தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

கார்க்-ஓக் மரங்களின் காடுகள், பித்தினியாவின் கடல்போன்ற பைன்மரக் காடுகள் முதலான காட்சிகளைத் தொடர்ந்து வேட்டை விடுதி, அதில் உப்பரிகையும் அதற்குத் தட்டியினால் தடுப்புமுண்டு; அங்கு, இளைஞன் தன் பிறந்தமண்ணின் மெத்தனத்தோடு அம்புகளையும், குத்துவாளையும், தங்கத்தினாலான அரைக்கச்சையையும் பரப்பிவைத்துவிட்டு, மெத்தென்ற நீண்ட தோலிருக்கையில் நாய்களுடன் அவன் கட்டிப்புரண்டதும்; நீண்டகோடைவெப்பத்தைச் சுமக்கும் சமவெளிகள் மற்றும் புல்வெளிகளிலிருந்து ஆவியெழுந்து கொண்டிருக்க, சங்காரியொஸ்(Sangarios) நதிக்கரையோரம் மனிதர் காட்டுக் குதிரைகள் கூட்டமாகப் பாய்ச்சலிட்டதும் ; அதிகாலை நேரத்தில் கரையோரம் நீராடும் உத்தேசத்துடன், நள்ளிரவுபனியில் நனைந்த புற்களை மிதித்துத் துவைத்தவண்ணம், பித்தினியாவின் அடையாளமான மெலிந்த பிறைநிலா வானில் ஊசலாடிக்கொண்டிருக்க, நாங்கள் நதியில் இறங்கியதும் நினவுக்கு வருகின்றன. இந்நிலப்பகுதி அனைத்துச் சலுகைகளிலும் முன்னுரிமை பெற்றிருந்தது, அவ்வகையில் என்னுடைய பெயரைக்கூட தனதென்று உரிமை பாராட்டிய பூமி.
சினோப்பில்(Synope) அப்போது,குளிர்காலம், அதன் தாக்குதலை எங்களால் உணரமுடிந்தது; இங்கு கிட்டத்தட்ட சித்தியன்(Sythian) குளிரை எதிர்கொண்ட நேரத்தில் கப்பற்படை துருப்புகளைக்கொண்டு துறைமுகத்தை விரிவாக்கும் பணியைத் தொடங்க உத்தரவிட்டேன். பைசாந்த்தியம்(Byzantium) செல்லும் சாலையில், கிராமப்புறங்களுக்குள் நுழைகிற வாயிலில் அப்பகுதி முக்கியஸ்தர்கள் பெரிய அளவில் தீமூட்ட எனது பாதுகாப்புப் படையினர் குளிர்காய்ந்தனர். இதுவன்றி, திரேசுகாடுகள் ஊடாகக் குதிரைகளில் சென்றபோது, எங்கள் மேலங்கி மடிப்புகளில் ஒடுங்கிய சகித்துக்கொள்ள முடியாத காற்று ; இலைகள் மீதும், கூடாரத்தின் கூரையிலும் சடசடவென விழுந்த மழை ; அதிரியானோபொலிஸ் நகரை உருவாக்கத் திட்டமிட்டிருந்த இடத்தில் தொழிலாளர்களின் முகாமில் தங்கியது; டேசியன்யுத்த முன்னாள் வீரர்கள் அளித்த ஆரவார வரவேற்பு; கூடிய விரைவில் ஓங்கிய கோபுரங்களும் சுவர்களும் கட்டியெழுப்புவதற்கென காத்திருந்த மென்மையான பூமி ; அனைத்துமே பனிப்புயலின்கீழ் பொஸ்போரஸை(Bosphore) நாங்கள் கடந்தபோது எங்களுக்குக் கிடைத்த மிகவும் நேர்த்தியான அனுபவம். தான்யூபு நதிக்கரையில் முகாமிட்டிருந்த துருப்புகளைப் பார்வையிடச் சென்றேன், அப்பயணம் இன்றைய சார்மிஸேகெட்டூஸாவை(Sarmizegethesa), ஒரு வசந்தகாலத்தில் வளம்பெருகிய நகராகக் கண்ட பழைய அனுபவத்தை நினைவூட்டியது. பித்தானிய இளைஞன் தனது மணிக்கட்டில் டெசெபாலுஸ் (Decebalus)4 மன்னருடைய கங்கணமொன்றை அணிந்திருந்ததும் ஞாபகத்தில் இருக்கிறது.
கிரேக்கத்திற்கு திரும்பவந்தபோது வடதிசையை தேர்வுசெய்திருந்தோம். டெம்ப்பே(Tempe) பள்ளதாக்கில் கூடுதலாக சில மணிநேரங்களை செலவிட்டதில் ஓடைநீர் மற்றும் அருவிகள் சாரலில் நனைந்தேன் ; பின்னர் அங்கிருந்து பொன்னிற யூபேயா(Euboea)தீவு, இளம்சிவப்பு ஒயின்நிற அட்டிகா மலைகள் எனக் கடந்து கடைசியில் ஏதன்ஸ் நகருக்கு வெகு அருகில் வந்திருந்தோம். ஏதன்சின் மேற்கு புறநகர் பகுதியான எலியூசிஸ்(Eleusis) என்கிற இடத்தில் அப்புறநகர் பெயர்கொண்ட மர்மங்களை அறிய தீட்சைபெற விரும்பி மூன்று இரவுகள் மூன்று பகல்கள் தங்கினேன். அச்சமயத்தில் இலையுதிர்கால பண்டிகைக்கு யாத்ரீகர்கள் வந்திருந்தனர், அவர்கள் கூட்டத்தில் அப்போது நானும் ஒருவன், இந்நிலையில் ஆபத்தைத் தவிர்க்க, முன்எச்சரிக்கை நடவடிக்கையாக விழாவில் பங்கேற்கும் யாத்ரீகர்கள் குறுவாள் வைத்திருக்கக் கூடாதென்கிற உத்தரவைப் பிறப்பித்தேன்.
இளைஞன் ஆண்ட்டினஸை அவனது மூதாதையர்கள் வாழ்ந்த ஆர்க்காடியா பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றேன். ஓநாய் வேட்டையாடுபவர்கள் காலத்தில் எங்கனம் ஆர்க்காடியா காடுகள் ஊடுருவ முடியாதவையாக இருந்தனவோ அப்படியே அன்றும் இருந்தன. ஒருசில நேரங்களில், சாட்டையால் குதிரைவீரன் ஒருவன் விஷப் பாம்பொண்றை வெருட்டுவதை அங்கு காணமுடிந்தது. கோடையின் உச்சத்தில் இருப்பதுபோல் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பாறையொன்றில் சாய்ந்திருந்த இளைஞன, தனது மார்பில் தலையை மடித்து வைத்து சிறு துயிலில் ஆழ்ந்திருந்தான், அவனது தலைமுடியைக் காற்று தொட்டு விளையடிக் கொண்டிருந்தது, பார்க்க நண்பகல் எண்டீமியோன்(Endymion)5 போலத் தோற்றம். எவ்விதத்திலும் குறைகாணமுடியாத அந்நாட்களின் வருத்தத்திற்குரிய ஒரே சம்பவம், என்னுடைய இளவயது வேடன் மிகுந்த சிரமப்பட்டு வளர்த்த காட்டுமுயலொன்று, வேட்டை நாய்களால் கடித்துக்குதறப்பட்ட நிகழ்ச்சி. பித்தினியாவிலிருந்து குடிவந்திருந்த இவனுடைய குடும்பத்தைப் பற்றி இதுநாள்வரை எதுவுமே அறிந்திராத மாண்டினியா சனங்கள் முதன்முறையாக அக்குடும்பத்திற்கும் தங்களுக்குமுள்ள இரத்த பந்தத்தைத் தெரிந்துகொண்டனர். பிற்காலத்தில் இந்த இளைஞனுக்கென்று கட்டபட்ட கோயில்களையும் காணமுடிந்த அந்த நகரம், எனக்கு வளமும் நலமும் பெற்றுத்தந்த ஒரு நகரம். இங்கு நெப்டியூன் நினைவைப் போற்றும் வகையில் கட்டப்பட்ட வழிபாட்டிடம் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையிலிருந்தது, அதனுள்ளே செல்ல ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை, இந்நிலையில் மனிதரினத்தின் மிகப்பழைமையான மர்மங்கள் பல, தொடர்ந்து மூடப்பட்டிருந்த கதவுகளின் பின்னே புரிந்துகொள்ளப்படாமல் நீடித்தன. புதிய கோயிலொன்றை அவ்விடத்தில் கட்டினேன், மிக மிகப் பெரியது, விளைவாக பழைய ஆலயம் ஒரு பழத்தின் கொட்டைபோல இன்று புதிய கட்டிடத்திற்குள் உள்ளது. மன்ட்டினியா அருகே, சாலையோரத்தில், உக்கிரமான போரொன்றில் கொல்லப்பட்டு, அவருடன் அதே யுத்தத்தில் மாண்ட இளவயது தோழர் அருகே ஓய்வெடுக்கிற எபமினோண்டாஸ் (Epaminondas)6 கல்லறையை புதுப்பித்தேன். தவிர உன்னதம், எளிமை, பரிவு, புகழ், மரணமென அனைத்தையும் குறிக்கிற காலத்தின் ஞாபகார்த்தமாக தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரிகின்ற வகையில் நினைவுத் தூணொன்று நிறுவப்பட்டு, அதிலொரு கவிதையும் பொறிக்கப்பட்டது.
அக்கீயாவில் (Achaea), இதுவரை (பண்டைகாலத்திலுங்கூட) நடந்திராத அளவிற்கு இஸ்த்மியன் விளையாட்டுகள்(Les jeux Isthmiques),7 மிகவும் சிறப்பான விழாவாக ஏற்பாடுசெய்யப்பட்டுக் கொண்டாடப்பட்டன. இம்மாதிரியான மிகப்பெரிய கிரேக்க நிகழ்வுகளை மீட்டெடுப்பது கிரேக்கத்துடனான ஒற்றுமையைத் திரும்பக் கட்டமைக்க உதவுமென்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. வேட்டையிலிருந்த ஆர்வம் காரணமாக, இலையுதிர் காலத்தின் முடியும்தறுவாயில் வெண்கலச்சிவப்பு நிறத்தில் ஜொலித்த ஹெலிகான் பள்ளத்தாக்கிற்கு நாங்கள் செல்ல நேர்ந்தது, பிரேமாலயம்(sanctuary of love) அருகே நர்சிஸஸ்(Narcissus) நீரூற்றின் கரையோரம் சிறிது தங்கினோம். அங்கு தெய்வங்கள் அனைத்திலும் மதிநுட்பத்தில் மேம்பட்டதென நம்பப்படும் காதற் கடவுளுக்கு ஓர் இளங்கரடியின் தோலை பரிசாக ஆலயச்சுவரில் தங்க ஆணிகளைக்கொண்டு தொங்கவிட்டேன்.
கிரேக்கதீவுகளில் பயணிக்க எபேசஸ் (Ephèse) நகரைச் சேர்ந்த வணிகர் எராஸ்டோஸ், எனக்கு இரவல் கொடுத்த நாவாய் ஃபாலெரொன் (Phalerum) விரிகுடாவில் நங்கூரமிடப்பட்ட பின்னர், ஏதன்ஸ் நகருக்கு வந்தது என்னுடைய சொந்தவீட்டிற்குத் திரும்பியதுபோல இருந்தது. பலரது போற்றுதலுக்குமுரிய இந்நகரத்தை எவ்வித குறைகளுமற்ற அழகானதொரு நகரமாக மாற்றுவதென முடிவுசெய்தேன். முதல் முறையாக, ஏதென்ஸ்நகர மக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, நீண்டகால வீழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் கிரேக்கம் வளர்ச்சிக்கான பாதையில் நடைபோடத் தொடங்கியது. நகரின் பரப்பை இருமடங்கு பெருக்கினேன்; இல்லிசுஸ்(Illissus) நதிநெடுக புதிய ஏதென்ஸ் நகரை உருவாக்குவது என் திட்டம், அதிரியன் நகரும் தீசஸ் நகரும் இனி அருகருகே என்றாகும். அனைத்தும் ஒழுங்குபடுத்தபடவேண்டும், கட்டியெழுப்பப்பட வேண்டும். ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒலிம்பியன் ஜீயஸுக்கென பெரிய ஆலயமொன்று அர்ப்பணிக்கப்பட்டது, தொடங்கியவேலைகள் மறுகணமே கைவிடப்பட்டன. அவ்வேலையை என்னுடைய தொழிலாளர்கள் திரும்பத் தொடங்கினார்கள். பெரிக்கிளீஸ் (Péricles)8 காலத்திற்குப்பிறகு இதுபோன்றதொரு சந்தோஷமான செயல்பாட்டில் ஏதென்ஸ்நகரம் திளைப்பது தற்போதுதான். செலூசிட்(Sélucide)9 பேரரசைச் சேர்ந்த ஒருவர், இப்பணியை முடிக்கமுயன்று, கைவிட்டதை, நான் முடித்தேன். நம்முடைய சுல்லா(Sulla)10 ஏதென்ஸ்நகரை சீரழித்தற்கு நான் செய்த பிராயச்சித்தமாகவும் இக்காரியங்களைக் கருதலாம். வேலைகளை ஆய்வு செய்வதற்கு ஒவ்வொரு நாளும், நான் சிக்கலான எந்திரங்கள் மற்றும் கப்பிகள், முழுமையாக எடுத்து நிறுத்தப்படாத தூண்கள், நீலவானத்தின் கீழ் ஒழுங்கின்றி குவிக்கப்பட்டிருக்கும் சலவைக்கற்கள் ஆகியவைகளுக்கிடையில் நடமாட வேண்டியிருந்தது. எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சீரமைப்பப்பட்டிருந்த கப்பலொன்றை வெள்ளோட்டம் விட்ட நிகழ்ச்சி, கப்பல் கட்டும் தளத்தில் எனக்குக் கிடைத்த உற்சாகமூட்டும் ஓர் அனுபவம்,
நான் மேற்கொண்டிருந்த கட்டுமானவேலைகள் மாலைப்பொழுதுகளை, இசைக்கு விட்டுக்கொடுக்க எங்களை அனுமதித்தன, இசைத்துறையிலும் கட்டுமான வேலைகள் உண்டு, ஆனால் இவை கண்ணுக்குப் புலனாகாதவை. கலைகளைப் பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்திலும் நான் பயிற்சி பெற்றது உண்மை என்கிறபோதும், ஒலியை மட்டுமே எனது தினசரி அப்பியாசாமாக எடுத்துக்கொண்டு பழகி வந்திருக்கிறேன் என்பதால் இசைக் கலையில் ஓரளவு நான் தேர்ந்தவன் எனபதை அறிந்திருந்தேன். உரோமில் இசையில் எனக்குள்ள ஈடுபாட்டை காட்டிக்கொள்வதில்லை, மாறாக ஏதன்ஸ நகரில் அதை மறைப்பதில்லை. இசைக்கலைஞர்கள், எர்மெஸ்(Hermes)11 சிலைக்கடியில் சைப்ரஸ் மரமுள்ள முற்றத்தில் கூடுவது வழக்கம். ஆறு அல்லது ஏழுபேர் கொண்ட அந்த இசைக்குழுவினர் புல்லாங்குழல்களையும், லையர்களையும்(lyre) வாசிக்கிறவர்கள். இப்பட்டியலில், சில சமயங்களில் நன்கு தேர்ச்சிப்பெற்ற சித்தாரா(cithara) கலைஞரும் இணைந்து கொள்வார். நான் பெரும்பாலும் நீண்ட புல்லாங்குழலை உபயோகிப்பவன். நாங்கள் பழைய, கிட்டத்தட்ட மறந்துபோன இசைகளை வாசிப்போம், இவைதவிர நான் இசையமைத்த புதிய கீதங்களையும் வாசிப்பதுண்டு. டோரியன்(Dorien) இனத்தினரின் எளிமையும் வீரியமும் நிறைந்த பாடல்களை விரும்பியுள்ளேன், அதேவேளையில் ஒருசில தீவிரமனிதர்கள் நற்பண்பென்கிற பெயரில், தங்களுடைய மனதிற்கும், உணர்வுக்கும் பெரும்பாதிப்பைத் தருமென பயந்து நிராகரித்த கிளர்ச்சியூட்டும், உணர்ச்சியைத் தூண்டும் இசைகளையும்; சோகத்தைப் பிழிகிற இசைகளையும், நுட்பமான பிற இசைகளையும் நான் வெறுத்ததில்லை. என்னுடைய இளம்தோழன் கையில் பிடித்திருந்த லையர் வாத்தியக்கருவி நரம்புகளுக்கிடையில் தெரிந்த முகத்தைக் கவனித்துள்ளேன், அவனது முழுக்கவனமும் இசைக்குழுவில் தனது பங்கை சரிவர நிறைவேற்ற வேண்டுமென்பதில் இருக்கும், விரல்களோ விரைத்திருக்கும் நரம்புகள் நெடுக ஊர்ந்தவாறு இருக்கும்.
இங்கு, அழகான குளிர்காலம் முழுவதும் நட்புசார்ந்த சந்திப்புகளால் பெருமைபெற்றிருந்தது: அட்டிகஸ் ஒரு செல்வச்சீமான், ஆலயங்கள், நினைவுச் சின்னங்கள், அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் ஆகியவற்றைச் சீரமைக்கிற எனது பணிகளுக்கு வங்கியராக இருந்து நிதியுதவி செய்து கொண்டிருந்தார், அவருக்கும் அதில் இலாபங்கள் இருந்தன. கெபிசியாவில் (Képhisia) மரங்கள் செடிகொடிகள் நிறைந்த தோட்டங்கள் அவருக்கு இருந்தன, அவரது அழைப்பின்பேரில் அங்கு நாங்கள் சந்திப்பதுண்டு. அங்குள்ள மண்டபத்தில் அவரை எப்போதும் கற்பனாவாதிகளும், நவீன எழுத்தாளர்களும் சூழ்ந்திருப்பார்கள். அவருக்கு இளம்வயதில் ஒரு மகனுண்டு பெயர் எரோது(Herode), அவன் பிறரை வசீகரிக்கும்வகையில் மட்டுமல்ல, நுட்பமாகவும் பேசக்கூடியவன; ஏதன்ஸ் நகரில் உணவுண்ணும் நேரங்களில் என்னால் தவிர்க்க முடியாதவன். சர்மேதியர் எல்லைபகுதியில் இருந்த நேரத்தில் நான் அரசுரிமைப் பெற்றத் தகவலை அறிந்து, ஏதன்ஸ் நகர இளைஞர சார்பில் என்னைப் பாராட்டவந்தபோது, அவனிடம் ஒருசிலநொடிகள் கூச்ச சுபாவத்தைக் கண்டிருக்கிறேன், அக்குணம் இன்றில்லை என்பது நிச்சயம், ஆனால் அவனிடம் அதிகரித்துவரும் மமதை என்னைப் பொறுத்தவரை ஓரளவிற்குக் கேலிக்குரியதாகப்பட்டது, அதைத்தவிர கூடுதலாக அவனைப்பற்றிச் சொல்வதற்கு என்னிடம் வேறெதுவுமில்லை. சொல்வன்மையிலும், செல்வத்திலும் எரோதுக்குப் போட்டியாகத் திகழ்ந்த லவோதிசியா(Laodicea) நகரின் புகழ்பெற்ற பேச்சாளர் என அறியப்பட்ட போலேமோவின்(Polemo) ஆசியமக்களுக்குரிய பாவனையும், அம்ம்மனிதரிடம் வெளிப்பட்ட, பாக்டோலஸ்(Pactolus) நதியின் அபரிமிதமும், ஜொலிப்பும் என்னை அப்போது கவர்ந்தவை.
நட்பின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட எனது சந்திப்புகளில் விலைமதிக்கமுடியாததென்று ஒன்றிருக்குமானால் அது நிகோமீடியாவைச் சேர்ந்த அர்ரியன்(Arrian) என்பவருடன் ஏற்பட்ட சந்திப்பு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் என்னைக்காட்டிலும் வயதில் சிறியவர், இருந்தும் அந்த இளம் வயதிலேயே அரசியல், இராணுவம் இரண்டுதுறையிலும் சாதித்து தொடர்ந்து தமது கௌவுரவத்தை உயர்த்திக்கொள்ளும்வகையில் பணியாற்றி வந்தார். நாட்டின் முக்கியதுறைகளில் அவருக்குள்ள அனுபவங்களும்; குதிரைகள், வேட்டைநாய்கள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் அவரிடமுள்ள ஞானமும், அனைத்தும் அவரை, வார்த்தை ஜாலமிக்க ஒருவர் என்கிற நிலைக்குமேலாக நிறுத்தக்கூடியவை. இளம்வயதில் தம்முடைய மனதின் வினோதமான ஆசையொன்றிர்க்கு பலியாகியிருந்தார், அவ்வாறான வேட்கைகள்மட்டும் இல்லாமல் போயிருக்குமெனில், உண்மையான மதிநுட்பமும், மகத்துவமும்கூட ஒருவேளை அவரிடம் இல்லாதுபோயிருக்கும். அர்ரியன் வாழ்க்கையில் இரண்டாண்டுகள், எப்பிரஸில்(Epirus) உள்ள நிக்கோபோலீஸ் நகரில், குளிர்மிகுந்த அறையில் படுத்துக்கிடந்த எபிக்டெடஸோடு (Epictetus) கழிந்தன; அங்கு அவருக்கு வழங்கப்பட்டிருந்த பணி, நோயில் வாடும் முதிய தத்துவாதி தமது இறுதிக்கால கருத்துக்களை சொல்லச் சொல்ல குறிப்பெடுப்பதாகும். அன்றைய காலகட்டத்தின் உற்சாகமும், தமது முத்திரையை அர்ரியன் மீதும் பதித்திருந்தது, அதனூடாக பலரும் போற்றத்தக்க ஒழுக்கநெறியும் ஒருவித கள்ளங்கபடற்ற தனமையும் அவரிடம் இருந்தன. உண்மையில் அவர் துறவுமனம் கொண்டவர் ஆனால் அதனை ஒருவரும் சந்தேகிக்க முடியாத வகையில் ரகசியமாகக் கட்டிக்காத்தார். ஸ்டோயிக்(Stoic) கடப்பாட்டில் அவர் பெற்ற நீண்ட அனுபவம் பொய்யான சான்றாண்மைக்குத் துணைபோகச் செய்வதில்லை. அவர் சாமர்த்தியசாலியாக இருந்ததால், அன்பையொத்த அவருடைய ஒரு சில நற்பண்புகளின் உச்சங்களை, வெளிப்படையாக பிறர் உணர முடிந்ததில்லை. தவிர இதுபோன்ற குணநலன்கள், குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் அவற்றின் அரிதான தன்மையும் ; தலைசிறந்த, தனித்துவமான படைப்பென்கிற அடையாளமும், விஞ்சிய அழகென்கிற காரணமும் அவற்றுக்கு மதிப்பை அளித்தன. மற்றொரு தத்துவவாதியான செனஃபோனுடைய(Xenophon) குறைகாணமுடியாத ஞானமும், அப்பழுக்கற்ற நேர்மையும் பின்னர் அவருக்கு உதாரணமாக மாறின. தம்முடைய பித்தினியா நாட்டின் சரித்திரத்தைப் பின்னர் அவர் எழுதினார். வெகுகாலம் என்னுடைய சொந்த அதிகாரத்தின் கீழ் ஒரு கவர்னர் பொறுப்பில் பித்தினியா நிர்வாகத்தை விட்டுவைத்திருந்தேன், ஆனால் அம்மனிதர் அதனைச் சரிவர செய்யவில்லை, இந்நிலையில் அம்மாகணத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளை நான் மேற்கொண்டபோது அர்ரியன் ஆலோசனகளை வழங்கினார். சாக்ரட்டீஸ் உரையாடல்களின் தீவிர அபிமானியான இந்நண்பர், தம் கைவசமிருந்த எந்தவொரு நற்குணத்தையும் அதாவது கதாநாயக சாகசத்தை, சேவை மனதை, வேண்டியபோதெல்லாம் புத்திசாலித்தனத்தை குறிப்பாக சினேகிதத்தின் மீதான பிரியத்தை உயர்த்திப் பிடிக்கிற கிரேக்கர்களுக்கேயுரிய நல்ல பண்பை அலட்சியம் செய்தவரில்லை. இந்த இளைஞர் மீது வேறொரு வகையான அன்பிருந்தபோதிலும் எனக்குப் பிடித்தமான நண்பர். இவ்விரண்டு பித்தினியர்களும் இனிமைநிறைந்த தங்கள் வட்டாரமொழிகளை, கிட்டத்தட்ட ஹோமெர் கையாண்ட வடிவில் பேசினார்கள். பின்னர், அர்ரியன் தம்முடைய படைப்புகளில் வட்டாரமொழிகளை கையாளவேண்டுமென நான் கேட்டுக்கொள்ள இதுவே காரணம்.
அக்காலத்தில் ஏதன்ஸ் நகரம் தமக்கென்று டெமோனாக்ஸ் (Demonax) என்கிற ஓர் எளிய தத்துவவாதியைப் பெற்றிருந்தது. அவர் கொலொனஸ் கிராமத்தில் சிறிய குடிலொன்றில், மகிழ்ச்சிக்கும், பிறவற்றிர்க்கும் முன்மாதிரியாக வாழ்ந்துவந்தார். இவர் சாக்ரட்டீஸ் இல்லை; காரணம் இவரிடம் சூட்சமம், உணர்ச்சிவேகம், இரண்டுமில்லை, இருந்தபோதிலும் அவருடைய அன்புள்ளத்தையும், குறும்பையும் நேசித்தேன். பண்டைய ஆர்ட்டிக் நகைச்சுவை நாடகங்களில் நன்றாக நடித்த நகைச்சுவை நடிகர் அரிஸ்டோமென்ஸ்(Aristomenes), எளிமையான இதயங்கொண்ட நண்பர்களுக்கு இன்னொரு உதாரணம். “என்னருமை கிரேக்க கௌதாரியே” என அந்த நண்பரை அழைப்பேன். அவர் குள்ளமான ஆசாமி, பருமனான மனிதர், சிறுகுழந்தையைப்போல அல்லது ஒரு பறவையைப்போல மகிழ்ச்சியில் திளைக்கிறவர், அன்றைய தேதியில் சமயச் சடங்குகள், கவிதைகள், சமையற் குறிப்புகள் என அவருக்கு தெரிந்திராத விஷயங்களே இல்லை. வெகு நாட்கள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறவராக மட்டுமின்றி, எனக்குத் தெரிந்திராத விஷயங்களை தெரிந்துகொள்ளவும் உதவியுள்ளார். ஆண்ட்டினஸ், அக்காலக்கட்டத்தில் பிளேட்டோவுடைய மறைபொருள் கருத்துக்களில் பிடிப்புள்ளவராகவும், மிகுந்த அப்பாவி மனிதராகவும் விளங்கிய தத்துவவாதி சாஃப்ரியாஸ் (Chabrias) என்பவரை போதகராக ஏற்றுக்கொண்டிருந்தான், இத்தத்துவவாதி இளைஞன் ஆண்ட்டினஸிடம் காவல் நாயொன்றின் விசுவாசத்தை அளித்திருந்தார், பின்னர் அவன் இந்த விசுவாசத்தை என்னிடம் காட்டினான். நேர்மை, பக்தி, தூய்மையான கனவுகள், ஐயங்களைப் போக்கிக்கொள்வதில் ஆர்வமின்மை, வதந்திகளெனில் காதில் போட்டுக்கொள்ளாத குணம் என அனைத்திலும் எப்போதும்போல இருந்தான், பதினோரு வருட அரசவை வாழ்க்கை அவனிடம் எவ்வித மாற்றத்தையும் தரவில்லை. பலநேரங்களில் எனக்கு உபத்திரவமாக இருந்தான் என்கிறபோதும், இறப்பு மட்டுமே என்னை அவனிடமிருந்து பிரிக்க வல்லது, என்கிற அளவிற்கு அவனிடம் அன்பு வைத்திருந்தேன்.
ஸ்டோயிக்(Stoic) தத்துவத்தில் தேர்ச்சிபெற்ற யூப்ரடீஸுடனான எனது உறவு மிகக் குறுகிய காலமே நீடித்தது. உரோமில் அடைந்த அற்புதமான வெற்றிகளுக்குப் பிறகு அவர் ஏதென்ஸுக்கு திரும்பியிருந்தார். அவரை ஒரு வாசித்துக் காட்டுபவராக எனக்கு நியமனம் செய்திருந்தேன், ஆனால் அவரது நீண்டகால கல்லீரல் சீழ்ப்பிடிப்பபால் பட்ட அவதியும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பலவீனமும், இனி வாழ்ந்தென்ன பலன் என்கிற எண்ணத்தை அவர் மனதில் வளர்த்திருந்தது. தற்கொலை செய்துகொண்டு எனது சேவையிலிருந்து வெளியேற அனுமதி கேட்டார். ஒருவர் தான் செய்து கொண்டிருக்கும் பணியிலிருந்து தாமாக முன்வந்து விடுவித்துக் கொள்ள நினைத்தால், அதற்கு ஒருபோதும் நான் எதிரியாக இருந்ததில்லை; திராயான் இறப்பிற்கு முந்தைய நெருக்கடி நாட்களில் இப்படியொரு சாத்தியமான முடிவைக்குறித்து நானும் யோசித்ததுண்டு. அன்றிலிருந்து என்னை ஆட்டிப்படைத்த இந்த தற்கொலைப் பிரச்சனை, யூப்ரடீசு பிரச்சினைக்கு எளிதான தீர்வாகத் தோன்றியது. யூப்ரடீஸ் கேட்ட அனுமதியையும் கொடுத்தேன்; எனது இளம் பித்தினியனை அச்செய்தியை அவரிடம் சேர்ப்பிக்கப் பணித்திருந்தேன், இதுபோன்றதொரு தூதுவனின் கைகளிலிருந்து தத்துவவாதி இறுதிப் பதிலைப் பெறவேண்டுமென்பது ஒருவேளை எனது விருப்பமாக இருந்திருக்கலாம். பதிலைப் பெற்றிருந்த அன்று மாலையே, தத்துவஞானி என்னிடம் சிலவற்றைக் கலந்துபேச அரண்மனைக்கு வந்தார், அதற்கு முந்தையவற்றிலிருந்து எந்த வகையிலும் அன்றைய எங்கள் பேச்சு வேறுபடவில்லை; மறுநாள் தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவத்தைப் பற்றி நாங்கள் திரும்பத் திரும்ப பலமுறை பேசியிருக்கிறோம், விளைவாக பையன் முகத்தில் களையில்லை சில நாட்கள் சோர்வுடன் இருந்தான். உணர்ச்சிமிக்க இந்த அழகான சிறுவன் மரணத்தைத் திகிலுடன் நேரில் கண்டிருந்தான். அவனும் அப்படியொரு மரணம் குறித்து யோசித்துக்கொண்டிருந்தான் என்பதை அப்போது உணரத் தவறிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, இவ்வுலகம் எனக்கு அழகானது, அப்படியுள்ளபோது, ஒருவர் இங்கிருந்து வெளியேற விரும்புவதை புரிந்துகொள்ள கடினமாக இருந்தது. அச்சம்பவத்திற்குப் பிறகு என்னிடத்திலும் நிறைய மாற்றங்கள்.
தொடரும்…..
————————————————————————————————————————————-
குறிப்புகள்…
4. டெசெபாலூஸ் (Decebalus) டேசிய வம்சத்தவர்களின் கடைசி அரசன் (கி.பி 87-106)
5. எண்டிமியோன்(Endymion) கிரேக்க புராணங்களில், ஒரு எளிய மேய்ப்பன் நிலா தேவதையான செலினின்(Selene) காதலர்களில் ஒருவன்.
6. எபமினோண்டாஸ் (Epeminondas- 419/411–362 BC) நான்காம் நூற்றாண்டு கிரேக்கத் தளபதி மற்றும் ராஜதந்திரி
7. இஸ்த்மியன் விளையாட்டுகள்( Isthmian Games) பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வைபோலவே ஆனால் ஒலிம்பிக் ஆண்டுகள் கணக்கின்படி இரண்டாண்டுகளுக்கொருமுறை நடத்தப் பட்ட விளையாட்டுப் போட்டிகள்.
8. பெரிக்கிளிஸ்(Pericles கி.மு 495-429) கிரேக்கத் தளபதி, அரசியல்வாதி.
9. செலூசிட் பண்டைய கிரேக்கப் பேரசுர(Selucide கி.மு 312-கி.மு63)
10. Lucius Cornaius Sulla Felix (கிமு 138-78) உரோமானியத் தளபதி, இராஜ தந்திரி.
11. எர்மெஸ் (Hermes)கிரேக்கத் தொன்மக் கடவுள், சாலை மற்றும் பயணிகள் பாதுகாவலர்.