்டேன்! அது கொரானா டைம் வேறடா! சேவிங்ஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சி, கையிலிருந்த காசே அவ்ளோதான். ரெண்டு நாள்னு சொன்னதால மினிமம் பேலன்ஸ் கூட வச்சிக்காம, மொத்தத்தையும் அவன் கேட்டதும் டிரான்ஸ்ஃபர் பண்ணினேன். ஆனா அவன் சொன்ன தேதிக்கு அனுப்பல, எனக்கும் இந்த கொரானா இஷ்யூஸ்லாம் ஓரளவு முடிஞ்சி, ரீஜாயினிங் டைம் வந்திட்டதாலே.. அப்படியே விட்டுட்டு நான் கத்தார் வந்திட்டேன். இருந்தாலும் அப்படியே விட்டுவிட மனசு வரல! கேக்கும்போதெல்லாம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லுவான். என்னதான் சம்பளம் வந்தாலும், அந்த ஏமாற்றத்த என்னால தாங்கிக்க முடியல! சில நேரம் அந்த ஃப்ரஸ்ட்ரேஷன் ஓவரா தலைக்கு ஏறி வேலை கூட சரியா செய்ய முடியாது! அப்பத்தான் முடிவு பண்ணினேன், வாங்காம விடவே கூடாதுன்னு! தொடர்ந்து காலும் மெசேஜும் பண்ணிக்கிட்டே இருந்தேன், அவனோட வொஃப்கிட்ட பேசினேன், விடாம ஃபாலோ பண்ணிக்கிட்டே இருந்தேன் அப்புறம் ஐயாயிரமும் பத்தாயிரமுமா ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு முறை போட்டு வுட்டான். அதிலேயே ரெண்டு வருஷம் போயிருச்சி! கடைசி பத்தாயிரம் மட்டும் பேலன்ஸ் இருந்தது, கேட்டா அதான் நீ ஃபாரின்ல சம்பாரிக்கிற இல்ல, இது கூட விட மாட்டியான்னு சமாளிக்க பாத்தான். ஆனா நான் விடல, எப்படியோ பேசி போராடி வாங்கிட்டென். அப்புறமும் வந்தான் போடா நாயேன்னு விரட்டிவிட்டுட்டேன். என்னதான் பண்றானோ தெரியல. அவங்க குடும்பத்துல எல்லோருமே வெல் செட்டில்டுதான். நீயும் ட்ரை பண்ணு, டென்ஷனாகி விட்றாத!’
எனக்கு பித்தம் தலைக்கேறுவது போல இருந்தது.
“ஏண்டா ரெஜினாக்கிட்ட எப்டி வாங்கினான்? அதுவும் அம்பதாயிரம்?” என்று கேட்க
“அவளும் நம்மள மாதிரிதான் கொடுத்து ஏமாந்திருக்கா.. உனக்கு முன்னாடி கொடுத்திருப்பான்னு நெனக்கிறேன்! ஆனா இன்னும் டீல்லதான் விட்டுட்டுதான் இருக்கான். இதுனால அவங்க ஹஸ்பனண்ட் வொஃப்க்குள்ளயும் கூட பிரச்சினையும் போல! அவ அனுப்பின ஸ்க்ரீன் ஷாட்லாம் அனுப்பவா? பாக்குறியா? ஷீ ஐஸ் க்ரைய்ங் டா!” என்று ஃபீல் பண்ணினான்.
“டேய் மச்சி, நான் சொல்றத வச்சி விட்றாத! உன் நிலைமை எனக்கு தெரியும், உன்ன போயி எப்டி ஏமாத்தினானுதான் தெரியல”
“டேய் ஃபேமிலி லேடியையே ஏமாத்தும்போது நம்மெல்லாம் எம்மாத்திரம்டா”
“அவ வொரி பண்றத பாத்திட்டு, அவனோட வொய்ஃப் நம்பர் கொடுத்தேன்.. ரெஜினா அவங்களோட வாட்சப் ஸ்டேட்டஸை பாத்திட்டு ஷாக்காயிட்டா!”
“ஏன் என்னாச்சி?”
“கழுத்து நிறைய நகைகளை போட்டுக்கிட்டு, டுடேன்னு மென்ஷன் பண்ணிருந்தாங்களாம்”
“அப்ப அவங்களுக்கும் இது மாதிரி பண்றதுல சம்மதம்தான் போல”
“இல்லடா, முன்ன சொன்ன மாதிரி அவங்க இவன் குடும்பம் எல்லோருமே வசதியானவங்கதான். இவன்தான் ஏன் இப்டி பண்றான்னு தெரியல!”
“ம்ம்”
“அப்புறம் பிரசாத்னு ஒரு ஃப்ரெண்ட் மும்பை ல வேலை பாக்குறான் அவன்கிட்ட ஒன் லாக் வரை சுருட்டிடான்டா, இதுவரை திருப்பி குடுக்கல! எல்லாருமே தயங்கி தயங்கிதான் ஒத்தவங்க இன்னொத்தவங்ககிட்ட இப்படி கேட்டு தெரிஞ்சிக்கிறோம்! இன்னும் எவ்ளோ பேர் இருக்காங்கன்னு தெரியல மச்சி, பட் நீ உட்றாத டா!” என்று அவன் கூற கூற எனக்கு நம்பிக்கையே போய்விட்டது. அவ்வளவுதானா என்று அவனுடைய வாட்ஸாப் மெசேஜை எல்லாம் பார்த்துக்கொண்டே யோசித்துக்கொண்டிருந்த போதுதான் மனைவியும் மகனும் வந்தது.
என்னுடைய ஆழ்ந்த யோசனை அந்த அமவுண்ட்டை பற்றிதான் இருக்குமென, என்ன எதுவும் தகவல் வந்ததா என அப்படி பேச்சு கொடுத்தாள். என்னால் மறைக்கவும் முடியவில்லை! விஷயங்களை சொன்னேன். எப்படியும் வாங்கிவிடுவேன் என உறுதி கூறினேன்.
“சரி, சாரு இப்ப ஃபீஸ்க்கு என்ன ஏற்பாடு பண்ணிருக்கீங்க?”
“பண்றேன் பண்றேன், நாளைக்கு ரெடி பண்ணிருவேன்”
“அப்புறம் என்ன யோசிச்சிட்டு இருக்க, தூங்கு!”
“அதில்ல, அவன் என்னைய ஏமாத்துனதும் மட்டுமில்லாம இன்செல்ட்டும் பண்ணிருக்காண்டி..”
“…!” புரியாமல் பார்த்தாள்
“ஆமாண்டி, எல்லார்ட்டையும் அம்பதாயிரம் ஒரு லச்சம்னு வாங்கிருக்கான்.. அதுவும் அதுவும் ஒரு பொம்பள புள்ளகிட்ட கூட ஜாஸ்தியா கேட்டிருக்கான்.. ஆனா எங்கிட்ட! எங்கிட்ட முப்பதாயிரம் மட்டும்ன்னா?” என்று அவளைப் பார்க்க, அவள் துடைப்பத்தை தேடிக்கொண்டிருந்தாள். அவள் சிரிப்பாள் என்று இந்த நேரத்தில் எதிர்பார்த்தது என் தப்புதான். ஃபீஸுக்கு என்ன செய்யலாம் என மறுபடியும் போனை நோண்ட ஆரம்பித்தேன்.