தமிழாக்கம் : பென்னேசன்

காஷ்மீருக்காக நடக்கும் போர் சிக்கலான பல முடிச்சுக்கள் அடங்கிய புதிரான விஷயமாக இருந்தது அவனுக்கு. இந்தப் போரைப் பற்றி யோசிக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குக் குழப்பங்கள் அதிகரித்து வந்தன. ஏதோ பாதுகாப்பு சுவிட்சு பழுதாகி எக்குத்தப்பாக சிக்கிய துப்பாக்கியின் குதிரையாகத் தன் மூளை மாட்டிக் கொண்டது போல உணர்ந்தான் சுபேதார் ரப் நவாஸ்.
இரண்டாவது உலகப் போரில் கலந்து கொண்டு முக்கியமான பல போர்க் களங்களைக் கண்டவன் அவன். புத்திக்கூர்மைக்கும் மட்டற்ற தைரியத்துக்கும் மூத்த அதிகாரிகளாலும் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டவன் இந்த சுபேதார் ரப் நவாஸ். மிகவும் கடினமான காரியங்கள் மற்றும் ஆபத்து நிறைந்த காரியங்கள் எதுவானாலும் அவன் வசமே ஒப்படைக்கும் அளவுக்கு அப்போது அனைவரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி இருந்தான்.
ஆனால் இதுபோன்ற ஒரு சிக்கலான போரை அவன் எப்போதும் எதிர்கொண்டது இல்லை. மிகவும் உற்சாகத்துடன் எதிரிகளைப் பொடிப்பொடியாக்கும் தீர்மானத்துடன் தான் அவன் இந்தப் போருக்குக் கிளம்பினான். ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவன் சந்தித்த அனுபவங்கள் மிகவும் விசித்திரமாகவும் தர்மசங்கடமாகவும் அமைந்து போனது. இப்போது இந்தச் சண்டையில் அவனுக்கு எதிர்முனையில் நிற்கும் பலரும் இரண்டாம் உலகப் போரின்போது ஒரே ரெஜிமெண்டில் அவனுடன் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். தன்னுடன் சம அந்தஸ்தில் இருந்தவர்கள். தனக்கு மேல் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் அல்லது தனக்குக் கீழே பணிபுரிந்தவர்கள். அவர்களில் பலருக்கு எதிராக இப்போது ஆயுதம் ஏந்திப் போராடுவது அவனுக்குப் புதிதாகவும் புதிராகவும் இருந்தது. நேற்றைய நண்பர்கள் இன்றைய எதிரிகளாக மாறிப் போயிருக்கிறார்கள்.
சில நேரங்களில் சுபேதார் ரப் நவாஸூக்கு அவை எல்லாமே ஏதோ கனவில் கண்டது போலத் தோன்றும். இரண்டாவது உலகப்போர் பிரகடனம் செய்த அந்த நாளை அவன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு நிகழ்வாக மனதுக்குள் பட்டியலிட்டான். சில அடிப்படை பயிற்சிகளை மட்டும் அளித்து விட்டு அவர்களை நேராகப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டார்கள். போர் நிகழ்ந்த பல இடங்களுக்கு மாற்றி மாற்றி அவனும் அனுப்பப்பட்டான். அந்தப்பெரும் போர் ஒருவழியாக நிறுத்தத்துக்கு வந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்து சில ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் உருவானது. இப்போது அவன் போராடிக் கொண்டிருக்கும் இந்தப் போர் காஷ்மீருக்கானது. கடந்த சில நாட்களாக தலைதெறிக்கும் வேகத்தில் பல விஷயங்கள் நடந்து முடிந்தன. பல நேரங்களில் அதற்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் போனது போலத் தோன்றியது. இந்தப் பெரிய விஷயங்களை திட்டமிட்டு நிறைவேற்றியவர்கள் வேண்டுமென்றே எல்லாவற்றிலும் ஒருவகையான தலையைச் சுற்றும் வேகத்தைக் கடைப்பிடித்தார்கள். இதில் தெரிந்தோ தெரியாமலோ பங்கேற்பவர்களுக்கு சிந்திக்கக் கூட நேரம் அளிக்காது எல்லாமே அசுர வேகத்தில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. ஒன்றை மாற்றி இன்னொன்றாகவும் வேறொன்றாகவும் தொடரும் காரியங்களை ஒருவரால் வேறு எப்படி விளக்க முடியும்?
சுபேதார் ரப் நவாஸூக்கு ஒரு விஷயம் புரிந்தது. அதாவது இவர்கள் எல்லோரும் காஷ்மீரை வெற்றி கொள்வதற்காக இந்தப் போரில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். காஷ்மீரை எதற்காக இவர்கள் கைப்பற்ற நினைக்க வேண்டும்? அது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் அதன் இருத்தலுக்கும் அது மிகவும் அவசியமானது என்று ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆனால் போர்முனையில் எதிரிகளைச் சுட்டுத் தள்ள இவன் ஆயத்தம் செய்து கொள்ளும்போது எதிர்முனையில் அவனுக்குப் பரிச்சயமான பல முகங்கள் அவன் கண்களில் படுகின்றனர். அப்போது எந்த நோக்கத்துக்காக இந்தப் போரில் ஈடுபட்டிருக்கிறோம் என்று அவனுக்கு ஒரு கணம் மறந்து போகும். தான் எதற்காக துப்பாக்கியை சுமக்கிறோம் என்பதும் எதற்காக இப்படி மற்றவர்களை சுட்டுக் கொல்கிறோம் என்பதும் மறந்து போகும்.
அதுபோன்ற நேரங்களில் தான் ஏதும் பதக்கங்களை வெல்லுவதற்காகவோ பெரிய அளவில் ஊதியம் ஈட்டவோ இந்தப் போரில் ஈடுபடவில்லை என்றும் தன்னுடைய நாட்டின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதி செய்வதற்காகவே இந்தக் காரியத்தில் ஈடுபடுவதாகவும் நினைத்துக் கொள்வான்.
பாகிஸ்தான் என்னும் தேசம் உருவாகும் முன்னரும் இது அவனுடைய நாடுதான். உருவான பிறகும் அது அவனுடைய நாடுதான். அது அவனுடைய நிலம். ஆனால் ஒருசில நாட்களுக்கு முன்பு தன்னுடைய நாட்டைச் சேர்ந்தவர்களையே எதிர்த்து இப்போது போர் புரிய வேண்டியிருக்கிறது. ஒரே கிராமத்தில் தன்னுடன் ஒன்றாகப் பிறந்து வளர்ந்தவர்கள், பல தலைமுறைகளாக இவனுடைய குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். இந்த மனிதர்கள் இப்போது வேறொரு நாட்டின் குடிமக்களாக மாறிப்போய்விட்டார்கள். அவனுக்கு முற்றிலும் அந்நியர்களாகிப் போய்விட்டார்கள்.
அவர்களுக்கும் தங்கள் நாட்டில் கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. அரசாங்கம் சொல்கிறது. . உன்னுடைய கரங்களில் துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் கொடுத்திருக்கிறோம். அவற்றை வைத்து உனக்கு முற்றிலும் புதிய இந்த நாட்டுக்காகப் போரிடு. தலைக்கு மேல் சொந்தக் கூரை கூட ஏதும் இல்லாத, முற்றிலும் பரிச்சயமற்ற காற்றும் நீரும் உள்ள இந்த இடத்துக்காகப் போராடு. நீ எங்கே பிறந்து வளர்ந்தாயோ அந்த நிலம் இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் ஏந்திப் போரிடு” என்று அவனுடன் பிறந்து வளர்ந்த நண்பர்களில் பலர் அவர்களுடைய நாட்டில் பணிக்கப்பட்டிருக்கிறாரகள்.
தங்களின் மூதாதையர்களின் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு வெறுங்கையுடன் இந்தப் புதிய நாட்டுக்குக் கிளம்பி வந்த முஸ்லிம்களைப் பற்றி நினைத்துக் கொள்வான் ரப் நவாஸ். அவர்களின் கரங்களில் துப்பாக்கிகளைத் தவிர பாகிஸ்தான் வேறு எதையும் தரவில்லை. அவர்கள் ஏற்கனவே வேறு போர்களில் உபயோகித்து வந்த அதே ரகத்தை சேர்ந்த, அதே அளவு ஆற்றல் கொண்ட அதே பழைய துப்பாக்கிகளை அவர்கள் இப்போது தங்களின் புதிய எதிரிகளுக்கு எதிராகத் தூக்க வேண்டியிருக்கிறது.
பிரிவினைக்கு முன்பு, இவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு பொது எதிரியுடன், அதே நேரத்தில் தங்களுக்கு நேரடி எதிரியாக அல்லாதவர்களுடன் போரிட்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புக்கும், பதக்கங்களை வெல்வதற்கும் நல்ல ஊதியமும் வெகுமதிகளும் பெறுவதற்கு மட்டுமே இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் போரில் ஈடுபட்டார்கள். அப்போது எல்லோரும் இந்திய ராணுவ விரர்களாக இருந்தார்கள். இப்போது நடைபெறும் இந்தப் போரில் அவர்களில் சிலர் இந்திய ராணுவ வீரர்களாகவும் சிலர் பாகிஸ்தான் ராணுவ வீரர்களாகவும் மாறியிருந்தார்கள். இந்தப் புதிரை மட்டும் தன்னால் விடுவிக்க முடியவில்லையே என்று மிகவும் குழம்பியிருந்தான் ரப் நவாஸ்.
காஷ்மீரைப் பற்றி நினைத்துப் பார்க்க முயற்சிக்கும் போதெல்லாம் இன்னும் அதிகமாகக் குழம்பிப் போனான். இந்தப் பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் காஷ்மீருக்காகப் போரிடுகிறார்களா அல்லது காஷ்மீரின் முஸ்லிம்களுக்காகப் போரிடுகிறார்களா? காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக இவர்களிடம் போரிடச் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், இன்னும் மன்னர்களின் ஆளுமையில் உள்ள ஜூனாகட்டிலும் ஹைதராபாத்திலும் உள்ள முஸ்லிம்களுக்காகப் போராடச் சொல்லி ஏன் இவர்களிடம் சொல்லப்படவில்லை? நடந்து கொண்டிருப்பது இஸ்லாமியப் போராக இருந்தால் அப்போது உலகின் மற்ற இஸ்லாமிய நாடுகள் இந்தப் போரில் பாகிஸ்தானின் தோளோடு தோள் நின்று ஏன் பங்கேற்கவில்லை?
ஒருவழியாக இவை போன்ற சிக்கலான விஷயங்கள் தன்னைப் போன்ற எளிய சுபேதாரின் புரிதலுக்கு முற்றிலும் அப்பாற்றபட்ட விஷயம் என்ற முடிவுக்கு வந்தான் ரப் நவாஸ். ஒரு ராணுவ வீரன் எப்போதும் மூளையைத் தடிமனாக வைத்துக் கொள்ள வேண்டும். மூளை தடித்துப் போனவர்களால் மட்டுமே ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்ற முடியும். ஆனால் இவைபோன்ற முடிவுகளை எல்லாம் மீறி, தற்போது அவன் ஈடுபட்டிருக்கும் போரைப் பற்றி அவனால் எந்தவகையிலாவது யோசித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
சண்டை நடந்து கொண்டிருந்த தித்வால் பகுதி கிஷன் கங்கா நதியைக் கடந்து முஸராபாத்தில் இருந்து கிரண் செல்லும் சாலை வரை பரந்திருந்தது. மிகவும் சரியான முறையில் அங்கே சண்டை நடந்து கொண்டிருந்தது.
இரவு நேரங்களில், இருதரப்பினரும் தங்களுக்குள் துப்பாக்கி குண்டுகளைப் பொழிந்து சண்டையிடவில்லை. இருதரப்பும் எதிர்எதிர் முனைகளில் மறைவாகப் பதுங்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் உரத்த குரலில் மிகவும் ஆபாசமான கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தது இரவு முழுக்க அந்தப் பகுதி முழுதும் கேட்டது.
ஒரு பின்மாலைப் பொழுதில் சுபேதார் ரப் நவாஸ் தனக்குக் கீழ் உள்ள வீரர்களை எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கும் முஸ்தீபுகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தபோது எதிரிகளின் பக்கத்தில் இருந்து உரத்த குரலில் கெட்ட கெட்ட வசவுகள் கேட்டன. அவர்கள் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் இவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எறிந்த வசவுகள் எல்லாம் இவனுக்கு மிகவும் தெளிவாகக் கேட்டன. தன் காதுகளை அவனால் நம்ப முடியவில்லை. ஆபாசமான வசவுகளை முழங்கி முடித்தபிறகு உரத்த குரலில் அவர்கள் இடிபோலச் சிரிக்கத் துவங்கினார்கள்.
“பன்றியை வெட்டும் பயல்கள்” என்று கடுப்புடன் முணுமுணுத்தான் ரப் நவாஸ். இங்கே என்னதான் நடக்கிறது?
இவனுடைய ஆட்களில் ஒருவன் அவனால் முடிந்த அளவு மிகவும் உரத்த குரலில் வசவுகளை எறிந்தான். உரக்கக் கத்தியதில் சோர்வடைந்து, சுபேதார் சாஹிப்… பாருங்க.. திரும்பத் திரும்பத் திட்டிக்கிட்டே இருக்காங்க… ஹராமி மாதர்சோத்… என்று சலித்துக் கொண்டான்.
முதலில் தானும் அந்த ஆபாசமான வசவுகளை எறியும் சமரில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரப் நவாஸ் நினைத்தான். ஆனால் இவர்களை வேறு ஏதாவது வகையில் தாக்க வேண்டும் என்று யோசித்தான். அவனைத் தொடர்ந்து அவனுடைய ஆட்களும் அமைதியாகக் காத்திருந்தார்கள். ஆனாலும் சற்று நேரம் கழித்து, அந்தப் பக்கத்தில் இருந்து வசவுகள் மிகவும் உக்கிரமாகத் தாக்கத் துவங்கியதும் இந்தப் பக்கத்தில் இவர்கள் பொறுமை இழந்தார்கள். இவர்களும் பதிலுக்கு சரமாரியாக வசவுகளை உரத்த குரலில் தொடுத்தார்கள். ஓரிருமுறை அவர்களை நிறுத்த முயற்சித்தான் ரப் நவாஸ். ஆனால் ஒரு வினைக்கு வன்மையுடன் எதிர்வினை தருவது மனித இயற்கைதான் என்று அமைதியானான். இருபுறமும் வலுவாக எறிந்துகொண்டிருந்த வசவுகளை அமைதியாக உட்கார்ந்து மிகவும் உன்னிப்புடன் கேட்கத் துவங்கினான்.
இரவு நேரங்களில் இவர்களால் எதிரிகளைப் பார்க்க முடியவில்லை. அந்தப் பிரதேசம் முழுதும் குன்றுகளால் சூழப்பட்டிருந்ததால் பகலிலும் சரியாகப் பார்க்க முடியவில்லை,. அவர்களுக்குக் கேட்டதெல்லாம் எதிரிகள் தங்கள் மீது வன்மத்துடன் வீசிய வசவுகள்தான். எதிரிகளால் மிகுந்த வலுவுடன் வீசப்பட்ட வசவுகள் மலைமீதிலும் பள்ளத்தாக்கிலும் எதிரொலித்துக் காற்றில் கரைந்து போயின.
அந்தப் பிரதேசத்தில் சில குன்றுகள் வெறுமையாக இருந்தன. ஒருசில குன்றுகள் மிக உயரமான பைன் மரங்களால் சூழப்பட்டிருந்தன. இந்த இடத்தில் சண்டையிடுவது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. சுபேதார் ரப் நவாஸ் வழிநடத்திய பிளாட்டூன் பதுங்கி இருந்த இடம் அதிகமாக மறைவிடங்கள் அற்ற மொட்டைக் குன்றாக இருந்தது. கடந்த ஒருவாரமாக பகலிலும் இரவிலும் மிக மோசமான வசவுகள் தங்கள் மீது எறியப்பட்டதால் கொதிப்படைந்திருந்த அவனுடைய வீரர்கள் தங்கள் எதிரிகளைத் துவைத்துத் துவம்சம் செய்ய வன்மத்துடன் துடித்துக் கொண்டிருந்தார்கள். சந்தர்ப்பம் வாய்த்தபோது வெறிபிடித்தது போல ஒரு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தி முடித்தார்கள். அந்தத் தாக்குதலில் தங்கள் தரப்பில் இரண்டு வீரர்களை இழந்தார்கள். நான்கு பேர் கடுமையான காயம் அடைந்தனர். எதிரிகளின் தரப்பில் மூன்று பேர் இறந்தார்கள். எதிரிகள் தங்களிடம் இருந்த உணவுப் பொருட்களை அங்கேயே விட்டுத் தப்பி வேறு இடத்துக்கு மறைவான இடத்துக்கு ஓடிவிட்டார்கள்.
சுபேதார் ரப் நவாஸ் மற்றும் அவனுடய ஆட்களுக்கு எதிரிகள் படையில் ஒருவனைக் கூடப் பிடித்து வைக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. அப்படிப் பிடித்திருந்தால் அவனுடய முகத்துக்கு நேராகவே அவன் எறிந்த அத்தனை வசவுகளையும் மனதாரத் திருப்பிக் கொடுத்திருக்க முடியும். பரவாயில்லை. மிகவும் கடினமான இடம் ஒன்று இவர்கள் வசமாகி விட்டது. ரப் நவாஸ் கமாண்டர் அஸ்லம் சாஹிப்புக்கு செய்தியை அனுப்பினான். தன்னுடைய வீரர்களுக்கு வீரப்பதக்கம் அளிக்கப் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான்.
அவர்கள் ஏறி இறங்கியவாறு அலைந்த பல குன்றுகளின் உச்சியில் பெரிய குளங்கள் பலவற்றைக் கண்டார்கள். எதிரிகளை விரட்டி விட்டு இவர்கள் கைப்பற்றிய குன்றின் உச்சியிலும் ஒரு பரந்த குளம் இருந்தது. அந்தக் குளத்தின் நீர் தெளிவாகவும் இனிப்பாகவும் இருந்தது. சில்லென்ற அதன் தண்மை அனைவருக்கும் அங்கு குளிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. எல்லோரும் உடைகளை முற்றாகக் களைந்து குளத்தில் குதித்தனர். உல்லாசமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் சீறிப் பாயும் ஒலி கேட்டது. அனைவரும் குளத்தில் இருந்து முழுநிர்வாணமாக வெளியில் குதித்துத் தரையில் குப்புறப்படுத்துக் கொண்டார்கள். சுபேதார் ரப் நவாஸ் நிர்வாணமாகத் தவழ்ந்து கொண்டே தன்னுடைய பைனாகுலரைக் கண்டடைந்தான். அந்தப் பகுதி முழுதும் மிகுந்த கவனத்துடன் சுற்றுமுற்றும் பார்வையிட்டான். அவன் கண்களுக்கு யாரும் தென்படவில்லை. சுடுதல் மேலும் அதிகரித்தது. இந்தத் தடவை குண்டுகள் பாய்ந்து வரும் திசை அவனுக்குப் புலப்பட்டது. எங்கிருந்து அவை சீறிப்பாய்கின்றன என்று அவனால் அனுமானிக்க முடிந்தது. அவர்கள் குப்புறப்படுத்திருந்த பரப்பில் இருந்து சுமார் நூறு அடிக்குக் கீழே உள்ள சிறிய குன்றில் இருந்து அந்த குண்டுகள் சீறிக்கொண்டிருந்தன. திருப்பிச் சுடுமாறு தன்னுடைய ஆட்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.
எதிரிப் படைக்கு அவர்கள் பதுங்கத் தோதான மறைவிடங்கள் இல்லை என்பதைக் கண்டுகொண்டான். இப்போது இருக்கும் இடத்தில் அவர்களால் அதிக நேரம் இருக்க முடியாது என்பதையும் தெரிந்து கொண்டான். எதிரிகள் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு ஒரு அடி நகர முயன்றால் கூட தங்களின் இலக்கில் நேரடியாக சிக்கிக் கொள்வார்கள் என்று நம்பிக்கை கொண்டான் ரப் நவாஸ். இருதரப்பிலும் பரஸ்பரம் தீவிரமாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்கள். ஒருவழியாக துப்பாக்கி குண்டுகளை இனிமேல் எக்காரணம் கொண்டும் வீணாக்கக் கூடாது என்று தன் வீரர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான் ரப் நவாஸ். எதிரிகள் தங்களின் மறைவிடத்தில் இருந்து வெளியில் வரும் வரை பொறுமையாகக் காத்திருப்போம் என்றான். திடீரெனத் தன் முழு நிர்வாணத்தை உணர்ந்தவனாக, “பன்றிக்குப் பிறந்த பயல்கள்… இப்படி செய்துவிட்டார்களே. ஆடை ஏதுமில்லாமல் நிற்கும்போது மனிதன் எத்தனை அற்பமாகத் தோன்றுகிறான் பார்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
இரு நாட்கள் முழுதும் இருதரப்பிலும் இந்தப் பதுங்கும் விளையாட்டு தொடர்ந்தது. யாராவது எப்போதாவது எதையோ நினைத்துக் கொண்டது போல இருதரப்பிலும் சுட்டார்கள். திடீரென வெப்பம் குறைந்து குளிர் அதிகரித்தது. ரப் நவாஸ் தன்னுடைய ஆட்கள் சூடேற்றிக் கொள்ள டீ கெட்டிலியை எப்போதும் நிரந்தரமாக ஒரு குறுக்குக் கம்பியில் கட்டி வைத்து சூடு படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். ஏதோ முடிவில்லாத ஒரு டீ பார்ட்டி போல அவர்கள் தங்கி இருந்த இடம் காட்சியளித்தது.
மூன்றாவது நாள் – தாங்க முடியாத குளிராக இருந்தது. எதிரிப் படையினர் கொஞ்சமாவது தங்கள் இடத்தை விட்டு வெளியில் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்று மிகவும் ஜாக்கிரதையாக இந்தப் பக்கம் காத்திருந்தனர். சுபேதார் தன்னுடைய பைனாகுலர் வழியாக எதிரிகள் இருக்கும் பகுதியைப் பார்வையிட்டான். அட… ஏதோ அந்தப் பக்கமாக லேசான நடமாட்டம் தெரிகிறதே. தன்னுடய ரைபிளை எடுத்து இலக்கின்றி சுட ஆரம்பித்தான். எதிரிகளின் பக்கத்தில் இருந்த இவனுடைய பெயரை யாரோ கூப்பிட்டார்கள். ஒருவேளை அது பிரமையோ என்றும் யோசித்தான். அவனுடைய பெயரைக் கூப்பிடும் ஒலி மீண்டும் அந்தப் பிரதேசம் முழுதும் எதிரொலித்தது. “பன்றிக்குப் பிறந்த பயலே என்னடா வேண்டும் உனக்கு?” என்று உரத்த குரலில் கேட்டான்.
அவர்கள் இருவருக்கும் இடையில் நிலவிய இடைவெளி அதிகமில்லை. அவனைக் கூப்பிட்ட குரல் மீண்டும் உரக்கக் கத்தியது. “திட்ட வேண்டாம் சகோதரா…”
ரப் நவாஸ் தன்னுடைய ஆட்களைப் பார்த்தான். “சகோதரா…” என்னும் வார்த்தை காற்றில் கனமாக மிதந்து கொண்டிருந்தது.
கரங்களை வாயருகே குவித்து, “சகோதரனா?.. இங்கே உனக்கு சகோதரன் யாரும் இல்லை. உன்னுடைய அம்மாவின் காதலர்கள்தான் நிறையப் பேர் இருக்கிறார்கள்” என்று கூவினான்.
“ரப் நவாஸ்” என்று அந்தக் குரல் உரத்துக் கூப்பிட்டது.
இவன் திணறிப்போனான். அந்த வார்த்தை குன்றுகளின் உச்சியில் தெறித்துப் பின் காற்றில் கரைந்து மறைந்தன.
“பன்றியை வெட்டுகிற பயல்களே… யார் அது என்னைக் கூப்பிடுவது?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.
தித்வால் பகுதியில் இப்போது சண்டையில் ஈடுபட்டிருக்கும் படையில் இருந்த பலரும் இவன் முன்பு ஒருகாலத்தில் பணிபுரிந்த 6/9 ரெஜிமெண்டை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவனுடைய சொந்த ரெஜிமெண்ட் அது. ஆனால் இவன் பெயரை அங்கிருந்து சொல்லும் ஜோக்கர் யாராக இருக்க முடியும்? அந்த 6/9 ஜாட் ரெஜிமெண்டில் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ஒரு சில எதிரிகள் கூட. ஆனால் இப்போது இவனை சகோதரா என்று கூப்பிட்டவன் யாராக இருக்கமுடியும்?
ரப் நவாஸ் மீண்டும் தன் பைனாக்குலர் வழியாக மிகுந்த கவனத்துடன் சுற்றுமுற்றும் பார்வையிட்டான். ஆனால் அவனால் எதையும் சரியாகப் பார்க்கமுடியவில்லை. உரக்கக் கத்தினான். “யாரது? நான்தான் ரப் நவாஸ்… ரப் நவாஸ்… ரப் நவாஸ்…
“நான்….. ராம்சிங்… ராம்சிங்… அங்கிருந்து வந்த அதே குரல் பதிலளித்தது.
ரப் நவாஸ் ஏறத்தாழத் துள்ளிக் குதித்தான். ராம் சிங்… ஓ… ராம் சிங்கா… ராம் சிங்… பன்னி வெட்டும் பயலே…
“வாயை மூடுடா… மடப்பானைக்குப் பொறந்தவனே… என்று பதில் வந்தது.
தீவிரமான சண்டையின் இடையில் திடீரென்று முளைத்த இந்தப் புதிய வசவுப் பரிமாற்றத்தை ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய ஆட்களிடம் சொன்னான் ரப் நவாஸ்…“மடத்தனமாக உளறுகிறான் இந்தப் பன்றியை வெட்டும் பயல், எதிரிகள் பக்கம் பார்த்து கூச்சலிட்டான்..“அறுத்துப் போட்ட பன்னி, மரியாதையா பேசக் கத்துக்கோ”
ராம்சிங் பெரிதாக சிரிக்கத் துவங்கினான். ரப் நவாஸினாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இவனும் உரக்க சிரிக்கத் துவங்கினான். அவனுடைய வீரர்கள் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“இதோ பாரு நண்பா… நாங்கள் டீ குடிக்க வேண்டும்” என்று ராம்சிங் சொன்னான்.
“என்னை எதற்குக் கேட்கிறாய்? தாராளமாகக் குடிக்க வேண்டியதுதானே? உன்னை யார் தடுத்தார்கள் என்றான் ரப் நவாஸ்.
“எங்களால் முடியாது. டீ தயாரிக்கும் சாமான்கள் எல்லாம் வேறு இடத்தில் சிக்கிக் கொண்டிருக்கின்றன”
“வேறு இடத்தில் என்றால்? எங்கே?”
“நாங்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்தால் நீங்கள் எல்லோரும் எங்களை சுட்டுத் தள்ளிவிடுவீர்கள். டீ தயாரிக்கும் சாமான்களை எடுக்க இப்போது நாங்கள் பதுங்கி இருக்கும் இடத்தில் இருந்து சற்று வெளியில் வந்தாக வேண்டும்.”
“அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் பன்றியை வெட்டுகிற பயலே”
“நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துக் கொள்ளும் வரை நீங்கள் எங்களை நோக்கி சுடக்கூடாது”
“சரி. அப்படியே நடக்கட்டும்” என்றான் ரப் நவாஸ்.
“நீ சுட்டுவிடுவாய் மடப்பானைக்குப் பிறந்த பயலே” என்று கத்தினான் ராம்சிங்.
“வாயை மூடிக்கோ சீக்கிய ஆமைக்குப் பிறந்த பயலே” என்றான் ரப் நவாஸ்.
“நீ சுடமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு” என்றான் ராம்சிங்.
“எதன் மீது?”
“நீ விரும்பும் எதன்மீது வேண்டுமானாலும்”
ரப் நவாஸ் சிரித்தான். “நான் வாக்கு கொடுக்கிறேன். போ. போய் உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்”
சில நிமிடங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. வீரர்களில் ஒருவன் பைனாக்குலர் வழியாக அடியில் இருந்த சிறிய குன்றை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். தன் ரைபிள் குதிரையின் மீது விரல்களைத் தயாராகப் பதித்தபடிக் காத்திருந்தான். ரப் நவாஸைப் பார்த்து சுடட்டுமா என்று ஜாடையில் கேட்டான்.
“வேண்டாம். வேண்டாம்.. கண்டிப்பாக சுடாதே” என்று பதறினான் ரப் நவாஸ்.
அந்தப் பக்கத்திலிருந்து ஒருவன் சடாரென்று வெளிப்பட்டு கீழே உள்ள புதரை நோக்கி ஓடத்துவங்கினான். ஒரு சில நொடிகளில் கை நிறைய ஏதோ பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் கிளம்பிய இடத்துக்குப் பரபரப்புடன் ஓடி மறைந்து போனான். ரப் நவாஸ் தன் ரைபிளை எடுத்து அந்தத் திசையை நோக்கிச் சுட்டான்.
“ரொம்ப நன்றி ரப் நவாஸ்” அந்தப் பக்கத்தில் இருந்து ராம்சிங்கின் குரல் கேட்டது.
“இருக்கட்டும்” என்றான் ரப் நவாஸ். தன்னுடைய வீரர்களை நோக்கி, “சரி. பாய்ஸ், இப்போது நாம் அந்த முட்டாள்களுக்கு இங்கிருந்து ஒரு ரவுண்டு குண்டுகளைப் பரிசாக அளிப்போம்” என்றான்.
போர் என்பதை விட ஏதோ பொழுதைப் போக்குவதற்கு ஆடும் விளையாட்டு போல சற்று நேரத்துக்கு இருபுறமும் அர்த்தமின்றி ஒருவரை நோக்கி ஒருவர் இலக்கின்றி சுட்டுக் கொண்டனர். எதிரிகள் பதுங்கி இருக்கும் இடத்தில் இருந்து நீலவண்ணப்புகை சுருள்சுருளாக மேலெழும்பிச் செல்வதை ரப் நவாஸ் கண்டான். “உன்னோட டீ தயாராடுச்சாடா ராம்சிங்?” என்று உரக்கக் கேட்டான்.
“இன்னும் இல்லைடா சுடாத பானைக்குப் பொறந்தவனே” என்றான் ராம்சிங்.
ரப் நவாஸ் குயவர் குடும்பத்தை சேர்ந்தவன். யாராவது தன்னுடைய குலத் தொழிலை இழிவாகப் பேசினால் கடும் கோபம் கொள்வான். ஆனால் ராம்சிங் ஒருவனால்தான் அவனை அப்படி உரிமையுடன் கேலி செய்து பேசமுடியும். அவர்கள் இருவரும் பஞ்சாபில் உள்ள ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். குழந்தைப் பருவத்தில் இருந்தே சேர்ந்து வளர்ந்தவர்கள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். இருவருடைய தகப்பன்மார்களும் சிறுவயதுத் தோழர்களாக இருந்தவர்கள். இரண்டாம் உலகப்போரில் ராம் சிங்கும் ரப் நவாஸூம் ஒரே ரெஜிண்டில் ஒரே போர்முனையில் பணிபுரிந்திருக்கிறார்கள்.
“பன்றியை அறுக்கிற நாய். இவன் என் ஜாதிப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதை எப்போதும் விட மாட்டான்” என்று சிரித்துக் கொண்டே தன்னுடைய ஆட்களிடம் சொன்னான் ரப் நவாஸ். “வாயை மூடுடா பேன் கடிச்ச கழுதை ராம்சிங்…” என்று அவனை நோக்கி உரக்கத் திட்டினான்.
ஒரு கணம் யாரோ எழுந்து நிற்பதைப் பார்த்தான். தன் ரைபிளை எடுத்து அவனை நோக்கிச் சுட்டான் ரப் நவாஸ். தீனக்குரலில் யாரோ அலறும் குரல் கேட்டது. பைனாக்குலரை எடுத்து அலறல் வந்த திசைநோக்கி உற்றுப் பார்த்தான்.
அது ராம்சிங்.
தூரத்தில் ராம்சிங், வயிற்றுப் பகுதியை இறுக்கப் பிடித்துக் கொண்டு இரண்டாக மடிந்து தரையில் சரிந்து விழுந்தான்.
“ராம்சிங்” என்று கூவிக்கொண்டே எழுந்து நின்றான் ரப் நவாஸ். அடுத்த பக்கத்தில் இருந்து யாரோ சரமாரியாகச் சுட்டார்கள். ஒரு குண்டு இவனுடைய இடது தோளை உரசிக்கொண்டே சீறிப் பறந்தது. தரையில் குப்புறப் படுத்துக் கொண்டான். இந்தக் குழப்பத்தை பயன்படுத்தி எதிரிகள் தரப்பு வீரர்கள் திபுதிபு வென்று ஓடி, பாதுகாப்பான புதர்களில் பதுங்கிக் கொண்டார்கள். அவர்கள் மொத்தமாகப் பதுங்கி இருக்கும் குன்றை நோக்கிக் கடுமையாகத் தாக்குமாறு தன்னுடைய பிளாட்டூனுக்கு அவசரக் கட்டளை பிறப்பித்தான் ரப் நவாஸ். இவனுடைய பக்கத்தில் மூன்று சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் ரப் நவாஸ் தலைமையில் சிப்பாய்கள் மெல்ல சுட்டுக் கொண்டே முன்னேறினார்கள். இதுவரை எதிரிகள் முகாமிட்டு இருந்த இடம் முழுதும் ரப் நவாஸ் தலைமையில் கைப்பற்றப்பட்டது.
வெற்றுத் தரையில் ராம்சிங் சுருண்டு படுத்து இருந்ததைக் கவனித்தான் ரப் நவாஸ். ராம் சிங் வயிற்றில் குண்டு பாய்ந்திருந்தது. ரப் நவாஸை அருகில் பார்த்தபோது அவனுடைய கண்கள் பளபளப்புடன் ஒளிர்ந்தன. ”மடப்பானைக்குப் பிறந்தவனே, என்ன செய்தாலும் இப்படித்தான் செய்வாயா?” என்று கேட்டான்.
ரப் நவாஸ் தானே சுடப்பட்டது போலத் துடித்துப் போனான். “பன்றியை அறுக்கிற நாயே.. உன்னை யார் திடீரென்று எழுந்து நிற்கச்சொன்னது?” என்று கேட்டான்.
“என் முகத்தை உனக்குக் காண்பிக்க வேண்டும் என்றுதான் முயற்சி செய்தேன். ஆனால் மடப்பயலே.. இப்படி சுட்டுத் தள்ளி விட்டாயே…” என்று மிகுந்த வேதனையுடன் முனகினான் ராம்சிங். ரப் நவாஸ் அவனுடைய இடுப்பு பெல்ட்டை மெல்லத் தளர்த்தி விட்டான். மிகவும் ஆழமான காயமாக இருந்தது. ராம்சிங்கின் வயிற்றில் இருந்து ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது.
ரப் நவாஸ் குரல் தழுதழுக்கச் சொன்னான். “ஆண்டவன் சாட்சியாக சொல்கிறேன். நான் விளையாட்டுக்காகத்தான் சுட்டேன். அது நீதான் என்று எனக்கு எப்படித் தெரியும் ராம்சிங்? நீ இப்படித்தான் எப்போதுமே மடக்கழுதையாகவே இருந்திருக்கிறாய் ராம்சிங்கா…
ராம்சிங் வயிற்றில் இருந்து குருதி ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. அவன் இன்னும் உயிரோடு இருப்பதைப் பார்த்து மிகவும் ரப் நவாஸ் ஆச்சரியப்பட்டான். அவனை அந்த இடத்தில் இருந்து அசைக்க முடியவில்லை. நகர்த்தவும் தயங்கினான் ரப் நவாஸ். வயர்லெஸ் சாதனத்தை உயிர்ப்பித்து அவனுடைய பிளாட்டூன் கமாண்டா அஸ்லம் சாஹிப்பை தொடர்பு கொண்டு மருத்துவ உதவி அவசரமாகத் தேவைப் படுகிறது என்று தெரிவித்தான்.
இந்த இடத்துக்கு மருத்துவக் குழு வந்து சேருவதற்கு நீண்ட நேரமாகும் என்று அவனுக்குத் தெரியும். அதுவரை ராம்சிங் தாங்க மாட்டான் என்று நினைத்தான். ஆனால் ஆறுதல் அளிப்பது போல தயங்கி சிரித்துக் கொண்டே, “பயப்படாதே ராம்சிங். டாக்டர் வந்து கொண்டிருக்கிறார்” என்றான்.
ராம்சிங் மிகவும் பலவீனமான குரலில் பேசினான். “நான் எதற்கும் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல். எங்கள் ஆட்களில் எத்தனை பேரை நீங்கள் கொன்றீர்கள்?” என்று கேட்டான்.
“ஒருவனைத்தான்” என்றான் ரப் நவாஸ்.
“உன்னுடைய பக்கம் எத்தனை பேர் செத்திருப்பார்கள்?”
“ஆறு”, ரப் நவாஸ் பொய்யாகச் சொன்னான்.
“ஆறு” ராம்சிங் கூறினான். “நான் சரிந்து விழுந்தபோது என்னுடைய ஆட்கள் எல்லாம் மனம் தளர்ந்து விட்டார்கள். ஆனால் அவர்களிடம் இறுதிவரை தொடர்ந்து போரிடுங்கள். எதை இழந்தாலும் துணிந்து நில்லுங்கள். எதிரிகளுக்கு எத்தனை அடிகொடுக்க முடியுமோ கொடுக்கப் பாருங்கள் என்று சொன்னேன். பரவாயில்லை. என்னுடைய ஆட்கள் ஆறு பேரைக் காலி செய்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுடைய மனது வேறு யோசனைகளில் அலையத் தொடங்கியது.
தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான். பிறகு எதையோ மறந்தது போல, “பன்றிக்குப் பிறந்தவனே, அந்த மேடத்தை உனக்கு நினைவு இருக்கிறதா? என்று கேட்டான்.
“எந்த மேடம்?” என்று ரப் நவாஸ் கேட்டான்.
“இத்தாலியில் பார்த்தோமே. ஒரு மேடம். அவளை நாம் என்னவென்று கூப்பிட்டுக் கொண்டிருந்தோம் என்று ஞாபகம் இருக்கிறதா? – மேன் ஈட்டர். ஞாபகம் வந்ததா சொறிப்பன்றி?…” என்று கேட்டான்.
“ஆமாம். ஆமாம். அவளுடைய பெயர் மினிட்டாஃபேன்டோ அல்லது அந்த மாதிரி ஏதோ பெயர். அவள் கூட சொல்வாளே… நோ மணி.. நோ ஆக்ஷன் என்று. இப்போதும் ஞாபகம் இருக்கிறது. முஸோலினிக்குப் பிறந்த அந்தப் பொட்டை நாய்க்கு உன்மேல் விசேஷமான காதல் இருந்ததே” என்றான் ரப் நவாஸ்.
ராம்சிங் உரக்கச் சிரித்தான். அவன் குலுங்கிச் சிரித்த போது அவனுடைய வயிற்றில் இருந்து ரத்தம் பொங்கி வெளியேறியது. கிடைத்த ஏதோ ஒரு துணியைக் கிழித்து ராம்சிங்கின் வயிற்றைச் சுற்றி இறுகக் கட்டினான் ரப் நவாஸ். “இப்போது கொஞ்சநேரம் பேசாமல் இரு” என்று அவனை மெல்லத் தட்டிக் கொடுத்தான்.
ராம்சிங்குக்கு உடம்பு தணலாகக் கொதித்தது. பேசும் திராணியை மெல்ல இழந்து கொண்டிருந்தான். ஆனால் மிகவும் பலவீனமான குரலில் தொடர்பு இல்லாமல் எதை எதையோ பேசிக்கொண்டிருந்தான். ஏதோ வண்டியின் டாங்கில் பெட்ரோல் இன்னும் எத்தனை இருக்கிறது என்று சோதிப்பது போல, அடிக்கடி தன்னுடைய பேச்சை நிறுத்திப் பார்த்துக் கொண்டான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, அவனுக்குக் கடுமையாக ஜன்னி கண்டு பிரக்ஞை தவறிப் போனான். சில நொடிகளுக்குப் பிறகு கொஞ்சமாக நினைவு வந்து விழித்துப் பார்த்து மீண்டும் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்தான். நினைவு திரும்பிய தருணத்தில், ஒரு நிமிடம் ரப் நவாஸை தீர்க்கமாக உற்றுப் பார்த்துக் கேட்டான், “சத்தியமாகச் சொல், காஷ்மீர் அவசியம் வேண்டும் என்று நீங்கள் எல்லோரும் நினைக்கிறீர்களா?
“ஆமாம் ராம் சிங்கா” என்று உணர்ச்சி வசத்துடன் சொன்னான் ரப் நவாஸ்.
“நான் இதை நம்பவில்லை. உங்களை தவறாக வழிநடத்தி இருக்கிறார்கள்” என்றான் ராம்சிங்.
“இல்லை. எங்கள் இறைத்தூதர் மீதும் அவருடைய குடும்பத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன் ராம்சிங். நீங்கள் எல்லோரும் தவறாகப் பாடம் கற்றிருக்கிறீர்கள்” என்றான் ரப் நவாஸ்.
“நீ சத்தியமெல்லாம் பண்ணாதே. நீ சொல்வதும் சரியாகத்தான் இருக்க வேண்டும்” என்றான் ராம்சிங். ஆனாலும் ரப் நவாஸ் சொல்வதை முற்றிலும் நம்பாதது போன்ற முகபாவத்துடன் இருந்தான் ராம்சிங்.
சூரியன் மறையத் துவங்கும் நேரத்தில் சில சிப்பாய்களுடன் அங்கு வந்து சேர்ந்தார் மேஜர் அஸ்லம். அந்தக் குழுவில் மருத்துவர் யாரும் இல்லை. ராம்சிங்குக்கு அடிக்கடி நினைவு நழுவிக் கொண்டிருந்தது. ஜன்னி கண்டு அடிக்கடி தூக்கிவாரிப் போட்டுக் கொண்டிருந்தது. ராம்சிங் எதையோ தொடர்ச்சியாக உளறிக்கொண்டிருந்தான். ஆனால் அவன் பேசியது எதுவும் தெளிவாகக் கேட்கவில்லை.
மேஜர் அஸ்லம் 6/9 ரெஜிமெண்டில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். ராம்சிங் அவருக்குக் கீழ் பல ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறான். மேஜர் அஸ்லம் மெதுவாக இறந்து கொண்டிருக்கும் வீரனை நோக்கிக் குனிந்து அன்போடு அழைத்தார், ராம்சிங்… ராம்சிங்…
ராம்சிங் மெல்லக் கண்களைத் திறந்து அவருக்கு அட்டென்ஷன் செய்து மரியாதை செலுத்துவது போலத் தன் உடம்பை விறைப்பாக்கினான். வலது கையை மிகவும் சிரமப்பட்டு மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாக நெற்றியருகில் எடுத்துப் போய் தளர்ந்த நிலையில் சல்யூட் அடித்தான். அவனுடைய முகத்தில் ஒருவகையான அப்பாவித்தனமான குழப்பம் நிலவியது. முடங்கிப் போன நிலையில் அவனுடைய கை பக்கவாட்டில் சரிந்தது. தனக்குள் தானே பலவீனமாக “ராம்சிங், மடக்கழுதை… இது போர் என்பதை மறந்து விட்டாயே… இது போர் இல்லையா? போர்தான்…. அவனால் வார்த்தையை முடிக்க முடியவில்லை. பாதிக் கண்கள் திறந்திருந்த நிலையில் ரப் நவாஸை உற்றுப் பார்த்தான் ஒருமுறை இறுதியாக மூச்சை இழுத்து விட்டு மெல்ல இறந்துபோனான்.