அதிரியன் நினைவுகள் -25

This entry is part 24 of 25 in the series அதிரியன் நினைவுகள்

இன்றைகென்றில்லை நீண்ட காலமாகவே, தத்துவஞானிகளின்  தெய்வீக இயல்புகள் குறித்த அர்த்தமற்ற கருத்துக்களைக் காட்டிலும், நம்முடைய கடவுள்களின் காதல்கள் மற்றும் பூசல்கள் பற்றிய கதைகளை விரும்பியிருக்கிறேன். ஜூபிடரின் மண்ணுலக ஜீவனாக இருப்பதற்கு நான் சம்மதித்திருந்தேன், அதிலும் அவர் கடவுள் என்பதைக்காட்டிலும் மனிதப்பிறவி; இவ்வுலகின் ஆதாரம்; நீதியின் அவதாரம்; முறைப்படி அமைந்தவர்; கேனிமீடிஸ்(Ganymedes) மற்றும் ஈரோப்பாவின்(Europa) காதலர்; மனைவி ஜுனோ(Juno) வெறுத்தொதுக்கும் கணவர். இருள் நீங்கிய  வெளிச்சத்தின்கீழ்  அனைத்தையும் கடைவிரிக்கிற மனநிலையில் அன்றைய தினம் இருந்தேன். எனது பட்டமகிஷியை இந்த ஜுனோவோடு ஒப்பிட்டேன், அந்த வகையில் ஒருவித மரியாதை நிமித்தம் ஆர்கோஸ்(Argos) நகருக்கு அண்மையில் சென்றபோது விலயுயர்ந்த கற்கள் பதித்த தங்க மயிலொன்றை அன்புப்பரிசாக வழங்கினேன். என்னை நேசிக்காத இப்பெண்மணியை என்னிடமிருந்து விலக்கியிருக்கமுடியும், என்ன செய்வது நான் ஒரு சராசரி குடிமகனாக இருப்பின் தயக்கமின்றி அதனைச் செய்திருக்க முடியும். என்மனைவியால் எனக்குப் பிரச்சினகள் அதிகமில்லை, அவளுடைய எந்தவொரு நடத்தையும் பொதுவெளியில் அவமானத்தை தந்ததென சொல்லமுடியாது. தவிர அவள் இளம் வயதினள், நான் அவளிடமிருந்து ஒதுங்கியிருந்தது மனதைப் பாதித்திருக்கக் கூடும். அவளுடைய தந்தைவழிச் சகோதரர், முன்பு நான் பட்டிருந்த கடன்களுக்காக என்மீது கோபப்பட்டதுண்டு, அதுபோல என்னுடைய தற்போதைய நடத்தைகள் அவளைப் புண்படுத்தியிருக்கக்கூடும். இளம்பிராயத்து பைபயன் மீது நான் கொண்டிருக்கும் மோகம் நீடிக்கக் கூடியது என்ற உண்மையை அவள் உணர்ந்திருந்தாள், இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந்துகொண்டாள். காதல் உணர்வற்ற பெண்கள் பலரையும்போல, அவளும் அதன் சக்தியைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தாள்; இவ்விஷயத்தில் அவளிடமிருந்த அறியாமை, « பரிவு, பொறாமை » இருகுணங்களையும் அவளிடமிருந்து விலக்கியிருந்தது. அவளுடைய பட்டங்கள் அல்லது பாதுகாப்பு இவைகளுக்கு ஆபத்தென்றால் மட்டுமே அவள் கவலைப்படுகிறவள், இங்கே அப்படிப்பட்ட பிரச்சனை எதுவுமில்லை

கடந்த காலத்தில், கணத்தில் என்னை   நாட்டம்கொள்ள வைத்த அவளுடைய பதின்வயது  கவர்ச்சிகளில் எதுவும் அவளிடம் தற்போதில்லை.  இயற்கைக்குமாறாக, மூப்பினைச் சற்று முன்னதாக அடைந்ததைப்போன்றுள்ள  இந்த ஸ்பானிய பெண்மணி எதிலும் தீவிரம், கண்டிப்பு என்றிருந்தாள். தமக்கென்று ஒரு காதலனைக் கைப்பிடிக்க முடியாமற்போனதற்கு, மனிதர்களை புறக்கணிக்கும் அவளுடைய குணமொரு காரணம், அவளுடைய அக்குணத்திற்கு நான் கடன்பட்டுள்ளேன்;   வயதில் முதிர்ந்த உயர்குடிப் பெண்மணிபோல, ஏறக்குறைய விதவைப்பெண்கள்போல     கண்ணியத்துடன் அவள் அணிந்த முக்காடு எனக்கு மகிழ்ச்சியைத்  தந்தது. மாறாக உரோமானிய நாணயங்களில் பேரரசியின் உருவத்தை ஒருபக்கமும் மறுபக்கம் உயர்குடிபெண்மணிக்குரிய தன்னடக்கத்தையும்   அமைதியையும் மாற்றி மாற்றி பொறிக்க விரும்பினேன். எலூசினியன் பண்டிகை நடந்துமுடிந்த இரவன்று தலைமை பூசாரி பெண்மணி ஒருத்திக்கும்  இயரொஃபண்ட்(hierophant)18 ஒருவருக்கும் இடையே நடந்த  கற்பனையான திருமணத்தைப் பற்றி எப்போதாவது நினைத்துப் பார்ப்பதுண்டு,  அம்மணம் ஒரு  பந்தத்திற்கோ உறவுக்கோ நடத்தப்பட்டதல்ல, ஒருவகைச் சடங்கு, புனிதச்சடங்கு அல்லது அதுபோன்ற ஒன்று.

உரோம் நகரில், கொண்டாட்டங்களுக்குப் பிறகு இரவு மொட்டை மாடியில் இருந்தவண்ணம், மூட்டப்பட்டத் தீ பற்றிஎரிவதைப் பார்த்தேன். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தீ என்கிறபோதும், அத்தீயும் நீரோ மூட்டிய நெருப்புக்கு நிககரானது என்பதோடு, அதைப்போலவே பயங்கரமானதொரு தோற்றத்தையும் தந்தது. இந்நகரம் என்னைப்பொறுத்தவரை ஒரு புடக்குகை அதாவது –  உலோகங்களை உருக்க உதவும் மட்கலம்,  உலைக்களமென்றும் கூறமுடியும் எனவே, இங்கு நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு, சம்மட்டி, பட்டரைக்கல் எல்லாமுண்டு, சாட்சியங்களாக இப்பூமியில்  அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களும், திரும்ப எழுதப்படும் வரலாறும் இருக்கின்றன.  உலகில் குழப்பத்தோடும் கொந்தளிப்போடும் மனிதர் வாழ்ந்த பகுதியென எதிர்காலத்தில் பேசப்படவுள்ள நகரம். திராய் நகரத்தை எரித்த தீக்குத் தப்பித்த  ஒருவன் தன்னுனுடைய தந்தை, இளம்வயது மகன்,  லார்ஸ்(Lares) என்கிற குலதெய்வங்கள் ஆகியோரை உடன் அழைத்துக்கொண்டு உரோம் நகருக்கு வந்த அன்றும் இப்ப்படித்தான் தீமூட்டப்பட்டு இருந்தது, அதாவது திராய் நகரில் ஆரம்பித்த தீயும் அவனோடுபுறப்பட்டு அன்றிரவு உரோமை அடைந்ததென பொருள்கொள்ளவேண்டும். அதுபோன்ற நாட்களில் ஒருவித அதீதபயத்துடன் அக்கினியின் எதிர்காலத் தாண்டவம் எப்படியிருக்குமோ  என்று கற்பனை செய்ததுண்டு. கோடிக்கணக்கில் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால உயிர்களும்; பழைய கட்டிடங்களைப் புதுப்பித்து நிர்மாணித்தவையும், இனி இவைகளிடத்தில் தோன்றவிருக்கும் புதிய கட்டிடங்களும், காலவெளியில் அலைகள்போல ஒன்றன்பினொன்றாக தொடர்பவைகளாக எனக்குப் படுகின்றன;  அன்றிரவு என் காலடியில் அதுபோன்ற பேரலைகள் உடையக் கண்டது உண்மையில் ஒரு தற்செயல் நிகழ்வு. இதைச்சொல்கிற நேரத்தில், ஒருசில கணங்கள், பேரரசின் அடையாளம் என்கிறபோதும் வெகு அரிதாக நான் அணியச் சம்மதிக்கிற  ஊதா நிற வஸ்திரத்தை, எனது பிரியத்துகந்த ஆன்மாவாக மாறியுள்ள ஜீவனின் தோள்களில் சாற்றி, பரவசமுற்றேன். வெளிர் பொன்வண்ணக் கழுத்தொன்றில் இசைவற்ற அடர்சிவப்புநிற உத்தரீயத்தைக் கழுத்திற்  போடுவது, ஒருவகையில் எனக்கு உகந்த செயல், ஏனெனில்  இதன் மூலம் நிச்சயத்தன்மையும், தெளிவும் அற்ற தூலப்பொருட்களான  எனது சந்தோஷத்திற்கும், அதிர்ஷ்ட்டத்திற்கும் நெருக்கடி கொடுத்து, அவற்றை இப்புவிக்குரிய வடிவத்தில் உருமாறச் செய்ததோடு,  அந்த உடலுக்கு வேண்டிய வெப்பத்திற்கும், உரிய எடைக்கும் எனது இச்செயல்  உத்தரவாதத்தை அளித்தது. 

அண்மையில் பாலத்தின் (Palatine) அரண்மனையை திரும்பக் கட்டியிருந்தேன், சிறிதுகாலம் அங்கே நான் வசிக்கவும் நேர்ந்தது,  சுவர்கள் வலுவானவை என்கிறபோதும், மரக்கலமொன்றில் இருப்பதுபோன்ற அனுபவத்தை தந்திருக்கிறது. அரண்மணையில், இரவை அனுமதிப்பதற்கென்று விலக்கும் திரைகள், மரக்கலத்தின் பின்பகுதியில்கட்டப்பட்டக் கொடிகளையும், மனிதர்கள் போடும் சப்தம் பாய்மரக் கித்தான்கள், கயிறுகளில் மோதும் காற்றின் ஒசையையும் நினைவூட்டும். தூரத்தில் மெலிதான இருட்டில் பிரம்மாண்டமான பாறைபோல  ஏதோவொரு தோற்றம், அச்சமயத்தில் டைபர் நதிக்கரையில்  எனது கல்லறையை அமைத்துகொள்வதென திட்டமிட்டு அதற்கான   அடித்தளங்கள்,மிகப்பெரிய அளவில் எழும்பத் தொடங்கியிருந்தன என்பதால் இருட்டில் தெரிந்த பாறையின் பிரமாண்டம்,  அச்சத்தையோ, கவலையையோ தரவில்லை, தவிர குறுகிய கால மனிதவாழ்க்கை பற்றிய சிந்தனையிலும் என்னை ஆழ்த்தவில்லை .

படிப்படியாக அவனுடயை பொலிவில் மாற்றம். வடிவம், நேர்த்தியென்று  விடலைப் பருவத்தியின் உச்சத்தைநோக்கிய அவனுடைய வளர்ச்சியில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக காலமாற்றம் தனது தடத்தைப் பதித்திருந்தது. வேட்டையின்போது எஜமானர்கள், வழிகாட்டிகள் இருதரப்பினருக்கும், குரலை உயர்த்தி கட்டளையிட பழகிக்கொண்டதில்;  பாதங்களை எட்டிவைத்து ஓடத்தொடங்கியதில்; குதிரை ஏற்றத்தைத் தேர்ந்த அனுபவசாலிபோல கையாண்ட அவனுடைய கால்களில்;  கிளோடியோபோலிசில், ஹோமரின் நீண்ட கவிதைப்பகுதிகளை மனப்பாடமாக கற்ற அந்த இளஞனே தற்போது, இன்பமூட்டுகிற,  அறிவார்ந்த கவிதையிலும்,  பிளாட்டோவின்  பத்திகளிலும் அதீத ஈடுபாடுகாட்டுகிறான் என்கிற உண்மையில், அக்காலமாற்றம் பதித்திருந்த தடங்களுக்கு உதாரணங்கள் தெரிந்தன. தவிர, இதுநாள்வரை இந்த பதின்வயது இளைஞன் ஒரு மேய்ப்பன், தற்போது ஓர் அரசகுடும்ப இளவரசன். முன்பெல்லாம் நிறுத்தங்களில் குதிரையிலிருந்து ஆர்வத்துடன் கீழேகுதித்து உள்ளங் கைகளினால் ஊற்றுநீரை அள்ளி எனக்கு வழங்குவான், அச்சிறுவயது இளைஞன்  தற்போதில்லை, இக்கொடையாளனுக்குத் தான் அன்பளிப்பாக வழங்கும் பொருள் எத்தகைய மதிப்புடையதென்பது தெரிந்திருந்தது. லூசியஸ் பிரதேசத்திற்குள் அடங்கிய டஸ்க்கனியில், வேட்டைக்கு ஏற்பாடு செய்திருந்தோம், அச்சமயம் என்னுடைய பிரியத்திற்குரிய வாலிபனின்  குறைகாண முடியாத முகத்தை,  வருத்தமும் பிரச்சனைகளுமுடைய அரசாங்க உயர்மட்ட முகங்களுக்கிடையிலும், கீழைத்தேய கூர்மையான முகச்சாயல் உள்ள்வர்களுக்கிடையிலும், காட்டுமிராண்டித்தனமான வேட்டைக்காரர்களின் தடித்த முகவாய்களோடும் நிறுத்தியதோடன்றி, கடினமான சினேகிதன் பாத்திரத்தையும் ஏற்குமாறு பணித்தேன். உரோம் நகரில் இந்த இளம் ஜீவனுக்கு எதிராக சூழ்ச்சிவலைகள் பின்னப்பட்டன, இளைஞனின் செல்வாக்கை அபகரிக்க அல்லது அவனிடத்தில் வேறொன்றை இட்டுநிரப்ப சத்தமின்றி வேலைகள் நடந்தன. இப்பதினெட்டு வயது இளைஞன், சிந்தனையைச் சிதறவிடாதவன், விளைவாக எவ்விஷயத்திலும் சார்பற்றிருக்கும் சக்தியை பெற்றிருந்தான், அறிவுஜீவிகளை பொறாமை கொள்ளவைத்த ஒர் ஆற்றல். ஆனால் இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்த அல்லது புறக்கணிக்க அவனுக்கு முடிந்ததது என்பதை அவனுடைய அழகியவாயின் உதட்டுமடிப்பு வெளிப்படுத்தியது, அத்னைச் சிற்பிகளும் கவனித்திருந்தனர்.

இத்தகைய தருணத்தில் ஒழுக்கவாதிகளுக்கு என்னை வெற்றிகொள்ள ஓர் எளிதான வாய்ப்பு கிடைத்தது. நான் படும் இன்னல்களுக்கு, என்னுடைய மிதமிஞ்சியபோக்கும், நெறிமுறைகளில் நான் இழைத்த தவறுகளும் காரணம் என்பது என்னை விமர்சிக்கும் மனிதர்களின் குற்றசாட்டு. ஆனால் எனக்கோ நெறிமுறைகளில்தவறுதல், மிதமிஞ்சியபோக்கு என்பதெல்லாம்  கடினமான விஷயங்கள், அத்தகைய சிரம்ங்கள், அவர்கள் கருத்திற்கு  முரண்படும் விஷயத்திலும் இருந்தன. எனது குற்றத்தை, அப்படியொன்று உண்டெனில், கூடுதல் குறைவின்றி திரும்ப பரிசீலிக்க விருப்பம். இக்காலத்தில், தற்கொலை என்பது அடிக்கடி நடக்கும் சம்பவம், அதிலும் இருபது வயதில் இறப்பது பரவலாக நிகழ்கிறது. மாறாக ஆண்ட்டினஸின் திடீர் மரணம் என் தனிப்பட்ட ஒருவனுக்கு நேர்ந்த  பெருந்துயரம். நான் துய்த்த மிதமிஞ்சிய இன்பமும், எல்லைகடந்த அனுபவங்களும், பேரிடரிலிருந்து பிரிக்க இயலாதவை என்கிறார்கள், ஒருவேளை இவற்றை எனக்கும் என் தோழனுக்கும் மறுக்க முடிந்திருந்தால் நிகழ்ந்த அபாயத்தை தவிர்த்திருக்க முடியும். எனது மனவுறுத்தல் நாளடைவில்  கசப்பானதொரு  உடைமையாக, இறுதியில் அவனுடைய விதிக்கும், ஒரு சோக எஜமானாக இருந்திருக்கிறேன் என்பதை உறுதிபடுத்துகின்ற வகையில் வடிவெடுத்தது. ஆனால், நாம் நேசிக்கும்  உயிர் எனப் பார்ப்பதைக் கடந்து இப்பிரச்சனையில் அழகான இளைஞனின் விருப்பத்தையும், முடிவுகளுக்கான  அவனுடைய நியாயத்தையும் கணக்கிற் கொள்ளவேண்டும் என்பதை நான் மறந்தவனில்லை. தவறுகள் அனைத்திற்கும் பொறுப்பேற்றுக்கொண்டு, இந்த இளம் உருவத்தை மெழுகுச் சிலையாகக் கற்பனையில்  உருமாற்றி,  பின்னர் உடைக்கவும் செய்தேன். அவனுடைய புறப்பாடு என்கிற தனித்துவமான தலைசிறந்த படைப்பை சிறுமை படுத்த எனக்கு உரிமை இல்லை, இச்சிறுவனின் மரணத்திற்கென்று ஒரு வெகுமதி இருக்கிறது, அந்த வெகுமதிக்குரியவன் அவன் மட்டுமே. 

என்னுடைய காதல்தேர்வைத் தீர்மானித்தது உடலிச்சையைக் குறிவைத்த சராசரி ஆசைகள் என்கிறபோது, இவற்றை நான் குறை கூறப்போவதில்லை என்பது சொல்லாமலே விளங்கும். இதுபோன்ற வேட்கைகள் அவ்வப்போது என்வாழ்வில் குறுக்கிட்டுள்ளன; பழகிப்போன இம்மாதிரியான போதைக்கு கொடுத்தவிலை அப்படியொன்றும் பெரிதுமல்ல, குறைந்தபட்ச வாக்குறுதிகள், கொஞ்சம் பொய்கள், கொஞ்சம் சங்கடங்கள், அவ்வளவுதான். லூசியஸுடன்(Lucius) எனக்கேற்பட்ட சுருக்கமான காதலுறவு ஒருசில பைத்தியக்காரத்தனமான செயல்களில் தள்ளியது என்கிறபோதும் அவற்றைச் சரிசெய்ய என்னால் முடிந்தது. அதுபோன்ற காரியத்தை இந்த உச்சக்கட்ட அன்பிலும் கையாள முடியும், குறுக்கீடென்று எதுவுமில்லை, மாறாக ஏதாவதொன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டுமெனில், பிறவற்றிலிருந்து மாறுபட்ட அதன் தனித்துவப் பண்பைச் சொல்லமுடியும். விடமுடியாமற் பழகிக்கொண்ட அவ்வேட்கையே இப்படியொரு இழிவான அதேவேளையில் சேதம் ஏதுமற்ற முடிவை நோக்கி எங்களை அழைத்துபோயிருக்கவேண்டும், வாழ்க்கை நமக்களிக்கும் அலுப்பையும் தேய்மானத்தையும் மறுக்காத எந்தவொரு மனிதனுக்கும் இது நிகழக்கூடியது. ஒழுக்கசீலர்கள் விரும்புவதுபோல வேட்கை நட்பாக மாறும் போக்கையும் அல்லது அதுவே எங்கும் நடப்பதுபோல அசிரத்தையாக மாறும் போக்கையும் நான் கவனித்திருக்கவேண்டும். எங்கள் பந்தம் என்னிடத்தில் செல்வாக்கு பெறவிருந்த நேரத்தில். இளம் ஜீவன் என்னிடமிருந்து விலகிக்கொடிருக்க வேண்டும்; அங்கனம் நடந்திருப்பின், பிற வழமையான இன்பக்கூறுகள் அல்லது அவையே வேறுவகையான வடிவங்களின்கீழ் அவனுடைய வாழ்க்கையில் இடம்பெற நேர்ந்திருக்கும்; சிறந்ததுமில்லை மோசமானதுமில்லை என்கிறவகை திருமணங்கள் உலகில் எத்தனையோ, அந்தவகை திருமணமொன்று அவனுடைய எதிர்காலத்திலும் வாய்த்திருக்கும், மாகாண ஆட்சி நிர்வாகத்தில் ஒரு பதவியை பெற்றிருப்பான், அப்பதவியினால் பித்தினிய கிராமப் புறங்களை  அவனால் நிர்வகிக்க முடிந்திருக்கும்.  மேற்கண்டவைகளுக்குச் சாத்தியமில்லை என்கிற கட்டத்தில்,  இருக்கவே இருக்கிறது இரண்டாம்தர ஊழியனாக அரசவையில் சேவகம்பார்க்கும் சோம்பல் வாழ்க்கை; மேற்குறிப்பிட்ட அனைத்திலும் மிக மோசமானது, பெரும்பாலானோர் விருப்பத்திற்கு உட்படாத « நம்பகமானவர் » அல்லது  « பரத்தமைத் தரகர் » தொழில்களொன்றில் கவனத்தைச் செலுத்துதல். கெட்டதை தவிர்கின்ற முயற்சி ஒருபக்கம் இருப்பினும்,  வாழ்க்கை என்பதே எதிர்பாராதது என்பதால் நல்லதோ  கெட்டதோ எது நடந்தாலும், நன்மைக்கே என ஏற்பதுதான், நான் புரிந்துகொண்ட வகையில் விவேகத்திற்கான பொருள். இதில் பிரச்சினை என்னவெனில், பையனும், நானும் இருவருமே விவேகிகளாக இருந்ததில்லை.

என்னைக் கடவுளாக உணர  ஆரம்பித்தது  ஆண்ட்டினஸ் வருகைக்கு முன்பே. நான் மயங்கிவிழவில்லை, அந்த அளவிற்கு, வெற்றி அதற்கான வாய்ப்புகளை பன்மடங்காகப் பெருக்கியிருந்தது. எங்களுடைய இருத்தலை ஒலிம்பியன் விழாவாக என்னுடன் வந்த கவிஞர்களும் இசைக்கலைஞர்களும்  கொண்டாட நினைத்தபோது பருவகாலங்களும் ஒத்துழைத்தன. நாங்கள் கார்த்தேஜ்(Carthage)க்கு வந்த தினம், ஐந்தாண்டுகளாக அங்கு நிலவிய வறட்சி முடிவுக்கு வந்திருந்தது. அங்கிருந்த மனிதர் கூட்டம், இறைவன் திருவருளை அவர்களுக்க விநியோகிக்க  விண்ணுலகத்திலிருந்து கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதனாக என்னைக் கருதி மழையில் நனைத்தவண்ணம் சந்தோஷத்துடன் என்னை வரவேற்றார்கள்.அதன் பின்னர் ஆப்ரிக்காவுக்காக நடந்த பொதுமராமத்து கட்டுமான பணிக்கு விண்ணுலகத்தின் கருணையைக் தாராளமாக பகிர்ந்துகொள்ள விரும்பியதுபோல வேலைகள் நடந்தன. சிலவருடங்களுக்குமுன்பு சார்தீனியாவில் சிறிது நின்று போக வேண்டியிருந்தது. புயல்மழை காரணமாக ஒரு விவசாயியின் குடிசையில் பாதுகாப்பிற்காக ஒதுங்கினோம். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த விவசாயி சூறை மீன்துண்டுகள் சிலவற்றை நெருப்பில் வாட்டியபோது ஆண்ட்டினஸ் அவருக்கு உதவிசெய்தான். எனக்கு அன்றையதினம் பிலிமோன்(Philemon) குடிலுக்கு ஜீயுஸ்(Zeus) கடவுள், ஒலிம்பியன் கடவுள் எர்மெஸ்(Hermes)19 உடன் சென்றகாட்சி மனதில் ஓடியது. என்னுடைய இளைஞன் படுக்கைக்கு மேல் கால்களை மடித்துப் போட்டுக்கொண்டு மிதியடி வார்களை அவிழ்ப்பதைப் பார்க்கிறபோது  எர்மெஸ்(Hermes)ஐ பார்ப்பது போலிருந்தது; அதுபோல பாக்கஸ் (Bachhus) தெய்வமே எனக்காக திராட்சைகளை சேகரித்து, பின்னர் அதை மதுவாக்கி, வழங்குவதற்கு முன்பு, கோப்பையை ருசிபார்ப்பதுபோல ஒரு காட்சி; அடுத்து வில்லின் நாணேற்றி அதுகாரணமாக விறைத்திருக்கும் விரல்களை ‘எரோஸ்'(Eros) விரல்களாகக் கண்டேன். இதுபோன்ற பெருமைக்குறிய, கற்பனையில் நிகழும் உருமாற்றங்களால், கண்முன்னே இருக்கிற நிஜமானுடம் சம்பந்தப்பட்ட சம்பவங்களை நான் மறக்க நேர்ந்துள்ளது, உதாரணத்திற்கு இளைஞன் இலத்தீன்மொழியை கற்க எடுத்துக்கொண்ட வீண் முயற்சி ; பொறியாளர் டெக்ரியானஸிடம் (Decriyanus) தனக்கு கணக்குப் பாடம் போதிக்க வேண்டுமென இறைஞ்சி பின்னர் அவன் கைவிட்டது ஆகியவை, சிறிய அளவில் அவனைப்பற்றி குறைகூறினால் போதும் முகத்தை ‘உம்’ என்று வைத்துக்கொண்டு மரக்கலத்தின் முன்பகுதிக்குச்சென்று கடல்நீரை வேடிக்கைப் பார்ப்பது ஆரம்பித்துவிடுவான்.

ஆப்பிரிக்க பகுதியில் கடுமையான ஜூலைமாத வெயிற்காலத்தில் மேற்கொண்ட பயணம் லாம்பசிஸ்(Lambaesis) பகுதியில்  புதிதாக உருவாக்கிய  இராணுவ முகாமில் முடிவுக்கு வந்ததது; என் உயிர்த் தோழன் இராணுவக் கவசத்தையும், இராணுவ அங்கியையும் மகிழ்ச்சியுடன் அணிந்தான்; நான் ஒருசிலநாட்கள் ஆடைகளைந்த செவ்வாய் கோள்போல, தலைக்கவசம் மட்டுமே அணிந்து முகாமின் பயிற்சிகளில் கலந்துகொண்டேன், உடல் வலிமைமிக்க ஹெராக்கிள்ஸ் (Heracles) மனதில் எழுப்பிய பரவசத்தில் இளமை தன்வீரியம் குறையாது இன்னமும் இருப்பதைப்போன்ற உணர்வுக்கு ஆளானேன். இங்கு நான் வருவதற்கு முன்பாக வெயிலின் கடுமையைப் பொருட்படுத்தாது இராணுவத்தின் வசதிக்காக நிலத்தைச்  சமப்படுத்தும் வேலைகள் நடந்தேறின. இராணுவம் அல்லாத பிற செயல்பாடுகளில் எப்படி குறைகளில்லையோ, அதுபோலவே இராணுவ விவகாரங்களும் இறை  சக்தியால் குறையின்றி  நடந்தன,  பலனாக ஓட்டப் பயிற்சி நேரத்தில்  வீரர்களை மறுமுறையும் தடையைத் தாண்டச் செய்யவோ,  அல்லது குதிரைவீரர் ஒருவரை தன்னுடைய பாய்ச்சலைத் திரும்பச் செய்யவோ நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியம் எழவில்லை;  இவற்றால் பயிற்சிநேரங்களின் பெருமையை  அல்லது  படைப்பிரிவுகளுக்கிடையே  நிலவிய வலிமைச் சமநிலையின் நேர்த்தியை குலைக்கின்ற வகையில் எதுவும் நிகழவில்லை. காடும் கரம்புமான வெளியொன்றில் தாக்குதல் ஒத்திகையின் பொருட்டு கூட்டமாக ஒரு சில குதிரைகளை ஓடவிட்டதில் ஆபத்திருப்பதை உணர்ந்திருந்தேன், பாமரக் கண்ணுக்குப் புலனாகாத அந்த ஒரேஒரு தவறை மட்டும் எனது இராணுவ அதிகாரிகளுக்குச் சுட்டிக் காட்டவேண்டியிருந்தது.  எனது தலைமை அலுவலர் கொர்னேலியானஸ் பணிகள் அனைத்தும் இங்கே திருப்தியாக இருந்தன. எனது கைகளை முத்தமிடுவதற்காக இங்கு நிர்மாணித்திருந்த அவையை ஒட்டி  பொதி சுமக்கும் விலங்குகளுடன் ஆண்களும்,  குழந்தைகளுடன் பெண் மிலேச்சர்களும்,  கூடியிருந்தனர், இக் கீழ்ப்படிதல் அடிமைத்தனமானது அல்ல; நான் வகுத்த பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன ; இதெற்கென பிரத்தியேக செலவுகள் ஏதுமில்லை, அதேசமயம் அனைத்துப் பிரச்சினைகளையும் கவனத்திற்கொண்டு எடுத்த நடவடிக்கை. அர்ரியன்(Arrien) மூலமாக தந்திரோபாயங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பந்தத்தை உடலைப்போல கச்சிதமாகப் படைக்கும் எண்ணம் இருந்தது. 

ஏதன்ஸ் நகரில், ஒலிம்ப்பியன் அர்ப்பணிப்பு முடிந்து மூன்றுமாதங்கள் ஆகியிருந்த நிலையில், அந்நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யபட்ட விழாக்கள் உரோமானிய விழக்களை நினைவூட்டும் வகையில் கோலாகலமாக நடந்தன.ஆனால் உரோம் நகரில் நடைபெற்ற விழா கீழே பூமியில் எனில், ஏதன்ஸ் நகரக் கொண்டாட்டங்கள் மேலே ஆகாயத்தில் நட்டநடுவானில்வைத்து கொண்டாடப்பட்டதென சொல்லவேண்டும். இலையுதிர்காலம், பொன்னிற பிற்பகல், ஜீயுஸ் கடவுளின் பிரமாண்ட உயரத்தை கருத்தில் கொண்டு கட்டியதுபோலிருந்த ஒரு முகமண்டபத்தின் கீழ் நின்றிருந்தேன்; இம்முகப்பு ஒரு பளிங்கு கோபுரத்திற்குச் சொந்தமானது அதாவது எங்கு  ஊழிவெள்ளம் பலவீனப்பட்டு மெலிந்து வெண்மேகம்போல  காற்றில் மிதந்துபோனதை, டியூக்கோலியன்(Deucalion)20 காணநேர்ந்ததோ அந்த இடத்தில் கட்டப்பட்ட கோபுரம்; சடங்கைமுன்னிட்டு நான் உடுத்தியிருந்த பிரத்தியேக ஆடை,  வெகு அருகாமையிலிருந்த ஹைமெட்(Hymette) மலைத்தொடரின் மாலைவேளைக்கு இணக்கமாக இருப்பதைபோல உணர்ந்தேன். தொடக்கவுரை ஆற்றும் பொறுப்பைக் கவிஞர் பிலிமோனிடம் ஒப்படைத்திருந்தேன். அத்தருணத்தில்தான் « யூர்கெட்ஸ் (Euergetes) » « ஒலிம்பியன்(Olympian) », « எபிபானியஸ்(Epiphanios) », « அனைத்திலும் தேர்ந்தவன் » என்று வரிசையாக  தெய்வத்தன்மை வாய்ந்த பட்டப்பெயர்களை கிரேக்கம் எனக்கு வழங்கி அழகு பார்த்தது, அவற்றை எனது தன்மானத்தின் நதிமூலமாகவும்,  எனது வாழ்நாள் பணிகளின் இரகசிய இலக்குகளாவும் பார்த்தேன். இப்பட்டப் பெயர்களில் மிகவும் இனியதும், அதன் தகுதிக்கு உட்பட்டவனாக இருப்பது அத்தனை எளிதல்ல என்பதை எனக்குணர்த்துபவை இரண்டு, அவற்றிலொன்று  அயோனியன்(Ionian), மற்றது கிரேக்க அபிமானி(Philhellène). தத்துவாதி போலமனுக்குள்(Polémon) ஒரு நடிகர் இருந்தார், சிற்சில தருணங்களில் ஓர் அற்புதமான நடிகரின் முகபாவனைகள்  உணர்ச்சியொன்றை வெளிப்படுத்துகிறபோது, அக்காட்சியில் லயிக்கிற மொத்தகூட்டமும், ஏன் ஒருதலைமுறையே அதில் பங்கேற்கிறதென சொல்லமுடியும். நடிகரின் விழிகள் ஆகாயத்தை நோக்கி உயர்த்தப்படுவதாக வைத்துக்கொள்வோம், அதனைத் தொடங்குவதற்கு முன்பாக, காலத்தின் அந்த நொடிக்குள் அடங்கிய, அவ்வளவு பரிசுகளையும் தனக்கென்று சேகரிக்கும் முனைப்பு அதில் நமக்கு தெரிகிறது. என்னுடையதும் ஒருவகையில் அவ்வகையே, காலத்தோடு இணைந்து வாழ்ந்தேன். வாழ்க்கையும் ஒரு கிரேக்கவாழ்க்கை, எனது ஆட்சிஅதிகாரம் என்பது வழக்கமான சக்தி படைத்தது அல்ல,  ஒரு புதிரான சக்திக்குரியது,  மனித சக்திக்கும் மேம்பட்டது, என்கிறபோதும்  மனிதனைக்கொண்டு திறம்படச் செயல்பட அதற்குத் தெரியும். உரோம், ஏதன்ஸ் இரண்டையும் கைகோர்க்கச் செய்ய நான் எடுத்த முயற்சிகள்  பலித்தன;  இறந்த காலம் தனது எதிர்கால முகத்தைத் திரும்பக் கண்டது; வெகுகாலமாக  காற்றின்மையால் முடங்கிக்கிடந்த  நாவாயொன்று தனது பாய்மரக் கித்தான்கள் காற்றில் தள்ளப்படுவதை உணர்ந்து திரும்பத் பயணத்தை தொடர்வதுபோல  கிரேக்கமும் புறப்பட்டது. அப்போதுதான் ஒரு கணநேர மனச்சோர்வு என் கழுத்தை நெறித்தது: ‘நிறைவு’, ‘முழுமை’, என்ற சொற்களுக்குள் ‘முடிவு’  என்கிற வார்த்தையும் இருக்கிறதென்பதை எண்ணிப்பார்த்தேன், ஆக பசியாறாத காலதேவனுக்கு எனது தரப்பிலும்  ஓர் இரையை  கூடுதலாக வழங்கியுள்ளேன். 

                          தொடரும்…

——————————————————————————————————————————————

18. இயரோஃபண்ட் (hiérophant) கிரேக்க உரோமானியத் தொன்மத்தில் சமயச்சடங்கின் காரண காரியங்களை விளக்கிச் சொல்லும் சமயாச்சாரியார்.

19. Philemon உரோமக் கவிஞர் ஆவிட்(Ovid) எழுதிய உருமாற்றங்கள்(Metamorphoses) கவிதையில் இடம்பெறும் முதிய விவசாயி, தன்னுடைய வயதான மனைவியுடன் இணைந்து கிரேக்க கடவுளான ஜீயுஸ் மற்றும் எர்மெஸ் இருவருக்கும் தங்கள் குடியிருப்பில் உணவளித்தனர்.

20. டியூகோலியான்(Ducolion) கிரேக்கத் தொன்மத்தின்படிபிரமிதியசின் மக்ன், ஜீயுஸ் ஊழிவெள்ளத்தில் தப்பியவன். 

————————————-

Series Navigation<< அதிரியன் நினைவுகள் – 24அதிரியன் நினைவுகள் -26 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.