அதிரியன் நினைவுகள் – 24

This entry is part 23 of 24 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

நாட்களில் தெளிவில்லை, சம்பவங்களும்  வரிசையின்றி கலைந்துள்ளன.  என் வாழ்க்கையில் பல்வேறு காலங்களில் மேற்கொண்ட பயணங்களும், நிகழ்ந்த  சம்பவங்களும்  என்னுடைய நினைவில் இன்று  பிரித்துணர முடியாமல் குவிந்து ஒற்றைக் காலக்கட்டத்திற்கு உரியதுபோல இருக்கின்றன. எபேசஸ் வணிகர் எராஸ்டோஸ் எனக்கு இரவலாக அளித்திருந்த மரக்கலம் சகல வசதிகளுடன் ஆடம்பரமாக  சீரமைக்கபட்டப் பின்னர் முதலில் கிழக்கு பின்னர் தெற்கு என பயணித்து,  இறுதியாக  இத்தாலியை நோக்கிச் சென்றது, கீழைநாடுகளில் அண்மையில் பயணித்திருந்த எனக்கு இம்முறை இத்தாலி மேற்கு நாடாகத் தோன்றியது. ரோட்ஸ் (Rhodes) தீவுகளை இரண்டுமுறை எங்கள் நாவாய் தொட்டது; கண்களைக் கூசச் செய்யும் வகையில் வெள்ளைவெளேர் என்றிருந்த டெலோஸ்(Delos)  தீவுக்கு முதலில் ஒரு ஏப்ரல்மாதக் காலையிலும்,  பின்னர் கதிர்திருப்ப(solstice)12 நாளொன்றின் பௌர்னமியின்போதும் சென்றோம். எபிரஸ் கடற்கரைப் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக  குறிசொல்லும் பீடமான டோடோனாவிற்கு(Dodona) சென்றுவர நேரம் வாய்த்தது. சிசிலியில், நீரூற்றுகளின் மர்மத்தை அதிலும் குறிப்பாக அரேதூசா(Arethusa) சையான்   (Cyane) முதலான நன்னீர் வனதேவதைகள் (nymphs) மர்மத்தைக் கண்டறிய  சிரக்கூசா(Syracusan)பகுதியில் சில நாட்கள் தங்கினோம்.  ஒரு காலத்தில் செனெட்டர் லிசினியஸ் சூரா (Licinius Sura) நீரின மகத்துவங்களை கண்டறிய தமது ஓய்வுநேரத்தை செலவிட்டதை நினைத்துக்கொண்டேன். எட்னா எரிமலையின் உச்சியிலிருந்து ஐயோனியா(Ionian)  கடலில் விடியலைப் பார்க்கிறபோது,  ஆச்சரியமான பல வண்ணக் காட்சிகளைக் காணமுடியுமென  கேள்விப்பட்டிருந்தேன். எனவே மலையில் ஏற முடிவு செய்தேன்; நாங்கள் செடி கொடிகள் பகுதிகளைக் கடந்து முதலில்  எரிமலைக்குழம்புள்ள பகுதிக்கும், பின்னர் பனிமூடிய பகுதிக்கும் சென்றோம். என்னுடன் வந்த ஆண்ட்டினஸ் அக் கடினமான சரிவுகளில் வேகமாக அதேவேளையில் கவனமாகவும் ஓடினான்; ஆனால் என்னுடன் வந்த கல்விமான்கள் பயணத்தைத் தொடர கோவேறு கழுதைகள் முதுகில் ஏறி உட்கார்ந்தனர். மலையுச்சியை அடைந்ததும் விடியும் வரை காத்திருக்க வேண்டியிருந்ததால் தற்காத்துக்கொள்ள ஒரு சிறுகுடில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதற்காக நாங்கள் வந்தோமோ, அத்தரிசனம் கிடைத்தது; அடிவானத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு பலவண்ண துணியொன்றை விரித்ததுபோல அக்காட்சி; பனிமூடிய சிகரங்களிலோ, விசித்திரமான தீச்சுவாலைகள். நீரும் நிலமுமான வெளியின் அழைப்பு ஆப்ரிக்க கண்டம் வரை நீடித்திருக்க, எதிரே கிரேக்கமென நாங்கள் ஊகம் செய்யமுடிந்த நிலப்பகுதி. அவ்வனுபவம் என் வாழ்வின் உச்சங்களில் ஒன்று. பொன்னிறத்தில் மின்னிய மேகத்தின் விளிம்பு, கழுகுகள், மரணமில்லா பானபாத்திர சேவகக் காட்சியென (l’échanson immortalité)13 அனைத்தும் குறையின்றி வாய்த்தன.

அமைதியும் சந்தோஷமும் ஒன்றிணைந்த ஹால்சியன்(Halcyon) பருவகாலங்களை எனது    கதிர் திருப்ப நாட்களாக (solstice) எடுத்துக் கொள்ளவேண்டும். எனது கடந்தகால மகிழ்ச்சியை பெரிதுபடுத்தி பார்ப்பதற்கு இவ்வனுபவத்தை உபயோகிக்கிறேன் என்பதாக இதனைக் கருதக்கூடாது, அதற்கும் இதற்கும் வெகுதூரம்.  இக்காட்சியை குறைத்து மதிப்பிடாமலிருக்கக் கடுமையாகப் போராடினேன்.  இன்றைக்கும்  எண்ணிப் பார்க்கிறபோது அந்நினைவு எத்தனை வலிமையானது என்பதை உணர்கிறேன். பெரும்பாலான மனிதர்களைக் காட்டிலும் மிகவும்  நேர்மையான மனிதன் நான், எனவே  இம் மகிழ்ச்சிக்கான ரகசிய காரணங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்: மனதின் செயல்பாடுகள் மற்றும் ஒழுக்கங்களுக்கு மிகவும் ஏற்ற இந்த அமைதி, அன்பின் மிக அழகான விளைவுகளில் ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது. மனித வாழ்க்கையில் எத்தகைய வழிகளில் தேடினோம் அல்லது பெற்றோம்  என்பதைப் பொறுத்து,  இடர்களை அதிகம் சந்திப்பவை என்பதன்றி, அரிதாகவே சரியாக அமையக்கூடியவைகளாகக் காதலில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சிகள் உள்ளன. இவற்றை மெய்ஞானிகள் எனக்கூறிக்கொள்கிறவர்கள் ஐயத்துடன் பார்க்கிறார்கள். மிதமிஞ்சி இதில் நாட்டம் கொள்வதையும் அதற்கு அடிமையாவதையும் சந்தேகிக்கும் இம்மனிதர்கள், இவ்வுறவிலுள்ள குறைபாட்டையும் இழப்பையும் பற்றிப் பேசுவதில்லை, பதிலாக இந்திரியங்களை ஒடுக்குதல், ஆத்மாவை  சரியான பாதைகளில் முன்நிறுத்துதல் அல்லது  அலங்கரித்தலென்று ஆர்வம் காட்டுகிறார்கள். இதுபோன்ற அவர்களுடைய செயல்பாடுகள் எனக்கு வியப்பூட்டுபவை. அக்காலத்தில் என் மகிழ்ச்சிக்குத் தெம்பூட்ட,  சுவைக்க,  அதை நியாயப்படுத்த  எனது செயல்களின் சிறு சிறு விவரங்களில்கூட தொடர்ந்து கவனம் செலுத்தினேன். உண்மையில் காதலினால் கிடைக்கும் இன்பம் என்பதே உடல்மீதுகொள்ளும் மோகத்தின் கணநேர கவனம் இல்லையா? சிறு தவறுகூட  அதைச் சிதைக்கக் கூடும், சிறிது தயங்கினால்போதும் திசை மாற வாய்ப்புண்டு,  சுமையைச் சிறிது கூட்டினாலும், அச்சு முறிந்துவிடும், சிறிய முட்டாள்தனம்போதும்  அதை முடக்க.. எனவே குறையற்ற காதலின்பம் ஒவ்வொன்றும் தலைசிறந்த படைப்பு. பிற்காலத்தில் இம்மகிழ்ச்சியைச் சிதைத்த எனது விவேகமற்றபண்புகளுக்கு  என்னுடைய காதலின்பம் எந்த வகையிலும் பொறுப்பாகாது, காரணம் இவ்விஷயத்தில் அம்மகிழ்சிக்கு இசைந்து நடக்கிறபோதெல்லாம் விவேகத்தை நான் ஒருபோதும் இழந்தவனில்லை. இருந்தபோதிலும், என்னைக் காட்டிலும் விவேகியாக இருக்கக் கூடிய ஒருவர் தமது இறுதிமூச்சு உள்ளரை மகிழ்ச்சியில் திளைக்க முடியுமென்பது என் கருத்து. 

சிறிது காலம் கழித்து, கிரீஸும் ஆசியாவும் இணையும் எல்லையில் உள்ள ஃப்ரிஜியாவில்(Phrygia), இம்மகிழ்ச்சியின் மிக முழுமையான மற்றும் தெளிவான உருவம் எனக்கு கிடைத்தது. கல்லும் முள்ளுமாக இருந்த  வறண்ட பகுதியொன்றில், சத்ரபதிகளின் சூழ்ச்சியால் இறந்த  அல்சிபியாடிஸ்(Alcibiades)14 கல்லறை அருகே முகாமிட்டோம். பல நூற்றாண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த இக் கல்லறையில், கிரேக்க மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மனிதர்களுள் இவரும் ஒருவர் என்பதால் பரியன்(Parian) தீவிலிருந்து கொண்டுவந்த பளிங்குக்கல்லில் ஒரு சிலை வைத்தேன்.  தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவுதினத்தைக் கொண்டாடும்வகையில் ஒருசில சடங்குகளைச் செய்யவேண்டுமென ஆணையும் பிறப்பித்தேன்.  அவ்வகையில் முதலாவது நினைவுதினத்தை அருகிலிருந்த கிராமமொன்றை சேர்ந்த மக்கள் எனது பாதுகாவலர்களோடு கொண்டாடினார்கள்; இளம்காளை ஒன்று பலியிடப்பட்டு, மாலை விருந்துக்கு அவ்விலங்கின் உடலில் பெறப்பட்ட தசை உணவானது. பரந்தவெளியில் பயிற்சியுற்றிராத குதிரைகளைக்கொண்டு குதிரைப் பந்தயம் நடந்தது, அவ்வாறே நடனங்களும் இருந்தன, பிந்தைய நிகழ்ச்சியில் பித்தினிய வாலிபன்  ஒருவித வெறித்தனமான உற்சாகத்துடன் பங்கேற்றான். பின்னர், மூட்டப்பட்டிருந்த தீ அணையும் நேரத்தில், தனது அழகும் வலிமையும்கொண்ட  தொண்டை புடைக்க பாடவும் செய்தான்.

அன்றைய இரவு, மூப்படைந்த,  அம்புகளால் துளைக்கப்பட்டு அதே  இடத்தில் இறப்பையும் சந்தித்த, இறுதிநாட்கள்வரை ஓர் இளம்பிராயத்துத் தோழன் துணைநின்ற, ஏதென்ஸ் மேட்டுக்குடி பெண்ணொருத்தியின் அழுகைக்குப் பாத்திரப்பட்ட, காதலின்பத்தில் மிகவும் தோய்ந்த ஒருவரின் வாழ்க்கையோடு, என்னுடைய  வாழ்க்கையை ஒப்பிட்டுப்பார்த்தேன், காரணம் பிணங்கள் அருகே கற்பனையாக என்னைக் கிடத்தி அளவெடுக்க விரும்புகிறேன். எனது பன்முகத்தன்மை அல்சிபியாட்ஸின் பன்முகத்தன்மைக்கு ஈடானது அல்லது அவருடையதையும் மிஞ்சியது என்கிறபோது, எதற்காக எனது இளமைக்காலம்  அவருடைய பெருமைக்கு பாசாங்கு உரிமை கோரவேண்டும். அடைந்த இன்பங்கள் கொஞ்சநஞ்சமில்லை,  கணிசமாக சிந்தித்தும் இருக்கிறேன், செய்த பணிகளும் ஏராளம்; அவரைப் போலவே, பிறர் என்னை நேசிக்க அதில் விசித்திரமான மகிழ்ச்சியையும் கண்டேன். அல்சிபியாட்ஸ் அனைத்து வகையிலும் அபிமானத்திற்குரியவர், வரலாறு உட்பட; இருப்பினும் சிராக்கூஸா பிரச்சினையில்  கல்லுடைக்கும் இடத்தில்  மலைபோலக் குவிந்துக் கிடந்த  எதேனியர்(Athenian) பிணங்கள்;  அரசியல், பொருளாதாரம் இரண்டிலும் பாதித்திருந்த அவருடைய சொந்த நாட்டின் சிக்கல்கள்; சாலைச் சந்திப்புகளில் நிர்மாணித்திருந்த கடவுள்களை, மதுஅருந்திவிட்டு தம்முடையை கைகளால் அங்கவீனப்படுத்தியது ஆகிய சாட்சியங்களை அவருக்கு  எதிராக விட்டுச் சென்றுள்ளார். அவர் வாழ்ந்த காலத்தினும் பார்க்க எல்லையற்ற பரந்த நாட்டை நான் ஆட்சி செய்தவன்; அங்கே அமைதியை நிலைநாட்டியிருக்கிறேன்; பல நூறு ஆண்டுகள் நீடிக்க்கும் ஒரு பயணத்திற்கு ஏற்றதொரு கப்பலை நிர்மாணிப்பதுபோல இத்தேசத்தைச் சிந்தித்து கட்டமைத்துள்ளேன்; மனிதனிடம் தெய்வீகப் பண்பைக் கட்டிக்காக்க என்னால் முடிந்த அளவிற்குப் போராடியுள்ளேன்.  இவற்றுக்கான வெகுமதியே நானடைந்த இன்பம்.

தன்ஸிலேயே இருந்துவிடமுடியுமா, ரோமாபுரியும் எனக்காக காத்திருந்தது. ஆனால் அதற்காகத் திரும்புவது அவசியம், வேண்டிய உத்தரவாதத்தையும் சதோஷந்தையும் அளிக்கவேண்டும் என்பதுபோன்ற நிர்ப்பந்தங்கள் எதுவும் எனக்கில்லை. பேரரசில் எனது நிர்வாகத்தின் சாதனைகளை உறுதிபடுத்த சாட்சியங்கள் தெளிவாக இருந்தன. போரின்போதுமட்டுமே திறக்கப்படும் ஜானஸ்(Janus) ஆலயக்  கதவுகள், தொடர்ந்து மூடப்பட்டிருந்தன; என்னுடைய திட்டங்களுக்கு உரிய பலன்கள் கிடைத்தன; புறநகர் மற்றும் மாகாணங்கள் அடைந்த சுபிட்சத்தினால் திரும்ப பெருநகரம் வளம்பெற்றது. நான் முடிசூடிக்கொண்டபோது மறுத்த « நாட்டின் தந்தை » என்ற சிறப்புப்பெயரை எனக்குத் திரும்ப அளித்தபோது, நான் மறுக்கவில்லை.  

புளோட்டினா தற்போது இல்லை. இதற்கு முன்பு உரோமில்  இறுதியாக அப்பெண்மணியை காணநேரிட்டபோது, முகத்தில், சோர்வுடன் ஒரு புன்னகையைக் கண்டேன். அரசு ஆவணங்களின்படி எனக்கு அவர் தாய் என்கிறபோதும், உண்மையில் அதற்கும் மேலானவர், அதாவது எனக்கு வாய்த்த ஒரே சினேகிதி. இம்முறை, அப்பெண்மணியைத் திராயான் நினைவாக நிறுத்திய நெடுந்தூண் கீழ், சிறியதொரு பிணச்சாம்பற்  கலசமாக மட்டுமே காண முடிந்தது. அவருக்கு  அபோதியோசிஸ்(apotheosis) என்கிற இறைதூதர் தகுதியை   அளிக்கும் சடங்கில் நேரில் கலந்து கொண்டேன்; அரசு நடைமுறை வழக்கத்திற்கு மாறாக,  ஒன்பதுநாட்கள் துக்கம் அப்பெண்மணிக்கென்று  அனுசரித்தேன். கடந்த பலவருடங்களாகவே அவரைச் சந்திப்பதென்பது இல்லை என்றானதால், அவருடைய மரணம் பெரிதாய் எந்தத் தாக்கத்தையும் என்னிடம் உண்டாக்கவில்லை, ஆனால் மனதில் பேரரசியாகவே தொடர்ந்து இருந்தார், என்னுடைய உள்ளமும் நினைவும், அவருடையதோடு ஒன்றியதைப்போன்ற உணர்வுக்கு ஆட்பட்டிருந்தேன்.

ஒரு சில முக்கிய கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் இருந்தன: கொலோசியம்(Colosseum)15 புதுப்பிக்கப்பட்டது, அவ்விடத்தைவிட்டு அகலாமலிருந்த நீரோ பற்றிய மோசமான நினைவுகள் களையப்பட்டன, தவிர சக்கரவர்த்தி சிலையிருந்த இடத்தில் எங்கள் குடும்பப்பெயரான ஈலியஸ் என்ற பெயரை நினைவுறுத்தும் வகையில் சூரியக் கடவுள் ஹீலியோஸ்(Helios)க்கு  பிரம்மாண்டமான சிலையொன்றை  வைத்தோம். உரோம் நகரிலும், வீனஸ் ஆலயத்திலும் எஞ்சியிருந்த வேலைகள் முடிக்கபட்டன,  நீரோ மன்னர்  மிகுந்த பொருட்செலவில் ஆடம்பரமாக கட்டி அதன்காரணமாக அவதூறுக்கு  ஆளான  ‘தங்கக் குடில் ‘ (Maison d’Or)  இடத்தில் வீனஸ் கோயில் உருவானது.  . நித்திய நகரமான உரோம் நகரின் தேவதை “ரோமா”(Roma), முதன் முதலாக மனிதர் சந்தோஷங்கள் அனைத்திற்கும் தூண்டுகோலாக இருக்கிற அவருடைய அன்னையும் காதல் தெய்வமுமாகிய அமோர்(Amor) இருவரும் வெளியுலகிற்கு முதல்முறையாக தெரியவந்தனர். என்னுடைய வாழ்நாளில் நான் செயல்படுத்திய மிக நல்லதொரு திட்டமென இதனைக் கருதலாம். அந்தவகையில், ரோமானியரின் ஆற்றல், பேரண்டம் மற்றும் புனிதம் என்கிற இரண்டுக்கும் உரியதாக வடிவெடுத்தது, உண்மையில்  இத்தகைய அமைதியையும் பாதுகாவலையும் இந்நகருக்குத் தரவேண்டுமென்பது  என்னுடைய அவா. மெய்யறிவு வாய்த்த வீனஸ் தேவதையைக் காலஞ்சென்ற மகாராணியாக் கருதுவதும், அவருடைய அருள்வாக்கை  ஆலோசனையாக ஏற்பதும் அவ்வப்போது என்னிடத்தில் நிகழ்கிறது.

கடவுள்கள் மொத்தபேரும், மர்மமான முறையில்   வார்க்தெடுக்கப்பட்ட ஏகதெய்வமாக  அடிக்கடித்  எனக்குக் காட்சிதந்தனர்,  எண்ணற்ற மாறுபட்ட  தோற்றங்கள் என்கிறபோதும், அவர்களின் தெய்சக்தியில் பேதமில்லை, எனவே வெளிப்பட்ட முரண்பாடுகள் ஒருவகையில் அவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒருவகை உடன்பாடென கருதவேண்டும். விளைவாக,  பாந்த்தியன் (Panthéon)வகை தேவாலயத்தை உருவாக்கி அதில் தெய்வங்கள் அனைத்தையும் பிரதிட்டை செய்ய்வவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. அகஸ்டஸின் மருமகன் அக்ரிப்பா(Agrippa)  உரோமானிய மக்களுக்கு வழங்கிய பழங்கால பொது குளியற்கூடம் சீரழிந்த நிலையிலிருக்க அதனை நான் தேர்ந்தெடுத்தேன். ரோம்மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொதுக்குளியற் கூடத்தில் எஞ்சியிருந்தவை பலவருடங்களைக் கடந்த நுழைவாயிலும், பளிங்குக் கற்பாளமும். கவனத்துடன் இவை அகற்றப்பட்டு, அவ்வ்விடத்தில் புதிய தேவாலயத்திற்குப் பொருத்தமானதொரு நுழைவாயில் உருவானது.  இந்த நினைவுச்சின்னத்தில் நான் பங்களித்தவன் என்றவகையில் எனது பெயர் கல்வெட்டில் இடம் பெற்றிருந்தது, இருந்தும் அதனை நான் விரும்பவில்லை. மாறாக, பேரரசின் தொடக்கத்தோடு சம்பந்தப்பட்ட அகஸ்டஸின் அமைதியான ஆட்சிக்குத் தொடர்புடைய, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கல்வெட்டென்று அது சொல்லப்படவேண்டும் என்பதெ எனது ஆசை. தவிர புதுப்பிக்கும் பணிகளைச் செய்தபோதுகூட ஏற்கனவே செய்தவற்றைத் தொடருகிறேன் எனக்கூறிக்கொள்ளவே விரும்பினேன்.  என்னுடைய அதிகாரபூர்வ தந்தை திராயான்(Trajan), மற்றும் பாட்டனார் நெர்வா(Nerva) ஆகியோரைக் கடந்து சூட்டோனியஸால்(Suétone)16 மிகவும் மோசமாக நடத்தப்பட்ட  சீசர்கள் பன்னிருவர் வரிசையிலும் என்னை நிறுத்திப் பார்ப்பதுண்டு. உதாரணமாக முரட்டு குணத்தை விட்டொழித்த நேரங்களில் டைபீரியஸிடம் கண்ட தெளிவு; தன்னுடைய ஆற்றலை உணர்ந்த நேரங்களில்  கிளாடியஸிடம் வெளிப்பட்ட புலமை;   நீரோவின் மமதைகளை மறக்கமுடிந்தால் கலைகளிடத்தில் அவருக்குள்ள ஈடுபாடு;  அதிக்கபடியாக வெளிப்படுகிற இரக்கத்தை தவிர்த்து,   டைட்டஸிடம் காணமுடிகிற அன்பு; வெஸ்பாசியன் (Vespasien) மன்னரிடமிருந்த சிக்கன குணம் ( ஆனால் அவருடைய கருமித்தனம் எனக்கு ஆகாது); இப்படி எண்ணற்ற உதாரணங்களை எனக்கென்று முன்மொழிந்திருக்கிறேன். இப்பேரரசர்கள் மனித விவகாரங்களில் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்தவர்கள். இம்மன்னர்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கிக்கிடையே எதைத் தொடர்வதென்பது தற்போதைக்கு முக்கியம்; சிறந்தவற்றை ஒருங்கிணைக்க வேண்டுமெனில் அவை எவை? மோசமானவற்றைத் திருத்துவதெனில் எவற்றை? என்பதையெல்லாம்  தெரிவுசெய்யும் பொறுப்பு தற்போது என் கைகளில். எதுவரை? ஓரளவு தகுதியும், எனக்கு நிகரான பொறுப்பினை வகிக்கிறவர்களாகவும் இருந்து, என் அளவிற்கு பணிசெய்ய மனிதர்கள் முன்வரும்வரை அதற்கு நான் காத்திருக்கவேண்டும்.

வீனஸ் தேவதை ஆலயத்தையும்  உரோம் நகரையும் நாட்டுக்கு அர்ப்பணித்த விழா இரத ஓட்டங்கள்,  பொதுமக்கள் களியாட்டங்கள், வாசனாதி திரவியங்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்கள் ஆகியவற்றின் விநியோகமென ஒருவகை வெற்றிவிழாவாக நடந்தது. அடிமைகளின் கட்டாயப் பணிகளைக் குறைக்கின்ற வகையில் பெரியபெரிய பாறாங்கற்களைச் சுமக்க புணரமைப்பு வேலைகளில் யானைகளைப் பயன்படுத்தியிருந்தோம், அந்த யானைகள் விழா ஊர்வலத்தில் இடம்பெற்றன, பார்க்க ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் போல யானைகள் இருந்தன. இவ்விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்ட நாள் உரோம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுவிழா நாளாகும், அதாவது உரோம் தோன்றி எண்ணூற்று இருபத்திரண்டு ஆண்டுகள் கழித்துவந்த ஏப்ரல் மாத ஐட்ஸ்க்கு(Ides)17 எட்டாவது நாள். நீலவானம், செறிவு, இனிமையென அவ்வருட வசந்தகாலம் சிறப்பாக இருந்தது, அதுபோன்றதொரு வசந்தகாலத்தை உரோம் நகரம் ஒருபோதும் கண்டதில்லை.

அந்த ஆண்டுவிழா நாளின்போதே, தீவிரமான பயபக்தியுடன் மிக மிக அமைதியாக, பாந்த்தியன் தேவாலயத்திற்குள் ஒரு அர்ப்பணிப்பு விழா நடந்தது. கட்டிடக் கலைஞர் அப்போலோடோரஸ்(Apollodorus) மிகுந்த தயக்கத்துடன் உருவாக்கிய திட்டங்களில் நான் தலையிட்டு, சில மாற்றங்களை கொண்டுவந்தேன். கிரேக்கத்தின் கலைகளை வெறும் அலங்காரமாக, அதாவது ஒரு கூடுதல் ஆடம்பரமாகப் வைத்துக்கொண்டு, கட்டுமான அமைப்பில், உரோமின் அற்புதமான தொடக்ககாலத்து எட்ரூரியாவின்(Etruria) பண்டைய கொப்பரை கோபுர அமைப்புமுறையைப் பின்பற்ற முடிவுசெய்தேன். ஒட்டுமொத்த தெய்வங்களெக்கென நிர்மாணித்த இவ்வழிபாட்டுத் தலம் (Panthéon)  பூமிக்கோள்,   நட்சத்திரக்கூட்டதின் கோள், நித்திய நெருப்பின் விதைகள் அடங்கிய கோள் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய குழிபோன்ற ஒரு கோள், ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறவகையில் இருக்க வேண்டுமென விரும்பினேன். மனிதர் வாழ்க்கையில் தொடக்க காலங்களில் அவர்கள் வாழ்ந்த சிறுகுடில்களில் புகையை வெளியேற்ற  கூரை முகட்டில் ஒரு புகைபோக்கி இருந்தது, அத்தகைய  குடிலைப்போன்ற வடிவமென்று இந்த ஆலயத்தைச்  சொல்லமுடியும். வலிமையும், மென்மையும் கொண்ட எரிமலைக்குழம்புக் கல்லினால் உருவான வட்டமான இதன் குவிமாடம், தீப்பிழம்புகளின் மேல்நோக்கிய இயக்கத்தில் பங்கேற்பபதுபோலவும்; கருப்பு நீலமென நிறம்மாறும் மிகப்பெரியதொரு புழையூடாக வானத்துடன் தொடர்பில் இருப்பதுபோலவும் நினைக்கத் தோன்றும். திறந்தும், புதிரானவகையில் மூடப்பட்டும் உள்ள இந்த ஆலயம், ஒருவகை சூரிய மணிக்கூடு. கிரேக்க கைவினைஞர்களால் கவனமாக மெருகூட்டப்பட்ட இப் பெட்டகம்போன்ற கொப்பரை விதானத்தின்மீது, நேர அலகுகள் தொடர்ந்து சுற்றிவரும்; பகற்பொழுது அதற்கொரு பொன்னாலான பாதுகாப்புக் கேடயம்; மழை பெய்யும்நாட்களில், கீழுள்ள  நடைபாதையில் தேங்கும் நீர் தெளிவாக இருக்கும்; தெய்வங்களை நிறுத்துகிற வெறுமை திசை நோக்கி நமது பிரார்த்தனை புகையெழும்.  

இவ்விழா ஒருவகையில் எனக்கு அனைத்தும் சங்கமிக்கும் தருணங்களில் ஒன்று. பகற்பொழுதின் அடிவாரத்தில் அன்று நிற்கிறேன்,  ​​பக்கத்தில் எனனுடைய இராச்சிய அதிகாரிகள் மற்றும்  ஊழியர்கள்,  விளக்கமாகச் சொல்லவேண்டுமெனில் அவர்கள் இம் முதிர்ந்த மனிதனின் விதியில் ஒருபாதியை நிர்மாணிக்க உதவிய கட்டுமானப் பொருட்கள். இம்மனிதர்கள் ஒவ்வொருவரையும் நான் அறிந்தவன் : உண்மை ஊழியரான மார்சியஸ் டர்போவின் கடுமையான ஆற்றல் ; செர்வியனஸின் முணுமுணுப்புடன் காணும்  கண்ணியம்,  குறிப்பாக  குரலை மிகவும் தாழ்த்தி வைக்கும் அவருடைய விமர்சனங்கள் என்னை எட்டுவதேயில்லை ; லூசியஸ் சியோனியஸினுடைய அரசகுடும்பத்திற்கேயுரிய அந்த கம்பீரம்; பிறகு வழக்கம்போல சற்றுத் தள்ளி ஒரு பக்கமாக நிற்கிற, தெய்வத் தோற்றத்தின் ஒளிவட்டத்தை சுற்றியுள்ள சற்று தெளிந்த கருவட்டம்போலவும், கனவில் ஆழ்ந்திருக்கும் முகத்துடனும், எவனிடம் எனது நற்பெயரைப் பணயம் வைத்திருக்கிறேனோ அந்த கிரேக்க இளம்பிராயத்து வாலிபன் ;  அனைத்துக்கும் மேலாக இவ்விழாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உத்தியோக பூர்வமாக ‘மகாராணி’ பட்டத்துடன் அறியப்பட்ட, எனது மனைவியும் இருந்தாள்.

தொடரும்…..

————————————————————————————————————————————-

குறிப்புகள்…

12. கதிர்திருப்பம்(Solastice),ஞாயிறு தன் கதிர் வீதியில் திசைமாறும் நிகழ்வை /நாளைக் குறிக்கும்.

13. பானபத்திர சேவகன்(Echanson) – அரசவையில், கொலுமண்டபத்தில் பானகம் விநியோகிக்கிற சேவகர்.

15. கொலோசியம்(Colloseum) உரோம்நகர வட்ட வடிவ அரங்கு

16. சூட்டோனியஸ்(Suétone) – Gailes Suetonius Tranquilus கி.பி 69-122) ரோமானிய வரலாற்றாசிரியர். ஜூலியஸ் சீசரில் ஆரம்பித்து 12மன்னர்களின் வரலாற்றை எழுதியவர். 

17. ஐட்ஸ்(Ides) ரோமானிய நாட்காட்டியின்படி மாதங்களைப் பொறுத்து ஒரு மாதத்தின் 13 அல்லது 15 வது நாள்

—————————————————————————————————————-

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -22அதிரியன் நினைவுகள் -25 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.