மொழியும் மண்ணும்

ஆங்கில மூலம் : ஜோசப் ப்ராட்ஸ்கி

தமிழாக்கம் : நா.பானுமதி

குளிர் பருவத்தில், குளிரை விட வெப்பத்திற்கு
இணக்கமான அந்த இடத்தில்,
மலையைக் காட்டிலும் கிடை மட்டத்திற்குப் பழகிய அந்த குகையில்,
பாலையில் கடுங்குளிர் குறுக்கு நெடுக்காக வீசுவதைப் போல
விண்ணிலிருந்து மண்ணிற்கு இணைப்பென
உலகைக் காக்கும் ஒரு குழந்தை பிறந்தான்.

அவனுக்கு அனைத்துமே மிகப் பெரிதெனத் தோன்றியது.
அவன் அன்னையின் மார்பு,
எருது வெளியிடும் வெப்ப மூச்சு,
மூன்று சிறந்த ஞானிகளான கேஸ்பர், பால்தாஸர், மெல்கியர், ஆகியோர்
சிறிது திறந்த கதவின் அருகே குவித்த பரிசுகள்.

அவன் ஒரு சிறு புள்ளி; ஆயினும் அவன் ஒரு விண்மீன்.
அகிலத்தின் ஆழத்திலிருந்து,
எதிர் முனையிலிருந்து,
வெளிறிய, வழி தவறிய மேகங்களின் ஊடாக, தீர்க்கமாக நட்சத்திரம்
அந்தக் குகையின் கொட்டிலில் இருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அது தந்தையின் நிலைத்த பார்வை.


இயாசிஃப் அலெக்ஸாண்ட் ரோவிக் ப்ராட்ஸ்கியின் ‘த ஸ்டார் ஆப் நேடிவிடி’ என்ற பாடலின் மொழி பெயர்ப்பு மேலே உள்ளது. இவர் ஒரு ரஷ்ய- அமெரிக்கர். 1940ல் லெனின்க்ராடில் பிறந்தார். யூதக் குடும்பம் என்பதால் அவர்கள் பல சோதனைகளைச் சந்தித்தனர். வறுமையும், வாய்ப்பின்மையும் குடும்பத்தை வாட்டியது. இவர் தன் கருத்துக்களை பாடல்களின் மூலம் வெளிப்படுத்தியதில் ரஷ்ய அரசு இவரை இளம் வயதிலேயே விசாரணைக்கு உட்படுத்தி 5 ஆண்டுகள் சைபீரியாவில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் கடுமையாக உழைக்கச் செய்தது. அவர் தன் கவிதைகளில் நேரடியாக கம்யூனிசத்தை எதிர்க்கவில்லை. உலகம் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தது. 18 மாதங்களுக்குப் பிறகு அவர் ரஷ்யாவில் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். அவரை இஸ்ரேல் அரசு குடியுரிமை தந்து அழைத்த போதும், ‘நான் யூதன் என்பதை விட மனிதன் எனவே உணர்கிறேன். அரசுகள் வரும், போகும்; பிறந்த மண்ணும், முக்கியமாக மொழியும் எந்த மனிதரிடமும் காலம் தோறும் இருக்கும் என்றார்.’ சிலகாலம் இலண்டன் போன்ற இடங்களில் வசித்த பிறகு டபிள்யூ. ஹெச். ஆடன் என்ற அமெரிக்கக் கவிஞரின் உதவியுடன் அமெரிக்கா வந்தார். அங்கு பல பல்கலைக் கழகங்களில் பணியாற்றினார். இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர். தன் கவிதைகளை முதலில் ரஷ்ய மொழியில் எழுதி பின்னர் தானே அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஜோசப் ப்ராட்ஸ்கி என்று பரவலாக அறியப்பட்டவர்.

அவரது கவிதைகள் தாய் மண்ணையும், மொழியையும் பிரிந்திருப்பதன் துயரத்தை பெரும்பாலும் சொல்கின்றன. அவர் மத நம்பிக்கையாளர், நெருக்கமாகப் பழகுபவர், மனச்சோர்விற்கு ஆட்படுபவர், சில நேரங்களில் குழப்பங்களில் இருப்பவர், சில நேரங்களில் தியாகி என்று தன்னை உணர்பவர், துணிந்தவர், மனிதனும், இயற்கையும் அவரை ஆட்கொண்டன- மனிதனின் பலவீனங்களை, தான் சாதித்து விட்டோம் என்று அவன் கொள்ளும் தற்பெருமையின் பொருளின்மையைச் சாடியவர். அசலான எண்ணங்களை, தன் மொழியின் இசைவோடு கவிதைகளாக எழுதியவர். அதன் அசல் தன்மையே அதன் வசீகரம். வியன்னாவில் அவரது கல்லறை உள்ளது.

மேற்கண்ட கவிதை ஏசுவின் பிறப்பைப் பற்றியது. அது கவிதையென உருவாவது அதில் அவர் பொருத்தியிருக்கும் ‘அத்வார்ட்- குறுக்கே’ அகிலத்தின் குறுக்கே கடந்து, விண்மீனாக மண்ணில் வந்த பாலகனைப் பற்றி பாடுகையில், அவன் மேல், தந்தையின் நிலைத்த பார்வை வருகிறது; அந்த மாட்டுக் கொட்டிலின் எருது வருகிறது; அது வெப்பமாக மூச்சு விடுகிறது. மூன்று ஞானிகளான கேஸ்பர் (கொண்டாட்டத்தையும், செல்வத்தையும் குறிப்பவர்) பால்தாஸர் (இவன் ஒரு தனித்த மாண்புடையவன் எனக் காட்டுவதற்கான ஞானி) மெல்கியர் (கடவுளின் ஒளி) ஆகியோர் இணைகிறார்கள். குகைக்குள் படரும் நட்சத்திர ஒளி, அவர் தேடும் நாட்டிற்கான மொழியையும், மண்ணையும் சொல்கிறது.


Star of the Nativity
In the cold season, in a locality accustomed to heat more than
to cold, to horizontality more than to a mountain,
a child was born in a cave in order to save the world;
it blew as only in deserts in winter it blows, athwart.

To Him, all things seemed enormous: His mother’s breast,
the steam out of the ox’s nostrils,
Caspar, Balthazar, Melchior—the team
of Magi, their presents heaped by the door, ajar.

He was but a dot, and a dot was the star.
Keenly, without blinking, through pallid, stray
clouds, upon the child in the manger, from far away—
from the depth of the universe, from its opposite end—the star
was looking into the cave. And that was the Father’s stare.

December 1987

Joseph Brodsky, “Star of the Nativity” from Collected Poems in English, 1972-1999. Copyright © 2000 by the Estate of Joseph Brodsky.  Reprinted by permission of Farrar, Straus and Giroux.
Source: Collected Poems In English, 1972-1999 (Farrar Straus and Giroux, 2000)

One Reply to “மொழியும் மண்ணும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.