குறுங்கவிதைகள்- கு.அழகர்சாமி

(1)

ஒலி
ஓய்வெடுக்கிறது
மவுனத்தில்.

(2)

எப்படி செத்தது
அந் நொடி
அகாலத்தில்?

(3)

எவ்வளவோ சாதுவாய் என்னை நான் உணர்கிறேன்
என்னோடு நான் உருட்டிக் கொண்டு வரும் சைக்கிள்
என்னை உருட்டிக் கொண்டு வரும் போது-

(4)

முடிவு செய்ய
முடியவில்லையாய், அதனால்
முழு வசீகரமாய்த் தொடுவானம்.

(5)

தன் சொல்லைத்தேடிக் கொள்ளாத அர்த்தமாய்-
வியாபகமாகி வெளி-

(6)

தொடங்க அவரவர்க்கு தொடங்குகிறது
முடிய அவரவர்க்கு முடிகிறது
அதே தெரு ஆயாசமில்லாமல்-

(7)

பாதி திறந்த கதவு-
உள்ளேயும் வெளியேயும்
இல்லாத சங்கடத்தில் வீடு-

(8)

உன் தைரியம்-
உன் பயம் எறிந்து
திரும்பிய பந்து.

(9)

மரங்களிடை மரங்கள் அடர்ந்து-
மறைக்க அல்ல, உண்மை
தெரியக் காடாய்.

(10)

கிலி தீரத்
துன்பக் கலி 
தீரும்.

 (11)

முற்றத்தில் அலையும் அச்சுறுத்தி
முகம் தெரியா அரவம் என்
மனம் உருவாக்கிக் கொள்ள உருவம்-

(12)

வானளந்து பறவை விடும் 
நிழற் பட்டம் தரையில் பறக்கும் –
வெயில் விடு நூலில்லா  நூலில்.

(13)

எதிர்பார்க்கவில்லை நான்- 
திருப்பத்தில் தெரு  தான் திரும்பும் வரை,
தான் திரும்புவதை எதிர்பாராததை.

(14)

இராவைச் சமாளிக்கிறது காகம்- 
கரையாமல் சமாளிக்கும் வரை-
உறக்கமென்று.

(15)

அந்திவானில் வியூகமாய்ப் பறக்கின்றன வெண்பறவைகள்-
வழிமறித்து காலத்தில் என்னை மட்டும் சாலையில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.