ஸ்வர்ண சீதா என்ற நாவல்

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

ஸ்வர்ண சீதா ஒரு விசித்திரமான நாவல். ராவணனுடைய சிறையில் இருந்து சீதா தேவியை விடுவித்து அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்துகொண்ட பின சீதாவின் கற்பு பற்றியும், அவளை அழைத்து வந்து வாழும் அராசனின் தர்ம லட்சணம் பற்றியும் உலகில் எழும் அவதூறு பற்றி ஒற்றர்கள் மூலம் கேட்டு, அரசனாக மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பது முக்கியம் என்பதால் ராமன் கர்பிணியான சீதாவை காட்டிற்கு அனுப்பிவிட்டான் என்றும், அஸ்வமேத யாகம் செய்ய வேண்டிய சந்தர்பத்தில் மனைவி அருகில் இருக்க வேண்டும் என்பதால் பொன்னால் சீதையின் சிலையைச் செய்து மனைவி ஸ்தானத்தில் இருத்தி, யாகத்தை நடத்தினான் என்றும் கூறப்படும் கதை நாமனைவரும் அறிந்ததே. 

ஆனால் சுவர்ண சீதா நாவலின் கதைப் பொருளில் அது மறைவாக உள்ள ஒரு நூலிழை மட்டுமே. ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்குப் பின் சீதை பட்டத்து ராணியாக  காட்டிய அதிகாரம், சீதாவையும் ராமனையும் சுற்றி பின்னப்பட்ட அரசியல், அவற்றை அவிழ்ப்பதற்கும், தீர்ப்பதற்கும் நடந்த முயற்சிகள் – இந்த நாவலின் கருப்பொருளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.   

பௌலஸ்தியனின் பிரேம கதை என்ற நாவலில் விரிவாக கூறப்பட்ட, சீதையை  மையமாகக் கொண்ட அரசியல், இதில் கதைக் கருவாகியுள்ளது. இதில் கதாநாயகி சீதை. வில்லி சூர்ப்பனகை. பௌலஸ்தியனின் பிரேம கதை நாவலில் ராமனிடம் சூர்ப்பனகை கொண்ட மதுரப் பிரேமையையும், ராமன் அவளை இரண்டாம் மனைவியாக ஏற்று ஆதரித்தால் நன்றாக இருக்கும் என்ற ராவணனின் ஆசையையும் சித்திரித்த ஆசிரியை ஹேமலதா, இதில் சூர்ப்பனகையை அனைத்து துன்பங்களுக்கும், கலகங்களுக்கும் காரணமான அதர்ம சக்தியாகவும் அனைவராலும் வெறுக்கத்தக்க பெண்ணாகவும் சித்திரிக்கிறார். இலங்கை அரசின் மீதும் அதன் செல்வத்தின் மீதும் கொண்ட ஆசையும் அதிகாரப் பேராசையும்  சூர்ப்பனகையை ஆட்டி வைத்து, அழிவின் விளிம்பு வரை அவளை அழைத்துச் செல்கிறது.  

பௌலஸ்தியனின் பிரேம கதை நாவலில் அனுமன், ‘சீதாயாணம்’ என்ற நூலை எழுதுவதாக வருகிறது. சுவர்ண சீதா நாவலில் அனுமன் அந்த வேலையைத் தொடருவதாகவும் பாறைகளின் மேல் எழுதி கடலில் பாதுகாப்பாக வைப்பதாதாகவும் கூறப்படுகிறது. ஹனுமத்ராமாயணம் என்று ஒன்று இருப்பதாகவும், அனுமான் ராமனை அருகிலிருந்து பார்த்தவர் என்பதால் ராமனுடைய வாழ்க்கையை மலைப் பாறைகளின் மீது எழுதினார் என்றும் வால்மீகி ராமாயணத்திற்கு போட்டியாக இருக்கக் கூடாது என்று அதைக் கடலில் போட்டார் என்றும் உலக வழக்குச் செய்தி ஒன்று உள்ளது. அதனை லதா இவ்விதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். 

அதுமட்டுமல்ல. அனேக இராமாயண கதைகளைப் படித்து அவர் என்னென்ன தெரிந்து கொண்டாரோ அவை அனைத்தையும் அனுமன் கூறியதாகவும், அவை கேட்டவர்களின் அபிப்பிராயம் என்பது போலவும் இந்த நாவலில் பகுதியாக்கி   தன் சொந்த விளக்கங்களையும் சேர்த்துள்ளார். 

ராமாயணம் நடந்த காலம் ஒன்று உண்டு என்று நம்பினால், ராமாயணங்கள் அனைத்தும் அந்த சம காலத்திலேயே எழுதப்பட்டவை அல்ல என்பதையும் நம்பவேண்டும். ஏனென்றால், பல காலமாக ராமாயணங்கள் எழுதப்பட்டு வருகின்றன. காவியம், நாடகம் என்று பல வடிவங்களில் வந்துள்ளன. அவை அனைத்தும் ராமாயணக் காலத்திலேயே வந்தாற்போலவும், ராம, லட்சுமணர்களின் முன்னிலையில் அனுமன் அவற்றை விவாதத்திற்கு எடுத்து வந்தது போலவும் எழுதியிருப்பது பொருத்தமாக இல்லை. 

சீதையும் ராமனும் அரசாட்சி செய்து வந்த போது அவர்களைப் பற்றி ஏதேதோ அவதூறுகளைப் பரப்பி, பிரச்சாரம் செய்து, உண்மையைத் திரித்துப் பேசுவதையே இலக்காகக் கொண்டு அனேக ராமாயணங்கள் எழுதப்பட்டு வந்தன என்ற குறிப்பு இதில் உள்ளது. உண்மை என்ன? அவர்களின் வாழ்க்கையைத் திரித்துக் கூற வேண்டிய தேவை யாருக்கு இருந்தது? அந்த செயல் எவ்வாறு நடந்தது என்ற கேள்விகளுக்கு பதில் இந்த நாவலின் கதைக் களத்தில் கிடைக்கிறது. 

லதாவின் கற்பனைப்படி, சீதை மண்டோதரியின் புதல்வி. பௌலஸ்தியனின் பிரேம கதையில் வேறு விதாமாகக் கூறிய லதா, இந்த நாவலில் சீதை மண்டோதரிக்கும் ராவணனுக்கும் பிறந்த குழந்தை என்று கூறுகிறார். அப்படியென்றால் சீதை தன் பெற்றோரிடம் வளரவில்லை. அவள் அங்கேயே வளர்ந்திருந்தால் ராவணனின் செல்வத்திற்கும், அதிகாரத்திற்கும் வாரிசாகியிருப்பாள். சூர்ப்பனகைக்கு அவற்றின் மீது எப்போதிருந்தோ ஆசை இருந்தது. அதனால், ‘சீதையின் பிறப்பு இலங்கைக்குக் கேடு’ என்று ஒரு தவறான செய்தியைக் கற்பித்து, அந்தக் குழந்தையை இலங்கையிலிருந்து நீக்கி விடும்படி அண்ணனைத் தூண்டுகிறாள். தண்டகாரண்ய பிரதேசத்தைக் காணிக்கையாக பெற்றுக் கொண்டு ராவணன் அந்த பெண் குழநத்தையை ஜனகருக்குக் கொடுக்கிறான். ஜனகரின் வீட்டில் வளர்ந்த சீதை, ஜானகி ஆகிறாள். தண்டகாரண்ய பிரதேசத்தைத் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டு அலைந்து திரிந்த சூர்ப்பனகை, ராமனுடைய வனவாச காலத்தில் சீதையைப் பார்த்து மண்டோதரியின் முகச் சாயல் இருப்பதை உணர்ந்து அவள் மேல் பகை தீர்த்துக் கொள்ள நினைக்கிறாள். சூர்ப்பனகையால் சீதைக்கு ஆபத்து இருப்பதை அறிந்த ராவணன் அவளை எடுத்து  வந்து தன் வீட்டில் வைத்து கொள்கிறான். ராமனோடு போருக்குக் கிளம்பும் முன், இலங்கைத் தீவின் செல்வம் அனைத்தையும் சீதையின் பெயரில் உயில் எழுதி, அவளுடைய தலைப் பின்னலில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி சீதையிடம் கொடுக்கிறான் ராவணன். அந்த விஷயம் எப்படியோ சூர்பனகைக்குத் தெரிந்து விடுகிறது. சீதையின் அக்னிப் பிரவேசத்தை கட்டாயமாக்கும் விதமாகக் கதை கட்டி விடுகிறாள். மண்டோதரியின் அறிவுரையால் அனுமன் சீதையை அக்னியில் இருந்து விடுவித்து அழைத்து  வருகிறான். 

ராவணனின் மரணமும் விபீஷணனின் பட்டாபிஷேகமும் நடந்து முடிந்தன. சீதையும் ராமனும் அயோத்தியில் சுகமாக இருப்பதை அறிந்த சூர்ப்பனகை,  இலங்கையின் செல்வத்தை அபகரிப்பதற்காக தன் மகன் சம்பூகனோடு சேர்ந்து சதித் திட்டம் தீட்டுகிறாள். அயோத்தியின் அந்தப்புரத்திற்குள் தன் ஆட்களை நுழைக்கிறாள். அதனை அறிந்த பட்டத்துராணி சீதை, அனுமனை ஒற்றர் படையின் தலைவனாக்கி உண்மையை அறிந்து வரச் செய்கிறாள். அனுமன் பல இடங்களுக்கு அலைந்து, பலரைச் சந்தித்து, மக்கள் கூட்டத்திற்குள் சஞ்சரித்து அனைத்திற்கும் காரணம் சூர்ப்பனகையின் பேராசை என்றும் ஆரியர்களின் மீதும், பிராமணர்களின் மீதும் ஆரியர் அல்லாதவர்களிடம் வெறுப்பைத் தூண்டுவதன் மூலம் சூர்ப்பனகை தன் சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கிறாள் என்றம் அறிந்து கொள்கிறார். அவர் அளித்த செய்திகளின்படி சதித் திட்டத்தை உடைப்பதற்கு ராமன் அனுமனோடு சேர்ந்து மாறு வேடம் தரித்துச் செல்வது… என்று, இப்படிப்பட்ட சம்பவங்களோடு ஒரு குற்ற விசாரணை நாவலாக இதனைக் கொண்டு செல்கிறார் லதா. 

சீதையின் கற்பு குறித்து அவதூறை கற்பித்தவள் சூர்ப்பனகை. ஆயின் அந்த காரணத்தால் அன்றி, அந்தப்புர சதிகள் ஒரு முடிவுக்கு வராமல் தான் அயோத்தியில் பிரசவம் பார்த்துக் கொள்வது அத்தனை நல்லதல்ல என்று முடிவெடுத்த சீதை தன் தாய் மண்டதரியின் ஆசிரமத்தின் அருகில் இருக்கும்  வால்மீகி ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்கு குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்ததாக லதா இந்த நாவலில் கற்பனை செய்துள்ளார். அவள் அந்தப்புரத்தில் இல்லாத நேரத்தில் அவள் இல்லை என்ற செய்தி யாருக்கும் தெரியாமல் இருப்பதற்கு சுவர்ண ஸீதாவின் சிலையை தயாரித்தான் என்பது மற்றுமொரு கற்பனை. சீதை எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை பெறவில்லை. தாய் மண்டோதரி, சிற்றன்னை சரமா, தன தந்தை ராவணனுக்கு வேறொரு பெண் மூலம் பிறந்த தங்கை மரீசி இவர்கள் அனைவரும் உடனிருக்கையில் லவனையும் குசனையும் ஈன்றெடுக்கிறாள். ராவணனின் தாய் கைகஸியும் அவளைப் பார்ப்பதற்கு வருகிறாள். பாம்பு கடித்து சூர்ப்பனகை இறந்து போகிறாள். தாய் கைகசியோடு கூட அனைவரும் அவளை வெறுக்கிறார்கள். அவள் உடலை தகனம் செய்தால் சுற்றுச் சூழல் பாழாகிவிடும் என்று பூமியில் ஆழமாகத் தோண்டி உப்பைக் கொட்டி அவள் உடலைப் புதைத்தார்கள். ராமன் அதற்குள் அந்தப்புர சதிகளை உடைக்கிறான். தன்  சாயலில் இருக்கும் இரட்டை சகோதரியை வரவழைத்து அந்தப்புரத்தின் சேவையில் சூர்ப்பனகை சேர்த்திருந்தாள். சூர்யநகை போன்ற அந்த பகைவர்களைக் கண்டுபிடித்து  சிறையில் அடைகிறான் ராமன். லவனோடும் குசனோடும் சீதை மீண்டும் அயோத்தியை வந்தடைகிறாள். அவர்களைப் பார்ப்பதற்கு வந்த அகல்யா தேவியின் சொற்படி சூர்யநகை மன்னிக்கப்பட்டு, சந்திரநகையோடு சேர்ந்து ராஜ தம்பதிகளுக்கு சாமரம் வீசும் பணியில் அமர்த்தப்படுகிறாள். அவர்கள் இருவரும் ராவணனுக்கு வேறொரு மனைவி மூலம் பிறந்த பெண்கள். சூர்யநகை, சூர்பனகையின் மகன் சம்பூகனின் மனைவி. அத்தை சூர்ப்பனகை மரணித்துவிட்டாள்.  கணவனை விட்டு விலகி, ராமனின் சேவையில் காலத்தைக் கழிக்கிறாள் சூரியநகை.

ராமன் சம்பூகனையும் வதைக்கிறான். அவன் தவம் செய்தான் என்பதற்காக அல்ல. அசோகவனத்தில் குழந்தைகளோடு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது தன் சேவையில் இருந்த சூர்யநகையை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முயன்று கொலை செய்தான் என்பதால் சம்பூகனை ராமன் வதைக்கிறான்.  அதோடு சத்ரு நாசனம் முழுமையடைகிறது. 

இவ்விதம் ராமாயணத்தோடு தொடர்புடைய, வழக்கத்தில் இருந்த பலப்பல கதைகளை ஒன்றாகக் கலந்து, சீதையை மையமாக வைத்து புதிதாக ஒரு கதையை கற்பனை செய்து லதா எழுதிய நாவல் சுவர்ண சீதா. 

ராமன் பிள்ளைகளை கல்விக்காக அனுப்பிவிட்டு சகோதரர்களுக்கு இக்ஷ்வாகு ராஜ்ஜியத்தின் பகுதிகளைப் பிரித்துக் கொடுத்து விட்டு, சீதையோடும் அனுமனோடும் சேர்ந்து வானப்ரஸ்தத்திற்கு கிளம்பியதாக நாவல் முடிகிறது. தன் சகல நல்ல குணங்களாலும் சாமர்த்தியங்களாலும் சீதை சுவர்ண சீதை ஆனாள் என்பதால் இந்த நாவலுக்கு அந்தப் பெயர் வந்ததே தவிர, பொன்னால் செய்த சீதையின் பொம்மையால் அல்ல. 

ராமனுடைய வானபிரஸ்தத்தைப் பற்றி குறிப்பிட்டு, “நம் இந்த வராலாறு, இந்த ராம ராஜ்ஜியம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறாயா? எதிர்காலத்தில் எத்தனை பேருக்கு என் ராமாயணமும், உன் சீதாயாணமும் விரக்தியை ஏற்படுத்துமோ? அப்போது அனுமன் என்ன செய்வார்? வால்மீகி என்ன செய்வார்?” என்று சீதையிடம் கூறுவது போல் லதா எழுதிய சொற்கள் கவனிக்கத்தக்கவை. 

பௌலஸ்தியன் மட்டுமல்ல. ராமன் கூட தம்மைப் பற்றி எதிர்காலம் என்ன தீர்ப்பு அளிக்குமோ என்று கவலைப்பட்டவர்களே. அவர்களுக்கு எதிர்காலம் என்பது லதாவுக்குச் சமகாலம், நிகழ்காலம். அந்த காலத்தில் வெளிவந்த ராமாயணத்தின் விமரிசனம், படைப்பாற்றலின் வடிவு பற்றிய விளக்கங்கள் போன்றவை  அவரிடம் ஏற்படுத்திய எரிச்சலுக்கு அது ஒரு வெளிப்பாடு என்று எண்ணலாம். 

ராம கதையின் படைப்பு வாழ்க்கையை உய்விக்கும் செயல் என்றும், கவிஞன் ராமாயணம் எழுதாமல் வேறு எத்தனை கதைகள் எழுதினாலும் பயன் இல்லை என்றும் அனுமனைக் கொண்டு சொல்லச் செய்த கூற்று லதாவின் அந்தரங்க உள்ளத்தோடு தொடர்புடையதே. தான் எழுதிய ராமாயணக் கதையின் ஞானத்திற்கும், ராம பக்திக்கும், சீதா மாதாவின் வழிபாட்டிற்கும் அனுமனைச் சார்ந்திருந்த லதா இந்த நாவலில், அனுமனாகவே மாறி விடுகிறார். 

உமர் கயாம் என்ற நாவல்

லதா எழுதிய வராலாற்று நாவல் உமர்கயாம். 2013 சாஹிதீ பதிப்பாக இந்த நாவல் கிடைக்கிறது. நாவல் எழுதப்பட்ட கால விவரங்கள் கிடைக்கவில்லை. 

பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெர்சியன் கணித, பூகோள மேதை கவி உமர் கயாம். மதுவையும் மாதுவையும் அனுபவிப்பதையே வாழ்க்கையின் தத்துவமாக தன் கவிதைகள் மூலம் பிரசாரம் செய்தார். சிருஷ்டிக்கு மூலம் துயரமே என்ற புரிதலில் இருந்து தனி மனித அனுபவத்தையும் ஆனந்தத்தையும் லட்சியமாகக் கொண்டு வாழ்வதே உமர் கயாமுடைய தத்துவத்தின் சாரம். 

இயற்கையானாலும், பெண்ணானாலும் கண்டு களிப்பதற்கும் அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்திற்கும் முக்கியத்துவம் அளித்தார். அந்த வரிசையில் உடலுக்கு மிகவும் முன்னுரிமை அளித்தார். உடலுக்கு சுகமளிப்பதில் பெண் என்றாலும ஆண் என்றாலும் நோக்கம் ஒன்றே. அதற்காக மனிதன் சமுதாய ஒழுக்கக் கட்டுப்பாடுகளை நிராகரிக்கிறான். மனிதன் தோற்றுவித்த செயற்கைச் சமுதாயத்தை நிலைநிறுத்துவதற்காக ஒழுக்க விதிகளைப் படைத்து, உடலை குறைத்து மதிப்பிட்டு நிந்தை செய்வதை சகிக்க இயலாத தத்துவம் அவருடையது. உடலே சத்தியம். ஆத்மா சந்தேகத்திற்குரியது என்று கூறிய உமர் கயாமின் வாழ்க்கையும் கவிதைகளும் லதாவுக்கு எண்ணிலடங்கா கதைக் கருக்களை வழங்கின.

ராணுவத்தில் பணிபுரிந்த தந்தை மரணித்ததால் தனிமைப்பட்டு  இஷ்டம் போல் அலைந்து தன்னை விட இருபது வயது பெரியவனான உமர் கயாமுக்குத் தன்னை அர்ப்பணித்து அவனோடு ஆஸ்ரமத்தில் சேர்ந்து வாழ்ந்து மதுவையும் நட்பையும் அளித்து அவனுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் ஸாகியே அவனுடைய காவ்ய லதாவின் விதை. அவளோடு கூட ஜுலேகா, மெஹர் என்ற மேலும் இரு பெண்கள் உமர் கயாமின் வாழ்க்கை எல்லைகளைத் தொட்டவர்கள்.   இந்த மூவருக்கும் பெர்சியா தேசத்தின் சுல்தான் ஷெஹன் ஷா ஜலாலுதீன் வாழ்க்கையிலும் அத்தனை முக்கியத்தும் இருந்தது. ராஜ்ஜிய வாரிசுரிமைச்  சண்டைகளின் காரணமாக உயிர் பயத்தோடு மாறு வேடத்தில் பாக்தாத் வீதிகளில் அலைந்த காலத்தில் தந்தை மரணித்து வாரிசு உரிமையாகக் கிடைத்த ஒட்டகத்தோடு வீதிகளில் சஞ்சரித்து வாழும் முறை மூலம் அவனுக்கு வாழ்க்கையில் உற்சாகத்தை அளித்தாள் ஸாகி. ஜுலேகா அவனுடைய பட்டத்து ராணி. அரசு காரியங்களில் பங்கேற்பவள். மெஹர் அவனுடைய மாளிகையின் அடிமைப் பெண். அந்த மூன்று பெண்களுக்கும் இந்த இரு ஆண்களுக்கும் இடையே இருந்த தொடர்புகளே போராட்டமாகவும் கருத்தொருமையாகவும் நாவலின் கதையம்சத்தில் பரிணாமம் அடைந்தன.   

மெஹர், சுல்தான் ஷெஹன் ஷாவின் மீது காதல் கொண்டாள். ஆனால் அடிமையாக அவளுக்கிருந்த சமூக நிலைமை அவளை ஜுலேகாவைப் பார்த்து அஞ்சும்படி செய்தது. மெஹரின் கண்களில் தெரிந்த வாஞ்சையும் அவளுடைய உடலின் சஞ்சலமும் ஷெஹன் ஷாவுக்குப் புரிந்தன. ஆனால் ஜுலேகாவுக்கு அஞ்சி மெஹர் மீது பரிதாபப்பட்டு அவளிடமிருந்து தப்பித்துக் கொண்டு அமைதியைத் தேடி ருஸ்தம் என்ற மாறு பெயரில் உமர் கயாமின் குடிசையை வந்தடைகிறான். அங்கு ஒரு காலத்தில் தனக்கு பாக்தாத் வீதிகளில் தன்னம்பிக்கையை ஏற்படுத்திய ஸாகியைக் கண்டு அவள் மீது மோகம் கொள்கிறான். அந்தப்புரத்தில் மெஹரிடம் காதல் பிச்சை கேட்க இயலாதவன், தன்  சக்ரவர்த்தி என்ற நிலையை மறைத்துக் கொண்டு உமர் கயாமின் குடிசை வளாகத்தில் கிடைத்த சுயேச்சையால் ஸாகியிடம் அதைக் கேட்க முடிந்தது. அவளைத் தன்பால் ஈர்க்கவும் அவனால் முடிந்தது. மெஹர் அவனைத் தேடி அங்கு வருகிறாள். ஸாகி அவனோடு செல்கிறாள். மெஹரும் அவர்களோடு செல்கிறாள். ஆனால் ஸாகி, கயாமின் கவிதைகளில் கரைந்து போவதே தனக்கு விருப்பம் என்று கூறி கயாமோடு குடிசைக்கு வந்துவிடுகிறாள்.

ஸாகியோடு மக்காவுக்குச் செல்வதற்கு தயாராகின்ற உமர் கயாமுடன் நெருக்கத்தை விரும்பி அங்கு வந்த ஜுலேகாவும் அவனோடு மக்காவுக்கு வருவேன் என்கிறாள். தான் ராணி என்ற கர்வமும் அதனை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் மெஹர் மேல் கொண்ட பொறாமையும் அவளிடம் இருப்பதை அடையாளம் கண்டதால், உமர் கயாம் அவற்றையெல்லாம் விட்டுவிடும்படி  கூறுகிறான். இந்த இடத்தில் கயாம் ஒன்றை மனதில் எண்ணிப் பார்க்கிறான். ஸாகி, மெஹர், ஜுலேகா மூவரும் ஒரே நேரத்தில் ஷெஹன் ஷாவின் உடலையும் தன் கவிதைகளையும் அடைந்து இன்புற விரும்புகிறார்கள். வாழ்க்கை என்னும் இந்த விசித்திரத்தில் எதற்கும் ஏங்காமல், கிடைத்ததைக் கொண்டு மகிழ்ச்சியடைவது உமர் கயாம் பயிற்சி செய்த வாழ்க்கை முறை.    ஜுலேகா அவனோடு மக்காவுக்கு பயணப்படும் சாகசத்தைச் செய்ய முடியாமல் போனாள். மெஹர் அவனோடு மக்கா வரை சென்று வந்தாள். ஆனால் திரும்பி வந்தவுடன் ஹெஷன் ஷாவை சந்திப்பதற்குச் சென்று விட்டாள். இவ்வாறு மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்களின் ஈர்ப்பு, வழிபாடு போன்றவை தொடர்பான உறவகளைக் கொண்டு கதையை நடத்தி, ஸாகியின் முன்னிலையில் உமர் கயாம் மரணிப்பதோடு நாவலை முடிக்கிறார் லதா. கயாமுடைய கவிதைகளின் அழகை நாவல் முழுவதும் விவரித்துக் காட்டுகிறார் லதா. 

தென்னேட்டி ஹேமலதா எழுதியதாக அறியப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களில் எத்தனை வேறுபாடான கதைப் பொருட்கள் உள்ளன என்று தெரிந்து கொள்வதற்கும் அவருடைய வாழ்வின் கண்ணோட்டம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கும் இந்த நாவல்களின் அறிமுகம் போதுமானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 

குறிப்பு : மொழிபெயர்ப்பாளர் இத்தொடரை இத்துடன் நிறுத்திக் கொள்கிறார்.

Series Navigation<< மோகனவம்சி என்ற நாவல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.