என் குழந்தைகளின் புகைப்படங்கள்

மணிப்புரி மூலம் : சத்யவதி நிங்கோம்பாம்
ஆங்கிலத்தில்: சபம் ஸ்வீட்டீ
 ஆங்கில வழி : தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

“அம்மா! நான் பெரியவனா வளர்ந்தப்புறம் ஏரோப்பிளேன்லே பறந்து போவேன்தானே?’’


‘‘கட்டாயம் போவே குழந்தை’’


‘‘நான் பெரிய ஆளா ஆனப்புறம் நியூஸ் பேப்பரிலே என்னோட ஃபோட்டோ வரும் இல்லையாம்மா?’’


‘‘நிச்சயமா வரும் மகனே’’


‘‘அக்கா பெரியவளா வளர்ந்த பிறகு என்னவா ஆவா?’’


‘‘உன்னோட அக்கா ஒரு பொண்ணு.  அவளுக்குக் கல்யாணம் ஆகும்.  அவங்க, வேறே ஒரு வீட்டுக்கு அவளைக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.’’


‘‘சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது.  அவளை அவங்க அப்படிக் கூட்டிக்கிட்டுப்போக எல்லாம் நான் விட மாட்டேன். அக்காவை என்னோட கூடவே பிளேனிலே உட்கார வச்சுக்கிட்டு அமெரிக்காவுக்குப் பறந்து போயிடுவேன்.  அவ அங்கேயே இருக்கட்டும்.  அப்படின்னா அவ கல்யாணம் பண்ணிக்க வேண்டியிருக்காதுதானே? “


‘‘கிறுக்குப்பையா? அக்காவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா?’’


‘‘ஆமாம்!’’


‘‘எவ்வளவு பிடிக்கும்?’’


‘‘இதோ இ…வ்..வ..ள…வு’’ என்று தன் சின்னஞ்சிறு கைகளை முதுகு வரை விரித்து சைகை காட்டினான் அவன்.


‘‘அம்மா அப்பா, அக்கா- எங்க மூணுபேரிலே உனக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?’’


‘‘உங்க மூணு பேரையுமே எனக்குப் பிடிக்கும்தான்’’


‘‘அட…. இந்தக் காலத்துக் குழந்தைகளைப் பாரு! இத்தனூண்டா இருந்துகிட்டு அவங்க வாயிலிருந்து வர்ற வார்த்தைகள்தான் எப்படி இருக்கு?’’


மோமோச்சா, முடிவே இல்லாத கேள்விகள் பலவற்றையும் கேட்டுக் கொண்டே இருப்பான்.  அவை அவனது பெற்றோருக்கு மிகவும் பிடிக்கும்; அவர்களைக் களிப்பூட்டும்.
‘திருமண பந்தத்தில் பிணைக்கப்பட்டிருக்கும்.  ஆணையும் பெண்ணையும் அதில் வலுவாகக் கட்டிப்போட்டிருப்பது தங்களது குழந்தை மீது அவர்கள் வைத்திருக்கும் அன்புதான்.  உலகம் முழுவதும் உள்ள பொதுவான நடைமுறை இது’ என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

இன்று, இம்பாலில் உள்ள ஏதோ ஒரு அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஓவியப்போட்டியில் அவர்களது பெண் பங்கெடுத்துக் கொள்ள இருக்கிறாள்.  தன் பள்ளி சார்பாக அவள் இதில் கலந்துகொள்கிறாள் . மோமோச்சாவும் கூடப் போகிறான்.  

மதிய உணவை சீக்கிரமே முடித்து விட்டு அம்மா அவர்களுக்கு உடையணிவித்துவிடுகிறாள்.  தங்கள் வீட்டில் வைத்து வழிபடும் ‘சனமஹி’* (* ‘மைதேயி’ பழங்குடி மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்யும் கடவுள் ‘சனமஹி’) என்ற தெய்வ உருவத்தின் அருகில் அவர்களை அழைத்துச் செல்கிறாள்.  அதன் பிறகு முற்றத்திலுள்ள துளசிச் செடிக்குக் கீழே எல்லோரும் விழுந்து வணங்குகிறார்கள்.


‘‘ஓவியப் போட்டியிலே நல்லா வரைஞ்சுட்டு வா பொண்ணே’’


‘‘சரிம்மா’’

‘‘இன்னிக்கு க்வைராம்பாண்ட் மார்க்கெட்டுக்கு மோமோச்சோவைக் கூட்டிக் கிட்டுப் போகலாம் நாம’’


‘‘அவனுக்கு ஒரு நல்ல சட்டை வாங்கித் தாங்கப்பா’’


‘‘கட்டாயம் வாங்கித்தரேன், பின்னே என் பையனுக்கு நான் வாங்காமலா?’’


‘‘அக்காவுக்கும்தான்’’


‘‘நிச்சயம் வாங்கறேன்’’


‘‘அம்மாவுக்கும் கூட’’


‘‘சரி, சரி…’’


‘‘அம்மா… பைபை …’’

அவள் வீட்டுவாசலில் நின்றபடி குழந்தைகளின் சின்னக் கையசைப்பை எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ, அவ்வளவு நேரம் பார்த்தபடி நிற்கிறாள்.  பிறகு தங்கள் அப்பாவை முந்திக் கொண்டு வேகமாக நடை போட்டுப் போய் விடுகிறார்கள் அவர்கள்.

                                            ***********************

மாலை மறைந்து இருள் படர ஆரம்பித்துவிட்டது.  கணவனும், குழந்தைகளும் திரும்பி வருகிறார்களா என்று பார்ப்பதற்காக வாசற் கதவுப் பக்கம் வந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறாள் மோமோ-மா.  வழியைப் பார்த்துப் பார்த்து அவள் கண்கள் பூத்துப் போய் விடுகின்றன.


‘‘எங்கேதான் இருப்பாங்க அவங்க? ஏன் இவ்வளவு நேரம் ஆகுது? வெளியே போயிட்டா போதும், எப்ப திரும்பி வரணுங்கிறதே அவருக்குத் தெரியாது’ என்று கணவரை மனதுக்குள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள் அவள்.  எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தபடி கதவருகே உட்கார்ந்து அவர்கள் எப்போது வருவார்கள் என்று தன் விழிகளால் துருவிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

தெருவில் வருகிறவர்கள் போகிறவர்கள், அவளுக்கு அறிமுகமானவர்கள் எல்லோரும்
‘‘மோமோ-மா இங்கே என்ன செய்யறே’’ என்று பரிவோடு கேட்கிறார்கள்.
‘‘யாருக்காகக் காத்திருக்கே இபெம்மா? “(தங்கச்சி) என்று விசாரிக்கிறார்கள்.

 தான் நெய்த துணிகளை மார்க்கெட்டில் இருக்கும் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்காகச் சென்றிருந்த ஒரு நெசவாளிப் பெண், நூல்கண்டுகள் அடங்கிய தன் பெட்டியை இறுகப்பிடித்துக் கொண்டு , அந்த இருளில் தெருவுக்குள் ஓட்டமும் நடையுமாக விரைந்து செல்கிறாள்.  அவள் மிரண்டு போயிருக்கிறாள் என்பது, எடுத்த எடுப்பிலேயே தெரிகிறது.

‘‘இபெம்மா! க்வைராம்பாண்டிலே இன்னிக்குத் துப்பாக்கிச் சூடு நடக்குது.  காயப்படாம, செத்துப்போகாம தப்பிச்சது என்னோட நல்லநேரம்.  பஸ் எதுவுமே வரலை.  ஏதோ அதிர்ஷ்டம் இருந்திருக்கு, எப்படியோ சாமி புண்ணியத்திலே தப்பிச்சு வந்திட்டேன். இது ரொம்ப மோசமான நேரம்… போர் நடக்கற நேரம்* (இனக்குழுக்களுக்குள் அடிக்கடி நிகழும் கலவரங்களே போர்ச்சூழலாக இங்கு சித்தரிக்கப்படுகின்றன). கூட்ட நெரிசலான ஒரு மார்க்கெட்டுக்குள்ளே குண்டு வெடிச்சா ஜனங்க கட்டாயம் செத்துத்தான் போவாங்க.  வீட்டிலே இருக்கிற எல்லாருக்கும் கவலைதான்’’ என்று போகிற போக்கில் வேகமாகச் சொல்லிக் கொண்டே கடந்துபோகிறாள் அவள்.

மோமோ-மா அதிர்ச்சியால் திக்பிரமை பிடித்தவளாய் வாயடைத்துப்போய் நிற்கிறாள்.அக்கம்பக்கத்திலுள்ளவர்களும், உறவுக்காரர்களும் அவளைத் தேற்றவும் அவள் பயத்தைக் கொஞ்சம் குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

‘‘வண்டி எதுவும் ஓடாததாலே அப்பாவும், குழந்தைகளும் எங்கேயாவது மாட்டிக்கிட்டிருப்பாங்க.’’

‘‘இதோ பாரும்மா, ராத்திரிக்கு முன்னாடி அவங்க இங்கே வந்து சேர்ந்துடுவாங்க. நீ வேணும்னா பாரு! இம்பால் ஒண்ணும் அவ்வளவு தூரம் இல்லையே?’’

மோமோ-மாவை அண்டை வீட்டுக்காரர்கள் அவள் வீட்டுக்குள் கொண்டு போய் விடுகிறார்கள்.

                                       *****************************

காலை விடிந்துவிட்டது.  செய்தித்தாள்கள் மட்டும் எப்படி இவ்வளவு சரியாக வந்து சேர்ந்துவிடுகின்றன?

‘‘இறந்தவர்கள்….இறந்தவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்…உறுதிப்படுத்தப்பட்டவர்கள்,’’ என்று அந்தச் செய்திகளையே செய்தித்தாள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தன.

எல்லோரும் மோமா-மா எங்கே என்று விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.  குறிப்பிட்ட அந்தப் பகுதி முழுவதையும் அவர்கள் அலசித் தேடினார்கள்.  சிலர் குளங்களுக்குள் குதித்துப் பார்த்தார்கள் . நெற்குதிர்கள் மீது ஏறியும் பார்த்தார்கள்.  காலியாய்க் கிடந்த வயல் வெளிகளில், அடர்ந்த காட்டுப் புதர்களிலெல்லாம் அவளைத் தேடிப் பார்த்தார்கள்.  

கடைசியில் மூன்று நான்கு ஆண்கள் ஒன்று சேர்ந்து மோமோ-மாவைக் கைத் தாங்கலாய்ப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.  தலை வாராமல், முடிச்சு தளர்ந்திருக்க அவளது அடர்ந்த கூந்தல் , முதுகுப்புறம் அவிழ்ந்து கிடந்தது.  மேலாடை தளர்ந்திருந்தது.  இறுகப் பிணைத்து வைத்திருந்த அவளது கரங்களை அவர்களால் பிரிக்க முடியவில்லை.

‘‘மார்க்கெட்டிலிருந்து வந்தவங்ககிட்டே இருந்து செய்தித்தாள்களைப் பிடுங்கிக்கிட்டா அவ’’ என்று யாரோ சொன்னார்கள்.
‘‘ஒருவேளை பைத்தியம் பிடிச்சுத் தெருவிலே அலையப்போறாளோ அவ?”

‘‘ஹி ஹி ஹி!!’’ என்று வெறிபிடித்தாற் போலச் சிரித்தாள் அவள்.  கசங்கிப்போன அந்த செய்தித்தாளை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.  பிறகு அதைத் தன் உதட்டருகே கொண்டுவந்து முத்தமிட்டபடி
‘‘ஆஹா.. இன்னிக்கு என் குழந்தைங்களோட படம் பேப்பர்களிலே வந்தாச்சு’’ என்று சந்தோஷமாகக் கூச்சலிட்டாள்.

                                                &**********************&

1992இல் மணிப்புரி மொழியில் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட (Ichagi Photo) இந்தச் சிறுகதையின் ஆசிரியர் சத்யவதி நிங்கோம்பாம்.

(Source CRAFTING THE WORD WRITINGS FROM MANIPUR
EDITOR , THINGNAM ANJULIKA SAMOM ZUBAAN)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.