ஜப்பானிய பழங்குறுநூறு 47-50

பாடல் 47: நலிவுதான் தனிமைக்குத் துணையோ?

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
八重むぐら
しげれる宿の
さびしきに
人こそ見えね
秋は来にけり

கனா எழுத்துருக்களில்
やへむぐら
しげれるやどの
さびしきに
ひとこそみえね
あきはきにけり

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: மதகுரு யெக்யோ

காலம்: கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி. 

கி.பி 10ம் நூற்றாண்டில் கோபே அருகில் மதகுருக்களின் ஆசிரியராக இருந்தார் என்பதைத் தவிர இவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் வரலாற்றில் அவ்வளவாகக் காணப்படவில்லை. இத்தொடரின் 42வது பாடலை இயற்றிய மொதோசுகே, 48வது பாடலை இயற்றிய ஷிகேயுக்கி, 49வது பாடலை இயற்றிய யொஷினோபு ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 56 பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: தனிமையின் வலியை உணர்த்துதல்.

பாடலின் பொருள்: களைகள் மண்டத் தொடங்கிப் பாழடைந்து கொண்டிருக்கும் இவ்வரண்மனைக்கு நாளடைவில் மக்கள் வருவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் நான் எதிர்பார்த்ததைப் போலவே இந்த ஆண்டும் இலையுதிர்காலம் தவறாமல் வந்துவிட்டது.

இத்தொடரின் 35வது பாடலில் மனித மனங்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் இயற்கை எப்போதும் மாறுவதே இல்லை என்று பார்த்தோம். அதேபோன்ற கருத்தை உடைய பாடல் இது. ஜப்பானிய இலக்கியங்களில் இலையுதிர்காலம் தனிமையின் குறியீடு என்பதைக் கண்டோம். இப்பாடலில் இலையுதிர்காலம் வந்தது என்பதைத் தனிமை சூழ்ந்தது என்னும் பொருளிலும் பொருத்திப் பார்க்கலாம். 

இத்தொடரின் 14வது பாடலை இயற்றிய அமைச்சர் தோரு தலைநகர் கியோத்தோவில் கவாராயின் என்றோர் அரண்மனையைக் கட்டினார். வீட்டைச் சுற்றிப் பரந்து விரிந்த தோட்டம் பலரைக் கவர்ந்தது. தோருவுக்குப் பின் அவரது பேரன் அன்போபோஷி காலம் வரை தோருவின் குடும்பம் இங்கே வசித்து வந்தது. அப்போதெல்லாம் பல புலவர்கள் ஒன்றுகூடிக் கவிதைப்போட்டிகள், கவியரங்குகள் நடத்துவதுண்டு. ஆனால் அன்போபோஷிக்குப் பிறகு சீரும் சிறப்பும் குன்றி இந்த நிலைக்கு ஆளாகிவிட்டது. இன்று அது ஓர் அழிவின் அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறது.

வெண்பா:

மாற்றம் புகுதலும் சூழ்நிலை மாறலும்
ஏற்றம் கருதியே ஆயினும் – ஆற்றல்
குறைதலைக் காலம் நடத்திடும் எங்கும்
தனிமை தருமே நலிவு


பாடல் 48: இதயஅலை மோதும் மனக்கல்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
風をいたみ
岩うつ波の
おのれのみ
くだけて物を
思ふころかな

கனா எழுத்துருக்களில்
かぜをいたみ
いはうつなみの
おのれのみ
くだけてものを
おもふころかな

ஆசிரியர் குறிப்பு:


பெயர்: புலவர் ஷிகேயுக்கி
காலம்: கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி.


கி.பி. 858 முதல் 876 வரை ஜப்பானை ஆண்ட பேரரசர் செய்வாவின் கொள்ளுப்பேரன் இவர். இருப்பினும் அரண்மனையில் பெரிய பதவிகளை வகிக்கவில்லை. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 67 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர்.


பாடுபொருள்: காதலியின் பாராமுகம் தரும் வலி.


பாடலின் பொருள்: காற்றினால் உருவான அலைகள் பாறைமீது மோதும்போது அப்பாறை எதுவும் செய்யாது அசையாதிருப்பினும் அவ்வலைகள் தானே சிதறுவதுபோல் அசையாத உன் கல்மனம் அதை நோக்கிவரும் என் இதயத்தை நொறுக்குகிறது. நேரடியாகப் பொருள்தரும் ஓர் எளிய அகப்பாடல். புலவர் தன் நிலையை நேரடியாக விளக்குகிறார். முதல் இரண்டு அடிகள் பாறைமேல் மோதும் அலைகளைக் கூறுகிறது. கடைசி இரண்டு அடிகள் சிதறுவதைக்
கூறுகிறது. இடையிலுள்ள 3வது வரி “எனக்கு மட்டும்” என்பதையும் சேர்த்துப் படிக்கும்போது பாறைமீது மோதும் அலைகள் சிதறுவதைபோல் உன் கல்மனத்தின்மீது மோதும் என் இதயமும் சுக்குநூறாகிறது எனும் பொருளைத் தருகிறது.

வெண்பா:
காற்றால் தவழும் அலையின் வடிவமதைத்
தேற்றார் புரையச் சிதைத்திடும் – வேற்றாள்
புரையக் கரையாத வஞ்சியின் நெஞ்செனும்
கல்லால் உடையும் மனது


பாடல் 49: விளக்கன்ன ஒளிர்தலும் தணிதலும்

மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
みかきもり
衛士のたく火の
夜は燃え
昼は消えつつ
物をこそ思へ
கனா எழுத்துருக்களில்
みかきもり
ゑじのたくひの
よるはもえ
ひるはきえつつ
ものをこそおもへ

ஆசிரியர் குறிப்பு:


பெயர்: புலவர் யொஷினொபு
காலம்: கி.பி. 921-991.

கொக்கின்ஷூ இலக்கியம் தொகுக்கப்பட்ட காலத்தில் மிகவும் புகழ்வாய்ந்த புலவரும் அமைச்சருமான யொரிமோத்தோவின் மகன் இவர். இவரது பரம்பரையானது வழிவழியாக அரண்மனையின் மதவிவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சர் பொறுப்பை வகித்து வந்தது. மன்யோஷூ தொகுப்பின் பாடல்களுக்கு அடிக்குறிப்புகள் எழுதிய ஐவர் குழுவைத் தலைமை தாங்கியவர் இவர். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 126 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. யொஷினொபுஷூ என்ற
இவரது தனிப்பாடல் திரட்டும் உள்ளது. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்று இருப்பவர். பாடுபொருள்: நிறைவேறாத காதலின் துயரம்.
பாடலின் பொருள்: இதோ இந்த அரண்மனையின் காவலர்கள் சுழற்சி முறையில் இரவில் தீப்பந்தங்களைக் கொளுத்தியும் பகலில் அவற்றை அணைத்து வைத்து வேறு அலுவல்களில் ஈடுபடுவதும் போல என் நெஞ்சமும் காதலால் இரவில் விம்மியும் பகலில் தணிந்தும் இருக்கிறது.

முந்தைய பாடலில் கூறப்பட்டதுபோலவே இதுவும் காதலியால் பாதிக்கப்பட்ட ஓர் ஆணின் உள்ளக்குமுறலாக இருக்கிறது. இது தோல்வியடைந்த காதலா அல்லது வெற்றியடைய இன்னும் வாய்ப்புள்ள காதலா என்பது தெளிவில்லை. பகலில் வேறு அலுவல்களில் ஈடுபடுவதால் காதலின் பாதிப்பு குறைவாக உணரப்படுகிறது எனவும் சில உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். அரண்மனையில் இரவு விளக்குகளை ஏற்றச் சுழற்சிமுறை பயன்படுத்தப்பட்டது என்ற வரலாற்றுக் குறிப்பு இப்பாடலில்
பொதிந்துள்ளது.

வெண்பா:
கொளுத்தவே பாயும் ஒளியெனக் காதல்
தளும்புதே அந்தியில் பின்பு – வெளுக்கவே
மங்கிடும் செந்தீச் சுளுந்தாய்ப் பகலில்
அணையுதே காதல் நெருப்பு

*சுளுந்து – தீப்பந்தம்


பாடல் 50: இறப்பினும் வாழினும் ஒந்தொடிகண்ணே!

மூலப்பாடம்:


கான்ஜி எழுத்துருக்களில்
君がため
惜しからざりし
命さへ
長くもがなと
思ひけるかな
கனா எழுத்துருக்களில்
きみがため
をしからざりし
いのちさへ
ながくもがなと
おもひけるかな

ஆசிரியர் குறிப்பு:


பெயர்: புலவர் யொஷிதகா
காலம்: கி.பி. 954-974.


இத்தொடரின் 45வது பாடலை (வெறுமை இறப்புதான் முடிவோ?) இயற்றிய இளவரசர் கொரேததாவின் மகன் இவர். பிற்காலத்தில் சிறந்த 3 எழுத்து வரைகலை நிபுணர்களில் (calligraphy masters) ஒருவராகத் திகழ்ந்த யுக்கினாரி இவரது மகன் ஆவார். யுக்கினாரி பிறக்கும்போது யொஷிதகாவுக்கு வயது 18தான். தனது 21ம் வயதில் சின்னம்மை நோயால் தாக்கப்பட்டு இவரும் இவரது இரட்டைச் சகோதரனும் இறந்துவிட்டார்கள்.
தீவிரமாகப் புத்த மதத்தைப் பின்பற்றியவர். கி.பி 1119ல் இயற்றப்பட்ட ஒகாகமி என்ற நூலில் இவரது மரணத்தைப் பற்றிய குறிப்பு வருகிறது. தான் இறந்தபிறகு எரியூட்டவேண்டாம் எனத் தன் தாயிடம் கடைசி ஆசையாகக் கேட்டுக்கொண்டார். ஏனெனில் மீண்டும் உயிர்பெற்று தாமரைச் சூத்திரம் நூலைப் படித்துப்
புத்தரின் பாதங்களை அடைய விரும்பினார். ஆனால் இவரது தாய் இதைப் பொருட்படுத்தாமல் யொஷிதகாவின் உடலை எரியூட்டிவிட்டார். எனவே அடிக்கடி இவரது தாயின் கனவில் தோன்றிக் கடிந்து கொண்டிருந்தார். பின்னர் வானுலகில் இவர் நிரந்தரமாக இருந்ததாக அந்நூல் குறிப்பிடுகிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 12 பாடல்கள் உள்ளன.

பாடுபொருள்: காதலியைக் காணும் முன்பும் கண்டபின்பும் ஏற்படும் மாற்றங்கள்.

பாடலின் பொருள்: உன்னைக் காணும்முன் இறந்தாலும் கவலையில்லை என்றே எண்ணினேன். ஆனால் உன்னைப் பார்த்தபின்பு உன்னுடன் வாழ்வதற்காகவே நீண்டகாலம் வாழ விரும்புகிறேன். தொடர்ச்சியான பல காதல் தோல்விப் பாடல்களுக்கு அடுத்து ஒரு மகிழ்ச்சிப்பாடல். நேரடியாகப் பொருள்தரும் ஓர் எளிய அகப்பாடல். காதலர்கள் இரவில் சந்தித்துவிட்டு மறுநாள் காலை பாடல் புனைந்து
அன்பைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் வழக்கம் இருந்துவந்தது எனப் பார்த்தோமல்லவா? அதுபோன்ற இன்னொரு வழக்கம்தான் மூன்று இரவுகள் தொடர்ச்சியாக ஒன்றாகத் தங்குவது. காதலன் காதலியின் இல்லத்துக்குச் சென்று யாருக்கும் தெரியாமல் மூன்று இரவுகள் தொடர்ச்சியாகத் தங்கியிருக்க வேண்டும்.
பின்னர் நான்காம் நாள் காலை பெண்ணின் பெற்றோர்க்குத் தன்னை வெளிப்படுத்தியபின் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாகக் கருதப்படும்.

வெண்பா:
மறைவில் கலங்கேன் உயிரின் பிரிவைக்
குறைஇல் அகமுடன் ஏற்றேன் – நிறைமுக
வஞ்சியுன் காட்சியில் மாற்றினாய் எந்தன்
மகிழ்வுக்கு வேண்டாம் முடிவு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

Series Navigation<< தேடலும் மறத்தலும்வலிவிடு தூது >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.