அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4

This entry is part 4 of 8 in the series கணினி நிலாக்காலம்

எண்பதுகளில், தொலைத் தொடர்பு என்பது ஒரு ஜோக் என்றுதான் சொல்ல வேண்டும். டில்லி, மிகப் பெரிய நகரம். ஒரு நாளில், பல வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவர்களது மென்பொருள் பிரச்சினைகளை தீர்ப்பது என் வேலை. இன்றைய டில்லி அளவிற்கு போக்குவரத்து நெரிசல் இல்லாவிட்டாலும், மிகவும் பறந்த நகரமான டில்லியில் இரண்டு அல்லது மூன்று வாடிக்கையாளர்களை சந்தித்து, மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு, ஏறக்குறைய 8 முதல் 10 மணி நேரமாகிவிடும்.

வெளியே பயணம் செய்யும் பொழுது தலமை அலுவலகத்துடன் எந்தத் தொடர்பும் இருக்காது. மேலும், வாடிக்கையாளர் அலுவலகத்திலிருந்து, சிக்கலான டெக்னிகல் விஷயங்களைப் பற்றி அங்கிருக்கும் தொலைப்பேசியிலிருந்து பேசவும் முடியாது. எல்லா பிரச்சினைகளையும் விவரமாக கைப்பட எழுத வேண்டும். 

எழுதிய பின், மாலை அலுவலகத்திற்கு வந்து, டெலிப்ரிண்டர் என்ற கருவியில், சிந்தித்து, அளவுடன் டைப் செய்ய வேண்டும். தலைமையகத்தில் உள்ள டெலிப்ரிண்டர் முன் யாராவது இருந்தால், பதில் கிடைக்கலாம்.இல்லையேல், அடுத்த நாள் காலை பதில் வரும்! பெரும்பாலும், பிர்ச்சினை என்னவென்று மட்டுமே டெலிப்ரிண்டர் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும், நகலுடன், நீண்ட டெக்னிகல் ரிப்போர்ட் தயார் செய்து, கூரியர் மூலம் தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும். அத்துடன், பிர்ச்சினைக்குரிய தரவுகளுடன் ப்ளாப்பிகளும் பறக்கும்.

அனுப்பிய பிரச்சினைக்கு சில முறை, இன்னொரு கூரியர் மூலம் பதில் கிடைக்கலாம். மிகப் பெரிய சிக்கலில் இருந்தால், அந்நாட்களில் லைட்னிங் தொலைபேசி தொடர்பு மூலம் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு (மிக விலை உயர்வான இந்த முறை, எந்த வழியும் இல்லாத பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும்), பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

இன்றைய மின்னஞ்சல், மற்றும், பிர்ச்சினைத் திரையின் நகல், தரவு என்று நொடியில், உலகத்தின் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி தீர்வு காண்பது என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. வார்த்தை ஒன்று பிசகினால், தீர்வு வேறாகிவிடும்! இன்று, சில வாடிக்கையாளர்கள் மற்றும் சக ஊழியர்கள், பிர்ச்சினை என்று வந்து விட்டால், உடனே நாவலே எழுதத் தொடங்கி விடுகிறார்கள் – எல்லாம், சல்லிசாக ஒளி இழை கம்பிகளால் வந்த வினை !!!


எண்பதுகளில், தமிழ்நாட்டிற்கு வெளியே போக்குவரத்து என்பது மிகவும் மோசமாக இருந்தது. என்னுடைய வாடிக்கையாளர், ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம். இந்தத் தொழிற்சாலை, பெங்களூர் – பம்பாய் நெடுஞ்சாலையில் ஊருக்கு வெளியே 25 கி.மீ. தாண்டி இருந்தது. இங்கு செல்ல ஒரே வழி அந்த நிறுவனத்தின் பஸ். 

அந்தத் தொழிற்சாலையில் மிக நேர்த்தியான கேன்டீனும் உண்டு. முதல் முறை அங்கு சென்ற பொழுது, என்னை வரவேற்று, என்ன வேலை என்று விளக்கினார், அங்குள்ள கணினி செண்டர் மேனேஜர். நானும் வேலையில் மிகவும் ஆழமாக இறங்கி விட்டேன். அங்கு வேலை செய்த இன்னொரு நிரலர், என்னை மதிய உணவிற்கு, கேன்டீனுக்கு அழைத்துச் சென்றார். மீண்டும் வேலையில் மிகவும் பிஸியாகிவிடவே, என்ன நேரம் என்று சுத்தமாகத் தெரியவில்லை. இரவு எட்டு மணி இருக்கும், ஒருவர், என்னிடம் வந்து, “நீங்கள் உடனே இரவு சாப்பாடை முடித்துக் கொள்ளுங்கள்” என்றார். கேன்டீன் சென்று உணவருந்தும் பொழுது, ஒருவர் சொன்னதை நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. “கடைசி பஸ் இரவு 12 மணிக்கு” என்றார்.

மீண்டும் வேலையில் மூழ்கி, ஒருவாரு ஒரு நிரலை முழுவதும் சோதனை செய்து மணியைப் பார்க்கையில் காலை 2 மணி! மெதுவாக தொழிற்சாலை வெளியே வந்தால், அந்த பிரம்மாண்டமான இடத்தில், 3 செக்யூரிட்டி மற்றும் நான் மட்டுமே இருந்தோம். 

“கடைசி பஸ் போய் 2 மணி நேரமாகிறது. அடுத்தபடி காலை 7 மணிக்குதான் முதல் பஸ் நகரத்திலிருந்து வரும்”

படுத்து உறங்க அங்கு எந்த வசதியும் இல்லை. எப்படியோ 5 மணி நேரத்தை சேரில் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு, காலை 7 மணி பஸ்ஸிற்காக காத்திருந்தேன். இந்நாளில் உள்ள செல்பேசி அல்லது ஊபர்/ ஓலா ஏதாவது ஒன்று இருந்திருந்தால், குளிரும் ஏஸி அறையில் சிரமப்பட வேண்டியதில்லை. பக்கத்தில் என்ன ஓட்டல் இருக்கிறது என்று கூடத் தெரியாது. 

தன்னுடைய டியூட்டி முடிந்த செக்யூரிடி ஆசாமியும் நானும், காலை 7 மணிக்கு பெங்களூருக்குப் பயணம். சென்றடைந்தால், அங்கு பதிவு செய்யப்பட்ட ஹோட்டல், நான் முன்னிரவு வராததால், இன்னொருவருக்கு அறையைக் கொடுத்து விட்டார்கள். கெஞ்சிக் கேட்டு, எப்படியோ இன்னொரு அறை ஒதுக்கப்பட்டு, ஒரு மூன்று மணி நேரம் உறங்கி எழுந்தேன்.  

முந்தைய இரவு பயணத்தின் பொழுது, செக்யூரிட்டி ஆசாமி ஒரு முக்கிய விஷயத்தைச் சொன்னார். இம்முறை, ஒழுங்காகக் கேட்டுக் கொண்டேன். காலை 10 மணிக்குப் பின், தொழிற்சாலைக்குச் செல்வதற்கு ஊருக்குள்ளிருந்து பஸ் கிடையாதாம். பீன்யா என்ற இடத்திற்குச் சென்றால் தான் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ்.

காலை தொழிற்சாலைக்கு பஸ்ஸில் 9 மணிக்குச் சென்ற கணினி செண்டர் மேனேஜர், 10 மணிக்கு மிகவும் டென்ஷனாகி விட்டார். என்னுடைய மேலாளரை அழைத்து, “நீங்கள் அனுப்பிய நிரலர் காணாமல் போய்விட்டர்” என்று சொல்லி, கடுப்பாக துண்டித்து விட்டார்!

பெங்களூரின் 80-கள் போக்குவரத்து மூலம் பீன்யா அடைந்து, அங்கிருந்து தொழிற்சாலை பஸ்ஸைப் பிடித்து, அங்கு சேருவதற்குள் மதியம் 1 மணியாகிவிட்டது. சென்றவுடன், விசாரனைக்கு அழைக்கப் பட்டேன். ஏராளமாக வார்த்தைகளை விட்டு, பிறகு, என் பதிலை எதிர்பார்த்தார். நான், மெதுவாக, “ஏன், என்னிடம் 12 மணி பஸ்ஸில் நகரை அடைய வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லை?”, என்றவுடன், அவருக்கு, தன்னுடைய தவறு புரிந்தது. முன் தினம் எழுதி, சோதித்த நிரல்களை அவர் இயக்கிப் பார்த்ததில், மிகவும் குஷியாகிவிட்டார்.

என்னிடம் மன்னிப்பு கேட்க அவருக்கு சங்கடமாக இருந்தது என்று நினைக்கிறேன். என்னுடைய மேலாளரை அழைத்து மன்னிப்பு கேட்டதோடு மட்டுமல்லாமல், நான் எழுதிய நிரலைப் புகழ்ந்தும் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரை ஒரு கணினி கருத்தரங்கில் பார்த்த பொழுது என்னிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டது இன்னும் நினைவிருக்கிறது!


எண்பதுகளில் எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு, மிகவும் வித்தியாசமானது. இந்த வாய்ப்பில், எனக்கு கிடைத்த கணினி உலக மற்றும் வாடிக்கையாளர்கள் பக்க மனித அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை. அந்த காலத்தில் வெளிவந்த கணினிகளில் தேக்கத்திற்காக ஃப்ளாப்பிகள் மட்டுமே உண்டு. இந்தியாவின் முதல் வன்தட்டு (hard drive) உள்ள கணினியை நான் பணிபுரியும் நிறுவனம் அறிமுகம் செய்தது. என்னுடைய அதிஷ்டத்தைப் பார்த்து பொறாமை படாத நிரலர்களே இல்லை என்று சொல்லலாம்! அப்படி அந்த வன்தட்டில் என்ன பெரிய விஷயம்? சொன்னால் சிரிப்பீர்கள். 5 மெகாபைட் (5 MB) வன்தட்டுடைய கணினி அது! இன்றைய சிறுவன் கூட அதைவிட அதிகம் தேக்கமுடைய திறன்பேசி வைத்துள்ளான்.

அதென்னவோ தெரியவில்லை. வன்தட்டுடைய கணினியில் வேலை செய்ததற்காக பெரிதாக யாருக்கும் வேலை கிடைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், சக நிரலர்கள் பொறாமை பட்டனர். அதுவும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பளபள ப்ளாஸ்டிக்கில் அந்தக் கணினி ஜொலித்தது. அதில் முதலில் வேலை செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் (உண்மையிலா?). அதுவும் வெகு எளிதில் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தூக்கிச் செல்லக் கூடிய கணினி அது. இத்தனைக்கும், அதில், பாட்டரி எதுவும் கிடையாது. இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்று, மீண்டும் வேலை செய்ய, சுவர் மின் இணைப்பு தேவை!

இன்று, சில பல டெராபைட்டுகளுடன் விளையாடும் என்னைப் பார்த்து யாரும் பொறாமைப் படுவதில்லை. ‘அது அவன் தொழில்’ என்று நகருகிறார்கள். 1980 -களில், ஆரம்ப கணினி ஆசாமிகளான எங்களைப் பார்த்து, பொது மக்களுக்கு அப்படி ஒரு வியப்பு. அத்துடன், ஏ.சி. அறையில் வேலை பார்க்கும் எங்கள் மேல் பொறாமை! கணினி தொழில் என்றவுடன், ‘நீங்க ஐஐடி யா?” என்ற கேள்வி உடனே வருவது மிகவும் சகஜமான ஒன்று. இன்று 8 வயது App நிரலர்களைப் பார்த்து மட்டுமே வியக்கிறோம். 

சுவாரசியம் அதுவல்ல. நான் பணி செய்த நிறுவனத்திடமிருந்து, அதை வாங்கியது ஒரு சின்ன தென் தமிழ்நாட்டு வங்கி. எண்பதுகளில், வங்கிகள் இந்தியாவில் பெரும்பாலும், காகிதத்தில் மூழ்கி வந்த அமைப்புகள். இந்த வங்கியோ, இந்த முறையில் பெரிய வியாபார வாய்ப்பு இருப்பதாக நம்பியது. கடைநிலை ஊழியனான எனக்கு இதெல்லாம் அத்தனை புரியவில்லை. 

நானே பார்க்காத ஒரு கணினியில், இந்த வங்கியின் ஒரு கிளைக்கு வேண்டிய நிரல்களை நான் எழுத வேண்டும். இத்தனைக்கும், அதற்கு முன், அப்படி ஒரு வங்கிக்காக எந்த நிரலையும் நான் எழுதியதில்லை! என் கவனம் எல்லாம், எப்படி இந்த ப்ராஜக்டில் மீண்டு வரப் போகிறோம் என்பது மட்டுமே. ஆனால், மற்றவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது.

அந்த ஊரில், ஒரு நல்ல தங்கும் ஓட்டல் மட்டுமே இருந்தது. வங்கிக்காரர்களுக்கு நான் அங்கு தங்குவேன் என்று தெரியும். பல நாட்கள் வங்கிக்குச் செல்ல குளித்து கிளம்புகையில், யாராவது ஒரு வங்கி நபர், அங்கு வரவேற்பில் காத்திருப்பார்.

“எப்படியாவது மேலிடத்தில் நீங்க ஒரு வார்த்தை சொன்னால், புதிய கம்ப்யூட்டர் கிளையில் எனக்கு மாற்றம் கிடைக்கும். செய்றீங்களா?”

அதென்னவோ தெரியவில்லை. நான் ஒரு வார்த்தை சொன்னால், வங்கி மேலிடம், நான் சிபாரிசு செய்யும் நபரை மாற்றம் செய்யும் என்ற வதந்தி எப்படியோ பரவிவிட்டது. இதில் எந்த உண்மையும் இல்லை. வங்கி என்றும், என்னிடம், உங்களுக்கு இந்த கணினியை இயக்க யார் தேவை என்று கேட்டதே இல்லை. எனக்கோ, வேலை செய்யாத என் நிரல்களை எப்படி சரி செய்வது என்று சிந்திக்கவே நேரமில்லை. அத்துடன், வங்கியில், பலர், கணினி ப்ராஞ்சில் வேலை செய்தால், அப்படியே கணினித் துறைக்குள் நுழைந்து என் போன்றோரைப் போல வெற்றி பெற்று விடலாம் என்ற கனவும் இருந்தது. 

இவர்களைச் சொல்லி குற்றமில்லை. அந்நாளைய வங்கி வேலை, பெரிதாக முன்னேற்றம் அளிக்கும் வேலையாக இல்லை. நேற்று ஒரு ப்ரோக்ராம் எழுத வந்த ஒருவர், நாளை இன்னொரு கம்பெனியில் பெரிய மேனேஜராவதை இவர்களைப் பார்த்து, தனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குவது நியாயம்தான். அத்துடன், இந்த கணினி ஆசாமிகள், எப்பொழுதும், ஊருக்கு ஊர் பயணம், நல்ல ஹோட்டல்களில் தங்குவது என்று வெற்றி வாழ்க்கை வாழ்வதாக ஒரு பிம்பமும் இருந்தது. அத்துடன், எப்பொழுதும் ஏசி -யில் சுகமான வாழ்க்கை என்றும் நினைத்தார்கள். இந்தத் துறையில் உள்ள உழைப்பு, மற்றும் சவால்களைப் பெரிதாக நினைக்கவில்லை. அத்துடன் இன்னொரு மிகப் பெரிய குறை இவர்கள் பார்வையில் இருந்தது. அதாவது, கணினியில் வேலை செய்தால், அதை எப்படி ப்ரோக்ராம் செய்வது என்பது மிக எளிதில் சாத்தியம் என்ற நினைப்பு, அந்நாளைய கணினியில் முற்றிலும் தவறு.

மேற்கொண்டு சுவாரசியமான இந்த அனுபவத்தை, அடுத்த பகுதியில் தொடர்வோம்.

Series Navigation<< அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 5 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.