மிளகு   அத்தியாயம் ஐம்பத்தைந்து

ஹொன்னாவர் 1605

விடிந்து கொண்டிருக்கும்போது அந்தப் பெண்கள் நடக்கத் தொடங்கினார்கள். சிறுபறை கொட்டிப் பாடிக்கொண்டே நடந்தால், நடக்கும் தொலைவு தெரியாதென்று பாட ஆரம்பித்தது, நடையும் தீரவில்லை, பாட்டும் ஓயவில்லை. 

எல்லோரும் பதினைந்து வயதிற்கு உட்பட்ட கன்யகைகள். எல்லோரும் பதினைந்து வயதுக்காரிகள் என்றோ சொன்னது? இந்தக் கூட்டத்தைத் தலைமை வகித்து நடத்திச் சென்றவள் காசிரை. அப்படித்தான் தன் பெயரைச் சொல்லிக்கொள்கிறாள் கஸாண்ட்ரா சில நேரம். 

பல நேரமும் அவள் தன் போர்த்துகீசிய தந்தை ரொனால்டோ பத்ரோஸின் மகளாக உணரும்போது அவள் கஸாண்ட்ரா. இந்துஸ்தானத்து அம்மா காவேரியின் செல்லப்பெண்ணாக உணரும்போது காசிரை. 

இன்றைக்கு, திருமணத்துக்குக் காத்திருக்கும்   பெண்கள் நிலாக் கடவுளையும் சூரியனையும் வழிபட்டு, நிலா மறைந்த பின், ஆதவன் எழும்போது ஆற்றில் நீராடினால் விரைவில் திருமணம் நிகழும் என்று நம்பிக்கை. கல்யாணமான பெண்கள் நெடுநாள் கட்டுக்கழுத்தியாக இருக்கவும் இன்றைய நதிக் குளியல் உத்தரவாதமளிக்கும்.

கல்யாணம் ஆகாத கன்யகைகள் ஷராவதி நதியை ஆராதித்து, கோதுமையில் சர்க்கரை சேர்த்துப் பிடித்து வைத்த நிலாத்தேவனின் உருவத்தையும், சூரியனின் உருவையும் வணங்கி அந்தச் சிறு உருவங்களை சுவைக்காமல் வாயிலிட்டு விழுங்குதலும் வழிபாட்டில் பகுதியாகும்.  

நெய் மிகைத்துப் பெய்த சர்க்கரைப் பொங்கலும் அப்பங்களும், உப்பிட்ட கடலைப்பருப்பு சுண்டலும், ஒற்றை இட்டலிகளுமாக ஆற்றங்கரையில் இருந்து பெண்கள் உண்ண வேண்டும். வழிபட்டு திரும்பி வரும்போது சிறுபறைகளையும், உடைத்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கையும். பழந்துணியையும் ஆற்றோடு போகவிட்டு வரவேண்டும். 

கூட்டமாகத் தோழிகளோடு போய் ஆற்று நீராடும் இந்த வழிபாடு தமிழ் பேசும் பிரதேசத்திலிருந்து வந்தது என்று சொல்வார்கள். காசிரைக்கு அதொன்றும் சிந்தனைக்குரிய விஷயமில்லை. 

விடிகாலைப் பனியும், கூட்டமாக கோவிந்தன் பெயர் சொல்லிச் சிறு பறை கொட்டிப் போவதும், பாடுவதும், பகடி பேசுவதும், கலகலவென்று சிரிப்பதும், ஐந்து வயதிலிருந்து பிடித்துப்போனவை. காசிரை ஆகும் தினங்கள் வருடம் ஒருமுறை மட்டும், ஜோசியர்கள் கணித்தபடி வரும். 

போர்த்துகீஸ் அரசரின் இந்துஸ்தானத்து தலைமைப் பிரதிநிதி மாளிகையின் நிர்வாகியாக உத்தியோகம் பார்க்கும்போது ஒரு நாளின் சில மணி நேரங்கள் மட்டும் இப்படி காசிரையாக சந்தர்ப்பம் கஸாண்ட்ராவுக்குக் கிடைக்கும். 

இன்றைக்கு அப்படியான தினம். நேற்றே பெத்ரோவிடம் சொல்லிவிட்டாள் கஸாண்ட்ரா – 

“மேஸ்ட்ரோ, இந்த வார இறுதியில் உங்கள் மனைவி மரியா பெத்ரோ சின்ஹோர் திரும்பி வரப்போகிறார். நாலு நாளாவது கையையும் காலையும் சும்மா வைத்துக் கொண்டு நான் சொல்வதைக் கேளும்”. 

பெத்ரோ பட்டுப் பாவாடையும் ரவிக்கையும் அணிந்து வந்திருந்த கஸாண்ட்ராவின் இடுப்புப் பிரதேசத்தை மும்முரமாக ஸ்பரிசித்து வேறு உலகங்களுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.  அவள் கால்களை வலிதீரப் பிடித்து விடுவதாக வேறே அனுமதி கேட்டு மனுப்போட்டிருந்தார் அவர். இத்தனைக்கும் கஸாண்ட்ரா கால்வலி என்றோ காதுவலி என்றோ அவரிடம் சொல்லவும் இல்லை. பாதம் தாங்கும் சேவையாற்ற வேண்டவும் இல்லை.

“நாளை ஷராவதி நதியை பெண்கள் ஆராதிக்கும் நாள் சென்ஹோர். நான் போய் உலகம் முழுவதும் பெண்கள் நிலைமை மேம்பட பிரார்த்தனை செய்து, பகலுக்குத்தான் இங்கே வருவேன்” கஸாண்ட்ரா சொல்லியிருந்தாள்.

காவேரி நதியும், கோதாவரியும் கிழக்கு நோக்கிப் பெருகிப் போக, ஷராவதி நதியோ மேற்குத் திசையில் பிரவகித்து ஹொன்னாவரில் அரபிக் கடலில் கலக்கும். 

அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக  நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து,  குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள் கொண்டுதரும் நீர்ச் சுவையும், நதிவாசனையும் துறந்து, உப்புச் சுவை மீதுர கடல்வாடை கொண்டு, ஷராவதி மறைந்து போவாள். 

நதி கடலோடு கலக்கும் கழிமுகத்துக்கு   முன்னால் மடைமாற்றி வேகத்தைக் கட்டுப்படுத்தி, நீராடவும், படிகளில் அமர்ந்து கால்தொட ஆறு நனைத்துப் போகவும் நேரம் செலவிட, தண்ணீர்த்துறைகள் சந்தடி மிகுந்து  பரபரப்பாக இயங்கும் நிலாநாள் காலை.

இருபத்தைந்து வருடமாக காசிரை இந்த நதி நீராடலுக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் அவளோடு பாடிக் கொண்டும், சிறுபறை கொட்டிக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் வருகிற கன்யகைகளில் சிலர் கல்யாணமாகிக் காணாமல் போகிறார்கள். புதிதாக சின்னப்பெண்கள் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். அவளை வாடி போடி  என்று உரிமையோடு அழைத்தபடி கூட வந்த பெண்கள், வயதுக்கு முன் வந்து சேரும் இளம் முதுமையோடு, அவர்களின் பனிரெண்டு வயது மகளை நதிநீராட காசிரையோடு அனுப்பிவைக்கிறார்கள். 

‘அடியே காசிரை’ விளிகள் ‘அக்கா காசிரை’ ஆயின. அவை ’அத்தை காசிரை’யாகி, அதுவும் போய் ’காசிரை அம்மாளாக’, ‘காசிரை முத்தச்சி’யாகத் தேய இன்னும் நிறைய வருடங்கள் மீதி இல்லை என்பதை காசிரை அறிவாள். 

கூட வந்தவர்கள் தொலைந்து போன அந்த சோகத்தை நினைத்தால் எதற்கு நதிநீராட்டு நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களுக்காக இல்லை, காசிரை தனக்காகப் போகிறாள். இனியும் அவளுக்கு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அவள் அதற்காக நிலாத் தேவனை வேண்டுவதும் இல்லை.

இமானுவெல் பெத்ரோ என்னும் போர்த்துகீசிய அரசியல் அதிகாரப் பெரும் ஆளுமை கொண்ட நாற்பது வயதானவரோடு முப்பத்தைந்து வயதான காசிரையின் இரவுகள் இன்பமாகக் கடந்து போகின்றன என்று உலகமே குரல் தாழ்த்திப் பேசி, நம்புகிற தகவல் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்பதை காசிரை அறிவாள். பெத்ரோ துரை அறிவார். தெய்வம் அறியுமா தெரியாது. 

அவரோடு காசிரையை சம்பந்தப்படுத்தி பேசுவது ஒரு விதத்தில் அவளுக்குப் பாதுகாப்புதான். வேறு யாரும் சின்னத்தனம் பண்ண முயற்சி செய்வதற்கு முன் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக யோசிப்பார்கள். பெத்ரோவின் வைப்பாட்டியை பிருஷ்டத்தில் கிள்ளினால் மிளகு விழுதை ஆசன துவாரத்தில் பூசி மிச்சமிருப்பதை முன்னால் கவசமிட்டு அலங்காரம் செய்து அழகு பார்க்க போர்த்துகல் அதிகாரிகள் எல்லோரும் கூடுவார்களே.

”அக்கா தண்ணீர்த் துறை வந்தாச்சு. மஞ்சள்பொடியும் வாசனைப் பொடியும் எடுத்துக்கிட்டு உங்க ரதம் வந்து சேர்ந்ததும் நீராட்டு தொடங்க வேண்டியது தான்”.  

ஒடிசலான பொற்கொடி போன்ற இளம்பெண் ஒருத்தி வெண்பல் ஒளிரக் கேட்டாள். காசிரை அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டாள். 

“வந்துக்கிட்டிருக்குடா தங்கம்”. 

காசிரையின் புன்முறுவலும் அழகிய பெரிய விழிகளும் அதிகாலை வெளிச்சத்தில் அழகாகத் தெரிய சாரட் வண்டி தண்ணீர்த் துறைக்கு வந்து நின்றது. தேரோட்டி அருகமகாவீரன் குதித்து இறங்கினான்.

”காசக்கா, நீங்க சொன்னபடி வெளிச்செண்ணெய், அரப்புப் பொடி, வாசனைப்பொடி, மல்லிகைப் பூ, கருந்துளசி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் பிரம்பு கடகத்துலே தனித்தனியாகப் போட்டுக் கொண்டு வந்திட்டேன். சரியா இருக்கா பாருங்க” என்றான் அவன்.

”சரி நான் பார்த்துக்கறேன். நல்ல காரியம் செய்திருக்கே. உன்னை அருகதேவரும் மகாவீரரும் சேர்ந்து ஒரு மாசம் மதுசாலைக்கு போகாமல் பார்த்துக்கொள்ளட்டும். இப்போ கிளம்பு. ஆண்கள் இன்றைக்கு பகல் வரை வரமுடியாத பிரதேசம் இது”. 

அருகமகாவீரன் கண்ணை அகல விரித்து காணாதன கண்டது போல் நாலு திசையும் திரும்பித் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்ததை உடனடியாகத் தடுத்து அவனை அனுப்பிவைத்தாள் காசிரை.

ஸ்னான கட்டத்திற்குள் காசிரை நுழைந்தபோது ஒரே சிரிப்பும் கலகலப்பான பேச்சுமாக ஒரு நூறு பெண்கள் அங்கே களித்திருந்தார்கள். நீண்டு வளைந்து குளம் போல் பாத்தி கட்டி, ஷராவதியை நடை மாற்றி, கிழக்கு திசையில் கொஞ்ச தூரம் வேகமின்றி மெல்ல அசைந்தாடிப் போகவைத்திருக்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் அரபிக் கடலின் முதல் அலைகள் நிலம் தொட்டுப் போக, குளியல் மண்டபம் விடிந்து கொண்டிருக்கும் பொழுதில் வெளிச்சம் பூசி நின்றது. 

ஆணில்லாத பெண் ராஜ்யம் என்ற நிலைமை துணிச்சலை ஏற்படுத்த, நீராட்டு கட்டத்தின் படிகளில் மேல்துணி துறந்த பெண்டிர் ஒருத்திக்கு ஒருத்தி முதுகு தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்கள். விளையாட்டாக முதுகில் இருந்து முன்னால் படர்ந்த கைகள் விளையாட, சிரிப்பும் கூச்சலும் ஒவ்வொரு வினாடியும் மிகுந்து, அடங்கி, மீண்டும் அதிகரித்துக்கொண்டிருந்தன. 

“அக்கா, முதுகு தேய்ச்சு விடவா?” என்று காசிரையிடம் உரிமையோடு ஏழெட்டு சிறுமியர் அவள் அமர்ந்த கல்படிக்கு அடுத்த மேற்படியில் இருந்து, முதுகில் தொட்டு மெல்ல அடித்துச் சிரித்தார்கள்.  இன்னும் கீழிருந்த படியில் அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்கள் நான்கு பேர் ரம்மியமாகப் பாட ஆரம்பித்திருந்தார்கள். அந்தப் பாட்டின் தாளமும் இசையும் மனம் கவர தண்ணீர்த்துறையே கூடச் சேர்ந்து பாடியது. எண்ணெய் பூசிய தொடைகள் மின்னி தாளம் கொண்டு சிலிர்த்தன – 

கும்மியடி பொன்னூர் பூமி முழுவதும் 

குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி.

 நம்மை சூழ்ந்தது நன்மை எல்லாம் வந்து 

உண்மை இதுவென்று கும்மியடி.

காசிரை எண்ணெய்க் காப்பு கொள்ள நிறைய நேரம் பிடித்தது. சிறுமிகளின் தலையில் எண்ணெய் வைத்து வாழ்த்த நிறையப்பேர் காசிரையைக் கோரினார்கள். 

கொஞ்சம் பெரிய பெண்கள் அவள் கையால் எண்ணெய் வாங்கி நெற்றியிலும் பின் கழுத்திலும் உச்சந்தலையிலும் விரலால் தொட்டுக்கொண்டு ஷராவதி தாயை வணங்கி விரைவில் மணநாள் காண அருளும்படி கண்மூடி பிரார்த்தித்து, நதியில் நீராடி வந்தார்கள். 

இவர்களுக்கும் பிறகு, எப்படி மேகம் போல் அடர்ந்து கருத்த கூந்தலைப் பராமரிப்பது, உதடுகள் வெடிக்காமல் மிருதுவாக காட்சியளிக்க என்ன செய்யணும், இன்னும், பலருக்கும் தேவையான, தொய்வு இல்லாமல் முலைகள் திண்ணென்று பெரியவையாக எப்போதும் திகழ என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் குறிப்புகளை காசிரையிடம் கேட்டுத் தெளிவு பெற ஒரு கன்னியர் கூட்டம் நின்றது. 

காசிரையின் முதுகையும், உருண்ட தோள்களையும் தடவி மெய்மறந்து பாராட்டவும் சில பெண்கள் காத்திருந்தார்கள். அந்த வழுவழுத்த உடல் எப்படிக் கிடைக்கும் என்ற கேள்விக்கு அவள் சொல்கிற ஒரே பதில் – பயத்தம்பருப்பு மாவைத் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்துக் குளி. 

ஹொன்னாவர் பெண்கள் வந்தாலே பசுநெய் ஊற்றிப் பிடித்த மாவுருண்டை நடந்துவருவது போல் வாடை தீர்க்கமாக அடிக்க பயத்தம்பருப்பு கவசம் முக்கியக் காரணமானது. கையும் காலும் மு டி நீங்கி வழுவழுத்துப் போனதாக காசிரைக்கு நன்றி சொன்னவர்கள் அநேகம்.

காலை எட்டு மணிக்கு காசிரையின் சாரட் புறப்பட்டது. காசிரையை அடுத்த ஆண்டு எல்லாம் நல்லபடி நடந்தால் இந்த ஷராவதி கழிமுகத் துறையில் சந்திக்கலாம் என்று சொல்லிக் கைகாட்டி சாரட்டின் ஜன்னலைச் சார்த்தினாள் அவள்  

ஜன்னல்கள் திரும்பத் திறக்கப்படும்போது அவள் கஸாண்ட்ராவாகி இருந்தாள்.  இடுப்பில் நீல வண்ணக் கால்சராயும், காலணிகளும், உதட்டில் சாயமும், தூக்கி நிறுத்திய நெஞ்சை இறுக்கிய கிச்சிலிப்பழச் சாயமேறிய வண்ணக் குப்பாயமுமாக அவள் இமானுவெல் பெத்ரோ சின்ஹார் மாளிகை நிர்வாகியாக, வாயில் முதலில் போர்த்துகீசு மொழியும், அடுத்து கொங்கணியும், கூடவே தமிழும்  சுலபமாகப்  புழங்கிவர சுற்றி நடக்கும் கஸாண்ட்ரா அவள்.

“கஸாண்ட்ரா, நீ வருவதற்கு தாமதமாகும்னு சொன்னதாலே,  ரொட்டியைத் துண்டு போட்டு அடுப்பிலே சுட்டுத் தின்னுட்டேன். மதியம் மிர்ஜான் கோட்டைக்கு போறேன். அங்கே விருந்து இருக்கக் கூடும். நீ மதியத்துக்கு சாப்பாடு ஏற்படுத்தப் போறேன்னா, உனக்கு மட்டும் செஞ்சுக்கோ” என்றார் பெத்ரோ. அவசரமாக கருப்பு கால்சராய்க்குள் புகுந்து கொண்டார் அவர் பேசியபடிக்கே.

”அடடா  இன்று உங்களுக்கு பெஃபின் மதியத் தீனியாகத் தர, நேற்று ராத்திரி தான் சின்னஞ்சிறு சதுரமாகச் சீவிய பன்றி மாமிசத் தகடுகளை வஞ்சனையில்லாமல் வெள்ளை ஒயினும், மிளகுப்பொடியும் சேர்த்து ஊறவைத்தேன். என்ன நறுமணம் என்ன நறுமணம் சின்ஹோர். உண்மையிலேயே உங்களுக்கு பெஃபின் ஒரு துண்டு கூட வேண்டாமா”?

 பெத்ரோவின் கையைத் தன் கரங்களுக்க் இடையே எடுத்து மெல்ல முத்தமிட்டபடி சமையலறை வாசலைப் பார்த்தாள் கஸாண்ட்ரா. சமையல்கட்டுக்குள் அவள் அழைக்காமல் யாரும் வர அனுமதி இல்லைதான்.

”வெள்ளை ஒயினுக்கு என்ன செய்தாய் தேவதையே?” பெத்ரோ அவசரமாகக் கேட்டார். 

“உங்கள் மதுக் கூடத்தில் தான் கவர்ந்து எடுத்தேன்.  முந்தாநாள் பிரஞ்சு ஒயின் போத்தலை அடைத்த தக்கை கொஞ்சம்போல் உதிர்ந்து உள்ளே ஒயினோடு கலந்ததால் ஒயின் வாசனையும், சுவையும் குறைந்து போனதாக நீங்கள் தள்ளி வைத்தீர்களே அந்த ஒயினை வீணாக்காமல் ஊறவைக்க தாராளமாக உபயோகித்தேன்”. 

”இந்த ஊறிய மாமிசத்தை ரொட்டித் துண்டில் வைத்துச் சுட்டு பெஃபின் ஆக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்?” 

“துணை ஆகாரம் செய்து, பெஃபின் சுட்டு எடுத்துத் தர என்ன, அரைமணி நேரம் ஆகலாம் சின்ஹோர். அதெல்லாம் ஒரு நேரமா? இருங்கள். இப்போதே செய்து தருகிறேன். உண்டு பசியாறிச் செல்லுங்கள்” என்றாள் கஸாண்ட்ரா.

”வேண்டாம் சிறுமியே, நேரம் ஆகிவிட்டது. மிளகுராணி வருகிறார்”

”அவருக்கும் வேண்டுமானால் ரெண்டு பெஃபின் எடுத்துப் போங்களேன்”

“மாமிசத்தோடு அரசியாரை சந்திப்பது கௌரவக் குறைச்சலாச்சே பெண்ணே. அதோ வந்து விட்டார் அரசியார்”

 பெத்ரோவின் எண்ணம் மிர்ஜான் கோட்டையில் ஏற்கனவே போய்ச் சேர்ந்திருந்தது. 

“என் பாட்டியம்மா மிரியம் டிசௌஸா பெஃபின் சுட்டுத் தந்து சாப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். என்ன ருசி”. 

அந்த அவசரத்திலும் பாட்டியம்மா நாற்பது வருடம் முன் சுட்டெடுத்துக் கொடுத்த பெஃபினை மறக்காமல் நினைவு கூர்ந்த பெத்ரோவிடம் கஸாண்ட்ரா சொன்ன்னாள் – ”சாயந்திரம் பிரஞ்சு பாணி உருளைக்கிழங்கு வறுவல் உண்டு பண்ணி வைக்கிறேன். ஒயினும் லாகப் பியரும் வறுவலும் துணையிருக்க, பெஃபின் இரண்டு சுட்டுக் கொடுக்கிறேன். முழுச் சாப்பாடு போல் இருக்கும்”. 

பெத்ரோ யோசித்தார். ஏற்கனவே பன்றி மாமிசத்தை ஒரு ராத்திரி முழுக்க ஊறப்போட்டு ரொட்டித் துண்டுகள் நடுவே வைத்து, அதைச் சுடப்போவது இன்றைக்கு நாள் முழுவதும் கழிந்து. இரண்டு நாள் சமைக்கப்படாத மாமிசத்தை சுட்டுத் தின்றால் வயிறு எங்கே எங்கே என்று கெடுதல் செய்யாதோ. 

பெத்ரோவாக, வெறும் பெத்ரோவாக இருந்தால் எல்லா ஆகாரமும் சரிதான். போர்த்துகல் அரசரின் இந்துஸ்தானத்து தலைமை பிரதிநிதி பெத்ரோ வயிற்றையும் வாயையும் கட்டி அவற்றை ஜாக்கிரதையாக உபயோக்கிக்க வேண்டாமா. 

பெபின் இன்றைக்கு வேண்டாம் என்று முடிவு செய்தார். 

“பெண்மணியே, ஒரு உதவி செய்”. 

“முத்தமா?” 

“அது இருக்கவே இருக்கு. இந்த பெஃபினுக்கு பரம ரசிகர் கவுடின்ஹோ துரையவர்கள். நீ ஒரு நாலு எடுத்துப் போய், கூடவே பிரஞ்சு உருளைக் கிழங்கு மெத்தென்ற மெது வறுவல், தக்காளித் தொக்கு என்றும் கொண்டு போய் என் வாழ்த்துகளோடு கொடுத்து விட்டு வந்துவிடேன். கிழத்தை அவ்வப்போது இப்படி உபசரித்தால், பிரயோஜனம் இருக்குமோ என்னமோ, தொந்தரவு இருக்காது. அதன் பின் நீ மீதி நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் சிறுமியே. தயை கூர்ந்து, எனக்காக”. பெத்ரோ யாசிக்கிறது போல் கேட்டார்.

கஸாண்ட்ரா பெத்ரோவை நேரே பார்த்தபடி சொன்னாள் – ”கவுடின்ஹோ சின்ஹோர் பெஃபினுக்கு மட்டும் பரம ரசிகர் இல்லை, கஸாண்ட்ராவுக்கும் அதேபடி தான். தனியாக அவரிடம் மாட்டிக்கொண்டால் என்னை பெஃபின் ஆக்கி விடுவாரே பிரபு”. 

பெத்ரோ யோசித்தார். ”போனோம் வந்தோம் என்று வந்தால் ஒரு கேடும் சூழாது பெண்ணே. சாரட்டை அருகனைச் செலுத்தச் சொல். அவன் மற்போரில் வெற்றி பெற்று மல்லன் என்ற விருது பெற்றவன். கவுடின்ஹோவின் சாசேஜ் நசுங்கிப் போய்விடும் அவன் பார்த்தாலே”.  பெத்ரோ  நடந்தபடி சொன்னார்.  

வேலைக்காரர்கள் பசியாற வந்து பின்கட்டில் குந்தியிருந்தார்கள். அவர்களுக்காக அவசரமாகக் கிண்டிய ராகிக்களியையும் புளிக்குழம்பையும் பரிமாறினாள் கஸாண்ட்ரா. அவர்கள் குளித்து உடைமாற்றி ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்வார்கள். காலை நான்கு மணிக்கே அந்தக் குழுவிலிருக்கும் அனைவரும், தோட்டவேலை, குதிரைகளைப் பராமரித்தல், சாரட்களை பராமரித்தல், துணிகளைத் துவைப்பது, வீடு தூசி போக்கப் பெருக்கி, மெழுகி வாசலில் கோலமிடுதல் என்று கஸாண்ட்ரா விதித்த அன்றன்றைக்கான பணிகளில் பரபரப்பாக இயங்கி, காலை பசியாறிய பிறகு குளிப்பார்கள். குளித்துவிட்டு உண்ண வேண்டும் என்று எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாமால் இருந்து பழகியிருப்பதால் போகட்டும் என்று விட்டுவிட்டாள் வீட்டு நிர்வாகியான கஸாண்ட்ரா.

வீடு அமைதியில் கிடந்தது. கஸாண்ட்ரா கதவுகளைச் சாத்தித் தாழிட்டு பின்னறையிலிருந்து எடுத்த  பெரிய பீங்கான் ஜாடியோடு சமையலறைக்கு நடந்தாள்.  ஜாடிக்குள், இரவு முழுவதும் வெள்ளை ஒயினில் ஊறிய பன்றி மாமிசத் துண்டுகள் தனி வாடையைக் கிளப்பிக்கொண்டிருந்தன. ஓலைக் கடகத்தில் அடுமனையில் இருந்து வந்திருந்த ரொட்டியை எடுத்து சீரான சதுரத் துண்டுகளாக சீய்த்து சமையலறை மேடை மேல் பித்தளைத் தட்டில் இட்டாள். 

ரொட்டியும் பெத்ரோவின் மாளிகையில் தான் முன்பெல்லாம் செய்து வந்தார்கள். ரொட்டி செய்யலாம் என்று ஆரம்பித்தால் வேறெதெல்லாமோ கவனிக்க வேண்டி இருந்தது. நல்ல, புழுபூச்சி இல்லாத கோதுமை வாங்குவது, கரகரவென்று மாவு ஆக கல் யந்திரத்தில் போட்டுச் சுற்றிச் சுற்றி அரைத்து வைப்பது, வெண்ணெயும் தேங்காயும், எள்ளும், கலந்து புளிக்காடி கொஞ்சம் சேர்த்து அடித்து அடித்து மாவைப் பிசைந்து களிமண் அடுப்பில் சுட்டெடுப்பது என்று   பல செயல்முறைகள் கடைப்பிடிப்பது தேவைப்படும்.   பருத்தி தெருவில் யூதன் இலியாஸ் அடுமனை தொடங்கிய பிறகு ரொட்டி மாவு பற்றிய விசனம் இல்லாமல் போனது.  

ரொட்டி சுட அடுமனை அடுப்பு ஒன்றை யூதனிடம் சொல்லி வைத்து கொச்சியில் இருந்து வாங்கி வைத்திருந்தார் பெத்ரோ. வீட்டு உபயோகத்துக்காக என்பதால் சிறியதாகத் தோற்றம்  தரும் அந்த அடுப்பில் உஷ்ணம் உற்பத்தியாவதுடன், வந்த வெப்பம் வெளியேறாமல் இருக்க இருப்புத் தட்டுகள் அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. 

அரை மணி நேரத்தில் புத்தம்புது ரொட்டி பத்திருபது துண்டுகள் சுட்டெடுக்கவும், இரண்டிரண்டு  துண்டுகள் நடுவே ஒயினில் ஊற வைத்த பன்றி இறைச்சித் துண்டுகள் செருகப்பட்டு இன்னொரு முறை வாட்டவுமாக நேரம் போனது. 

ஆக, கவுடின்ஹோ பிரபு உண்ண ஆறு துண்டு சாண்ட்விச்சுகள். அப்படித்தான் இங்கிலீஷ் பேசும் பூமியில் சொல்கிறார்களாம்.  தக்காளி மிளகாய் மிளகு சேர்த்துக் காய்ச்சிய கூழும் எடுத்துக் கொண்டாள் கஸாண்ட்ரா. அந்தக் கிழக் கோட்டானுக்கு இவ்வளவு அருமையாகச் சமைத்ததைக் கொண்டுபோய்க் கொட்டணுமா என்று எரிச்சல். 

என்றாலும் புறப்பட்டுவிட்டாள் விருட்ச வீதிக்கு. கவுட்டின்ஹோ அங்கே தான் வசிக்கிறார், 

நீள வசத்தில் விருட்ச வீதியில் தொடங்கி குறுகலாக நீண்டு போய் பின்னால் இருக்கும் தெருவான அம்பரேஷ்வரர் கோவில் தெருவில் முடிவடையும் அந்தப் பெரிய வீட்டில் பாதி அறைகள் பயன்படுத்த யாருமின்றிப் பூட்டித்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. 

கஸாண்ட்ரா இங்கே போன வருடம் ஒரு தடவை மரியா சீமாட்டியோடு வந்திருந்தாள். பெத்ரோ காசர்கோடுக்கு அலுவல் சார்ந்த பயணமாக யூதர்களின் நிதி நிறுவனத்துக்குப் போயிருந்தார் அன்று.

கவுடின்ஹோவுக்கு எழுபதாவது பிறந்த நாள். மரியா அவருக்காகத் தயாரித்த வான்கோழி முட்டை கலந்த கேக்குகளோடு – மரியா எங்கே தயாரித்தாள், கிட்டத்தட்ட முழுவதும் கஸாண்ட்ரா கைவண்ணம் தான் – இங்கே வந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னார்கள் மரியாவும் கஸாண்ட்ராவும்.

 கஸாண்ட்ராவை தன் வீட்டு சமையலறையிலிருந்து தட்டுகளை எடுத்து வரச் சொன்னார் கவுடின்ஹோ. வீட்டில் கிழக்கு மேற்கு தெரியாமல் அவள் தடுமாற, மரியாவை முன்னறையில் ஒரு சிறுநேரம் உட்கார்ந்து ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, கார்த்திகை மாத ஆண் நாயாக கஸாண்ட்ரா பின்னாலேயே வந்தார் பழைய கவர்னர் பெருமான். வந்து இறுக்கி அணைத்து உதட்டில் முத்தமிட்ட ஆவேசம் கவுடின்ஹோவுக்கு அன்று. 

அது  இன்னும் பாக்கி இருக்கக் கூடும். இருக்கட்டுமே. இதோ இன்னும் பத்து நிமிடம் மிஞ்சிப் போனால். கஸாண்ட்ரா, கரடியின் குகையிலிருந்து திரும்பி விடலாம். அவளை எந்தக் கிழக் கரடியும் ஆக்கிரமிக்க முடியாது.

சாரட் கவுடின்ஹோ மாளிகை வாசலில் நின்றது. 

“அருகா, நான் உள்ளே போகிறேன். பத்து நிமிஷத்துக்கு மேலே நான் வெளியே வரவில்லை என்றால் நீ கடைசி வாசல் படியில் நின்று கஸாண்ட்ராக்கா, எஜமான் துரை சீக்கிரமாக வரச் சொன்னார்னு சத்தம் போடு” என்றாள். அவள் கீழே இறங்க ஆயத்தமாக சிறு மர முக்காலியை ரத சாரதி அருகன் தரையில் வைத்தபடி சொன்னான் – ”நீங்க கவலையே பட வேணாம். நான் எதிர்லே வர்ற எதாவது சாரட் சாரதி கிட்டே, அவர் எதிரே கடந்து போகிற இன்னொரு சாரட் சாரதி கிட்டே, அந்த சாரதி தனக்கு எதிரே வரும் இன்னொரு ரத சாரதி கிட்டே இப்படி சாரட் சாரதி பின்னலாக அரை மணி நேரத்தில் ஹொன்னாவர் எல்லைக்கே தகவல் யாருக்கு போகணுமோ அவருக்கு போயிடும்”. 

அடேயப்பா எவ்வளவு நுணுக்கமான தகவல் போக்குவரத்து என்று கஸாண்ட்ரா சிரித்தபடி கவுடின்ஹோ வீட்டு பளிங்குப் படிகளில் ஏறினாள். பின்னல் ஒரு நேபாள பிரதேசத்துப் பையன் பிஃபானா பாத்திரத்தோடு போனான். அவன் தோளில் மாட்டியிருந்த பையில் சிறு போத்தல் நிறைய தக்காளி, மிளகாய், மிளகு, சர்க்கரை சேர்த்த கூழ் தொட்டுக்கொள்ளத் துணை ஆகாரமாக இருந்தது.

வீட்டு முன்னறையில், ஊரில் சிறந்த    அறிவியல் படிப்பாளி என்று பெயர் பெற்ற விக்ஞான உபாத்தியாயர் லூயிஸ் ராயப்பா ஏதோ திரவத்தை சிறு இரும்பு அடுப்பில் காய்ச்சிக் கொண்டிருக்க, பக்கத்தில் நின்று நிர்தேசங்கள் நல்கியவாறு கவுடின்ஹோ துரை இருந்தார். 

வாசலில் வண்டி வந்ததையும் அதிலிருந்து கஸாண்ட்ரா குதித்து இறங்குவதையும் பார்த்து பரவசமடைந்தார் கவுடின்ஹோ.  விக்ஞான உபாத்தியாயர் லூயிஸ் ராயப்பாவைக் கழற்றி விட்டு கஸாண்ட்ராவோடு சிருங்கார சல்லாபம் நடத்தியிருக்க அவர் மனம் துடியாகத் துடித்தது.  அவள் கூட வருகிற சீனாக்காரன் முக வேலையாளையும் உடனடியாகத் திருப்பியனுப்பியாக வேண்டும்.   கஸாண்ட்ராவோடு தாறுமாறாக ரமிக்க வேட்கை, வாசலுக்குப் போகும்போது  அவர் மனதில் உயர்ந்து வந்தது. 

“கஸ்ஸி, வா, வா, பந்துகள் குலுங்கப் படியேறி வா. உன் மலர்ப் பாதங்களை தாங்கிக் கீழிருந்து  நிமிர்ந்து பொக்கிஷத்தைப் பார்த்துக் கிடக்க என் மாளிகையின் கல் படிகளும்  பளிங்குத் தரையும் என்ன அதிர்ஷ்டம் செய்தன!”.

கஸாண்ட்ரா பாவாடையை காலுக்கு நடுவே இடுக்கிக் கொண்டாள். சனியன் கண்ணு அவிஞ்சு போக. குறி அறுந்து போக. எவ்வளவு தான் ஜாக்கிரதையாக உடுத்திக் கொள்வது. மாரை பாறையாக இறுக்க இன்னும் ஓர் கோர்செட்டை அணிந்து வந்திருக்கலாமோ. உள்ளே அணிந்த உடுதுணியைப் பார்த்தால் பார்க்கட்டும் கிழவன். உலகத்தில் இல்லாத வஸ்துவா அவளுக்கு வாய்த்தது.

“உனக்காக இந்த மாளிகை எப்போதும் திறந்தே இருக்கும், ஆருயிரே” அவள் இடுப்பைப் பற்றித் தன்மேல் அவளைச் சாய்த்துக் கூறினார் கவுடின்ஹோ.

 போர்த்துகீசிய மொழியில் புளித்த பழஞ்சொல் சம்பாஷணை மிகுந்த மிகை நாடகம் ரசிக்கப்படுவது அதிகம் என்பதை மனதில் நினைத்தோ என்னமோ எழுபது வயது கவுடின்ஹோ மிகையான கையசைவு, கண் உருட்டல், வாயைக் கிழித்துத் தொங்கவிட்டதுபோல் புன்னகை, அசட்டுப் பேச்சு என்று கூத்து நிகழ்த்த, பொறுத்துக்கொண்டு வல்லூறு எங்கே கொத்தப் போகிறது என்று ஊகித்தபடி உள்ளே வந்தாள் கஸாண்ட்ரா, அவர் கூப்பிட்டது போல் கஸ்ஸி என்று யாரும் இதுவரை அவளை அழைத்ததில்லை.

”ராயப்பா, நாளை தாவரவியல் ஆராய்ச்சியைத் தொடரலாம். பெத்ரோ சீமான் அவசர பணிக்காக அவருடைய இல்ல நிர்வாகியை அனுப்பி வைத்திருக்கிறார்”. விருந்தே நடந்து வந்திருக்கிறது. ஆராய்ச்சி எதற்கு?

நாற்காலியில் இருந்து எழுப்பி வெளியே கொண்டு விடாத குறையாக விக்ஞான உபாத்தியாயர் ராயப்பாவை வாசல் வரை கூட்டி போய் அனுப்பி விட்டு, வாசல் கதவை சாத்தினார். கஸாண்ட்ராவின் பின்னால் மோப்பம் பிடித்தபடி வேகமாக நடந்தார்.

“என் கண்ணே, என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என்று அவள் முதுகுப் புறத்தில் இருந்து கழுதைப்புலி ஓலமிடுகிறது போல் நாராசமான குரலில் பிதற்றினார். கஸாண்ட்ரா பன்றி என்றாள். பின்னால் திரும்பி மாமிசம் என்று சேர்த்தாள். 

“பெத்ரோ சின்ஹோர் உங்களுக்காகத் தனியாக வெள்ளை ஒயினில் ஊறிய பன்றி மாமிசத்தை ரொட்டியில் பொதிந்து சுட்டுக் கொண்டு வந்து தரச்சொன்னார். அருமையான, இருபது வருடம் பழைய ஒயின்” என்றாள் கவுடின்ஹோவிடமிருந்து ஒரு அடி விலகி நின்று.  

“இருபது வருடம் பழைய ஒயினா? நான் கவுரவிக்கப் படுகிறேன்” என்று தன் நெஞ்சில் விரலால் தொட்டு அடுத்து கஸாண்ட்ராவின் கொள்ளை கொள்ளையான மாரிடத்திலும் சுவாதீனமாகத் தொட்டுச் சொன்னார்.

“சின்ஹோர், ஒயின் மட்டுமில்லை பன்றியும் பழையது தான்” என்றாள் கஸாண்ட்ரா. ஓ என்று நிறுத்தாமல் சிரித்தார் கவுடின்ஹோ. 

ஒயின் பழையது தான். எனினும் நடுவில் தக்கை  திறப்பானை விட்டுத் திருகித் திறக்க முற்படும்போது தக்கை உதிர்ந்து ஒயினில் விழுந்ததால் அது குடிக்கத் தரமற்றுப் போனது என்பதை கவுடின்ஹோவுக்குச் சொல்லலாம் என்று நினைத்தாள் கஸாண்ட்ரா. ’கார்க் ஒயினில் விழுந்தால் ஒயின் கெட்டுப் போகும். அதை அடுத்து பன்றிகளுக்குத் தான் தரவேண்டி இருக்கும்’.

”மிகச் சுவையாக பிஃபானாகள் அமைந்து போனதால், உங்களுக்கு முதலில் அளித்து வரச் சொன்னர் என் துரை”. 

அவள் பேசியபடி நடக்க, இருளில் கிடந்த அறை வாசலில் நின்று அவளை எல்லா வலிமையும் காட்டி உள்ளே இழுத்தார் கவுடின்ஹோ. 

“கண்ணே, உன் அகன்ற தேர்த்தடத்தைப் பார்க்க வேணும்” என்று பிதற்றியபடி அவளைத் தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் இட்டார். 

“தேரும் ஆச்சு சாரட்டும் ஆச்சு. விடும், எனக்கு நிறைய வேலை உண்டு எங்கள் வீட்டில். பெத்ரோ நான் இன்னும் பத்து நிமிடத்தில் வந்து சேராவிட்டால் தேடிக்கொண்டு வந்துவிடுவார்” என்றாள் கஸாண்ட்ரா.  

“அந்த கையாலாகதவனுக்கு பாவாடை தூக்கி என்ன பிரயோஜனம் கண்டாய் கஸ்ஸி சர்க்கரைப் பொம்மைக்குட்டி. நான் உன்னை ஹொன்னாவருக்கோ, ஜெர்ஸோப்பாவுக்கோ இல்லை, லிஸ்பனுக்கே ராணியாக்கிக் காட்டுகிறேன். கொஞ்சம் நெருங்கிப் படு கண்ணே” என்றபடி கட்டிலில் உட்கார கஸாண்ட்ரா அவர் தோளில் காலால் உதைத்தாள். 

நிலைகுலைந்து அவர் தரையில் விழ கஸாண்ட்ரா எழுந்து நின்றாள். 

“மிளகை மூன்று மாதம் மண்ணும் தண்ணீரும் இல்லாமல் வைத்திருந்து தண்ணீர் கிடைத்த அடுத்த நொடி கண்விழித்து வளரச் செய்ய புது ரசாயனம் கண்டு பிடித்திருக்கிறேன். அந்த ஆராய்ச்சி தான் வாசல் அறையில் நடக்கிறது. அடுத்த மாதம் லிஸ்பன் திரும்பும்போது, என் கண்ணாட்டி நீயும் என்னோடு, வைப்பாட்டி இல்லை, பெண்டாட்டியாக என்னோடு வா. புது மிளகுச் செடி எல்லாம் உனக்கு உரிமை என்று பட்டயம் எழுதித் தருகிறேன். உன் புதரில் சற்றே தலைவைத்து ஓய்வெடுத்துக் கொள்கிறேன். நனைந்ததென்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்”.  

அவர் ஊர்ந்து கஸாண்ட்ராவின் பட்டுப் பாவாடை விளிம்பில் பிடித்து உயர்த்த யத்தனித்தார். கவுடின்ஹோ துரை தலையில் கால் வைத்து மிதித்து தோளில் இறங்கி கஸாண்ட்ரா வெளியே ஓடினாள்.  ஒரு வினாடி நின்று திரும்ப உள்ளே ஓடி மேஜை மேல் வைத்த மூடியிட்ட உருளை பாத்திரத்தை பிஃபானா சாண்ட்விச்களோடு எடுத்துக்கொண்டு திரும்ப ஓடினாள்.

அவள் வாசலுக்கு வரும்போது சின்னஞ்சிறு அடுப்பில் லூயிஸ் ராயப்பாவை வலுக்கட்டாயமாக எழுப்பிப் புறப்படவைத்த போது ஏதோ காய்ச்ச ஆரம்பித்தது நொங்கும் நுரையுமாகப் பொங்கி கண்ணாடிக் குடுவைக்குக் கீழே வைத்திருந்த மிளகுக்கொடி மேல் சிந்தியது. 

அந்தக்கொடி உயிர் பெற்று வளைந்து கால் ஊனமாக்கி, திறந்து வைத்த சிறு கூண்டுகளில் பரிசோதனைக்கு வைத்திருந்த முயல்களைத் தொட்டு அவற்றைப் பிணைத்து இறுக்கியது. 

கஸாண்ட்ரா பார்த்துக் கொண்டிருக்கும்போதே சரசரவென்று உள்ளே நுழைந்த ராட்சத மிளகுக்கொடி படுக்கையறையில் தரையில் கஸ்ஸி கஸ்ஸி என்று காமம் தலைக்கேறி கண்ணை மறைக்கக் கூக்குரலிட்டபடி கிடந்த கவுடின்ஹோவின் காலில் பற்றிப் படர்ந்தது.

வாசலில் வந்து நின்ற சாரட்டின் தட்டில் இருந்து அருகன் கூப்பிட்டான் –

“கஸாண்ட்ராக்கா ஏறிக்குங்க. பத்து நிமிஷத்துலே வந்துட்டீங்க. இல்லேன்னா நான் உள்ளே வந்திருப்பேன். என்ன அங்கே, மிளகு வாடை தூக்கலாக அடிக்குதே. பிஃபானா அவ்வளவு மிளகு வாடை அடிக்குமா” என்று ஆவலோடு கேட்டான். 

”இந்தா நீயே தின்னு பாரு என்று உருளைப் பாத்திரத்தைத் திறந்து வாழை இலை நறுக்கில் வைத்து ஒரு பிஃபானா சாண்ட்விச்சை அவனுக்குக் கொடுத்தாள் கஸாண்ட்ரா. அவன் ஒரு வினாடி தயங்கினான். ஓ, நீ காய்கறி பட்சி ஆச்சே என்று சாண்ட்விச்சைப் பின்னால் வலித்தாள் அவள். 

பரவாயில்லை அக்கா என்று அருகன் அந்த பிஃபானாவை வாங்கி ஒரு கடி கடித்தான். 

எதிர்ப்பட்ட சாரட் நின்று அவங்க எப்படி இருக்காங்க, எல்லாம் சரியாகி விட்டது தானே  என்று வந்த சாரதி விசாரித்தான். 

சரியாயிடுச்சு என்றான் அருகன்.

கொஞ்ச தூரத்தில் இன்னொரு சாரட் நிறுத்தி சாரதி விசாரித்தான். அது எல்லாம் தீர்ந்தது என்று அருகன் சொன்ன புதுச் செய்தி பரவ ஆரம்பித்தது.  

பிஃபானா எப்படி? கஸாண்ட்ரா கேட்டாள். அமிர்தம் என்றான் அருகன் மென்றபடி. சாரட் வேகமெடுக்கத் தொடங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.