என்னுடைய கடவுள் – கவிதைகள்

குருவாதல்

குத்திய முள்
எனக்கொரு
சத்தியத்தை யறி
வித்திருக்கக் கூடும்.
அதற்காகப்
பாதையெங்கும் முட்களைப்
பரப்பி வைப்பது
பைத்தியக்காரத்தனம்,
வன்முறை.

***

தேகாத்ம புத்தி

பேனாதான் எழுதுகிறதென்றெண்ணி
அதைப் பற்றிப் பெருமைப்பட்டோம்
ஆனாலும் அஃதொரு கருவி மட்டும்தானென ஐயமற அறிந்தற்பால்
வீணான உபசாரமின்றி
விருப்பு வெறுப்புமின்றி – அதனைக்
கோணாமல் பேணுவோம்; கொண்டாட மாட்டோம்.

***

என்னுடைய கடவுள்

என்னுடைய கடவுள்
எதிர்த்துப் பேச மாட்டார்.
எவரோடும் என்றும் சண்டை போட மாட்டார்
கத்தி தேவையில்லை
கத்திப் பேசினாலே அதிர்ந்து போவார்.
அவரைக் கேலி பேசினால் புரியாது;
எப்போதாவது புரிந்தால்
அவரும் சேர்ந்து சிரிப்பார்.
போட்டதைச் சாப்பிடுவார்,
பொழுதுக்குத் தூங்கிடுவார்.
அவர் இரைந்தும் பேச மாட்டார்.
காரடியில் அரைபடுவார்;
குண்டு வீச்சில் சிதறிடுவார்.
இருக்கும்வரை
ஆயாவாய், வாட்ச்மேனாய்,
அர்ச்சகராய்,
ஆட்டோக்காரராய்,……
உலகோடு இசைந்திருப்பார்.

***

பிரார்த்தனை

‘ நான் ‘ கரைகிறேன்
‘கா’, ‘கா’ வென்று.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.