மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு 

1605 ஜெரஸோப்பா

மகாமண்டலேஸ்வரன். மகாமண்டலேஸ்வரய்யா. வாய் கொள்ளாத பெயர். சக்கரவர்த்தி என்று அர்த்தம்.  ஜெரஸோப்பா  சங்கமேஸ்வர வீதியில் ஹொன்னப்பா தானிய அங்காடியில் ஊழியம் பார்க்கிறான் மகாமண்டலேஸ்வரன். அதாவது மகாமண்டு. மாமண்டு.  அப்படித்தான் அவனைக் கடையில், கடை வீதியில், ஊரில், சகலரும் கூப்பிடுகிறார்கள். 

மாமண்டுவுக்கு வயது முப்பத்தைந்து.  வண்டிகளில் வரும் தானியத்தைக் கிடங்குக்குக் கொண்டுபோக மூட்டை தூக்குவான். கடை வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து நாலு இழை கோலமாவை இழுத்துக் கோலமும் போடுவான். கடைக்குள் ஈர்க்குச்சித் துடைப்பத்தாலும், தொடர்ந்து பூந்துடைப்பத்தாலும் சுத்தம் செய்து ஈரத் துணியால் சீராகத் துடைப்பான். அரிசியில் கல்லும் நொய்யும் நீக்க சுளகில் போட்டுப் புடைப்பான்.  

வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு அவர்கள் கூட நடந்துபோய், கடையில் வாங்கிய அரிசி, கோதுமை, ராகி, கம்பு என்று தானியம் எல்லாம், தலையிலும் கையிலும் சுமந்து, வீட்டில் இறக்கிவிட்டு வருவான். 

காலையில் கடை திறந்து வாசல் பலகைகளை ஒவ்வொன்றாக கழற்றிக் கடை திறந்து வைப்பான். ராத்திரி பத்து மணியோடு அந்தப் பலகைகளை ஒவ்வொன்றாக  நிறுத்திப் பிணைத்து  கடை எடுத்து வைப்பான். 

இரண்டு நாளாகக் கடையில் வேலை பார்க்கவேண்டாம் என்று சொல்லி விட்டார் கடை உடைமையாளர் ருத்ரப்ப ஷெட்டி.   

ஏ மாமண்டு!  பாப்பாளுக்கு கல்யாணம் முடியற வரை நீ நம்ம வீட்டிலே சுத்துக்காரியம் பாத்துக்கிட்டிரு என்று வீட்டுக்கு மகாமண்டலேஸ்வரனை அனுப்பி வைத்திருக்கிறார் அவர்.  

அவருடைய ஒரே மகள் ருக்மணிக்கு கல்யாணம் வருது. நாளை மறுநாள் ருக்மணி கல்யாணம். 

இங்கே வீட்டில் வேறே மாதிரி வேலை மாமண்டுவுக்கு. வண்டிப்பேட்டையில் போய் கல்யாணத்துக்கு வந்திறங்கும் விருந்தாளிகளை, முக்கியமாக கல்யாண மாப்பிள்ளை தரப்பு உறவினர்களையும் நண்பர்களையும் கூட்டி வருவது, அவர்களுடைய மூட்டை முடிச்சுகளையும் அவர்களையும் சாரட்டில்  ஏற்றி வண்டிப் படியில் உட்கார்ந்து சம்பந்திகள் தங்க ஏற்பாடு செய்த வீடுகளில் தங்கச் செய்வது, மாட்டு வண்டியில் மூன்று வேளை சமைத்ததைக் கொண்டு போய்ப் பரிமாறுவது, அவர்களுக்கு  குளிக்க வெதுவெதுவென்று வென்னீர், குழந்தைக்குப் பசுவின் பால், கிழவர்களுக்கு சுக்கு தட்டிப்போட்டுக் காய்ச்சின நீர், கிழவிகளுக்கு மூட்டுவலித் தைலம் என்று கொண்டு போய்க் கொடுப்பது, தைலத்தை வழித்தெடுத்து கால் மூட்டில் தடவி விடுவது, செருப்பு பிய்ந்து போயிருந்தால் கடைவீதியில் தைத்து எடுத்து வருவது இப்படியான வேலைகள் மாமண்டுவுக்குத் தரப்பட்டன. 

கடை வேலைக்கும் வீட்டு வேலைக்கும் ஒரே வித்தியாசம் என்ன என்றால், கடையில் ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் சொல்வார்கள். வீட்டில் மாமண்டு துணி துவை, மாமண்டு இருமல் கஷாயம் கொண்டா, மாமண்டு சாப்பாட்டில் போட உப்பு கொண்டு வா, மாமண்டு ஓடு, பற, குதி, நட, கிடந்து உருளு என்று சகலமானதையும் ஒரே நேரத்தில் கேட்டுப் போதும் போதுமென்றாக்கி விடுகிறார்கள். 

நல்ல வேளை, சாப்பிட்டு உண்ட இலை எடுக்க, பாத்திரங்களைத் திரும்பக் கொண்டு போக, தங்கியிருக்கும் இடத்தை சுத்தம் செய்ய இப்படி வேலைகளுக்காக மாமண்டு தலைமையில் நான்கு பெண் ஊழியர்களையும் இரண்டு ஆண்களையும் ருத்ரப்ப ஷெட்டி நியமித்து மாமண்டுவுக்குக் கொஞ்சம் மூச்சு வாங்க நேரம் ஏற்படுத்திக் கொடுத்தார். 

கல்யாணப் பெண் ருக்மிணி ”என்ன மண்டு உசிரை வாங்கறாங்களா ஒருத்தொருத்தரும் வேலை ஏவி?” என்று கேட்டாள். அவளுக்கு சங்கு    வளையல்களைக் கொண்டு போய்க் கொடுத்தபோது விசாரித்தாள் இப்படி. 

”பாப்பம்மா, நாளை மறுநாள் விடிஞ்சா உனக்கு கல்யாணம் வருது. அவச்சொல் நீ சொல்லக் கூடாது.  மாட்டேன்னு கன்னத்திலே போடு’. 

அவள் கனகாரியமாக மாமண்டுவின் கன்னத்தில் அடித்து, மாட்டேன் மாட்டேன் என்றாள். நீதானே கன்னத்திலே போடச்சொன்னே என்று கேள்வியும் சிரிப்பும் வேறே. 

கல்யாணங்களுக்கே காலகாலமான தவிர்க்க முடியாத சிடுசிடுப்பு உறவுக்காரர் ஏன் யாரும் வரவில்லை என்று மாமண்டு யோசித்தபடி இருக்க, வந்து சேர்ந்தார் மாப்பிள்ளைப் பையனின் மாமிக்குத் தம்பி என்ற நெருங்கிய உறவினர். ரெண்டுங்கெட்டான் நேரமாக ’காலைச் சாப்பாடுக்கும் நேரம் முடிந்து விட்டது, பகல் சாப்பாடு இன்னும் தயாராகிக் கொண்டிருக்கிறது’ நேரமான காலை பதினொரு மணிக்கு அவர் வந்து சேர்ந்தார். பசி உசுரு போவுது பலகாரம் எங்கே என்று வரும்போதே அதிகாரம் செய்தபடி வந்தார். லொங்குலொங்கென்று ஓடினான் மாமண்டு. 

கல்யாண வீடு இருக்கும் தெருவுக்கு மூன்று தெரு பின்னால் தான் மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருக்கும் வீடு.  கல்யாண வீட்டில் இட்டலிகளை எடுத்துப் போய், வந்தவருக்கு தின்னக் கொடுத்து உபசரிக்க, கல்லு மாதிரி இருக்கு, ஆறிப் போன பலகாரம் என்று சத்தம் போட்டார். மடையனை தனியாக அடுப்பேற்ற வைத்து இட்டலி செய்து சூடாக எடுத்து வந்தான் மாமண்டு. புளிக்குழம்பு பழையதாகி விட்டது என்று புகார். 

ஒரு வழியாக சாப்பாடு முடித்து வயிறு நிறைந்து கோபம் மட்டுப்பட, குரிச்சி போட்டு உட்கார்ந்து தாம்பூலம் தரித்து அவர் முன்னால் மாமண்டுவை நிறுத்திக்கொண்டு ஊர் உலகம் பற்றி விசாரணை செய்யலானார். 

 “ஏம்’பா, இந்த ஊர்ப் பெயர் ஜெருஸப்பா தானா? 

ஆமாங்க.

தான் ஜெருஸப்பா நகரத்தின் ஒற்றைப் பிரதிநிதி என்ற பொறுப்பு மனதில் அழுத்த மாமண்டு கைகட்டி நின்று சொன்னான்.

 என்ன அர்த்தம் இதுக்கு?. 

தெரியலேங்க. 

என்ன வயசு? 

நூறு வருஷம் மேல் இருக்கும். 

ஊர் வயசைக் கேட்கலே. உன் வயசைக் கேட்டேன். 

எனக்கு முப்பத்தைந்து ஆவுது. 

இருக்கற ஊர்ப் பெயருக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்காம இத்தனை வருஷம் எப்படி இருந்தே? 

மாமண்டு வெறுமனே சிரித்தபடி நின்றான். அவனிடம் தகவல் அவ்வளவே.

”போய்த் தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்லு” என்று அனுப்பி வைத்தார். ’ரொம்ப அவசியம் போ’ என்று நினைத்தபடி கல்யாண வீட்டுக்குள் நுழைந்தான் மாமண்டு. 

வாசலில் பெரிய பந்தலாக எழும்பிக் கொண்டிருந்தது கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இருக்க, பந்தல்காரர் மகாமண்டலேஸ்வரனை அழைத்தார். 

மாமண்டுவரே, ருத்ரப்பர் ஐயா கிட்டே சொல்லுங்க நல்ல விதமா பந்தல் வேலை முடிச்சிருக்கு, வந்து எந்த நேரமும் பார்த்து ஏதாவது செய்யணும்னா சொல்லட்டும். கையோடு முடிச்சுக் கொடுத்துடறேன் என்றார் அவர். 

பந்தலில் அங்கும் இங்குமாக குரிச்சி போட்டு வயதான நபர்கள் நாலைந்து பேர் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருக்க, இளையவர்கள் வரவழைத்துக்கொண்ட பரபரப்போடு உள்ளும் வெளியும் திரிய, கல்யாண வீட்டுக் களை வந்து விட்டிருந்தது. 

கொப்பரை ஐம்பது அறுபது எடுத்துப் போட்டுக்கொண்டு, கடப்பாறையை மண் தரையில் நட்டுப் பிளந்து, தேங்காய் எடுத்துக்கொண்டு இருந்த சிப்பந்திகள் பக்கம், ஒரேயடியாக இளையவர்களின்  சிரிப்பாக இருந்தது. அந்தப் பக்கம் போக நேர்ந்த பெண்கள் ஒரு அவசரமான புன்முறுவலோடு நேரே பார்த்துக்கொண்டு அந்த இடத்தைக் கடந்து போனார்கள். 

வீட்டு வளாகத்தில், வீடு நிற்கும் இடத்துக்குப் பின்னால் இன்னும் நாலு வீடு கட்ட முடியுமளவு நிலம் இருந்தது. வீட்டுத்தோட்டத்துக்கு நேரே தெற்கில் இருந்த இந்த நிலப்பரப்பும் சுத்தம் செய்யப்பட்டு பந்தல் வேய்ந்து கல்யாணத்துக்கான போஜனசாலை ஆனது. இன்றிலிருந்து நாளை மறுநாள் கல்யாணம் முடிந்து, அதற்கடுத்த நாள் முளைப் பாலிகை கரைத்து    முடியும்வரை இனி விருந்து இங்கேதான். அப்புறம் மாப்பிள்ளை, மருமக்கள் தாயம் நடைமுறைப்படி பெண் வீட்டுக்குக் குடி வந்து விடுவான். அது அடுத்த வாரம் நல்ல நாளான புதன்கிழமையன்று.

மாப்பிள்ளை உறவுக்காரர்களுக்கு விருந்து அறிவித்த பெண்வீட்டு உறவினர் கோஷ்டியில் மாமண்டுவும் இருந்தான்.   எல்லோரும் சந்தோஷமாக இருக்க, கொரகொரவென்று இருந்தார் அந்த சிடுமூஞ்சி உறவினர்.

அடுத்த புதன்கிழமை நல்ல நாளா? வியாழன் அதைவிட நல்ல நாள். அவர் கம்பீரமாகச் சொன்னார். 

வியாழக்கிழமை அமாவாசையாச்சே என்றார் ஐயர் குடுமி முடிந்தபடி.

அதான் சொல்றேன், ரொம்ப நல்ல நாள்.

தமிழ் பேசும் மண்ணில் அமாவாசை சுப தினம், கர்னாடகத்தில் அப்படி இல்லை. அந்தக் குழப்பம் தீர்த்து வைத்தது ஐயர் தான். புதனே நல்ல நாள் என்று முடிவானது. என்றாலும் சிடுசிடுப்பு கொஞ்சம் மீதி இருந்தது. ஜெருஸப்பா என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ளமுடியாத ஏமாற்றமோ என்று மாமண்டு சந்தேகப்பட்டான்.  

 மாமண்டு பெண் வீட்டுக்குத் திரும்ப ஓடினான். மூன்று சாரட்களை அங்கே இருந்து மாப்பிள்ளை வீட்டார் தங்குமிடத்தில் கொண்டுபோய் நிறுத்தி அந்த பிறுபிறுத்த மனுஷரிடம் காதில் கிசுகிசுத்தான் – ஐயா முதல்லே நீங்கதான் காலடி எடுத்து வச்சு கல்யாண விருந்தை ஆரம்பிச்சு வைக்கணும். 

அடுத்த பத்தாவது நிமிஷம் அவர் கல்யாணப் பந்தலில்.  மதுரையிலிருந்து வந்த சொக்கப்பா என்று அவர் தன்னை மாமண்டுவிடம் சுய அறிமுகப்படுத்திக் கொண்டார். கொப்பரை உரித்து முடிந்து சிரிப்பையும் தேங்காய்களையும் வாரி எடுத்துக் கொண்டு கல்யாண சுற்றுக்காரியத்துக்காக நியமிகப்பட்ட இரண்டு ஊழியர்களும் உள்ளே போக, சொக்கப்பாவை கல்யாண வீட்டுக்குள் அழைத்துப் போனான் மாமண்டு. 

ருத்ரப்ப ஷெட்டிவின் அப்பா பைரவ ஷெட்டி சாய்வு நாற்காலியில் தாம்பூலம் தரித்தபடி இருந்தவர் உள்ளே வருகிறவரைப் பார்த்து சந்தோஷத்தோடு விளித்தார்- 

ஓ தகவல் சொக்கப்பாவா? ஏன் இத்தனை தாமதமாக வர்றீங்க. சாப்பிட்டீங்களா என்று பிரியத்துடன் கேட்க, சிடுமூஞ்சி இருந்த சுவடே இல்லாமல் மறைந்து போனதைக் கண்டான் மாமண்டு. 

ஏ தம்பி சொக்கப்பாவுக்கு நிறைய ஜீனி போட்டு எலுமிச்சம்பழச்சாறு எடுத்து வா. 

பைரவ ஷெட்டி மதுரையில் வருஷக் கணக்காகப் துணிக்கடை வைத்து இருந்தவர். தமிழ் சுலபமாக அவர் நாவில் புகுந்து புறப்படும். புறப்படுகிறது.

தம்பி மகாமண்டலேஸ்வரன், அப்படியே எனக்கும் ஒரு எலுமிச்சை சாறு. தகவல் தம்பி சர்க்கரை வேணாம்னு சொன்னா, அந்த ஜீனியையும் எனக்கு போட்டு எடுத்து வா என்றபடி கலகலவென்றபடி சிரித்தார். 

மதுரையில் வெளிவீதியில் பாத்திரக்கடை வைத்திருந்த தமிழ் பேசும் இன்னொரு  சைவரான சொக்கப்பா   சிநேகம் இன்னும் தொடர்கிறது. என்ன, மாப்பிள்ளை உறவினர் என்பதால் கொஞ்சம் முறுக்கிப் பார்த்தார் சொக்கப்பா.   அந்த வேஷத்தோடு எத்தனை நேரம் தான் உட்கார்ந்திருப்பது? போ என்று முகமூடியை அவிழ்த்துப் போட, சிநேகமான சொக்கப்பா தட்டுப்பட்டார்.  

எப்படி இருக்கீங்க? 

நல்லா இருக்கேன். நீங்க? 

அதேபடிதான். நலம் நலம். 

பழநியப்ப செட்டியார் எப்படி இருக்கார்? சுந்தரேச குருக்கள் நல்லா இருக்காரா? தையல்கார ராமராவ் வீட்டுலே சுகவீனமா இருந்துச்சே. அடடா அடடா போகிற வயசா அந்த அம்மா. இருக்கட்டும். கல்யாண வீட்டுலே அதை எடுக்க வேணாம். பரமசிவம் மருத்துவர் எப்படி இருக்கார்? இப்படி மதுரையில் அண்டை அயலார் பற்றிய வரிசையான குசல விசாரிப்புகள். 

ஆமா, ஜெரஸோப்பா வந்துட்டு தகவல் கேட்டுத் தெரிஞ்சுக்காம எப்படி இம்புட்டு நேரம் இருக்கீங்க என்று சொக்கப்பாவை பைரவ ஷெட்டி கேட்டார். 

ஏன் இல்லே ஐயா, அவர் ஜெரஸோப்பான்னா என்ன அர்த்தம்னு கேட்டார். எனக்கு தெரியலே. இன்னும் தெரியலை தான். ஐயா நீங்களே அவருக்கு சொல்லுங்க, உங்களுக்கு தெரிஞ்சா என்றான் மாமண்டு.

தெரியாம என்ன? சொக்கப்பா, இப்படி உக்காரும். 

அவர் ஒரு வெற்றிலையை எடுத்து சாவகாசமாக மென்றார். சொல்ல ஆரம்பித்தார்- 

நாட்டு முந்திரி இருக்கு இல்லே, போர்த்துகல் நாட்டு தேசல் இறக்குமதி இல்லே, புஷ்டியான நாட்டு முந்திரி. பல்லாதகா அப்படீன்னு சமஸ்கிருதத்திலே சொல்வாங்க. தமிழ்லே கிட்டாக்கனி. மலையாளத்துலே அலக்குசேறு. அது கன்னடத்திலே ஜெரு அப்படீன்னு சொல்றோம். ஸொப்புங்கறது கன்னடத்தில் இலை அப்படீன்னு பொருள்படும். ஜெருஸொப்பூர் அதாவது முந்திரி மர தோப்பு இருந்த இடம் ஜெருஸப்பூர், ஜெருஸப்பா ஆச்சு. சமஸ்கிருதப் பெயர் அடிப்படையில், பல்லாதகிபுரம்னு ஜெருஸுப்பாவுக்கு இன்னொரு பெயர் உண்டு. ஹொன்னாவர் பெயர்க் காரணம் தெரியுமா? கன்னடத்திலே ப பெரும்பாலும் ஹ ஆகிறது உண்டே. ஹொன்னு அப்படீன்னா பொன்னு. ஹொன்னாவர் பொன்னாவரம்.  அங்கே போர்த்துகீசியர்கள் மிளகு, சாயம் தோய்த்த துணி, ஏலம், லவங்கம் இப்படி  நம்மவர்கள் கிட்டே வாங்கிக்கிட்டு அதற்கான விலையாக பொன்னைக் கொடுப்பாங்க. ஆகவே அந்த இடம் ஹொன்னூர். ஹொன்னவர். ஹொன்னாவர். துறைமுக நகரம். புரிஞ்சுதா? 

பைரவ ஷெட்டி இன்னொரு வெற்றிலை போட்டுக்கொள்ள, தரையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த மாமண்டு எழுந்து ரொம்ப நல்லா சொன்னீங்க ஐயா என்றபடி சொக்கப்பாவைப் பார்த்தான். அவர் சுவரில் சாய்ந்து உட்கார்ந்த படிக்கே உறங்கிப் போயிருந்தார். 

மதிய விருந்து ஏற்பாடுகளில் அப்புறம் மாமண்டு பரபரப்பானபடியால் ஜெருஸோப்பாவை தூக்கி எரவாணத்தில் செருகி விட்டு, பதிர்பேணியும் லட்டுருண்டையும் பாலும் இலைக்கு மேல் இலையாக இட்டு மதிய விருந்தைப் பிரமாதமாக்கினதில் ஒரு பங்கு மாமண்டுவுக்கும் போனது. தன்மையாக விசாரித்து, வேகமாக பரிமாறி, குழந்தைகளை தனியாக லட்டுருண்டையோடு பூந்தியும் கொடுத்து, பதிர்பேணியும் பாலும் இலையில் போட்டு வீணாக்காமல் கவனித்துக் கொண்டதால் அந்த நல்ல பெயர் வந்தது. 

பைரவ ஷெட்டி விருந்துக்கு வந்த எல்லோரையும் ஒவ்வொருத்தரும் வரவர பொறுமையாக சாய்வு நாற்காலியில் இருந்தபடியே வரவேற்று கன்னடம், தெலுங்கு, தமிழ், கொஞ்சம் போல் துளு, தொட்டுக்கொள்ள போர்த்துகீஸ் மொழி என்று கலந்து கட்டியாக சுவாரசியமான பேச்சால் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார். 

சொக்கப்பா சாப்பிட்டு வந்தவர் உபசார வார்த்தையாக நல்ல விருந்து என்று மாமண்டுவிடம் முதலிலும் பைரவ ஷெட்டியிடம் அடுத்தும் சொன்னார். 

பைரவ ஷெட்டியவரே அதென்ன இது இந்த தேசத்தோட தலைநகர்னு சொல்றீங்க. ஜெருஸோப்பாவிலே ஒரு மாடிக்கு மேல் வைத்துக் கட்டிய வீடே இல்லே போலே இருக்கே. ஊர்ச் சட்டம் ஏதாவது இருக்கா கட்டக் கூடாதுன்னு?

பைரவ ஷெட்டி ஒன்றும் பதில் சொல்லவில்லை. இது அவர் உறங்கும் நேரமாதலால் அதுவும் வயதானவர் என்பதால் அவரைத் தொந்தரவு செய்யாமல் வீட்டுக்குள் போனார் சொக்கப்பா . 

அங்கே வரிசையாக ஜமக்காளம் விரித்து பூ மாலைகளை கல்யாணப் பெண் வீட்டு மூதாதையோர் ஓவியங்களுக்குச் சூட்டி பூவும் சந்தனமும், வெற்றிலை பாக்கும் அவர்களுக்கு அளித்து மரியாதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.  

மாமண்டு. கிசுகிசுத்த குரலும் வெற்றிலை வாடையும் பின்னால் இருந்து அனுபவப்பட திரும்பிப் பார்த்தான். நாடிமுத்துக் கொத்தனார் வெற்றிலை மென்றுகொண்டு நின்றிருந்தார். அவர் ஜெருஸோப்பாவில் சகலமானவர்களுக்கும் பழக்கமானவர். 

வீட்டில் அவ்வப்போது சுவரில் பிளவு, தரையில் ஈரம் பூரித்தல், தூண் ஆடுவது, கதவு உப்பிப் போய் திறக்கவோ மூடவோ முடியாது போவது, மேற்கூரை உத்திரத்தில் தண்ணீர் கோர்த்துக்கொண்டு சொட்டுவது, வாசல்படிக்கட்டு வீட்டுக் கட்டுமானத்தை விட்டு விலகி நின்று வீட்டிற்கு வரவும் வீட்டிலிருந்து வெளியே போகவும் ஒரு பலகையை வீட்டு முகப்பில் இருந்து படிக்கட்டுக்குப் பாலமாகப் போட்டு சமாளிக்க வேண்டிவருவது இப்படி ஒவ்வொரு வீட்டிலும் எப்போதும் ஏதாவது ஒரு பழுது நீக்கப்பட வேண்டி இருக்கும். நாடிமுத்துக் கொத்தனார் தான் அதற்கு வரவேண்டும். வந்து வந்து எல்லாக் குடும்பத்துக்கும் ஊரோடு சிநேகிதர் ஆகிவிட்டார் அவர். 

ஊர் முழுக்க கிட்டத்தட்ட ஒரே உயரம், அகலம், நீளத்தில் வீடுகள் கட்டி வசித்து வருவதால், புதுசாகக் கட்ட கட்டடம் ஏதும் அநேகமாக இல்லை. கட்ட வேண்டி வந்தால் வெளியூர் கொத்தனார்கள் நாடிமுத்துக் கொத்தனார் தலைமை வகித்து சரி பார்க்க, மற்றவை போல் இன்னொரு கட்டிடத்தை வித்தியாசம் தெரியாதபடி கட்டிக் கொடுத்துவிட்டுப் போவார்கள். 

அவருடைய செல்வாக்கு ஜெருஸொப்பா அரண்மனை மாளிகைக்கும் நீண்டது. கோட்டை கொத்தளம் பழுது பார்ப்பது எல்லாம் அவரும் பத்து பேர் கொண்ட நாடிக் கொத்தனாரின் கட்டிட பராமரிப்பு குழுவும் தான். அவர்தான் பின்னால் இருந்து மாமண்டுவைக் கூப்பிட்டது.

சாப்பிடலியாப்பா? கொத்தனார் கேள்விக்கு, போய்க்கிட்டே இருக்கேன் அண்ணே என்றான் மாமண்டு. 

ஜெருஸோப்பா பற்றி பைரவ ஷெட்டி தாத்தன் தூங்கறபோது சந்தேகம் கேட்டாரே அவர் யார்? நாடிக் கொத்தனார் கேட்டார். 

நான் தான் மதுரை சொக்கப்பா. கட்டிடத் தளவாடக் கடை மதுரையில் நடத்திட்டு இருக்கேன். சொக்கப்பா தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார். 

காந்தமும் இரும்பும் போல் சொக்கப்பாவும், நாடிமுத்துவும் ஒரே வினாடியில் நட்பு பூண்டுவிட்டார்கள். மூத்தவர்  ஆராதனையைத் தொடர விட்டு, ஜமுக்காளத்தில் இருந்து எழுந்து வெளியே போனார்கள் இருவரும்.

ஏன் ஜெரஸோப்பாவில் உயரமான, பெரிய மாளிகை ரொம்பக் கொஞ்சமாக இருக்கு? சொக்கப்பா வீட்டுப் பின்னால் கடற்காற்றை அனுபவித்துக்கொண்டு கேட்டார். 

சொக்கன் ஐயா, நீங்க பார்த்திருப்பீங்க. இந்த இடத்துக்கு பத்தே கல் தூரத்திலே ஏழு உலகத்திலேயும் உயரத்திலிருந்து வேகமாக வெள்ளமாகக் கொட்டும் ஜோக் அருவி இருக்குன்னு. அதுனாலேயோ என்னமோ இங்கே மண்ணுலே ஈரப்பதம் மற்ற ஊரைவிட அதிகம். ஜெர்ஸோப்பா மண்ணு களிமண் பூமி. மண்வெட்டி பிடிச்சு வெட்டினால் ரெண்டு அடியிலே களர் களிமண் தட்டுப்பட்டுடும். வீடு கட்ட அடிமட்டப் பரப்பு கல்லால் எழுப்பறது களிமண் பரப்பிலே சிரமமானது. கட்டிடம் பெரிதாக ஆக ஆக, களிமண் பூமியில் அதை நிலைச்சு நிக்கச் செய்யறது கஷ்டம். ஆகவே வீடெல்லாம் சமாளிக்க முடிஞ்ச  உசரத்திலே பரப்பளவிலே கட்டும்போது பழக்கமான அளவு கல்லும் மணலும் காரையும் அடித்தளமாக்கிக் கட்டிக் கொடுத்துடுவோம். ஆகவே அதுதான் வீடெல்லாம் இங்கே பெரிய பெரிய மாளிகை இல்லாமல் ஒரே மாதிரி எளிய கட்டிடம்.

அப்படியா, அதுவும் சரிதான். ஆமா, அரண்மனை மாளிகை, சோமசுந்தரேஸ்வரர் கோவில் இப்படி மிகச்சில பெரிய கட்டிடங்கள் எப்படி வந்தது? விடாமல் கேட்டார் சொக்கப்பா.  

இந்த ஊரை அமைக்க முன்பு எங்கே எல்லாம் களிமண் குறைவாகவும் கப்பிக்கல்லும் உலர்ந்த மண்ணும் நிலத்தடியில் குறைவாக தண்ணீர் ஊறுவதும் இருக்குன்னு பார்த்து அங்கே அரண்மனை மாளிகை, கோவில் இப்படி கொஞ்சம் பெரிய பரந்த அடித்தளத்தோடு கட்டி வச்சிருக்கு. ஷராவதி ஆற்றங்கரை என்றாலும் பெரிய பாலங்கள் இங்கே இருக்காது. நிலத்தடி மண் குணம்தான் அதுக்குக் காரணம் என்றார் நாடிக் கொத்தனார். 

அப்புறம் இங்கே நிறைய வீடு, வசதி குறைவாக இருந்தாலும் ஒரே மாதிரி கட்டிடங்கள் நிறைய வந்திருக்கறதுக்கு என்ன காரணம் என்று கேட்டார் சொக்கப்பா.

முதல்லே இங்கே ஒரு முக்கியமான விஷயம் இங்கே குடி வந்தவங்க பெரும்பாலும், கிட்டத்தட்ட எல்லோருமே ஊக்கத் தொகை வாங்கி இங்கே வீடு கட்டியவங்க. ஜெருஸுப்பா தலைநகர்னு அறிவிச்சு வெற்றிடமாக ஊர் இருந்தால் நல்லா இருக்காதே. அதனாலே தான், ஊக்கத் தொகை கொடுத்து வீடு கட்டித் தந்து இங்கே ஜனத்தொகையை அதிகப்படுத்தறது. வீடு கட்டற செலவுலே எண்பது சதவிகிதம் வரை அரசு மானியமாகக் கொடுக்கறது.. அப்புறம் வீட்டுக்கு வரி கட்ட வேண்டாம். தண்ணீர், கழிவுநீர் அகற்றும் பணி எல்லாம் அரசே கவனித்துக் கொள்ளும்.

முழுக்க அரசாங்க செலவா? சொக்கப்பா அதிசயப்பட்டார்.

இங்கே வீடு கட்டி வருடம் குறைந்த பட்சமாக இருபத்தொரு நாள் கட்டாயமா இருந்தால் தான் சலுகை எல்லாம் அப்படீங்கறதாலே அவ்வளவு மட்டும் இருந்திட்டு, வீட்டை வெளி தேசத்தில் இருந்து வர்றவங்களுக்கு வாடகைக்கு விட்டுடறாங்க. இல்லேன்னா, அவங்களே வருஷக் கணக்கா இருந்து வாடகை, வரி எல்லாம் மிச்சப்படுத்தி ஓய்வு பெறும்போது பெரிய தொகையோடு போறங்க. அந்த அதிக வருமானத்திலே ஹொன்னாவரிலோ பட்கல்லிலோ சகல சௌகரியத்தோடும் பெரிய வீடாக கட்டிக்கிட்டு இருக்காங்க. 

பிரமுகர்கள் ஜெரஸோப்பாவிலே தங்கறது உண்டா? சொக்கப்பா கேட்டார்.

ஜெரஸூப்பாவில் மகாராணி மற்றும் ராஜ குடும்பம் தங்கறது அபூர்வம். மிர்ஜான் கோட்டையில் தான் அவங்க நிரந்தரமான இருப்பு. பிரதானி, அதிகாரிகளும் இங்கே வீடு வச்சிருக்காங்க. ஆனால், ஹொன்னவர்லே இருக்கறதுதான் அதிகம். இன்னொண்ணு மகாராணி மிர்ஜான் கோட்டையில் இருக்கறதால், ஹொன்னாவர்லே இருந்து அது கூப்பிடு தூரம் என்கிறதால் ராணியம்மா அவசரமாகக் கூப்பிட்டு விட்டா உடனே வந்துடலாம். ஆக ஜெர்ஸோப்பாவிலே ஒரு கட்டாயத்தின் பேர்லே பலரும் இருப்பாங்க. 

நாடிக் கொத்தனார் சரி, அப்புறம் சந்திக்கறேன் ஆராதனைக்குப் போய் வரணும் என்று சொக்கப்பாவுக்கு வணக்கம் சொல்லிப் புறப்பட்டார்.

எலுமிச்சைச் சாறு உறிஞ்சுக் கொண்டு பைரவ ஷெட்டி சாய்வு நாற்காலியில் இருந்து நாடி ஓய் நாடி என்று வீட்டு சந்தோஷ ஒலிகளுக்கு நடுவே சரியாகக் கேட்காமல் அழைத்தார். மூத்தோர் ஆராதனைக் கூட்டத்தில் மதுரைக்காரர் தலை தெரிந்தது. மாமண்டு அங்கே போய், பின்னால் இருந்து குனிந்தான்.

 ஐயா உங்களை பெரியவர் அழைக்கிறார் என்று சாய்வு நாற்காலி அருகே போகச் சொன்னான். அவர் திரும்பிப் பார்த்தார். அது வேறே யாரோ.

பெரியவர் பக்கத்தில் காலடிச் சத்தம் கேட்டதும் ஆயாசத்தோடு கண் விழித்துப் பார்த்தார். என்ன மகாமண்டலேஸ்வரரே, எலுமிச்சை சாறு கொண்டு வந்திருக்கீரா என்று புன்முறுவலோடு கேட்டார். 

இல்லே ஐயா, நீங்க தான் மதுரை ஐயாவை வந்துட்டு போக முடியுமான்னு கேட்கச் சொன்னீங்க. 

ஓ சொன்னேன் இல்லே, ஊமத்தை தின்ன மாதிரி அசர்ந்து தூங்கச் சொல்ற புத்தி. சீக்கிரம் தூங்கிடுவேன் போல. 

ஐயா நீங்க ஆயாசத்துலே கூட அவச்சொல் சொல்றவங்க இல்லியே கொஞ்சம் இருங்க மதுரைக்காரர் எங்கேன்னு பார்க்கறேன். மாமண்டு நகர்ந்தான். 

சொக்கப்பா பின்னால் சமையல் கட்டுக்கு வெகு அருகே ஒரு குரிச்சியை இழுத்துப் போட்டுக்கொண்டு. மதுரைக்கார ஐயா, பெரியவர் உங்களை தேடிக்கிட்டு இருக்கார் என்றான் மாமண்டு அவரிடம்.

கல்யாண மடையர் ஒருவர் பாத்திரத்தில் சுடச்சுட குழிப்பணியாரங்களை எடுத்து வந்து சாப்பிட்டு சொல்லுங்க ஐயா உப்பு உரைப்பு வெந்தது வேகாதது எல்லாம் என்றபடி மிளகுத் துவையலையும் கூடவே பரிமாறினார். முற்பகலில் மாமண்டு சொக்கப்பாவை மடையர் குழுவுக்கு, நல்ல சாப்பாட்டு ரசிகராக அறிமுகப்படுத்தியிருந்ததே அவருக்கு சமையல்கட்டில் செல்வாக்கு கிட்டிய காரணம் என்று மாமண்டுக்குப் புரிந்தது.

அத்தனை பெரிய மேஜையில் ஓரமாக சிறு தட்டு மேல் வைத்த வாழை இலைக் கீற்றில் சூடான குழியப்பங்கள் நாலும், மிளகுத் துவையலும் காத்திருந்தன. நிதானமாக உண்டு எல்லாம் நல்லா இருக்கு. காரம் கொஞ்சம் இனிப்பு சாயல்லே அது பரவாயில்லே என்றார் சொக்கப்பா. 

பாருங்க, இந்த வாரம் நாலாவது கல்யாண சமையல் வேலை. நாலு கல்யாண சமையல்லேயும் மிளகு காரமாகத்தான் இருக்கு. சாப்பிட ஆரம்பிச்சதும் இனிக்க ஆரம்பிச்சுடறது. காரணமே தெரியலே என்றபடி குழம்பி நிற்க, முதன்மை மடையர் துண்டுத் துணியால் முகத்தைத் துடைத்துக்கொண்டு வந்தார். அது ஒண்ணுமில்லே ஐயா, உலகத்திலேயே முதல் தரமான மிளகு விளையற பூமி இது. அது எல்லாம் ஏற்றுமதி ஆகி உள்ளூர் மக்களுக்கு தரம் குறைந்த மிளகுதான் கிடைக்கிறது. அதான் காரணம் என்றார்.

 பரவாயில்லே, பெரிசா ரசபேதம் எதுவும் இல்லை, இந்த மிளகும் உபயோகிக்கலாம் என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்து விட்டு உண்டு முடித்த சொக்கப்பாவை வீட்டு வாசலுக்கு மாமண்டு   செலுத்திப் போனான்.

பைரவ ஷெட்டியின் சாய்வு நாற்காலிக்கு அருகே இன்னும் இரண்டு முதியவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைத் தன் பள்ளிப்பருவ நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தினார் பைரவ ஷெட்டி சொக்கப்பாவிடம்.

 வீட்டு வாசல் பந்தல் முழுக்க எழுந்து தெருவில் பாதியை அடைத்துப் போட்டிருந்தது. ருத்ரப்ப ஷெட்டி வீதியில் எல்லோருக்கும் நண்பர் ஆனதால் யாருக்கும் எந்தப் புகாரும் இல்லை. எல்லார் வீட்டிலும் இன்னும் இரண்டு நாள் சமையல் இல்லை என்பதால் விருந்து எதிர்பார்ப்பு வேறு தெருவோடு படர்ந்திருந்தது.

பந்தலில் மணப்பெண்ணுக்கும் தோழிகளுக்கும் மாப்பிள்ளை வீட்டுப் பெண்களுக்கும் கையில் மருதாணி இட்டு விடப்பட்டுக் கொண்டிருந்தது. தபலாவும். குழலும் வீணையும் வாசிக்கும் பெண்களோடு குரல் இழைந்து பாடும் பெண்களும், பேசும் பெண்களுமாக அங்கே நிறையப் பெண்குரல். 

வாங்க, உள்ளே என் அறையில் உட்கார்ந்து பேசுவோம் என்று பைரவ ஷெட்டி தன் நண்பர் வட்டத்தை உள்ளே கூட்டிப் போனார். சொக்கப்பாவும், நாடிக் கொத்தனாரும் அடியார் கூட்டத்தில்.

நம்ம ஆளுதான் சொக்கப்பா. மதுரைக்காரர். ஜெரஸோப்பா மண்ணும் மக்களும் பற்றி அவர் இன்னும் ஆச்சரியப்பட்டு ஓயவே இல்லை என்றார் பைரவ ஷெட்டி நண்பர்களிடம். மருதாணி பூசு மருதாணி பூசு என்று ஒரே குரலாக பத்து பெண்கள் பாடிக் கொண்டிருந்தது பேச்சுக்கு இடைஞ்சலாக இருந்ததால் கதவைச் சார்த்தினார் பைரவ ஷெட்டி. 

தண்ணி இருக்கா? 

பாத்திரம் மட்டும் இருக்கு. தண்ணி?. 

மாமண்டுவைக் கூப்பிடு. 

அங்கே இங்கே வாய் பார்த்துக் கொண்டிருந்த மாமண்டு கிழவர்களின் உலகம் திருத்த வழிமுறை காணும் மாநாட்டுக்கு வந்து சேர்ந்தது இப்படியாகத்தான்.

ஜெரஸோப்பாவிலே மிளகு விவசாயம் பண்றவங்க, வியாபாரம் பண்றவங்க தவிர இன்னொரு பணக்காரரும் உண்டுபோல என்று நாடிக் கொத்தனாரைக் காட்டிச் சிரித்தார் சொக்கப்பா. 

எத்தனை வீடு எவ்வளவு பராமரிப்பு. பணமழை தினம் கொட்டும் இல்லையோ? 

எங்கே பணமழை? பராமரிப்பு வேலை தினம் தேவைப்படும். உண்மைதான். ஆனால் இலவச வீடு என்பதால் பராமரிப்பது பற்றி அக்கறை குறைவு. ரொம்ப தாங்க முடியாமல் போனால் தான் கூப்பிட்டு விடுவாங்க. 

நாடிக் கொத்தனார் சொன்னது உண்மைதான் என்றார் பைரவ ஷெட்டி.

ஆனால் ஒண்ணு. சில பிரமுகர் வீடுகள் உண்டு. பராமரிப்பு வேலை இருக்கான்னு நான் மாதம் ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு வரணும் என்றார் நாடி. 

ஆமா, மிளகு வியாபாரிகள், பெரும் விவசாயிகளோட வீடுகள். நாடிக்கொத்தனார் தொடர்ந்து சொன்னார்.

காரணம் என்னன்னா, மிளகு விவசாயம், வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் முதல் தர குடிமக்கள், மற்ற விவாசயம், தொழில் இவற்றில் ஈடுபட்டவர்கள் பின்நிரை. முன்நிரை மிளகு இனம் ஈட்டும் வருமானம் மூலம் வாழ்க்கை சௌகரியம் பெறுவோர் பின்நிரை எல்லாம். இப்படி அரசாங்கம் கருதுவதாக மற்றவர்கள் நினைக்கறது உண்மை. பைரவ ஷெட்டி சொன்னார்.

’மிளகு விவசாயத்துக்காக சரியான நாட்களில் மழை பெய்ததா, பயிரைப் பூச்சி அரிக்காமல் பாதுகாப்பு உண்டா, சர்வதேச அரங்கில் போன ஆண்டை விட இப்போது மிளகு அதிக விலை கொள்ளுமா?’- இப்படி அரசாங்கமும் மிளகு பற்றியே சதா கவலைப்பட்டுக் கொண்டு இருந்து, மற்றபடி மக்கள் நலமோடு இருக்க செயல்பாடு என்ன எடுக்கும்? பசதியும் கோவிலும் கட்டிக் கொடுத்து பசியைப் போக்க முடியாது என்று அரசுக்குத் தெரியாதா என்ன? கேட்கிறார்கள் இந்த ராஜதானியின் குடிமக்கள். உரக்கக் கேட்காவிட்டாலும் முணுமுணுப்பாவது கேட்கிறது. சேர்ந்து ஒலிக்கும் முணுமுணுப்பு அலைகளின் ஒலி போல் பொங்கி உயர்ந்து எப்போது கரை தொடுமோ. நாடிக் கொத்தனார் சொல்வதை ஈர்ப்போடு கேட்டுக்கொண்டிருந்தார் சொக்கப்பா.

மிளகு அரசி அரிசிக்கும் உப்புக்கும் புளிக்கும் ராகிக்கும் சர்க்கரைக்கும் அரசி இல்லையா என்று கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

இதை பைரவ ஷெட்டிவின் நண்பர் சொல்ல, மாமண்டு அவரைக் கைகூப்பி வணங்கியபடி வாசல் கதவைத் திறந்து வெளியே போனான். அவனைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.

அரசி என்ற பொது ஆளுமையின் மற்ற பரிமாணங்களும் வெளிவர வேண்டும் என்றார் சொக்கப்பா. இது வெளியே இருந்து பார்க்கிறவனின் கண்ணோட்டம் என்று கூட்டிச் சேர்த்துக் கொண்டார் அவர்.

ஐம்பது வருடத்துக்கு மேல் அரசாள்வது அதிகக் காலம் தான். ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று கருத்து. அவர் இல்லாமல் வேறு யார் உண்டு என்று பதில் கேள்வி. பைரவ ஷெட்டிவின் நெட்டை நண்பர், அவர் ஓய்வு பெற்ற உயர் படிப்புக் கலாசாலை அதிபராம் – கருத்து சொன்னார்.

நிலைமை சற்றுச் சீர்கேடு அடைந்திருக்கிறது என்றார் பைரவ ஷெட்டி அக்கம் பக்கம் பார்த்தபடி. அதுக்கு ஏன் சொல்லத் தயங்கணும். உண்மைதான் என்றார் கலாசாலை அதிபர்.

ஜெரஸூப்பா வீடுகளையும், ரதங்களையும் விற்று விற்று பொன் வாங்கப் பலரும் முந்துகிறார்கள். மகாராணி மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை, ஒரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை தான். பைரவ ஷெட்டி சொல்லும்போதே அங்கே இருந்த எல்லோரும் குறைந்தது பத்து பவுனாவது ஆளுக்கு ஆள் பணத்தையும் பொருளையும் விற்று வாங்கியது தெரிய வருகிறது. 

நான் வாங்கலே ஆனா என் மகன் ருத்ரப்ப ஷெட்டி வாங்கிட்டிருக்கான் என்றார் பைரவ ஷெட்டி. 

ஜெருஸுப்பா ராணுவ மேலதிகாரி பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என்று அறிமுகம் செய்யப்பட்ட உயரம் தாழ்ந்த இன்னொரு நண்பர் நிறைய யோசித்துப் பேசினார் – 

இங்கே ராணுவம் குறைந்த பட்ச பலத்தோடு இருப்பது ஒரு முக்கியமான குறைபாடு. நாளைக்கே ஏதாவது யுத்தம் மூண்டால், குடிமக்கள் உடனடியாக ராணுவத்தில் சேர்ந்து நாட்டைக் காக்க போர்முனைக்குப் போவார்கள் என்று எதிர்பார்ப்பது சரியாக இருக்காது இவர்களை நம்பி போருக்குப் போக முடியுமா என்பதே சந்தேகம் தான் என்றார் அவர். 

ராணுவத்துக்கு ஆள் கேட்டா, நான் என் சார்பில் நம்ம பட்டாளக்காரரை அனுப்பிடுவேன் என்றார் பைரவ ஷெட்டி பெருத்த சிரிப்புக்கு இடையே. வேணாம், நம்ம மாமண்டுவை அனுப்பிடலாம் என்றார்  நாடிக் கொத்தனார். கதவைத் திறந்து உள்ளே வந்த மாமண்டு அரையும் குறையுமாகக் காதில் கேட்டபடி, கல்யாண வேலை ஏகமா இருக்கு. வெளியே எங்கே போக என்றபோது சிரிப்பு மீண்டும்

போர் வராமல் இருக்கட்டும், நல்லதுதான். ஆனால், போர்த்துகீஸியர்களோடு ஒரேயடியாக நட்பு,  பில்ஜி, கேலடி அரசர்களோடு ஒரே மாதிரி நட்பு அல்லது மதரீதியாக கலவரம் உள்நாட்டில் ஏற்பட்டால், சகிப்புத் தன்மையோடு  நடப்பது, பாதிக்கப் பட்டவர்களுக்கு பிரார்த்தனை மண்டபம் ஏற்படுத்தித் தந்து சச்சரவை மறக்கடிப்பது  இதெல்லாம் எங்கே கொண்டு விடும்? எப்போதும் இவர்களை நம்பலாமா என்ற அடிப்படைக் கேள்வி எழும்புகிறது. மகாராணி இதற்கு பதில் சொல்லவில்லை. நிறைய வதந்திகள் எங்கே பார்த்தாலும் வெற்றுவெளியில் மிதக்கின்றன என்றார் பைரவ ஷெட்டி. வயதும், உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதும் அவரை மூச்சு வாங்க வைத்தது.

கேலடி அரசர் வெங்கடப்பர் சென்னாதேவி மேலே தனிப்பட்ட முறையில் சகோதர வாஞ்சை உள்ளவர். ராணிக்கு அறுபதாம் பிறந்தநாள் வந்தபோது தானே வாழ்த்துக் கவிதை எழுதி எடுத்து வந்து சபையிலே சொல்லி சென்னபைரதேவி ராணியை வாழ்த்தினார். அதனாலேயே அவருக்கு நல்ல மதிப்பு  கொடுக்க கடைத்தெருவிலே ஆளுண்டு என்றார் கலாசாலை அதிபர். கவிதை எழுதினால் நல்ல மனுஷரா இருக்க முடியாது என்றார் அதிகாரி நண்பர். கவிதை எழுதினாலும் நல்ல மனுஷரா இருக்க  முடியாது என்றார் கலாசாலை அதிபர். வாழ்த்து எல்லாம் கவிதையிலே சேர்த்தி இல்லை என்றார் பைரவ ஷெட்டி. சொக்கப்பா அது உண்மைதான் என ஆமோதித்தார்.

ஒரு நிமிட மௌனம். மாமண்டு, மருதாணி இருந்தா வாங்கிட்டு வாடா. வச்சுக்கலாம் என்று கலாசாலை அதிபர் விசாரித்தார். நிசமாக் கேக்கறீங்களா என்னை கிண்டல் பண்ணவா என்று ஏதும் புரியாமல் கேட்டான் மாமண்டு. 

சும்மாதாண்டா, ஆணுங்க பெண்ணுங்க யாரு உள்ளங்கையிலே மருதாணி வச்சாலும் உஷ்ணம் குறையும் என்றார் பைரவ ஷெட்டி.

வதந்தி ஏகப்பட்டது மிதந்துகிட்டிருக்கு – ராணி வாராணசிக்கு பக்தி பயணம் போகிறார். எனவே யாத்திரை முடிந்து திரும்பும்வரை ஏழெட்டு மாசம் இங்கே மிர்ஜான் கோட்டையில் பிரதானிகள் தவிர யாரும் இருக்கப் போவதில்லை.  

இது நல்லாத்தான் இருக்கு ஆனால் நம்பறாப்பல இல்லே என்றார் நாடிக் கொத்தனார் மௌனம் கலைத்து. காசியிலே ஸ்நானம் செய்து பிடிக்காத கத்திரிக்காயையோ, பாகல்காயையோ வேண்டாம்னு விட்டுட்டு வர்றது மாதிரி இவங்க அரசாட்சியை விட்டுட்டு வருவாங்களா என்று மாமண்டு கேட்க நினைத்தான்.   வாய் வரவில்லை.

இதைவிட இன்னும் அதிகமாக சுற்றி வரும் இன்னொரு வதந்தி இருக்கு என்றார் கலாசாலை ஓய்வுபெற்ற அதிபர். அது இதுதான், கேட்டிருப்பீங்க-  ராணி தில்லியில் முகலாயப் பேரரசர் அக்பரைச் சந்தித்து நேரடியாக அவர் பேராட்சிக்குள் ஜெரஸுப்பாவைக் கொண்டுவரக் கூடும். விஜயநகர அரசு செயலிழந்து கிடக்கிறதால் இது முக்கியம் பெறும். 

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி முகத்தில் கவலையின் ரேகைகள் தட்டுப்பட இதைச் சொல்லி முடிக்க, மீண்டும் நீண்ட மௌனம் அங்கே இறங்கியது.

அப்படி நடந்தால்  இந்தக் கோவில்களுக்கும் பசதிகளுக்கும் வீடுகளுக்கும், முக்கியமாக வைதீக, சமண மதத்தவர்கள் இருப்பிடங்களுக்கும் கேடு ஏற்பட்டு உயிர்கள் உதிர்ந்து போகலாம் என்பதாலே பல குடிமக்களும் இந்த ஊரை விட்டு எந்த நேரமும் குறைந்த பட்ச நஷ்டத்தோடு வெளியேறத் தயாராக இருக்கறாங்க.  மற்ற எல்லா நாடுகளிலும், வீடா நாடான்னு சர்ச்சை செய்து வீட்டையோ நாட்டையோ பாதுகாக்க முடிவெடுப்பாங்க. இங்கேயானால், வீடும் வேண்டாம், நாடும் வேண்டாம், நானும் என் குடும்பமும் சேர்த்து வச்ச தங்கத்தோடு தப்பிச்சுப் போகிறோம் அப்படீன்னு முடிவு எடுக்க வாய்ப்பு நிறைய இருக்கு. 

பைரவ ஷெட்டி கண்ணை மூடிக்கொண்டு வேண்டாம் வேண்டாம் என்பதுபோல் தலையாட்டினார். அவர் கரங்கள் நடுங்கி சமநிலைக்கு வந்தன.

நாடிக் கொத்தனார் வாசல் கதவை சார்த்திவிட்டு வந்து குரல் தாழ்த்திச் சொன்னார் – ராணி ஒரேயடியாக லிஸ்பன் போய் நிம்மதியாக தேவையான செல்வச் செழிப்பில் இறுதி காலத்தைக் கழிக்க, போர்த்துகீஸ் அரசு இந்துஸ்தானம் முழுவதையும் எடுத்துக் கொண்டு மிளகு அரசாக ஆளப் போகிறதாம். இது இன்னிக்கு காதுலே விழுந்த வதந்தி. வதந்திகளை நம்பாதீர்கள் என்று முடித்தார். அறையில் கரகோஷம் சிற்றொலி எழுப்பியது.

எல்லாரும் சிரித்தார்கள். கலாசாலை அதிபர் நாடிக் கொத்தனாரை ஆமோதித்தார் –   எதிர்காலத்துலே நானூறு வருஷத்துக்கு அப்புறம் ஜீவிக்கப் போகிற ஒருத்தரை போர்த்துகீஸ் சக்ரவர்த்தி ஜெரஸோப்பாவுக்கு அனுப்பினது இந்தக் காரியத்தை மேற்பார்வை பண்ணவாம். 

 ஓய்வுபெற்ற அதிகாரி மறுபடி சிரித்தார்-  எதிர்காலத்துலே நானூறு வருஷம் முந்தினவரா, நல்ல பகடி. இனிப்பு கடையிலே வேலை பார்க்கறான் அவனும் அவனோட கால்சராயும், மூக்கு மேலே கண்ணாடிச் சில்லும்.. சரியான கோட்டிக்காரன். யாரோ, எங்கேயிருந்து வந்தானோ தெரியலே. குரங்கன்.

அவர் சொல்லி முடிக்கும் முன் அந்த நண்பர்கள் கூட்டமே சிரிக்க, மாமண்டு மட்டும் சிரிக்கவில்லை.

இதை எல்லாம் ஏன் சொக்கப்பாவிடம் சொல்லணும்? மாமண்டுவுக்குப் புரியவில்லை. பைரவ ஷெட்டி, சோழியன் குடுமி என்னுது. சும்மா ஆட்டுவேனா என்றபடி மதுரை சொக்கப்பாவைக் கூர்ந்து பார்த்தார். 

வாசலில் காலடிச் சத்தம். பைரவ ஷெட்டிவின் அறையில் தீபம் வைக்க நடுவயதுப் பெண்மணிகள் வந்திருந்தார்கள். பெரியப்பா, நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது. வாங்க எல்லோரும். இங்கே உக்கார்ந்து உலகை நாளைக்கு சீர்திருத்திக்கலாம். பைரவஷெட்டியின் தம்பி மகள் சிரிக்காமல் சொன்னாள்

அவளுக்குப் பின் மல்லிகைப் பூவும், ஏலமும், ஐரோப்பிய நறுமணமும் பாக்கி வைத்து விட்டுப் போனாள். வரோம் இதோ வந்தாச்சு. மாமண்டு கதவை சார்த்துடா என்றார் பைரவ ஷெட்டி. சொக்கப்பாவிடம், சுருக்கமாகச் சொல்றேன் என்று தொடங்கினார் –

 நம் சமூகத்தின் சம்பிரதாய வழக்கம்படி இந்தக் கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை இங்கே மனைவி வீட்டிலேயே இருக்கக் கோரப்பட்டு அவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஜெரஸோப்பா நிலைமை கொஞ்சம் நிச்சயமில்லாம இருக்குன்னு நாம் இத்தனை நேரம் பேசிட்டு இருந்தோமே. அதை இன்னும் ஒரு மணி நேரத்திலே, சாயந்திரம் ஆறரைக்கு நிச்சயதார்த்தப் பத்திரிகை எழுதும்போது ஞாபகம் வச்சுக்கணும். மாப்பிள்ளை மருமக்கத்தாயம், அதான் துளுவில் அளியசந்தானா படி மனைவி வீட்டுலே   இங்கே ஜெரஸூப்பாவிலே தங்காமல் அவங்க வீட்டிலே மதுரையிலே மனைவியோடு தங்கி அவர் செய்துக்கிட்டிருக்கற பணியை தொடர்ந்து செய்யட்டும். ரெண்டு பேருக்குமே அதுதான் நல்லது. அதை நிச்சயதார்த்த பத்திரிகை எழுதும்போது சொக்கப்பா சொல்லட்டும், நாங்களும் ஆதரவு கொடுக்கறோம். பத்திரிகை இதேபடிக்கு மாற்றி எழுதினால் எல்லோருக்கும் சுபம் என்றார் பைரவ ஷெட்டி. 

நானும் சொல்லலாமா என்று கேட்டான் மாமண்டு. நீ இல்லாமலா, பெண் வீட்டுலே பெண் அப்பாவுக்கும் இந்தத் தாத்தாவுக்கும் அடுத்த செல்வாக்கு இருக்கப்பட்ட பெரிய ஆள் நீதானே என்றார் நாடிக் கொத்தனார். 

எல்லோரும் சிரித்தபடி அறையை விட்டு வெளியே வந்தார்கள். நெய்யும் இலுப்பை எண்ணெயும் இட்டு பஞ்சமுகம் திரி சார்த்தி குத்துவிளக்குகள் வீடு முழுக்க எரிந்து கோவில் போல் மஞ்சள் நிறமும், வாடையுமான சூழலை சிருஷ்டித்தன.  

சுக்குமல்லித் தண்ணியும் குழிப்பணியாரமும் தயார். சாப்பிட்டு தெம்பாக நிச்சயதார்த்தம் நடத்திக் கொடுக்கணும் என்று பெண் வீட்டு முக்கியப் பிரமுகரான மகாமண்டலேசுவரன் என்ற மாமண்டு சொன்னது கைதட்டி ஆரவாரமாக வரவேற்கப்பட்டது.  

மாமண்டுவும் சந்தோஷமாகக் கைதட்டினான்.  மிளகுராணி அரசாளாவிட்டால் எனக்கு என்ன ஆகும்? அவன் யோசிக்கத் தொடங்குவதற்கு முன், பந்தியில் பரிமாறு மண்டு என்று ருத்ரப்ப ஷெட்டி பின்னால் இருந்து அவசரப்படுத்தினார். இங்கே இஞ்சித் துவையல் வரல்லே. ரெண்டு குழிப்பணியாரம் போடுப்பா. 

மிளகுராணி கிடக்கட்டும். குழிப்பணியாரம் நிறைத்த பிரம்புக் கூடையோடு மாமண்டு நடந்தான் .

****

Series Navigation<< மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று  மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.