
80 –களில், நான் பணியாற்றிய வங்கிப் ப்ராஜக்ட், சிறிய ஊர் என்பதால், என்னைப் பார்க்க வந்தவர் பற்றிய விவரம், இன்னொருவருக்குத் தெரிந்து விட்டது. இவர் (புனைப்பெயர் குமார்), சில நாட்களுக்குப் பின் காலையில் என்னை விடுதியில் சந்திக்க வந்தார்.
“என் பெயர் குமார். நான் வங்கி தலைமையகத்தில், தரவு உள்ளேற்றும் இயக்கியாக (data entry operator) வேலை செய்கிறேன். அன்று, உங்களைப் பார்க்க வந்தவருக்கு, கம்ப்யூட்டர் என்றால், காயா பழமா என்று கூடத் தெரியாது. புதிய கம்ப்யூட்டர் ப்ராஞ்சுக்கு முற்றிலும் சரியான ஆள் நான்தான். என்னை நீங்கள் அவசியம் சிபாரிசு செய்ய வேண்டும்”.
குமாருடைய கணிப்பும் சரியான ஒன்றல்ல. அவரிடம், இப்படிக் கேட்டேன்,
“குமார், நான் எழுதி வரும் நிரலை, சற்று பயிற்சியுடன் உங்களால் இயக்க முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், உடனே, கணினியில் உள்ள நிரலை மாற்றுவேன் என்று நீங்கள் எதுவும் விபரீதம் செய்யக் கூடாது”
”சார், உங்க பேரக் கெடுக்க மாட்டேன். தைரியமா சிபாரிசு செய்யுங்க. நான் மிச்ச விஷயத்தை கவனிச்சுகறேன்”
என் சிபாரிசு இல்லாவிட்டாலும், எப்படியோ குமார், தன்னுடைய தொடர்புகளை வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டர் வங்கிக் கிளைக்கு எப்படியோ தன்னை மாற்றிக் கொண்டார். இத்தனை அமர்களமும் ஒரே ஒரு கணினிக்காக என்பது இன்று நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதுக்கு போய் இத்தனை பில்டப்பா என்று படிக்கும் உங்களுக்குத் தோன்றினால் இயற்கையே. ஆனால், கணினிகள் அரிதான எண்பதுகளில், மனிதர்கள், வாய்ப்புகளுக்காக ஏங்கியது என்னைப் போன்றவர்கள் கண்கூடாகப் பார்த்த ஒன்று.
பொதுவாக, கணினிகளை ஒரு பயத்துடன், அதே சமயத்தில், மாயமான விஷயமாக பார்த்த காலம் அது. பயம் என்பது, இந்த எந்திரம் தன்னுடைய வேலையை இல்லை என்று ஆக்கி விடுமா என்ற எண்ணம். மாயம் என்பது, இன்றைய வாட்ஸாப் செய்திகளைப் போல், எங்கோ பல மணி நேர வேலையை, சில நிமிடங்களில் செய்து முடித்த விந்தை எந்திரம் என்று ஊதி வாசித்தன செய்தித்தாள்கள். மிகக் குழப்பமான புரிதலுடன் கணினிகள் பயனில் இருந்தன..
ஒரு தொழிற்சாலையில், நான் பணி செய்த நிறுவனம், தொழிலாளர்கள், நாள்தோறும் பணிக்கு உள்ளே செல்லுகையில், பஞ்ச் செய்ய ஒரு எந்திரத்தை நிறுவியது. இது, தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த கவலையை அளித்தது. கணினி எந்திரம் மூலம் மேலிடம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது என்ற வதந்தி காட்டுத்தீ போலப் பரவியது. அந்த தொழிற்சாலை பக்கம் செல்லவே சற்று பயமாக இருந்த அளவிற்கு டென்ஷன் பரவியது. பல பிரச்சினை மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, இந்த எந்திரங்கள் நீக்கப்பட்டன..
எண்பதுகளில், நான் ஈடுபட்ட வங்கி ப்ராஜக்டில் இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் நடந்தன. என்னுடைய நிரல் சரியாக வேலை செய்யாது, அதைத் திருத்தப் போராடிக் கொண்டிருந்த நேரம். எங்கள் நிறுவனம், அமெரிக்க கணினியை இறக்குமதி செய்ததே தவிர, அதில் உள்ள நிரல் விஷயங்களைக் கோட்டை விட்டது. அமெரிக்க நிறுவனம், கணினியின் பளபளப்பை நம்பும் ஒன்றாக இருந்தது, எனக்கு உதவவில்லை. இன்று இருப்பது போல, இணையத்தில் ஒரு பிர்ச்சினையைத் தேடி, பதிவு செய்து, மற்ற நிரலர்களின் ஐடியாக்களைக் காண வாய்பே இல்லை. தனியாகப் போராடிக் கொண்டிருந்த எனக்குப் பெரிதாகப் பட்ட பிரச்சினைகள் யாருக்கும் கவலையாக இல்லை!
இதன் நடுவில், வங்கி என்னை ஒரு மீட்டிங்கிற்கு அழைத்தது. என்னுடைய மேலாளர்கள் வங்கிக்கு பல வாக்குறுதிகளை வீசி என்னை மேலும் இக்கட்டில் மாட்டி விட்டார்கள். அமெரிக்காவில் பல வங்கிகள் இந்தக் கணினியை வெற்றிகரமாக பயன்படுத்துவதாகச் சொல்லி சமாளித்தார்கள். இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. தனிப்பட்ட முறையில், என்னிடம், “இதெல்லாம் கணினி உலகில் சகஜம். உன்னால் சமாளிக்க முடியும்!” என்று என்னை முழிக்க விட்டு தங்கள் ஊருக்குப் போய்விட்டார்கள்.
வங்கி மீட்டிங்கில், சில பல திடுக்கிடும் தகவல்களைச் சொன்னார்கள். முதல் விஷயம், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. புதிய ப்ராஞ்ச் திறக்கும் தேதி என்னைக் கேட்காமலே முடிவு செய்து விட்டனர். அதுவும் மீட்டிங் நடந்த நாளிலிருந்து 10 நாட்களில்! அத்துடன், அந்த ப்ராஞ்ச் மேனேஜரையும் அறிமுகப் படுத்தினார்கள். அவருடைய பெருமிதத்தை பார்க்க வேண்டுமே. எவரெஸ்ட் சாதனை புரிந்தவர் போல, ஏராளமாகச் சிரித்தார். இத்தனைக்கும் அவர் கணினியைப் பார்த்ததே இல்லை. என்னிடம் தனியாக, “இந்த கம்ப்யூட்டர் எல்லாம் எனக்குத் தெரியாது. கம்ப்யூட்டர் இருக்குன்னு புதிய கணக்குகள் நிறைய திறக்கணும் பேங்க் ஆசைப்படுது. ஒன்னும் பிரச்சினையில்லையே தம்பி?”
இதற்கு, என்ன பதில் சொல்லுவது? ”அட, போங்க சார், உங்க நிரல் இன்னும் தயாராகவே இல்லை. இன்னும் ஒரு மாதம் கழித்து திறக்கக் கூடாதா?” இந்த இக்கட்டான சூழலில், அவரும் சரி, நானும் சரி, ஒன்றும் செய்ய முடியாது. ஆங்கிலத்தில் சொல்லுவது போல, அது ஒரு train wreck நிகழக் காத்திருப்பது போலத்தான் எனக்குப் பட்டது.
வேறு என்ன? அடுத்த 10 நாட்கள், நாளுக்கு 12 முதல் 16 மணி நேர உழைப்பு. இன்று இருப்பது போல, எழுதிய நிரலை சோதிக்க பெரிதாக வழியும் இல்லை. அதற்கான சரியான தரவுகளும் இல்லை. இந்த வங்கியின் கன்னி முயற்சி என்பதால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தலைமையகத்திலிருந்து வங்கியின் accounting structure மற்றும் சில வங்கி ப்ராஞ்ச் முறைகள் பற்றி மட்டுமே விவரங்கள் எனக்கு அளிக்கப்பட்டது.
இந்த நெருக்கடியான நேரத்தில், வங்கி மேலாண்மை, என்னை இன்னொரு மீட்டிங்கிற்கு அழைத்தது. முழுவதும் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அந்த வங்கியில், கணினி மற்றும் அச்சு எந்திரத்திற்கு எத்தனை இடம் வேண்டும் என்று என்னைக் கேட்டது. அத்துடன், வங்கி கவுண்டருக்கு எவ்வளவு அருகில் இந்த வஸ்துக்கள் இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்யும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது! இது போன்ற விஷயங்களில், இன்றைய நிரலர்கள் ஈடுபடத் தேவையே இல்லை. ஆனால், எண்பதுகளின் வங்கிப் பார்வையில், கோயிலைப் பற்றி பூசாரியைத் தவிர யார் அறிவார்?
ஒரு வழியாக, நான் பயந்த நாள், வந்தது. முதன் முறையாக அந்த ப்ராஞ்சிற்கு செல்ல வேண்டும். கணினி மற்றும் அச்சடிக்கும் டாட் மேட்ரிக்ஸ் எந்திரத்தை வங்கி முன் இரவு மாற்றி விட்டது. என் எதிர்பார்ப்பு, உப்பு சப்பில்லாத வங்கிக் கிளைக்கு அன்று சென்று, எப்படியாவது என் நிரல்களை ஒப்பேற்ற வேண்டும். எனக்கு ஏராளமான அதிர்ச்சிகள் காத்திருந்தன!
முதலில், பிராஞ்ச் இருந்த இடத்தை நெருங்கும் பொழுது ஒரே கூட்டமாக இருந்தது. அருகே நடந்தால், போலீஸ் பந்தோபஸ்து மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடும் இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ப்ராஞ்சை நெருங்கிய பொழுது, காவலர் ஒருவர், என்னிடம், “உங்களிடம் அழைப்பிதழ் இல்லையேல், உள்ளே செல்ல முடியாது” என்றார். நான் எவ்வளவு விளக்கியும் அவருக்கு புரிந்தது போல இல்லை. நல்ல வேளையாக, குமார் வெளியே வந்து, காவலருக்கு விளக்கியதால், ப்ராஞ்ச் உள்ளே அனுமதிக்கப்பட்டேன்.
கணினியை ஒரு வழியாகத் தயார் செய்து, மிகவும் டென்ஷனாகக் காத்திருந்தோம். முதலில் உள்ளே வந்த வாடிக்கையாளரின் பண மாற்றம் வெற்றிகரமாக முடிந்தது. கணினியும் சரியாக வேலை செய்தது. ஒப்பேற்றி விட்டதாக நினத்த எங்களை, அந்த வாடிக்கையாளர், “தம்பி, கம்ப்யூட்டர் பாஸ்புக்னு சொன்னாங்களே – அது எதுவுமே கொடுக்கவில்லையே!” என்றார். டென்ஷனில் மறந்து போன எங்களை, மீண்டும் அடுத்த செயலுக்கு இறக்கினார்.
அவருடைய பாஸ்புக் அச்சடிக்கும் பொழுது, அவர் கேட்ட கேள்விகள், இன்னும் நினைவில் உள்ளது.
“அதென்ன தம்பி, எறும்பு ஊறாப் போல இருக்கு?”.
“இப்படித்தான் கம்ப்யூட்டர், சர்ர்ர் சர்ர்ர்னு சத்தத்தோட வேலை செய்யுமா?”
அவருடைய முகத்தில் தன்னுடைய கணக்கை இந்த விநோத எந்திரம் அச்சடித்துக் கொடுத்ததைப் பார்க்க வேண்டுமே!
“கம்ப்யூட்டர் எழுத்து தெளிவாத்தான் இருக்கு. அந்த ப்ராஞ்சில் பாஸ்புக்ல எளுதித் தர்றத படிக்கவே முடியாது”
அவர் ப்ராஞ்சுக்கு வெளியே, தான் என்னவோ பிரத்யேக ரஜினி படத்தைப் எல்லோருக்கும் முன், பார்த்த பெருமையுடன் வெளியேறினார். அன்று முழுவதும், இது போன்ற பாஸ்புக் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. பல்லாயிரம் ரூபாய்கள் கொடுத்து கணக்குத் தொடங்கியதை விட, முதலில், கணினி அச்சடித்த பாஸ்புக் பெற்ற பெருமிதத்துடன், அந்த மக்கள் நடமாடியது இன்னும் விந்தையாக உள்ளது.
பயனுள்ள ஒரு கணினி நிரல், இத்தனை நிறைவை பயனர்களுக்கு தரும் என்பது அன்று முதன்முறையாகப் பார்க்க நேர்ந்தது.
இன்று நாம் இவ்வகை சேவைகளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. மாறாக, “நீங்க என்ன பெரிசா செய்யறீங்க? அதான் கம்ப்யூட்டர் எல்லாத்தையும் செய்திடுதே” என்று இயக்கியை விரட்டுகிறோம். இயங்கும் நிரலையும் பார்த்து பிரமிப்பதில்லை. “எங்க உறவுக்கார பையன் ஆண்ட்ராய்டு ஆப்பெல்லாம் 9 வயசில் எழுதறான்” என்று தாண்டிச் செல்கிறோம்.
அன்றைய நாளின் கடைசி டென்ஷன் ப்ராஞ்ச் முடிந்த பின் காத்திருந்தது. ஒவ்வொரு நாளும், எல்லா பரிவர்த்தனைகளும் முடிந்த பின், வங்கிக் கணக்குகள் ப்ராஸஸ் செய்து அடுத்த நாளை புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இந்த நிரலில் ஏதோ கோளாரு இருந்ததால், நாட் கடைசி கணக்குகள் இடித்தன. இதை எப்படியோ சோதனை செய்ய நேரமில்லை. ப்ராஞ்சில், அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டார்கள். புதிய ப்ராஞ்ச் (அதுவும் கம்ப்யூட்டர்!) என்பதால், சில பாதுகாப்பு கெடுபிடிகள் வேறு இருந்தன.
அந்த நிரலை மாற்றி எழுதி, சோதித்து, நாட் கடைசி ப்ராஸஸ் செய்து முடிக்க இரவு 8 மணியாகிவிட்டது. அந்த ப்ராஞ்சின் மேனேஜர், என்னை ஒரு 4 மணி நேரம் திட்டி இருப்பார். அவருக்கு வீட்டிற்குப் போய், கம்ப்யூட்டர் பெருமை எல்லாம் சொல்லுவதை நான் (கணினி வில்லன்) தள்ளிப் போட்டதுதான் காரணம்.
“நாளைக்கு எல்லாம் சரியாக இருக்குமா? ஒவ்வொரு நாளும் லேட்டாக வீட்டுக்குப் போக முடியாது” என்று எனக்கு எச்சரிகை வேறு!
ஒரு வழியாக, எழுதிய நிரல்களை சரியாக பல நாட்கள் வங்கி பரிவர்த்தனைகளுடன் சோதித்து விட்டு, குமாருக்கும் பயிற்சி அளிப்பதற்கு, சில வாரங்கள் பிடித்தது.
நான் வேறு நிறுவனத்திற்கு, இதன் பின்னால், மாறி விட்டதால், அந்த வங்கியுடன் தொடர்பு எதுவுமில்லாமல் போனது. இந்த நினைவுகள் மனதில் இருந்தாலும், அங்கு வங்கியில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வாய்ப்பு எதுவும் இல்லை.
சில வருடங்கள் கழித்து, இன்னொரு கணினி நிறுவனத்தில் சேர்ந்த முதல் நாள் நடந்த அனுபவம், இந்த வங்கி அனுபவத்துடன் தொடர்புடைய ஒன்றாக அமைந்தது வினோதம்.
என்னுடைய பின்னணியை அறிந்த ஒரு சக ஊழியர், ஆரம்ப நலம் விசாரிப்பிற்குப் பின், “உனக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது!” என்றார். மதிய உணவிற்குப் பின், கணினி காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட ஒரு நிரலை என்னிடம் நீட்டி, “இது நினைவிருக்கிறதா?” என்றார்.
அது பல ஆண்டுகளுக்கு முன், முதல் வங்கிக்காக நான் எழுதிய ஒரு நிரலின் அச்சு! அந்த வங்கிக்கு பராமரிப்பிற்காகச் சென்ற அவர், என்னுடைய நிரலை அச்சடித்து, பத்திரமாக தன்னுடன் வைத்திருந்தார்! “இதை போன்ற நிரலை எழுத யாரும் இல்லை”, என்றார். சற்று மிகைதான்!
“வங்கி நிரல்களைப் பயன்படுத்துகிறார்களா?” என்றேன்.
“அவசியம் பயன்படுத்துகிறார்கள். இன்னும் நிறைய கணினிகள் வாங்கி, இந்த நிரலை நகல் எடுத்து, நிறையவே பயன்படுத்துகிறார்கள்”, என்றார்.
பல ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய நிரல்கள் யாரும் பயன்படுத்தாமல் தூசு அடைவதும் இன்று பழக்கமாகிவிட்டது. ஆனால், நாம் எழுதிய நிரல்கள் பல பிரதிகள் பல கிளைகளுக்கு பயன் தருகிறது என்பதை அறிவது மிகவும் நிறைவு தரும் விஷயம்!
பி.கு: இந்தத் தொடருக்காக சில வண்ணப்படங்களை இணையத்தில் தேடுகையில் மிஞ்சியது ஏமாற்றம்தான். இந்தியாவின் 80 மற்றும் 90 –களில் நடந்த நிகழ்வுகளுக்கு அதிக வண்ணப்படங்களே இல்லை. உதாரணத்திற்கு, ஒரு மீட்டிங் என்று தேடினால், மடிக்கணினி மற்றும் கோட்டு சூட்டுடன் படங்கள் உள்ளன. சாதாரண, வேட்டி மற்றும் பாண்ட் சட்டை மற்றும் காகிதத்துடன் மீட்டிங் – மூச்! வெறும் ஆண்களே இருக்கும் மீட்டிங் (80 களில், வங்கி மேலாண்மை மீட்டிங் அப்படிதான் இருந்தது) வண்ணப்படம் கிடைக்கவில்லை. 1980 களில் பெங்களூர் படங்களும் அதிகம் இல்லை.