உபநதிகள் – பதினேழு

This entry is part 17 of 17 in the series உபநதிகள்

றுநாள் எழுந்தபோதே ‘அவன் எவனோ? தொலையட்டும்!’ என்று கரோலைனிடம் அலட்சியமாகச் சொன்னாலும், மானஸாவின் ஆழ்மனதில் எழுந்த கேள்விகள்.

ராஜ் வாரன் யார் ? 

அவள் மேல் அவனுக்கு ஏன் கோபம்? 

அது அவளை எந்த அளவுக்குப் பாதிக்கும்? 

அவள் செய்யக்கூடியது என்ன? 

அவனைத் தேடுவதற்கு முன்…  

கூக்கிலில் -மானஸா சஹாதேவன்-. 

முன்னொரு தேடலில் மானசாவைக் கண்டுபிடித்தது நினைவுக்கு வந்தது. அவள் இப்போது எப்படி இருப்பாள்? 

பக்கம் பக்கமாகப் பதிவுகள். அவற்றின் காலத்தைக் கடந்த ஒரு மாதத்திற்குள் குறுக்கினாள். பாதிதான் குறைந்தது. காரணம் இரண்டு வாரங்களுக்கு முன்னால் வால்ஸ்ட்ரீட் ஜர்னலில் வந்த… ராஜ் வாரன். 


த டாம்ப்ராம்ஸ் ஆர் கமிங் த டாம்ப்ராம்ஸ் ஆர் கமிங்

ராஜ் வாரன்

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 

ஜனநாயகக் கட்சியின் சார்பில் செனட்டர் பைடன் போட்டியிடப் போவது நிச்சயம். அவருடன் தேர்தலில் நிற்பது யார் என்பது தீர்மானம் ஆகவில்லை. அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால் நிற மக்களின் வாக்குகளைக் கைப்பற்ற அவர் ஒரு கறுப்புப்பெண்ணைத் தெரிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு: சூஸன் ரைஸ், ஸ்டேஸி ஏப்ரம்ஸ், மிஷேல் ஓபாமா.. இன்னும் ஏழெட்டு பேர். அவர்களில் கமலா ஹாரிஸ் பெயர் நிறைய அடிபடுகிறது. அது தவறான தேர்வு என்பதற்கு பல காரணங்கள்: உழைப்பவர்களுக்கு வருமான வரி அதிகரிப்பு, கருச்சிதைவுக்கு ஆதரவு, சட்டவிரோதமாக இங்கே வசிக்கும் வெளிநாட்டவர்களுக்குப் பாதுகாப்பு, தொழில்துறைக்குக் கட்டுப்பாடு.  

முக்கியமாக, கமலா, தந்தை வழியே, தன்னை ஒரு கறுப்பு என்று அடையாளம் செய்து கொண்டாலும் தாய்வழியில் அவள் ஒரு டாம்ப்ராம் (டமில் ப்ராமின்).  

வேத கலாசாரத்தின் படி பிராமணர்கள் இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் உச்சமட்டத்தில் இருந்தாலும், தங்களை உயர்த்திக்கொள்வதில் டாம்ப்ராம் தனி ஜாதி. சட்டதிட்டங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியவர்கள். அண்மைக்காலம் வரை உயர்கல்வி, நுண்கலை இரண்டும் (சங்கீதம், புனைவு இலக்கியம்) அவர்களின் தனிச்சொத்து. இப்போது யூ.எஸ்.ஸில் பல பெரிய வர்த்தக நிறுவனங்களின் ஆளுனர்கள். அவர்களின் செல்வாக்கு விரிவடைந்து வருவதற்குச் சிறந்த உதாரணம்… கங்கா சஹாதேவன். நீங்கள் அவள் பெயரைக் கேள்விப்படாது இருக்கலாம். இது வரையில். அடுத்த மாதம் ஷார்ப்பர் நிறுவனம் வெளியிட இருக்கும் ‘த கர்ல் ஹு வான்ட்டட் டு ஸ்விம்’ வெளிவந்து பிரபலம் ஆகும்போது உங்களுக்கு அவளைத் தெரியவரும். ஒரு டாம்ப்ராமைப் பிரமாதப்படுத்தும் அப்புத்தகம் வெளிவந்த பிறகு அந்நிறுவனம் தன் தவறை உணரப் போகிறது. 

புத்தகம் முழுக்க முழுக்க கங்காவின் சாதனைகள் – அவள் பெண்ணின் நோக்கில். முதலில், அவை சாதனைகளா? 

ப்ரைவேட் ஈக்விடி நஷ்டத்தில் ஓடும் நிறுவனங்களை வாங்கி, அவற்றைப் பிரித்து, சிலவற்றை மூடி, அவற்றின் மதிப்பை அதிகப்படுத்துவது வழக்கம். பெரும் அளவில் மூலதனம் தேவைப்படும் அம்முயற்சிகளில் அதிக லாபம் எதிர்பார்ப்பது இயற்கை. அதைக் குற்றம் சாட்டுவதும், இரண்டு மில்லியன் டாலரை முன்-அனுபவம் இல்லாத தொழிலில் முடக்கியதும் பரம முட்டாள் தனம். இந்தியாவில் இருந்து வெறுங்கையுடன் வந்த அவளுக்கு அந்த இரண்டு மில்லியன் எப்படிக் கிடைத்தது? புத்தகத்தில் இல்லாத ரகசியம். கன்ட்ரி ம்யுசிக்கில் தற்போது கொடிகட்டிப் பறக்கும் – ஒரு குடியேற்ற அதிகாரியின் பெண் – கிம்பர்லி வில்சனைக் கண்டுபிடித்த குருட்டு அதிருஷ்டம்.

நீச்சல் போட்டியில் அவள் பையனுக்குப் பதில் அடுத்து வந்தவனுக்கு பரிசு கொடுத்ததில் என்ன பெரிய நஷ்டம்? அவன் வென்ற மெடல் அவர்கள் பரந்த வீட்டின் எங்கோ ஒரு மூலையில். அந்த ஏழை வெள்ளைப் பையன் அதை வைத்து நீச்சலில் இன்னும் முன்னேறி யிருப்பான். கல்லூரியில் ஸ்காலர்ஷிப் கிடைக்கும் வாய்ப்பு. எல்லாம் அவளால் தொலைந்தது.  

கங்காவின் படிமத்தில் கமலா. 

கமலா அரசியலில் புகுந்து பெயர் சம்பாதித்து இருந்தாலும் இருவருக்கும் வித்தியாசம் இல்லை. இருவரும் மறக்கப்பட வேண்டியவர்கள்.  

கங்காவின் புத்தகத்தை வெளியிடாமல் குப்பையில் தள்ள ஷார்ப்பருக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. உதவித்தலைவருக்கான தகுதி உள்ளவர்கள் வரிசையில் இருந்து கமலாவின் பெயரை நீக்குவதற்கு அந்த வசதி இல்லை. அதை செனட்டர் பைடன் உடனே செய்வது நாட்டிற்கு அவர் செய்யும் சேவை. 


ராஜ் வாரனைப் பற்றிய குறிப்பு மற்றும் அவன் எழுதிய கட்டுரைகளின் வரிசை. பின்னதில் இருந்து… 

அவனுக்கு கமலா ஹாரிஸைவிட நிக்கி ஹேலியைப் பிடித்திருக்கிறது. பெண்கள் கர்ப்ப நிறுத்தம் செய்து மக்கள் தொகை பெருக்காமல் வைத்திருப்பது பிடிக்கவில்லை. கார்பொரேஷன்களுக்கு எந்தக் கட்டுபாடுகளும் இல்லாமல் ஏழைகளை வாட்டி வருத்தி அபிரிமிதமாக லாபம் சம்பாதிக்கும் சுதந்திரம் வேண்டும். ‘ஸ்பெல்லிங் பி‘ போட்டி குருட்டுப்பாடம் படிக்கும் தென்னிந்திய(பிராமண)க் குழந்தைகளுக்குத் தான் சரி. 

முறையற்ற வழிகளில் பணம் சேர்த்தவர்களின் தயவில் நடத்தப்படும் அமெரிக்கன் என்டர்ப்ரைஸ் மற்றும் ஹுவர் இன்ஸ்டிட்டியுஷன் நிறுவனங்களின் நிழலில் இருக்கும் அவன் அவர்கள் தரும் சம்பளத்தை நியாயப்படுத்த இப்படி எழுதியாக வேண்டும். எழுத்துத்திறனை வைத்து பிழைப்பு நடத்த இது ஒரு வழி. மன்னித்துவிடலாம்.  

ஆனால், டாம்ப்ராம் என்ற வசை எதற்கு? சொந்த வாழ்க்கையில் ஒரு டாம்ப்ராம் அவனுக்குக் கிடைக்க இருந்த பதவியைப் பறித்துக்கொண்டாளோ? ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னலி’ல் ஹிந்து மதத்தைப் பழித்தால் போனஸ் கிடைக்குமோ? 

டாம்ப்ராம் என்பதைத் தவிர கமலாவுக்கும் கங்காவுக்கும் என்ன சம்பந்தம்? ஒரே கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்துவதற்காக? 

ஒரு இந்தியப்பெண் அதிலும் ஒரு டாம்ப்ராம் – மற்றவர்கள் கூர்ந்து கவனிக்க மாட்டார்கள், கவனித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் அலெக்கை டிக்யு செய்த வெள்ளை ஜட்ஜை சாமர்த்தியமாக மடக்கியதும், கேன்ப்ரிட்ஜ் நிறுவனம் ஆந்திரா அட்ராக்ஷனை திட்டமிட்டு விழுங்க இருந்தபோது அதன் வாயில் இருந்து விடுதிகளைப் பிடுங்கியதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. மற்ற ப்ரைவேட் ஈக்விடி நிறுவனங்களின் பெயருக்கு இழுக்கு வரும் என்ற அச்சம். 

அவனுடைய கட்டுரை, இல்லை குற்றவுரைக்குக் கீழே அவனுக்கு ஒத்துப்பாடிய பதில்கள். அதன் அடிச்சுவட்டில் மற்ற வலது சாரித் தளங்களில் குற்றப்பத்திரிகைகள். அவற்றை எழுதியவர்களில் ஆகா! பழைய நண்பன் ஜோசஃப் ஸ்மித். 

அவனுக்கும் ஒரு வாரம் முன்னால் மானஸாவைத் தாக்க வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒரு இடம். 


வெள்ளை யானைகள்

ஜோசஃப் ஸ்மித் 

நம் இனத்துக்கு ஒரு நற்செய்தி.

மானஸாவின் முதல் புத்தகத்தை வெளியிடுவதா வேண்டாமா என ஷார்ப்பர் பதிப்பகம் யோசிப்பதாக அறிகிறேன். பொதுவாக, இப்படிப்பட்ட தயக்கம் ‘வேண்டாம்’ என்ற தீர்மானத்தில் தான் முடியும்.  

இந்த நல்ல காரியத்துக்குக் காரணமாக இருந்த ராஜ் வாரனுக்கு நன்றி! 

அப்புத்தகத்தில் வரும் ‘ஸ்விம்மிங் வித் த ஷார்க்ஸ்’ கதை அவள் ஒரு பிற்பகலில் எழுதியது. அதை வைத்து ஏஞ்சல் டியாகோ முழுப் புத்தகத்தையும் எழுத மானஸாவைத் தூண்டியதற்கு ஒரே காரணம் அவள் வினோதப்பெயர். மற்றபடி அச்சிற்குப் போக அதற்கு எந்தத்தகுதியும் இல்லை என்று எழுத நான் நினைத்திருந்தேன். ராஜ் முந்திக்கொண்டு விட்டார். 

இன்னொரு முறை அவரிடம் தோற்க நான் தயாராக இல்லை. 

‘கலாவதி’ஸ் டிலெமா’வின் குறைகளை அவர் சுட்டிக்காட்டுவதற்கு முன்…  

யூ.எஸ்.ஸின் பொருளாதார வெற்றிக்கு முக்கிய காரணம் பல பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கே வந்து ஒரு தலைமுறைக்குள், ஏன் அதற்கு முன்பே கூட, பெரும்பான்மை வெள்ளைகளின் பழக்கவழக்கங்களில் ஒன்றிக் கலப்பது தான். ஒவ்வொரு இனத்தவரும் தங்கள் கலாசாரத்தைக் காப்பாற்றி தனித்தனி தீவுகளில் வாழ்ந்தால் இந்த நாடு காந்தியின் இந்தியாவைப் போல ஏழ்மையைப் போற்றும் தேசமாக மாறும். 

கலாவதி முதல் பருவத்தின் இறுதியில் ஷானின் பக்கம் சேர்ந்தாலும் அது தாற்காலிகம் என்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. அவளுடைய பழக்க வழக்கங்களைக் கைவிடாமல் பின்பற்ற ஷான் உதவி செய்யப்போவதாகவும் அறிகிறோம். அடுத்த பருவத்தில் கதை அவ்வழியில் வளரும் என எதிர்பார்க்கலாம். இதை நாம் சிறிதும் ஏற்பதற்கு இல்லை. 

புத்தகத்தைப் போல ஒரு தொலைக்காட்சித் தொடரை உடனே தள்ளிப்போடவோ திரும்பப்பெறவோ முடியாது. பலருடைய உழைப்பும் மூலதனமும் அடங்கி இருக்கின்றன. ஆனால், அடுத்த சீஸன் திட்டமிடும் கட்டத்தில். மானஸாவிடம் கொடுத்தால் அதை இன்னும் இடப்பக்கம் இழுத்துப்போவாள். அவளை வெட்டிவிட்டு ஸ்க்ரிப்டை பொறுப்பான ஹாலிவுட் எழுத்தாளர்களின் பொறுப்பில் விடுவது பீச்-ஃப்ளிக்ஸ் அதில் முதலீடு செய்தவர்களுக்குச் செய்யும் கடமை. கலாவதி முழுக்க முழுக்க அமெரிக்க கதியில் கலந்து சமுதாயத்தின் உச்சிக்குப் போவதாக அவர்கள் கதையை வளர்த்துவார்கள். பார்ப்பவர்களுக்கும் அதுதான் பிடித்தமானதாக இருக்கும். 


அவனுடைய ‘வெற்றிவீரன் மோரோனை’யை யாரும் சீந்தவில்லை போல் இருக்கிறது.

கடைசியாக, முந்தைய தினம் அவளுடைய ட்யுக் ப்ராஜெக்ட் அறிக்கைக்கு எதிரான ராஜ் வாரனின் அபிப்ராயம். ‘இலக்கண ஆங்கிலத்தைத் தவிர வேறொரு திறமையும் இல்லாத, ‘டாம்ப்ராம்’ மானஸா’ என்ற தாக்குதலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆக்ஸ்ஃபோர்டில் இதழியல் உயர்பட்டம் வாங்கிய ஒருவனுக்கு பல தகவல்ளைச் சேர்த்து கோர்வையாக எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை, அதன் பொருள் பிடிக்காவிட்டாலும், ரசிக்கத் தெரியாதா? 

லெக்குக்காக ஜியார்ஜியாவில் இருந்த கல்லூரிகளைப் பார்வையிட குடும்பத்தின் மற்ற மூவரும் கிளம்பிப் போனார்கள். மானஸாவின் மனம் வீட்டைப்போல் பரந்து காலியாக ஆனது. 

‘விளம்பரம் விளம்பரம் தான். எந்தவழியில் வந்தால் என்ன?’ என்பது அரசியலிலும் வர்த்தகத்திலும் சரியாக இருக்கலாம். மானஸா தனக்குமுன் வைத்த ஆதர்ச எழுத்துக்கு அது ஒத்துவராது. அத்துடன், இலக்கிய உலகில் அவள் நுழைவதைத் தடுக்க அதன் எல்லா கதவுகளையும் சாத்திப் பூட்டுவதற்கு சிலர் தயாராகக் காத்திருக்கிறார்கள். அவளுடைய எழுத்தை மட்டுமல்ல, அவள் கருத்துக்களையும், ஏன் அவளையும் (அம்மா டாம்ப்ராம் என்றால் அவளும் தானே) பொது இடத்தில் இருந்து வெளியே தள்ளப் பார்க்கிறார்கள். 

பதின்பருவத்தில் அவள் எழுதிய கட்டுரைகளுக்கும் இப்போதைய எழுத்துக்கும் என்ன வித்தியாசம்? அப்போது இத்தனை எதிர்ப்பு எழவில்லையே. அவற்றால் ஆபத்து இல்லை என்பது அதிகாரப்படிகளின் உச்சத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும். அதை மானசா ‘ட்ரூத்-இன்’னில் குறிப்பிட்டபோது அவளுக்கு எவ்வளவு எரிச்சல் வந்தது? 

கால வழக்கப்படி நடந்திருந்தால் இப்போது அவள் வர்த்தக ஆதிக்கத்தையும் வெள்ளை ஆண்களையும் நல்ல பார்வையில் வைத்து கதைகள் எழுதியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது குற்றம். அதை ரூபர்ட் மர்டோக் ஊடக சாம்ராஜ்யத்தின் அடியாட்கள் கவனித்துவிட்டார்கள். எழுத்து சுதந்திரத்திற்கு அந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கான துணிவு அவளுக்கு இருக்கிறதா?  

கேள்வியின் பதிலைத் தேடுவதற்குமுன் கலாவதியின் அழைப்பு. 

“சீரீஸ் முழுக்க முடிந்துவிட்டது. எல்லாம் பர்ஃபெக்ட், அக்கா! கலாவும் ஷானும் சந்திக்கிற காட்சியை ஒரு விவசாயிகள் சந்தையிலேயே எடுத்தோம். அப்போ நிஜமாகவே கொட்டற கோடைமழை. அற்புதமா வந்திருக்கு. அழகான கற்பனை.” 

“இன்றைக்கு நல்ல செய்தி.”  

“திட்டம் போட்டபடி அடுத்த மாசம் ஒவ்வொரு எபிசோடா வெளிவரும். ஏற்கனவே அதுக்கு நல்ல மதிப்பீடு. நாம எதிர்பாராதவிதமா சந்திச்சது விதியின் சுபமான விளையாட்டு.” 

“என் எண்ணமும் அதுதான்!”  

“அடுத்த வருஷத்துக்கும் நீ தான் ஸ்க்ரிப்ட் எழுதணும்.”  

“ஹாலிவுட் ரைட்டர்ஸ் கிட்ட விடணும்னு பேச்சு கிளம்பி இருக்கே.” 

“நானும் கேள்விப்பட்டேன்” என்பதைத் தொடர்ந்து நிச்சயமான குரலில், “நான் நடிக்கிறதா இருந்தால் நீ எழுதற ஸ்க்ரிப்ட்டில் தான்” என்றாள். 

“நான் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தேன். உன் ஆதரவான வார்த்தைகளைக் கேட்கறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” 

“நீ உருவாக்கிய கலாவதியை அவங்க கொன்னுடுவாங்க. அப்படி நடக்கவிட மாட்டேன்.”   

“நீ கொடுக்கற தைரியத்தில் கதையை வளர்த்தப்போறேன்.” 

“அதில் கலாவதி எப்படி இருப்பாள்?”

“அவளிடமே கேட்கறதா இருக்கேன்.” 

Kalavathi’s Dilemma

பருவம் இரண்டு

அத்தியாயம் ஒன்று 

பகுதி ஒன்று

மென்டல்சன் பண்ணை – மதியத்துக்கு முன் 

பண்ணையின் நுழைவாசல். பின்னால் கடையின் அலமாரிகளில் பாட்டில்கள் – தேன், ஜாம், தக்காளி சட்னி. கடைக்கு முன்னால் பல இடங்களில் நசுங்கிய ஒரு ஃபோர்ட் ட்ரக். சந்தைக்கு எடுத்துப்போவதற்காகக் காய்கறிப் பெட்டிகளை ஷான் எடுத்து வந்து அதன் பின்பகுதியில் வைத்து அடுக்குகிறான். சுத்தமான நீல டெனிம் சட்டை, நிறம் இழந்த கருநீல பான்ட்ஸ். சென்ற முறை பார்த்ததற்கு உடலில் முழு வளர்ச்சி, முகத்தில் முதிர்ச்சி. சரளைக்கல் சாலையில் சடசட சத்தத்துடன் டெஸ்லா கார் வருவதைப் பார்த்து ட்ரக்கின் பின் கதவில் சாய்ந்து நிற்கிறான். 

கலாவதி காரில் இருந்து இறங்குகிறாள். வெள்ளை சட்டைக்கு வெளியே நீல டெனிம் ஜம்ப்பர் அவள் சிறுபெண் அல்ல என்பதைக் காட்டுகிறது. 

கலாவதி

ஹாய் ஷான்! நான் வருவதற்குள் நீயே வேலையை முடித்துவிட்டாயே.

ஷான்

ஸ்ட்ராபெர்ரி கூடைகளைக் கொண்டுவர வேண்டும், கலா! 

கலாவதி

ஐ’ம் ரெடி. 

ஷான்

முதலில் ஒரு கேள்வி. நீ மனம் மாறிவிட்டாயா? 

கலாவதி

எதில்?  

ஷான்

ஜியார்ஜி டெக்.  

கலாவதி

ஊகும். 

ஷான்

இப்படிப்பட்ட வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. நன்றாக யோசித்துப்பார்! 

கலாவதி

யோசித்து தான் சென்ற ஆண்டு கல்லூரி விண்ணப்பம் அனுப்பினேன். இப்போதும் யோசனைக்குப் பிறகு தான் அதை மறுக்கப் போகிறேன்.

ஷான்

நீ ஏன் பிடிவாதமாக இருக்கிறாய்? அட்லான்ட்டா நாட்டின் இன்னொரு கோடியில் இல்லை. இங்கிருந்து நான்கு மணிநேரம் என்றாலும் நாம் முடிந்தபோது சந்திக்கலாம். 

கலாவதி

அது காரணம் இல்லை.

அவன் முகத்தில் சோகம். 

கலாவதி

ஓகே. அது ஒரு காரணம்.

ஷான்

வேறு என்ன காரணம் இருக்க முடியும்? ஜியார்ஜியாவுக்கு வெளியில் இருந்து வரும் புத்திசாலி மாணவர்களில் இருபது பேருக்கு மட்டுமே ஸ்டாம்ப் ஸ்காலர்ஷிப். அது உனக்குக் கிடைத்ததில் எனக்குப் பெருமை. பொறுக்கியெடுத்த மாணவர்களில் நீ ஒருத்தி.  

கலாவதி

அது தான் முக்கிய காரணம். 

ஷான்

உனக்குத் தகுதி இருக்கிறது. நான்கு ஆண்டுகளிலும் உன்னைத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு சரி என்பதை கல்லூரி நிர்வாகத்துக்கு நிரூபிக்கப் போகிறாய். படித்து முடித்ததும்…

கலாவதி

ஷிகாகோ பூத் பிசினெஸ் ஸ்கூல். பெய்ன் கம்பெனி. பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப்.  

ஷான்

மிக மதிப்பான பெயர்கள். 

கலாவதி  

இவை எல்லாவற்றுக்கும் பொதுவான அம்சம்… 

ஷான்  

ம்ம்.. ம்ம்…

கலாவதி  

செல்வத்தை சமுதாயத்தில் கீழே இருந்து மேலே ஏற்றுவது. அவற்றைவிட்டால் ஜெனரல் டைனாமிக்ஸ். உலகில் போர்களை அதிகரித்து நிறைய பணம் சம்பாதிக்கலாம். 

ஷான்  

நீ இதுவரை இப்படிப் பேசியதாக நினைவு இல்லை. திடீரென்று என்ன ஆயிற்று? 

கலாவதி

நேற்று நான் ‘ட்ரூத் -இன்’னில் படித்த ஒரு கட்டுரை. இல்லை இல்லை. அதற்குமுன்பே… 

கன்னத்தில் விரலை ஊன்றி யோசிக்கிறாள். அவன் அவன் அழகை ரசிக்கிறான்.  

உன்னை ‘டேட்’ செய்ய ஆரம்பித்ததில் இருந்து.

ஷான்  

நான் என்ன தப்பு செய்தேன்? 

கலாவதி    

நீ ஒன்றும் செய்யவில்லை. 

ஷான் 

தாங்க் காட்

கலாவதி    

இந்தப் பண்ணையும் இரண்டு ட்ராக்டர்களும், பழைய ட்ரக்கும் தான் உங்களுக்கு சொந்தம். அதிலிருந்து வருஷ வருமானம்… 

ஷான் 

ஒவ்வொரு ஆண்டும் கடன் இல்லாமல் முடிந்தால் சந்தோஷம். 

கலாவதி

எங்களுக்கு ப்ரென்ட்வுட்டில் மூன்று தள வீடு, இரண்டு ஊர்திகள் – ஒன்று லெக்சஸ், இன்னொன்று இந்த டெஸ்லா. மேற்படிப்புக்கு நான் போவதாக இருந்த ஜியார்ஜியா டெக். மொத்தத்தில் இதற்கு என்ன அர்த்தம்? 

ஷான் 

உன் குடும்பம் நாட்டின் மேல்பத்து சதத்தில். 

கலாவதி

கரெக்ட். வருமானத்தினால் மட்டுமல்ல, விழுமியங்களிலும் நாங்கள் தனி ஜாதி. எங்களின் திருமண உறவுகள் எங்கள் ஜாதிக்கு உள்ளேயே. நான் அப்படிச் செய்யவில்லை. நம் முதல் சந்திப்பை ஞாபகப்படுத்திப்பார்! 

ஷான் 

நான் அதை மறந்தால் தானே மறுபடி நினைவுக்குக் கொண்டு வருவதற்கு.

அவன் சாமர்த்தியமான பதிலைக்கேட்டு அவளுக்குப் புன்னகை. அதை மாற்றி, 

கலாவதி  

இடியுடன் மழை. தாரையாகக் கொட்டும் சாரல்களைத் தாண்டி பார்வை வெகுதூரம் போகவில்லை. சுழன்றுசுழன்று அடிக்கும் காற்று. தரையில் ஊன்றாத சாமான்கள் தாறுமாறாகப் பறக்கின்றன. மழைநீர் சேர்ந்து ஆறுபோல ஓடுகிறது. இயற்கையின் சீற்றத்துக்கு எதிரே பணத்துக்கு மதிப்பு இல்லை என்ற ஞானோதயம். நீ சமன நிலையை இழக்காமல் மன உறுதியுடன் இருந்ததைப் பார்த்து எனக்கு உன்மேல் மதிப்பு, அன்பு. 

ஷான்  

அது என் அதிருஷ்டம்.

கலாவதி 

அதில் இருந்து சமுதாயப்படிகள் எவ்வளவு ஸ்திரமானவை என்பதைப் பற்றிய அறிவு மெதுவாக வளர்ந்தது.

ஷான்  

இருந்தாலும் உன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி… 

கலாவதி 

என் தனிப்பட்ட திறமைகளைக் கண்டுபிடித்து அவற்றில் சாதனை செய்யப்போகிறேன். 

தொலைவில் இருந்து, “ஷான்!”  

ஷான்  

சரி, நம் வேலைகளைக் கவனிப்போம்!

மானஸா மந்தாகினிக்கு இன்னொரு மந்தாகினி தைரியம் கொடுத்தாள். இன்னொரு மானசாவிடம் இந்த மானஸாவே உதவி கேட்கப்போகிறாள். 

மானஸா சஹாதேவன் பெயருடன் சென்னையைச் சேர்த்துத் தேடியதும் அந்த மானசா. இன்னும் அவள் ஆனிக்ஸ் பதிப்பகத்தின் நிதிநிர்வாகி. 

மானஸா டூ மானசா

நான் முதன்முதலில் அனுப்பிய மின்னஞ்சல் போல இதுவும் உனக்கு வியப்பைத் தரலாம். நாம் கடைசியாகப் பேசியபோது உன் வார்த்தைகள் மருந்து போலக் கசந்து நம் உறவைப் புளிக்க வைத்தன. இப்போது எனக்கு உன் உதவி தேவை என்பதற்காக இதைச் சொல்லவில்லை. என்னிடம் நேர்ந்த நிஜமான மனமாற்றத்தினால். 

கங்கா புத்தகத்தை வெளியிடுவதில் ஷார்ப்பருக்கு அக்கறை குறைந்துவிட்டது. அதற்கு அரசியல் காரணங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஒப்பந்தத்தை வார்த்தை வார்த்தையாகப் படித்த என் தந்தை நூலின் வட அமெரிக்கப் பிரதேசம் மட்டுமே ஷார்ப்பரின் உரிமை என்று முன்னொரு தடவை சொல்லி இருக்கிறார். அதனால் அதை இந்தியாவில் வெளியிட்டு, அது ஆங்கிலம் பரவலாக இருக்கும் நாடுகளில் பிரபலம் ஆகி நல்ல பெயர் சம்பாதித்ததும் ஷார்ப்பர் அவர்களாகவே வழிக்கு வருவார்கள் என்று ஒரு நம்பிக்கை. 

உன் உதவி என்ன என்பதைக் கற்பனை வளம் கொண்ட உனக்கு நான் விளக்க வேண்டும் என்பதில்லை. 

நட்புடன் 

மானஸா

பிற்பகல் மழைபெய்து சூட்டைத் தணித்தது. மேகங்கள் விலகி தெற்கே பயணிக்கும் சூரியனின் பிரகாச மஞ்சள்.  பெர்னிக்கு ஒரு தகவல். 

– இன்று நடக்கலாம்

– நான் தயார்  

மானஸா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அவள் எந்தவித ஒப்பனையும் அணியாததை பெர்னி கவனித்தான். அதனால் அவள் அழகு கூடியதாக நினைத்தான். 

“நேற்றைக்கு முந்தைய தினம் நீ கேட்ட கேள்விக்கு பதில் இன்னொரு கேள்வி” என்றாள் மானஸா.  

“அது…” 

“புத்தகம் மற்றும் கலாவதி முதல் சீஸனின் ஸ்க்ரிப்ட் – இரண்டின் முன்பணம், இப்போது கிடைத்த ஆறாயிரம். மொத்தம் என் கணக்கில் எனக்கு என்று ஐம்பத்தியாறாயிரம் டாலர். உன்னிடம்…” 

“ஆறாயிரத்துடன் பாட்டி கொடுத்ததும் சேர்த்தால் முப்பது தேறும்.” 

“இருவர் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சின்ன இல்லத்துக்குப் போவோம். புது வாழ்வில் யார் என் கற்பனையை அடக்க முயற்சித்தாலும் அச்சம் இல்லை, எழுத்து தான் என் மூச்சு, உனக்கு சிறுசிறு பொருளாதாரம். நீ என்ன நினைக்கிறாய்?”  

பெர்னி நிதானமாக கோவிட்டின் ஆணையை மீறி அவளுக்குக் கையெட்டும் அருகில் வந்து… 

(முற்றும்)

Series Navigation<< உபநதிகள் – பதினாறு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.