மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறு

மிர்ஜான் கோட்டை 1605

உளிகள் விடிந்ததிலிருந்து  ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. 

தனி உளி எழுப்புவது ஒலி இல்லை. பூவில் தேன் அருந்தப் போய் அமரும் தேனியின் மெல்லிய இறகுச் சிலிர்ப்பு போன்றது அது. 

பத்து உளிகள் சேர்ந்தால் எழும் ஓசை, காதலனொருவன் அன்புக் காதலிக்கு அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாகக் கன்னத்தில் தரும் முத்தத்தின் சத்தம் போன்றது. 

சென்னா செவிமடுத்தது, கடல் அலை தனக்குள் பாடியபடி கரைக்கு வந்து, திரும்பப் போய், மறுபடியும் வந்து, திரும்ப போய், சலிக்காமல் அந்த ஒரே பாட்டைப் பாடுவது போன்ற இரைச்சல். நூறு இருநூறு சிற்பிகள் சிற்பம் செதுக்கும் கூட்டு ஒலி.  

பட்கல்லிலும், கோகர்ணத்திலும், ஜெருஸோப்பாவிலும், ஹொன்னாவரிலும். உள்ளாலிலும், உடுப்பியிலும், மால்பேயிலும், கார்வாரிலும், புட்டிகேயிலும் அச்சு அசலாக ஒரே மூலத்தின் பன்முகத்தன்மையிலமைந்த சதுர்முக பஸதிகள் ஒரே நேரத்தில் எழுந்து வருகின்றன. 

இவற்றில் சில சென்னபைரதேவியின் அரசாட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் அமைவதில்லை. அந்தந்த குறுநிலங்களின் மன்னர்கள், சென்னா பஸதி கட்டுவதை பார்த்து, நல்ல பெயர் வாங்க அவர்களும் கட்டத் தொடங்கினார்கள். 

கருங்கல் பாளங்களை எடுத்துக் கிடைமட்டமாக நிறுத்திக் கூரையாக்கி, கருங்கல்லைத் தரையாக்கி, கருங்கல்லைச் சுவராக்கி, ஒவ்வொரு பஸதியும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்த இயலாதபடி கல்லில் செதுக்கிய ஒற்றைக்   கவிதையின் பிரதிகள் போல இருக்கும். 

பஸதிகளின் சுவர்களிலும் கூரையிலும் சின்னச் சின்னதாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்படும். இந்துஸ்தானம் முழுவதிலும் இருந்து வந்த சிற்பிகள் காட்சி வைக்கும் விரல் திறமையும், உளிகொண்டு செதுக்கும் சிற்ப மேன்மையும் அதிசயமானது. 

சென்னா பஸதிகளை உளியின் ஒலிகொண்டு தான் நினைவு கொள்வாள். அவை ஒலித்துக் கொண்டிருக்கும் வரை இந்த மிளகுக் கிழவிக்கு உற்சாகமும் ஊக்கமும் இருந்துகொண்டே இருக்கும். 

சயன கிருஹத்துக்கு வெளியே சென்னா வந்தபோது ஓரமாக உட்கார்ந்திருந்த நாகசுவர இசைக் குழு மிக இனிமையாகக் காலையில் இசைக்கத் தகுந்த ராகமான மலையமாருதத்தை இசைக்கத் தொடங்கியது. நேற்று பூபாளம் வாசித்த குழு அது. அதன் முந்திய தினம் பௌளி என்ற இந்துஸ்தானி ராகம்.  தினசரி மங்கல இசையோடு துயில் உணர்ந்து, இரவு உறங்கும் முன் ஒரு மணி நேரமாவது இசையில் அமிழ்ந்து கண்மலர்கிறாள் சென்னா. நேற்றிரவு புல்லாங்குழல் மென்மையாக தாலாட்ட பஹாடி ராகத்தின் இனிமையோடு பனி மூடிய மலைச் சிகரங்களையும், பசும்புல் பரந்த மலையடிவாரங்களையும் சென்னா சுற்றிவந்தாள். 

“இசையோடு எழுந்து இசையோடு துயின்று வாழ்க்கை  இசைமயமாகட்டும். தினம்தினம் ஏற்படும் அழுத்தத்துக்கும் இறுக்கத்துக்கும் ஒவ்வொரு எலும்பும், நரம்பும் பாதிப்பு ஏற்றுப் பிணங்கி நிற்காமல் அவை இரவில் அமைதியாக ஓய்வுகொள்ளட்டும். துயில் எழுந்து சாந்தமாக நாள் முழுக்க இயங்கட்டும். இசை எப்போதும் மனதில் உங்களோடு லயிக்கட்டும்” – 

பிரதானி நஞ்சுண்டய்யா வாழ்த்தி ஏற்படுத்தியது இந்த இசைச் சேவை. ஏற்பாட்டின் படி சென்னாவின் நாட்கள் சில மணி நேரமாவது இசையில் உடலும் மனமும் ஈடுபடக் கடந்து போகின்றன. நாள் முழுக்க நிதானமும் சாந்தமும் கூட இருந்தபடி சென்னா ஆட்சி செய்து வலம் வருகிறாள். 

இதோ  இன்று இசைக்குப் பிறகு இப்படி ஆரம்பிக்கிறது. 

சென்னாவிடம் கோட்டை அதிகாரி தலை வணங்கிச் சொல்கிறார் –

கருவூல நிர்வாகி உங்களுக்காகக் காத்திருக்கிறார் அம்மா.  

இன்னும் அரை மணி நேரத்தில் முன் மண்டபத்தில் அவரை சந்திக்கிறேன் என்று சொல் சரணா. உன் தாயாரின் உடல்நிலை எப்படி உள்ளது? வைத்தியரிடம் கேட்டு மருந்து கொடுத்தாயா?

மிக்க நன்றி அம்மா. அவர்கள் உடல்நலம் தேறிவருகிறது அம்மா.

உன் அம்மா சரளாதேவி என் பிள்ளை விளையாட்டுத்தோழி தெரியுமா? 

சொல்லியிருக்கிறீர்கள் அம்மா. 

ஓ, வயதாகிறதல்லவா, மறந்து போகிறேன் சகலமானதையும். கருவூல அதிகாரிக்கு சிற்றுண்டு அளிக்க ஏற்பாடு செய். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் முன்மண்டபத்துக்கு வந்தாள் சென்னா. மீசை முளைக்கத் தொடங்கிய சிறுவன் போல இருந்தான் அந்த கருவூல அதிகாரி. கருவூல நிர்வாகத்தில் ஏழு அதிகாரிகள் உண்டு. மூத்த அதிகாரியான பங்கஜாக்‌ஷன் ஓய்வு பெற்ற பிறகு இந்தப் பைதல் தான் பிரதானி அவையால் தேர்ந்தெடுக்கப்பட்டான். வாரணாசி தொடங்கி எங்கெங்கோ சுற்றி பல மொழிகள், கணிதம், வானியல் என்று ஏகப்பட்டது கற்றுத் தேரியவன். வானை அளக்கும் வானவியல் கற்றுத் தேர்ந்து, இங்கே மிர்ஜான் கோட்டையில் அரசு வருமானத்தை சல்லி சல்லியாக எண்ணி வரவு வைத்து அரசு செலவினங்களை வராகன் வராகனாக அட்டவணை தயாரித்து எழுதிச் செலவிட்ட வகையைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். 

 இந்த உத்தியோகத்துக்கு ஆட்கள் வருவது அபூர்வம் என்று பிரதானிகள் சென்னபைரதேவி ராணியிடம் சொன்னார்கள். யாரும் வராவிட்டால் கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் ஒரு ஆண்டாவது கருவூல அதிகாரியாக பணியாற்ற வேண்டுமென்று சட்டம் பிறப்பிக்கலாமா என்று சென்னா வேடிக்கையாகக் கேட்க, நிச்சயம் செய்யலாம், நல்ல திட்டம் என்று பல பிரதானிகளும் அதைப் பாராட்டினார்கள். உள்ளால் ராணி உயிர்த்தோழி அப்பக்காவோடு பகிர வேண்டிய நகைச்சுவை அது என்று உருமாலில் முடிச்சு போட்டு வைத்திருக்கிறாள் சென்னா.

மகாராணி மண்டபத்துக்குள் நுழைவதைக் கண்டு அவசரமாக எழுந்து நின்றார் அந்தக் கருவூல அதிகாரிச் சிறுவன். பெயர் என்னப்பா என்று விசாரித்தபடி சென்னா அமர்ந்தாள். எதிரே வைத்த நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னாள்.  

ராணியம்மா, நான் தற்பரன். பரன் என்று அழைக்கப்படுகிறேன். தமிழ் பேசும் ஜெரொஸோப்பா குடிமகன். போன மாதம் கருவூல துணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறேன். 

நல்லது தற்பரன். பரன். இந்த காலை நேரத்திலேயே என்னைச் சந்திக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்த காரணம் என்னவாக இருக்கும் என்று புரியவில்லை. 

சென்னா முகத்தை மலர்ச்சியாக வைத்தபடி சொன்னாள். 

வரவு செலவுக்கு மேம்பட்ட ஒரு விஷயமாக உங்களிடம் பேச வேண்டும் என்று ஒரு வாரமாக முயல்கிறேன். கற்றுக்குட்டி அதிகாரிக்கெல்லாம் மகாராணியை சந்தித்துப் பேச வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதில்லை என்று மேலதிகாரிகளும். கோட்டை நிர்வாக அதிகாரிகளும் சொல்லி விட்டார்கள். 

 என்ன விஷயமாக சந்திக்க வேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னாயா?

இல்லை அம்மா. சொன்னால் மிர்ஜான் கோட்டைக்குள்ளேயே விட்டிருக்க மாட்டார்கள்

பரனை ஒரு புன்சிரிப்போடு பார்த்தாள் சென்னபைரதேவி. இளங்கன்று. துடுதுடுப்பாக அலைபாயும் விழிகள்.  அம்மாவிடம் முறையிட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தெறிக்கும் குரல்.

“ஹொன்னாவர் நகர் சாக்கடை அமைப்பு உடனடியாக புதியதாகக் கட்டமைக்கப்பட வேண்டும். முக்கியமாக ரதவீதி, தறிக்காரர் தெரு, குயில்தோப்பு தெரு இங்கெல்லாம் சாக்கடை ஓடுவதில்லை

சென்னாவுக்குக் கொஞ்சம் பொறுமை குறைந்து வந்தது.

“உன்னை இங்கே வந்து சந்திக்க அவர்கள் அனுமதிக்காதது சரிதான். நீ என்ன செய்கிறாய் என்று உனக்குப் புரிகிறதா? எனக்குத் தெரியவில்லை. உள்ளாட்சி தொடர்பான கழிவுநீர் அகற்றும் பிரிவு கவனிக்க வேண்டிய புகார் நீ சொல்வது. நான் தேசத்தின் தலைமை நிர்வாகியாக இருந்து கொண்டு ஒவ்வொரு சாக்கடை அடைத்துக்கொண்டதையும் நேரில் வந்து பார்த்துச் செப்பனிட வைத்தால், நாட்டளவில் செய்ய வேண்டியவற்றை யார் பார்ப்பது?

அம்மா, நாட்டளவில் செய்ய வேண்டியது பஸதிகளும் கோவில்களும் கட்டுவது என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்ளலாம். ரதவீதி சீமான்களின் மாளிகைகளும், வர்த்தக நிறுவனங்களும் நிறைந்த வீதி. அங்கே சாக்கடை அடைத்துக் கொண்டால்? 

வாசனை பிடித்துக்கொண்டு சும்மாவா இருக்க முடியும்? தள்ளிவிட வேண்டியதுதான்.

அங்கிருந்து தறிக்காரன் தெரு வழியாக ஷராவதி ஆறு கடலில் கலக்கும் கழிமுகத்துக்கு ஓடும் அந்த கழிவுநீர் ஓடை. கழிமுகத்தின் வடக்கு ஓரத்தில் அது கடலில் வண்டலோடு கலக்கும். 

சகல கழிவுகளோடுமா?

கழிவை அகற்றி நீரைச் சுத்தம் செய்துதான்  கடலில் கலக்க வேண்டும் என்று நூறாண்டு முன்பு இயற்றிய சட்டம் இன்றும் உள்ளது அம்மா.   

நல்லது தானே

ஆனால் அதற்கான யந்திரங்கள் துருப்பிடித்து இயங்காமல் போய் ஐம்பது ஆண்டாகிறது. அதைச் சீர்படுத்த வேண்டும். முப்பது வருடம் முன், அரசியாரின் தந்தையார் காலத்தில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைப்படி, இப்போதைக்கு பெரும் சல்லடைகளைப் பொறுத்தி அந்தக் கழிவுநீரை வடிகட்ட வேண்டும். கழிவுநீர் கடலுக்குப் போகும். சூரிய வெப்பத்தில் அந்த சாக்கடை வண்டலை உலர்த்தி மிர்ஜான் கோட்டைக்கு வெளியே பயிர்சாகுபடிக்கு உரமாகத் தரவேண்டும். 

என் தந்தையாரையும் சாக்கடை கிளற வைத்துவிட்டது போல, ஹொன்னாவர். 

இது ரதவீதி செல்வந்தர்களுக்கான பொறுப்பு. காசு செலவழிக்க விரும்பாதவர்கள் இல்லையா ரதவீதிக்காரர்கள்! ரதவீதி சீமான்களும் தறிக்காரத்தெரு பசதி நிர்வாகமும் சல்லடைத் தீர்வை நடப்பாக்கவில்லை.

என்ன செய்தார்கள் அவர்கள்?

உடனடி தீர்வு கண்டு சாக்கடைக்குள் ஆற்று நீர் வாய்க்கால் பெருக்கைச் செலுத்தி கசடெல்லாம் நகர்ந்து குயில்தோப்பு தெருவில் அடைத்துக் கொள்ள வைக்கின்றன. இப்போது அது குயில்தோப்புத் தெருவின் பிரச்சனை. என் பிரச்சனை. 

எப்படி உன் பிரச்சனையானது பொது பிரச்சனை?

குயில்தோப்புத் தெருவில் நான் குடியிருக்கிறேன் அம்மா.

அப்படியா? வேறே எங்காவது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளேன்.

குயில்தோப்பு தெருவுக்கு ஒரு தடவை அரசு அதிகாரி என்னைத் தவிர யாராவது போய்ப் பார்த்தால் நான் சொல்வது புரியும் அம்மா. தெரு முழுக்க கணுக்கால் அளவு கருத்த கழிவுநீர் சால்கட்டியதுபோல் துர்க்கந்தம் வீசி நிற்கிறது. 

எப்படி நடக்கிறாய்? மற்றவர்கள்?

குதித்து, ஜாக்கிரதையாக வீட்டுப் படி ஏறி, இறங்கி, கொஞ்சம் உயரத்தில் அமைந்த திட்டுகளில் கால் ஊன்றி.. நரகம் அம்மா. பெரியவர்கள் வெளியே போவதே இல்லை இதனால்.

எனக்கு பிரச்சனை புரிகிறது. என்றாலும் அரசுத் தலைமை நிர்வாகியாக நான் இதில் எங்கே வந்தேன் பரன்?

வந்து விட்டேன் அம்மா. அந்தத் தெருவில் சாக்கடை மூடிகள் காணாமல் போனதால் நேற்று இரவு ஆறேழு வயதுச் சிறுமி ஒருத்தி சாக்கடைக்குள் விழுந்தாள். 

என்ன ஆச்சு அந்தக் குழந்தைக்கு? சென்னா பரபரப்பாகக் கேட்டாள். 

இன்று காலை அவள் இறந்து போனாள். 

அய்யய்யோ. ஆண்டவனே

குயில்தோப்புத் தெருவின் சின்னக் குயில். நன்கு பாடுவாள். என் நல்ல சிறியபெண் சிநேகிதி அவள். போகட்டும். இப்போது மகாராணியிடம் ஒரு உள்ளூர் பிரச்சனையைச் சொல்லி விட்டேன். இதை உள்ளூராட்சிக்கு அனுப்பிக் கவனிக்க வைக்கலாம். சோனு என்ற அந்தக் குழந்தைப் பெண் திரும்பி வரப் போவதில்லை.  இதுவும் போகட்டும். 

எல்லாம் போகட்டும் என்று புறம் தள்ளினால் எத்தனை உயிர்களை காவுவாங்கும் அந்தக் கழிவுநீர் ஓடை?

இனியும் இப்படியான விபத்துகள் நடக்காமல் இருக்க, ஹொன்னாவர் நகரச் சாக்கடை அமைப்பை சரியாக்க வேண்டும். இன்னும் இரண்டு மாதத்தில் மழைக்காலம் வருவதால் உடனடியாகச் செய்ய வேண்டியது இது. 

செலவு என்ன பிடிக்கும்?

செலவு இருபதாயிரம் வராகன் கிட்டத்தட்ட ஆகும். 

இருபதாயிரமா? இரண்டு மாதத்துக்கு முன் என்றால் உடனே நிதி ஒதுக்கி இருப்பேன். இப்போது ஒரு வாரம் இரண்டு வாரம் தாமதமாக அதுவும் நான்கு தடவை ஐந்தாயிரம் ஐந்தாயிரமாகத் தரலாம். யோசித்துச் சொல்கிறேன்.

அம்மா, நேற்று கருவூலத்தில் வரவு வைக்க மாட்ரிட் வர்த்தகரிடம் இருந்து ஏற்றுமதிக்கான விலை இருபதாயிரம் வராகன் என்ற தொகைக்கு ஒரு கைச்சாத்து. 

அதை சாக்கடை சீரமைக்க எடுத்துக் கொள்ளலாம் என்கிறாயா?

 தர்மவீர் பிரதானி, உடுப்பி அருகே வராங்க கிராமத்தில் திருக்குளத்து நடுவே அமைந்த நானூறு வருடம் பழைய கேரே பஸ்தியைச் செப்பனிட அந்த மிளகுக்காசை திசை திருப்பி விட்டார். 

அதுவும் வேண்டிய செலவுதானே? வீண் செலவு இல்லையே.

நீங்களே சொல்லுங்கள் அம்மா,  சாக்கடை நீரில் மூழ்கி மரணம் ஏற்படுவதைத் தடுப்பதா, தண்ணீர்க் கோவிலைச் செப்பனிடுவதா எது உடனடியாகச் செய்ய வேண்டிய காரியம். 

தனித்தனியாகப் பார்க்கும்போது மிகக் கொடிய நடவடிக்கையாகத் தெரியலாம். பிள்ளைகளை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்ளாமல் சாக்கடைக்கு பலி கொடுப்பது பெற்றோரின் அசட்டை காரணமன்றோ என்று இன்னொரு வகையில் பார்த்து வாதாடலாம் பரன்.

இது ஒரே ஒரு சாக்கடை அடைப்பு. ஒரு மரணம். ஒரு பஸதி செப்பனிட அவசியம். ஒரு மிளகு விற்ற வரவு. இதுபோல் எத்தனை உண்டென்று அனுமதி கொடுத்தால் கணக்கு சொல்வேன் அம்மா. 

செலவுகள் இந்த ஆண்டு கூடியுள்ளனவே.

இந்தச் செலவுகளில் கோவில் கட்டுகிற செலவு தவிர மற்றவை எப்போதும் வரும் இனம் தான். இந்த ஆண்டு கோவில் செலவு மிளகு வரவை எல்லாம் விழுங்கி விட்டது. இது இன்னும் நீள வேணுமா? தீர்வு என்னவாக இருக்கும்? இதற்கெல்லாம் தீர்வு மகாராணி திருமனசு தான் எடுக்க வேண்டும். நான் தவறாக ஏதாவது பேசியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்”. 

நீளமாகப் பேசி நிறுத்தியது பெருமழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. தடாரென்று சென்னபைரதேவி காலில் விழுந்து வணங்கினான் அந்தக் கருவூல அதிகாரி. பிரமித்துப்போய் இருந்த சென்னபைரதேவி, அவனைக் கைகொடுத்து எழுப்பினாள். அவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. 

அவனை ஆதரவாகத் தோளில் தட்டி நாற்காலியில் அமரச் சொன்னாள் சென்னா. 

பரன், நீ சொன்னதெல்லாம் உடனடித் தீர்வு வேண்டும் பிரச்சனைகள். முக்கியமாக அந்தச் சிறுமி அநியாயமாக உயிர் நீங்கியது மகா கொடுமையான நிகழ்வு. அந்தப் பெண்ணின் பெற்றோரை சந்தித்து துக்கத்தில் பங்கு பெற நினைக்கிறேன். குடும்பத்துக்கு உதவித் தொகை தரவும் ஏற்பாடு செய்கிறேன். 

நல்லது அம்மா

அடுத்து ஹொன்னாவரில் இந்த சாக்கடை அடைப்பை சீர்செய்ய இருபதாயிரம் வராகன் செலவுக்கு வழி செய்வது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். மற்ற பிரச்சனைகள் நீ சொன்னவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்தடுத்து சரி செய்ய முயல்கிறேன். ஆனால், ஒன்று நீ கவனிக்க வேண்டும். 

சொல்லுங்கள் அம்மா

அரசு யந்திரம் என்பது மிகப் பெரியது.  

குறுக்கிட்டுச் சொன்னான் -அம்மா அந்த இயந்திரம் வேலை செய்யவில்லை. சாக்கடை நீரைச் சுத்தம் செய்யும் இயந்திரத்தைத் தானே சொல்கிறீர்கள்? ஓ அதில்லையா? மன்னிக்க வேண்டும்.

சென்னா சிரித்தாள். இது அரசாங்கம் என்று பொருள்படும் ஒரு பயன்பாடு.

நன்றி அம்மா

நீ அரசு யந்திரத்தை கழிவுநீர் அகற்றுதல் நோக்கில் மட்டும் பார்க்கிறாய். அதற்கு இன்னும் எத்தனையோ பரிமாணங்கள் உண்டு என்பதை நீ உணர வேண்டும். 

மன்னிக்க வேண்டும் அம்மா.  உணர்கிறேன். அதெல்லாம் அறியாமல், கருதாமல் போனேன். 

அரசு வருமானப் பெருக்கம், செலவுச் சுருக்கம், விவசாய முன்னேற்றம், ஏற்றுமதியில் மற்ற நாடுகளோடு போட்டியிட்டு நம் பொருளை நல்ல விலைக்கு வாங்க வைத்தல், தேசப் பாதுகாப்பு, ஜனங்கள் அரசு மேல் வைத்த நம்பிக்கையை  எப்போதும் கைவிடாதிருக்கச் செய்தல், மத சமத்துவம் பேணுதல் என்று பாடம் நடத்துவது போல் நான் அடுக்கிக் கொண்டே போனால் நீ அலுப்படையப் போகிறாய். 

அம்மா, எப்படி அலுப்பு வரும்? தங்களுடைய மதிப்பு மிகுந்த அரசு  நேரத்தை எனக்கு ஒதுக்கினீர்களே, மக்களின் முதல்வர் நீங்கள்.

நன்றி. அந்தப் பெருமைக்கு நான் அருகதையுள்ளவள் இல்லை. என்ன சொல்ல வந்தேன்? சந்திக்க வேண்டிய பிரச்சனைகளில் அரைக்கால்வாசி குடிநீர் விநியோகமும் கழிவு நீர் அகற்றுதலும். நான் சுமந்து தீர்க்க வேண்டிய மற்ற பிரச்சனைகள் முக்காலே அரைக்கால் பகுதி மீதமுண்டு. ஆகட்டும், பார்க்கலாம். நல்லதே நடக்கும்.

சென்னா விடைகொடுக்க, குனிந்து அவள் பாதம் தொட்டு வணங்கினான் தற்பரன். 

அம்மா, எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து போக, உங்கள் ஆட்சி மேன்மையுற என் பிரார்த்தனைகள். 

அவன் மெல்ல நடந்தான்.

நேற்று நான் ஒரு கனவு கண்டேன். எல்லா தீர்த்தங்கரர்களும் சிற்பமாக உருவாகும் ஒரு பஸதி. வாசலில் கழிவுநீர் ஓடை. அதன் நடுவே   கழுத்து வரை மூழ்கியபடி ஒரு சிறுமி துணி பொம்மையை அசுத்த நீரில் நனைத்து சிரிக்கிறாள். தேங்கிய சாக்கடை இது. நான் பஸதிக்குள் போகிறேன். பாதி உருவான தீர்த்தங்கரர்கள் சுவர்ப்பக்கம் பார்த்தபடி திரும்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள் – எங்களுக்குப் படைக்க   நீ எடுத்து வந்திருக்கும் இனிப்புகளும் பழங்களும் எங்களுக்கு வேண்டாம். அந்தச் சிறுமியை குளிப்பாட்டி அழைத்து வந்து அவளுக்கு அதையெல்லாம் ஊட்டு. தேங்கிய சாக்கடையை உன் கையால் நகர்ந்து ஓட வை. தீர்த்தங்கரர்கள் சொல்லி முடிப்பதற்குள் கனவு கலைந்தது. 

இந்தக் கனாத்திறம் உரைக்க யாராவது உண்டா? 

இன்று மாலை சென்னா மாலை நேர பஸதி பிரார்த்தனையில் இதைச் சொல்வாள். பஸதி நிர்மாணம் சற்றே ஓய்வெடுக்க அதற்காக ஒதுக்கிய பணம் ஹொனாவரில் சாக்கடை சீர்திருத்தப் பயன்படுத்தப்படும் என்பதை அவள் தெரிவிக்கப் போவது அப்படித்தான். இன்னும் ஒரு மாதத்தில் பஸதி முழுமையாகுமெனவும் தான்.

கோட்டை நிர்வாக அதிகாரி சரணன் எட்டிப் பார்த்தான். 

சரணா, அடுத்து யார் வந்திருக்கிறார்கள் என்னை சந்திக்க? 

அம்மா, மங்களூரில் இருந்து யூதர் நிதிநிறுவனத் தலைவர் மேயர் கஸன் பத்தரை மணிக்கு வர இருக்கிறார். பதினொன்றரை மணிக்கு போர்த்துகல் அரசத் தலைமைப் பிரதிநிதி இமானுவல் பெத்ரோ சென்ஹோர் வர இருக்கிறார். அதற்கு முன்  நீங்கள் காலைப் பசியாற உணவு காத்திருக்கிறது.

 எடுத்து வரச்சொல் சரணா.

 சென்னா எண்ணங்களில் மூழ்கியிருந்தாள். உணவு உண்டு சோதிக்கும் உத்தியோகஸ்தன் அப்படி உண்டு அரசி உண்ணலாம் என்று கைகூப்பித் தெரிவித்தான்.  

ரெண்டு இட்டலிகளும் ஒரு இனிப்பு குழக்கட்டையும் வை. 

உண்ணத் தொடங்கினாள் சென்னபைரதேவி.

சரணன் பரபரப்பாக மறுபடி உள்ளே வந்து வணங்கினான். 

உண்ணும்போது தொந்தரவு செய்வதை மன்னிக்க வேண்டும். தறிக்காரன் தெரு பஸதியில் தீர்த்தங்கரர்களின் பாதி செதுக்கிய திருவுருவங்கள் சுவரைப் பார்த்துத் திரும்பிக்கொண்டனவாம். தறிக்காரன் தெருவில் ஒரே ஜனநெரிசல். 

சென்னா அவனைக் கூர்ந்து பார்த்தாள். சிரித்தபடி சொன்னாள் –  

சிற்பிகளையும் திரும்பி அமர்ந்து வேலையைத் தொடரச் சொல். 

அவள் மனதில், ஆனந்தபைரவி ராகத்தில், குழலும், நாகசுவரமும் இழைந்து சூழ்ந்தன.

Series Navigation<< மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு மிளகு   அத்தியாயம் ஐம்பத்தேழு >>

One Reply to “ மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.