சிவிங்கி – அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 4 in the series சிவிங்கி

குகைச் சிறப்பு  

மெழுகு திரிகள் பிரார்த்தனை நிலையம் போல் எரிந்து ஒளியைப் பரப்பும் குகை அது. பழையதாக சுவரெல்லாம் தண்ணீர் கசிந்து உப்புப் பூத்து பச்சையாக பாசி பிடித்த, கூடுதல் வசிப்பிடத் தேவைக்காகக் கொஞ்சம்போல் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை இருப்பிடம். 

இரண்டு நூறுகோடி மனித இனத்தோரும், மற்றபடி மொத்தமாக ஒன்றரை மில்லியன் மற்று உயிரினங்களும் சுவாசித்திருக்கும் உள்வெளி இந்தக் குகை. அடுக்கக வசதி நிறைந்த குடவரைக் குடியிருப்புகளில் தகுதி நோக்கி பலதரப்பட்ட உயிரினங்கள் வசிக்குமிடம் விநியோகிக்கப் பட்டிருகிறது.

குகை வாசிகள்

 முதல் மாடி கடைசி இரண்டு குடியிருப்புகள் குரங்கினக் குடும்பங்கள் சுக வாழ்வு வாழ ஒதுக்கப்பட்டவை. அந்த வசிப்பிடத்துக்கு முன்பு, சூரியனை முன்னிட்ட கிரகத் தொகுதியில், செவ்வாய்க் கிரகத்து இனத்தினர் வாழுமிடம். 

அதற்கு முந்திய மனை பாரம்பரியம் மிக்க கரடிக் குடும்பம் வசிப்பது. ஆறு தலைமுறையாக பாரம்பரிய இசை ஆசிரியர் மற்றும் இசை வல்லுநராக சமூகக் கடமை ஆற்றும் குடும்பம் அது. 

சகவாழ்வு வாழும் தரை ஆமைக் குடும்பம் அடுத்து வசிப்பது. கதவு  திறந்தே இருக்கும் வசிப்பிடம் இது. வாசலில் மணி ஒலித்துக் கதவு திறக்கக் கிளம்பி வந்தால் அடுத்த நாள் காலை அநேகமாக வாசலுக்குப் போய்ச் சேர முடியும். 

மரபணு மறுசீரமைப்பு

ஆமைகளின் இயக்கத்தை வேகமாக்க மரபணு மாற்றம் செய்ய கரடி வைத்தியக் குடும்பம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இளம் ஆமைகள் இந்தச் சோதனைக்கு உட்படுத்தப் படவில்லை. 

நூற்றுப்பத்து வயதான முதிய ஆமைகள் முழு ஒத்துழைப்பு நல்கிட அவற்றில்   மரபணு மறுசீரமைப்பு நடத்திய பிறகு அவ்விரு ஆமைகள் வேகம் கணிசமாகக் கொண்டன. 

எனில் அவை பின் நோக்கி வேகமாகப் போகத் தலைப்பட்டன. அவற்றின் பசி கணிசமாகக் குறைந்து, பின்நோக்கிப் போகும் அவ்வாமைகள் குகைப் பொழுதுபோக்கு மையத்தில் ஆடிப்பாடி, பின்னால் ஓடிக் குழந்தைகளுக்கு நகைச்சுவையான நேரம் நல்குகின்றன. 

பாரவிப் பெண் பொம்மைகள் இயல்பும் திறனும்

முடிந்தது, இன்று போய் நாளை வாருங்கள் என்று பிரபஞ்ச அரசு அவர்களை நிறுத்திக் கொள்வதோடு இந்த ஆட்ட பாட்டமெல்லாம் முடியும். எவ்வளவு நேரம் தான் குழந்தைகள், பின்னால் நகரும் ஆமைக் கோமாளித்தனம் காண முடியும்? அழகான பாரவிப் பொம்மைப் பெண்களா அவை? 

பாரவிப் பெண்கள் அவ்வப்போது மீள் உயிர் கொண்டு குழந்தைகளோடு விளையாடி முடித்து மறுபடி பொம்மையாகிற, ’பகுதி உயிர்’களாகும். அவற்றோடு கூட விளையாடும் குழந்தை நல்கிய பெயர், பள்ளிப் பெயர், பெற்றோர் விவரம் ஆகியவற்றையும் சிநேகிதர் பெயர்களையும்  நினைவகத்தில் பதிந்து வேறு குழந்தைக்குக் கைமாறும் போது  அத்தகவலும் அழிக்கப்படும்.

 அப்படியான ஒரு சூழலில் குழந்தைகள் பொழுதுபோக்கு இல்லத்தில் தொடுமொழிக் கூச்சல் உயர்வதில் இந்த நிகழ்வு தொடங்குகிறது. மீள் உயிர் பெற்ற பாரவிப் பெண் பொம்மையின் தொடு குரல் அது – 

பாரவிப் பொம்மைப் பெண்ணின் பெயர்   

 நான் கேத்தி இல்லை. எனக்கு ஏற்கனவே அல்லி என்று பெயரிட்டிருக்கிறாள் எனக்கு சிநேகிதியாக இருந்த   ஆனைக்குட்டி கோதை. 

பொம்மைக்கு முழு உயிர் வந்து தன் இருப்பை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது. எனில் கேத்தி என்று பெயரிட்டாகி விட்டது, அந்த பாரவிப் பெண் பெயர் அல்லி என்று வேறு யார் சொன்னாலும். 

சரி, நான் இரவு நேரங்களில் கேத்தியாகவும் பகலில் அல்லியாகவும் இருக்கிறேன். பிளவுபட்ட ஆளுமை பாரவிப் பெண்ணுக்கு இருக்கக் கூடாதா?

 என்றும் இன்னும் பலவுமாக செயற்கை அறிவோடு அரற்றிக் கொண்டிருக்கிறாள் அந்தப் பொம்மைக் குட்டி. எல்லாம் வாணி என்ற மனிதச் சிறுமி,  பாரவிப் பொம்மையை குகைப் பொழுதுபோக்ககத்தில் வாங்கி வந்ததில் தொடங்கியது. ஒரு மாதம் விளையாடிவிட்டுத் திருப்பிக் கொடுத்து வேறொரு பொம்மை பெறலாம்.

பாரவிப் பொம்மையை வைத்து அதற்கு முன் விளையாடிய கோதை என்ற ஆனை இனச் சிறுமி பொம்மையைத் திருப்பித் தந்ததும் தகவல் சரியாக அழிபடாமல் போனது. 

கோதை குகையின் எந்தப் பகுதியில் வசிக்கிறாள் என்று ஏனோ பொழுதுபோக்ககத்தில்   பதிந்திருக்கவில்லை. வேற்றுப் பிரபஞ்சத்திலிருந்து வந்தவளாக இருக்கும். வாணி என்ற மானுடச் சிறுமியானால் இந்த பாரவிப் பெண் தவிர வேறு கருதினாளில்லை. ஆயிரம் பொம்மைகள் சேர்த்து வைக்கப்பட்டுக் குழந்தைகளுக்குக் கிரமமாக  வழங்கப்படும் இடம் இது.

பொழுதுபோக்ககக் காப்பாளர் தொல்வழக்குப்படி ’பெட்ரோமாக்ஸ் தான் வேணுமா’ எனக் கேட்டு வேறேதாவது பாரவிப் பெண்ணை அல்லது பாரவி போன்றொரு ’பகுதி உயிரி’யை  எடுத்துப் போகலாம் என்று சிபாரிசு செய்தார். 

குழந்தை அல்லவா, கிடைக்காது என்று தெரிய வந்திடப் பிடிவாதமும் பிரிமுறுக்கலும் கூடிக்கொண்டே போகிறது. 

குகையின் ஒரு தெரு முழுக்க குழந்தைச் சத்தம் மேலெழுந்து வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் சர்வ வியாபகமாகச் சூழ்ந்து நிற்கிறது. 

பெயர் சூட்ட ஒரு மோதல்

பிழை திருத்தப்பட்டது. இனிப் புதுப் பெயர் அளிக்கலாம் என்று பாரவிப் பெண் அறிவித்து அமைதியடைந்தது. 

நாங்கள் பெயர் சூட்டுகிறோம் என்று ஆர்வத்தோடு குகைத் தெரு முன்வருகிறது. அங்கேதான் மோதல் தொடங்கியது. 

தெருவிலிருப்பவர்கள் இரண்டு பிரிவாகி ஒரு பிரிவு பொம்மைக்கு விஜயதி என்றும் மற்றது அஜயதி என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கண்டிப்பாகச் சொன்னார்கள். 

விஜயதி என்று பெயர் சூட்டாவிட்டால் குகையை விட்டே அந்தப் பிரிவினர் வேறு புதுக் குகைகளுக்குக் குடிபுகுந்து விடுவதாகச் சொன்னது அடுத்து சம்பவித்தது. அஜயதி என்று பெயர் சூட்டாவிட்டால் காஸ்மாஸ் பிரபஞ்சத்திலிருந்தே விலகி எந்த விதத்திலும் அதன் பிரதி அல்லாத வேறு பிரபஞ்சத்தில் நுழைந்திடுவோம் என்றது மற்ற பிரிவு. 

யுத்தத்துக்கான முன்னறிவிப்பு கொடுத்து, அடுத்த மாதம் எட்டாம் தேதி ஏழரை மணிக்கு இரவில் போர் நடத்தி விஜயதியா அஜயதியா என்று பொம்மைக் குட்டிக்குப் பெயர் தீர்மானிக்கலாம் என்ற கருத்தில் மட்டும் இரு பிரிவும் ஒருப்பட்டிருந்தார்கள். 

யுத்த அறிவிப்பு   பழைய சம்பிரதாயப்படி காகிதத்தில் தான் எழுதி அறிவிக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான படிவத்தைப் பெற்று வர குகை நிர்வாக அலுவலகத்துக்குப் பிரிவுக்கு ஒருவர் ஆக இருவர் அனுப்பப்பட்டார்கள்.

 ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, கட்டை விரலைக் கடித்து, மூக்கை உடைத்துக்கொண்டு அவர்கள் குகை நிர்வாக அலுவலகம் இருந்த இருட்தெருவில் ஓவென்று அலறியபடி நுழைந்தபோது, வீடுகளில் ஜன்னல் திறந்து, என்ன சமாசாரம் என்று கேட்டு, உடனே  அடைத்தார்கள்.

அவர்கள் போர்ப் படிவம் பெற்றபோது யாரெல்லாம் யுத்தமிட இருக்கிறார்கள் என்று கேட்டது குகை  அமைப்பு  நிர்வாகியான ஒட்டகச் சிவிங்கி.

ஒட்டகச் சிவிங்கி என்ற நிர்வாகி

 சாவதானமாக தெருவில் நுழைந்தபோதே தெருமுனை மரங்களை ஒட்டி நின்று கழுத்து உயர்த்தியது சிவிங்கி. சதா இருட்டில் இருந்து வெளிச்சம் காணாமல் இலைகள் தடித்திருந்த அம்மரங்கள் மாற்றியமைக்கப்பட்ட ஒளிச் சேர்க்கை மூலம் பச்சையம் chlorophyl உண்டாக்கி உயிர் மூச்சு விட்டுக் கறுத்துச் செழித்து வளர்ந்திருந்தன. தெரு வாசிகள் குகை வாசலுக்கு வேடிக்கை பார்க்க வந்து நின்றிருந்தார்கள். உறக்கத்தைப் புறக்கணித்த குழந்தைகளும் கூடத்தான்.

பாரவிப் பெண் பொம்மையை இடுக்கிக்கொண்டு அழுகை நிறுத்திய குழந்தை கழுத்து நீண்ட ஒட்டகச் சிவிங்கியைப் பார்த்து சிரித்து விட்டது. அதன் தகப்பன், அப்படிச் சிரிப்பது சீராக அமையாத உடலைக் கிண்டல் செய்யும் -body shaming-இல் பட்ட நாகரிகமும் பரிவுமற்ற செயல் என்று குழந்தை காதில் அவசரமாக ஓதிப் பாதுகாப்பாக  அணைத்தபடி நின்றான். 

இதையொன்றும் கவனிக்காத ஒட்டகச் சிவிங்கி இன்னும் கழுத்து நீட்டி மரத்தின் மேல் கிளைகளின் இலை பறித்து சுவாரசியமாக மென்றது. ஆறு கார்பன் டை ஆக்ஸைட் மூலக்கூறுகளும் ஆறு தண்ணீர் மூலக்கூறுகளும்  சேர்ந்தால் என்ன வரும் என்று பாடியபடியே கால்களை முன்னும் பின்னும் ஆட்டி நாட்டியமும் ஆட, குழந்தை என்றில்லை அங்கே குழுமிய சகல உயிரினங்களும் நகைத்தது அபூர்வமாகத் தோன்றியது. நலமான, அறிவு தரும் சிரிப்பு அது.

நேசத்தோடும் கையில் இடுக்கிய பாரவி பொம்மைக் குட்டியுமாகக் குழந்தை சிவிங்கி அருகில் போய், நீயே இவளுக்குப் பெயர் வை என்று உரிமையோடு கேட்டுக்கொண்டது. 

கருத்த மரங்களின் கிளைகளிலிருந்து இன்னும் சிறிது  இலைகளைச் சுவாதீனமாகப் பறித்து உண்டுவிட்டு,  இந்த பொம்மைக்கு க்ளோரொஃபில் என்று பெயர் வைக்கிறேன் என்றது ஒட்டகச் சிவிங்கி. கவனத்தில் எளிதாக நுழைகிறதாகப் பெயர் வேண்டும் என்றார் குழந்தைக்குத் தந்தை.  

அப்போ, சிவிங்கின்னே பேரு வச்சுடுங்க என்றது ஒட்டகச் சிவிங்கி. 

போர் தொடங்கும் முன் போர் ஓய்வு

ஓஓஓ என்று கூடியிருந்த எல்லாம் சிரிக்க குழந்தையும் நகைத்தது. யுத்தம் வரை போய் ஓய்ந்தது குறித்துப் போன நிமிடம் வரை தொடுமொழியாக கட்டைவிரல்களை இழுத்து நோவித்ததன் மூலம் கூச்சலிட்டு விரோதம் பாராட்டி நின்றவர்கள் ஒருவருக்கொருவர் உள்ளங்கைகளைச் சுரண்டி மகிழ்ச்சி தெரிவித்துக் களி கூர்ந்தார்கள். 

இந்தக் குகை பூமியே தொடுமொழி நகைப்பில் நிரம்பி வழிகிறது. நூறாண்டு முன் பயங்கரமான வாதினிப் பேய்களும் சாதினிப் பேய்களும் யுத்தம் செய்ததுபோல் நடந்திருந்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை என்றது ஒட்டகச் சிவிங்கி. அது கண்களை விரித்து உடலை நடுங்கச் செய்து பயம் காட்ட, இன்னும் உயர்ந்தது சுற்றிலுமான சிரிப்பு.

இன்னும் உயரம் எழும்பினால், வானச் சுரண்டியாக வானத்தில் பறந்துவிடும் என்று பெண்கள், குழந்தைகள் தமக்குள் பேசிச் சிரிக்க, சிவிங்கி ஆடியபடி சிரித்தது.

அந்த யுத்ததில் நானும் பங்கெடுத்திருந்தேன் என்றது அது இன்னும் மேலே இருக்கும் கிளைக்கு கழுத்து நீட்டிப் பறித்தபடி. 

பேய்களின் யுத்தத்தைப் பற்றி சிறுவர் சிறுமியர் இருந்தால் கேட்க வேண்டாம் என்று சொல்ல பாரவி பொம்மையோடு வாணியும் இன்னும் நான்கு குட்டிப் பய்யன்களும் வீடு திரும்பினார்கள். அவர்கள் பல மாடி அடுக்கக வீட்டு மின்தூக்கியில் ஏறி மேலே போவதைப் பார்த்தபடி இருந்தவர்கள் சரி இப்போது சொல்லுங்கள் என்று ஒட்டகச் சிவிங்கியைச் சூழ்ந்திருந்தார்கள். 

சிவிங்கி தொடங்கிய    பேய்ச் சண்டைக் கதை இப்படி இருந்தது.

Series Navigation<< சிவிங்கி – அத்தியாயம் ஒன்றுசிவிங்கி – அத்தியாயம் மூன்று >>

One Reply to “சிவிங்கி – அத்தியாயம் இரண்டு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.