ஜகன்னாத பண்டித ராஜா

This entry is part 1 of 3 in the series ஜகன்னாத பண்டித ராஜா

 1. பாமினி விலாஸ

காளிதாசன் எனும் பெரும்புகழ் வாய்ந்த சம்ஸ்க்ருதக் கவிஞனின் பெருமையும் புகழும் காலங்களைக் கடந்து  அவனுடைய அற்புதமான காவியங்களான சாகுந்தலம், ரகுவம்ஸம், குமாரசம்பவம் ஆகியவற்றால் நிலைபெற்று நிற்கிறது. 

காளிதாசனுக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்படும் கவிஞர் ஜகன்னாத பண்டிதர் ஆவார். ஆனால் அவரைப் பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் அறிந்தவர்கள் சம்ஸ்க்ருதம் படித்தவர்கள் தவிர வெகு சிலரே! இவர் காளிதாசனைப்போல் பெரும் காவியங்களையும், நாடகங்களையும் படைக்கவில்லை. இருப்பினும் இவர் எழுதி வைத்த படைப்புகள் இலக்கணம், அலங்காரங்கள், ஆகியவற்றால் தமக்கென உயர்வான ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டு திகழ்கின்றன. இவருடைய புகழ்வாய்ந்த படைப்புகள் என இரு நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. பாமினி விலாஸ, கங்காலஹரி என்பனவே அவை. இவற்றை சமஸ்க்ருதத்தை ரசிப்பவர்களும் படித்து இன்புறலாம். மற்ற நூல்கள் அனைத்துமே பண்டிதர்களுக்கானவை! (எனது எண்ணத்தில்! ஏனென்றால், எவ்வளவு விரும்பியும் முறையாக சமஸ்கிருதத்தைப் பயில இன்றுவரை என்னால் இயலவேயில்லை!)

பாமினி விலாஸ எனும் நூல் எழுதப்பட்டது இலக்கிய இலக்கண விளக்கங்களுக்காக எனக் கூறப்பட்டாலும், இந்நூலும் கங்காலஹரியும் இந்தக் கவிஞனின் வாழ்க்கை வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது எனக் காணலாம்.

ஜகன்னாதன் 17-18ம் நூற்றாண்டில் ஆந்திராவில் பிறந்து வாழ்ந்தவர். இவரது தந்தையார் பேரு பட்டர் பெரும் கல்விமான். சிறு வயதிலேயே தன் தந்தையிடமே   நன்கு கல்வி கற்றுத் தேர்ந்தான் ஜகன்னாதன். சிறு வயதிலேயே திருமணமும் நடந்தது. அன்பான மனைவியோடு இனிதாக வாழ்ந்தவனின் வாழ்வில் பேரிடியாக மனைவி சில ஆண்டுகளிலேயே இறந்து போக விரக்தியில் சில ஆண்டுகளைக் கழித்தவன், வட இந்தியாவை நோக்கிப் பயணித்தான். முகலாய மன்னனான ஷாஜஹானின் சபையில் தனது புலமையாலும் அறிவினாலும் பெரும் இடத்தைப் பெற்று அரசனால் ‘பண்டிதர்களுக்கெல்லாம் அரசன்’ எனும் ‘பண்டித ராஜா’ எனும் பட்டம் அளிக்கப்பட்டான் ஜகன்னாதன். 

அரசனின் மகனும் பட்டத்து இளவரசனுமான தாராஷிகோவுடன் நெருங்கிய நட்புக் கொண்டான். தாராஷிகோ பலமதங்களின் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் ஆய்ந்து அறிந்து கொள்வதில் விருப்பமுடையவனாக விளங்கினான். அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய ஜகன்னாதன் அரசனின் மகளான லவங்கியிடம் காதல் கொண்டான். மன்னன் ஷாஜஹானும் இவர்களது காதலை அங்கீகரித்துத் தன் மகளை ஜகன்னாதனுக்கு மணம்செய்து கொடுக்க இசைந்தான். ஆனால் ஷாஜஹானின் மற்றொரு மகனான ஔரங்கசீப், ஷாஜஹானைச் சிறையிலடைத்தும் பட்டத்து இளவரசனான தாராஷிகோவைப் படுகொலை செய்தும் நாட்டில் குழப்பங்களை விளைவிக்க, ஜகன்னாதன் இளவரசியுடன் நாட்டைவிட்டு வெளியேறினான். அவளைத் திருமணம் செய்து கொண்டவன், பண்டிதர்களின் நகரான காசியை நோக்கிப் பயணித்தான். 

கதையை4 இங்கு சிறிது நிறுத்தி வைத்துவிட்டு ஜகன்னாத பண்டிதராஜா எழுதிய நூல்களைப் பார்ப்போமா?

1. கங்காலஹரி- கங்கையைப் போற்றி எழுதப்பட்ட 52 ஸ்லோகத் தொகுப்பு.

2. சுதாலஹரி- சூரிய பகவானைப் போற்றி எழுதப்பட்ட 30 ஸ்லோகங்களாலான தொகுப்பு.

3. அம்ருதலஹரி- யமுனையைப் போற்றும் 11 பாடல்களாலான தொகுப்பு.

4. கருணாலஹரி- மகாவிஷ்ணுவைப் போற்றி எழுதப்பட்ட 60 ஸ்லோகங்களின் தொகுப்பு

5. லக்ஷ்மிலஹரி– மகாலஷ்மியைப் போற்றி எழுதப்பட்ட 42 ஸ்லோகங்களாலான தொகுப்பு.

6. அஸஃபா விலாஸ– அஸஃப்கான் எனும் நவாபைப் போற்றி எழுதப்பட்டது.

7. சித்ர மீமாம்ஸ கண்டன– அப்பைய தீக்ஷிதர் எனும் பெரும் பண்டிதருடைய  வேதாந்த தத்துவ விளக்கங்களை ஜகன்னாத பண்டிதர் ஒப்புக் கொள்ளவில்லை. அப்பைய தீக்ஷிதர் எழுதிய சித்ர மீமாம்ஸை எனும் நூலின் கருத்துக்களைக் கண்டித்து இந்த நூலை ஜகன்னாதர் எழுதியதாகக் கூறப்படுகிறது.

8. மனோதர்ம குசமர்த்தன– மனோரமா எனும் நூலை பட்டோஜி தீக்ஷிதர் சித்தாந்த கௌமுடி எனும் எனும் தனது நூலுக்கு விளக்கவுரையாக எழுதினார். இதற்கு மறுப்பாக மேற்காணும் நூலை ஜகன்னாத பண்டிதர் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆக, பண்டிதர் கூட்டத்தில் பல எதிரிகளை சம்பாதித்துக் கொண்டவர் ஜகன்னாத பண்டிதர்.

9. ரஸ கங்காதர– இது சொல்லணிக்கலை பற்றிய நூல்; முழுமை பெறாத நிலையில் உள்ளது. இதுவே ஜகன்னாத பண்டிதரின் மிக உயர்வான நூலாகக் கருதப்படுகிறது.

10. பாமினி விலாஸ- நான்கு அத்தியாயங்களில் அமைந்த அருமையானதொரு காவியம் (காப்பியம்). ப்ரஸ்தாவிகவிலாஸ, ச்ருங்காரவிலாஸ, கருணாவிலாஸ, சாந்தவிலாஸ எனும் நான்கு அத்தியாயகங்களைக் கொண்டமைந்தது. இதிலிருந்து கவிதைகளை ரஸ கங்காதரத்தில் பொருத்தி, எடுத்துக்காட்டுகளாக வழங்கியுள்ளார் ஜகன்னாதர் என்பர் அறிஞர்கள்.


பாமினி விலாஸ

முதலில் நாம் சுவையான நூலான பாமினி விலாஸத்தினுள் பயணிப்போமா?

ஓ! அது என்ன ‘பாமினி விலாஸ’ (விலாஸம் அல்ல) என்கிறீர்களா? ‘விலாஸ’ என்றால் சம்ஸ்கிருதத்தில் பொழுதுபோக்கு என்று பொருள்! பாமினி என்பது அன்பான, உயர்குடிப் பெண்ணையோ, தாயையோ அல்லது  முன்கோபம் கொள்ளும் இளம்பெண்ணையோ குறிக்கும்!

இந்த நூலை ஜகன்னாத பண்டிதர் இயற்றியது குறித்து சில கதைகள் உலவுகின்றன. இதில் காணப்படும் சில பாடல்கள் இளம்வயதிலேயே இறந்துவிட்ட மனைவியை எண்ணிப்பாடியதாகக் கொள்ளப்படலாம். எது எப்படியோ நமக்கு வேண்டியது இவற்றின் நயமும் சுவையும் கவிதையழகும் தான். சில பண்டிதர்கள் எழுதிய ஆங்கில விளக்கத்தின்1,2,3 துணைகொண்டு நான் இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன். 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்! 

பாமினி விலாஸ எனும் இந்தக் காவியம் ஒரு கதையல்ல; ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பாடல்களால் அமைந்தது. நான்கு பகுதிகளைக் கொண்டது. ப்ரஸ்தாவிக விலாஸ, ஸ்ருங்காரவிலாஸ, கருணாவிலாஸ, சாந்தவிலாஸ என அமைந்த இது ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது.

முதல் சுலோகம் தனது இக்கவிதைகளின் அழகையும் நயத்தையும் பண்டித ஜகன்னாதரே விளக்குவதாக அமைந்துள்ளது.

‘இனிமையின் உயர்மட்ட நிலையிலுள்ள அமுதம் போன்ற எனது இக்கவிதை, இலக்கியம் எனும் கடலை நன்கு கடைந்து எழுதப்பட்டது. இந்த அமுதத்தை அருந்துபவர்களுக்கு இது எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுக்க வல்லதாகும்,’ என்கிறார். தனது கல்வியிலும் புலமையிலும் பெருத்த நம்பிக்கையும் அதனால் எழும் சிறிது கர்வமும் நிரம்பிய சொற்கள் இவை என்கிறார் திரு. சர்மா. ஆங்கில மொழியாக்கமும் இவருடையதே.

129 ஸ்லோகங்களைக் கொண்ட இப்பகுதியில் இருந்து ஒரு பத்துப் பன்னிரு ஸ்லோகங்களைக் காணப்போகிறோம். இதனை ‘அன்யோக்தி’ விலாஸ எனவும் கூறுவர். அதாவது இருவிதமான பொருள் கொடுப்பவை. ஒன்று வெளிப்படையான பொருள், மற்றொன்று உள்ளார்ந்த பொருள்.

ஸ்லோகம் 2: உயர்ந்த வகையைச் சேர்ந்த அன்னங்கள், முழுதும் மலர்ந்த தாமரை மலர்களின் மகரந்தம் விழுந்ததால் நறுமணம் மிகுந்த மானசப்பொய்கையின் நீரில் இத்தனை நாட்கள் வாழ்ந்தவை, எவ்வாறு இப்போது  தவளைகள் குடியிருக்கும் சிறு குட்டையில் வாழ்கின்றன? 

உட்பொருளை நோக்கினால், ‘நல்ல மகிழ்ச்சியான சூழலில் இனிமையாகத் தன் நாட்களைக் கழித்த ஒரு மனிதன் இப்போது ஒரு இக்கட்டான நிலையில் பொருளற்ற பேச்சுக்களைப் பேசும் மனிதர்களுடன் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால் என்ன செய்வான்,’ எனும் பொருளைப் பெறலாம்.

உலக இயல்பினைக் கூறும் பல பாடல்களுள் இதுவும் ஒன்று. சுவையான உவமையின் உதவியால் விளக்கப்பட்டுள்ளது.

ஸ்லோகம் 8: ஓ தாமரைக்கொடியே! அறிவற்ற கொக்குகள் உன்னைப் புறக்கணித்தால் நீ ஏன் வருந்துகிறாய்? உனது முழுமையான  தேனை விரும்பும் தேனீக்கள் இவ்வுலகில் நீண்டநாட்கள் வாழட்டும்.

நமது பெருமையறியாதவர்கள் நம்மைப் புறக்கணித்தால் வருந்தக்கூடாது என்பதே இதன் உட்பொருள் எனக் கொள்ளலாமா?

ஸ்லோகம் 12: ஓ சந்தன மரமே!  உன்னை நுணுக்கமான பொடியாகச் செய்தாலும், அவ்வாறு செய்தவர்களுக்கு உனது நறுமணத்தின் மூலம் நீ மகிழ்ச்சியை அளிக்கிறாய்! எத்தகைய நல்லறிவுடைய மனிதனால் உன்போன்று இந்த நற்செயலைச் செய்ய முடியும்?

சந்தன மரமே! உனது தயாள குணம் ஒருவருக்கும் இல்லை! இது நற்குடிப் பிறந்தோர் தாம் அழிந்தாலும் பிறருக்கு நன்மையே செய்வர் என்பதனை உட்பொருளாக உணர்த்துகிறது. இது போலும் செய்யுட்களும் ஸ்லோகங்களும் பலரால் எழுதப்பட்டுள்ளன. இருந்தாலும் ஜகன்னாதர் எழுதியுள்ள விதம் முற்றிலும் தனித்து நின்று இனிமை பயக்கிறது.

தாமரை, சந்தனமரம், நதி, குயில், தோட்டக்காரன், சமுத்திரம் ஆகியவற்றின் மூலம் உலகியல்புகளை விளக்கும் முறை புதுமையானது.

ஸ்லோகம் 23: ஓ நதியே! விந்திய மலையினின்றும் உற்பவிப்பதால் புனிதமான நீ, நன்கு யோசனை செய்வாய்; நீ வறண்டு போனாலும் தெருவிலுள்ள நீரை ஏற்றுக்கொள்வது உனது தகுதிக்கு சரியானது தானா?

மரியாதைக்குரிய பெரியோர் துயர காலங்களிலும் கீழ்நிலைக்குத் தாழ்ந்துவிடக் கூடாது. இந்தக் கருத்தை மேற்கண்ட ஸ்லோகத்திலிருந்து நாம் பெறலாம். 

ஸ்லோகம் 25: ஓ குயிலே! தனிமையில் இருக்கும்போது, இந்தக் கானகத்தில் நீ உந்தன் இனிய பாடல்களை இசைக்கலாகாது; ஏனெனில் இந்தக் கொடிய காகங்கள் தவறாக உன்னைத் தங்களுள் ஒருவராகக் கருதி கொன்றுவிடக் கூடும்.

ஒருவன் எங்கு அறியாமையைக் கடைப்பிடிக்க வேண்டுமோ, அங்கு அதனைச் செய்யாவிடில், அவனது புத்திசாலித்தனமே அழிவைக் கொடுத்துவிடும்.

ஸ்லோகம் 30: ஓ தோட்டக்காரா! மழைக்காலத்தில் நீரை எல்லாப் பக்கங்களிலிருந்தும் பொழிந்து இந்த மரத்தை வளர்க்க அந்த மழைமேகங்களால் இயலுமா? அந்த சூரியன் மிகவும் வெப்பத்தைத் தரும்போது நீ இந்த வளர்ச்சியைக் கனிவோடு சிறிதே நீரால் செய்துவிடுகின்றாயே!

தாராளமாகப் பெய்யும் மழை, வேண்டிய தருணத்தில் தோட்டக்காரன் அளிக்கும் நீருக்கு இணையாகுமா? அதுபோலவே சரியான சமயத்தில் செய்யும் உதவிக்கு ஈடு இணை கிடையாது என்பதே பொருள்.

ஸ்லோகம் 44: ஓ சமுத்திரமே! நீர் சினந்துகொள்ள மாட்டீர் என்றால் உம்மிடம் நாங்கள் ஒன்று சொல்ல வேண்டும். “நீர், எவ்வளவு பெரியவராக இருப்பினும், மேகங்கள் பொழியும் நீரை ஏற்றுக்கொள்ள மறுப்பதில்லை, அந்த நீரையும் மேகங்களுக்கு நீங்களே வழங்கினாலும்கூட.”

பெரியவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த பொருளைத் திரும்பப் பெறுவது சிறப்பான செயலா எனக் கேட்கிறோம். கஞ்சர்கள் ஒருமுறை தானம் வழங்கிய பொருளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை.

ஸ்லோகம் 54: தோட்டக்காரன் வெற்றிகரமாக எத்தனை மரங்களை நட்டு வளர்த்தாலும், தோட்டத்தின் ஒரு மூலையில் பகுள (மகிழ) மரத்தையும் வழக்கம்போல நடுகிறான்; ஆனால் அதிலிருந்து வரும் நறுமணம் உலகம் முழுமையும் பரந்து நிறைக்கும் என யாருக்கு அந்த உண்மை தெரியும்?

தோட்டக்காரன் யாரும் சொல்லாமலே போனால் போகட்டும் என மகிழ மரத்தையும் தோட்டத்தின் ஒரு ஓரத்தில் நட்டு வைத்தான். அது வளர்ந்து மலர்களைச் சொரிந்து மணம் பரப்பி மகிழ்விக்கும் என அவன் கண்டானா? அதுபோலவே பெரிய மனிதர்கள் புறக்கணிக்கப்பட்டாலும் தங்கள் உயர்குணங்களால் ஒளிவீசுவர்.

ஸ்லோகம் 63: ஓ தாமரை மலரே! உனது பிறப்பு தூய நீரினில், உனது அழகு, அழகிய பெண்களின் முகத்தாமரையோடு போட்டியிடுகின்றது; நீ இருக்குமிடம் ஹரியின் கரம், உனது நறுமணம் கடவுள்களின் இதயத்தைக் கவரும். நீ கவிஞர்களின் இன்றியமையாத பொருள்; மன்மதனின் முக்கியமான அம்பு; இத்தனை பெருமைகளுடன் நீ குடிகாரர்களான வண்டுகளை ஆதரிக்கிறாய், உன்னிடம் நாங்கள் என்ன சொல்வது?

தாமரை மலரானது தனது பேரழகால் உயர்ந்த அழகியின் முகத்திற்கு ஒப்பிடப்படுகிறது. தனது அரிய தன்மையால் மன்மதன் கையில் அம்பாகின்றது. தன் வாசனையால் கடவுள்களை ஈர்க்கிறது. இருப்பினும் தன்னிடம் வந்து தேனை அருந்தும் குடிகாரர்களான வண்டுகளையும் ஆதரிக்கின்றது. அது சரியன்று; அதுபோல உயர்ந்த குணங்களைக்கொண்ட மனிதர்கள் அற்ப புத்தி கொண்டவர்களைத் தம்மிடம் சேர்த்துக்கொள்ளக் கூடாது எனும் பொருள்தோன்ற அமைக்கப்பட்ட ஸ்லோகம் இது.

ஸ்லோகம் 85: புனிதமான இடம் எது? ஹரியின் தாமரைத் திருவடிகளில் வைக்கும் பக்திதான். ஆபரணம் எது? தூய்மையான இதயம். அறிவியல் என்பதென்ன? கேட்ட மாத்திரத்திலேயே தத்துவம் என்பதன் இரு  பொருட்களைப் பற்றிய இருள் அகலுமே அதுதான். எப்போதும் துணைபுரிவதில் விருப்பமுள்ள நண்பன் யார்? உண்மையை அறியும் அறிவு. துயர் தருவதில் புத்திசாலியான எதிரி யார்? கொடிய ஆசைகள் எனும் குவியல்.

நாம் அறிந்தும் செயல்படுத்தாத விஷயங்கள் பல உண்டு இவ்வுலகில் என்கிறார் ஜகன்னாதர். உலகின் இயல்பை யதார்த்தமான  வினா – விடைகளால் துல்லியமாக எடைபோட்டுக் காட்டுகிறார்.

ஸ்லோகம் 99: தனது கழுத்தில் புத்தியற்றவனால் அணிவிக்கப்பட்ட (பொன்)மாலையை ஒரு குரங்கு முதலில் நக்கிப் பார்க்கும்; பின் முகர்ந்து பார்க்கும்; அதனை அழுத்திக் கசக்கிப்பின் அதனை தனக்கான ஒரு ஆசனமாகச் செய்து கொள்ளும்.

குரங்கிற்கு அந்தப் பொன்மாலையின் மதிப்பு தெரியாது. பன்றியின் முன்னால் இறைக்கப்பட்ட முத்துக்களின் மதிப்பை அது உணராது என்பது போன்றது இது. 

ஒரு பொருளின் மதிப்பை அறியாதவர்களுக்கு அதனைக் கொடுக்கக் கூடாது எனும் பொருள் இதில் உள்ளது.

~~~~~~~~~~~~~~~~

ப்ரஸ்தாவிக விலாசத்திலிருந்து சில ஸ்லோகங்களைக் கண்டோம். அடுத்துவரும் பகுதிகள் மிகவும் அழகானவை; சுவாரசியமானவையும் கூட! தொடர்ந்து காண்போம்.

(வளரும்)

Bibliography:

  1. Bhamini Vilasa of Jagannath Pandit – English translation, notes and appendices by E V Dadape & D G Apte – Motilal Banarsidass publishers Pvt Ltd. Delhi, 1935
  2. Bhamini Vilasa of Panditharaja Jagannatha – critically edited by Har Dutt

 Sharma, 1935- Oriental Book Agency, Poona.

  1. Bhamini Vilasa of Panditharaja Jagannatha – translation, notes by B G Bal. 

1895, Gopal Narayan & co. Publishers, Bombay.

  1. கங்கையின் அலைகள் – சிறுகதை – மீனாக்ஷி பாலகணேஷ் – in மஞ்சரி ஃபெப் 2019
Series Navigationஜகன்னாத பண்டித ராஜா -2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.