உபநதிகள் – 15

This entry is part 15 of 17 in the series உபநதிகள்

மாலை எல்லாருக்கும் பிடித்தமான மசாலா தோசை. மாவு, மசாலா மற்றும் சட்னி ஆந்திரா அட்ராக்ஷனில் இருந்து. கங்கா வார்க்க சூடான தேசையை மற்றவர் சாப்பிட்டதும் மானஸா,  

“மாம்! நான் வார்க்கிறேன், நீ உட்கார்!” 

கடைசி தோசையை அம்மாவின் தட்டில்வைத்து, 

“இன்னிக்கி ஒரு வேடிக்கை” என்று சிரித்த முகம் காட்டினாள். 

ஆனால், குரலில் முக்கியமான செய்தி சொல்லப்போகும் தொனி. கங்காவுடன் அப்பாவும் அலெக்கும் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். 

“எலிமென்டரி ஸ்கூல் முன்னாடி பெர்னி ப்ரபோஸ் பண்ணினான்.”  

அலெக் எழுந்து ஒரு முகத்திரை அணிந்தான். பால் புட்டி மூடியின் பிளாஸ்டிக் வளையத்தை எடுத்துவந்து உள்ளங்கையில் வைத்து அக்காவிடம் நீட்டி மண்டியிட்டான்.  

“என் இரண்டு மாத சம்பளத்தில் வாங்கியது. வில் யு மேர்ரி மீ? மானஸா!” என்றான். 

மானஸா அதை அழகு பார்த்து, 

“யோசித்து முடிவு சொல்றேன்.”  

“யோசிக்க என்ன இருக்கு?”  

“ஏன்?”  

“நீ கொஞ்சம், கொஞ்சம் என்ன நிறையவே பாஸ்ஸி.”  

“உன்னை எப்போது நான் அதிகாரம் செய்தேன்?”   

“குற்றமாகச் சொல்லவில்லை. சிலர் வழிகாட்டப் பிறந்தவர்கள். மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுவதில் தவறு இல்லை. பெர்னி இரண்டாவது ரகம். ஒரே ரகத்தில் இருவர் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்த முடியாது” என்று அனுபவப்பட்டவன் போல் சொன்னான். 

கங்கா இருவரையும் மாறிமாறிப்பார்த்தாள். யூடா இலக்கியப்பட்டறையில் கிடைத்த ஏமாற்றத்திற்குப் பின் மானஸா ஒரு கூட்டுக்குள் தன்னை அடைத்துக்கொண்டதாக அவள் நினைத்தாள். அவளுடைய புத்திசாலித்தனத்தையும் எழுத்துத்திறனையும் பார்த்துப் பயந்து பையன்கள் அவளை நெருங்காமலும் இருக்கலாம். சில மாதப் பரிச்சயம் என்றாலும் அவள் அறிந்தவரையில் பெர்னி அவளை ஆராதிப்பான் என்று தோன்றியது. 

“நீ பல கோணங்களில் யோசித்து முடிவு எடுப்பாய்னு தெரியும். ஆனா இளம் வயது பந்தத்தை ஒரு குறைபாடா நினைக்காதே! என்னுடன் படித்த கவிதாவும் வடிவேலுவும் இருபது வயசில காதலிச்சு அடுத்த வருஷமே கல்யாணம் பண்ணிண்டாங்க. ஷிகாகோ, அட்லான்ட்டா, டெல்லி, ஹைத்ராபாத் என்று இடம் மாறினாலும் இன்னி வரைக்கும் அன்னியோன்னியமா இருக்காங்க.”  

“தாங்க்ஸ், மாம்!”  

பகீரத், ‘நான் ஒரு மகளை இழக்கவில்லை, ஒரு வளர்ந்த மகனைப் பெறுகிறேன்’ என்று சமாதானம் செய்துகொண்டான். அவன் பெர்னியாக இருந்தால் கவலைக்கு இடமில்லை. இருந்தாலும்,

“இப்போதைக்கு ஒரு ஒப்பந்தம். திருமணத்தைப் பிறகு யோசிக்கலாம்.” 

மானஸா தன் அறையின் தனிமையில் நிதானமாக யோசித்தாள். 

பெர்னியின் திருமண விருப்பத்தை குடும்பத்தில் மற்றவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதது மானஸாவுக்கு ஆச்சரியமாக இல்லை. அவள் அப்பாவும் அம்மாவும் மறுத்து எதுவும் சொல்லாவிட்டாலும் அவர்கள் வார்த்தைகளின் தொனியில், ‘இது ஒரு தாற்காலிகக் கவர்ச்சி, ஆறு மாதம் நீடித்தால் பார்த்துக்கொள்ளலாம்.’ அவர்களின் சந்தேகம் எதிர்பார்க்கக் கூடியது தான். பதின் பருவத்திலேயே இன்னும் ஒரு ஆண்டு இருக்கும்போது மானஸாவும் பெர்னியும் கல்யாணத்துக்குப் பதில் தொழில் பாதையை யோசிக்க வேண்டும். ஒருவேளை பட்டப்படிப்பு முடித்து பெர்னி பிசினெஸ் ஸ்கூலிலும், அவள் மருத்துவத்திலும் சேர்ந்திருந்தால் திருமண வாழ்வு, தொழிற்கல்வி இரண்டிலும் கவனம் வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களேகூட திருமண ஏற்பாடுகள் தொடங்கி இருப்பார்கள். வாழ்க்கையின் அந்தக் கட்டம் கூட அவர்கள் இன்னும் போகவில்லை. 

பெர்னிக்கும் அவன் பெற்றோர்களுக்கும் நெருக்கம் குறைவு. அவன் தந்தை வர்த்தகப் பயணங்களில் நேரம் செலவழித்ததாலும், அவன் தாயின் இடமாற்றங்களால் வந்த அல்கஹால் பிரச்சினையாலும் அவர்களிடம், ‘மானஸாவின் சம்மதம் கேட்டேன்’ என்று சொல்லி இருக்கமாட்டான். சொன்னாலும் அவர்கள், ‘ஸோ பி இட்!’ என்று கைகழுவி விடுவார்கள். 

படுக்கையில் படுத்தபோது மனதின் ஆழத்தில் சலசலப்பு. மற்றவர்கள் இருக்கட்டும்! நீ? 

‘ட்யுக்’கில் இருந்து கடைசியாக வந்த தகவல்: வரும் கல்வி ஆண்டில் பல கட்டுப்பாடுகளுடன் நேரடி வகுப்புகள் நடத்தப்படும், வசிக்கும் இடங்கள் திறக்கப்படும். கல்லூரி வாழ்க்கை மீண்டும் தொடரும்போது அவர்கள் இன்னும் நெருங்கி, பிறகு திருமணத்தை யோசிக்கலாம். அவன் அவளைப் பார்த்து பொறாமையோ எரிச்சலோ படமாட்டான் என்பது நீண்ட உறவுக்கு நல்ல அறிகுறி.  

பெர்னிக்கு அவசரப்பட்டு கேட்டுவிட்டோமோ என்ற யோசனை எழலாம். அவனே  கல்யாணப்பேச்சை மறுபடி எடுக்காத வரையில் அவளும் அதைப் பெரிதாக நினைக்கப்போவது இல்லை. 

மனம் அமைதியடைந்து அடங்கியது. 

றுநாள் காலை.  

வீட்டிற்குப் பின்னால் பகீரத் அலெக்கின் தலைமயிரை பார்ப்பதற்கு சுமாராக வெட்டினான். பிறகு அலெக் அப்பாவின் தலையை கிட்டத்தட்ட மொட்டை அடித்தான். அதைப் பார்த்து,  

“ஆஃபீஸில் எல்லாருக்கும் ப்ளாஸ்டிக் தடுப்பு போட்டாச்சு. அடுத்த வாரத்திலேர்ந்து நேரில் வேலைக்குப் போகணும்” என்று தாறுமாறாக வளர்ந்த தன் கூந்தலில் கங்கா விரல்களை ஓட்டினாள். 

“நான் உனக்கு வெட்டிவிடட்டுமா?” என்றான் அலெக். 

“ஐயியோ! கத்திரியைப் பக்கத்தில கொண்டுவராதே!” என்று கத்தினாள்.  

மானஸா அலைபேசியுடன் பேசி,

“சைகான் ஹேர் சலானில் எல்லாரையும் செக் பண்ணித்தான் உள்ளே விடறாங்களாம்.” 

“நீ கூட கொஞ்சம் ட்ரிம் பண்ணிண்டா நன்னா இருக்கும்.”   

அழகு நிலையத்தின் கதவு அன்றைய தினத்துக்குத் திறந்ததும் காத்திருந்த அம்மாவும் பெண்ணும் முகத்திரை அணிந்து, வெப்பமானிக்கு நெற்றியைக் காட்டிவிட்டு நுழைந்தார்கள். 

வரவேற்பில் பள்ளிக்கூடத் தோழி கரோலைன்.

“நீ முதலில் போம்மா!” 

காத்திருக்கும் இடத்தில் மானஸா உட்காரப் போவதற்குள்,  

“மானஸா! ஏழ்மையை குறைப்பது பற்றிய உன் அறிக்கையின் சுருக்கம் படித்தேன். அதுவே பிரமாதம். முழுவதையும் எனக்கு அனுப்ப முடியுமா?”  

புகழ்ச்சியை ஏற்று கரோலைன் கேட்டதைச் செய்ய மானஸா சம்மதிக்குமுன் மனதில் துருத்திய கேள்வி.  

“அது சரி, உனக்கு சுருக்கம் எப்படி கிடைத்தது?” 

“நேற்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் டாக்டர் வெட்டியின் சம்மர் ப்ராஜெக்ட் பற்றி ஒரு விவரமான தகவல். அதன் இறுதியில் உன் கட்டுரையின் சுருக்கம். அவருக்கு நீ எழுதியது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதை இன்று கோமாளி ராஜ் வாரன் இன்னும் குத்திக்கிளறி இருக்கிறான்.” 

“இன்டரெஸ்டிங். அதை எழுதியபோது அதற்கு எதிர்வினை எதிர்பார்த்தேன். இத்தனை வேகமாக அல்ல” என்றாள் அக்கறை இல்லாத குரலில். 

“உன் அனுமதி இல்லாமல் டாக்டர் வெட்டி ஊடகத்திற்கு அதை வெளியிட்டது சரியா?”  

“என் அப்பாவைத்தான் கேட்க வேண்டும்.”  

வாசற்கதவு திறந்து ஒருத்தி நுழைந்ததும் உரையாடல் நின்றது. 


த டாம்ப்ராம்ஸ் ஆர் கமிங் 

த டாம்ப்ராம்ஸ் ஆர் கமிங் 

ராஜ் வாரன் 

வால் ஸ்ட்ரீட் ஜர்னல்

பொதுவாக அமெரிக்க சுதந்திரப் பொருளாதாரத்திலும் கிறித்துவ மதத்திலும் நம்பிக்கை வைத்த மாணவர்களைக் கல்லூரிப் பேராசிரியர்கள் கம்யூனிசத்திற்கும், இறைதேடல் இல்லாத ஆதிக்குடிகள் பண்பாட்டிற்கும் இழுக்கும் அநியாயத்தை நான் பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டி இருக்கிறேன். இப்போது அதற்கு எதிர் வழியில் ஒரு இழுப்பு.

டாக்டர் வெட்டி ஒரு பொருளியல் சாதனையாளர். ஏழ்மையைக் குறைக்க அவர் வகுத்த வழிகள் நம் வரிப்பணத்தில் கைவைக்காமல் சின்சின்னாட்டியின் பல வேற்று நிற மக்களை உயர்த்தி இருக்கின்றன. அவருக்குப் பொருளாதார நோபல் பரிசு எழுதிவைத்தாகி விட்டது. அவரை ட்யுக் பல்கலைக்கழகம் சகல மரியாதைகளுடன் அழைத்ததில் அதிசயம் இல்லை. அப்படிப்பட்ட ஒருவரின் ஆராய்ச்சி முடிவுகளைப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாத ஒருத்தி குறை சொல்கிறாள். அவள் நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன, இலக்கண ஆங்கிலத்தைத் தவிர வேறொரு திறமையும் இல்லாத, ‘டாம்ப்ராம்’ மானஸா.  

ஏழ்மைக்கு எதிரான மானஸாவின் வழிகள் பயனற்றவை என வரலாற்றின் குப்பைக்கூடையில் எறியப்பட்டவை. டாக்டர் வெட்டி கொடுத்த உதவித்தொகையில் அவற்றைத் தேடியெடுத்து வார்த்தை வர்ணம் பூசியிருக்கிறாள்.

1. பணக்காரர்களின் வருமானத்துக்கு வரம்பு. 

மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட மனித மூலதனம். அதை வைத்து அவர் உருவாக்கும் செல்வம் அவருக்கே உரியது. இந்த அடிப்படை பொருளாதார விதியை மாற்றுவது இயற்கைக்கு எதிரானது. 

2. வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ஒவ்வொருவருக்கும் மாதம் ஆயிரம் டாலர். 

ஆயிரம் டாலருக்கு சமமான உற்பத்தியைச் செய்யாத பலருக்கு அத்தொகையை வழங்க அரசாங்கம் டாலரை அச்சிட வேண்டும். அப்போது, மில்டன் ஃப்ரீட்மன் சொன்னதுபோல் பணத்தின் மதிப்பு குறைந்து எல்லாரையும் ஏழைகள் ஆக்கும். நாங்கள் உயர் மத்திய மட்டத்தினர் என்று சொல்லிக்கொள்ள சமுதாயத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.   

சப்வே விடுதிகளில் சான்ட்விச் சாப்பிடுவதை வாடிக்கைகள் விரும்பியதால் தான் அது இருபதாயிரத்துக்கும் அதிகமான சங்கிலித்தொடராக வளர்ந்திருக்கிறது. இருபத்தியைந்து ஆண்டுகளாக ஆந்திரா அட்ராக்ஷன் மூன்று  இடங்களில் மட்டும் தானா? அதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு அவ்வளவுதான்.

ஒரு கோடைகால ப்ராஜெக்ட்டுக்கு வந்த மானஸாவின் அறிக்கையை யாருக்கும் எட்டாத கணினி மூலையில் தள்ளாமல் ஊடகத்துக்கு வெளிப்படுத்தி நமக்குக் கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்த டாக்டர் வெட்டிக்கு நன்றி! 


வீட்டிற்கு வந்ததும் மானஸா மறக்காமல் கரோலைனுக்கு முழு அறிக்கையையும் அனுப்பினாள். அவளிடம் இருந்து நன்றி என்ற பதிலை மட்டும் எதிர்பார்த்த அவளுக்கு காலை முடிவதற்குள் கரோலைன் அழைத்தது ஆச்சரியமாக இருந்தது. 

“படைப்பிலக்கியத்தில் கால் ஊன்றிய உனக்குப் பொருளாதார நிபுணர்களின் போலித்தனம் கண்ணில் பட்டது ஆச்சரியம் இல்லை. உன் கட்டுரை தகுந்த ஆதாரங்களுடன் நிறைய அட்டவணைகள், வரைபடங்கள், புள்ளி விவரங்கள் சேர்த்து நடைமுறைக்கு ஒத்தபடி எழுதப்பட்டு இருக்கிறது. அதைச் சரியாகப் படிக்காமல் உன்னைத் தாக்கிய ராஜ் வாரனை சும்மா விடக்கூடாது.” 

“அவன் எவனோ? தொலையட்டும்!”  

“நோ! நோ! அவனுக்குப் பதிலடி கொடுத்தாக வேண்டும்.”  

“எப்படி?” 

“நான் வலைத்தளத்தில் சேகரித்த விவரங்கள் வைத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். எனக்கு உன் மொழிவன்மை இல்லை. நீ அதைச் சீர்செய்தால் இருவர் பெயரிலும் வெளியிடலாம்.”  

“நீ அனுப்பினால் நான் திருத்துகிறேன். என் பெயரை சேர்க்க வேண்டும் என்பது இல்லை.” 

இன்னொரு முறை ஏன் வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டும்?

“அது நியாயம் ஆகாது.”  

பிற்பகலில் கோடை மழை. வீட்டில் அடைந்துகிடந்த நேரத்தில் கரோலைனின் கரடுமுரடான வாக்கியங்களை வாசிக்க எளிதாக்கி, அதன் காட்டத்தை சற்று குறைத்தாள். ராஜ் வாரனின் பெயரை அகற்றினாள். அவனுக்கு எதற்கு இலவச விளம்பரம்? டாக்டர் வெட்டியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிய இறுதிக்கு முந்தைய பாரா.. 

டாக்டர் வெட்டியை எடுத்துக்கொள்வோம். இந்திய அரசாங்கம் வழங்கிய உதவித்தொகையில் மருத்துவம் படித்த அவர் தாயும், பொறியியல் பட்டம் வாங்கிய அவர் தந்தையும் யூஎஸ்ஸில் கால் வைத்தபோதே மேல் பத்து சத க்ளப்பில் அங்கத்தினர்கள். அவர் படித்தது எக்ஸடெர் அகடெமி, ஹார்வேர்ட், ஷிகாகோ பல்கலைக்கழகங்கள். அவற்றின் தொடர்ச்சியாக ஸ்டான்ஃபோர்ட் பதவி. அவர் கண்டுபிடித்த, ஏழ்மையைக் குறைக்க வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு ஆண்டு வருமானம் அரை மில்லியன் டாலர் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதார நோபல் பரிசு. அவரும் அவர் (மகளிர் நல மருத்துவ) மனைவியும் உருவாக்கும் அடுத்த தலைமுறையினர் பணக்கார குடும்பத்தின் பாரம்பரியத்தைத் தொடரச்செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

அதை வெட்டினாள். 

அன்று மாலையே அது ‘ட்ரூத்-இன்’ இணையத்தளத்தில் ஏறியது. 


ஏழ்மையைக் குறைக்க ஷிகாகோ பல்கலைப் பட்டம் உதவாது 

கரோலைன் ஹாகின்ஸ்

மானஸா சஹாதேவன்

எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் ஏழைகள் இருந்திருக்கிறார்கள். நிலங்களில் இருந்து வந்த நிச்சயமற்ற வருவாயின் பெரும்பங்கை வலியவர்கள் பறித்துக்கொண்டது பிரதான காரணம்.

அண்மைக்காலத்தில் இயந்திரப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் செழிப்பான நாடுகளிலும் ஏழ்மைக்கோட்டுக்குக் கீழே கணிசமான மக்கள். ஏழைகள் புரட்சியில் ஈடுபடுவதைத் தடுக்கவும், பணக்காரர்களுக்குக் குற்ற உணர்வு ஒருவேளை இருந்தால் அதைப் போக்கவும் பொருளியலாளர்கள் உருவாக்கிய இரண்டு ‘கொள்கைகள்’. 

1. மனித மூலதனம். ஒருவரின் வருமானம் அவர் தன் உள்ளாற்றலைப் பயன்படுத்திச் செய்யும் உற்பத்தியைப் பொறுத்தது. மென்பொருள் உருவாக்கும் ஒருவரின் வருமானம் அவர் இல்லத்தின் செவிலித்தாயைவிட பத்து மடங்கு என்றால் அவர் உற்பத்தியின் மதிப்பும் அதே மடங்கு. 

2. எல்லாருக்கும் பெய்யும் செல்வ மழை. நாட்டின் மொத்த பொருளாதார உற்பத்தி வளரும்போது ஏழைகளின் பங்கும் பெருகி அவர்களை ஏழ்மையில் இருந்து உயர்த்தும். இரண்டாம் உலகப்போருக்குப்பின் நடந்த பிரமிக்கத்தக்க பொருளாதாரப் பெருக்கத்தின்போது இது நடந்தது, அதுவும் வெள்ளை மக்களுக்கு மட்டுமே. மற்ற சமயங்களில் பெரும்பாலும் அந்த வளர்ச்சி மேல் தட்டினரைத் தாண்டி கீழே இறங்கியது கிடையாது.  

இரண்டாவது கொள்கைக்கு டாக்டர் வெட்டி புது ஜோடனை செய்திருக்கிறார். ஏழ்மையைக் குறைக்க வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். அவர் கவனிக்கத் தவறியது, வாய்ப்புகளை மாயாஜாலங்களால் உண்டாக்க முடியாது. அவற்றுக்கும் இயற்கை வளங்கள் வேண்டும். அதாவது பொருளாதாரம் வளர வேண்டும். உற்பத்திப் பெருக்கத்தின் பயன்கள் ஏழைகளை எட்டுவது இல்லை என்பது கடந்த நாற்பது ஆண்டுகளில் சமுதாயத்தின் வெவ்வேறு மட்டத்தினருக்குக் கிடைத்த வருமான உயர்வைப் பார்க்கும்போது தெரியவரும். 

முன் காலத்தில் வன்முறைகளும் மத நம்பிக்கைகளும் ஏழ்மையைப் பாரம்பரிய வழியில் தொடரச்செய்தன. இப்போது ஏழையின் குழந்தைகளை ஏழ்மையில் நிறுத்திவைக்க மேல் பத்து சதத்தினர் பின்பற்றும் மூன்று வழிகள்.  

1. ஊரின் ரம்மியமான பகுதிகளில் அவர்கள் மட்டுமே வசிக்கும் வீடுகள். 2. அவர்கள் குழந்தைகளுக்குத் தனி கல்விக்கூடங்கள். 3. பட்டம் பெற்று வெளியே வந்ததும் அடுத்த தலைமுறைக்கு நல்ல வருமானத்துடன் உயர் பதவிகள்.   

வருமானத்துக்கும் சமுதாயத்தின் பங்களிப்புக்கும் நேரடி உறவு இல்லை என்பதை வைரஸ் காட்டியிருக்கிறது. சிறப்பங்காடிகளில், அழகு நிலையங்களில், மருத்துவமனைகளில் பணியாற்றுகிறவர்களுக்குக் கூலி சன்மானம். ஹெட்ஜ் ஃபன்ட் முதலீட்டாளர்களுக்கு மில்லியன் டாலர் வருமானம். இவர்களில் யார் ஆபத்தைப் பார்க்காமல் வேலைக்கு வந்தே ஆக வேண்டும்? யாருடைய சம்பளத்தைக் கூட்ட வேண்டும்? யாருடைய வருமானத்துக்கு கடும் வரி விதிக்க வேண்டும்? கல்வி எல்லாரையும் எட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? நகரங்கள் தீவுகளாகப் பிரிவதை எப்படி தடுக்க வேண்டும்? பண பூதங்களின் வலையில் சிக்காமல் இருக்க சிறு நிறுவனங்களுக்கு என்ன பாதுகாப்பு அளிக்க வேண்டும்?

ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, மேல்மட்ட வர்த்தகக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற பொருளியலாளர்கள் யோசித்திராத, அவர்களுக்குப் பிடிக்காத வழிகளை நாம் பின்பற்ற  வேண்டும். 

தங்களுக்குப் பழக்கப்பட்ட சொகுசான வாழ்க்கையில் எவ்விதக் குறைவும் வராமல் ஏழ்மையைக் குறைக்க முடியும் என்று நம்பும் பணக்காரர்களுக்கு ஏற்கனவே ஒருவர் அறிவுரை வழங்கி இருக்கிறார் (லூக் 18:22).


டாக்டர் வெட்டியின் அறிக்கை எட்டு வாரங்களையும் இரண்டு தினங்களையும் சாப்பிட்டுவிட்டது. கல்லூரியின் இலையுதிர்கால செமிஸ்டருக்கு இன்னும் ஒரு மாதம். அதைக் கலாவதியுடன் செலவிட வேண்டும். நாளையில் இருந்து முழு நேரம். அப்புறம் இலையுதிர்காலப் புத்தக வெளியீடு எந்தக்கட்டத்தில் என்று ஏஞ்சலாவுக்கு ஒரு தகவல். 

(தொடரும்)

Series Navigation<< உபநதிகள் – 14உபநதிகள் – பதினாறு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.