பூனை சொன்ன ரகசியங்கள்

படுக்கையறையில் இருந்து வெளியே வந்த யசோதா முன் நகர மனமின்றி சுவரில் சாய்ந்து நின்று முரளியின் பின்தலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஹாலின் நடுவே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த முரளி தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். முன்னால் நடந்த யசோதா அவன் தலைமுடியில் கைவைத்து வருடினாள், “ஏன்டா சீக்கிரம் முழிச்சுட்டே?” 

“தூக்கம் செட் ஆகல மா,” என்றான் முரளி. 

“அமெரிக்கா கிளம்பும்வரை இதையே சொல்லிட்டு இருப்பியா?”

“இன்னும் ஒரு நாள்தானே?”

“உடம்பு என்ன ஆகும்?”

முரளி தொலைக்காட்சியிலிருந்து பார்வையைத் திருப்பி யசோதாவைப் பார்த்து சிரித்தான். “பாத்துக்கறேன்மா.” யசோதா அவன் கன்னத்தில் கைவைத்தாள். முரளி அவள் கையை உள்ளங்கையால் தட்டிக்கொடுத்தான், “அம்மா, ஃபிரெஷ்ஷா ஒரு காப்பி.”

யசோதா ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கினாள். மின்விளக்கை அணைத்து வீட்டுக்கதவைத் திறந்தாள். முரளி கண்களைக் கசக்கிக்கொண்டு வெளியே பார்த்தான். யசோதா கதவின் பிடியில் கைவைத்து வாசலில் நின்றிருந்தாள். அவள் ஆக்கிரமித்தது போக மீதமிருந்த வானத்தில் தூரத்துச் சூரியன் தெரிய யசோதாவின் காலருகே வாசற்படியில் ஒரு பூனை அமர்ந்திருந்தது. சூரியக்கிரணங்கள் போர்த்திய பொன்னிறச் சால்வையை அணிந்திருந்த பூனை எழுந்து வீட்டுக்குள் வந்துநின்று உடலை சிலிர்த்துக் கொண்டது. 

தங்கத்துகள்களாய் தூசு காற்றில் பறந்துமுடித்தபின் பூனையின் வெள்ளை ரோமங்கள் முரளியின் கண்ணுக்குத் தெரிந்தது. பூனையின் நீண்ட உடல் மாசற்ற வெள்ளை, தலையுச்சியிலும் காதுகளிலும் கிரீடம்போல செம்மஞ்சள் நிறம், காலவெளியில் புரண்ட சால்வையைப் போலிருந்த வாலில் தங்க நிறம். பூனை தலைதூக்கி முரளியைப் பார்த்து “ஆவ்” என்றது. அதன் ஒரு கண்விழி சாம்பல் நிறமாகவும் மற்றொன்று தேன்நிறமாகவும் இருந்தது. இது பூனையா, வெள்ளைப் புலிக்குட்டியா என்று முரளி வியந்தான். 

“ஏம்மா, பூனையெல்லாம் மியாவ்னுதானே கத்தும்?”

“காரியம் ஆகணும்னா எல்லாம் அம்மான்னுதான் கத்தும்,” என்ற யசோதா பூனையின் தலையைத் தடவி, “அப்படித்தானேடா?” என்று கேட்டாள். பூனை சுகுமாரைப் பார்த்தது. “ஆவ் ஆவ்,” என்று கத்திக்கொண்டு ஹாலை வலம் வந்தவிட்டு யசோதாவின் கால்களைத் தடவிக்கொண்டு நின்றது. 

“இதை எங்கிருந்து புடிச்சே?”

“பூனைகளை எங்கேயும் புடிச்சு வெச்சுக்க முடியாது. அதுகள் தானா நம்மைத் தேடி வரும், தானா விலகிப் போகும். பூனைகளுக்கு எஜமானர்களே இல்லை. ஒரு நாள் காலையில வீட்டுக்கதவைத் திறந்து பார்த்தேன், இன்னைக்கு மாதிரியே அன்னைக்கும் இவன் நின்னுட்டு இருந்தான்.“

யசோதா ஃபிரிட்ஜிலிருந்து பால்பாக்கெட்டை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். பூனை அவள் பின்னாலேயே சென்றது. ஹாலில் அமர்ந்திருந்தபடியே முரளி சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான். பூனை அடுப்புத்திட்டில் குதித்தேறி கேஸ் அடுப்பின் அருகே முட்டிபோட்டு அமர்ந்தது. யசோதா பாக்கெட்டைப் பிரித்து பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பைப்  பற்றவைப்பதை வேடிக்கை பார்த்தது. அடுப்பு எரிந்ததும் மற்றுமொரு ஆவ்.

முரளி கேட்டான், “ஏம்மா, பூனை காய்ச்சின பால்தான் குடிக்குமா?”

யசோதா பூனையைத் தடவிக்கொண்டே சொன்னாள், “ராத்திரியெல்லாம் பனியில சுத்தியிருப்பான்.” 

பால் பொங்கியது. யசோதா ஒரு கிளாஸ் பாலை பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றினாள். 

“மா, பால்ல தண்ணி ஊத்துவியா?” 

பூனை முரளியைப் பார்த்தது. அவன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். “பசித்த பூனைக்கு பால் ஊத்த அவனுக்கு எவ்வளவு யோசனை பாரு?” என்று பூனை யசோதாவைப் பார்த்து பேசியது.

“உஷ்” என்று உதட்டில் விரலை வைத்துக்காட்டிய யசோதா திரும்பி முரளியைப் பார்த்தாள். 

“பாவம் பசிபோல, இப்படிக் கத்துது,” என்ற முரளி சிரித்தான். 

“சத்தமாப் பேசாதே, அவனுக்கு கேட்டுடப் போகுது,” என்று யசோதா கிசுகிசுத்தாள். 

கண்களை மூடி காலால் காதைச் சொறிந்துகொண்டே பூனை சொன்னது, “நீ பேசறதோட முழு அர்த்தமே அவனுக்குப் புரியாது, என் குரல் புரிஞ்சுடுமா?”

“பூனையை அடுக்களையில் விடாத மா. சாப்பாட்டுல முடி விழுந்துடும்.”

“என் சாப்பாட்டுல மண்ணு விழிந்துடும்டா. பேச்சைப் பாரு,” என்ற பூனை கீழே குதித்து முரளியைப் பார்த்து முறைத்துக்கொண்டே ஹாலுக்கு நடந்தது. 

“தினமும் இந்நேரம் வந்திடுது இல்ல? அழகா இருக்கு,” என்ற முரளி எழுந்து பூனையை நெருங்க முயன்றான். 

“யசோதா…” என்று கத்திய பூனை திரும்பி சமையலறைக்குள் ஓடியது. யசோதா பாலை சூடாற்றி பாத்திரத்தில் எடுத்து வந்தாள். பூனை “ஆவ் ஆவ்” என்று அவள் சேலையைத் தடவிக்கொண்டே நடந்தது. வாசற்படியில் பாத்திரத்தை வைத்ததும் பால் பாத்திரத்துக்குள் அவசரமாகத் தலையை விட்டது.

“இப்பல்லாம் பூனைக்கு அப்பறம்தான் நான், இல்லம்மா?”

திரும்பி அவனைப் பார்த்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்த யசோதா ஜன்னல் வெளியே பார்த்தாள், “நீ இங்கயே இருக்கேன்னு சொல்லு. பூனையை மறந்துடறேன்.”

முரளி தொலைக்காட்சியில் அலைவரிசையை மாற்றினான். “சும்மா சொன்னேன்மா… காபி ஆச்சா,” 

யசோதா சிரித்துக்கொண்டாள். “நானும் சும்மாதாம்பா சொன்னேன்… டிகாஷன் இறங்கிட்டு இருக்கு,” 

பூனை பாலைக் குடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தது. தாவிக்குதித்து சோபாவின் மீதேறி நடுவில் சென்று படுத்தது. முரளியை ஒருமுறை பார்த்துவிட்டு திரும்பி தொலைக்காட்சியைப் பார்த்தது. முரளிக்கு காபி கலந்து கொடுத்துவிட்டு அறைக்குச் சென்ற யசோதா நைட்டியிலிருந்து சேலைக்கு மாறி வெளியே வரும்வரை முரளி பூனையையும் பூனை முரளியையும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டார்கள். 

யசோதா ஃபிரிட்ஜிலிருந்து ரொட்டித்துண்டுகளை எடுத்து ஓயர்கூடையில் வைத்துக்கொண்டாள். “வாக்கிங் போயிட்டு காய்கறி வாங்கிட்டு வந்திடறேன்” என்று முரளியிடம் சொல்லிவிட்டு வாசலுக்குச் சென்றாள். தரைக்குத் தாவி சோம்பல் முறித்த பூனை அவள் பின்னே சென்றது. யசோதா முரளிக்கு தலையசைத்துவிட்டு   கதவை மூடினாள். 

“சீக்கிரம் யசோதா,” என்ற பூனை கூடையின் மேல் முன்னங்கால்களைத் தூக்கி வைத்தது. கூடையைத் திறந்து காட்டியதும் உள்ளே குதித்தது. யசோதா கேட்டை மூடிவிட்டு சாலையில் இறங்கினாள். தூரத்தில் படுத்திருந்த தெருநாய் எழுந்து ஓடி வந்தது. பூ வேலைப்பாடு செய்யப்பட்ட பிளாஸ்டிக் கூடையின் துளைகளை முகர்ந்தது. உள்ளே இருந்த பூனை, ”வந்துட்டான், வந்துட்டான்” என்று கத்தியது. 

யசோதாவிடம் நகர்ந்த நாய் முன்னங்கால்களைத் தூக்கி அவள் உடல்மேல் வைத்து அணைத்துக்கொண்டு விறுவிறுவென வாலை ஆட்டியது. யசோதா கூடைக்குள் இருந்த ரொட்டித் துண்டுகளை எடுத்து நீட்டினாள். நாய் அதைக் கவ்வி தரையில் வைத்து மண்டியிட்டு அமர்ந்து சாப்பிட்டது. யசோதா குனிந்து நின்று நாயிடம் பேசினாள். பூனை கூடையின் கைப்பிடியில் ஒரு காலை வைத்து எக்கி நின்று பார்த்தது. 

ரொட்டியை சாப்பிட்டு முடித்த நாய் எழுந்து நின்று உடலை உதறிக்கொண்டு கூடையைப் பார்த்து குரைத்தது. சத்தமாக சிரித்த யசோதா நாயிடம் ஏதோ சொன்னாள். நாய் தலையையும் வாலையும் ஆட்டிவிட்டு திரும்பி ஓடியது. யசோதா நடக்க ஆரம்பித்தாள். கூடைக்குள் திரும்பி நின்று நாயைப் பார்த்த பூனை கேட்டது, “ஒரு பூனையை நிம்மதியா ரோட்டுல நடக்க விடறாங்களா பாரு? அவனுக்கு என்ன வேணுமாம்?” 

“இன்னும் பசிக்குதாம். கூடைக்குள்ளிருந்து உன்னையெடுத்து வெளிய விடச்சொல்லி கேக்கறான்,” என்றாள் யசோதா.

“எனக்கொன்னும் பயம் இல்லை. நாய் கடிச்சு செத்தாலும் வீர மரணம்தான். பூனைகளுக்குன்னு தனியா சொர்க்கம் இருக்கு, நான் அங்க போயிடுவேன். நாளைக்கு முரளி கிளம்பிடுவான். நானும் போயிட்டேன்னா நந்தாகூட நீ தனியா இருக்கணும். யோசிச்சுக்கோ,” என்ற பூனை கூடைக்குள் படுத்துக்கொண்டது. 

யசோதா அம்பேத்கர் சாலையிலிருந்து மெயின் ரோட்டுக்குத் திரும்பினாள். அவிலா கான்வென்ட்டுக்கு முன்னால் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. சாலை நடுவே கார்களை நிறுத்தி பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளுக்கு வண்டிக்குள் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கையசைத்துக் கொண்டிருந்தார்கள். யசோதா கூடையைத் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டு நடந்தாள்.

சாலையோரம் வந்து நின்ற இருசக்கர வாகனத்திலிருந்து ஒரு பெண்குழந்தை இறங்கி தோள்பையை மாட்டிக்கொண்டு ஓட்டிவந்த பெண்மணிக்கு டாட்டா காட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்தாள். இருசக்கர வாகனம் நகர்ந்தது. வாசலுக்குள் நுழைந்த குழந்தை திரும்பிப் பார்த்தாள். அவள் விழிகள் அலைபாய்ந்து முகம் இறுகியது. அந்நேரம் யசோதா பள்ளியின் வாசல் முன்னால் நடந்தாள். குழந்தை யசோதாவைப் பார்த்து கையசைத்தாள். யசோதாவும் குழந்தையைப் பார்த்து சிரித்து கையசைத்தாள். குழந்தை திரும்பி பள்ளிக்குள் ஓடியது. யசோதா சாலையில் ஒதுங்கி நின்று பள்ளிக்குள் செல்லும் குழந்தைகளைப் பார்த்தபடி சிறிதுநேரம் நின்றாள். 

பூனை ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு படுத்தது. யசோதா மீண்டும் நடந்து அழகேசன் சாலை மாநகராட்சி பூங்காவுக்குள் நுழைந்து மரங்களடர்ந்த மூலையில் சிமெண்ட் பெஞ்சில் கூடையை வைக்கும்வரை பூனை உறங்கிக்கொண்டிருந்தது. யசோதா பெஞ்சில் அமர்ந்து பூனையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். பாதியுறக்கத்தில் இருந்த பூனை விழித்துப்பார்த்துவிட்டு கால்களை குறுக்கிக்கொண்டு கண்மூடியது. சில நிமிடங்களுக்குப் பின், திடீரென எழுந்து “மழை வருது,” என்று சொல்லி வானத்தைப் பார்த்தது. யசோதா கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள். அவள் முகத்தை ஆழமாகப் பார்த்த பூனை அவள் மடியில் தன்னைப் புதைத்துக் கொண்டது. 

யசோதா பூனையின் பிடறியிலும் அடிக்கழுத்திலும் தடவினாள். அவள் ஸ்பரிசத்தின் சூட்டை கண்மூடி ரசித்த பூனை கேட்டது, “பேசிப் பார்க்க வேண்டியதுதானே?” 

பதிலுக்கு காத்திருந்த பூனை பாதிக்கண்களைத் திறந்தது. அவள் ஆலமரக்கிளையின் மேலிருந்த பறவைக்கூட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். “யசோதா,” என்று பூனை கத்தியதும் அவள் திரும்பினாள். “என்ன?”

“ஏன்டா அப்பாம்மாவை தனியா விட்டுட்டு போறேன்னு முரளிகிட்ட கேளு.”

“அதையே அவன் திருப்பி என்கிட்ட கேட்டா?”

“என்ன உளர்ற?”

யசோதா பறவைக்கூட்டைப் பார்த்தபடி சொன்னாள், “அன்னைக்கு முரளி எப்படி அழுதான் தெரியுமா?”

பூனை எழுந்து பெஞ்சுக்குத் தாவியது. “என்னைக்கு?”

யசோதாவின் குரல் கம்மியது. “குழந்தையை அடுத்தவங்க தூக்கக்கூட விடமாட்டேன் தெரியுமா? அப்படிப் பார்த்துப்பார்த்து வளர்த்தின நான் அவனை தூக்கிட்டுப்போய் ஸ்கூல்ல தனியா விட்டப்ப முரளிக்கு எப்படி இருந்திருக்கும்?”

“எப்போ, நீ என்ன பேசற?”

“எல்.கே.ஜி சேர்த்தினப்போ. ஸ்கூல் வாசலைத் தாண்டும்போதே தோள்ல சாய்ஞ்சு அப்படி அழுதான்.” யசோதா விசும்பினாள். 

பூனைக் கண்களை விரித்து வியப்புடன் பார்த்தது, “யசோதா, நல்லாதானே இருக்கே? வீட்டுக்குப் போறவழியில நாயெல்லாம் இருக்கும்மா. தனியா போக முடியாது.”

“டீச்சர் சொன்னதைக் கேட்டு முரளியைத் திரும்பிக்கூட பார்க்காம நடந்தேன். அவன் அழுகை கேட்டுட்டே இருந்துது. அப்போ அவன் குரல்கேட்டு நான் நிக்கலயே,  இப்போ எப்படி அவனைக் குறைசொல்ல முடியும்?”

“யசோதா, நானும் அக்கா தங்கைகள் நடுவுல வளர்ந்தவன்தான். எங்க அம்மா ஒரே பிரசவத்துல நாலு குட்டிகள் போட்டப்போ நான் பக்கத்துல நின்னு பாத்துருக்கேன். நானே சொல்லறேன், நீ பண்றது ரொம்பவே அதிகம்.” 

யசோதாவின் கண்ணீர் தேங்கிய கண்களின் ஓரத்தில் சிறு புன்னகை தோன்றி மறைந்தது. பூனை அவள் மடியில் தாவிக் குதித்தது. கண்ணை மூடித் தூங்க ஆரம்பிப்பதற்குள் மறுபடியும் உடலில் ஒருதுளி நீர் விழுந்தது. சலித்துக்கொண்டு எழுந்த பூனை, “இப்போ என்ன, உனக்கு ஸ்கூல்ல இருக்கும் முரளியைப் பார்க்கணுமா?” என்று  கேட்டது. 

யசோதா தரையைப் பார்த்து ஏதோ நினைத்து தலையை ஆட்டினாள். பூனை முன்னங்காலால் அவள் கன்னத்தைத் தொட்டது. “என்ன?” என்று கேட்டு யசோதா திரும்பிப் பார்த்தாள். 

“என் வாலைப் பிடிச்சுக்கோ” என்றது பூனை.

“எதுக்கு?”

“முரளியை ஸ்கூல்ல சேர்த்தின நாளுக்குப் போகணும் அவ்வளவுதானே? என் வாலைப் பிடிச்சு இடப்புறம் திருப்பு, போயிடலாம்.”  

யசோதா புன்னகைத்தாள். “நான் அழுவல, போதுமா. விளையாடாதே.”

“விளையாட்டெல்லாம் இல்லை. நான் சொல்லப்போற ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது, சரியா? சத்தியம் பண்ணு.”

யசோதா தலையாட்டி பூனையின் கால்பாதத்தில் கை வைத்தாள். பூனை சொன்னது, “ஆலமரத்து வேர் முன்னிருந்து பின்னே நகரும்போதும், கயிற்றூஞ்சல் கால்விரல்களால் நெட்டித் தள்ளப்படும்போதும், பிரியப்பட்ட பூனையின் வால் வலப்புறத்திலிருந்து இடப்புறம் ஆடும்போதும், காலம் பின்நோக்கிச் செல்ல ஆரம்பிக்கிறது.”

யசோதா வாய்விட்டு சிரித்து பூனையை கழுத்தைப் பிடித்து தூக்கியணைத்து முத்தம் கொடுத்தாள், “அழகுக் குட்டி.” 

“எவ்வளவு பெரிய ரகசியத்தை சொல்லியிருக்கேன், என்னை பொம்மை மாதிரி தூக்கி முத்தமா கொடுக்கற?” என்ற பூனை கால்களை காற்றில் ஆட்டியது. யசோதா கீழே இறக்கிவிட்டதும் காலால் முகத்தைத் துடைத்துக்கொண்டது. 

“என் உடம்பைத் தடவி கையை தரையில உதறு.”

புசுபுசு மயிர்களினூடே விரல்களை விட்டு பூனையின் முதுகைத் தடவிய யசோதா தரையைப் பார்த்து கையை உதறினாள்.சில வெள்ளைநிற மயிர்கள் கீழே விழுந்தன. தரையில் விழுந்த மயிர்கள் உயிர்பெற்றுக் கொண்டதுபோல தன்னைத்தானே நீட்டித்து அடுத்திருந்த ரோமத்துடன் தன்னை பிணைத்துக்கொண்டது. யசோதா கையை முகத்துக்கு முன்னால் விரித்துப் பார்த்துவிட்டு தரையைப் பார்த்தாள். அவள் கண்கள் மலர்ந்து உதடுகள் விரிந்தது. புழுபோல நெளித்த மயிர்கோத்து சதுர வடிவமாகி கணநேரத்தில் எட்டடி நீள வெள்ளைப் போர்வையாக உருமாறியது. பூனை சிமெண்ட் பெஞ்சிலிருந்து தரைக்குத் தாவி விரிந்திருந்த போர்வையின்மேல் வட்டமாக ஒருமுறை நடந்தது. யசோதாவைப் பார்த்து சொன்னது, “போர்வையை பெஞ்சுல விரிச்சு அதுமேல உக்காரு,” 

உறைந்து அமர்ந்திருந்த யசோதா தலையைச் சிலுப்பிக்கொண்டு எழுந்தாள்.  போர்வையை கையிலெடுத்து கன்னத்தில் வைத்துப் பார்த்தாள். துணி பஷ்மினா சால்வைபோல மிருதுவாக இருந்தது, போர்வையை பெஞ்சில் விரித்துவிட்டு அதன்மேல் அமரத் தயங்கினாள். 

“என்ன ஆச்சு?”

“இவ்வளவு வெள்ளையா இருக்கே, மேல உக்காரணுமான்னு யோசிக்கறேன்.” 

“குட்டி முரளியைப் பார்க்கணுமா வேணாமா?”

யசோதா சடாரென போர்வைமேல் அமர்ந்தாள். பூனை அவள் மடியில் தாவியமர்ந்து கண்களை மூடிக்கொண்டு, “கண்ணை மூடிட்டு அந்த நாளையும் இடத்தையும் நினைச்சுட்டு என் வாலை நகர்த்து,” என்று சொன்னது.  

யசோதா கண்களை மூடி பூனையின் வாலை வலப்புறத்தில் இருந்து இடப்புறமாக அசைத்தாள். ஓரிரு நிமிடங்கள் காத்திருந்தபின் கண்களைத் திறந்தாள். தென்றல் காற்று வீசியது. தூரத்து வாகைமரத்தில் ஒளிந்திருந்த பெண்குயில் “க்றுக் கக் கக்” என்று கத்தியது. ஒரு காகம் அலகுகளில் எதையோ தூக்கிக்கொண்டு ஆலமரப் பறவைக்கூட்டை நோக்கிப் பறந்தது. 

“நீ நினைச்ச நாளுக்குப் போயாச்சு,” என்றது பூனை. 

யசோதா ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். பூங்காவின் எதிர்பக்கத்தில் பெஞ்சில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்துகொண்டிருந்த பெண், அவளருகே பந்து விளையாடும் சிறுவன், இன்னொரு பெஞ்சில் பள்ளியுடைக் காதலர்கள், ஆளில்லா நடைபாதை, பூங்கா வாயிலில் தூங்கும் காவலாளி. யசோதா பெருமூச்சுடன் கேட்டாள், “எல்லாம் அப்படியேதானே இருக்கு?” 

“உலகமே உனக்காக தலைகீழா மாறிடுமா என்ன? நீ நினைச்ச நாளுக்குப்  போயாச்சு, இன்னும் நினைச்ச இடத்துக்குப் போகலையே? கால் கட்டைவிரலை தரையில் அழுத்து, பறக்க ஆரம்பிப்போம்.”

யசோதா ஆர்வமாகக் கேட்டாள், “ஃப்ளைட்ல போகறமாதிரி வானத்துல பறப்போமா.”

“அதோ, அந்தப் பையன் வீசும் பந்துபோல இங்கிருந்து மேலே போய் நினைச்ச இடத்துல கீழே இறங்குவோம்,” பூனை உடலை சிலிர்த்துக்கொண்டு தொடர்ந்தது, “தயாரா? என்னை நல்லா பிடிச்சுக்கோ.”

யசோதா பூனையின் உடலை இறுகப் பற்றிக்கொண்டு கண்களை மூடி கால் கட்டைவிரலை தரையில் அழுத்தினாள். 

“ஏய்… கேக்க மறந்துட்டேன், போற இடத்துல நாய் இல்லையே,” என்று பூனை கத்தியது. யசோதா கண்திறந்த நொடியில் போர்வை காற்றில் உயர ஆரம்பித்தது. வான்நோக்கிப் பறக்கும் ராக்கெட்டின் மேல் அமர்ந்திருப்பதுபோல உணர்ந்த யசோதா மேலே பார்த்தாள். காற்றின் ஒலி காதையடைத்தது. மஞ்சள் ஒளி நீளக்கோடுகளாய் தரைநோக்கி விழுந்தது. மேல்நோக்கி உயர்ந்துகொண்டே இருந்த போர்வை மேகக்கூட்டத்துக்கு நடுவே சென்றதும் ஒரு நொடி நின்றது. யசோதா கண்  சிமிட்டினாள். கண்திறக்கும்போது போர்வை கீழே விழ ஆரம்பித்தது. புவியீர்ப்பு விசையோடு சேர்த்து மேலே சென்றதன் இருமடங்கு வேகத்துடன் கீழிறங்கிய போர்வை தரையைத் தொடாமல் இருபதடி உயரத்தில் குலுங்கலுடன் நின்று காற்றில் மிதந்தது. யசோதா கால்விரலைத் தரையில் அழுத்தும்போது உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விட்டாள். கண்திறந்து பார்த்தபோது அனைத்தும் மங்கலாகத் தெரிந்தது. “யசோதா,” என்று கீச்சுக் குரல் கேட்டது. கண்களைக் கசக்கிக் கொண்டாள். 

அவள் கரங்களிலிருந்து விடுபட்ட பூனை “சதிகாரி, இப்படியா உடம்பை நெரிப்பே? வானத்துலயே செத்துருப்பேன்,” என்று சொல்லி பாதத்தால் தன் உடலைத் தடவிக்கொண்டது. 

“பயந்துட்டேன்” என்ற யசோதா சேலையைச் சரிசெய்து தலைமுடியை ஒதுக்கிக் கொண்டாள். “நாம எங்க இருக்கோம்?” 

மாடியிலிருந்து தரைத்தளத்தைப் பார்ப்பதுபோல யசோதாவுக்கு போர்வைக்குக் கீழே ஒரு வகுப்பறையும் சேலை கட்டிய முதுகும் தெரிந்தது. முதுகுக்குரிய ஆசிரியை நின்றிருந்த மேடைக்கு முன்னால் இரு அடுக்குகளாய் ஆறு வட்டமேஜைகளும் மேஜைகளைச் சுற்றி குட்டி ஸ்டூல்களும் போடப்பட்டிருந்தது. ஆணும் பெண்ணுமாய் இருபது குழந்தைகள் ஸ்டூலில் அமர்ந்து ஆசிரியையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லாக் குழந்தையின் கையிலும், சிலரின் உதட்டோரத்திலும், சிலரின் மஞ்சள் சட்டை, பச்சை டிரவுசரிலும் சாக்லேட் ஒட்டியிருந்தது. அவர்கள் மழலைக் கண்களில் வழிந்ததுபோக மீதமிருந்த கண்ணீர் மீண்டும் கரையை உடைக்கக் காத்துக்கொண்டிருந்தது. 

யசோதா பூனையிடம் சொன்னாள், “அவங்கதான் விமலா மிஸ். முரளியோட எல்.கே.ஜீ. டீச்சர்.”

“அப்போ சரியான இடத்துக்கு வந்துட்டோம்.”

“இது டவுன்ஹால்ல இருக்கும் பாத்திமா ஸ்கூல். முரளி இங்கதான் எல்.கே.ஜீ. படிச்சான்.”

“எங்க அவன்,” என்ற பூனை வகுப்பறையிலிருந்த மழலைமுகங்களைக்  கவனித்தது.  

   இடப்பக்க மேஜையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் அம்மா என்று கத்திவிட்டு அழுதுகொண்டே எழுந்து நின்றான். விமலா மிஸ் அவனருகே சென்றாள். சிறுவனின் கன்னத்தில் ஒட்டியிருந்த சாக்லேட்டை அவன் சட்டையில் குத்தியிருத்த கைக்குட்டையால் துடைத்து, “இன்னொரு சாக்லேட் வேணுமா” என்று கேட்டாள். தலையைக் குலுக்கிக்கொண்டு அழுத சிறுவன் பக்கத்து ஸ்டூலில் அமர்ந்திருந்த சிறுமியைக் கைகாட்டினான். விமலா அந்தச் சிறுமியைப் பார்த்து, “நீங்க என்ன பண்ணீங்க?” என்று கேட்டாள். சிறுமி எழுந்து நின்று சப்பிக்கொண்டிருந்த நீளமான சாக்லேட்டை வாயிலிருந்து எடுத்துவிட்டு அழுதுகொண்டிருந்த சிறுவனின் கன்னத்தைக் கடித்தாள். “அம்ம்மா” என்று சிறுவன் கையையும் காலையும்  உதறிக்கொண்டு அழுதான். விலகி நின்ற சிறுமி விமலாவைப் பார்த்து சிரித்தாள். சிறுவனின் கன்னத்தில் மறுபடியும் சாக்லேட் கறை. 

யசோதாவின் மடியில் படுத்து வேடிக்கை பார்த்த பூனை சிரித்துக்கொண்டே அவள் முகத்தைப் பார்த்தது. யசோதாவின் கண்கள் சுருங்கி உதடு பிதுங்கி தாடை நடுங்கிக் கொண்டிருந்தது. பூனை வகுப்பறையைப் பார்த்தது. 

மெலிந்த உடலில் நூற்புடவை உடுத்தி, நீளமான பொட்டு வைத்து, அடர்ந்த தலைமுடியை ஒற்றை ஜடையாக்கி மல்லிகை சூடியிருந்த யசோதா வகுப்பறைக்குள் நுழைந்தாள். முகத்தில் பூசியிருந்த மஞ்சள் அவள் சிரிக்கும் கன்னத்துக்கு மினுமினுப்பைக் கொடுத்தது. யசோதாவின் இடுப்பில் முரளி அமர்ந்திருந்தான். 

பூனை திரும்பி இப்போதிருக்கும் யசோதாவைப் பார்த்தது. இவள் சோர்ந்த உடலில் சோகமும் சதையும் கூடியிருந்தது. பாதி நரைத்த தலைமுடி எலிவால்போல சுருங்கியிருந்தது. கன்னத்துக் கோடுகள் முகத்தில் ஆழம் பார்க்க, தாடையில் ஒரு முடி முளைக்க ஆரம்பித்திருந்தது. 

வகுப்பறைக்குள் நுழைந்த யசோதா மேடைக்குச் சென்று விமலாவோடு  பேசினாள். முரளி ஆட்காட்டிவிரலை வாயில் வைத்து சப்பியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். யசோதா முரளியைத் தூக்கிச்சென்று பின்னடுக்கு  இடப்புற மேஜையில் அமர்த்தினாள். முரளியின் அருகே அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் எதற்காகவோ காத்திருப்பதுபோல முரளியைப் பார்த்தார்கள். யசோதா நிமிர்ந்து நின்றதும் அவள் சேலை முந்தானையை முரளி பிடித்துக்கொண்டான். முரளியை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு யசோதா நடந்தாள். 

சாவி கொடுத்ததுபோல முரளி அழ ஆரம்பித்தான். விமலா அவனருகே சென்று ஆறுதலாய் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அருகேயிருந்த இரு சிறுவர்களும் முரளியுடன் சேர்ந்து அழுதார்கள். அவர்கள் மேலும் ஒரு கை வைத்த விமலா மற்ற குழந்தைகளைப் பார்த்தாள். எல்லாக் குழந்தைகளின் உதடும் துடிக்க ஆரம்பித்தது. விமலா, “பிளீஸ், நீங்க கிளம்புங்க,” என்று முரளியைப் பார்த்துக்கொண்டு நிற்கும் யசோதாவிடம் சொன்னாள். யசோதா நடக்க ஆரம்பித்தாள். முரளி கையை நீட்டி முழுக் குரலையும் திறந்து, “அம்மா…” என்று அலறிக்கொண்டு அழுதான். யசோதா அவனைத் திரும்பிப் பார்த்தாள். முரளியின் கண்களில் கண்ணீரும், மூக்கில் சளியும், வாயில் எச்சிலும் வடிந்து கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்ககூடாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே யசோதா முன்னால் நடந்தாள். “மா..” என்று கத்திய முரளி விமலாவின் அணைப்பிலிருந்து விடுபட்டு யசோதாவைப் பிடித்துவிடும் முயற்சியாய் இரு கைகளையும் முன்னால் நீட்டினான். வாசல்வரை சென்றிருந்த யசோதா புடவை முந்தானை இன்னும் முரளியின் கைக்குள் இருப்பதை உணர்ந்தாள். இது என்ன வரம்? புடவை ஏன் இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது? குழந்தையின் கையில் மாட்டிய தாயின் சேலை இவ்வளவு தூரம் நீளுமா என்ன?

வாசலில் நின்ற யசோதா தோளைப் பிடித்துக்கொண்டு திரும்பிப் பார்த்தாள். முரளி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இத்தனை நாளாய் மார்பின் பக்கத்திலேயே வைத்திருந்தவள் தன்னை வெட்டியெடுத்து கீழே வைத்துவிட்டுச் செல்வதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்த முரளி அவள் திரும்பி வந்து தன்னைத் தூக்கியணைத்து முத்தமிட்டுவிட மாட்டாளா என்ற ஏக்கத்துடன் பார்த்தான். யசோதா அவனிடம் கண்களால் மன்னிப்புக் கேட்டு புடவையைப் பிடித்து மெல்ல இழுத்தாள். முரளி ஏமாற்றத்துடன், ஆற்றாமையுடன், ஒரு விசும்பலுடன் பிடியைத் தளர்த்தினான். அவன் கைவிட்ட பிறகும் புடவை கீழே நழுவாமல் சுண்டுவிரலில் மாட்டிக்கொண்டு தொங்கியது. இழுத்தால் அவன் விரலுக்கு வலிக்குமோ என்று யசோதா யோசித்தாள். விமலா மிஸ் முரளியின் விரலில் சிக்கியிருந்த புடவையை விலக்கினாள். உள்ளிருக்கும் குழந்தைகளையும் முரளியையும் ஒருமுறை பார்த்துவிட்டு யசோதா வகுப்பறையை விட்டு வெளியேறினாள். அவள் மறைவதைப் பார்த்துகொண்டிருந்த முரளி புதிதாக அழ ஆரம்பித்தான். 

“போறேன், முரளிகூடவே போறேன். வீடு, புருஷன், எதுவும் வேண்டாம். ஸ்கூல் முடியும் வரைக்கும் நான் முரளிகூடவே இருக்கப் போறேன்,” என்று கத்திக்கொண்டே யசோதா போர்வையின் ஓரத்துக்கு நகர்ந்து கீழே காலை வைக்க முயற்சித்தாள். “ஏன் என்னால கீழே போக முடியல?”

பூனை மெதுவாகச் சொன்னது, “யசோதா, நம்மால் பழசைப் பார்க்கத்தான் முடியும், மாத்த முடியாது.”

முரளி விக்கி விக்கி அழுவதைப் பார்த்த மற்ற குழந்தைகள் தங்கள் அழுகைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முரளியை வேடிக்கை பார்த்தார்கள். கண்களை மூடி மூச்சையடக்கி அழுத முரளி திடீரென அமைதியானான். பூனை எழுந்து நின்று பார்த்தது. விமலா ஓடிச்சென்று முரளியின் முதுகில் தட்டியபின் அவன் மீண்டும் மூச்சுவிட்டான். பூனை சாய்ந்தமர்ந்தது. “மறுபடியும் மழை பெய்யுது,” என்று சொல்லி யசோதாவைப் பார்த்தது. “மழை நிக்காம பெய்யத்தான் செய்யும்,” என்ற யசோதா பூனையின் கழுத்தைத் தடவினாள். 

வகுப்பறைக்குள் செம்மண் நிற சேலையணிந்த ஒரு ஆசிரியை நுழைந்தாள். அவள் தலைக்கு மேலே பல வண்ணங்களில், பல வடிவங்களில் பலூன்கள். பலூன்களோடு பிணைக்கப்பட்ட கயிறுகளை கொத்தாகத் தன் கையில் பிடித்திருந்த ஆசிரியை வகுப்பறையின் நடுவே நின்றாள். குழந்தைகளைப் பார்த்து சிரித்துவிட்டு வித்தை காட்டுவதுபோல கையை விரித்து ஊதினாள். கயிறுகள் விடுபட்டு பலூன்கள் வகுப்பின் மேற்சுவரோடு ஒட்டிக்கொண்டது. வாய்திறந்து வேடிக்கை பார்த்த குழந்தைகள் ஓடிச்சென்று ஆசிரியையைச் சுற்றி நின்றார்கள். அவள் ஏதோ சொன்னதும் அத்தனை குழந்தைகள் முகத்திலும் சிரிப்பு. முன்னால் நின்ற முரளியிடம் ஆசிரியை ஒரு சாக்லேட்டை நீட்டினாள். அவன் சிரிப்புடன் கைநீட்டி சாக்லேட்டை வாங்கிக்கொண்டான். அதற்குள் முரளியின் இரு கன்னங்களிலும் சாக்லேட் கறை. 

“கிளம்பலாம்,” என்றாள் யசோதா. 

“ஏன்?” என்றது பூனை. 

“போதும், போகலாம். அவன் அழறதை நிறுத்திட்டானே?”

“ஆமாம், அவனுக்குத்தான் சமாதான சாக்லேட் கிடைச்சுடுச்சே?” என்ற பூனை எழுந்து நின்று தலையை சிலுப்பிக்கொண்டது. 

“ஆமாமாம், அம்மா எதுக்கு, சாக்லேட் போதுமே,” யசோதா விரல்களால் முகத்தை துடைத்துக்கொண்டாள். “திரும்பிப் போக என்ன செய்யணும்?”

“கண்ணை அழுத்தி மூடி எதுவும் யோசிக்காம முப்பதுவரை எண்ணினா நிகழ்காலத்துக்குப் போயிடலாம். ஏன் யசோதா, இந்த ரகசியமும் உனக்குத்  தெரியாதா?”

“என்னது?”

“உலகத்திலிருக்கும் ஒவ்வொருத்தரோட சோகத்துக்கும், கோபத்துக்கும், ஏமாற்றத்துக்கும், அழுகைக்கும் பக்கத்துலயே எங்காவது அவங்களுக்கான சமாதான சாக்லேட்டும் இருக்கத்தான் செய்யும்.” 

யசோதா பதில் பேசாமல் வகுப்பறையைப் பார்த்தாள். சிரித்துக்கொண்டு நிற்கும் முரளியின் குழந்தைமுகத்தை மீண்டும் மனதில் பதித்துக்கொண்டாள். மடியில் இருக்கும் பூனையைப் பிடித்துக்கொண்டு கண்களை மூடினாள். கண்திறந்தபோது பூங்கா பெஞ்சில் அமர்ந்திருந்தாள். 

வாகைமரத்துப் பெண்குயிலின், “க்றுக் கக் கக்” சத்தத்துக்குத் துணையாக ஆண்குயிலின் அழகான, “கூவ் கூவ்” கேட்டது. ஆலமரப் பறவைக்கூட்டில் நின்றிருந்த காகம் எல்லாக் குஞ்சுகளுக்கும் உணவளித்துக் கொண்டிருந்தது. 

யசோதா எழுந்து பெஞ்சின் அடியில் வைத்திருந்த கூடையை எடுத்தாள். பூனை கூடைக்குள் குதித்தது. யசோதா வீடுநோக்கி நடந்தாள். தெருமுக்கு மளிகைக்கடையில் பீன்ஸ் வாங்கி கூடைக்குள் வைத்தாள். பூனை உள்ளே ஒதுங்கியமர்ந்தது. யசோதா வீட்டு கேட்டைத் திறக்கும்போது பூனை சொன்னது, “இப்போ பால் போதும், ஆனா நாளைக்கு கண்டிப்பா மீன் வேணும்.” 

“தரேன், தரேன். அமைதியா இரு” என்ற யசோதா வீட்டுக்கதவை திறந்தாள். முரளியும் நந்தாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து சிரித்த யசோதா, “எப்போ எந்திரிச்சீங்க?” என்று கேட்டாள். 

“ஏம்மா இவ்வளவு நேரம், நானே அப்பாவுக்கு காபி போட்டுக் குடுத்துட்டேன்,” என்றான் முரளி. நந்தா சேர் அடியிலிருந்து காலி கிளாஸை எடுத்து யசோதாவிடம் கொடுத்தார். யசோதா அதை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். ஜன்னலைத் திறந்துவிட்டு பால்பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினாள். பூனை கூடையிலிருந்து அடுப்புத் திட்டுக்கு தாவியது. 

ஹாலில் இருந்த முரளி கத்தினான், ”அம்மா, இங்க தனியா இருக்க வேண்டாம், ரெண்டு பேரும் அமெரிக்கா வந்திடுங்கன்னு எவ்வளவு நாளா சொல்லிட்டு இருக்கேன். இப்போ அப்பா சரின்னு சொல்லிட்டார். நீ என்ன சொல்லற?”

பூனை ஒரு காலை முன்னால் வைத்து யசோதாவைப் பார்த்தது. யசோதா சின்ன சிரிப்புடன் தலைகுலுக்கி பூனையின் பிடறியை மிருதுவாகத் தடவினாள். ஜன்னலுக்கு வெளியே பொழியும் மழை தோட்டத்தில் இருக்கும் அத்தனை செடிகளையும் நனைத்தது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.