தெய்வநல்லூர் கதைகள் 11

This entry is part 11 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

சேமியா சொல்லிய ஆலோசனை அனைவருக்கும் சரியாகப்பட்டது. ஆகவே நானும், சிவாஜியும் மெஜூரா ஜெயலட்சுமியுடன் பேச வேண்டுமென தீர்மானம் முடிவாகியது. சிவாஜிக்கு எப்போதுமே தீராத சிந்தனையில் ஆர்வமுண்டு என்பதால் அவர் சிந்தித்து சேமியாவிடம் மெஜூராவைப் பார்த்துப் பேசச் சொன்னது ஏன், என்ன காரணம் எனக் கேட்டார். சம்பவம் நிகழ்ந்த அன்று மாலை  சேமியா வீடு திரும்பும் பாதி வழியில் தான் பள்ளியில் மறந்து  விட்டுவிட்ட பென்சில் டப்பா நினைவுக்கு வர அதை  எடுப்பதற்காக பள்ளிக்குத் திரும்பியிருக்கிறார். வகுப்பினுள் சென்று டப்பாவை எடுத்துத் திரும்பியவரின் கண்களில் சன்னல் வழியே வாகை மரத்தடியில் நிகழ்ந்த காட்சி பட்டிருக்கிறது, முறைத்த கண்களுடன் மெஜூரா சற்று தள்ளி நின்றிருக்க சங்கீதா பிரேமிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். பிரேம் தலை கவிழ்ந்தாற்போல நின்றிருக்கிறார். சேமியா “அரவங்காட்டாமல்” பென்சில் டப்பாவை பைக்கட்டில் வைத்துக்கொண்டு வெளியே வரும்போது சங்கீதாவும், மெஜூராவும் பள்ளியின் வாசலைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். பிரேம் மட்டும் மரத்தடியில் தனியே அமர்ந்திருந்திருக்கிறார்.  (அவன அப்டியேவால விட்டுட்டுப் போன?- சிவாஜி. “நான் பக்கத்துல போனதுமே எதுவும் பேசாம எந்திரிச்சி போய்ட்டாம்ல. உன்கிட்ட மறுநா சொல்லலாம்ணு பாத்தா பிரேம் மொறைக்க மாதிரியே இருக்கவும் அரவங்காட்டாம  இருந்துட்டேன்”- சேமியா).  

போதுமான தகவல் கிடைத்ததும் சிந்தனையாளரான சிவாஜி செயல்வீரராக மாறுவதை பலமுறை நாங்கள் கண்டிருக்கிறோம். சிவாஜி அன்று மாலை பிற நண்பர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் எனவும் நாங்கள் மட்டும் பிரேமிடம் கோவிலில் வைத்து பேசிக் கொள்வதாகவும் சொன்னார் (சாமி முன்னாடி வச்சு சத்தியம் வைக்கச் சொல்லிக் கேப்போம்ல. அவன் உள்ளத சொல்லிருவான்-சிவாஜி)  ஆனால் அனைவரும் கோவிலுக்கு வருவதாக பிரேமிடம் சொல்ல வேண்டும் எனவும் சொன்னார். அவர் எதிர்பார்த்தது போலவே பிரேம் கோவிலுக்கு வந்தார். பிற எவரும் வராமல் நானும், சிவாஜியும் மட்டுமே இருப்பதைப் பார்த்ததுமே அவர் ஊகித்துவிட்டார். வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்து கோவிலுக்குள் நுழையும் வாயிலுக்கு அருகில் சபா மண்டபம். மூன்று புறமும் படிகள் உள்ள நடராஜர் ஆளுயரத்தில் நிற்கும் மண்டபம். நேரே இருக்கும் படி கோயிலின் முன்மண்டபத்தோடு இணைந்திருக்க பக்கவாட்டுப் படிகள் வெளிபிரகாரத்தில் இருந்து ஏறி வரும்படி அமைக்கப்பட்டிருக்கும். இந்த பக்கவாட்டுப் படிகள்தான் நாங்கள் அவை கூட்டும்  இடம்.  பிரேம் சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். சிவாஜியும் எதுவும் பேசவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாறி மாறி இருவர் முகத்தையும் பார்த்தபடி இருந்தேன். எதிர்பாராத ஒரு நொடியில் பிரேம் அவரே ஆரம்பித்தார். 

அவர் சொல்லி முடிக்கும்வரை அவர் போட்ட திட்டம், செய்த செயல் அனைத்துமே தெண்டிலை மாட்டி விட்டு எங்கள் ஆசியஜோதி அணியை முன்னிறுத்தவே என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் அணியின் முழு ஆதரவோடு பிரேம் அவருக்கான தனித்திட்டமொன்றை நிறைவேற்றிக் கொண்டு விட்டார். ஆனால் அவரே எதிர்பாராத விதமாக விஷயம் வேறுமாதிரி ஆகிவிட்டது. அதன் காரணமாக அவர் தன்னைத் தண்டித்துக் கொள்ளும் விதமாகவே அப்படி ஆகிவிட்டிருக்கிறார்.    

இந்த உள்விவகாரம் ஆரம்பிப்பது அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகான மாதத் தேர்வின்  விடைத்தாட்கள் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து. பிரேம் வரும்வரை வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறுவது மூவர் அணியினரிடம் மாறி, மாறி வருவதாக இருந்தது. கு ராமர், தெண்டில் மண்டை, சிவாஜி ஆகிய மூவரில் ஒருவரே முதலிடத்தை அலங்கரித்தனர். நானும், மெஜூரா போன்றோரும் இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் எனும் அன்றைய அரசாங்கக் கொள்கையை மெய்யாகவே கடைப்பிடித்து இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பாதுகாத்து வந்தோம். அதாவது மூவரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றாலும் எங்களால் முதலிடம் என்றே கருதப்படுவர். ஆகவே நான்காம், ஐந்தாம் இடங்களில் வரும் நாங்கள் இரண்டாம் இடத்துக்காரர்களாக அறியப்படுவோம். இந்த தர்க்கம் புரிய வேண்டுமென்றால் இன்றைய காலத்தோர் முதல் பாதியாக  இன்ஸெப்ஷனையும், இரண்டாம் பாதியாக  டெனட் திரைப்படத்தையும் பார்க்கவும். 

முதலிடம் என்பது ஒருவருக்கே உரியது என்பதை எங்களுக்கு பிரேம்தான் புரியவைத்தார். அவர் வந்த பிறகுதான் 100 க்கு 98 என்ற மதிப்பெண்களை ஒரு மாணவர் பெற முடியும் என்பதே எங்களுக்கு அறியவந்தது.   அவர் பெறக்கூடிய மதிப்பெண்களின் குறைந்த பட்சமே அதற்கு முன் முதலிட மூவரால் பெறப்பட்ட அதிகபட்சமாக இருந்து வந்த உண்மை குறிப்பிடத்தக்கது. பிரேம் பள்ளியில் சேர்ந்ததும் நடந்த மாதத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை எல்லா ஆசிரியர்களும் பாராட்டினர் என்பதை விட கணிக்கண்ணனைக் கண்ட திருமழிசையாழ்வாரெனவே ஆயினர்.  வகுப்புக்கு விடுமுறை விண்ணப்பக் கடிதம் எழுதி கணபதி சாரிடம் கொடுத்தால் வாங்கிப் படித்து விட்டு அப்படியே மேசையில் வைத்து விட்டுச் செல்லும் வழக்கத்தையும் பிரேம்தான் மாற்றினார். அலுவலக உதவியாளர் முத்தண்ணனிடம் கேட்டு கார்பன் பேப்பர் வாங்கிய காலி அட்டைப் பெட்டியை எடுத்து  வந்து விடுமுறை விண்ணப்பங்களில் கணபதி சாரிடம் கையொப்பம் பெற்று இருபுறமும் கூர்நுனி கொண்டிலங்கும் சிவப்பும், மஞ்சளும் கலந்த நூல்கயிற்றில் கோர்த்து அப்பெட்டியில் இட்டு வைக்கும் முறையையும் அறிமுகம் செய்தார் ( ஈத்தகுச்சி நன்றாக படம் வரைவதால் அட்டைபெட்டி மேல் வண்ணக்காகிதங்களை ஒட்டி விடுப்பு விண்ணப்பக் கடிதங்கள் என எழுதச் செய்து கீழே ஓரத்தில் ஆசியஜோதி நேரு அணி எனவும் எழுதி ஒரே நேரத்தில் ஆசிரியர்கள் மகிழவும் , தெண்டில் கோஷ்டியாரை வயிறெரியவும் வைத்தார் பிரேம்). பாடங்களில் அவர் கேட்கும் ஐயங்களுக்கு சிறப்புச் செவி கொண்டிலங்கியவர்களாக ஆகிய ஆசிரியர்கள் பிரேம் பள்ளிக்கு விடுப்பு எடுத்த நாட்களில் புதிய பாடத்தை ஆரம்பிப்பதில்லை எனும் அளவில் கற்றானைக் காமுற்று இருந்தனர்.

இந்த சூழலில்தான் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுவது போலே சங்கீதா வருகை நிகழ்ந்தது.  சங்கீதா வகுப்பில் பிரேம் போல ஐயங்கள் எழுப்புவதில்லை என்பதால் எவருக்கும் அவர் படிப்பின் மீது கவனம் குவியவேயில்லை. மாறாக அவர் கூந்தலழகு ( கொண்டைய போட்டுட்டு  படுத்தா ஒனக்கு தலகாணியே  வேண்டாம்லட்டி? – இரு மாரியம்மாள்களில் ஒருவரான கரு.மாரி – நிறத்தாலாகு பெயரான இதன் உபயம் பாலகனி டீச்சர்)  கண்களுக்கு மையிடும் விதம் (கண்ணெமைக்கெல்லாம் எப்டிட்டி மை போடுவ – உப்புக்காரி பாண்டியம்மாள்- பெயர்க்காரணம் முன்பே விளக்கப்பட்டது), நெற்றிப் பொட்டிடுவதில் சங்கீதா காட்டும் வகைமைகள் ( உங்கம்மா நல்லா கோலம் போடுவாங்களோ? – அக்ரஹாரம் எனப்படும் அய்யர்குடியிலிருந்து பிரேம் போல வந்தும் அவர் போல படிக்காத சீதாலட்சுமி),  நிறத்தின் அழகு (நெதமும் மஞ்சப்பத்து போடுவியோட்டி- சங்கீதாவின் முழங்கையிலிருந்து உள்ளங்கை வரை விரலால் இழுத்தபடியே மூக்குறிஞ்சி பொன்னம்மாள்),  தோலின் வனப்பு (நெதம் பலாப்பழம் தின்னா ஒன்ன மாதிரி பளபளன்னு ஆயிரலாமா?- மெஜூராவின் ஆர்வ ஆதங்க கேள்வி) என்பதாக அவரது தோற்ற அழகே கவனிக்கப்பட்டது. அவரருகே அமர்வதற்கான போட்டியில் வலங்கைப் பிரிவில் மெஜூராவும், இடங்கைப் பிரிவில் உப்புக்காரியும் வென்றனர். ஆகவே எங்களை, குறிப்பாக பிரேமை இச்செயல்கள் கவரவேயில்லை. 

சங்கீதாவின் வரவு வகுப்பில் ஒரு ஒளிர்வைக் கொண்டுவந்தது. ஆனால் வகுப்பில் எதுவும் மாறாதது போலவேதான் இருந்தது. சங்கீதா வந்து சேர்ந்ததும் நடந்த முதல் மாதத்தேர்வின் விடைத்தாட்கள் அளிக்கப்படும்வரைதான் வகுப்பு இயல்பாக இருப்பதாகத் தெரிந்தது. விடைத்தாட்கள் வந்ததும் நாங்கள் நம்பவே முடியாத இடி இறங்கியது. நான்கு பாடங்களில் சங்கீதா பிரேமை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார். வேறுபாடு 3 லிருந்து 5 மதிப்பெண்களுக்குள் தான்   என்றாலும் அதுவரை பிரேமிடம் “தனி ஒருவன்” என இருந்த முதலிடம் அசைக்கப்பட்டு விட்டது. தமிழில், ஆங்கிலத்தில்  மட்டுமே அதிக மதிப்பெண்களைப் பெற்று பிரேம் தன் முதலிடத்தைத் தக்கவைக்க போராட வேண்டியிருந்தது. கடைசியாக நடந்த தேர்வில் சங்கீதா 2 மதிப்பெண்களில் முதலிடத்தைத் தவற விட்டிருந்தார் என்றாலும் ஆங்கிலத்தில் அவர் பிரேமை விட 3 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்தார். ஆங்கில ஆசிரியரான இஸ்மாயில் சார் சங்கீதாவுக்கான புகழ்மொழிகளை எங்களுக்கான வசைமொழிகளாக ஆக்கி ஏச்சுப்பொழிவு நிகழ்த்தினார் –

“கூறு கெட்ட கழுதைகளா, திங்கத்தாம்ல லாயக்கு நீங்கல்லாம். பொம்பளப் புள்ள , என்ன கூறுவாறா படிச்சு 98 மார்க்கு வாங்கிருக்கா. ஏம்டே பிரேமு, நீ ஒருத்தந்தான் 90க்கு மேல. அவம் மட்டும்தாண்டே ஆம்பளப் பய. எடே, நீயும் இவனுவளோட சேந்து கட்டமண்ணா போயிராத. எருமைகளா, நீங்கல்லாம் பாவாட தாவணி கட்டிக்கிட்டு வீட்ல சோறு பொங்கப் போங்கல. ஏ புள்ளயளா, இவனுவளுக்கு சோறாக்க சொல்லிக்குடுங்களா. கெடா மாடுக. உரிச்சு தொங்கவிட்டா ஒவ்வொருத்தனுக்கும் ரெண்டு ஊர் கறி தேறும். (ஈத்தக்குச்சியும், புல்தடுக்கியும் இங்கே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட செய்தி தகவலுக்காக சொல்லப்படுகிறது)  மூளை மட்டும் பொட்டக்கோழிக்கு கொண்டை வாச்ச மாதிரி இந்தா, இம்மினிக்கூண்டு (சிட்டிகை என்பதைக் காட்டும் கைமுத்திரையை இங்கே காட்சிப்படுத்திக் கொள்க ). அடுத்த பரிட்சைல எவனாவது ஃபெயில் ஆனீங்க, ஆத்துக்கு வடக்க கபர் குழி வெட்டி வச்சிருக்கேன். எறக்கி மூடிருவேன் பாத்துக்குங்க…”       

இதனைத் தொடர்ந்தே பிரேம் பதற்றமடையத் தொடங்கியிருக்கிறார். அவரது தனி  முதலிடம் பறிபோகப்போவதை, அதற்கான சவால் வலுவாகவே முன்னிற்பதை உணர்ந்து விட்டிருக்கிறார். சங்கீதாவிடம் அவர் அதிகமாகப் பேசக்கூடியவரல்லர் என்பதால் மெஜூரா வழியே சங்கீதாவின் விடைத்தாட்களை வாங்கி சோதித்துப் பார்த்துமிருக்கிறார். அதன் வழியே அவர் உணர்ந்ததே இந்தப் பத்தியின் இரண்டாம் வரி. என்ன செய்வதென அவர் தன்னுள் தானே ஆழ்ந்து பதற்றமுற்று இருக்கையில்தான் கிடா வழியே வீட்டுப்பாட குறிப்பேடுகளில் கையொப்பம் பெறும் ஊழல் குறித்த தகவல் கிடைத்தது. ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் யோசனையுடன் பிரேம் செயல்படுத்தியதே சங்கரம்மாள் டீச்சர் மேல் கருப்பனை இறக்கி சங்கீதாவை குருதிப்பலி என ஆக்கியது. 

வாஸ்தவத்தில் பிரேம் எதிர்பார்த்தது சங்கீதாவை ரெண்டு ஏச்சு ஏசி விட்டுவிடுவார்கள் என்றுதான். ஆனால் கருப்பன் வந்து சாடும் வரைதான் மேளக்காரர் வாசிப்பும், வரத்துப் பாடகரின் பாடலும். வந்திறங்கியதும் கருப்பன் தரும் அருள்வாக்கு, இடும் ஆணைகள், வைக்கும் கோரிக்கைகள்  ஆகியவற்றில் மேளக்காரருக்கும், வரத்துப் பாட்டுக்காரருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பது கருப்பன் கொடையை  முழுமையாக அறிந்திராத பிரேமுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான். ஆகவே நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்து திகைத்து நின்றிருக்கிறார். சம்பவத்தன்று மாலை இடைவேளையின்போது நாங்களெல்லாம் வெளியே நின்றிருந்த சங்கீதாவை ஆசிரியர்கள் சமாதானம் செய்வதை வாய் பார்த்துக் கொண்டிருந்தபோது மெஜூரா பிரேமை நெருங்கி குருளையைக் கடியும் பெண்புலியின் அடித்தொண்டை மென் உறுமல் போல உதடு பிரியாது அன்று மாலை அவருடன் பேசவேண்டும் எனவும், நாங்கள் எவரும் உடனிருக்கக் கூடாது எனவும் சொல்லிச் சென்றிருக்கிறார். எதற்கு  என பிரேம் கேட்குமுன்னரே மெஜூரா அவ்விடம் விட்டு விலகியிருந்தார்.  

பிரேம் எங்களைத் தவிர்க்க வேண்டி கணபதி சார் அழைத்ததாகச் சொல்லி ஆசிரியர் அறைக்குச் சென்று வீட்டுப்பாட நோட்டுகளை அடுக்குவது போல நேரம் கடத்தி நாங்கள் போனபின் வகுப்புக்குத் திரும்பியிருக்கிறார். உள்ளே மெஜூரா மட்டும் இருக்க பிரேம் அவரிடம் பேசப்போகுமுன்பே கையசைத்துத் தடுத்த மெஜூரா தன்னுடன் வருமாறு சைகை செய்து வாகைமரத்தடிக்கு இட்டுச் செல்ல அங்கே மரத்தின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த சங்கீதா எழுந்து நின்றார். திகைத்து நின்ற பிரேமிடம் பேச வேண்டியது தானல்ல, சங்கீதாதான் எனச் சொல்லி மெஜூரா நான்கடிகள் விலகி நின்று கொண்டார். சங்கீதா இப்படி ஒரு செயலை பிரேமிடம் தான் எதிர்பார்க்கவில்லை எனவும் தன் நிலைமைக்குக் தன் வயதான முத்தஷியின்  (பாட்டி) உடல்நிலையே காரணம் எனவும் கூறினார். வாரம் இரு நாட்களாவது தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத தாயுடன் இருப்பது தவறா என பதிலை எதிர்பாராது கேள்வியை மட்டும் முன்வைத்தார். 

சற்று திணறிய பிரேம் விரைவில் மீண்டு எந்தச் சூழலிலும் தவறு என்பது சரியாகிவிடாது எனவும், தவறைச் சுட்டிக் காட்டுவது நல்ல மாணவனாகிய தன் பொறுப்பு என்றும், ஆசிரியர்கள் மீதும், படிப்பின் மீதும் அக்கறை உள்ள மாணவர்கள் தவறாது ஆற்ற வேண்டிய கடமையே இது எனவும் பலவாறாக பேருரை ஆற்ற, மை கலைந்த புகை படிந்த, இன்றைய ஸ்மோக்கி ஐ யை அன்றே கொண்டிருந்த  செவ்விழியால் சங்கீதா வீசிய      கனல் பார்வை பிரேமை நொடி நேரம் திகைக்க வைத்தது. அதே நொடி முடிவதற்குள் பிரேமை மண்டியிட வைத்த அக்கேள்வியை சங்கீதா கேட்டார் – “வேற எந்த பொம்பளப் புள்ளயாவது இதச் செஞ்சிருந்தா இப்படி மாட்டி விட்ருப்பியா? ஒன்ன விட நான் கூட மார்க் எடுத்துட்டேன்னுதான என்னை மாட்டி விட்ட? “. வேட்டை விளக்கின் வெளிச்சம் கண்ணில் பட்ட கடமான் போல திகைத்து சொல்லிழந்து நின்றார் பிரேம். “என்னை டீச்சர் முதல்ல திட்டும்போது உன் முகம் சிரிச்சா மாதிரிதான இருந்தது. நான் எவ்ளோ மார்க் வாங்கினாலும் இப்ப வரைக்கும் நீ தான் முதல் ரேங்க். எப்பவாவது நான் அதுக்காக உம்மேல பொறாமப்பட்டு கருவிக்கிட்டே இருந்தேனா? “. திகைத்து நிற்கும் மானின் நடுநெற்றியில் பாயும் குண்டென கடைசி வரியை சங்கீதா சொல்லி அகன்றார் – “நீ நெனச்சது நடந்தாச்சுல்ல, முதல் ரேங்க் எடுத்தே ஆகணும்னு ஆக்ரகம் ஒண்ணும் எனக்கில்லா. இனி நீயே எல்லாப் பாடத்துலயும் முதல் மார்க் எடுத்துக்கோ. உனக்கு நான் போட்டியில்லை. இனி யாரையும் இப்படி மாட்டிவிடாத”. பிரேம் நாக்கு உள்ளிழுத்துக் கொள்ள உறைந்து நிற்கும்போதே சங்கீதா அகன்று விட்டிருக்கிறார். அடிபட்ட மானை அங்கேயே தோலுரிக்கும் பணியை மெஜூரா செய்தார் – “இப்டிச் செய்யத்தான் நீ அவ பரிச்சை பேப்பரக் கொண்டா, வீட்டுப்பாட நோட்டக் கொண்டான்னு என்கிட்ட கேட்டு வாங்கினியா, இதுக்குத்தான் அவ கதையப் பூராவும் எங்கிட்ட கேட்டயா? எவ்வளவு பாவம் தெரியுமா அவ? பிரேம் கேக்கறான்னு சொல்லிதான் அவள்ட்ட கேட்டேன். நீ கேக்கறன்னதும் எதுக்குன்னு கூட கேக்காம அவ சந்தோஷமா கொடுத்தா, நீ சந்தேகம் கேக்கறதெல்லாம் அவளுக்கு பிடிக்கும். ஒன்ன மாதிரியே படிக்கணும்னு எங்கள்ட்டலாம் சொல்லுவா. தெண்டிலு வந்து டாக்டர் முத்துலட்சுமி அணி ஆரம்பிக்கச் சொல்லி கேட்டாம்னுதான் ஒனக்குத் தெரியும், ஆனா அப்படி ஒண்ணு ஆரம்பிக்கவே கூடாதுன்னு இருந்தவ அவதான். என்னையும் உன்கூட சேத்து பொறாமக்காரிய ஆக்கிட்டல்ல. இனிமேக்கொண்டு உங்கிட்டருந்து எந்த பண்டமும் வாங்க மாட்டேன். ஒனக்கு எந்த விஷயத்தையும் சொல்லவும் மாட்டேன்“. தோல் உரிக்கப்பட்டு கடமான் தொங்கிக் கிடக்கையில்தான் சேமியா பார்த்தது.    

தலைசுற்றுதல் என்றால் என்ன என வாழ்வில் முதன்முறை எனக்கு அனுபவம் கிட்டியது அப்போதுதான். இப்படியெல்லாம் சந்தித்து பேச முடியும், பொட்டப்புள்ளைக இப்படியெல்லாம் பயலுகளை திட்ட முடியும்   என்பது முழு நெல்லிக்காயை முழுங்கியதுபோல தொண்டையில் நின்றது. சிவாஜி வழமை போல சிந்தனையில் ஆழ்ந்தார். பிரேம் படிக்கட்டின் ஓரத்திலுள்ள சிம்ம முகத்தின் பற்களில் விரலை ஓட்டியவாறே தலைகுனிந்திருந்தார். சிவாஜிதான் முதலில் அசைந்தது – “சரிடே பிரேம், நீ சாமி கும்புட்டயா?”.      இன்னும் இல்லை என்பதாக பிரேம் தலை அசைந்தது. “சரி வா, மொதல்ல சாமி கும்பிடுவோம், இன்னைக்கு உள்பிரகாரம் 11 சுத்து. யாரும் பேசாம சாமிய நெனச்சுக்கிட்டே சுத்தணும். பெறவு பேசலாம். என்ன?”. சிவாஜி சொன்னதைத் தவிர வேறு சிறப்பான யோசனை இல்லாததால் நானும் வழிமொழிய மூவரும் எழுந்து  சென்றோம். ஆளுயரத்தில் அம்மையும், அப்பனும் ஒரே உருவில் இணைந்து நின்றனர். பாதி வேட்டியும், பாதி புடவையுமாக அருளும், அழகுமாக அம்மையப்பன் கனிந்து சிரித்தனர். அய்யர்குடியின் பிற அய்யர்களைப் போல அல்லாமல் உச்சித்தலையில் ஆரம்பித்து பக்கவாட்டில் சரிந்திருக்கும் குடுமி வைத்த சபேச குருக்கள் “என்னடா, வாலு, கொம்பு, தோலு, துருத்தி யாருமில்லையா இன்னைக்கு? நீங்க 3 பேர் மட்டும் வந்துருக்கேள்” என்றபடியே எங்களுக்கு திருநீறு பூசிவிட்டார். சுண்டல் அன்று இல்லையென்பதால் மூவருக்குமாக சேர்த்து ஒரு பழம் கிடைத்தது. சிவாஜி பழத்தை பிரேமிடம் வாங்கி தன் பையில் வைத்துக்கொண்டார். நாங்கள் பிரகாரம் சுற்ற ஆரம்பித்தோம். ஏழரை சுற்று முடிந்த இடத்தில் பிரேம் திகைத்தது போல நின்றார். கோவில் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் அவர் முகம் சிவந்து தெரிந்தது. பலூன் ஊதுவது போல கன்னங்களை இருமுறை உப்ப வைத்தார். சுற்றுச் சுவருக்கு வெளியிலிருந்து செடியை மேய கழுத்தை நீட்டும் மாடு போல இருமுறை கழுத்திலிருந்து தலையை முன்நீட்டி இழுத்தார். இம்மெய்ப்பாடுகளின் பொருளை உணரமுடியாமல் நான் முன்னால் சென்ற சிவாஜியை ஓடிச்சென்று தொட்டேன். திரும்பிய சிவாஜியிடம் பிரேமை நோக்கி விரல் நீட்டி இருவருமாகப் பார்த்த நொடியில் பிரேம் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது, மூக்கு நுனி விடைத்து அடங்குவதைத் தவிர வேறு அசைவுகள் எதுவும் அவரிடம் இல்லை. பிரேம் அழுவார் என்பதை விட அப்படி அசைவே இல்லாமல் ஒருவர் அழ முடியும் என்பதே வியப்பாக இருந்தது. நாங்களெல்லாம் அழும்போது இன்று சிவதாண்டவத்திற்கு இசைக்கப்படும் காற்றுக்கருவிகளின் ஓசைகளனைத்தையும் தொண்டையால் வெளிப்படுத்தி அரன் வழிபாடே அழுகை என நிகழ்த்துவோம்.    

எப்போதும்போல சிவாஜிதான் முதலில் சுதாரித்தார். “ எடே பிரேம், இதென்ன? பொட்டப்புள்ளையாடே நீ? அவ சொன்னா நீ பொறாமக்காரனா ஆயிருவியா? நாங்கல்லாம் அப்டிச் சொன்னோமா உன்கிட்ட?”- தன் நிபந்தனையை தானே மீறிய சிவாஜியை நானே சூழல் கருதி மன்னித்து விட,  பிரேமை மெல்ல இழுத்து வந்து வடமேற்கு மூலை ஆறுமுகநயினார் சன்னதிக்கருக்கே அமரவைத்தோம். நான் என்ன பேசுவதெனத் தெரியாமல் “அழுவாதடே பிரேம்” என்பதை மட்டும் நான்கைந்து முறை சொன்னேன். பிரேம் உலுக்கப்பட்டது போல விதிர்த்து நிமிர்ந்து வெற்றுக் கைகளால் முகம் துடைத்துக் கொண்டார். கண்களை மூடி சில நொடிகள் இருந்தார். திரும்ப அழுவாரோ என பயம் தோன்றி நான் சிவாஜியை உதவி கோரும் பார்வை பார்க்க எத்தனித்த நொடியில் பிரேம் பேசினார் – “பொட்டப்புள்ளங்கன்னு சொல்லாதடா சிவாஜி. கேர்ள்ஸ்னு சொல்லு.”  

சிவாஜிக்கு பிரேம் இன்னும் பேசுவார் என்பது தெரிந்திருந்ததால் பிரேம்க்கு பதிலளிக்காது அவர் முகத்தைப் பார்த்தவாறே காத்திருந்தார். “ அவ திட்டினது கூட எனக்கு வருத்தமா இல்லை சிவாஜி. நான் நெஜமாவே அவ மார்க் ஜாஸ்தி எடுக்கறாளேன்னு நெனச்சுதாண்டா அப்டிச் செஞ்சேன். இதுக்கு முன்னாடி நாமளே கு கணேசன் நோட்ல இப்டி கையெழுத்து வாங்கிருக்கோமே.  ஆனா நானே ஃபர்ஸ்ட் மார்க் எல்லா பாடத்துலயும்  வாங்கணும்னு அவ சரியாவே பரிட்சை எழுதாம இருக்கா. நல்லா படிக்கற பொண்ண படிக்காம ஆக்கிட்டேன். சுவாமி என்ன மன்னிக்கவே மாட்டார்.” மறுபடி ஒருமுறை பிரேம் கன்னங்கள் பலூன் ஊதும் நிலையை அடைந்தன. ஆனால் பிரேம் இம்முறை கண்ணீர் இமையைத் தாண்டாது நிறுத்திக்கொண்டார். “அதனாலதாண்டா நானும் சரியாவே டெஸ்ட் எழுதலை. ஃபர்ஸ்ட் ரேங்க்குக்கு ஆசப்பட்டுதான இப்டி தப்பு பண்ணினேன். இனி எனக்கும் அது வேண்டாம்” – இந்த டாம் என இறுதிச் சொல்லின் இரண்டாம் பாதியை அதற்கான மாத்திரை அளவை விடவும் அழுத்தமாக டானிக் அளவில் முடித்த குரல் பழைய பிரேம் திரும்பி  விட்டதைக் காட்டியது.    

பிரேமை வீட்டில் விட்டுவிட்டு திரும்பும்வரை சிவாஜி இந்த விஷயத்தைப் பற்றி பேசவேயில்லை. எனக்கு குழப்பமாக இருந்தாலும் சிவாஜி எதைச் செய்தாலும் சிந்தித்தே செய்வார் என்பதால் பொறுமையுடன் வந்த நான் பிரேமை வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் இருவர் மட்டும் வீடு திரும்புகையில் அதுவரை கட்டிக்காத்த  பொறுமையை இழந்தேன் –“ என்னல சிவாஜி, இவ்வளவு நடந்துருக்கு. நமக்கு ஒண்ணுமே தெரியலையே. இவன் என்னடான்னா படிக்க மாட்டேன், பேச மாட்டேன்னு கெடந்து கொமையுதானே. என்னல செய்ய இப்பம்?” 

“அந்தப் புள்ளையும் பாவம்தானல. அவளும் நல்லாப் படிக்க பஸ்ட் ரேங்க்கு புள்ளன்னாலும் பீத்தகாரியா இல்லாம சேக்காளியாத்தான இருந்தா. “ சிவாஜி முதன்முறையாக ஒரு “கேர்ள்க்கு” நிகழ்ந்ததைப் பொருட்படுத்தி வருந்தியது எனக்கு வியப்பாக இருந்தது. இனி நாமும் பிரேம், சிவாஜி போல “கேர்ள்ஸ்”காக யோசித்து வருத்தப்பட வேண்டுமென்று பின்னாட்களில் நாங்கள் பலரும் நினைத்துக் கொண்டதற்கு இச்செயலே அடிப்படை.  இருந்தாலும் அன்று எனக்கு இந்த ஞானம் உடனே தெரிசனமாகவில்லை என்பதற்கு நான் சிவாஜியிடம் கேட்ட கேள்வியே சான்று –“சரில, அவ நல்லவளாவே இருந்துட்டு போட்டும். மாட்டிவிட்டதுக்கு இவன் மாப்பு மன்னிப்பு மூணு மட்டம் கேட்டுட்டு எப்பயும் போல இருக்க வேண்டியதுதான. இப்ப எதுக்கு அவளே ஃபர்ஸ்ட் ரேங்க் வரட்டுமுன்னு விட்டுக்கொடுக்கான்? பொட்டப்புள்ளக மொதல் ரேங்க் வந்தா பயலுகளுக்கு அசிங்கம்லா?” 

மஞ்சள் நிறத் தெருவிளக்கின் ஒளி பாதி முகத்தில் படும் இடத்தில் நடந்து கொண்டிருந்த சிவாஜி என்னை உற்றுப் பார்த்தவாறே நின்றார். சிவாஜி முக்கியமான ஒன்றை, அதுவரை நான் தவறவிட்ட ஒன்றை சொல்லப்போவதற்கான முஸ்தீபு அது என்பது அவருடனான “நீண்ட வாழ்வில்” எனக்கு தெரிந்திருந்தது.  – “ ஏல, ஒனக்கு இன்னுமால மண்டைல ஏறல? சங்கீதா நெனச்சிருந்தா அவ சேந்ததும் எழுதுன மொதல் டெஸ்ட்லருந்தே ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்துருப்பா. மொதல் பரிட்சைல இருந்தே அவ பிரேம்க்கு விட்டுக்கொடுத்துட்டா. அது புரியவும்தான் பிரேம் இப்டி ஆயிட்டான்.” இதையெல்லாம் எப்படி சிவாஜியால் புரிந்து கொள்ள முடிந்தது என்ற வியப்பே சங்கீதா விட்டுக்கொடுத்த வியப்பை விட எனக்கு மேலோங்கியிருந்தது அப்போது. என் வீட்டிற்கான தெருவில் திரும்புமுன் நாங்கள் பிரியும் இடத்தில் சிவாஜி என் தோளைப் பற்றிக்கொண்டு இன்று மாலை நடந்ததை எவரிடமும் பகிரக்கூடாது எனவும், இது குறித்து தான் சிந்தித்து வெகு விரைவில் ஒரு தீர்வினை செயல்படுத்துவதாகவும், அதுவரை ரகசியம் காப்பது என் பொறுப்பில் இருப்பதாகவும்  சொல்லிச் சென்றார்.     

மறுநாள் காலை பள்ளி செல்ல சற்று முன்னதாகவே என் வீட்டிற்கு வந்த சிவாஜி எனக்கு ஒரு பணியை அளித்தார். சேமியா சொன்ன யோசனையை இடம்,பொருள், ஏவல் அறிந்து செயல்பாட்டிற்கு கொண்டுவருவதே எனக்கு சிவாஜி அளித்த பணி. மெல்லிய தயக்கத்துடன் ஒப்புக் கொண்டேன். பள்ளிக்கு சென்றதும் அதற்கான ஏற்பாட்டினைச் செய்து முடித்தேன்.  அதன்படி அன்று மாலை பள்ளி முடிந்ததும் சிவாஜி உமையொருபாகன் கோவில் வாசலில் மெஜூராவை சந்தித்தார். முதலில் சந்திப்புக்கு நேரம் கேட்டபோது கோபமாக மறுத்த   மெஜூரா என் சிறப்புத் திறனில் (கெஞ்சுதல்) வீழ்ந்தார். சிவாஜியும், மெஜூராவும் கோவில் வாசலில் இருந்த மடத்தின் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது நான் கோவில் வாசலில் கற்படிகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். திரும்பி வந்த சிவாஜி என்னிடம் உடனே  எதுவும் சொல்லவில்லை. சிவாஜியின் செயல்பாடுகள் பிரேம் சாயலில் மாறுவதாக  மு மா சொல்லியது நினைவுக்கு வந்தது. இந்த சந்திப்பு நிகழ்ந்த மூன்று நாட்கள் வரை எதுவுமே நிகழவில்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சிங்கியும், அரைக்குண்டியும் தாங்கள் எங்கள் அணியில் சேரவருவதாகச் சொன்னார்கள். சிவாஜியிடம் ஆலோசித்து நாங்கள் மறுப்பு தெரிவித்து விட்டோம். ஒரு வெள்ளியன்று மதியம் சிவாஜி மதிய உணவு இடைவேளையின்போது பத்து நிமிடங்கள் காணாமலாகி வகுப்பு துவங்கும் நேரத்தில் திரும்பி வந்தார். அவரது முகக்குறிப்பால் அன்று மாலை என்னவோ சம்பவம் இருக்கிறது என உறுதியாக யூகிக்க முடிந்தது.

Series Navigation<< தெய்வநல்லூர் கதைகள் 10தெய்வநல்லூர் கதைகள் -12 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.