அதிரியன் நினைவுகள் -22

This entry is part 22 of 24 in the series அதிரியன் நினைவுகள்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

பொற்காலம்

ஆஸ்ரோஸ் உடனான சந்திப்பிற்குப் பின்வந்த கோடைகாலம்  ஆசியா மைனரில் கழிந்தது: பித்தினியாவில் அரசுக்குச் சொந்தமான காடுகளில்  எனது உத்தரவின் பேரில் மரங்கள் வெட்டப்பட்டன, அதனை நானே நேரில்   பார்வையிட விரும்பியதால் அங்கு  தங்க வேண்டியதாயிற்று. இந்நிலையில் கண்ணியமான மக்களும் கற்றோர்களும் வாழ்ந்த அற்புதமான நிகோமீடியா(Nicomède) நகரில், மாகாண நிர்வாகி கினேயுஸ் பொம்ப்பேயுஸ் புரோக்கொலஸ் என்பவரின் இல்லத்தில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது, அம்மாளிகை முன்னாள் அரசருடைய குடியிருப்பு. அங்கு தங்கிய நாட்களில் இளம்வயது ஜூலியஸ்சீசர் காலத்து மகிழ்ச்சிக்குரிய நாட்கள் ஞாபகத்திற்கு வந்தன. போதிய வெளிச்சமின்மையோடு  குளிர்ச்சியுமாகவிருந்த எங்களுடைய விசாலமான அறைகளில் இதமான ப்ரோப்போண்டைடு(le Propontide)1 கடற்காற்று. புரோக்கொலஸ் ஒரு கலா இரசிகர், எனக்கென இலக்கிய கூடல்களை ஏற்பாடு செய்தார். மாளிகைக்குப் பின்புறமிருந்த பூந்தோட்டத்தில் பான்(Pan) கடவுள் நிமித்தம் உருவாக்கப்பட்டிருந்த நீரூற்று அருகே இலகிய நிகழ்ச்சி ஏற்பாடாகியது,  அதில் வெளியிலிருந்து வந்திருந்த சோபிஸ்டுகள் (கிரேக்கமொழி பண்டிதர்கள்), சிறுசிறு குழுவினராக மாணவர்கள், மொழி அபிமனிகள், இலக்கிய அபிமானிகளென்று பலரும் கலந்துகொண்டனர். அவ்வப்போது பணியாள் ஒருவன் சுடுமண் ஜாடியொன்றை  நீருற்றில் முங்கி எடுப்பதைக் கண்டேன்; அன்றையதினம், தெளிவில் அவன் ஜாடியில் கண்ட தூய மென்நீரினும் பார்க்க, வாசிக்கப்பட்டக் கவிதைவரிகள்  (மிகத்தெளிவானவை எனநினைத்தவை  கூட) அவ்வளவு கடினம். 

அன்றுமாலை லைகோஃப்ரோனுடைய(Lycophron)2 மிகவும் சிரமமமான  படைப்பொன்றை வாசிக்க நேர்ந்தது. அடுக்குமொழி சொற்றொடர்கள்,  குறிப்பீடுகள் இவற்றோடு சிக்கலான அவ்வரிகள் ஏற்படுத்திய தாக்கத்திற்காகவும், விளைவுகளுக்காகவும் நான் அதனை விரும்பினேன். சற்றுத்தள்ளி பதின்வயது இளைஞனொருவன் உட்கார்ந்திருந்தான், புரிந்துகொள்ள சிரமமான அவ்வரிகளை கூர்ந்து கேட்பதுபோல எனக்குப்பட்டது. ஆயினும் அவனுடைய கவனம் வேறெங்கோ இருக்க, அக்காட்சி கானகமொன்றில் வெகு தொலைவிலிருந்து வருகிற  பறவையொன்றின் கூவலை, மேய்ப்பன் ஒருவன் எவ்வித உணர்ச்சியுமின்றி கேட்பதை நினைவூட்டியது. அவனிடம் எழுதுவதற்குப் பலகையோ, எழுதுகோலோ இல்லை. நீரூற்றின் அலங்காரத் தொட்டியில் அமர்ந்திருந்தவன் அதன் வழவழப்பை விரல்களால் தடவிக்கொண்டிருந்தான். அரசாங்க நிர்வாகத்தில் பையனுடைய தகப்பனுக்குச் சாதாரண ஊழியமென்றும்; இளம் பிராயத்தில்  மூதாதையர்களிடம் வளர்ந்த அப்பையன், பள்ளிப்பருவத்தில் நிகோமீடியா நகரில், அவனுடைய பெற்றோர்களின் விருந்தினராக ஒருகாலத்தில் தங்கியிருந்த, பணம்படைத்த மரக்கல உரிமையாளர்  ஒருவர் பொறுப்பில் விடப்பட்டிருந்தான் எனவும் தெரியவந்தது. 

இலக்கியகூடலில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் செல்லட்டுமென காத்திருந்து, அவனை என்னுடன் வைத்துக் கொண்டேன். அதிகம் படித்தவனில்லை, கிட்டத்தட்ட அனைத்திலும் அறியாமை வெளிப்பட்டது, ஓரளவு சிந்திக்கும் திறனிருந்தும் வெகுளி. அவன் பிறந்த ஊரான கிளாடியோபொலீசை(Claudiopolis) நான் அறிவேன்:  எங்கள் நாவாய்களின் பாய்மரங்களுக்குப் பயன்படும் பைன் மரக்காடுகள் அங்கிருந்தன, அவற்றையொட்டி அமைந்திருக்கிற அவனுடைய இல்லம், மலையுச்சியில் இருக்கிற அட்டிஸ் ஆலயம், அவன் விரும்பிக்கேட்கிற இரைச்சல்மிகுந்த இசை, அவனுடைய ஊர்ப்பகுதிகளில் காண்கிற அழகிய புரவிகள், விசித்திரமான தெய்வங்களென அவன் விவரித்துச்சொல்ல அக்கறையோடு கேட்டேன். அவனுடைய குரல் திரைமறைவிலிருந்து வந்ததுபோல ஒலித்தது, அவனுடைய கிரேக்க வார்த்தைகள் உச்சரிப்பில் ஆசியநாட்டவரின் சாயல். திடீரென்று அவன் கவனத்திற்கு நான் வந்ததைப்போல அல்லது எனதுபார்வையை சகித்துக்கொள்ள முடியாதவன்போல தடுமாறினான், வெட்கப்பட்டான், அதைத் தொடர்ந்து, பின்னாட்களில் எனக்கும் பழகிப்போன அவனுடைய பிடிவாதமான மௌனத்தில் ஆழ்வது அவனுடைய வழக்கம். ஒருவித நெருக்கம் எங்கள் இருவருக்கிடையே துளிர்த்தது. எனது பயணங்கள் அனைத்திலும் துணையாக வந்தான், ஒருசில அற்புதமான வருடங்களின் தொடக்கம் அது.

ஆண்ட்டினஸ்(Antinous)ஒரு கிரேக்கன்: நான் அதிகம் அறிந்திராத அவனுடைய பழமையான குடும்பநினைவுகளில் மூழ்கினேன்.  ப்ரோம்பண்டைடு கடற்கரையின் ஆரம்பகால குடியேற்றவாசிகள் அவர்கள். அம்மக்களின் தொடக்கக்காலத்திற்கு எனது நினைவு பயணித்தது. தூய திராட்சை இரசத்தில் ஒருசொட்டு தேனின் கலப்பினால் உண்டாகும் பாதிப்பையும் வாசத்தையும், ஆசியக்கண்டம் சற்றே உவர்ப்பான இவனுடைய கிரேக்கக் குருதியில் ஏற்படுத்தியிருந்தது. ஒருபக்கம் அப்பல்லோனியஸின் (Apollonius) சீடர் ஒருவருக்குரிய ஆன்மீக குருட்டுநம்பிக்கைள், இன்னொருபக்கம் மாமன்னரின் முடியாட்சியிடம் ஒரு கீழைத்தேய குடிமகனுக்குள்ள விசுவாசம் இரண்டையும் அவனிடம் கண்டேன். அவன் இருப்பதையே உணரமுடியாது, அப்படியொரு அசாதரண அமைதி அவனிடம் நிலவும்: ஒருசில விலங்குகளைப்போலவும் விசுவாசமிக்க ஒரு பூதத்தைப் போலவும் என்னைத் தொடர்வான். சுறுசுறுப்பு, சோம்பல், வெறித்தனம், நம்பிக்கையென்று இளம் நாய்க்குறிய ஏராளமான குணங்கள் அவனிடம் இருந்தன. அணைப்பதைப் போலவே, ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து, என்னருகிலிருந்த அழகானதொரு வேட்டைநாய்.

அவனுடைய மகிழ்ச்சி, அவனுடைய மரபு சார்ந்த வழிபாடு என்றில்லாத பெரும்பாலான பிற விஷயங்களில்,  அவனிடம் வெளிப்பட்ட அகந்தைமிக்க அலட்சியத்தை வியந்துள்ளேன். இக்குணம் ஒருவகையில் எதுநடந்தால் எனக்கென்ன என்று இருக்கவும், விளைவாகத் தேவையற்ற கசப்புகளைத் தவிர்க்கவும், கற்றும் கேட்டும் சம்பாதித்த நற்பேறுகளுக்கும், தீவிரத்தன்மைகளுக்கும் மாற்றாகவும் இருந்து அவனுக்கு உதவியது. சற்றே கடினமான தன் மென்போக்கையும், ஒட்டுமொத்த உயிர்வாழ்க்கையையும் அடக்கமான சேவைக்கென்று வழங்கும் அவனுடைய பண்பைக் கண்டு வியந்திருக்கிறேன். இருந்தபோதிலும் என்னிடம் தன்னை ஒப்புவித்த இந்த சரணாகதி கண்மூடித்தனமானதல்ல. எதையாவது அங்கீகரிக்கிற வகையில்  அல்லது கனவின்பொருட்டு அவனுடையை கண்ணிமைகள் அடிக்கடித் தாழ்வதுண்டு, ஆயிலும் அவற்றுக்கு அதுவே முழுநேர வேலையுமல்ல. எந்தஒன்றையும் கூர்ந்து கவனிக்கிற அவனுடைய கண்கள் என்னை நேருக்குநேர் பார்க்கிறபோது என்னை எடைபோட முயற்சிப்பதைப்போல உணர்ந்திருக்கிறேன். என்மீது அவன் வைத்திருந்த அதீத நம்பிக்கை, என்னைக் கீழைத்தேய கடவுளாக உருமாற்றியிருந்தது. எனது பிடிவாத குணமும், பிற்காலத்தில் தொற்றிக்கொண்ட திடீரென சந்தேகிக்கும் குணமும் பொறுமையுடனும், வருத்தத்துடனும் அவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. என்வாழ்க்கையில்  முழுமையானதொரு எஜமானாக நான் இருக்கநேர்ந்தது ஒரே ஒரு முறைதான், அதுகூட அந்த ஒரு ஜீவனுக்காக. 

அந்த முகம் அழகானது, அதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை, இருந்தும் அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் சொல்லாததற்கு, முற்றிலுமாக தன்னை  அவனிடம் இழந்திருந்த மனிதனொருவனின் தயக்கமாக இதனை பார்க்கக்கூடாது. எவ்வளவு தீவிரமாக தேடினாலும், நாம் தேடுகின்ற முகங்கள் நமக்குக் கிடைப்பதில்லை, தப்பிவிடுகின்றன, அப்படித் தேடி  அலுத்து கிடைத்த கணமொன்றில் கண்டதே அவனுடைய முகம்: கருத்தடர்ந்த தலைமுடியின் கீழ் சாய்வாக ஒருதலை, அதில் கண்ணிமைகளுக்கு இசைவாக நீண்டும், வளைந்துமிருக்கும் விழிகள், இளம் முகமோ அகன்று, அவ்விழிகளுக்கென்று அமைந்ததுபோலவும் இருக்கும். அவனுடைய  மென்மையான உடல் ஒருவளரும் செடியைப்போல தொடர்ந்து உருமாறிக்கொண்டிருந்தது,  இந்த மாற்றங்களில் சிலவற்றிர்க்கு காலமும் பொறுப்பு. இனியும் இளம்பிராயம் எனச்சொல்லிக்கொண்டிருக்க முடியாது, வளர்ந் விட்டான்.  ஒரு கிழமை முழுக்க அவன் சோம்பலுடன் இருந்தால்போதும், அவனது தசைகளின் இறுக்கம் தளர்ந்துவிடும்; ஒரு பிற்பகலை  வேட்டைக்கென்று அவனால் ஒதுக்க முடிந்தால் தளர்ந்த உடல் இறுக்கம்பெற்று,  தடகள பயிற்சிக்குச் சென்றதுபோல வேகமும் பெறும். அதுபோல ஒரு மணிநேரம் வெயிலில் வாடினால், மல்லிகை நிறத்தையொத்த அவனுடல் தேன் நிறத்திற்கு மாறிவிடும். இளம்வயது குதிரைக்குரியதுபோன்ற நீண்டுவளர்ந்த  திடமான கால்கள்; இளம் பிராயத்துக்கேயுரிய மென்மையான வளைவை இழந்திருக்கும் கன்னம், மெலிதான ஒரு குழியோடு முன் தள்ளிய முகவாய். இளம் ஓட்டப்பந்தய வீரனாக, விளையாட்டரங்கில் ஓடும்போது, அவனுடைய  மார்பு புடைத்து பக்‌ஷாந்த்(Bacchante)3 பெண்ணின் மார்பகம்போல வளைவுகளுடன் ஒளிரும். அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் அவன் உதட்டைப் பிதுக்கினால் அதற்கு கடுமையான கசப்பென்றோ சோகமான திருப்தியென்றோ பொருள்கொள்ளவேண்டும். அதேவேளையில், அம்முகத்தை அல்லும்பகலுமாக வடிவமைத்ததில் எனக்கும் பங்குண்டு.

இவ்வருடங்களைத் திரும்பிப்பார்க்கிறபோது உண்மையில் அவை எனக்குப் பொற்காலம், சங்கடங்களின்றி அனைதும் நடந்தேறின, பட்டபாடுகள் அனைத்திற்கும் இறையருளால் உரிய பலன்களைப் பெற்ற காலம். பயணங்களை விளையாட்டாக எடுத்துக்கொண்ட காலம். முன்பின் அறிந்திராத சந்தோஷங்களல்ல, அதேவேளையில் அளவோடும், நன்கு திட்டமிட்டும்   கையாளப்பட்டவை. என் வாழ்க்கையில் இடைவிடாமற் குறுக்கிட்ட நிர்வாகப் பணிகளும் மகிழ்ச்சியைத் தந்துள்ளன என்கிறபோதும் அவற்றில்  அதிகாரத்தையும், நல்ல நேரத்தையும் காலம் தாழ்ந்தே பெறமுடிந்தது,  இக்காலக் கட்டத்தில் என்னுடன் படுத்திருந்த உடல் மட்டுமின்றி அந்த அறையிலிருந்த உடமைகளுங்கூட, பொற்காலசூழலெனும் நதியில் நீராடிய ஒளிமயமான நண்பகலையும். வெயிலோடு கூடிய சிறுதுயில் நேரங்களையும் அடையமுடிந்த தருணங்கள். அவனுடைய வெகுளித் தன்மைக்குத் துணைநின்ற வேட்கையும், பலவீனத்தில் பிறவற்றிர்க்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல.  எஞ்சியிருந்த அவனுடைய மானுட அழகும், கண்களைக் கவர்ந்தது, நானொரு வேட்டைக்காரன் என்பதைப் புரிந்துகொண்டு, தன்னுடைய பறவை இருத்தலை எச்சரிக்கையுடன் முடித்துகொண்டது. தடாலடியாக தொடங்கிய இத்துணிகரவிளையாட்டு எனது வாழ்க்கையை வளப்படுத்தியதோடு எளிமையையும் கற்றுத்தந்தது. எதிர்காலம் குறித்த கவலைகளில்லை ஆனதால், குறிசொல்வோரிடம் எனக்குக் கேள்விகளுமில்லை. வானமண்டலத்தில் கண்ட விண்மீன் வரிசைகள் எனக்குச் சித்திரக் கோடுகளாகத் தெரிந்தன. தீவுகளின் அதிகாலைத் தொடுவானத்தின் வெளிறிய தோற்றங்களையும் ; வலசைபோகும் பறவைகள் நடமாடுகிற, நிம்ப் தேவதைகளுக்கென்று அர்ப்பணிக்கபட்ட குளிர்ச்சிமிக்க குகைகளையும் ; அந்தி வேளைகளில் மிகுந்த சிரமத்துடன் தாழப்பறந்துசெல்லும் காடைக்குருவிகள் கூட்டத்தையும் ஒருபோதும் இதற்குமுன்பு இவ்வளவு  மகிழ்ச்சியோடு கவனித்ததில்லை. கவிஞர்களின் படைப்புகளைத் திரும்பவாசிதேன், பெரும்பாலானவை எனக்கு மகிச்சி தரவில்லை, ஒரு சிலவே முன்பைவிட சிறப்பாக இருந்தன, பின்னர் நானுங்கூட சிலவற்றை எழுதினேன் ஆனால் வழக்கம்போல அவை கொண்டாடும்வகையில் இல்லை. 

தொடரும்….

————————————————————————————————————————————-

1, ப்ரோப்போண்டைடு (le Propontide) என்பது இன்றைய மர்மரா கடலின்  (Sea of Marmara) பழங்காலப் பெயர்.  ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல்.  2 .ஃப்ரோன் (Lycophron) (கிமு 320 – கிமு 280) – கிரேக்க கவிஞர் மற்றும் துன்பவியல் நாடக ஆசிரியர்

Series Navigation<< அதிரியன் நினைவுகள் -21அதிரியன் நினைவுகள் – 24 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.