
திங்கள் காலை. வேலையைத் தொடங்குமுன் ‘க்ராஸ்-டாக்’கிடம் இருந்து தகவல்.
– லெட் அஸ் டாக்!
மானசாவின் பி.பி.ஏ. முடிவதற்கு முன்பு நடந்த ‘க்ராஸ்-டாக்’ நிறுவனத்தின் வளாக நேர்காணல். வந்தவருக்கு பெருக்கல் குறிகள் நிறைந்த ட்டை வணிகத் தோற்றத்தைக் கொடுத்தது.
மாமூல் கேள்விகள், பதில்கள் முடிந்ததும்,
“வணிகயியலில் எது விருப்பப்பாடம்?”
“மனிதவளம்.”
“எதிர்காலத் திட்டம்?”
“படைப்பு எழுத்தில் என் திறனை வளர்த்த ஆசை.”
(ம்ம்.. அப்படியா? புதிய வணிக முயற்சியில் புரட்சி செய்வதாக இல்லை?)
“யாருடைய வழியில் நடக்க ஆசை?”
“என் பாட்டி.”
(இந்திரா நூயி, அவ்வளவு பிரபலம் இல்லாத சுனீதா ரெட்டி, மீரா குல்ர்கனி – இவர்களை எதிர்பார்த்தேன்.)
“ஏன்?”
“ஒவ்வொரு நாளிலும் அவள் குடும்பத்திற்குச் செய்த வேலைகள் தான் நிஜமான சாதனை.”
“வெஜ்ஜிபர்கர் சாப்பிட்டது உண்டா?”
‘பத்து வார்த்தைகளில் ஒரு தகவல் வாக்கியம் சொல் பார்க்கலாம்!’ என்பதை எதிர்பார்த்த அவளுக்கு ஒருகணத் தடுமாற்றம். சமாளித்துக்கொண்டு,
“சில ஆண்டுகளுக்கு முன் நான் யூ.எஸ். போனபோது ‘மார்னிங் க்ளோரி’ வெஜ்ஜிபர்கர் சாப்பிட்டேன்.”
“பிடித்திருந்ததா?”
“ஊகும்.”
“ஏன்?”
“அதன் வாசனையும் சுவையும் மாமிச சாப்பாட்டை விரும்பும் அமெரிக்கர்களுக்காக. எனக்குப் பழக்கம் இல்லாததால் அனுபவிக்க முடியவில்லை.”
“‘மார்னிங் க்ளோரி’ இந்தியாவில் வெஜ்ஜி-பர்கரை அறிமுகம் செய்யப்போகிறார்கள். உன் எண்ணங்கள் என்ன?”
“தாவர உணவில் குறைவாக இருக்கும் ப்ரோட்டீன், விட்டமின் பி-12, தாதுப்பொருட்கள் அகியவற்றை அடக்கி, ஹீம் போடாமல், மெட்ராஸ் மசாலா வாசனையில் கொஞ்சம் காரமாகத் தயாரித்தால் வேகமாக விலைபோகும்.”
“வெரி குட்! அதற்கு ஒரு விளம்பர வாசகம்…”
சிறு யோசனைக்குப் பிறகு,
“எ ரெட் சர்க்ல் வித் எ க்ரீன் டாட்.”
“நிச்சயம் அது என்னை சாப்பிடத்தூண்டும்.”
“தாங்க்ஸ்!”
தொடர்பைத் தொடர உடனே அழைப்பு வராததால் ‘க்ராஸ்-டாக்’கிற்கு அவள் வாழ்க்கையில் குறுக்கிட விருப்பம் இல்லை என நேர்காணலை மானசா மறந்தே போனாள். இப்போது அவர்களுக்கு அவள் ஞாபகம் வந்திருக்கிறது.
அவளுடைய சக-மாணவிகள் ‘லிங்க்ட்-இன்’னில் படங்களுடன் பெருமையாக அறிவித்த நிறுவனங்கள் – ஈஒய் லன்டன், மெக்கின்ஸி கம்பெனி டோக்யோ, டிலாய்ட் சான் டியாகோ – அவளைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்து இருந்தன.
இது எப்படி? மானசா, ‘க்ராஸ்-டாக்’ மும்பை.
தொலை சந்திப்பில் அவளுடன் பேச முன்பே அறிமுகமான பெருக்கல் குறி ட்டை.
“பாட்டியின் பேத்தி எப்படி?”
“உங்களுக்கு அது இன்னமும் ஞாபகம் இருக்கிறதே.”
“உன் வித்தியாசமான பதில்களை எப்படி மறக்க முடியும்? உன் தகுதிகளுக்குப் பொருத்தமான ஒரு பதவியை உருவாக்க இத்தனை காலம்.”
“அது…”
“முதலில்.. உன் சேவை எங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு…”
“இருக்கிறது.”
“அதைத் தெரிந்துகொள்வது தான் இந்த சந்திப்பின் நோக்கம். விவரங்கள் அனுப்புகிறேன்.”
“தாங்க்ஸ்! அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”
அவளுக்கு என்று சிறப்பாகச் சொல்ல எதுவும் இல்லை. பன்னாட்டு நிதி நிர்வாகம். அப்பதவியில் இருந்தவர் திடீரென்று வெளிநாட்டிற்குத் தாவி இருக்க வேண்டும். மானசாவின் மேல் திடீர் அக்கறை. அதனால் என்ன? கவர்ச்சிகரமான சம்பள விகிதம்.
பெண்கள் தனியாக நாட்டின் இன்னொரு கோடிக்கோ, அதையும் தாண்டி வெளிநாடுகளுக்கோ போவது சர்வசாதாரணம். அம்மாவும் அப்பாவும் குறுக்கே நிற்கமாட்டார்கள். அவளுக்குத்தான் மனதில் ஒரு தடுமாற்றம். குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்வதற்காக இல்லை. வேறு ஏதோவொரு பிடிப்பு. அது எதுவென்று தெரிந்தால் அதற்குக் கட்டுப்படவோ இல்லை அதை மீறுவதற்கு மனதைத் திடப்படுத்தவோ செய்யலாம்.
மனப்போராட்டத்துக்கு முடிவுதேட ஒரு சிறு பயணம். அம்மாவிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு அவளே அழைத்தாள்
“முரளி! கார் வேணும், ஒரு நாளைக்கு.”
“எப்பன்னு சொல்லு!”
“சனிக்கிழமை.”
“வர்ற வாரமா?”
“ஆமா.”
“ம்ம்..”
“என்ன யோசிக்கறீங்க?”
“எங்கே போகணும்?”
“பாண்டிச்சேரி.”
ஊரைச்சொன்னால் போதும், அவருக்கு இடம் தெரியும்.
“எப்படி சொல்றதுன்னு தெரியல.”
“ஏன், தமிழ்ல சொல்றது.”
“ஏற்கனவே புக் ஆயிருக்கு. அடுத்த வாரம் வச்சுக்கிடலாமா? இல்ல துரைராஜ்..”
“ம்ம்..ம்ம்..”
“சரி, நான் மறுபடி கூப்பிடறேன்.”
அவர் மறுபடி அழைத்தபோது,
“அம்மாவும் நீயும் தானே?”
ஆதவிக்கு கார் பயணம் பிடிப்பதில்லை, அப்பாவால் மூன்று நான்கு மணி தொடர்ந்து உட்கார முடியாது.
“ஆமா.”
“இன்னும் ஒருத்தரோட சேர்ந்து போக அப்ஜக்ஷன் இல்லாட்டி.. “
“எங்களுக்கு இல்ல, அவங்களுக்கு?”
“அவங்களுக்கும் தான். நீ போற இடத்துக்குத்தான் அவங்களும் போகணும். துணைக்கு நீங்க இருந்தா சௌகரியம்னு சொன்னாங்க.”
சனிக்கிழமை காலை. சூரியனின் கதிர்கள் இன்னும் கண்களைக் கூசவில்லை.
ஒரு தனிவீட்டின் முன் கார் நின்றது. முகத்திரை அணிந்த முரளி உள்ளே சென்று ஒரு தோள்-பையுடன் வந்தார். அவரைத் தொடர்ந்து மானசாவுக்கும் வினதாவுக்கும் இடைப்பட்ட வயதில் ஒரு பெண். சீனப்பட்டில் தைத்த பட்டீக் பாவாடையும் சட்டையும் அவளை மானசாவின் பக்கமாக இழுத்தன. காரின் முதுகுக்கதவைத் திறந்து முரளி பையை வைத்தார்.
மானசா கதவைத் திறந்தாள்.
“நீ இறங்க வேண்டாம்!”
பின்கதவைத் திறந்து அவள் உள்ளே அமர்ந்தாள்.
“நான் அருணா. நீங்க…”
“வினதா. அது என் பெரிய பெண் மானசா.”
மானசாவும் அருணாவும் புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.
“‘மாதமாடிக்ஸ் ப்ளஸ்’ எழுதிய வினதா சகாதேவன்..”
“அது நான் தான்.”
“ஓ! இப்பதான் ஒரு ஆத்தரை நேர்ல சந்திக்கிறேன்.” குரலில் ஆச்சரியம், சந்தோஷம்.
“உன்னோட எங்களையும் சேர்த்துண்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ். இன்னிக்கி காலையில டெம்பரேச்சர் எடுத்தோம். அதிகம் இல்ல.”
“எனக்கும் நார்மல். என் அம்மா கூட வர்றதா இருந்தது. அவசரமா எதையோ எடுக்கப்போய் முதுகுப்பிடிப்பு. தனியா போறதான்னு யோசனையா இருந்தது. இப்பத்தான் முதல்ல போறேன். நீங்க..”
“வருஷத்துக்கு இரண்டு மூணு தடவையாவது.”
“அப்ப எனக்கு நீங்க வழிகாட்டி.”
பிறகு படித்த பள்ளிக்கூடம், தற்போதைய வேலை என்று உரையாடல் தாவிக்குதித்தது.
“மாத் ஃபார் பிசினெஸ் நடத்த ஆள் தேடிண்டு இருக்கோம். உங்களால முடியுமா?”
“எப்போ?”
“சிங்கப்பூர் நேரத்துக்கு சாயந்தரம் ஏழிலேர்ந்து ஒன்பது. வாரத்துக்கு மூணு நாள்.”
“முடியும்னு தான் தோணறது. சாயந்தரத்துக்கு முன்னாடியே நான் சமைச்சு வச்சுட்டா மானசா சுடப்பண்ணிடுவோ. எதுக்கும் ஒருதடவை செஞ்சு பார்ப்போம்.”
“தாங்க்ஸ்.”
ஒரு சரக்கு வண்டிக்கு வழிவிட கார் திடீரென்று நின்றதால் பேச்சும் அதைப் பின்பற்றியது.
மானசா அலைபேசியில் கண்வைத்திருந்தாலும் அவள் கவனம் பின்னிருக்கை உரையாடலில்.
கார் நகர்ந்ததும்,
“பெண் விடுதலைன்னு பல வருஷமா பேசினாலும் நிஜமான விடுதலை தொண்ணூறுலேர்ந்து தான். என் அம்மாவை ஆறுபேர் வந்து பார்த்துட்டு வேண்டாம்னு சொல்லி.. ஏழாவதா எங்க அப்பா. இத்தனைக்கும் பிஏ முடிச்சுட்டு டீச்சரா இருந்தா. நான் நாலுபேரை இன்டர்வியு பண்ணி ஒருவனை தேர்ந்தெடுத்தேன். யூ.எஸ்., ஹாலன்ட் இங்கெல்லாம் கொஞ்ச நாள் இருந்தேன். இப்ப பத்து வருஷமா சிங்கப்பூர். அப்பா அம்மா நிம்மதியா இருக்கறதுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடுத்தேன். அந்தக்காலத்தில அது முடிஞ்சிருக்காது.”
“உண்மை தான்.”
அருணாவின் கவனம் மானசாமேல் படிந்தது.
“மானசா! நீ என்ன செய்யறே?”
“போன வருஷம் பி.பி.ஏ. முடிச்சேன். எம்.பி.ஏ. பண்ணலாமோன்னு ஒரு ஆசை.”
“அதுக்கு முன்னாடி ரெண்டு வருஷம் வேலை செஞ்சு அனுபவம் சேர்த்தா நல்லது.”
“ஆனிக்ஸ் பதிப்பகத்தின் ஃபைனான்ஸைக் கவனிச்சுக்கறேன். ‘க்ராஸ்-டாக்’ மும்பைக்கு வரச்சொல்லி கூப்பிட்டு இருக்காங்க.”
“இப்பல்லாம் புக்ஸ் யாரும் படிக்கறது இல்ல. எல்லாம் ‘கின்டில்’ தான். உன் அம்மாவோட டெக்ஸ்ட்-ட்புக் கூட எலெக்ட்ரானிக்கா பார்க்கலாம். கேமரா ஃபில்ம் மாதிரி காகிதமும் ஆயிண்டிருக்கு. ‘க்ராஸ்-டாக்’குக்கே போ! அங்கேருந்து வெளிநாட்டு ப்ராஞ்ச். ரெண்டு மூணு வருஷம் போனதும் எம்.பி.ஏ. சிங்கப்பூர் நேஷனல் யுனிவெர்சிடியில யூ.எஸ்.ஸை விட சம்பளம் குறைச்சல். ஆனா அதே சப்ஜெக்ட், அதே ஸ்டான்டர்ட்.”
“அதே தான் மாமாவும் சொல்றார்.”
செங்கல்பட்டு தாண்டியதும் வழக்கமாக நிறுத்தும் மரத்தடி நிழல்.
“அருணா! உனக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டுவந்திருக்கேன்.”
“உங்களுக்கு நல்ல முன்யோசனை.”
இட்லி சட்னி, மிளகாய்ப்பொடி. முரளிக்கு காரம் ஒத்துக்கொள்ளாது என வெண்ணெய் ஜாம் தடவிய ப்ரெட்.
வினதாவுக்கும் அருணாவுக்கும் சாப்பிடுவதை விடப் பேசுவதற்கு அதிக நேரம். மானசாவின் அலைபேசி ஒலிக்க அவள் எழுந்து காரின் பக்கம் வந்து நின்றாள்.
“ஹாய் அத்தை!”
“பின்னாடி ஒரே சத்தமா இருக்கே.”
“பாண்டிச்சேரி போற வழியில சாப்பிட நிறுத்தியிருக்கோம்.” ‘வீட்டுக்கு திரும்பிப் போனதும் நானே உங்களைக் கூப்பிடறதா இருக்கேன்’ என்று தொடர்ந்து சொல்லுமுன்,
“பேச முடியுமா?”
“ம்ம்..”
“போன மாசம் நீ அனுப்பின ‘மொழியோசை’யைப் படிக்க இப்ப தான் நேரம் கிடைச்சுது.”
“எப்படி?”
“ஆடிசத்தில பாதிக்கப்பட்ட இரண்டு பேர் வயதுக்கு வர்றப்ப அவங்களுக்குள்ள பரிவும் பாசமும் ஏற்படறது அழகான தீம். குறிப்பிட்ட மன வரம்புகளுக்குள் அடங்கிய இரண்டு பேருடைய உணர்வுகளை அளவான வார்த்தைகளில் அழகா வெளிப்படுத்தி இருக்கே. வர்ணனைகள், விவரங்கள், சூழ்நிலைகள் சேர்த்து நீ வெளியிடணும்.”
அதை எந்த மானசாவால் செய்ய முடியும்?
“இன்னொரு ஆச்சரியமான விஷயம்.”
“சொல்லுங்கோ!”
“‘ட்ரூத்-இன்’ல ஒரு ஆர்டிக்ல். பொம்மி எனக்கு அனுப்பியிருந்தா. மானஸாவும் இன்னொருத்தியும் சேர்ந்து எழுதினது. படிச்சப்ப அது எங்க ஊர் மானஸாவா இல்ல, வினதாவின் பெண் மானசாவான்னு எனக்கு சந்தேகம்.”
“ஏன்?”
“உனக்கு அனுப்பறேன். படிச்சுப்பார்! அவளுடைய வட்டத்தின் விளிம்பையும் தாண்டி வெளியே வந்துவிட்ட மாதிரி தெரியுது. சரி, முரளிக்கு ஹாய் சொல்!”
“முரளி! சரவணப்ரியா ஹாய் சொல்றாங்க” என்று கத்தினாள்.
“அவர்களுக்கு என் வணக்கங்கள்” என்று காரின் ஹார்னை அழுத்தினார்.
கார் கிளம்பியதும் மானசா மற்ற மானஸாவின் கட்டுரையை வாசித்தாள். அவளுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்றாலும் ஆழ்ந்த யோசனை. இணையத்தளத்தில் அவள் கல்லூரி பெருமைப்படுத்தும் முன்னாள் மாணவிகள். எந்நாட்டில் இருந்தாலும் எல்லாரும் இப்போது அந்த கட்டுரை வரைந்த பணக்கார கும்பலில். அவ்வரிசையில் சேரப்போகும் மானசா சகாதேவன்.
காரில் இருந்து இறங்கி கைகால்களை நீட்டி..
“மணலில் நடந்துட்டு வரலாமே” என்றாள் அருணா.
முரளி காரை நிறுத்திவிட்டு வரும்வரை காத்திருந்து வினதா அவளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினாள்.
“எனக்கு முப்பத்திநாலு முடிஞ்சிடுத்து. ஹார்மோன் ட்ரீட்மென்ட்டுக்கு முன்னாடி அம்மாவைப் பார்க்க வந்தேன். அவ சொன்னதால இந்த ட்ரிப்.”
“நாங்க பல வருஷமா அன்னையின் பக்தர்கள். அன்னையிடம் மனசுவிட்டு எது வேண்டிண்டாலும் அது நிச்சயம் நடக்கும்.”
கிழக்கின் தொடுவானத்தைப் பார்த்தபடி அருணா,
“எவ்வளவு பணம் பதவி இருந்தாலும் கடைசியில இந்த நம்பிக்கை தான் கைகொடுக்கறது.”
அவர்களைத் தொடர்ந்து நடந்த மானசாவும் முரளியும்.
பயணிகளின் உரையாடல்களில் முரளி கவனம் வைப்பது கிடையாது. இப்போதும் தானாகக் காதில் விழுந்த ஒன்றிரண்டு வார்த்தைகள். மானசாவின் நிலைமையைப் புரிந்துகொண்டார். அவள் பக்கம் திரும்பி அவளை உற்றுப்பார்த்தார். ஐந்து நாள் குழந்தையில் இருந்து எத்தனையோ முறை அவருடன் பயணித்திருக்கிறாள். அவள் வெறும் வாடிக்கை அல்ல, மூன்றாவது பெண்.
மானசாவுக்கு என்ன சொல்வது?
‘நமக்கு யாராவது நிறைய பணம் கொடுக்கறாங்கன்னா அதைவிட அதிகமா நம்ம கிட்டேர்ந்து எதிர்பார்க்கறாங்கன்னு அர்த்தம்.’
தன்னுடைய புத்திசாலித்தனத்தைக் குறைசொல்வதாக அவள் நினைக்கலாம்.
‘பல நூற்றாண்டுகளுக்கு முந்தி ஓலையில் எழுதினதை இப்பவும் படிக்க முடியுது. பதினைந்து இருபது வருஷம் ஆன டாகுமென்ட்டை கம்ப்யூட்டர்ல திறக்க முடியறது இல்ல. எதிர்காலத்தில எப்படி இருக்குமோ?’
தன் மேதாவித்தனத்தைக் காட்டிக்கொள்வது போல ஆகும். முகத்திரையை இறக்கிவிட்டு,
“மானசா! நிறைய கதை எழுதி இருக்கே. சிலதை நானும் படிச்சிருக்கேன். இப்ப நான் உனக்கு ஒரு கதை சொல்றேன்.”
“அதை வச்சு நான் ஒரு கதை எழுதினாலும் எழுதுவேன்” என்றாள் வேடிக்கையாக.
“நீ பிறந்தபோது…”
தாயையும் சேயையும் பார்க்க வினதாவின் பெற்றோர்களை முரளி அழைத்துப்போனான். திரும்பி அவர்களை வீட்டில் இறக்கி பணம் கைமாறியதும்,
“அம்மாவையும் குழந்தையையும் வர்ற திங்கள் வீட்டுக்கு அழைச்சிண்டு வரணும்” என்றார் தாத்தா.
“எப்பன்னு சொல்லுங்க!”
“ஒன்பதுக்கு அப்பறம் காரைக் கொண்டுவந்தா சரியா இருக்கும்.”
மனைவியைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைய காலடி வைத்த அவர் முரளி நகராமல் நிற்பதைப் பார்த்து நின்றார்.
“உங்க கிட்ட ஒரு அட்வைஸ் வேணும்.”
“சொல்லுப்பா!”
அவன் தயக்கத்தைக் கவனித்து,
“உள்ளே வா!”
மேடையை ஒட்டிய நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.
“எதுவானாலும் சொல்லு!” என்று அவன் தயக்கத்தைப் போக்கினார்.
“நான் பதினஞ்சு வருஷமா கார் ஓட்டிட்டு இருக்கேன். லாரி பஸ் ஓட்டறதுக்கும் லைசன்ஸ் வச்சிருக்கேன்.”
மனைவிக்கு மருத்துவ செலவு, காரைப் பழுது பார்க்க வேண்டும், புதிய வண்டிக்கு முன்பணம் என்று கடன் வாங்கி, சொன்னதேதிக்கு முன்பே திருப்பித் தந்திருந்தான். இன்னொரு தடவை?
“ம்ம்.. சொல்!”
“ஈரான்ல ட்ரக் ஓட்டறதுக்கு ஆள் தேவைன்னு கேள்விப்பட்டேன். ரஹீம் போன வாரம் தான் கிளம்பிப்போனான். நீங்க விவரம் தெரிஞ்சவங்க…”
அறிவுரை பணம் சம்பந்தப்பட்ட சின்ன விஷயம் அல்ல. வாழ்க்கை பற்றிய கனமான விசாரம். குடும்பத்தைப் பிரிந்து போவதா வேண்டாமா என்பது கேட்கப்படாத கேள்வி. வெளிச்சுவரின் மேல் தத்தி நடந்த காக்கைகளை வேடிக்கை பார்த்தார்.
“அறிவுரைன்னு இல்லாம என் வாழ்க்கையில நடந்ததை சொல்றேன். அதைக்கேட்டு உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அப்படிச் செய்!”
தலையைத் தாழ்த்தி அசைத்தான்.
“சரியா இருபத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னாடி. நான் ரயில்வேல சாதாரண சார்ஜ்மன். கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்திருந்தாங்க. ரிடைர் ஆன அப்பா கடன் வாங்கி இந்த வீட்டைக் கட்டியிருந்தார். அதனால வாடகை இல்ல, ஆனா குடும்பம்னா மத்த எத்தனையோ செலவுகள். மாசம் முடியும்போது கையில காசு மிஞ்சினது இல்ல. முதல் குறுக்குத்தெருவில இருக்கற அத்தனை வீடுகளும் மிடில் ஈஸ்ட் பணத்தில கட்டினது. அது வழியா நடக்கும்போது எல்லாம் எனக்கும் சௌதி போகலாமான்னு ஒரு ஆசை. அங்கே ரயில் கம்பெனியில டீசல் இஞ்சின் வேலை கிடைச்சிருக்கும். ஏழெட்டு வருஷத்தில வீட்டுக்கடன் அடஞ்சிடும். குழந்தைகளின் மேல் படிப்புக்கு பணம், வயசான காலத்துக்கு சேமிப்பு.”
அவர் பார்வையில் காக்கைகள் மறைந்து வேறொரு காட்சி. அதைப் பார்த்து முடித்ததும் அவன் பக்கம் தலையைத் திருப்பினார்.
“ஆனா நான் அப்படிச் செய்யல. இப்ப திரும்பிப் பார்க்கறப்ப நான் வாழ்க்கையில செய்த நாலைந்து நல்ல காரியங்களில அது ஒண்ணு. குழந்தைகளோட நிறைய நேரம் செலவழிச்சேன். நல்ல குணத்தோட வளர்த்தேன். அவங்களுக்கும் என்மேல பாசம். அப்பா அம்மாக்கு எந்தக் குறையும் வைக்கல. கடைசிக்காலம் வரைக்கும் அவங்களை நல்லபடியா கவனிச்சிண்டேன்.”
அவருடைய வாழ்க்கையின் அகலத்தையும் ஆழத்தையும் நினைத்து அவனுக்குக் கண்களில் ஈரம்.
“ஒரு நாடகத்தில சோ சொல்ற மாதிரி எதுக்கும் ஒரு விலை உண்டு. பல சமயத்தில அது என்னன்னு நமக்கு தெரியறது இல்ல.”
மௌனமாக சில கணங்கள்.
முரளி எழுந்து அவர் கால்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான். அறிவுரைக்கு நன்றி!
“அடுத்த திங்கள் தவறாம வருவேன். அது மட்டுமில்ல, குழந்தைக்கு மொட்டையடிக்க எந்தக் கோவில்களுக்கு போகணும்னு ப்ரார்த்தனையோ அங்கே எல்லாம் நானே அழைச்சிட்டுப் போறேன்.”
மானசா பார்வையை நேரேவைத்து நடந்தாள். காந்தி சிலைக்கு முன்னால் நின்றாள். முரளியின் பக்கம் திரும்பி,
“அன்னை உங்க மூலமா என் பிரச்சினைக்கு பதில் சொல்லிட்டார்.” (தொடரும்)