அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 7

This entry is part 7 of 8 in the series கணினி நிலாக்காலம்

முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்தப் பகுதி சற்று சீரியஸான ஒன்று. குறிப்பாக, மற்ற பகுதிகள், பயனாளர்களின், பயங்கள், தயக்கம் மற்றும் தவறான புரிதல்களைப் பற்றியது. ஆனால், இந்தப் பகுதியில் சொல்லப் போவதென்னவோ என்னுடைய பயம், தயக்கம் பற்றியது. இது போன்ற பயங்கள் மற்றும் தயக்கங்கள், இல்லாத கணினி ஆசாமியே இல்லை என்பது என் கருத்து. என்ன, பொது வெளியில் யாரும் ஒப்புக் கொள்வதில்லை.

எதற்காக என்னுடைய தனிப்பட்ட பயம் மற்றும் தயக்கத்தை, இந்தக் கட்டுரைத் தொடரில் சொல்ல வேண்டும்? ஒன்று, இதில் ஒரு மிகப் பெரிய வாழ்க்கைப் பாடம் எனக்குக் கிட்டியது. இரண்டு, இந்தக் கட்டுரைத் தொடரைப் படிக்கும், ஒரு சில புதிய கணினித்துறை ஆரம்ப ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இது உதவும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. மற்றபடி, என்னுடைய இந்நாளைய வெற்றியைத் தம்பட்டை அடித்துக் கொள்ள எழுதப்பட்ட கட்டுரை அல்ல. 

90 -களில், ஒரு பத்தாண்டுகள் நிரல்கள் எழுதுவதில் நிறைய திறமையை வளர்த்துக் கொண்டு விட்ட நிலையில், எல்லா நிரலர்களுக்கும் உண்டாகும் ஒரு தேக்க நிலை என்னுடைய வேலையிலும் இருந்தது உண்மை. என்னதான் நன்றாக நிரல்கள் எழுதினாலும், இதன் அடுத்த கட்டம் என்ன என்று மனதில் ஒரு இனம் புரியாத கவலை மற்றும் ஒரு எதிர்பார்ப்பு தோன்றுவது இயற்கை, இன்றுள்ளதைப் போல, மென்பொருள் துறை பெரிதாக வளர்ந்திருக்கவில்லை என்பது இன்னொரு சிக்கல். இதனால், 90-களில், அவ்வளவு வாய்ப்புகளும் இல்லை.

இந்தக் குழப்பமான பின்னணியில், நான் வேலை செய்த நிறுவனம், என்னை ஒரு பயிற்சிக்காக அனுப்பியது. இந்தப் பயிற்சிக்கு, அதிகம் ஆர்வமின்றிதான் சென்றேன். அங்கு சென்றபின், பயிற்சியை நடத்துபவர், உலகளவில் இத்துறையில் ஒரு நிபுணர் என்று தெரிய வந்தது. 

சரி, எவ்வகைப் பயிற்சி அது? இன்று, மிகச் சாதாரணமாக எல்லா வணிக நிறுவனங்களிலும் நடக்கும், ஒரு சிஸ்டம்ஸ் அனலிசிஸ் பற்றிய பயிற்சி. கணினிகள் சொன்னதைச் செய்யும் அதிவேகக் கருவிகள். அவை என்ன செய்ய வேண்டும் என்று விவரமாகச் சொல்வது ஒரு மனிதர்தான். இவ்வாறு சொல்லும் பொழுது, சில சமயங்களில், ஒரு முனையில், இடமா, வலமா என்று முன் செல்ல நாம் முடிவெடுப்பதைப் போல, கணினிகளும் முடிவெடுக்கின்றன. இவ்வகை முடிவுகளை எடுக்கச் சொல்வதும் ஒரு மனிதக் கட்டளைதான். உதாரணத்திற்கு, 20,000 ரூபாய்க்கு பொருளை வாங்குவோருக்கு எந்த சலுகையும் இல்லை, 20,001 முதல் 60,000 ரூபாய் வரை வாங்கும் வாடிக்கையாளருக்கு 2% தள்ளுபடி, 60,001 முதல் 100,000 ரூபாய் வரை வாங்கும் வாடிக்கையாளருக்கு 5% தள்ளுபடி, 100,001 -க்கு மேல் வாங்கும் வாடிக்கையாளருக்கு 8% தள்ளுபடி என்று ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு விவரப்பட்டியலில் (invoice) அத்தனைப் பொருட்களின் விலையையும் கணித்த பின்பு, இந்த முடிவை ஒரு மென்பொருள் எடுக்க வேண்டும். இதைப் போல சில சிக்கலில்லாத முடிவுகளிலிருந்து, மிக மிகச் சிக்கலான முடிவுகளையும் கணினி மென்பொருள்கள் வழக்கமாக அன்றும் இன்றும் செய்து வருகின்றன. 

மேலே சொன்ன விவரத்தை, வழக்கு தமிழில் நாம் எப்படிச் சொல்கிறோம்? “20,000 வரை தள்ளுபடி இல்லை, 60,000 வரை 2%, 100,000 வரை 5%, அதுக்கு மேல 8%”. இந்த விஷயம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் சொன்னால் புரியும், ஆனால், கணினிக்கு, மிகவும் துல்லியமற்ற ஒரு கட்டளை. ஆனால், ஒரு அனலிஸ்ட் கேட்டால், பயனாளர், இவ்வாறுதான் சொல்லுவார். அதை ஒரு பயனுள்ள சட்டமாக கணினி மென்பொருளுக்கு மாற்றுவது ஒரு அனலிஸ்டின் கடமை. 

இந்தக் கடமையை எப்படிச் செய்ய வேண்டும், அதற்காக எவ்வகை பொறிகள் இருக்கின்றன என்று இந்தப் பயிற்சியில் Tom Demarco என்ற நிபுணர் இரண்டு

நாட்களுக்கு, பல உதாரணங்களுடன் விளக்கினார். ஆரம்பத்தில், ஒட்டவில்லை என்றாலும், கருத்தரங்கு போகப் போக, எனக்குள் டாம் சொல்லும் கருத்துக்களின் முழு வீச்சும் புரிய ஆரம்பித்து, பிடிக்கவும் தொடங்கியது.

டாம் ஒரு அமெரிக்கர். அவரது பயிற்சி எனக்குப் பிடித்துப் போகவே, நான் அந்தப் பயிற்சியில் எழுதிய சில ஆவணங்களை அவர் கவனித்திருந்தார். ஒரு பயிற்சி இடைவேளையில், அவருடன் நடந்த ஒரு உரையாடல், என் தொழில் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.

நான்: டாம், உங்களது பயிற்சி மிகவும் நன்றாக உள்ளது. மிகவும் பயனுள்ள மென்பொருள் நுட்பங்களை அழகாக சொல்லித் தருகிறீர்கள். 

டாம்: விஷயத்திற்கு வாருங்கள்

நான்: சற்று தயக்கமாக இருந்தாலும் சொல்லி விடுகிறேன். கணினி மென்பொருளுக்கு specifications  எழுதுவது உங்களைப் போன்ற அமெரிக்கர்களுக்கு எளிது. என் தாய்மொழி ஆங்கிலம் அல்ல. என்னால், இதை வெற்றிகரமாகச் செய்ய முடியுமா என்று சந்தேகமாக உள்ளது.

டாம்: நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு! அமெரிக்கர்களான எங்களுக்குத்தான் இது மிகவும் கடினம்.

நான்: எப்படிச் சொல்லுகிறீர்கள்?

டாம்: உங்களது தாய்மொழி என்ன?

நான்: தமிழ்

டாம்: நான் இந்த வகுப்பிற்கு வெளியே பேசும் ஆங்கிலத்தில் ஒரு அழகு, அலங்காரம் தேவை என்று என் சமூகம் எதிர்பார்க்கிறது. அதே போல, நீங்கள் தமிழ் பேசும் பொழுதும், அந்த மொழி அனுபவம் உங்களை அலங்காரச் சொற்களைப் பயன்படுத்த வைக்கிறது. இதுவே உங்களது உறவுகள், நட்பு மற்றும் வாழ்க்கைக்குத் தேவை.

நான்: உண்மைதான்

டாம்: இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அலங்காரச் சொற்களைப் பயன்படுத்திப் பழகிய எங்களுக்கு, ஒரு மென்பொருள் Specifications என்று வரும்பொழுது தடுமாறுவோம். ஏனென்றால், மென்பொருளுக்கு அலங்காரம் தேவையில்லை, துல்லியம் தேவை. உதாரணத்திற்கு, “அழகான அந்தக் காலை நேரத்தில், என் அதிஷ்ட தேவதையாக மேக் கம்பெனியிலிருந்து 4 லட்சம் ரூபாய் ஆர்டர் வர பெரு மகிழ்ச்சி அடைந்தேன்” – இது நாவல் எழுத உதவும், ஆனால், கணினி மென்பொருளுக்கு என்ன தேவை? ”ஜூலை 7,1992, காலை 11 மணி, 14 நிமிடத்திற்கு, மேக் கம்பெனி 4 லட்சம் ரூபாய் ஆர்டர் வந்தது”. 

நான்: நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

டாம்: உங்கள் தாய்மொழி ஆங்கிலம் இல்லாதது ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம். என்ன சொல்ல வேண்டுமோ, அதை குறைந்த ஆங்கிலச் சொற்களோடு சொல்லி விடுகிறீர்கள். மொழி அலங்காரம் தேவையில்லாத இந்தத் துறைக்கு உங்களைப் போன்றவர்கள் மிகவும் தேவை. குறைந்த சொற்களில், துல்லியமாக ஒரு நிகழ்வைச் சொல்வது முக்கியம். 

நான்: இது மிகவும் வித்தியாசமான கருத்து

டாம்: பயப்படாமல், தயங்காமல், இந்தத் துறையில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு.

நான்: உங்களது அட்வைஸுக்கு நன்றி

எத்தனையோ படிப்பினைகள் இந்தத் துறையில் இருந்தாலும், இதுவே எனக்கு கிடைத்த 1990 -களின் மிகப் பெரிய பாடம். இதன் பின், உலகின், மிகப் பெரிய வங்கிகள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், வியாபாரங்கள், எல்லாவற்றிலும், பிற்காலத்தில் வெற்றி பெற மிகவும் உதவிய யோசனை.

மேற்குலகிற்கு வந்த பிறகு, இந்த அட்வைஸ் மிகவும் பயன்பட்டது. சுற்றி வளைக்காமல், என்ன தேவையோ, அதை மட்டுமே சொல்வது, பல வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கிறது. பல வாடிக்கையாளர்கள் சந்திப்புகளில், நான் பேச பல வாய்ப்புகளை இந்தத் துல்லிய மனப்போக்கு எனக்கு அளித்திருக்கிறது. ஒரு ப்ராஜக்டை நடத்திச் செல்லும் மேலாளராக வளர்ந்த பொழுதும், சில அலங்காரங்கள் தேவைப்பட்டாலும், இந்த நேரடித் துல்லியம் என்றும் எனக்கு கை கொடுத்து வந்துள்ளது. 

இன்றும், பலர் இத்துறையில் ஆங்கிலம் சரளமாக பேச வராததை ஒரு குறையாக நினைத்து, வாழ்நாள் முழுவதும் நிரலராகவே இருந்துவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். என் பார்வையில், அது தேவையில்லை. மற்ற துறைகளில், அலங்கார மொழி மிகவும் தேவையாக இருக்கலாம். ஆனால், ஒரு அனலிஸ்டாக (வியாபார, சிஸ்டம்ஸ், நிதி) இருக்க விரும்பும் எவரும், இந்த முக்கிய அட்வைஸை எடுத்துக் கொண்டால் வெற்றி பெறலாம்.

Series Navigation<< அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 8 >>

One Reply to “அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 7”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.