- ஜகன்னாத பண்டித ராஜா
- ஜகன்னாத பண்டித ராஜா -2
- ஜகன்னாத பண்டித ராஜா -3
பாமினி விலாஸ

நாம் தொடர்ந்து காணப்போவது பாமினி விலாஸத்தின் அடுத்த பாகங்களையே!
அடுத்து வருவது ஸ்ருங்கார விலாஸ எனும் பகுதி. இந்நூல் ஜகன்னாதரின் வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கலாமென சமஸ்க்ருத பண்டிதர்கள் கருதுகின்றனர் என முன்பே கூறியிருந்தேன். இளம் மனைவியுடன் கருத்தொருமித்து வாழும் / வாழ்ந்த ஒருவனின் நினைவலைகளாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன இந்தக் கவிதைகள். இவற்றை ஆழ்ந்து படிக்கும்போது நமது சங்கக் கவிதைகளான அகநானூறு, எட்டுத்தொகை நூல்களின் சாயல் மிகுதியாகத் தெரிகின்றது. ஊடலும் கூடலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பிரிவின் வாட்டம் கனலெனச் சுடுகின்றது. படிக்கும் நம்மை வேறொரு உலகிற்கு கூட்டிச் செல்கின்றன இவை. சில செய்யுள்களின் (ஸ்லோகங்களின்) இனிமையைக் காணலாமா?
ஸ்லோகம் 3: அன்பிற்கிசைந்தவளின் அழகைப் போற்றும் காதலன்:
என் அன்பிற்கிசைந்தவளின் விவரிப்புக்கு அப்பாற்பட்ட ஒப்பற்ற இனிய வடிவம், அற்புதமான கண்களுடன் அமைந்து, நான் நினைவுகூரும்போதெல்லாம் எனக்கு ஆனந்தத்தைத் தருகின்றது. அந்த வடிவு, அவளுடைய காதிலிருந்து தொங்கும் காதணிகள் அவளுடைய கன்னங்களை வருடுதலாலும், அக்கன்னங்கள் சிறு வியர்வை முத்துக்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளதனாலும் போற்றுதலுக்குரியது.
ஸ்லோகம் 6: பெரியோர் ஆசியில் பிறக்கும் ஆனந்தம்.
காலைப்பொழுதில், பெரியவர்களை வணங்கி எழும்போது (நமஸ்கரிக்கும்போது) அவர்கள் “உனக்கு ஒரு மகன் பிறக்கட்டும்,” என ஆசிர்வதிப்பார்கள். அதனைக் கேட்கும்போது அன்பிற்கினியவளின் பார்வை பெருமதிப்புடனும், பேரானந்தத்துடனும் அருகே நின்றிருக்கும் தன் காதல் கணவனின்பால் சென்று படியும்.
ஸ்லோகம் 12: பிரிவின் துயரம்
அவளிடம் பொய்யாகச் சினந்துகொண்டு சென்றுவிடக் கூடிய வாய்ப்பினைப் பற்றி நான் பிரஸ்தாபித்தபோது, குனிந்து நின்ற அவள், கண்களில் நீர் ததும்பிவழிய, எனது சினத்தைத் தணிக்கும் அத்தனை சொற்களையும் கொண்டவளானாள்.
ஸ்லோகம் 18: விளையாட்டினால் விளைந்த குழப்பம்
தொய்ந்த உடலுடன் இருந்த அப்பெண்மணி, பெரியவர்களுடன் இருக்கும்போது என்னால் ஒரு தாமரை மொட்டினால் லேசாக அடிக்கப்பட்டதும், என்னைக் கண்டு அவளுடைய காதணிகள் லேசாக அசையவும், கொடிபோன்ற புருவங்கள் குனிந்து கீழ்நோக்கவும் குழப்பமடைந்தாள்;
ஸ்லோகம் 24: சினமும் சேர்க்கையும்
சினமடைந்த ஒரு நேரத்தில் சென்றுவிட்டு நான் இரு யாமங்கள் (ஆறு மணி நேரம்) கழித்து வாசலில் வந்து ஒரு பொய்யான பெயரைக் கூறவும், என்னை நன்கறிந்த அவள் மெல்லத் தன் இருப்பிடத்திலிருந்து செல்வத்தின் கடவுளைப்போல வெளிவந்தாள்
ஸ்லோகம் 35: விரிந்தும் சுருங்கியும் இருக்கும் ஜானகியின் கண்கள்
ஜானகியின் தாமரை மலர் போலும் அழகான கண்கள் ராமன்மீது படும்போதெல்லாம் அவனுடைய இளமையைக்கண்டு நாணத்தினால் சுருங்கியும், பின் அவனுடைய நல்ல குணம், வீரம், பலம், இனிமை இவற்றைக் கண்டு விரிந்தும் இருக்கும்.
ஸ்லோகம் 36: மிதிலையின் பிரஜைகளின் எண்ணம்
இந்த இளைஞன் சிவதனுசில் நாணேற்றி நண்பர்களின் கவலையை நீக்கி மிதிலையின் அரசனின் மகளை எந்த இடையூறுமின்றி மணந்து கொள்வானா?(மிதிலையின் பிரஜைகள் இவ்வாறெல்லாம் எண்ணினார்கள்)
ஸ்லோகம் 39: காதலனிடம் பேசும் மங்கை
காதலனை (கணவனை) பிரிந்ததால் பித்து பிடித்தவளாகிவிட்ட மங்கை, தன் தோழியின் கரத்தைப் பற்றியவாறு, அவளிடம் (அவளைத் தன் காதலனாக எண்ணிக்கொண்டு) இவ்வாறு கூறுவாள்: ஓ, கொடிய இதயம் படைத்த தலைவ்னே! இனி உன்னை நான் எங்கும் செல்ல விடமாட்டேன்.
ஸ்லோகம் 43: புதுத் தம்பதிகளின் ஆனந்தம்
புதிதாகத் திருமணம் செய்துகொண்ட இணைகளின் முதல்முறை இணையும் ஆனந்தம் வெற்றி நிறைந்தது. அவர்கள் கண்கள் ஆர்வத்தினால் ஒன்றையொன்று சந்திக்கின்றன; திரும்பவும் வெட்கத்தால் சுருங்குகின்றன.
ஸ்லோகம் 47: மான்விழியாளிம் பொய்க்கோபம்
அந்த மான்விழியாள் நான் அவளை சிறிய மண்ணுருண்டைகளால் பெரியோர்களிடையே அவள் இருந்தபோது அடிக்க முற்பட, அவள் நான் அதனைச் செய்யாதவாறு என்னைத் தடுத்தாள். எவ்வாறெனில் நாக்கை இரு வரிசைப் பற்களிடையே துருத்திய வண்ணம், கண்களை உருட்டி விழித்தவாறு.
ஸ்லோகம் 53: காதணியின் பெருமை
ஓ அழகான காதணியே, உனது புகழ்வாய்ந்த பிறவி வெற்றி நிறைந்தது. ஏனெனில் நீ உனது நல்ல செய்கைகளின் பயனாய், மான் போலும் கண்களை உடையவளின் தாமரை மலர் போலும் கைகளின் அசைவுகளை அவள் காதுகளை அலங்கரிக்கும்போது இடைவிடாது புதிதான வலியை உணர்ந்து, தன் முகத்தை ‘உஸ்’ஸெனும் சப்தத்துடன் திருப்பிக்கொள்ளும் அவளுடைய செய்கைகளை அறிகிறாய் (உணர்கிறாய்).
ஸ்லோகம் 55: பிரிவின் துயரம்
ஐயகோ! அந்த இளம்பெண் தன் வாழ்க்கையின் தலைவனை தடுமாற்றம் நிறைந்த கண்களால் நோக்குகிறாள்; சொரியும் கண்ணீரால் மார்பகங்கள் நனைகின்றன; கீழுதடு பெருமூச்சினால் துடிக்கிறது; தனது தனியிடத்தில் அமர்ந்து தாமரைபோலும் முகத்தை சன்னலில் வைத்தபடி, வீட்டின் மற்றவர்கள் தொலைதூரம் செல்லும் அவனுக்கு மங்கலச் சொற்களைக் கூறிடும்போது; (இவ்வாறு செய்கிறாள்).
ஸ்லோகம் 59: சூரியோதயம்
அன்பிற்குரியவள் தன் காதலனிடமிருந்து புலரும் காலைப் புழுதின் மங்கிய ஒளியை மறைக்க, தனது கைகளால் விளையாட்டாக அவன் கண்களை மூடுகிறாள். ஆனால் அவன் சூரியோதயத்தைக் காற்றில் மிதந்துவரும் தாமரைமலரின் வாசத்தினால் நன்றாகவே உணர்கிறான்.
ஸ்லோகம் 63: நந்தனின் மகனின் மயக்கும் அழகு
ஒரு நீண்ட பெருமூச்சு, வெளிறிய கன்னம், பற்றற்ற சிந்தை இவற்றை தேனைப்போன்ற இனிமை நிறைந்ததும், மற்றவர்களின் பார்வையைத் தன்பால் ஈர்க்கும் மாயம் நிறைந்ததுமான நந்தனின் மகனின் சொல்லவொண்ணாப் பேரழகைக்கண்ட போதிலிருந்தே பெரிய குடும்பத்துப் பெண்கள் அனுபவித்தனர்.
ஸ்லோகம் 64: கிருஷ்ணனின் ப்ரதாபங்கள்
ஒரு உயர்குடிப்பெண்ணுக்கு மாடுமேய்க்கும் பெரியவர்களிடமிருந்து கிருஷ்ணனின் பெருமைகளைக் கேட்டதால், அவர்கள் காளியனின் இறப்பைப் பற்றி விவரித்தும், எவ்வாறு கிருஷ்ணன் சர்ப்பங்களின் தலைவனான அந்தக் காளியனின் தலைமீது அவன் விஷ அலைகளை வெளியேற்றும்போது நடனமாடினான் எனக் கூறவும் கேட்டதனால் கன்னங்கள் வியர்க்கவும், மயிர்க்கூச்செடுக்கவும் செய்தது.
ஸ்லோகம் 69: ராவணனின் பரிதாப நிலை
அந்தோ! இலங்கையின் அரசன் வைதேஹியை (ஜானகியை) அடையமுடியாத வருத்தத்தினால் அலைக்கழிக்கப்பட்டு ஒருபொழுது ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சொற்களைப் பேசியும், ஒருபொழுது மௌனம் காத்தும், ஒருபொழுது அனைத்தையும் நோக்கி வெறித்த பார்வை பார்த்தும் நீண்ட பெருமூச்சை விடுகிறான்; தனது கைகால்களில் சிறிதேனும் பலம் இல்லாமலிருந்தான்.
ஸ்லோகம் 76: கண்களின் நிறம்
அந்த அழகானவளின் கண்களில் கறுப்பும் வெள்ளையுமாக இருப்பவை அவற்றின் உண்மை வடிவங்களல்ல; அவை கொடிய நஞ்சும், நல்ல அமுதமுமாகும். (ஏனெனில்), அவ்வாறு இல்லாவிடில் எங்ஙனம் இளைஞர்கள் மயக்கமடைகின்றனர் அல்லது அவர்களை நோக்கி வீசப்படும் நோக்கினால் மகிழ்ச்சியடைகின்றனர்?
சங்க இலக்கியங்களில் காணப்படும் வருணனைகள் போலவே உள்ள பல ஸ்லோகங்களை நாம் ஜகன்னாத பண்டிதரின் எழுத்துக்களில் காணலாம். ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு வலிந்து நோக்கத் தேவையில்லை. இங்கு ஒரேயொரு கருத்தை மட்டும் காணலாம்.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து (திருக்குறள்: 1091- குறிப்பறிதல்)
வள்ளுவர் கூறுகிறார்: இப்பெண்ணின் கண்களில் இரு விதமான நோக்குகள் உள்ளன. ஒன்று (காதல்) நோயை உண்டாக்கும் நோக்கு; மற்றொன்று அந்த நோய்க்கான மருந்தாக உள்ள நோக்கு.
காமத்துப்பால் குறள்களுள் ஒன்று இது. காலத்தால் பிற்பட்டவரான ஜகன்னாத பண்டிதர் திருக்குறளைப் படித்திருக்க வாய்ப்பில்லை. எவ்வாறு அதே கருத்தைப் பிரதிபலிக்கும் பாடலொன்றை இயற்றினார்? வியப்பாக இல்லை? மற்ற மொழிக் கவிஞர்களைப் படிக்க நேர்ந்ததில்லை! அவற்றிலும் இதுபோலும் கருத்துக்களைக் காணலாமோ என்னவோ!
ஸ்லோகம் 81: இடையின் பாரம்
யாருடைய பாதங்கள் மென்மையாக உள்ளனவோ அவள் தெருவில் செல்லும்போது தனது இடையின் பாரத்தால் வருந்துகிறாள்; ஐயோ! அவளுடைய வடிவை எல்லாப் பக்கங்களிலிருந்தும் பார்ப்பதனால் நான் அல்லற்படுகிறேன், உறுதி குலைகிறேன்.
ஸ்லோகம் 86: தாமரை மலர் போன்ற சீதையின் கரம்
பூமிதேவியின் மகளான சீதையின் கரம் ராமனின் கரத்தால் பற்றப்பட்டபோது வியர்வையாலும் நடுக்கத்தாலும், இளங்காற்றினால் தெளிக்கப்பட்ட பனித்துளிகளைக் கொண்ட காலைநேரத்து தாமரைமலரின் அழகை அடைந்தது.
ஸ்லோகம் 90: சீதை ஒளிந்து கொண்ட இடம்
தன் கணவனைத் தவிர மற்றவர்களின் பார்வை இடிபோன்று தன்னைத் தாக்காமலிருக்க, சீதை தனது அன்புக்கணவனின் உள்ளத்தினுள் புகுந்தாள். அவனும்கூட மற்றொரு பெண் ஒரு பாம்பு போலத் தன்னிடம் வந்துவிடாமலிருக்க அவளுடைய உள்ளத்தில் புகுந்தான்.
ஸ்லோகம் 97: ஹரியைக் கண்ட வ்ரஜாநகரப் பெண்கள்
ஹரியைக் கண்டதும் வ்ரஜா நகரத்துப் பெண்டிர் தமது நிலா போன்ற முகங்களை தங்கள் மேல்துகிலின் நுனியால் மறைத்துக் கொண்டனர். ஆனால் அவன்மேல் கொண்ட காதலால் உண்டான புல்லரிப்பால் அவர்களது இடையிலணிந்த வஸ்திரங்களின் முடிச்சுகள் திடீரென அவிழ்ந்தன.
ஸ்லோகம் 101: கேள்வியும் விடையும்!
‘ஓ, மெல்லிடையாளே, நீ ஏன் இவ்வாறு தளர்ந்து காணப்படுகிறாய்?’
‘மற்றவர்களின் சமாசாரங்களைப் பற்றி உனக்கென்ன கவலை?’
‘எனது மகிழ்ச்சிக்காக அதை நீ சொல்லேன்.’
‘ஓ பயணியே, உனது மனைவி உனக்கு அதைப் பற்றிக் கூறுவாள்.’ (வளரும்)
ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் ‘ பிரமாதம் ‘. இதன் முதல் பாகத்தையும் படித்து விட்டு வந்து தான் இதைப் படித்தேன் . தமிழின் சங்க இலக்கியங்களோடும் திருக்குறளோடும் ஒப்பிட்டு இந்தப் பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள விதம் இன்பம் சேர்க்கிறது .
ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் சமஸ்க்ருதப் புலமையும் உள்ள ஒருவரால் தான் இது போன்ற பழமையான, பலர் அதிகம் அறிந்திராத ஜெகந்நாத பண்டிதரின் ‘பாமினி விலாச ’ போன்ற இன்ப இலக்கியங்களை எல்லாம் சிறப்பாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடியும் .
முன்பு , கௌசிகன் எழுதிய ‘பாமினிப் பாவை ‘ சரித்திர நாவல் கல்கியில் வந்த ஞாபகம். இதனுடன் தொடர்புடையதா என்று தெரியவில்லை .
இதை அழகியசிங்கரின் கலை புதிது குழுவிலும் பகிர்ந்து கொள்கிறேன் . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் . 🙏