எழுத்தாளார் இரா.முருகன் சிறுகதைகளை முன்வைத்து

சாதாரண வாழ்க்கையை, எளிய சொற்களால் சொல்லி, வாசிப்பவரை வசீகரிக்கும் அசாதாரணமான கதைகள் இரா.முருகனுடையவை. சொல்லிலிருந்து இறக்கிவிடப்பட்ட கனமெல்லாம் வாசிக்கும் மனத்துக்குக் கடத்தப்படுவது இக்கதைகள் செய்யும் மாயம். காதல், காமம், பக்தி, அசட்டுத்தனம், சாமர்த்தியம், கையறுநிலை என்று அகவாழ்வின் உணர்ச்சிகள், உணர்வுகள், கூறுகள் யாவும் தொட்டுச் செல்லப்படுகின்றன. நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் தீட்டும் மாபெரும் சித்திரத்தைக் கொஞ்சம் முனைந்து நிரடிப் பார்த்தால் எங்கும் தட்டுப்படுபவை மனித வாழ்வின் அபத்தங்கள்.
“‘எனக்கு ஒரு பாடை அனுப்பவும்’ பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது.” என்று தொடங்குகிறது ‘சைக்கிள் முனி’ சிறுகதை. யார் இந்த பாலன்? பாடை அனுப்பவும் என்றதும் ஏன் சிரிப்பு வருகிறது? இந்தக் கேள்விகளுடன் கதை உள்ளிழுத்துக்கொண்டது. பாலன் பழைய சைக்கிள் டயரை, உடைந்த மர ஸ்கேலால் உருட்டித் தள்ளியபடி ‘டயர் வண்டி ஓட்டிக்கொண்டு’ திரௌபதி அம்மன் கோவில் திடலுக்கு வந்திருக்கும் ஒரு சிறுவன். அவனுடைய அக்கா (அவளும் சிறுமிதான்) வேறு ஊருக்கு வீட்டு வேலைக்கு அனுப்பப்பட்டிருக்கிறாள். அந்தச் சிறுமி தனக்கு ஒரு பாவாடை வேண்டும் என்று கேட்டு எழுதும்போது எழுத்துப்பிழையின் பேருருவாக, ‘பாடை’ என்று எழுதிவிடுகிறாள். இந்தப் பிழைதான் பாலனுக்குச் சிரிப்பைக் கொண்டுவருகிறது. ஆனால் அவன் அம்மா குழந்தை அச்சானியமாக இப்படி எழுதியிருக்கிறாளே என்று புலம்பும்போது அதுவும் அவனை அசைத்துப் பார்க்கிறது.
இந்தப் பின்னணியில் திடலுக்கு வரும் சிறுவன், திடலுக்கு வெளியில் பிரம்மாண்டமாக அமர்ந்திருக்கும் முனீஸ்வரனுடன் பேசத் தொடங்குகிறான். குழந்தைகள், சிறுவர்கள் சிறுகதைகளுக்குள் உலவும்போதும் பேசும்போதும் அந்தப் பகுதி எப்படிக் கையாளப்படவேண்டும் என்பதற்கான கையேடாகவே இந்த உரையாடலைச் சுட்டலாம். இந்தக் கதை தன்மையில், சிறுவன் பார்வையில் சொல்லப்படுவதல்ல, படர்க்கையில் விரிவதுதான். மேலும், சிறுவனோடு உரையாடுவது முனீஸ்வரன். ஆனாலும் ஒரு சிறுவன் என்ன பேசுவானோ, அவனிடம் என்ன சொல்லப்படுமோ அவை மட்டுமே இந்த உரையாடலில் உள்ளன. பாலன் கேட்கும் ஒரு கேள்விக்கு, முனி, “நான் அந்தப் பக்கம் ராத்திரியிலே எப்பவாச்சும் மாடி மச்சுலே எல்லாம் குதிச்சு ஓடுவேன், அப்பக் கேட்டுப் பார்க்கறேன்” என்று பதில் சொல்கிறது. அகால வேளைகளில் மொட்டை மாடியில் தடதடப்புக் கேட்டால் பாலன் அதை முனி என்றுதானே நினைப்பான். எனில், முனி அவனிடம் இப்படித்தானே பேசும். இது முனி பாலனுக்குச் சொன்னது, அடுத்த வரி இப்படி இருக்கிறது: “முனி யாரைக் கேட்கும் என்று பாலனுக்குத் தெரியவில்லை”. ஒரு சிறுவன் சொல்ல வேண்டியதைச் சொல்கிறான், முனி அவனிடம் பேச வேண்டியதைப் பேசுகிறது, அவற்றின் மேலேறி நம்மை வந்தடையவேண்டியதும் வந்தடைகிறது. உடையாத ஸ்கேலால் வரையப்பட்ட துல்லியமான கோடு.
பாலன் வீட்டில் ஏழ்மை சூழ்ந்திருக்கிறது. அந்தச் சிரமத்தால்தான் பிள்ளையை வீட்டு வேலைக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் பாலனின் அப்பா தாம்பூலம் வேண்டுமென்று அவனை கடனுக்கு வெற்றிலை வாங்கிவர அனுப்புகிறார். அந்தக் கடைக்காரர் சிறுவனை எவ்வளவு காக்கவைக்க முடியுமோ அவ்வளவு காக்கவைத்து வெற்றிலை தருகிறார். சில சமயம், அந்த வெற்றிலையோடு அழுக்கு ஆரஞ்சு மிட்டாய் ஒன்றையும் சும்மா தருவார் என்கிறான் பாலன். இதன் பிறகு பாலன் சொல்வதும், நமக்குச் சொல்லப்படுவதும் கச்சிதமான அந்தக் கோட்டின் மேல் நிகழ்கின்றன. பாலன் சொல்கிறான்: “அந்த ராத்திரிகளில் அவர் ஜரிகை வேட்டி கட்டி கெட்ட வாடையடிக்கும் புனுகோ, ஜவ்வாதோ மேலே பூசியிருப்பார்.” துல்லியமான தாக்குதல். பாவாடை கேட்டுக் கடிதமெழுதும் குழந்தை, தாம்பூலத்துக்கு வெற்றிலை கடனுக்கு வாங்கும் அதன் அப்பா, ஜரிகை வேட்டி கட்டி புனுகு பூசியிருக்கும் வெற்றிலைக் கடைக்காரர் – வாழ்வென்ப அபத்தங்கள் கோர்த்த சரம்!
“பாருக்குட்டி” என்ற சிறுகதையில் கதைசொல்லி இப்போது இளைஞன்தான். ஆனால் பாருக்குட்டியை முதன்முதலில் பார்த்தபோது அவன் ஐந்தாம் வகுப்பு மாணவன். எனவே அதைப் பற்றிச் சொல்லும்போது, அப்படி ஒரு சிறுவனின் பார்வையை முன்வைத்து, அவள் குண்டான பெண் என்று மட்டுமே சொல்கிறான். இவன் பாருக்குட்டியின் அப்பாவிடம் (அவர் ஒரு டீ மாஸ்டர்) மலையாளம் கற்க வந்தவன். அவனுடன் இன்னொருவனும் மலையாளம் கற்கும் சாக்கில் பாருக்குட்டியைப் பார்க்க வருகிறான். அவன் ஃபேன்ஸி ஸ்டோர் வைத்திருப்பவன், அப்போதே இளைஞன். இவர்களுக்குக் கற்றுத் தரப்படும் மலையாள சிலபஸ் என்பது ‘இன்று நான் இன்னாரிடம் அறுபது ரூபாய் கடன் வாங்கினேன், நாளை நாற்பதைக் கொடுத்துவிடுவேன்’ என்பது போன்ற டீக்கடைக் கணக்கையே மலையாளச் சொற்களில் சொல்வதுதான்.
இவன் வளர்ந்தபிறகு அந்தக் காலத்தில் பாருக்குட்டி தொடர்பாக நண்பன் உபயோகித்த, அந்த வயதில் இவனுக்குப் புரிந்திராத சங்கேத சொற்றொடர் ஒன்றின் முழுப்பொருளையும் புரிந்துகொள்கிறான். அது பாருக்குட்டியின் மார்பகங்களைப் பற்றியது. இப்போது ஊருக்குச் செல்கையில் அதே நண்பன் பாருக்குட்டியின் கணவனாக இருக்கிறான், அவளோ புற்று கண்டு மார்பகங்கள் நீக்கப்பட்டவளாக இருக்கிறாள். இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கும் விதம், அதன் எளிமை, பெண்ணுடல் சார்ந்து சொல்லப்படும் அபத்தங்களைப் பெரிதாக மெனக்கெடாமல், நீட்டி முழக்காமல், கடும் சொற்களால் நிந்திக்காமல், போகிற போக்கில் அவை அபத்தங்கள் என்று லேசாகச் சுட்டிக்காட்டும் தன்மையே இதன் வெற்றி. பாருக்குட்டிகள் வாழ்க, ஆரோக்கியமாக!
பெண்ணுடல் என்று சொல்லும்போது, அவசியம் குறிப்பிடவேண்டிய கதை ‘கிடங்கு’. நாடக நடிகை நாகரத்னா தற்கொலை செய்துகொள்கிறாள். அவள் நடித்த நாடகத்தை அந்த ஊரில் ஏற்பாடு செய்த தொழிலதிபரின் கார் ட்ரைவர், இன்னொரு இளைஞனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, அவள் உடலை எடுத்துச் செல்ல ஒரு பழைய காருடன் சவக்கிடங்குக்குச் செல்வதில் கதை தொடங்குகிறது. சவக்கிடங்கு ஊழியரின் அலட்சியமான அணுகுமுறை, உடலை எடுத்துச் செல்லக் காத்திருப்பவரின் அதீத பணிவு, மிகக் குறைவாகவே பேசப்படும் கூர்மையான உரையாடல்கள் என்று இந்தக் கதை தனித்த வாசிப்பனுபவம். சவக்கிடங்குக்கு உள்ளும் புறமுமாகத் திரியும் ஒரு பூனை, இந்தக் கதையின் கனத்தைத் தன் மெல்லுடலால் அதிகரிக்கிறது. அந்தப் பூனையைப் பார்த்ததும், இளைஞன், தான் வேலை பார்க்கும் உணவகத்தில் திரியும், கரப்பான் பூச்சிகளை மட்டுமே தின்று ருசிகண்டு, வேறெதையும் எதிர்பாராத பூனையை நினைத்துக்கொள்கிறான். அதையொட்டி அவனுக்குள் எழும் ஒரு கேள்வி நம்மை அதிரச் செய்கிறது: “சவக்கிடங்கில் திரியும் இந்தப் பூனை எதைத் தின்னும்?”
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கதையின் பிரதான பேசுபொருட்கள் இன்றும் பேசப்படவேண்டியவையாக நீடிப்பதே இதன் முக்கியத்துவத்தைச் சொல்லிவிடும். தற்கொலை என்றதும் அதனுடன் துளியும் தொடர்பற்றவர்கள் அதன் பின்னணியை அலச முனைவதும், இறந்தவர் நடிகை என்றதும் கீழிறங்கும் விமர்சனங்களும் இன்று மட்டுமல்ல இன்னும் எதிர்காலத்துக்குமே பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. நாகரத்னாவைப் பற்றிய தரக்குறைவான விமர்சனங்கள் ஒருபக்கம் இருக்க, அவளுடைய சடலத்துக்குச் செய்யப்படும் அவமதிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது. அவசியம் வாசிக்கவேண்டிய, நிறைய பேசவேண்டிய சிறுகதை, ‘கிடங்கு’.
நினைவு வெளியின் பாதையிலேயே பயணிக்கும் அபாரமான கதைகள் பல இருக்கின்றன. அவற்றுள் ‘விடை’ எனும் கதை குறிப்பிடத்தக்கது. கணக்குப் பாடப் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் இருக்கும் ஒரு கணக்கு, அதற்கான படம் ஆகியவற்றிலிருந்து கதை தொடங்குகிறது. அந்தப் படத்தில் ஒல்லியான ஒருவன் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறான், சைக்கிளின் அருகில் மணிக்கு 8.3 கிலோமீட்டர் என்று எழுதியிருக்கிறது, கூடவே ஒரு பலகையில் ‘புகலூர் 24 கிலோமீட்டர்; என்று எழுதியிருக்கிறது. எனில், மணிக்கு 8.3 கிமீ வேகத்தில் பயணித்தால் 24 கிமீ தொலைவில் இருக்கும் புகலூரை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பது கணக்கு. குழந்தைக்கு விடை தெரியவில்லை. புத்தகத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பவன் அந்தப் படத்தின் வழியாக உள்ளே போய்விடுகிறான், சைக்கிளில் பின்னால் அமர்ந்தபடி ஓட்டுபவனுடன் பேசுகிறான், பாதை பழகியதைப் போலத் தெரிகிறது, ஒரு மரம் பார்த்த மரமாகத் தெரிகிறது. இதற்கிடையில் அம்மா இறந்துவிட்டாள் என்பதும், அதற்கு முன்பாக ‘இங்கே இருக்கப் பிடிக்கல’ என்று அவள் கத்தியதும், அதற்கு முன்பாக அப்பா அவளை வேறோர் ஊரிலிருந்து அழைத்து வந்ததும் கலைந்து கலைந்து ஞாபகம் வருகிறது.
இந்தக் கதை உறவின் சிக்கல்களை விரித்துக் காட்சிப்படுத்தினாலும் இழை இழையாக ஒரு சிறுவனின் சொற்கள் மட்டுமே தட்டுப்படுகின்றன. இங்கும் கதையில் வாழும் சிறுவன் பொறுப்புடனே கையாளப்படுகிறான். ஒரு புத்தகத்துக்குள் நுழைந்து, கட்டற்ற நினைவுலகில் சஞ்சரிக்கும்போதும், கல்விப் புலத்தின் அனுசரணையற்ற சூழலைச் சொல்லும்போதும் அந்தக் கோடு சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.
இரா.முருகன் சிறுகதைகளில் நிறைய கதைகள் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன, நிறைய கதைகள் நின்று நின்றும் வாசிக்க வைக்கின்றன. ‘தேர்’ கதையில் அதன் உருள்பாதையின் போக்கில், ‘இயக்கமெல்லாம் நிலைப்படுத்துவதற்கே’ என்ற இரண்டு சொற்களைக் கடக்கவே முடியவில்லை. ‘நிலைப்பட்டது எல்லாம் இயக்கத்தை எதிர்நோக்கியே. இது சீராக நடைபெற வேண்டியிருக்கிறது’ என்ற அடுத்தடுத்த சொற்கள் முதலிரண்டு சொற்களுக்கான ஆறுதலைப் போல இருந்தாலும், என்ன ஆறுதல் சொல்லி என்ன ஆகப்போகுது என்று மனசு புலம்பியபடிதான் இருக்கிறது. இந்தக் கதைகளிலிருந்து நான் எப்போதும் என்னுடன் வைத்திருக்கும் சொற்களாக இவையே இருக்கும். இயக்கமெல்லாம் நிலைப்படுத்துவதற்கே!
மறக்க முடியாத எத்தனையோ இருக்கின்றன இந்தக் கதைகளில் – பழைய கிராமபோன் ரெக்கார்டுகளை அரைத்து சிரங்குக்குப் பத்துப் போட வாங்கிச் செல்வார்கள் எனும் குறிப்பு, முந்திரிக்காய் கூஜா, ஊறுகாய் பிரதானமாக உலவும் கதைக்கு ‘வினைத் தொகை’ என்ற தலைப்பு, பேச்சிலர் தங்குமிடத்தின் மாடியைப் பார்த்து, இருக்கிறானா இல்லையா என்ற எந்தக் கவலையும் இல்லாமல் ‘சடகோபா’ என்று எப்போதும் அழைக்கும் ஆழ்வார், ‘கடலின் அக்கர கோனாரே’ என்று வார்த்தை தவறிய பாட்டு, மருத்துவமனையில் இருக்கும் மனைவியைப் பார்க்கப் போகும்போது அன்றாடம் எடுத்துச் செல்லும் ஃப்ளாஸ்கை அவள் இறந்தபின் ஆவியுடன் பேசப் புறப்படும்போதும் அனிச்சையாக எடுத்துச் செல்லும் மனிதன், வயதான மனிதர் சொல்லச் சொல்ல, விளையாடப் போகமுடியாமல் பொருமியபடி கடிதம் எழுதித் தரும் சிறுவனின் ‘எழுத்ததிகாரம்’ என்னும் கதை, 2100-ஆம் ஆண்டில் வெர்ச்சுவல் வாழ்க்கைக்குள்ளும் நியூஸ் பார்க்கும் கதை நாயகன் என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
இரா.முருகன் சிறுகதைகள் என்ற முழுத்தொகுப்பு 2006-இல் வெளியாகியிருக்கிறது. இதன் முன்னுரையில் ஆசிரியர் ஒரு கோட்-சூட் அணிந்த மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். எப்போதுமே அந்த உடையுடன் தோன்றும் நபர் ஒரு நாள் தன் வீட்டுக்கு வந்து, இரு வீடுகளுக்கும் இடையில் அடைத்துக்கொண்டிருக்கும் கழிவுநீரைச் சுத்தம் செய்யும் பணி பற்றியும் அதற்காகும் செலவை இருவரும் பகிர்ந்துகொள்வது பற்றியும் பேசுகிறார், அப்போது தான் ஒரு ஃப்யூனரல் டைரக்டர் என்கிறார், அதாவது சாவுச்சடங்கு நிர்வாகி. எனவே அதற்கான உடையே அவர் எப்போதும் அணிவது என்பது புரிகிறது.
முன்னுரையின் இறுதியில், தன் எழுத்தைப் பற்றி ஆசிரியர் இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘எழுத்தை நான் ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ அணுகுவதில்லை. எழுத மனத்தில் உந்தல் தோன்றும் ஒவ்வொரு முறையும், ஒரு சாவுச் சடங்கு நிர்வாகியாக நான் சீரான உடையணிந்து கண்ணியமான தோரணைகளோடு அதை எதிர்கொள்வதில்லை. அவ்வாறு எதிர்கொள்கிறவர்களை நான் மதிக்கிறேன். கழிவுநீர் அடைப்பு நீக்குதல் போன்ற பொது சுகாதாரத்தை உத்தேசித்த காரியங்களுக்காக அவர்கள் செலவு செய்யவேண்டி வந்தால் நானும் பங்கேற்கிறேன்.’
ஆமாம், பொது சுகாதாரம் முக்கியம்தான்!
முழு அபத்தங்களை எழுதும்போதும் ரசிக்கும்விதமாகச் சுட்டிக்காட்டும் இரா.முருகன் சிறுகதைகளை வாசித்ததும், அவற்றை மீண்டும் அசைபோட்டுப் பேசுவதும் எழுதுவதும் சுவாரசியமான அனுபவங்கள். இயக்கமெல்லாம் நிலைப்படுத்துவதற்கே! நிலைப்பட்டது எல்லாம் இயக்கத்தை நோக்கியே! வாழ்தல் இனிது!