
தகவல் வந்ததும் நாங்கள் கிழக்குக்காட்டிலிருந்து ஊருக்குள் வருவதற்குள் பொழுது சாயத் தொடங்கியிருந்தது. அம்மா சூனிக்கரடு போய் சித்தியை அழைத்து வருவதாகச் சொன்னதால் நானும் விக்னேசும் எங்களது டிவிஎஸ்ஸை விரட்டி வேகமாக வந்து சேர்ந்தோம். இரண்டு மாமாக்களுமே சென்னையில் சொந்த வீடு கட்டி அங்கேயே வசித்து வருகிறார்கள. தாத்தாவின் வீடு இன்றுவரை தாத்தாவின் வீடாக மட்டுமே இருக்கிறது.
இரட்டைக் கற்களால் கட்டப்பட்ட சுண்ணம் பூசிய சுவற்றோடு பிரம்மாண்டமாக கிழக்கு வீதியில் அமைந்திருக்கும் தாத்தாவின் காரை வீடு நிரம்பத் தின்று எழும்ப முடியாமல் அமர்ந்தவாக்கில் கிடக்கும் கும்பகர்ணனை நினைவுபடுத்துவதாக நாங்கள் அவ்வப்போது பேசிக் கொள்வோம். வீட்டின் தென்கிழக்கு மூலையில் பாட்டி விறகடுப்பில் சமைக்கும் போது மேலே தூக்கிக் கட்டியிருக்கும் புகைபோக்கியில் கனமாக கரும்புகை வெளியேறும். நாங்கள் அதையும் கும்பகர்ணன் இப்போது மல்லாக்கப் படுத்து சுருட்டு பிடிப்பதாக பேசிச் சிரித்துக் கொள்வோம்.
சாணம் தெளிக்காத வாசலில் மூன்று கார்கள் நின்றிருப்பதைக் கண்டு அனைவருமே வந்துவிட்டார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்துகொண்டு உள்நுழைந்தோம்.
நிலைப்படியில் நின்றிருந்தது பிரபு மாமாவின் குழந்தையென நானாக அனுமானித்தேன். எங்களது லுங்கிக் கட்டையும் சாணநாற்றம் வீசும் கைதொங்கிய பனியனையும் கண்டு என்ன நினைத்ததோ.. சடாரெனத் திரும்பி உள்ளே ஓடியது. இருபுறமும் நீண்டிருந்த திண்ணைகளைத் தாண்டி உள்முற்றம் வந்தபோது இரண்டு மாமாக்களும் அவர்களது மகன்களும், மகள்களும் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பெரிய மாமா எங்களைக் கண்டதும் வாங்க என்பதுபோல் முறுவலித்தார்.
“எங்கடா மாப்ள.. அப்பா வரல?”
“அவரு மில்லு வேல முடிஞ்சி நேரா வந்துடுறேன்னு சொல்லிட்டாரு. அம்மா சித்திய கூப்பிட போயிருக்கு”
என்றபடியே பார்வையை ஓட்டினேன். திடீரென வீட்டுக்கு சொகுசுக் களை வந்திருப்பது போலிருந்தது. எல்லாம் வெள்ளைத் தோல்கள். மருந்துக்கு கூட ஒரு அழுக்கில்லை. அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த குழந்தைகளின் இடுப்பை டயாபர்கள் இறுகக் கவ்வியிருந்தன. சின்ன மாமாவின் மருமகன் கூடத்துக்குள்ளேயே கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்தது எங்களுக்கு விநோதமாகத் தெரிந்தது. சக்கரம் பொருத்திய பைகள் உள்வீட்டு வாசலுக்கு இருபுறமும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்க காலையில் நான் கஞ்சி கொண்டு வந்திருந்த வொயர்பை அவற்றுக்கு நடுவில் கிடந்தது.
தாத்தாவின் அறைக்குள் நுழையலாமாவென யோசித்துக் கொண்டிருந்தபோதே சித்தியும் சித்தப்பாவும் உள்ளே நுழைந்தார்கள். அம்மா நின்று பேசாமல் நேராக தாத்தாவின் அறைக்குப் போனாள்.
சின்ன மாமா வயது தான் சித்தப்பாவுக்கு. இருவரும் திருமணத்துக்கு முன்பிருந்தே நண்பர்கள் ஆதலால் மாமா தோளில் கைபோட்டபடி சித்தப்பாவை மூலைக்கு அழைத்துச் சென்றார்.
சித்தி பெரிய மாமாவைப் பார்த்துக் கேட்டாள்.
“டாக்டர் என்ன சொன்னாரு?”
பெரிய மாமா நாற்காலியிருந்து பெருமூச்சுடன் எழுந்தார்.
“அவரு என்ன சொல்றாரு? இப்போதைக்கு ஆகாதாம்.. நீ தான் அவசரப்பட்டு போன் பண்ணிட்ட.. இல்லன்னா அடுத்த வாரமே வந்திருப்போம்”
சித்தி சுருக்கென்றது போல நிமிர்ந்தாள்.
“எங்களுக்கு மட்டும் என்னா சாமியா வந்து சொல்லும்? முடியற மாதிரி தான் இழுத்துகிட்டு கெடக்குது. அதான் முன்கூட்டியே சொன்னோம்..”
மாமா பையன் தூணில் சாய்ந்தபடி மெல்ல முணுமுணுத்தான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்த.. கம்பெனில லீவ் கிடைக்கிறது கஷ்டம். இது வெளிநாட்டு கம்பெனி.. மன்த் என்டு வேற.. நீங்க கொஞ்சம் பொறுத்து சொல்லியிருக்கலாம்”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அம்மாவும் பாட்டியும் தாத்தாவின் அறையிலிருந்து வெளியே வந்தார்கள்.
பெரிய மாமா மருமகன் கண்ணாடியை கழட்டாமலே தன் பேச்சைத் தொடங்கினார்.
“பரசு.. இட்ஸ் வெரி சிம்பிள் மேட்டர் யூ நோ.. முடிஞ்சபிறகுனா ஈஸியா ப்ளான் பண்ணலாம்.. நியரஸ்ட் சிட்டி எது? சேலம் தானா? ஹைலெவல் பிரீசர் பாக்ஸ்லாம் வந்துடுச்சு. ஒன் வீக் கூட தாக்கு பிடிக்கும். இப்போ என்னடான்னா எப்ப ஆகும்னு வெயிட் பண்றது.. இட்ஸ் வெரி அன்கம்ஃபடபுள்.. “
இப்போது சித்தி இன்னும் கோபமாகியிருப்பது அவள் மூக்குப் புடைப்பிலும் புருவ நெறிப்பிலும் தெரிந்தது.
“எல்லாரும் முடியறத பத்தியே பேசுறீங்களே.. யாராச்சும் ஒருத்தருக்காச்சும் அந்த மனுசன சாவறதுக்கு முன்னாடி பாக்கணும், நெனவு வருதான்னு எழுப்பி வுடணும்னு
தோணுதா? பத்து நாளா பால் மட்டும் தான் எறங்கிகிட்டு இருக்கு. அப்புறம் சொல்லாம என்ன பண்றதாம்? செத்ததுக்கு அப்புறம் சொன்னாலும் முன்னாடியே சொல்லியிருந்தா வந்து பாத்துருப்போமேன்னு சொல்லுவீங்களா சொல்ல மாட்டீங்களா? “
பரசு மாமா சமாதானமாய் சித்தியின் அருகில் சென்று அணைத்தார்.
“அதுக்கு இல்லீங்க அத்த.. பையனுக்கு வேற எக்ஸாம் டைம். ஸ்கூல்ல லீவ் தர மாட்டாங்க. இப்பவே ரொம்ப கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கிட்டு வந்துருக்கோம்” என்றவரின் மனைவியைப் பார்த்தேன். அவள் மடியில் எல்கேஜியிலிருந்து யூகேஜி செல்லும் வயதில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. நானும் விக்னேஷும் யாருக்கும் தெரியாமல் திரும்பி சிரித்துக் கொண்டோம்.
“யப்பா சாமி.. போன் பண்ணது தப்பு தான்பா. கெளம்புறதா இருந்தா கெளம்புங்க.. யாரும்
சங்கடப்பட்டுக்கிட்டுலாம் இருக்க வேணாம்” என்ற சித்தியை சித்தப்பா கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளே போகச் சொன்னார். சித்தி அழும் கண்களோடு தாத்தாவின் அறைக்கு ஓடினாள்.
ஒரு நீண்ட அமைதிக்குப் பிறகு எல்லோரும் திரும்பி பாட்டியைப் பார்த்தோம். அவள் முகம் கலவரத்திலிருந்தது கண்டு
பெரிய மாமா அருகில் சென்று அமர்ந்தார்.
“இல்லம்மா.. உனக்கு தெரியாதது ஒண்ணுமில்ல. எல்லாருமே வெளிய வர்ற முடியாத அளவு டைட்டான வொர்க்ல இருக்கோம். அதுவுமில்லாம புள்ளைங்க படிப்பு வேற. சின்னவன் பொண்ணுக்கு நீட் க்ளாஸ்னு அத வேற ரிலேஷன் வீட்ல விட்டுட்டு வந்துருக்கான். என்ன பண்றது? நீயே சொல்லு” என தலையைத் தடவினார்.
“நான் என்னப்பா சொல்றது? போக வேண்டிய உசுரு போகாம இப்படி அடம் புடிக்கிது.. எல்லாருக்கும் சங்கடம்.. நான் தான் அவகிட்ட போன் பண்ண சொன்னேன்.”
“அதெல்லாம் வுடுங்க அத்த.. ஏதாவது செய்ய வேண்டியது குறை இருந்தாலும் உசுரு போகாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க.. அந்த மாதிரி ஏதாவது இருக்குதோ என்னமோ?” என்றாள் பெரிய அத்தை.
எல்லோரும் குறை குற்றங்களை சாமிக்கு செய்ய வேண்டியது குறித்து ஆளாளுக்கு பட்டியல் போட்டார்கள். அம்மா சட்டென ஞாபகம் வந்தவளாய் கேட்டாள்.
“சின்னவன் மவளுக்கு ஆக்ஸிடென்ட் ஆனப்ப கருப்பனாருக்கு வேண்டியிருந்தாரே செஞ்சீங்களா?”
கருப்பனார் எங்கள் தாத்தா வீட்டுக்கு குலதெய்வம். அரியலூர் தாண்டி ஏதோவொரு குக்கிராமத்தின் பெயர் சொல்வார்கள். அவ்வளவு தூரம் போய் வர முடியாததால் தாத்தா தான் பூசாரியிடம் முறைப்படி சொல்லி மண் எடுத்துவந்து தெற்குக் காட்டு மூலையில் குடி வைத்தார். சாமி நிழலுக்கு ஒரு வேப்பங்கன்றையும் நட்டு வைக்க அது இன்று பிரம்மாண்ட விருட்சமாகி சாமிக்குரிய பரந்த கோயிலாக நிலைநிற்கிறது.
மில்லிலிருந்து வந்துவிட்ட அப்பாவின் ஆலோசனைப்படி மறுநாள் காலையே கருப்பனாருக்கு பொங்கல் வைத்து சேவல் அறுப்பதாக முடிவானது. மறுநிமிடமே அனைவரும் வீட்டை ஒதுங்க வைக்கும் பணியில் மும்முரமாக இறங்கினோம். சித்தியும் அம்மாவும் மெழுக வேண்டிய உள்ளறைகளுக்கு சாணம் எடுக்க ஓடினார்கள். பாட்டி வீட்டை சுத்தம் செய்வது குறித்த ஆணைகளை துரிதமாக பிறப்பித்துக் கொண்டிருந்தாள்.
தாத்தா படுக்கையில் விழுந்த நாளிலிருந்து இன்று வரை சோகமான மனத்துடன் நடை தளர்ந்து அமர்ந்திருந்தவள் இன்று தான் வேகமெடுத்து நடமாடுகிறாள். அவள் சொல்லச் சொல்ல நாங்கள் பொருட்களைக் கொண்டு வந்து களத்தில் வைத்தோம். அனைத்திற்குமே தாத்தாவின் வயதிருக்கும்.
மாமாக்களும் அவர்களது பிள்ளைகளும் நொடிக்கொரு தரம் போனை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடிப் பேசினார்கள். அனைவருமே ஊருக்குத் திரும்பும் நாளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
விக்னேஷ் என்னிடம் “யாரு ஒரம்பரைனே தெரியலடா. நாம வேல செஞ்சிட்டு இருக்கோம். அவங்களாம் ஜாலியா சுத்திட்டு இருக்காங்க” என புகார் சொன்னான்.
எனது சந்தேகம் வேறாக இருந்தது. மாமாக்களும் அப்பாக்களும் தனியாக கூடிக் கூடிப் பேசினார்கள். வேறு ஏதோ யோசனையில் இருக்கிறார்களென எனக்கு உறுத்தியது. உறுப்பினர்களை எண்ணச் சொன்னார் சித்தப்பா. நண்டு சிண்டுகளோடு சேர்த்து 20 உருப்படிகள் கணக்கு சொன்னதும் அதற்கேற்ப நான்கைந்து கோழிகளை பஞ்சாரத்தில் தனியாக அடைத்து வைத்தார்.
அன்றிரவு அங்கேயே நாங்கள் தங்கிவிட்டோம். களத்தில் பாய் விரித்து வரிசையாகப் படுத்தோம். நட்சத்திரங்களை பார்த்தவாறு கடைசியாக உறங்கியது எப்போதென யோசித்துப் பார்த்தேன். நினைவுக்கு வரவில்லை. உண்மையில் எல்லோரும் சொல்வது போல் இரவுகள் அமைதியானவை இல்லை. இரவின் ஓயாத பேரிரைச்சல் கடந்தகாலத்தின் அலைகளை கொண்டுவந்து கரையொதுக்குவதை உணர்ந்தபடியே உறங்காமல் படுத்திருந்தோம்.
பாட்டி ஊரிலிருந்து வந்திருந்த அத்தைகளிடம் பேசிக் கொண்டிருப்பது காதில் தெளிவாகக் கேட்டது.
“பின்ன நீங்களும் தான் என்ன பண்ணுவீங்க? இந்த ஒத்த உசுருக்காக அவ்வளவு வேலைய வுட்டுட்டு இங்க வந்து கெடக்குறீங்க.. என்னாலயும் முன்ன மாதிரி முடியல. ஒக்காந்தா எழுந்திரிச்சா உடம்புல ஒரு இடம் வுடாம வலி நோவுது. ஆறு மாசமா அள்ளிக் கொட்டி தொடைச்சி வுட்டு சலிச்சி போச்சு. படுக்க புண்ணு வேற வந்துடுது. புண்ணுல எறும்பு ஏறிக்கிது. அப்பப்ப பொரட்டி வுடணும். மருந்து பவுடர் போடணும். என்னா நெனப்புல இழுத்துகிட்டு இருக்குனு தெரியல”
பாட்டி பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வப்போது சோறு கொண்டு வந்துத் தரும் என்னிடமோ, சித்தி பையன்களிடமோ இப்படியாக ஒருநாளும் சலித்துக் கொண்டதில்லை.
‘இன்னும் பத்து வருசம் கெடந்தாலும் அந்த மனுசன் உழைச்ச உழைப்புக்கு சேவ செய்வேன்’ என முந்தாநாள் கூட யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு அதற்குள் சலித்து விட்டதா என்ன என யோசித்தபடி புரண்டு படுத்தேன். சலித்துக் கொள்ளும் நபரா தாத்தா?
பாரம்பரியமாக கடலூரில் வணிகக் குடும்பத்தை உடையது தாத்தாவுக்கான பின்னணி. இங்கே வெள்ளைக்காரன் காலத்தில் வண்டி கட்டி வந்து குன்று பிடித்து அவருடைய பாட்டனோடு சேர்ந்து பாடுபட்டு தரிசை நஞ்சையாக்கியது பற்றி அடிக்கடி தாத்தா சொல்வார்.
‘குன்றா?’ என நாங்கள் வியந்தபோது ‘ஆமாடா பையா.. நீ நிக்கிற எடுத்துலலாம் கடும்பாறை.. நானு, எங்கப்பன், எம்பாட்டன் மூணு பேருமே நெம்பி நவத்துனோம். இப்ப ஓடையோரம் சொத்துகொளாபழம் பறிக்க ஏறி எக்குறீங்க பாரு.. அந்த கல்லு தான் அது.’ என மேலும் பிரமிக்க வைப்பார். திருவிழா நெருங்கும் நேரங்களில் ஓடைக் கரையைத் தோண்டி ஊறல் போடுவார் தாத்தா. அரிதாக இப்படி நோம்பிகளிலும் உழைத்த களைப்பு தெரியாமலிருக்கவும் அவர் குடிப்பதுண்டு. அது போன்ற சமயங்களில் தாத்தாவை சந்திக்க நேர்பவர்கள் பாக்கியவான்கள். ஊறல் சாராயத்தோடு தொட்டுக் கொள்ள காட்டுக்கறி தயாராகியிருக்கும். வயக்காட்டில் சிக்கும் முயலோ, கௌதாரியோ சமயங்களில் காயம்பட்ட கோழியோ ஒரு மணி நேரத்தில் காட்டுக்கறியாக மாறிவிடும். கிணற்றுமூலையிலிருக்கும் கொய்யா மரத்தடியில் அடுப்பு மூட்டி செடிகளுக்கு நீர் ஊற்றும் பானையிலேயே கறியை வேகவிட்டு பச்சை மிளகாய்களை பறித்து கைகளிலேயே இடித்துப் போடுவார். வீட்டிலிருந்து எடுக்கும் உபப்பொருட்களென்றால் அவை உப்பும் மஞ்சளும் தான்.
யாராவது வீடேறி உப்பும் மஞ்சளும் கேட்டால் காட்டில் கறி வேகிறதென பாட்டி புரிந்து கொள்வாள். ஆனால் காட்டில் சமைப்பது எதுவாக இருந்தாலும் ஊனான் இலையிலோ சிறு வாழையிலையிலோ கருப்பனாருக்கு ஒரு படையல் போய்விடும். விளக்கெரியும் தடுப்புக்குள்ளேயே ஒரு கற்பூர டப்பாவை ஒளித்து வைத்திருப்பார். படையலை வைத்து கற்பூரத்தை படக்கென கொளுத்தி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து எழுந்திருப்பார்.
யாராவது நாத்திகமாகப் பேசினால் ‘கருப்பன்னா மீச அருவாளோடயே எந்நேரமும் சுத்துறவன் இல்ல. இந்த காத்தும் மண்ணும் அசையிற மரம் மட்டையுமே கருப்பனோட பாகம் தான்’ என பயபக்தியோடு வானத்தை தொழுவார்.
போதையும் மழைக்காலமும் சேர்ந்த தாத்தா எங்களுக்கு வேறொருவராகத் தெரிந்தார். கூரைவழி ஈரம்சொட்டும் நீர்த்துளிகளைப் பார்த்தவாறே தன் கடந்த காலத்தை எங்கள் முன் நிகழ்த்திக் காட்டும் சாகசம் அவரது பேச்சில் முழுமையாக இறங்கியிருக்கும். சில நேரங்களில் பேச்சு சுவாரஸ்யங்களோடு நீண்டு பாட்டியின் பக்கம் திரும்பும். நரையால் மரித்து விடாத தன் காதலால் வயக்காட்டை நிரப்பும் சொற்கள் போதையின் அலையில் தளும்பி அந்நியோன்யத்தையும் நெருக்கத்தையும் பட்டவர்த்தனமாக போட்டுடைக்கையில் செவிகளைக் கொடுத்து அமர்ந்திருக்கும் நாங்கள் கூச்சத்தில் நெளியத் தொடங்குவோம்.
‘அவளுக்கு வீட்ட விட இந்தக் கரண்டு கொட்டா தான்டா ரொம்ப புடிக்கும். அப்பதான் மோட்டார் வந்த புதுசு. அங்கங்க களவாண்டுப் போறானுவனும் இராத்திரி கரண்டுக்கு தண்ணி கட்டவும் இங்க வந்து படுப்பேன். நாலு புள்ளைங்களையும் தூங்கப் போட்டுட்டு எம் பின்னாடியே வந்துடுவா.. வூட்டுக்கு போடின்னாலும் ஊஹூம்.. அப்படித்தான் கிழக்க கம்பத்து வயல்ல மஞ்ச போட்டுருந்த நேரம்.. மேற்கால வாம்படைய திருப்பி விட்டுட்டு நாங்க கரண்டு கொட்டாய்குள்ள போயிட்டோம். நேரம் போனதே தெரியல. தெக்கு காட்டு பரமசிவம் இருக்கானே.. அவங்க பாட்டன் கூவிகிட்டே வர்றான். என்னாச்சோ ஏதாச்சோனு இவ துணிய அள்ளி போட்டுக்கிட்டு மூலைல போய் ஒண்டுறா.. நான் அவன் கிட்ட வர்றதுக்கு முன்னாடி அவன்கிட்ட ஓடி என்னான்னேன்.. குடியான மவராசா தண்ணிய அங்க வுட்டுட்டு இங்க தூங்குறியா போய் பாருன்னான். ஓடிப்போய் பாத்தா செறவு நெம்பவேயில்ல.. பூரா தண்ணியும் எலிப்பொடைல பூந்து ஓடைல ஆறு மாதிரி ஓடுது. அடச்சைனு ஒரே வெக்கமா போயிடுச்சு” எனச் சொல்லும்போது எங்கள் முகமே வெட்கத்தில் சிவந்து போகும்.
‘சமயத்துல இராத்தங்கலுக்கு வாடினு கூப்பிடுவேன். வரமாட்டேன்னு ரொம்ப பண்ணுவா. அப்புறம் என்னடான்னா ஒண்ணுமே நடக்காத மாதிரி குத்தாம இருக்க வைக்கபில்லையும் உறுத்தாம இருக்க கோணிச்சாக்கையும் கொண்டுட்டு போயி பகுமானமா கொட்டாயில வைப்பா.. ‘
இப்படிப்பட்ட அனுபவங்களோடு அது குறித்தே புதிர்கதைகளையும் சமயங்களில் போடுவார் தாத்தா. விடை தெரியும்போது ‘அடச்சீ.. போ.. தாத்தா..’ என பொய்யாக முகத்தைத் திருப்பிக் கொண்டு நாங்கள் ஓடுவோம்.
சிலநேரங்களில் இப்படியாக பேசிக்கொண்டிருக்கும்போது பாட்டியிடம் மாட்டிக்கொண்டு ‘பேரப்புள்ளைங்க கிட்ட எதப்பேசணும் எதப் பேசக் கூடாதுன்னு விவஸ்த இருக்குதா உனக்குலாம்…’ என்ற வசுவுகளோடு மண்டையில் கைக்குக் கிடைத்தவற்றால் விழும் மொத்துகளையும் வாங்கிக் கொண்டு சிரிப்பார்.
உழைத்த நேரம் போக மீதிப் பொழுதுகளில்
இவ்வளவு வக்கனையாக பாட்டியுடன் வாழ்ந்து காட்டுக்கறி சமைத்துத் தின்று போதையேறிக் கரண்டு கொட்டாயில் கிடந்தபோதும் தன் பிள்ளைகளுக்கு சாராய வாடை மட்டுமல்ல.. தன் காட்டுச்சமையலின் ருசியும் தெரியாமல் பார்த்துக் கொண்டது விநோதமாக இருந்தது.
‘வயக்காடு போதைடா.. சேத்துல கால் வைக்காத வரைக்கும் தான் தயக்கமெல்லாம்.. காட்டுல இறங்கி ரெண்டொரு நாள் வேல செய்ய ஆரம்பிச்சிட்டா அப்புறம் இந்த ருசியே பழகிடும். லாபமோ நட்டமோ செடி பயிரு மரம் மட்டை காக்கா குருவி மாடுனு இதுங்ககூடவே வாழ்ந்துடலாம்னு தோணும். அதான் அவனுங்கள காட்டுல அண்டவே விடுறது இல்ல. என்ன படிச்சாலும் பெரிய பதவிக்கு போனாலும் இந்த சேறு படிஞ்ச கோவணம் தானே எல்லாத்துக்கும் முதலு.. அது எப்பவும் மாறாது இல்ல..’ என அவ்வப்போது சொல்லிச் சிரித்தது நேற்று சொன்னது போலிருக்கிறது.
விடிகாலையிலேயே எங்களை பாட்டி எழுப்பிவிட்டு கோயிலை சுத்தம் செய்ய அனுப்பினாள். தாத்தாவின் கால்படாத கோயில் புதர் மண்டிக் கிடந்தது. மண்வெட்டியால் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தபோது விக்னேஷ் “எனக்கு ஒரு விஷயம் தெரியும்” என்றான்.
நான் என்ன என்பது போலப் பார்த்தேன்.
“தாத்தாவுக்கும் கறிக்கஞ்சி தரப்போறாங்க” என்றான் சலனமில்லாமல்.
நான் எதுவும் பேசாமல் குனிந்து களைகளை அகற்றினேன். எல்லோருமிருந்தும் யாருமற்றிருப்பதன் அவஸ்தை தாத்தாவின் வீடுமுழுக்க தவழ்வதை பாட்டி ஏதேனுமொரு பாடலைப் பாடி விரட்டிக் கொண்டேயிருந்தது நினைவுக்கு வந்தது.
சித்தியும் அம்மாவும் பொங்கலிட்ட பிறகு
அப்பாவும் சித்தப்பாவும் அறுத்த கோழிகளின் ரோமங்களை ஆயத் தொடங்கினார்கள். சாமி கும்பிடும்போது பெரிய மாமா மட்டும் வந்து நின்றுவிட்டுப் போனார்.
“எல்லாரும் காட்டுக்கு வர மலைக்கிறாங்கப்பா” என அவராகச் சொன்னபோது நாங்கள் எதுவும் பேசவில்லை. பாட்டி “யாருக்கும் ஒரு குறையும் வரக்கூடாது சாமி” என நெற்றி நிறைய நீறையள்ளிப் பூசிக்கொண்டு படையல் இலையை எடுத்துக் கொண்டு நடக்க “படையல் இங்கயே தான பாட்டி இருக்கணும்?” என்ற என்னை சித்தப்பா “சும்மாயிரு” என்று அடக்கினார்.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் நாங்கள் மௌனமாகப் பின்தொடர்ந்தோம்.
குழம்புத் தயாராகும் நேரம் முழுக்க எல்லோரையும் கனத்த மௌனம் சூழ்ந்திருக்க சமையலை சுவையாக்கத் தோதான வழிகளைச் சொல்லி பாட்டி மட்டும் பரபரத்துக் கொண்டிருந்தாள்.
உள்முற்றத்து நீள்வராந்தாவில் வரிசையாக இலைகள் போடப்பட்டு கறிவிருந்து பரிமாறப்பட்டது.
கண்ணாடிக்காரர் ஆ..ஊ.. என ஊதியபடி இரசித்துச் சாப்பிட்டார்.
பரசு மாமா “என்ன இருந்தாலும் கிராமத்து சமையலே தனி ருசிதான்.எங்க வீட்ல செய்றவங்களுக்கு இந்த ருசி வரவே மாட்டேங்குதே” என்றார்.
“உங்க வீடா? அப்படினா இது யாரு வீடு?” என்றபடியே ஈரல் மிளகு வறுவலைப் பரிமாறினாள் அம்மா.
“இததானுங்க பைபாஸ் முழுக்க சட்டிக்கறினு சொல்லி ஏகவிலைக்கு வித்துட்டு இருக்கானுங்க..” என்றபடி குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டாள் சின்ன அத்தை.
அனைவரும் உண்டப்பின் ஒன்றாக அமர்ந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அது நண்பகலின் மௌனத்தை விட வெறுமையானதாக இருந்தது.நேரம் மதியத்தைக் கடந்து கொண்டிருக்க கருப்பனுடைய படையல் இலையின் மீது மொய்த்த ஓரிரு ஈக்களை அம்மா அருகிலிருந்து விரட்டிக் கொண்டிருந்தாள்.
அப்பா காலண்டரில் நேரம் பார்த்து இரண்டு மாமாக்களையும் அழைத்து சைகை மொழியில் ஏதோ பேச, காத்திருந்தது போல சித்தப்பா படையல் இலையை கையில் எடுத்துக் கொண்டு தாத்தாவின் அறைக்குள் நுழைந்தார். பின்தொடர எத்தனித்த எங்களை வெளியிலேயே நிறுத்திவிட்டு மற்ற ஆண்களும் உள்ளே சென்றனர்.
பெண்கள் எதற்காகவோ தயாராக இருப்பது போல தூணில் சாய்ந்து நின்றிருந்தார்கள். சற்றுநேரத்தில் அப்பா எதையோ சாதித்தவர் போல வெளியே வர மற்றவர்களும் தலை தொங்க பின்தொடர்ந்து வந்தார்கள்.
“பெருசுக்கு சின்னமவன் மேலதான் பாசம் அதிகமாட்டங்குது. அவரு ஊட்டுன பின்னாடி தான் டக்குனு நின்னுடுச்சு” என்றார் அப்பா.
“நான் கூட இன்னிக்கும் முடியாதுன்னு நெனச்சிட்டு இருந்தேன். கருப்பனால தான் முடியணும்னு இருக்கு” என சித்தப்பா பெருமூச்சு விட அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த பாட்டி “ஐயோ சாமி… என்னைய தனியா விட்டுட்டு போய்டியா.. ” என வீடதிரக் கத்தியபடியே எழுந்து உள்ளே ஓடினாள். மற்ற பெண்கள் வரவழைத்துக் கொண்ட அழுகையோடு பின்னாலேயே ஓடினார்கள். ஒரே ஒரு கணத்தில் அவ்வீடு கலகலப்பின் வெளியை உரித்துவிட்டு துயரத்தின் இருண்மையை உடுத்திக் கொண்டு தயாரானது. யாரோ போனை எடுத்து “டுமாரோ ஈவ்னிங் வி வில் ரிட்டர்ன்” எனக் கிசுகிசுத்தபடியே வெளியே போனார்கள்.
காரியம் முடிந்துத் திரும்பி வரும்போது சித்தி அம்மாவிடம் அன்று இலையிலிருந்த கறிச்சோற்றில் பாட்டி கை வைக்காததை கனத்த குரலில் பேசிக்கொண்டு வந்தாள். அதன்பிறகான நாட்களில் பாட்டி அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதை நாங்கள் வெற்றுப் பார்வைகளோடு கடந்து கொண்டிருந்தோம்.
வாழ்த்துக்கள்.. அருமையான எழுத்து நடை.. நேரில் கதை சொல்வது போல இருந்தது.. தொடர்ந்து எழுதவும்..
மிக அருமை. நெஞ்சம் தொட்டது. வாழ்த்துக்களும், பேரன்புகளும்
சகோ. 💐