அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6

This entry is part 6 of 8 in the series கணினி நிலாக்காலம்

1990 -களில், ஓரளவு 80 -களை நோக்குகையில், கணினி பற்றிய வியப்பு குறைந்தாலும்,  இந்தப் பத்தாண்டுகளும் சற்று வித்தியாசமானவை. விண்டோஸ் அறிமுகமான காலம் என்பதால், சற்று பரவலாக சின்னக் கணினிகள் பயனுக்கு வந்தன. ஆயினும், வணிக வட்டங்களில், இந்த சிறிய கணினிகள் ஏதோ ஒரு பொம்மை போல அணுகப்பட்டது. இந்தப் பத்தாண்டுகள்,  கடைசியாக பெரும் கணினிகள் ஆட்சி செய்த காலம் என்று சொல்லலாம். மிக முக்கியமாக, இந்தப் பத்தாண்டுகளின் இறுதியில் செல்பேசிகள் வரத் தொடங்கின. அவை கணினிகளாய் மாறி, உலகெங்கும் பரவ இன்னும் 10 ஆண்டுகள் மேலும் தேவைப்பட்டது.

பெருவாரியாக வணிகங்கள், கணினியைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் இந்தப் பத்தாண்டுகள். இதற்கு முக்கிய காரணம், வணிகங்கள் பயன்படுத்தும் ஸர்வர் கணினிகள் விலை குறையத் தொடங்கியது என்று சொல்லலாம். ஆரம்பம் எப்பொழுதும் குழப்பமானதாகவே இருந்ததால், மனிதர்கள் இந்த எந்திரங்களை ஒரு சந்தேகத்துடனே அணுகிணார்கள். தன்னுடைய வேலையைப் பாதுகாத்துக் கொண்டு, அதே சமயத்தில், மிகவும் நவீனமாக தோற்றமளிக்க வேண்டிய நிர்பந்தம் இந்தப் பத்தாண்டுகளில்,  முன்பை விட அதிகமாக இருந்தது. இந்த மனித சந்தேகங்கள், என் போன்றவரின் வேலையை சில சமயம் மிகவும் சோதித்தாலும், அதே நேரத்தில், மிகவும் சுவாரசியமாக மாற்றியதும் உண்மை.

1990 -களின் ஆரம்பத்தில் முதல் வளைகுடா போர் தொடங்கியது. நான் பணியாற்றிய நிறுவனத்திற்கு, சில குவெய்த் மனிதர்கள் போர் முடிந்ததும், ஒரு மென்பொருள் அமைப்பை உருவாக்கித் தருமாறு வேண்டிக் கொண்டார்கள். இந்த ப்ராஜக்ட் எனக்கு அளிக்கப்பட்டது என் அதிஷ்டமா இல்லை சாபமா என்று அப்போது தெரியவில்லை. போர் முனைக்கு எல்லாம் சென்று பழக்கமில்லாததால், சற்று தயங்கினேன். ஆனால், போர் முடிந்து, சகஜ நிலை வந்தவுடன் அங்கு வந்தால் போதும் என்று குவெய்த்காரர்கள் உத்தரவாதம் அளித்தார்கள்.

என்னுடைய முதல் பயணம் மிகவும் சுவாரசியமானது. குவைத் விமான நிலையத்தில் இறங்கினால், அங்கு, கணினிகள் எதுவும் இல்லை. அத்தனை வேலைகளும் மிகவும் மெதுவாக, மனிதர்கள், 1960 -கள் போலச் செய்தார்கள். விமான நிலையத்திலிருந்து வெளிவர 4 மணி நேரமாகியது. வெளியே வந்தால், அங்குள்ள கார்கள், ஏதோ காயலான் கடையிலிருந்து வந்தது போல இருந்தன. 4 சக்கரம் மற்றும் குத்துமதிப்பான இருக்கைகள் என்று வளைகுடா பகுதி நினத்துக்கூடப் பார்க்க முடியாத அமைப்பு. இத்தனைக்கும், அந்த ஊரில், ஒரு 50 வாடகை கார்கள் மட்டுமே உலா வந்தன. வாடகை கார் ஓட்டும் இந்திய, பாகிஸ்தானிய, எகிப்தியர்கள் இன்னும் திரும்பவில்லை. 

கார் செல்லுகையில், போரின் அழிவு எங்கும் தெரிந்தன. பாழடைந்த கட்டிடங்கள், தெருவில் விட்டுச் சென்ற ஊர்த்திகள், வீட்டுச் சாமான்கள் என்று எங்கும் மக்கள் வெளியேறிய அவசரம் இன்னும் தெரிந்தது. அங்கங்கு சின்ன புகை மண்டலங்கள் தெரிந்தவுடன் எங்கள் கார் ஓட்டுனர், “அதெல்லாம் சண்டை ஒன்றுமில்லை. தெருவை சரி செய்ய சாமான்களை எரிக்கிறார்கள்” என்றார். வெளியுலகத் தொடர்பு இல்லாத அந்த காலத்தில் சற்று கலக்கமாக இருந்ததென்னவோ உண்மை.

இன்னொரு முக்கிய பிரச்சினையும் காத்திருந்தது. குவைத்தில் இயங்கிய பல ஹோட்டல்களில், வேலை செய்தவர்கள் இன்னும் திரும்பாததால், பெரும்பாலான ஹோட்டல்கள் மூடி இருந்தன. என்னுடைய முதல் பயணத்தில், அங்கு 3 ஹோட்டல்கள் மட்டுமே இயங்குவதாகச் சென்னார்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, வெளியே வந்தால், மதியம் 3 மணிக்கு இருண்டு விட்டது. ஏதோ நார்வேயில் இருப்பது போல, இது எப்படி சாத்தியம்? பக்கத்தில் விசாரித்ததில், பின் வாங்கிய ஈராக்கியர்கள், எண்ணைக் கிணறுகளுக்கு தீ வைத்து விட்டார்கள் என்று தெரிய வந்தது. இது, நகரத்திலிருந்து 60-100 கிமீ தொலைவில் இருந்தாலும், முழு நகரையும் புகை மண்டலம் பகலை இரவாக்கியது.

இந்தச் சூழலில் சுவாசித்தால், உடலுக்கு தீங்கு ஏற்படுமா என்பதை விட, இங்கு வந்து மாட்டிக் கொண்டோமே என்ற கவலை பெரிதாக இருந்தது. என்னுடைய க்ளைண்டை அடுத்த நாள் சந்திக்க வேண்டியதால், அங்கிருந்து வெளியேறவும் முடியாது.

சரி, கணினி என்று ஏதோ பயணக்கட்டுரை போல விரிகிறதே என்று நீங்கள் முகம் சுளிப்பது புரிகிறது. இந்தச் சூழல் முழுவதும் எனது கணினி ப்ராஜக்டிற்குப் பொருந்தும் விஷயம் என்பது பிறகே தெரிய வந்தது. அடுத்த நாள் என்னுடைய க்ளையண்ட், பெருமையுடன் அந்த அமைப்பின் கட்டிடங்கள் மற்றும் மனிதர்களை அறிமுகப் படுத்தினார். இதைப் போன்ற ஒரு சோக அறிமுகம், இந்நாள் வரை நான் அனுபவித்ததில்லை.

  • இந்தக் கட்டிடங்களில், இந்த ஆராய்ச்சி விஷயங்கள் போருக்கு முன் நிகழ்ந்தன”. அந்தக் கட்டிடங்கள் காலியாக இருந்தன. மனித நடமாட்டமே இல்லை!
  • இதோ இங்குதான் எங்களது பெரிய கணினி போருக்கு முன் நிறுவப்பட்டிருந்தது!”.  வெளியேறிய ஈராக்கியர்கள் லாரியில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள். அந்தக் கட்டிடத்தில், எதுவும் இல்லை.
  • இதோ இங்குதான் எங்களது மதிய உணவிற்குப் பின் சந்திப்போம். விதவிதமான உணவுகள் இலவசமாக எல்லா ஊழியர்களுக்கும் போருக்கு முன் வழங்குவார்கள்!”  இன்று உணவகம் காலியாக இருந்தது
  • இங்குதான் எங்களது அமைப்பு தொடங்க உள்ளது! நீங்கள் இங்குதான் எங்களுக்கு உதவி செய்வீர்கள்”  என்று ஒரு அலுவலகத்தைக் காட்டினார்கள். அங்கு இரண்டு சின்ன கணினிகள் இருந்தன. மற்றவை வாங்க வேண்டுமாம்!

இந்தச் சூழலில் ஒரு கணினி மென்பொருள் அமைப்பு என்பது மிகவும் சிக்கலான முயற்சி. அதுவும், எங்களுடைய க்ளையண்ட், எங்களிடமிருந்த மென்பொருளை அப்படியே பயன் படுத்த முடியாது என்று திட்டவட்டமாக சொல்லி விட்டார்கள். என் வேலை, அவர்களுக்கு வேண்டிய மாற்றங்களைப் புரிந்து கொண்டு, எங்களுடைய மென்பொருளை, அந்தத் தேவைக்கு தகுந்த மாதிரி, மாற்றி அமைத்து, நிறுவி, மற்றும் இயக்கப் பயிற்சி அளிப்பது.

இந்தப் போரின் நிழலில் நடந்த ப்ராஜக்ட் என்பதால், இந்த மென்பொருள் அமைப்பின் சிக்கல்கள் தலையைச் சுற்ற வைக்கும் ஒன்றாக மாறியது. பொதுவாக, இவ்வகை மீட்டிங்கில், தனக்கு எந்த வித மாற்றங்கள் வேண்டும் பயனாளர்களிடமிருந்து வெளிக் கொண்டு வருவது ஒரு கலை. அக்கலையில் நான் தேர்ந்திருந்தாலும், இந்த ப்ராஜக்டில் மிகவும் தடுமாறினேன். காரணம், தனக்கு என்ன வேண்டும் என்று திட்டவட்டமாக அவர்களால் சொல்லவும் முடியவில்லை. எனக்குப் புரியும்படி எதையும் காட்டவும் முடியவில்லை. 

  • இவர்கள் பயன்படுத்திய பழைய மென்பொருள் அமைப்பு இவர்கள் கைவசம் இல்லை
  • இவர்கள் பயன்படுத்திய மென்பொருள் அமைப்பால் அச்சடிக்கப்பட்ட ரிப்போர்டுகள் ஒன்று கூட இல்லை
  • ஆளாளிற்கு ஏதோதோ சட்டங்களைச் சொன்னார்கள். ஒருவர் சொன்ன சட்டம், இன்னொருவர் சொன்னதிலிருந்து மாறுபட்டது, அல்லது முரணாக இருந்தது
  • இவர்கள் சொன்னதைப் பதிவு செய்து, மீண்டும் அவர்களிடம், “இதைத்தானே சொன்னீர்கள்?” என்றால், ‘இல்லை, நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்” என்றார்கள்!
  • பல சமயங்களில், 4 மணி நேர மீட்டிங்கில் எதுவும் சாதிக்க முடியாமல் போனது. எங்கோ, அந்த மீட்டிங்கில் ஒருவருக்கு போருக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நினைவிற்கு வர, அனைவரும் “மலரும் நினைவுகள்” என்று ப்ராஜக்டை கோட்டை விட்டு விடுவார்கள்
  • இதில் மாட்டிக் கொண்ட ஒற்றை ஆளான எனக்கு, காலம் கடந்து கொண்டே போவதும், வேலையை முடிக்காததும் பெரிய பிரச்சினையாகி வந்தது

இந்த ப்ராஜக்டை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று சிந்தித்ததில் குழப்பம்தான் மிஞ்சியது. கடைசியில் ஒரு அதிரடி முடிவிற்கு வந்து, அடுத்த பயணத்தில், அதை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டேன்.

அடுத்த பயணத்தில், வழக்கமான சந்திப்புகளுக்கு முன், அந்த அமைப்பின் தலைவரை சந்திக்க அனுமதி கோரினேன். இந்த சந்திப்பு, பல விஷயங்களை எனக்குத் தெளிவாக்கியது. முக்கிய மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.

த(லைவர்): எதற்காக இந்தச் சந்திப்பு? எங்களது ஊழியர்கள் மீது ஏதாவது புகாரா?

நான்: அப்படி ஒன்றும் இல்லை. பல முறை உங்களது நாட்டிற்கு வந்துவிட்டேன். உங்களது தேவையைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

த: என்ன தேவை என்று முதல் மீட்டிங்கிலேயே சொல்லி விட்டேனே! இதில் புதிதாகச் சொல்ல, என்ன இருக்கிறது?

நான்: அதெல்லாம் சரி, பல மீட்டிங்கிலும், உங்கள் ஊழியர்கள் சொல்லும் சட்டங்கள் முன்னும், பின்னும், முரணாக இருக்கிறது. இந்தத் தகவலைக் கொண்டு உருவாக்கிய அமைப்பு, சரியாக வராது.

த: இப்படிச் சொன்னால் என்ன செய்வது? நீங்கள் கணினிகளால் எல்லாம் சாத்தியம் என்று சொன்னீர்களே!

(இது ஒரு வழக்கமான கணினி பயன் மேலாளரின் அச்சுறுத்தல், கிண்டல்). 

நான்: அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், உங்களிடம் தகுந்த பதிவுகள் மற்றும், உதாரணங்கள் எதுவும் இல்லாத பட்சத்தில், எதைச் சாத்தியமாக்குவது என்றே எனக்குப் புரியவில்லை.

த: அப்படியென்றால், இந்த ப்ராஜக்டை ரத்து செய்வது ஒன்றுதான் வழி. 

(இதுவும் ஒரு வழக்கமான அச்சுறுத்தல். இத்தனை நேரம் மற்றும் பணத்தை செலவழித்த வாடிக்கையாளர் அவ்வளவு எளிதில் இப்படி செய்ய முடியாது. இது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும்).

நான்: இங்கு எனக்குத் தெரிய வேண்டியது, உங்களது உண்மையான நோக்கம். எதற்காக இந்த மென்பொருள் அமைப்பை உருவாக்குகிறீர்கள்? எதற்காக, இத்தனை செலவழிக்கிறிர்கள்? ஒரு டாக்டரிடம் உடல்நிலையைப் பற்றி சொல்வதைப் போல என்னிடம் உங்களது உள்நோக்கத்தைச் சொன்னால், என்னால், உங்களுக்குப் பயன்படும் ஒரு ஸிஸ்டத்தை உருவாக்க முடியும். அப்படி மனம் திறந்து உங்கள் நோக்கத்தைச் சொல்லவில்லை எனில், நாம் பிரிவதே உத்தமம்.

தலைவருக்கு தூக்கி வாரிப் போட்டது. இப்படி, அதுவரை யாரும் அவரிடம் அப்படிப் பேசியதில்லை. கொஞசம் சுற்றிச் சுற்றிப் பேசிவிட்டு, கடைசியாக முக்கிய விஷயத்திற்கு வந்தார்.

த: அரசாங்க அமைப்புகளில், நிதி ஒதுக்கீடு என்பது ஒரு சிக்கலான, அதே சமயத்தில், சுவாரசியமான விஷயம். நிதி ஒதுக்கும் அமைச்சகம், சில மேல்வாரியான லெவல்களில் நிதியை ஒதுக்கும்.

நான்: அதெல்லாம் சரி. ஏன் இவ்வளவு சிக்கலான ரூல்களைப் பின்பற்றுகிறிர்கள்?

த: மிக முக்கியமான சில லெவல்களில் ஓராண்டு எவ்வளவு செலவாகிறது, எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது கூர்மையாக கவனிக்க வேண்டும். இதில், மிக முக்கிய விஷயம், சென்றாண்டை விட இந்த ஆண்டு அதிக ஒதுக்கீடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சகம், அந்த நிதியை மற்றொரு விஷயத்திற்கு/அமைப்பிற்கு ஒதுக்கீடு செய்து விடும். இது நேராமல் பார்த்துக் கொள்வதே என் போன்றோரின் வேலை.

நான்: மிக்க நன்றி. இப்பொழுது உங்களது நோக்கம் புரிகிறது. சரி, எல்லா லெவல்களிலும் இப்படிப்பட்ட கட்டுப்பாடு தேவையா?

இதன் பிறகு, சில உயர்மட்ட லெவல்களில் நிதி ஒதுக்கீடு பற்றிய முக்கிய விஷயங்களை அவர் விளக்கினார். அந்த டெக்னிகல் விஷயங்கள் நமக்கு இங்கு தேவையில்லை. 

நான்: மிகவும் தர்மசங்கடமான இந்த சந்திப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை. உங்களுக்கு பயன்படும் வகையான மென்பொருள் அமைப்பை உருவாக்கவே இந்த கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அமைப்பை உருவாக்குவது என் பொறுப்பு.

இதன் பிறகு, அங்கு உருவாக்கிய அமைப்பு, ஒரு பாதுகாப்பு நிறைந்த ரூல் எஞ்சினுடன் பல ஆண்டுகள் அருமையாக இயங்கியது. இந்த ப்ராஜக்டை முடித்து பல ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கியது அந்த அமைப்பு. பல மென்பொருள் மாற்றங்களையும் தாண்டி, அவர்களுக்குப் பயனளித்தது. இதை உருவாக்கி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ஒரு கருத்தரங்கில், என்னைத் தேடி வந்து அந்த அமைப்பின் தலைவர் நன்றி சொன்னார். அதற்கு நான், ”உங்களது அனலிஸ்டை முழுவதும் நம்ப வேண்டும். நான் அன்று செய்த அறுவை சிகிச்சை இன்னும் பயனளிப்பதில் சந்தோஷம்”.

இவர்கள் செய்யும் நிதி தில்லாலங்கடிகள் ஒரு ஜனநாயக நாட்டில் பெரிய விஷயமாக இருக்கலாம். இங்கோ, எண்ணெய் விற்ற பணத்திற்காக போட்டியிடும் அமைப்புகளில் அதுவும் ஒன்று. அந்த ரகசியங்கள் எனக்கும் தெரியாது, நான் வேலை செய்த நிறுவனத்திற்கும் தெரியாது. ரகசியங்கள் அனைத்தும் அந்த ரூல் எஞ்சினுக்கே வெளிச்சம். குறிப்பாக, அந்த ரூல்களை உருவாக்கும் நிதி விற்பன்னர்களுக்கே முழுவதும் தெரியும். இந்த அமைப்பு எல்லோருக்கும் பாதுகாப்பான ஒரு ஸிஸ்டமாக இயங்கியது பல ஆண்டுகள் பயனளித்தது மட்டுமே நான் அறிவேன்.

Series Navigation<< அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 5அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 7 >>

3 Replies to “அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.