ஏங்குதல்

தமிழாக்கம் தி.இரா.மீனா  

என் பாட்டி செத்துப் போனாள்…
வெகுகாலம் நான் அவளை அணைத்துக் கிடந்த போதிலும்
இன்னும் சில காலம் அவளுடன் இருந்திருக்க எனக்கு ஆசை,
ஒவ்வொரு முறை நான் அவளிடமிருந்து விடைபெறும் போதும்
அவளுடைய கண்ணிமைகளில் தொற்றிக் கொண்டிருந்த
கண்ணீர்த் துளிகள் போல.

அவளுடன் வெகுகாலம் உரையாடிய போதிலும்
இன்னும் சில காலம் உரையாடிக் கொண்டிருந்திருக்க எனக்கு ஆசை,
ஏற்கெனவே தான் பெருக்கி முடித்திருந்த
வீட்டின் முற்றத்தையும், சுற்றுப் புறத்தையும்
இரண்டு மூன்று முறைகளுக்கும் மேலாய் பாட்டி
பெருக்கிக் கொண்டிருந்ததைப் போல.

நான் பல முறை அவளை முத்தமிட்டிருந்த போதிலும்
இன்னும் சிலகாலம் அவளை முத்தமிட்டுக் கொண்டிருக்க எனக்கு ஆசை,
ஏற்கெனவே மூச்சுமுட்ட பாயசம் குடித்திருக்கிறேன் என்று சொன்னாலும்
கரண்டி நிறைய அவள் எனக்கு பாயசம் தந்ததைப் போல.

நான் அவளை பல புகைப்படங்கள்,வீடியோக்கள் எடுத்திருந்த போதிலும்
இன்னும் சில எடுத்திருக்கலாமென்று எனக்கு ஆசை,
பாட்டியின் இயற்கையான சிரிப்பு, அழுகை, இருமலை
கேமரா சரியாக நகலாக்கவில்லை என்றுணர்கிறேன்.

இன்னும் சில காலம் அவளோடு உட்கார்ந்திருந்து
அவள் ஞாபகங்களை நகலாக்கியிருக்க எனக்கு ஆசை,
தண்ணீரில் சிறிது நேரம் ஊறினால் மட்டுமே
வெட்ட முடிகிற பாட்டியின் நகங்களைப் போல.

இன்னுமொரு தடவை பார்க்க ,கேட்க எனக்கு ஆசை,
வெற்றிலையை அவள் மென்று ,சவைத்து துப்புவதையும்,
தன் வெற்றிலைச் சுருளை சிறிய குழவியில் தயாரிப்பதையும்,
சில வார்த்தைகள், வசவு –வார்த்தைகள், சொலவடைகள்,முகபாவங்கள்
பாட்டியைத் தவிர வேறு யாராலும் பயன்படுத்த முடியாதவை.

பாட்டியைப் பற்றி நான் நிறைய எழுதியிருந்தாலும்
அவளைப் பற்றி இன்னொரு கவிதை எழுதலாமென நினைக்கி்றேன்,
பல காலம் முன்னே செத்துப் போன மனிதர்களைப் பற்றி
அவள் கதைக்கிற கதைகளைப் போல.

             -----------------------------------------------

நன்றி : Indian Literature , Sahitya Akademi’s Biomonthly Journal May –June 2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.