- சிவிங்கி – அத்தியாயம் ஒன்று
- சிவிங்கி – அத்தியாயம் இரண்டு
- சிவிங்கி – அத்தியாயம் மூன்று
- சிவிங்கி – அத்தியாயம் நான்கு

முன்னுரை
குறுநாவல் என்ற இலக்கிய வகை அருகி வருவதாகவும் எதெல்லாமோ குறுநாவலாக எழுந்து வருவதாகவும் தகைசால் சான்றோர் சதா அங்கலாய்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததே. இக்குறை சென்றொழிய சிவிங்கி என்ற பெயரிட்டு ஒரு நீண்ட கதை எழுதலானோம். வியாசம் போல வடிவெடுத்த இதனை ஆன்றோரும் சான்றோரும் இளையோரும் நீட்புனைகதையாக வாசித்து மனநிறைவடைவது திண்ணம்.
காவல் தெய்வ வழிபாடு
தும்பிக்கை கணபதி திருப்பாதமே கதி. எண்ணமும் எழுத்தும் சிறக்க சரசுவதி அருள் வேண்டுகிறோம். கூடவே பிரம்மனும், சிவனும், விட்டுணுவும் எழுதி முடித்திட ஆசியருளட்டும். நல்ல வண்ணம் பிரசுரமாக அன்னை பராசக்தியும், செல்வம் பெருகத் திருமகளும் நல்லாசி அருளட்டும். வேணும் பைரவநாதர் மற்றும் புலியேறிய பெருமான், வராகியம்மை கடாட்சம்.
எடுப்பு
உலகெலாம் உயிர்த்த நாள் காலை இது. அடுத்து இரவு, தொடர்ந்து பிற்பகல், அதன் பின் உடனே அதிகாலை, அது கடந்து மறுபடி இன்னொரு பகல் என்று தறி கெட்டு ஓடும் பொழுதுகள் இந்தப் பிரபஞ்சத்தை பொது ஆண்டு ஆறாயிரத்துப் பதினேழு முதல் பீடித்து, நீங்காது சூழ்ந்துள்ளன.
சூரியன் பலவீனமடைந்து ஒளி குன்றி மரித்து கருந்துளையாக மாறிச் சூரிய மண்டலத்து கிரகங்கள் அனைத்தும் உயிரினங்களோடு உயிர்ப்பு நிற்க, காலம் என்ற பரிமாணம், மற்ற மூன்று கனபரிமாணத்தில் ஒன்றிரண்டு மட்டும் சேரச் செயல்படப் போகிறது.
அடுத்த நூறு ஆண்டுகளில் ஆதவன் இறப்பு எப்போது வேண்டுமெனிலும் நிகழலாம். சூரிய உதயமும் அந்தி சாய்தலும் எந்த ஒழுங்குமின்றி வந்துபோவது பலவீனமான சூரியனின் அடையாளம் எனக் கருதலாம்.
காலம் இடம் பொருள் நிறுவுதல்
இப்போது நடப்பில் உள்ள பொது ஆண்டு 6120.
குகைகள் நிரம்பி வழிய, எஞ்சிய மானுடமும், மற்ற விலங்கியங்களும் குகை இருட்டின், குகைப் பாறைப் பரப்பின் பாதுகாப்பிலிருந்து விலகி வெளியேற மனமின்றி சுருண்டு ஈரம் அப்பிய குகைத் தரையில் நின்றும், அமர்ந்தும், நகர்ந்தும், ஓடியும், பறந்தும் சுவாசித்திருக்கின்றன.
உறக்கம் கண்ணிமை அழுத்த நிலத்தில் தலைசாய்த்து அங்கங்கே வசிப்பிடங்களில் உயிரினங்கள் சயனித்திருக்கின்றன. பிரபஞ்சம் முழுவதும் குகைகள் என்பதால் குடியேற இன்னும் குகையுண்டு.
நடந்த சரிதம்
அணுசக்தி ஆயுதங்கள் நிலமழித்ததும், கருநீலமாக மின்னும் ஆலங்கட்டிப் படிகங்களாகச் செரிந்து கதிரியக்க மழை தொடங்கியது. கருத்த அப்பெருமழை பெய்யும் பகலாக நூறாண்டு தொடர்ந்தது. அந்த நீண்ட பகல் பொழுது ஓய, அடுத்த நூறாண்டு இரவாகத் தொடர்ந்தது. இருட்டைத் தின்று இருட்டைப் பிறப்பித்த நீண்ட இரவு முடிய, அணுவிளைவு சென்று தணிந்தது.
அது ஓய்ந்து எங்கணும் குகைகள் புதியதாக முளைவிட்டன. இருளில் விளையும் பயிர்கள் செழித்தோங்கியிருந்த நிலங்களில் வந்த குகைகள். பழைய பெருஞ்சாலைகளைப் போர்த்தி முளைத்த குகைகள். கடற்கரைக் குகைகள். கடலுக்குள் எழுந்த குகைகள். அருவி, ஆறு, வாய்க்கால் எனச் சகல இடத்திலும் காளான் குடை விரித்ததுபோல் எழுந்து வந்த குகைகள்.
குகைகளின் மாண்பு
அவை அறிவு மிகுந்த குகைகள். எந்த திசை நோக்கி இருக்க வேண்டும், எத்தனை வளைவுகள் இருக்க வேண்டும், நீள, அகலங்கள் சுற்றுச் சூழலைப் பொறுத்து எவ்வளவு இருக்க வேண்டும் என்று தானே விதித்துக் கொண்ட கணிதச் சமன்பாட்டின்படி எழுப்பிக்கப்படுகிற குகைகள் அவை.
உயரம் மட்டும் பிரபஞ்சம் முழுக்க ஒரே அளவு, அதாவது எட்டடி தான் இருக்கும், எங்கும்.
குகை மனிதர் சிறப்பு
குகை மனிதர்களுக்குப் பேச, கேட்க, அதன்படி நடக்க மட்டும் தேவையான அறிவு பிறவியிலேயே சிறுமூளை முகுளத்தில் பதிந்திருக்கும்.
அந்த அடிப்படை அறிவு, சைகை மற்றும் தொடுமொழி வழியாக பரஸ்பரம் தொடர்பு கொள்ளப் பயனாகும். பார்வை குறைந்த, அற்ற மாற்றுத் திறனாளிகளோடு தொடர்பு கொள்ள தொடுமொழி மட்டும் பயன்படும் என்பதால் அப்படியானவர்கள் குறைந்த அளவே பிறப்பிக்கப் படுவார்கள்.
சைகை மற்றும் தொடுமொழி, மானுடர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள மட்டுமானவை அல்ல. சகல விலங்கினம், பறவையினங்களோடும் சகஜமாகத் தொடர்பு கொள்ளப் பயனாகிறவை. இவை தவிர வேறு எந்த மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போனது. திட்டமிட்டு அவை ஒவ்வொன்றாக அழிக்கப் பட்டன. பேச்சும் எழுத்தும் முழுவதும் இறந்துபட அடுத்த அடுத்த தலைமுறைகளில் மரபணு மூலம் கடத்தப்பட்ட குறைந்தபட்ச மொழி இல்லாமல் போனது. மொழி அழிப்பு முழு வெற்றி பெற்றது.
ஆசிரியர் குறிப்பு
(மொழி அழிப்பு, மொழி புகுதல் குறித்துப் பேச இது இடமும் தருணமுமல்ல.)
இயற்கை எய்திய வீண் உயிர்கள்
இந்த ஏற்பாடு சரிப்பட்டு வராததால் இப்பிரபஞ்சத்து ஊர்வனவான எல்லா இனப் பூச்சிகளும் மற்றும் சற்றே எழும்பிப் பறக்கும் பாம்புகளும் பிரபஞ்சம் முழுக்க இயற்கை எய்தச் செய்யப்பட்டன. மண்ணுளிப் பாம்புகள் விதிவிலக்கு பெற அவற்றின் நிலப் பாதுகாப்பு தொண்டு காரணமானது.
தேள்கள் ஆயிரம் ஆண்டு முன்பு வரை இந்தக் காஸ்மாஸ் பிரபஞ்சத்தை ஆட்சி செய்து வந்தன. பொது ஆண்டு 5867இல் அணு ஆயுதப் பிரபஞ்சப் போரில் அவை அழித்தொழிக்கப்பட்டன.
விதிவிலக்கான உயிரினம்
தேளினத்தோடு கூட்டணி அமைத்திருந்த கரப்புகள் அணு ஆயுதப் போரில் தப்பிப் பிழைத்து அடுத்த பல ஆண்டுகள் தலைமறைவாயிருந்தன. பொது ஆண்டு 6000-வகை காலத்தில் அவை ஆரோக்கியமும், எதிர்ப்பட்டதை எல்லாம் தகர்க்கும் வெறியுமாக குகை எங்கும் படை எடுத்துச் சூழ்ந்தன.
எல்லா உயிரினங்கள் மேலும் பறந்து போய்ப் பாய்ந்து ஒட்டிக்கொண்டு கத்தி போன்ற கால்கள் கொண்டு முகம், தலை, பிரத்தியோக உறுப்பு என்று தேடித்தேடி ஊர்ந்து ஆழமான காயங்களை அவை உண்டாக்கின.
ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு என்ற அனைத்துக் குகைகளயும் ஆட்சி செய்யும் அரசமைப்பு கரப்பினத்தை முழுக்க அழித்தது. .
கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த நீளம் மிகுந்த குகையில் கரப்புகளின் அழிபடாத இன மிகுதி இன்னும் உயிர்த்திருப்பதாகவும், அவை வேண்டிய காலத்தில் வெளிவரும் என்றும் தொடுமொழிக் கதையாடல் சொல்லும்.
கரப்பு அழிப்பு ஐக்கிய உயிரினக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிகழ்வாக, கரப்பினத்துக்கு சைகை மொழி, தொடுமொழி என்ற இரண்டு வலிமையான ஆயுதங்கள் கிட்டாமல் போனது காரணம் என்று பொதுவாகக் கூறப்பட்டது.
நெகிழி, அசுத்த ஜட வஸ்து, ஜல வஸ்து, கழிவுநீர், போன்ற உணவும், அவற்றை உண்ணும்போது சூழ்ந்திருக்க புழுத்த வாடையோடு அபான வாயுவும் கிட்டாமல் கரப்புகள் இறந்து பட்டன.
காஸ்மோஸ் பிரபஞ்சம் குகை தோறும் ஓய்வாக இயங்கும் விடுமுறை தின இரவுப் பொழுது இது. குறைந்த பட்ச நடமாட்ட இரவு.
இரவில் இயங்கிப் பகலில் உறங்கும் பிரபஞ்சம் இது என்று ஏற்கனவே குறிப்பிட்டு நாமும் கதையைத் தொடங்கினோம். இந்நானிலம் எங்கணும் நல்லிருளில், நல்லின்பத்தில் வாழ்க. யாமியற்றிய இந்நூல் இனித் தொடரும்.
அருமையான துவக்கம். வித்தியாசமான புனைவுக் களம். வாழ்த்துக்கள்.