
1
கடலலைகளாக
புரளும் மனம்
உருண்டோடி உன் பாதக்கரையை
அடைந்த தருணம்,
என் தலைமீது மாற்றினாய்
அழகிய உன் பிறை நிலவை.
முழு நிலவின் பாரத்தைத்
தாங்கியிருக்க மாட்டேன்.
இம்மெல்லிய பிறையொன்றும்
சுளுவாக இல்லை.
தவரவிடாமல் தாங்கியிருக்கிறேன்,
வரைந்து மறையாத
முதல் கீற்றாக,
தொலைந்த வானின் புதையலாக,
புன்னகையின் மென்குளிர்ச்சியாக
இன்சொற்களின் திகட்டாத நினைவாக.
பெரிய பொறுப்பொன்றை – என்
தலைமீது ஏற்றிவிட்டாய்.
சிந்தையின் ஒரு விள்ளலைக்
கிள்ளி எறிந்துவிட்டாய்.
இன்பத்தைத் தாங்குதல்
இத்தனை மெல்லிய பாரமா!
2.
காதலுக்காய் பசித்து
ஏங்கும் மனக்குழி.
மின்னொளி புன்சிரிப்பும்
அணைக்கும் பார்வையும்
பேசாத அன்பு வார்த்தைகளும்
நிரப்பமுடியாத குடத்துடன்
தனித்து நிற்கிறேன்.
கோடையின் குளிர்பெருமழையால்
வெயில் கோர்த்த கொன்றைச் சரமால்
சிவந்து கனியும் அந்திப்பொழுதால்
தளும்பி குறையும் குடம்.
குடமாயும் குடத்துள் அண்டமாயும்
மண்ணாயும் மண்ணில் மழையாயும்
நாளாயும் நாளின் இருளாயும்
நானாயும் என்னுள் எல்லாமாயும்
எல்லாமாயும் அவற்றுள் நீயாயும்
பிரிந்தும் சேர்ந்தும் ஆடும் நடனம்
உடைக்கட்டும் – என்
தனிமை அபதத்தை.
3
ஒன்றுமில்லா வெளியெனும்
கவசம் தந்தாய்.
ஒவ்வொன்றாய் சேர்த்து
நிரப்பிவிட்டேன்.
அகழிபோல் காத்த கவசம் தேய்ந்து,
விசைகளின் உலகோடு
உராய்கின்றேன்.
தடுத்தாலும் கேட்காத
குழந்தையாக, மனம்
நேரெதிராய் ஓடிச்சிரிக்கின்றது.
ஒன்றுமில்லா வெளியின்
விழி நிறைத்து
ஓராயிரம் எண்ணங்கள்
நிரப்பியது யார்?
தடதடவென கொட்டும்
மழைக்குள்ளே
மறைந்திருக்கும்
அமைதியின் இடைவெளிகள்.
மழைதீர்ந்து தெளிகின்ற
வெளிபோலே, என்
மனதுள்ளும்
மீண்டும் வருவாயா?
ஒன்றுமில்லா வெளியின்
புன்னகையாய், என்
உலகெங்கும் விரிந்து
மலர்வாயா?