ராபர்ட் அற்புதராஜ்

ப்ரியா, 

கைப்பேசிக்கு அழைத்துப் பேசினால் உடைந்து அழுதுவிடுவேன் என்பதால் மின்னஞ்சல் அனுப்புகிறேன். காதோடு தொலைந்துவிடும் சொற்களாக இல்லாமல் இவை எழுதப்பட்ட வார்த்தைகளாக இருக்கட்டும். அடுத்தமுறை பேசும்போது தயவுசெய்து இதைப்பற்றி எதுவும் கேட்காதே. மனதில் உள்ளதையெல்லாம் இப்போதே கொட்டி முடித்து விடுகிறேன். 

அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து சென்னைக்கும், திருச்சிக்குமாக ஒரே அலைச்சல். விடுப்பு முடிய இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளது. தூரத்து உறவினரின் மகள் திருமணத்திற்கான அழைப்பைத் தட்டிக் கழித்திருக்கலாம், ஏதோ மன உந்துதலில் நேற்று காலை கிளம்பி கோவை வந்தேன். 

செல்வபுரத்தில் சிவாலயா தியேட்டர் ஞாபகம் இருக்கிறதா? பார்த்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’? கொடுத்த கன்னத்து முத்தம்? சிவாலயா தியேட்டர் இப்போது மண்டபமாக மாறியிருக்கிறது. அங்குதான் திருமணம். பக்கத்திலேயே ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கியிருக்கிறேன். 

இன்று முகூர்த்தம் முடிந்து உணவுக்குப்பின் தனியே கிளம்பி பாரதியார் காலனிக்குச் சென்றேன். செல்வசிந்தாமணிக் குளக்கரையை வைத்துதான் காலனிக்கு வழி கண்டுபிடித்தேன். சுற்றியிருந்த கவுண்டர் தோட்டமும் முள்ளுக்காடும் சுவடின்றி மறைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் மாடிவீடுகளும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுமாக மாறியிருக்கிறது. காலம் விட்டுவைத்த எச்சமாக பாரதியார் காலனி மட்டும் அப்படியே இருக்கிறது. 

முனைகள் இணையாத செவ்வக வடிவிலான இரண்டுமாடிக் கட்டிடங்கள். ஆறுக்கு நாலென்ற பக்கக்கணக்கில் ‘ஏ’ முதல் ‘டீ’ வரையிலான இருபது பிளாக்குகள். ஒவ்வொரு பிளாக்கிலும் தளத்திற்கு நான்கு என பன்னிரண்டு வீடுகள். பட்டையுரிந்த மொட்டை மரங்கள்போல காணப்பட்ட காலனிக் கட்டிடங்கள் நாற்பத்திமூன்று ஆண்டுகள் கழித்தும் ஏதோ தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நின்று கொண்டிருக்கின்றன. ஆட்சிக்கு வந்தவுடன் இடித்துப் புதிதாகக் கட்டிக்கொடுப்பதாக இந்தமுறையும் அனைத்துக் கட்சியினரும் சத்தியம் செய்திருக்கிறார்கள். 

காலனிக்குள் சாலையோரம் நின்றிருந்த செங்கொன்றை மரங்கள் இன்னும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. வாகனங்களால் நசுக்கப்பட்ட குல்மொஹர் மலர்கள் சாலைக்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தது. “டீ” பிளாக் முன்னால் மரத்தடியில் நின்று நான் கடந்தகாலத்துக்குள் பறந்துகொண்டிருந்தபோது, “டேய் கே.பிரதீப்” என்ற குரல் கேட்டது. வியப்புடன் திரும்பிப் பார்த்தேன். “எஸ்” பிளாக் முதல்மாடி வீட்டு ஜன்னலில் இருந்து ராஜேந்திரன் கையை ஆட்டினான். இத்தனை வருடங்கள் கழித்தும் அவனுக்கு என் இனிஷியல் ஞாபகம் இருந்தது ஆச்சரியம்தான். பள்ளியில் படிக்கும்போது வகுப்பில் இரண்டு பிரதீப்புகள் இருந்தோம், நான் கே.பிரதீப், இன்னொருவன் பி.பிரதீப். ராஜேந்திரன் என்னோடு எட்டாவதுவரைப் படித்தான். முழுவாண்டுத்தேர்வில் தோற்றபின் ராஜேந்திரன்  பள்ளியிலிருந்து நின்று உப்புக்கிணறு சந்திலிருந்த அவன் அப்பாவின் துணிக்கடைக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். 

‘எஸ்’ பிளாக் ஐந்தாம் நம்பரில் இருந்த ராஜேந்திரனின் வீட்டுக்குச் சென்றேன். ராஜேந்திரனின் மகன் முருகன் முன்னறையில் அமர்ந்து டிவியில் அலறிய நகைச்சுவையைப் பார்த்துக் கொண்டிருந்தான். ராஜேந்திரன் அறிமுகம் செய்ததும் திரும்பி என்னைப் பார்த்த முருகன் அமைதியாகத் தலைதிருப்பிக் கொண்டான். “மாமாவப் பார்த்து சிரிக்கணும் முருகா,” என்று ராஜேந்திரன் சொன்னபின் முருகன் சிரித்தான். முருகனின் உடலோடு வளர முடியாமல் அறிவு பாதியில் நின்றுவிட்டது. 

சமையலறையில் ராஜேந்திரனோடு பேசிக்கொண்டே அவன் கலந்து கொடுத்த பால்மணம் மாறாத டீயைக் குடித்துமுடித்தேன். சில நிமிடங்களில் பூசணிக்காய் அளவிலிருந்த ஒரு சிவப்புநிறப் பிளாஸ்டிக் கால்பந்தைக் கையில் ஏந்திக்கொண்டு சமையலறைக்கு வந்த முருகன், “மாமா, பால்” என்றான். “உன்னை ராபர்ட்டுன்னு நினைச்சுட்டான்,” என்றான் ராஜேந்திரன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த முருகன் நெருங்கி வந்து “மாமா, பால்,” என்றான். “இப்ப அவனுக்கு விளையாடியே ஆகணும், அதுலயே நிப்பான்,” என்றான் ராஜேந்திரன். 

ராஜேந்திரனும், நானும், முருகனை அழைத்துக்கொண்டு மைதானத்திற்குச் சென்றோம். மைதானத்தின் நடுவே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். முருகன் அவர்களை நோக்கி ஓடினான். முருகனைப் பிடித்து நிறுத்திய ராஜேந்திரன் மைதானத்தின் ஓரமாக அவனை அழைத்துச்சென்று கால்பந்தைக் கொடுத்து விளையாட வைத்தான். நான் மைதானத்தைச் சுற்றியிருந்த குட்டிச்சுவரில் மரத்தடியில் அமர்ந்தேன். சில நிமிடங்களில் ராஜேந்திரன் வந்து என்னருகே அமர்ந்தான். முருகன் கால்பந்தை மேலே வீசி கையால் பிடிக்க முயன்று கொண்டிருந்தான். “மத்த பசங்ககூட சேர்ந்து விளையாட வைக்கலாமே ராஜா,” என்று கேட்டேன். 

சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு தீக்குச்சியை வீசிவிட்டு முருகனைப் பார்த்த ராஜேந்திரன், “வயசு பன்னிரண்டு ஆனாலும் மனசுல அவனுக்கு ஆறு வயசுதானே. மத்த பசங்க எல்லாம் கிண்டல் பண்றாங்க,” என்றான். 

“முருகனுக்குப் புரியுமா?”

“அவன் குழந்தைதானே பிரதீப்பு, கிண்டலைக் கேட்டும் சிரிச்சுட்டு இருப்பான். எங்களுக்குப் புரியுமே? கஷ்டமா இருக்கே?”

முருகன் சுவரருகே வந்து சிரித்துக்கொண்டே, “மாமா,” என்றழைத்து கால்பந்தை நீட்டினான். உதட்டோரம் எச்சில் வழிந்தது. நான் முருகனின் தலையைக் கோதினேன். “நீ விளையாடு கண்ணு,” என்று ராஜேந்திரன் சொல்வதைக் கேட்காமல் முருகன் என்மீது பந்தை வீசினான். தோளில்பட்ட பந்து தள்ளிச்சென்று விழுந்தது. முருகன் பந்தைப் பிடிக்க ஓடினான். நான் ராஜேந்திரனின் சிகரெட்டை வாங்கிப் பிடித்துக்கொண்டு அமெரிக்காவில் ஸ்நேகிதன் குழந்தைக்குக் கிடைக்கும் ஆட்டிசத்திற்கான சிகிச்சை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். முருகன் கைதட்டிச் சிரிக்கும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். 

கால்பந்தைத் தலையாலும் மார்பாலும் உந்தித் தட்டிக் கொண்டிருந்தான் ராபர்ட். என்னைப் பார்த்ததும் “யேய் பிரதீப்பு,” என்று கத்தினான். பந்தை முருகனிடம் கொடுத்துவிட்டு மெதுவாக நடந்து என்னருகே வந்தான். கால்பந்தாட்டத்தில் நாங்கள் கோல் அடித்ததும் கொண்டாடும் பாவனையை மறக்காமல் வலது கைவிரல்களை மடக்கி என் கையில் தட்டினான். அதே ஸ்னேகம், அதே சிரிப்பு. ப்ரியா, உனக்கு ராபர்ட் அற்புதராஜைத் தெரியும், கால்பந்து மைதானத்தின் நடுவே நிற்கும் ராபியை உனக்குத் தெரிந்திருக்காது.

தூய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் ஆறாவது படிக்கும்போது ராபர்ட் ஆரோக்கியராஜ் சார் எங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்தார். கலகலப்பாகப் பேசி,   யாரையும் அடிக்காமல் வகுப்பெடுக்கும், அளவுக்கு அதிகமான நல்லவர். அவர் வகுப்புக்கு வந்துபோகும் நேரத்தில் வேண்டுமென்றே ராபர்ட் அற்புதராஜை “லூசு ராபர்ட், கிறுக்கு ராபர்ட்,” என்று சத்தமாகத் திட்டுவோம். ஆரோக்கியராஜ் சாருக்கு எங்கள் விஷமம் புரிந்ததும் “இனி ராபர்ட் அற்புதராஜை ‘ராபி’ என்றுதான் எல்லாரும் கூப்பிட வேண்டும்,” என்று வகுப்பில் அறிவித்தார். ராபர்ட்டுக்கும் அந்தப் பெயர் பிடித்திருக்க வேண்டும். ‘ராபி’ என்று தன்னை அழைக்கச்சொல்லி பலமுறை வகுப்பில் கேட்டுப் பார்த்தான். முதலில் ‘குட்டைராஜ்’ என்று கூப்பிடாமல் ‘ராபர்ட்’ என்று கூப்பிடுகிறோமா பார் என்று சொல்லி நாங்கள் சிரிப்போம். 

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நாட்களில் மைக்கேல் பள்ளியின் கால்பந்து அணி அணியின் தலைவனான ராபர்ட்டைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருந்தது. பள்ளி அணியில் எப்போதும் நாங்கள் மூன்று-ஐந்து-இரண்டு என்ற அணிவகுப்பில்தான் விளையாடுவோம். கால்பந்து அணியில் பதினோரு வீரர்கள். கோல்கம்பத்தை ஒட்டிநின்று பந்தைத் தடுக்கும் கோல்கீப்பர்; அவனுக்கு அரணாக நின்று எதிரணியினரைத் தடுக்கும் மூன்று பின்களவீரர்கள்; தடுப்பாட்டம் ஆடவும், எதிரணியிடமிருந்து பந்தைப் பறித்து முன்னால் நகர்த்தவும், வாய்ப்புக் கிடைத்தால் தாக்குதலாட்டம் ஆடவும் ஐந்து நடுக்களவீரர்கள்; தாக்குதலே குறியாக பந்தை எதிரணியின் கோல்கம்பத்துக்குள் அனுப்ப முயற்சிக்கும் இரண்டு முன்களவீரர்கள்.

ராபர்ட் நடுக்களத்தில் ஆடும் ஐவரில் முதல்வனாக, தாக்குதலாட்டம் ஆடும் நடுக்களவீரனாக நிற்பான். பீலே, மரடோனா, மெஸ்ஸி போன்ற பல அதியற்புதக் கால்பந்தாட்டக்காரர்கள் தத்தம் அணியில் ஆடிய அந்த இடத்தை பயிற்சியாளராக இருந்த விளையாட்டாசிரியர் அலெக்சாண்டர் ராபர்ட்டுக்குக் கொடுத்திருந்தார். நான் பன்னிரண்டாவது ஆளாக எல்லைக்கோட்டுக்கு வெளியே நிற்பேன். மாற்றுவீரனுக்குத் தேவையிருந்தால் களமிறக்கப்படுவேன். 

அந்த வருடம் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியின் இறுதித் தகுதிச்சுற்று எங்கள் பள்ளிமைதானத்தில் நடந்தது. ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த நாங்கள் அன்று ஸ்டீபன்ஸ் பள்ளி அணியுடன் மோதினோம். மைதானத்தின் ஒரு பக்கத்தில் இருக்கும் மூன்றுமாடிப் பள்ளிக்கட்டிடத்தின் வகுப்பு ஜன்னல்களிலும், மற்றொரு பக்கத்தில் ஆய்வகங்களுக்கு மேலிருந்த ஒற்றைமாடிக் கட்டிட வராந்தாவிலும், மைதானத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆட்டத்தைப் பார்க்கத் திரண்டிருந்தார்கள். ஸ்டீபன்ஸ் பள்ளி அணியில் குறைவான உயரம் கொண்டவன்கூட ராபர்ட்டைவிட ஒரு அங்குலம் உயரமாக இருந்தான். விலையுயர்ந்த காலணிகளை அணிந்திருந்த அவர்கள் ஆளுக்கு ஒரு பந்தை வைத்துப் பயிற்சி செய்தார்கள். அவர்களோடு வந்திருந்த நண்பர்கள் கூட்டத்தில் எல்லாருக்கும் மீசை இருந்தது. அவர்களைப் பார்த்த நாங்கள் ஆட்டத்துக்கு முன்பே பயத்தில் தோற்க ஆரம்பித்திருந்தோம். 

விசில் ஊதியதும் ஆட்டம் தொடங்கி உதைக்கப்பட்ட பந்து ராபர்ட்டின் காலுக்கு வந்தது. நடுக்கோட்டில் நின்றிருந்த ராபர்ட் சடசடவென குறுக்கு ஓட்டம் போட்டு முன்னேறினான். எதிரணியின் தடுப்பாட்டக்காரர்கள் நெருங்க இடம்கொடுக்காமல் ராபர்ட் நூறடி தூரத்திலிருந்து பந்தை உதைத்தான். போட்டித் தொடக்கத்திற்கான கைத்தட்டலோசை ஓயும்முன் எதிரணியின் கோல்கம்பத்துக்குள் பந்து நுழைந்தது. எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்த சிறுவர்கள் குதித்தாட ஆரம்பித்தார்கள். முதல்மாடி வராந்தாவில் நின்று ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் கூட்டத்தின் நடுவேயிருந்து விசிலொலி எழுந்தது. ஓரிரு நிமிடங்களில் ஆட்டம் மீண்டும் ஆரம்பித்தது. எதிரணியினர் எங்கள் ஆட்டமுறையைக் கிரகிப்பதற்குள் அடுத்த கோலும் போட்டுவிட்டோம். முதல் பாதி முடியும் நாற்பத்தைந்தாவது நிமிடத்தில் நாங்கள் இரண்டு கோல்கள் முன்னணியில் இருந்தோம். இடைவேளையில் சூழ்ந்துநின்ற வீரர்களிடம் இனி தடுப்பாட்டம் ஆடினால் போதுமென்று அலெக்சாண்டர் சார் சொன்னார். 

இரண்டாம் பாதி தொடங்கியது. பந்தைப் பிடிக்க ஓடும் ராபர்ட்டைப் பார்த்து எல்லைக்கோட்டினருகே அமர்ந்திருந்த எதிரணியினரின் நண்பர்கள், “டேய் பழவண்டி,” என்று கத்தினார்கள்.  ராபர்ட்டின் அப்பா மரியசாமி தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ராபர்ட் அவர்களைக் கவனிக்காமல் எங்கள் அணியினருக்குக் கட்டளைகளிட்டு ஆட்டத்தின் வேகத்தை மட்டுப்படுத்தினான். எதிரணிக் கூட்டம், “ராபர்ட், பந்தை விடு, வந்து எங்க பழத்தைப் பிடி,” என்று சத்தமாகப் பாட ஆரம்பித்தார்கள். ராபர்ட் கோபத்தில் கட்டுப்பாட்டை இழப்பது எங்களுக்கு நன்றாக தெரிந்தது. இந்தக் குழப்பத்தில் எதிரணியினர் எங்கள் எல்லைக்குள் நுழைந்து ஒரு கோல் போட்டார்கள். 

மைதானத்தைச் சுற்றி கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் வாயடைத்து நின்றார்கள். சிறுவர்களின் முணுமுணுப்புக்கூட அடங்கியது. அமைதியைக் கிழிப்பதுபோல திடீரென “ராபி, ராபி” என்று ஒரு குரல் ஒலித்தது. எல்லாரும் திரும்பி மாடியிலிருந்த ஆசிரியர் கூட்டத்தைப் பார்த்தார்கள். சில வினாடிகள் மைதானம் நிசப்தமாகி பந்து கால்மாற்றப்படும் ஓசை மட்டும் கேட்டது. எதிரணிக் கூட்டம், “டேய் ராபர்ட்” என்று பாட வாய் திறந்ததும் மறுபடியும் மாடியிலிருந்து “ராபி, ராபி” என்ற குரல் கைத்தட்டும் ஓசையுடன் கேட்டது. பாத்திரத்தில் ததும்பிக் கொண்டிருக்கும் பால் நொடிப்பொழுதில் பொங்கி மேலெழுவதுபோல ஒரேசமயத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் சேர்ந்து, “ராபி, ராபி” என்ற அந்த முதல்குரலுக்குத் துணையாகக் கத்தினார்கள். காதைப் பிளக்கும் கரவோசையைக் கேட்டு களத்தில் இருந்த இரு அணிவீரர்களும் ஒருகணம் ஆட்டத்தை நிறுத்தினார்கள். ஓடுவதை நிறுத்திய ராபர்ட் மைதானத்தைச் சுற்றிப் பார்த்தான். அவன் உடலின் தசைகளில் நனைந்த ஆடை ஒட்டிக்கொண்டிருந்தது,  கலைந்திருந்த நீளமான தலைமுடியிலும், மூக்கு நுனியிலும் வியர்வை வழிந்து  சொட்டியது. இசைக்கலைஞன்போல இருகைகளையும் தூக்கிக் காண்பித்து ஒலியைக் கூட்டும்படி சைகை செய்தான். பொடியன்கள் முதற்கொண்டு சத்தம்கேட்டு அறையிலிருந்து வெளியே வந்திருந்த தலைமையாசிரியர் பாதர் அருமைதாஸ் வரை எல்லாரும் ஆராவாரத்தில் இணைந்துகொள்ள, “ராபி, ராபி” என்ற கோஷம் பள்ளிக்கட்டிடங்களில் மோதி எதிரொலித்தது. வாய்திறந்து பார்த்த ராபி சிரித்தான். சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு ஓடினான். 

அதன்பின் கால்பந்தாட்டத்தின் தேவதை தன் சிறகுகளை ராபியின் தோளில் ஓட்டவைத்துவிட்டு வானில் நின்று அவன் ஆட்டத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். கால்பந்து ராபியின் உடலில் ஒரு அங்கமாக மாறி அவன் நினைக்கும்படி நகர்ந்தது. அர்ஜுனன் மந்திரம் முணுமுணுத்து அம்பு விடுவதுபோல ராபர்ட்டின் கால்கள் ஏதோ ரகசியத்தைச் சொல்லி பந்தை அடிக்கிறது. ஓலைகட்டி தடவிக்கொடுத்து மேலே வீசப்படும் தூதுப்புறா செல்லுமிடம் நோக்கி விரைவதுபோல ராபர்ட்டின் காலிலிருந்து புறப்படும் பந்து கோல்கம்பங்களுக்கு இடையே பறக்கிறது. எதிரணியினர் இயக்கமற்று தூண்களாய் நின்றுவிட்டனர். கூடியிருந்த கூட்டத்தின் அடுத்த நாற்பது நிமிடங்களுக்கான நினைவுகளை ராபர்ட் தன் காலால் கையெழுத்திட்டுத் தனதாக்கிக் கொண்டான். ஏழு-இரண்டு என்ற கோல்கணக்கில் நாங்கள் ஆட்டத்தை வென்றோம். இறுதிப்போட்டிவரை சென்று அந்த ஆண்டின் மாவட்டச் சாம்பியன் கோப்பையையும் ஜெயித்தோம்.

1993ஆம் வருடம் அப்பாவின் வேலைமாற்றத்தால் எங்கள் குடும்பம் கோவைக்கு இடம்பெயர்ந்தோம். பாரதியார் காலனியில் “டீ” பிளாக் பதினோராம் நம்பர் வீட்டில் வாடகைக்குக் குடியேறினோம். மைக்கேல் ஃபீடர் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தபின்பு எனக்கு “எஸ்” பிளாக் ஒன்பதாம் நம்பரில் இருக்கும் ராபர்ட்டும், ஐந்தாம் நம்பரில் இருக்கும் ராஜேந்திரனும் அறிமுகமானார்கள்.

அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் விளையாடும்போது படியிலிருந்து விழுந்து ராபர்ட்டுக்கு வலதுகாலில் அடிபட்டது. மாவுக்கட்டு போட்டு வீட்டில் படுக்க வைத்திருந்தார்கள். கனகாக்கா மதியவேளைகளில் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ராபர்ட்டுக்குத் துணையாக இருக்க என்னை அவர்கள் வீட்டுக்கு அனுப்புவாள். நான் செல்லும்முன் ராபர்ட் மாவுக்காலை இழுத்துக்கொண்டு கையால் தவழ்ந்து மாடிப் படியிறங்கி ‘எஸ்’ பிளாக் வாசலில் வந்து அமர்ந்திருப்பான். அந்நாட்களில் நான் ராபர்ட்டுடன் பேசிப் பழக ஆரம்பித்தேன். இருவருக்கும் படிப்பு இழுபறி. இருவருக்கும் விளையாட்டுதான் முக்கியம், இருவருக்கும் விளையாட்டில் தான் முக்கியமானவனாக இருப்பதுதான் முக்கியம். கண்ணுக்குத் தெரியாத இடைவெளிக்கு இருபுறமும் நின்றுதான் நாங்கள் ஆரம்பத்திலிருத்தே பழகிவந்தோம். 

சிவந்த கண்களும், சாராய நாற்றமுமாக வீட்டுக்குள் நுழையும் ராபர்ட்டின் அப்பா மரியசாமியைப் பார்த்ததும் நான் பயந்து ஓடிவிடுவேன். நாள் முழுவதும் சிரித்த முகத்துடன் வண்டியிழுத்து வாழைவிற்று வியாபாரம் செய்பவர் வீட்டுக்குள் நுழைந்ததும் சிரிக்க மறந்துவிடுவார். கனகாக்காவை நினைக்கும்போது அவளின்  அழுதுவாடிய முகம்தான் ஞாபகம் வருகிறது.  

ஃபீடர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்து மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தபிறகு எங்களுக்குச் சில சுதந்திரங்கள் கிடைத்தன. வெள்ளை சட்டை, காக்கி ட்ரவுசராக சீருடை மாறியது. கோடுபோடாத வெள்ளைநோட்டில் கோணலாய் எழுத ஆரம்பித்தோம். இலவச பஸ்பாஸ் வாங்கி பள்ளிக்குப் பேருந்தில் சென்றுவந்தோம். விளையாட்டு வகுப்பில் கோகோ விளையாடுவதை நிறுத்தி கால்பந்து விளையாடினோம். விளையாட்டு என்று அதைச் சொல்லமுடியாது. நாற்பது சிறுவர்கள், நடுவே மாட்டிக்கொண்ட ஒரு கால்பந்து. அனைவரும் பந்தைச் சுற்றி நின்றபின் யார் எதை உதைக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது. வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு இந்த மாணவர்கள் ஏன் புழுதியைக் கிளப்பியபடி கூட்டமாக  இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி தோன்றாமல் இருக்காது.

எட்டாம் வகுப்பின் ஆரம்பத்தில் பள்ளிக் கால்பந்து அணிக்கான தேர்வு நடந்தது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மைதானத்துக்கு வந்து காத்திருக்கும்படி ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வந்தது. பள்ளி அணியில் பெரும்பாலும் ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் மாணவர்கள்தான் ஆடுவார்கள், எட்டாவது மாணவர்களுக்கு ஆரம்ப ஆட்டக்காரனாக ஆட வாய்ப்புக்  கிடைப்பதென்பது அதிசயம். ஆண்டு முழுவதும் மாற்றுவீரர்களாக வேடிக்கை பார்க்கத்தான் வேண்டியிருக்கும். இது தெரிந்தும் நூற்றுக்கும் அதிகமான எட்டாம்வகுப்பு மாணவர்கள் அலெக்சாண்டர் சாரின் முன்னால் கூடியிருந்தோம். 

அனைவரையும் மைதானத்தைச் சுற்றி பத்துமுறை ஓடிவரச் சொன்னார். இருபது பேர் ஓடி முடித்தோம், மற்றவர்கள் வீட்டுக்கு ஓடிவிட்டார்கள். கால்பந்தை உதைக்கச் சொல்லிப் பார்த்து எட்டு மாணவர்களைத் தேர்வு செய்தார். நானும் ராபர்ட்டும் தேர்வானோம். அடுத்தநாள் விளையாட்டுக்கான ஷூ அணிந்து பயிற்சியில் சேர்ந்துகொள்ளச் சொன்னார். ராபர்ட் வரவில்லை. சிலநாட்களுக்குப் பின் ராபர்ட் நைந்து குப்பைபோன்றிருந்த ஷூக்களை அணிந்துகொண்டு  பயிற்சிநேரத்தில் வந்து நின்றான். அலெக்சாண்டர் சார் அவனையும் பயிற்சியில் சேர்த்திக்கொண்டார். 

அடுத்தநாளே ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் ஒரு மாணவன் பயிற்சிநேரத்தில் அலெக்சாண்டர் சாரிடம் வந்து, தான் கழுவி ஹாஸ்டல் ஜன்னலில் காயவைத்திருந்த ஷூவை ராபர்ட் திருடிவிட்டான் என்று சொன்னான். அழைத்துக் கேட்டபோது ராபர்ட் பதில் சொல்லமுடியாமல் அமைதியாக நின்றான். ஷூவைக் கழட்டி அந்த மாணவனிடம் கொடுத்தான். அலெக்சாண்டர் சார் ராபர்ட்டுக்கு கால்பந்து மைதானத்தை ஒருமுறை முட்டிபோட்டு சுற்றிவரச் சொல்லி தண்டனை கொடுத்தார். ஷூவைக் கவனக்குறைவாகத் தொலைத்த மாணவனை ராபர்ட் சுற்றிமுடிக்கும்வரை தன்னருகே முட்டிபோட்டு நிற்கச் சொன்னார். டிரவுசர் அணிந்திருந்த ராபர்ட் வெறும்மணலில் முட்டியை வைத்ததும் நிலைதடுமாறினான். முட்டிபோட்டு நகர்ந்து மைதானத்தை இருபது நிமிடங்களில் சுற்றிமுடித்த ராபர்ட் பெருமூச்சுடன் சார் முன்னால் வந்து நின்றான். அவன் பார்வை ஹாஸ்டல் மாணவன் அருகேயிருந்த ஷூவிலேயே இருந்தது. ராபர்ட் முகத்தைப் பார்த்த அலெக்சாண்டர் சார் திரும்பி ஷூவைப் பார்த்தார். ராபர்ட்டைத் திட்டி மீண்டும் ஒருமுறை மைதானத்தைச் சுற்றிவரச் சொன்னார். ஹாஸ்டல் மாணவனுக்கும் தண்டனை நீண்டது. ஒவ்வொருமுறை மணலில் முட்டியை வைக்கும்போதும் ராபர்ட் பல்லைக் கடித்து காற்றை உறிஞ்சி கண்களை மூடிக்கொண்டான். இரண்டாவதுமுறை சுற்றிமுடிக்க அவனுக்கு நாற்பது நிமிடங்கள் ஆனது. சாரின் முன்னால் வந்துநின்ற ராபர்ட்டின் இரண்டு முட்டிகளிலும் ஏற்பட்டிருந்த சிராய்ப்புக் காயங்களின்மேல் ரத்தம் நனைத்த மணல் ஒட்டிக்கொண்டிருந்தது. ராபர்ட்டின் பார்வை மட்டும் அவன் கழட்டிக் கொடுத்த ஷூவின் மீதுதான் இருந்தது. 

ஓரிரு வாரங்கள் கழித்து ஆரோக்கியராஜ் சார் ராபர்ட்டோடு மைதானத்துக்கு வந்து அலெக்சாண்டர் சாரிடம் பேசினார். ஆரோக்கியராஜ் சார் கிளம்பியபின் ராபர்ட் எங்களோடு பயிற்சியில் சேர்ந்து கொண்டான். அவன் காலில் இருந்த புது ஃபுட்பால் ஷூவைப் பார்க்க எங்கள் அனைவருக்கும் பொறாமையாக இருந்தது.

கால்பந்தாட்டத்தை ஆழ்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். பந்து நகரும் இடத்தில் நிகழ்வது ஆட்டத்தின் மிகச்சிறிய பகுதிதான். யார் எங்கே நிற்கிறார்கள், பந்தை எதிர்பார்த்து யார் எங்கே நகர்கிறார்கள், யார் தங்கள் இடத்திலிருந்து விலகுகிறார்கள், எங்கு தடுப்புகள் உருவாகின்றன, எங்கு கோல்கம்பத்துக்கான குறுக்குவழிகள் திறக்கின்றன, இவைபோன்ற எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொண்டு அடுத்த வினாடிக்குத் தயாராக நிற்பவன்தான் அசலான கால்பந்தாட்டக்காரன். அப்படிப் பதினோரு வீரர்கள் அணியில் இருந்தால் மட்டும் போதாது. வீரர்களின் கால்களைப் போல வெளியே இருந்து ஆட்டத்தின் நெளிவு சுளிவுகளைக் கவனித்து புதுயுத்திகளை உடனுக்குடன் வகுத்து செயல்படுத்தும் பயிற்சியாளரின் அறிவும் சேர்ந்துத்தான் ஒரு கால்பந்து அணியின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. 

 அலெக்சாண்டர் சாரிடம் பயில ஆரம்பித்தபின்புதான் தெரிந்தது, நாங்கள் அதுவரை விளையாட்டு வகுப்புகளில் கால்பந்து விளையாடவில்லை, கூட்டமாகச் சேர்ந்து கோழிபிடிப்பதுபோல பந்தைத் துரத்தியிருக்கிறோம். இந்த விளையாட்டில்தான் எத்தனை ஆட்டமுறைகள்? கோல்கீப்பரைத் தவிர மற்ற பத்துவீரர்களும் சூழ்நிலைக்கேற்ப பின்களம், நடுக்களம், முன்களம் என்று மாறிமாறி  விளையாடும் திறமைகொண்டு ஆடுவது டச்சுக்காரர்களின் டோட்டல் ஃபுட்பால். அருகருகே ஓடும் வீரர்கள் பந்தைச் சிறுசிறு பாஸ்களாக கொடுத்துவாங்கிக் கால்மாற்றிக்கொண்டே முன்னேறுவது ஸ்பானியர்களின் டிக்கி-டக்கா. சம்பா நடனக்கலைஞன்போல உடல் முழுவதையும் உபயோகித்து பந்தை நளினமாகக் கட்டுப்படுத்திக்கொண்டு முன்னேறுவது பிரசிலியர்களின் ஜிங்கா.  

 ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர் அணிக்கும் மாணவர் அணிக்கும் இடையே வருடாவருடம் நிகழும் கால்பந்துப் போட்டி அன்று நடந்தது. ஓடக்கூடிய உடல்வாகு கொண்டவர்களையும், பயிற்சியாசிரியர்களையும் சேர்ந்து பதினோரு பேர் கொண்ட ஒரு ஆசிரியர் அணியை எப்படியோ திரட்டியிருந்தார்கள். ஆசிரியர்கள் விளையாடுவதைப் பார்த்து கிண்டல் செய்வதற்காகவே மைதானத்தைச் சுற்றி மாணவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. எட்டாவது படித்துக்கொண்டிருந்த நான் அன்று முதல்முறையாக மாணவர் அணியில் ஆரம்ப ஆட்டக்காரனாக முன்களத்தில் இறங்கினேன்.

நடுவராக இருந்த பாதர் அருமைதாஸ் விசிலடித்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார். தொடக்கத்தில் நன்றாக ஓடி விளையாடிய ஆசிரியர்கள் சில நிமிடங்களில் நடந்து விளையாடினார்கள், பின் நிற்குமிடத்திற்கு பந்து வருமா என்று காத்திருந்தார்கள். முப்பது நிமிடங்களிலேயே இடைவேளை விசில் ஊதப்பட்டது. ஒன்றிரண்டு உயரமான பயிற்சி ஆசிரியர்களையும் தாண்டி நான் ஒரு கோல் அடித்திருந்தேன். வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடுக்களத்தில் விளையாடிய ராமலிங்கம் ஐயா இடைவேளையோடு சொல்லிக்கொள்ளாமல் வீட்டுக்கு கிளம்பிவிட்டார். செபாஸ்டியன் சார் மூச்சுமுட்டுவதாகச் சொல்லி ஓய்வெடுக்க  ஆசிரியர்அறைக்குச் சென்றார். மாற்றுவீரர்கள் இல்லாத ஆசிரியர் அணியில் ஆடுவதற்காக அலெக்சாண்டர் சார் நடுக்களத்தில் இறங்கினார். சுற்றிலும் பார்த்தவர் மற்றொரு இடத்தில் ஆட ராபர்ட்டை அழைத்துக்கொண்டார். 

இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பித்தது. ராபர்ட் முன்களத்திலும், அலெக்சாண்டர் சார் நடுக்களத்திலும், மற்ற எல்லா ஆசிரியர்களும் தடுப்பாட்டம் ஆட பின்களத்திலும் நின்றுகொண்டார்கள். ஓட முடியாவிட்டாலும் ஆசிரியர்களுக்கு பந்தைக் காற்றில் அடித்து வான்வழியாகக் கடத்தத் தெரிந்திருந்தது. மாணவர் அணியில் நாங்கள் பந்தைத் தரைவழியாகத்தான் கால்மாற்றினோம். நாங்கள் அடிக்கும் பந்தை ஆசிரியர்கள் தடுத்து ராபர்ட்டுக்கு வான்வழியாகக் கொடுக்க அதை அவன் சரியாக வாங்கிக்கொண்டு முன்னேறி முதல்கோல் அடித்தான். 

ஆட்டம் முடிந்தபின் அலெக்சாண்டர் சார் சொல்லித்தான் தெரிந்தது, எல்லா வீரர்களும் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருக்க, வாய்ப்பு கிடைக்கும் வினாடியில் மின்னல்போல ஒருவன் முன்னேறிச்சென்று கோல் போடும் அந்த ஆட்டமுறையின் பெயர். அது இட்டாலியர்கள் ஆடும் கேட்டனாச்சோ. 

எவ்வளவு முயற்சித்தும் எங்களால் உயரமான பல ஆசிரியர்கள் சேர்ந்து  அமைத்த அரணுக்குள் நுழைய முடியவில்லை. ஆசிரியர்களோ எங்களிடமிருந்து பந்தைப் பறித்தவுடன் ராபி என்று கத்திவிட்டு பந்தைக் காற்றில் தூக்கியடித்து விடுவார்கள். வான்வழியாக வரும் பந்தை சரியாக பாதத்தில் வாங்கிக்கொண்டு ராபி முன்னேறுவான். அவன் காலுக்குச் சென்ற பந்தைப் பறிப்பது மிகவும் கடினம். பந்துடன் காட்டாறாய் ஓடுவான், நாங்கள் பின்னால் துரத்துவோம், திடீரென வேகத்தைக் குறைப்பான், நாங்கள் ஆசுவாசப்படுவோம், எதிர்பார்க்காத திசையில் வெடித்து ஓடுவான், நாங்கள் துரத்தாமல் ஓய்ந்துவிடுவோம். மைதானத்தில் எதிரில் நிற்பவன் என்ன செய்யப் போகிறான் என்று அப்படியோ அவனுக்குத் தெரிந்துவிடும். நாங்கள் கோல் போட முயற்சிப்பதை விட்டு ராபர்ட்டைச் சூழ்ந்து அவன் ஆட்டத்தைக் குலைக்க ஆரம்பித்தோம். 

போட்டியின் முடிவில் மாணவரணி மூன்று-இரண்டு என்ற கோல்கணக்கில் ஜெயித்தோம். ஆனால் அன்று உண்மையில் ஜெயித்தது என்னவோ ராபர்ட்தான். மாற்றுவீரனாக உள்ளே வந்தவன் அரைமணிநேரத்தில் கூடியிருந்த அத்தனைபேர் கண்களிலும் மிகச்சிறந்த ஆட்டக்காரனாக மாறிவிட்டான். அதன்பின் எல்லா ஆசிரியர்களும் அவனை ராபி என்று சினேகமாக அழைத்துப் பேச ஆரம்பித்தார்கள்.  ராபர்ட் பள்ளி அணியிலும் ஆரம்ப ஆட்டக்காரனானான். அடுத்த சில மாதங்களில் என் தோளின் உயரம்கூட இருந்திடாத ராபர்ட் நெடுநெடுவென வளர்ந்து என்னைவிட உயரமாகி ஆறடி வளர்ந்து நின்றான். கிட்டத்தட்ட அதே நாட்களில்தான் ப்ரியா நீயும் எங்களுக்கு அறிமுகம் ஆனாய். 

பள்ளி முடிந்து விக்டோரியா ஹாலுக்கு முன்பிருக்கும் டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் காத்திருக்கும்போது பிரசன்டேஷன் கான்வென்டிலிருந்து தோழிகளுடன் நீ வருவாய். உனக்குத் தெரியுமா ப்ரியா? ராபர்ட் உன் தோழி பவித்ராவைப் பார்க்கும்போதே நான் உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருப்பேன். பவித்ரா வேறு யாரையோ காதலிக்கிறாள், அவளை நினைத்து ஏமாறவேண்டாம் என்று நீ வந்து ராபர்ட்டிடம் சொன்னது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீ சொன்னதைக் கேட்டு ராபர்ட் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றிருந்தான். பேசி முடித்துவிட்டு நீ சீண்டல் சிரிப்போடு ராபர்ட்டைப் பார்த்த பார்வையிலேயே எனக்குப் புரிந்துவிட்டது, அதுவரை தூரத்திலிருந்து நீ பார்த்தது அவனைத்தான் என்று.  

ப்ரியா, நீ வேறு யாரைக் காதலித்திருந்தாலும் எனக்கு அவ்வளவு வலித்திருக்காது. எழுதிவைத்ததுபோல எனக்குப் பிடித்த எல்லாமே அவனைத் தேடிப்போய் சேர்ந்துக்கொண்டது. தினமும் டவுன்ஹாலில் உனக்காக நாங்கள் காத்திருப்போம். எல்லோரும் ஒரே பஸ்ஸில் ஏறுவோம். செல்வபுரத்தில் இறங்காமல் முத்துசாமிக் காலனி நிறுத்தத்தில் இறங்கி உன் வீடுவரை வந்துவிட்டு திரும்பி பாரதியார் காலனிக்கு நடப்போம். இப்போது சொல்கிறேன், நான் உங்களோடு வந்தது ராபர்ட்டுக்காக அல்ல, உனக்காக. அந்நேரங்களில் நம் இருவர் நடுவில் இருக்கும் ராபர்ட் என் பார்வையிலிருந்து மறைந்து விடுவான். நீ குலுங்கிக் குலுங்கி நடப்பதும், மிகையாகச் சிரிப்பதும், துப்பட்டா பின்னூசியை சரி செய்யும்போது வெட்கப்படுவதும், உன் காது ஜிமிக்கி ஊஞ்சலாடுவதும் எல்லாம் எனக்காகதான் என்று நினைத்துக்கொள்வேன். பின்னாளில் நாம் இணைந்திருந்த நாட்களில் நான் தீர்த்துக்கொண்ட ஆசைகள் யாவும் அந்நாட்களில் காணப்பட்ட கனவுகள்தான். 

பத்தாம் வகுப்பில் படிக்கும்போது ராபர்ட் காலில் அடிபட்டு வீட்டில் அடைப்பட்டுக் கிடந்த சமயத்தில் நான் உன்னை பாரதியார் காலனிக்கு அழைத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறதா? பேருந்து நிறுத்தத்திலிருந்து காலனிக்குள் நுழையும்வரை நீ எதுவும் பேசாமல் இருந்தாய். உன் சோகத்தையும் பகிர்ந்துகொள்ள முடியாமல், நாம் ஒன்றாய் சேர்ந்து நடக்கும் சந்தோஷத்தையும் வெளிக்காட்ட முடியாமல் நானும் அமைதியாக நடந்தேன். வீட்டு முன்னறையில் ராபர்ட் சுவரோரமாகச் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் எதிரே நாம் அமர்ந்திருந்தோம். நீங்கள் இருவரும் கண்களால் பேசிக் கொண்டிருந்தீர்கள். கனகாக்கா டீ போட சமையலறைக்குச் சென்றாள். உன் உடற்சூட்டின் சமீபத்தைவிட்டு அகல விருப்பமில்லாமல்தான் ராபர்ட் என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் புரிந்தும் புரியாததுபோல உன்னருகே அமர்ந்திருந்தேன். காலனியிலிருந்து உன் வீட்டுக்கு நடந்து செல்லும்வழியில், பத்திரகாளியம்மன் கோவிலைத் தாண்டும்போது நீ கேவி அழுது என் தோளில் சாய்ந்தாய். அன்று நானும் ராபர்ட்டுக்காக அழுதிருக்க வேண்டும். உன்னை அணைத்து தோளைத் தட்டிக் கொடுத்தது உண்மையில் ஆறுதல்படுத்துவதற்காக இருந்திருக்க வேண்டும்.  உன்னை வீட்டில் விட்டுத் திரும்பும்வழியில் என் சட்டையில் உன் கண்ணீர் நனைத்த இடத்தை நான் முகர்ந்து பார்க்காமல் இருந்திருக்க வேண்டும். நிறைய தவறுகள் செய்திருக்கிறேன் ப்ரியா, நிறைய. 

கணுக்கால் முறிவுக்குப் போடப்பட்டிருந்த மாவுக்கட்டை அவிழ்த்தபின்னும் காலில் வலி தொடர்வதாக ராபர்ட் சொன்னதால் அதே மருத்துவமனையில் இரண்டாம் முறையும் கட்டுப்போட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள். ஒரு மாதம் கழித்து ராபர்ட் பள்ளிக்கு வந்தான். நலம் விசாரித்த அனைவரிடமும் வழக்கமான சிரிப்புடன் பேசினான். பள்ளி முடிந்ததும் நான் வீட்டுக்குக் கிளம்புவதைக் கவனித்து அவனே வந்து என்னை விளையாட அழைத்தான். அனைத்தையும் மறந்ததுபோல சிரிக்கும் ராபர்ட்டின் முகத்தைப் பார்க்கக் கண்கூசி தலைகுனிந்து அவனுடன் மைதானத்திற்குச் சென்றேன். ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்கள் நன்றாகவே ஓடிக்கொண்டிருந்த ராபர்ட் திடீரென தரையில் அமர்ந்து வலது கணுக்காலை அழுத்தினான். எழுந்து காலை உதறினான். பந்தை வாங்கிக்கொண்டு கோல்கம்பத்தை நோக்கி ஓடினான். அவன் வேகம் பாதியாகக் குறைந்தது. பின்னால் வந்த ஒருவன் வளைந்தோடி ராபர்ட்டின் கால்நடுவே இருந்த பந்தைப் பறித்து எதிர்பக்கமாகத் திரும்பி ஓட ஆரம்பித்தான். ராபர்ட் அவனைத் துரத்திக்கொண்டு ஓடுவதை நான் பின்னால் நின்று பார்த்தேன். சாலையைக் கடக்கும் காரை துரத்திக்கொண்டு ஓடும் நொண்டி நாயைப்போல ஒருகாலை இழுத்துக்கொண்டு ராபர்ட் ஓடும் அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. ராபர்ட் கால்பந்து விளையாடியதை அன்றுதான் நான் கடைசியாகப் பார்த்தேன். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு மைதானத்தின் நடுவில் தலைகுனிந்து நின்ற ராபர்ட்டின் முன்னால் பந்து உருண்டு சென்றது. “ராபி, பால்” என்று ஒலித்த குரல் கேட்டு தலை நிமிர்ந்த ராபர்ட்டின் முகத்தில் சிரிப்பில்லை. வாழ்வின் மொத்தக் கசப்பையும் வழித்தெடுத்து பிடித்துவைத்த உருண்டையாக கால்பந்தைப் பார்த்தான் ராபர்ட். எப்போதும் கால்பந்திடம் ரகசியம் சொல்லி அனுப்பும் ராபர்ட்டின் கால் அன்று அந்தப் பந்தை வெறுப்புடன் உதைத்தது. கால்பந்து வானில் பறந்து பள்ளியின் காம்பவுண்டு சுவரைத் தாண்டி குட்ஷெட் சாலையில் சென்று விழுந்தது. பார்த்துகொண்டிருந்த அனைவரும் வாயடைத்து நின்றோம். யாரிடமும் பேசாமல், திரும்பிப் பார்க்காமல், ராபர்ட் தலைகுனிந்து மைதானத்தைவிட்டு வெளியேறினான். 

அடுத்த இரண்டு மாதங்கள் ராபி ஏன் அப்படி நடந்து கொண்டான் என்பதை யாராலும், ஏன் ராபர்ட்டாலும்கூடப் புரிந்துகொள்ள முடியாது. கால்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கவில்லை என்று கோபித்து சண்டையிட்டு வீட்டைவிட்டு ஓடினான். அடுத்தநாள் மாலை திரும்பியவனை அவன் அப்பா மரியசாமி அடிக்கப் பாய்ந்திருக்கிறார். ராபர்ட் அவரைப் பிடித்து தள்ளிவிட, அவர் படியில் உருண்டு விழுந்திருக்கிறார். வெளியே சென்றுவிட்டு இரவில் போதையுடன் திரும்பிவந்த மரியசாமி பிளாக்கின் கீழேநின்று ராபர்ட்டையும் கனகாக்காவையும் ஏச ஆரம்பித்தார். சத்தம் கேட்டு பக்கத்து பிளாக்குகளில் இருந்த எல்லாரும் வெளியே வந்து வேடிக்கை பார்த்தோம். சமாதானப்படுத்த முயன்ற ராஜேந்திரனின் அப்பாவை மரியசாமி தள்ளிவிட கோபத்தில் ராஜேந்திரனின் அப்பா மரியசாமி முகத்தில் அறைந்தார். அடிவாங்கித் தரையில் விழுந்து மலங்கப் பார்த்துவிட்டு மரியசாமி அழுதார். ராஜேந்திரனின் அப்பாவையும் கனகாக்காவையும் இணைத்து அசிங்கமாகப் பேச ஆரம்பித்தார். ராபர்ட் அவரைப் பார்த்துக்கொண்டும் வீட்டுக்குள் இருக்கும் கனகாக்காவின் அழுகையைக் கேட்டுக்கொண்டும் இரண்டாம் மாடிப் படிமேடையில் செய்வதறியாது நின்றிருந்தான். 

பள்ளியில் விளையாட்டு வகுப்புக்கு வெளியே வராமல் ராபர்ட் வகுப்பறையிலேயே அமர ஆரம்பித்தான். மைதானத்துக்கு வரச்சொல்லி மிரட்டிய மாணவர் தலைவன் தியாகுவை ராபர்ட் அடித்துவிட கண்ணாடி உடைந்து தியாகுவின் மூக்கில் கீறல் விழுந்தது. பெரோசின் அப்பா தலைமையாசிரியரிடம் புகாரளித்தார். தலைமையாசிரியர் ராபர்ட்டுக்கு அடுத்த மூன்று நாட்கள் பள்ளிநேரத்தில் முழுவதும் வகுப்பறை வாசலில் முட்டிபோடும் தண்டனையை அளித்தார். ஆரோக்கியராஜ் சார் தண்டனை முடிந்து வகுப்புக்கு வந்த ராபர்ட்டை அழைத்துப் பேசினார். அதன்பின் ராபர்ட் மதிய உணவுநேரத்திலும் மற்ற இடைவேளைகளிலும் ஆசிரியர் அறைக்குச் சென்று ஆரோக்கியராஜ் சாருடன் இருக்க ஆரம்பித்தான். 

ஒருநாள் வீட்டுப்பாடத்தை முடிக்காத ராபர்ட்டைக் கண்டித்த செபாஸ்டின் சார், “விளையாட்டை விட்டாச்சு, இனி படிப்பும் இல்லைன்னா நொண்டிக் காலை வைச்சு நீ பிச்சைதான் எடுக்கணும்,” என்று கத்தினார். அவர் சொன்னதைக் கேட்டு சில மாணவர்கள் சிரித்தார்கள். அவர்களைப் பார்த்து புன்னகைத்த செபாஸ்டியன் சார் ராபர்ட்டைப் பார்த்து காலை இழுத்துவைத்து இரண்டடி நடந்து காட்டினார். மாணவர்கள் சத்தமாகச் சிரித்தார்கள். ராபர்ட் பல்லைக் கடிப்பதை கவனித்த சார்  அவனை வகுப்பைவிட்டு வெளியேறச் சொன்னார். வெளியே சென்ற ராபர்ட் நேராக வாகன நிறுத்துமிடத்துக்குச் சென்று கல்லை எடுத்து செபாஸ்டியன் சாரின் பைக்கை அடித்து உடைக்க ஆரம்பித்தான். கண்ணாடிகளை உடைத்துவிட்டு சீட்டைக் கிழித்துக்கொண்டிருந்த ராபர்ட்டை வாட்ச்மேனும் சில ஆசிரியர்களும் சேர்ந்து பிடித்து நிறுத்தினார்கள். 

அடுத்தநாள் ராபர்ட்டின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்திருந்தபோது மரியசாமி வரவில்லை. கனகாக்காவும் ராபர்ட்டும் தலைமையாசிரியர் அறைக்கு முன்பு பெஞ்சில் அமர்ந்திருப்பதை வகுப்பு ஜன்னல்வழியே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கனகாக்கா எப்போதும்போல அழுதுகொண்டிருந்தாள். ராபர்ட் தலைகுனிந்து கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். பெஞ்சிலிருந்து அவர்கள் மறைந்து சில நிமிடங்களில் தலைமையாசிரியர் அறையில் இருந்து வெளியே வந்தார்கள். பள்ளியின் வாசல்வரை அமைதியாகச் சென்ற கனகாக்கா வாசலருகே இருந்த சிலையைப் பார்த்து நின்றாள்.  

இரு கைகளையும் நீட்டி, ரத்தம் வழியும் உள்ளங்கைகளைக் காட்டி, பாதங்களில் அறையப்பட்ட ஆணியைத் தாங்கிக்கொண்டு தலைதுவண்டு முள்முடி சூடி தேவகுமாரன் சிலுவையில் நின்றிருந்தான். பால்கொடுத்த மார்வலிக்க நெஞ்சைக் கைகளால் ஏந்திக்கொண்டு கண்ணீர் ஊற்றெடுக்கும் பார்வையுடன் தேவகுமாரனின் கால்களைத் தொட்டுத் தடவிவிட முடியாதா என்று ஏங்கியபடி சிலுவையின் அருகே மரியாள் நின்றிருந்தாள். தரையில் கால்மடித்து விழுந்து இருகைகளையும் முன்னே நீட்டி, “இயேசப்பா” என்று கனகாக்கா கதறியது வகுப்பில் அமர்ந்திருந்த எனக்குக் கேட்டது.

எப்போதும் அதிகமாகப் பேசாத ராபர்ட் காலில் அடிபட்டபின் ஓட்டுக்குள் இன்னும் ஆழமாகப் புதைந்துகொண்டான். அதற்குப் பின்புதான் அவன் உன்னுடன் சண்டையிட்டுப் பிரிந்தது. அன்று பள்ளி முடிந்து வந்த நான் மணிக்கூண்டைத் தாண்டும்போது நீ நடைபாதையில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். கோட்டை ஈஸ்வரன் கோவில்வீதி வழியாக விறுவிறுவென நடந்து ராபர்ட் பேருந்துநிறுத்தத்திற்கு வந்தான். யார், என்ன என்று கேட்டுக்கொள்ளாமல் உன்னுடன் பேசிக்கொண்டிருந்த மாணவனின் சட்டையைப் பிடித்து அவன் கன்னத்தில் அறைய ஆரம்பித்தான். தடுக்க வந்த உன்னையும் என்னையும் சேர்த்தித் தள்ளிவிட்டு அடிப்பதில் குறியாக இருந்தான். நாம் கால்தடுக்கி சாலையோரம் சென்று விழுந்தோம். தேடி வந்ததெல்லாம் கையைவிட்டு விலகிவிடும் என்ற பயத்தில் இருக்கும் விஷயங்களையும் அவன் ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறான் என்று அப்போது ராபர்ட்டுக்குப் புரிந்திருக்காது.

ராபர்ட் பள்ளியிலிருந்து நின்றபின் லேத்துப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தான். பக்கத்து பிளாக்கில் இருந்தாலும் நான் ராபர்ட்டைப் பார்ப்பது அரிதாகிப் போனது. எப்போதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு ஜன்னல் அருகே அமர்ந்து மைதானத்தில் நாங்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பான். வழியில் சந்திக்கும்போது சில வார்த்தைகள் பேசிவந்தவன் வெற்றுச்சிரிப்புடன் என்னைக் கடந்து செல்ல ஆரம்பித்தான் . 

நாம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தும் பார்க்காததுபோல அவன் விலகிச் சொல்வதை சிலமுறை கவனித்திருக்கிறேன். ஒரே காதலாய், ஒரே வாழ்க்கையாய் வாழப்போகும் நமக்காக தன் காதலைத் தியாகம் செய்துவிட்டதாக ராபர்ட் நினைத்திருப்பான். நாம் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று சொல்லியிருந்தால் ராபர்ட் முன்னால் வந்து தாலி எடுத்துக் கொடுத்திருப்பான். அவ்வளவு சுலபமாக நாம் காதலில் விழுந்து எழுந்ததை அவனால் புரிந்துகொள்ள முடியாது. வாழ்வின் சில விஷயங்களை விபத்துக்களாகக் கடக்கமுடியும் என்று அந்நாளைய ராபர்ட்டுக்குத் தெரியாது.   

பத்தாம் வகுப்புக்குப்பின் திருச்சிக்கு இடப்பெயர்வு, டிப்ளமா, பொறியியல் படிப்பு, வேலை, சென்னை, மனைவி, அமெரிக்கா, குழந்தைகள் என்று வாழ்க்கை என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்றுவிட்டது. இப்போது திரும்பிப்பார்த்தால் என் மனதில் ஒரே கேள்விதான் எழுகிறது, எதைத் தேடி நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்? 

துபாயில் உன்னைச் சந்தித்ததுகூட ஒரு விபத்துதான் இல்லையா? விமானநிலையத்தில் கணவனோடு நின்ற உன்னைப் பார்த்தபோது முன்னாள்  விபத்தின் காயங்கள் எனக்கு நினைவுக்கு வரவில்லை. மின்னஞ்சல் முகவரியும் கைப்பேசி எண்ணும் பகிர்ந்துவிட்டு நீ என்னைக் கடந்து சென்றபோது உன் கணவனின் கைகளை எதற்குப் ப்ரியா அவ்வளவு இறுக்கமாகப் பற்றிக்கொண்டாய்? இப்போதைய கணவனோடு நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எனக்கு காட்டிக்கொள்ளவா? ப்ரியா, நாம் எதைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்?

ராபர்ட், அங்கேயே இருக்கிறான் ப்ரியா. அதே பாரதியார் காலனி எஸ் பிளாக் ஒன்பதாம் நம்பர் வீட்டில் இருக்கிறான். தனியாக லேத்துப் பட்டறை தொடங்கிவிட்டான். ராபர்ட்டின் மனைவிக்கு கடைவீதியில் துணிக்கடையில் வேலை. மகனுக்கு எட்டு வயது, மைக்கேல்ஸில் படிக்கிறான், அவனும் கால்பந்து விளையாடுகிறான். மரியசாமியண்ணன் பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். கனகாக்கா சில வருடங்களாக அழுவதை நிறுத்திவிட்டாள். ராபர்ட்டுக்கு தேவனோடும், தேவகுமாரனோடும் சமாதானம் உண்டாகிவிட்டது. ஞாயிறுதோறும் ஜெபத்திற்கு தூய மைக்கேல் அதிதூதர் பேராலயத்திற்குச் செல்கிறான்.

பள்ளியில் நாங்கள் தினமும் சொல்லும் வழிபாட்டுப் பாடல் ஒன்று உள்ளது. “பிதாவே, என்னால் மாற்றமுடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அருள்வீராக, மாற்றமுடியும் விஷயங்களை மாற்றுவதற்கான மனோதிடத்தை அருள்வீராக, மாற்ற முடிவதற்கும் முடியாதவற்குமான வித்தியாசத்தைப் பகுத்துப் பார்ப்பதற்கான அறிவை எனக்கு அருள்வீராக.”

அந்த நாள்! அப்போதுதான் பத்தாம் வகுப்பு ஆரம்பித்திருந்தது. அன்று பள்ளி முடிந்ததும் இரண்டு அணிகளாகப் பிரிந்து பயிற்சியாட்டம் ஆடினோம். ராபி எதிரணியில் ஆடினான். தாயைப் பிரியாத குழந்தைபோல பந்து அவன் காலைவிட்டு நகராமல் இருந்தது. எல்லைக்கோட்டில் நின்றிருந்த அலெக்சாண்டர் சார் ராபியின் ஆட்ட நுணுக்கங்களை சத்தமாகப் பாராட்டிக் கொண்டிருந்தார். தடுப்பாட்டக்காரனாக மாற்றப்பட்டிருந்த என்னைக் கடந்து ராபி ஒரு கோல் போட்டிருந்தான். சில நிமிடங்களில் ராபிக்கு மறுபடியும் கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது. காற்றில் பறந்துவந்த பந்தைப் பாதத்தில் தாங்கி நிறுத்தினான். வலப்பக்கம் நகர்ந்து இடப்பக்கம் ஓடி தடுக்க வந்த ஒருவனை ஏமாற்றினான். வேகத்தைக் குறைப்பதுபோல பாவனை செய்து முன்னேவந்த எதிராளியின் கால்களுக்கு நடுவே பந்தைத் தட்டிவிட்டு அடுத்தவனையும் கடந்து முன்னால் நோக்கினான். கோல்கம்பத்துக்கும் ராபிக்கும் நடுவே நான் நின்றிருந்தேன். ஆட்ட சூழ்நிலையைக் கணித்த ராபி ஓடி வரும்போதே சிரிக்க ஆரம்பித்தான். என்னைக் கடந்து கோல் போடுவது ஒரு விஷயமே அல்ல என்ற அலட்சியம் அவன் சிரிப்பில் தெரிந்தது. அவன் திறமை தந்த சிரிப்பு, என்னைத் தோற்கடிக்கப் போகும் சிரிப்பு, எல்லாமும் கிடைத்தவனின் சிரிப்பு. அவன் ஓட்டப்பாதையில் கால்களை நீட்டினேன். இதை எதிர்பார்த்து ஒரு வினாடிக்கு முன்பே கால்பந்தைக் கோல்கம்பத்தை நோக்கி அடித்துவிட்டு ராபி குதித்தான். காலை மடக்கி முட்டியை உயர்த்தினேன். என் முட்டியில் தடுக்கி நிலைதடுமாறிய ராபி பறந்து எல்லைக்கூட்டின் வெளியே சரளைகற்கள் நிறைந்திருந்த இடத்தில் சென்று விழுந்தான். 

இன்று மாலை காலனி மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ராஜேந்திரன் ஒரு சிகரெட்டை நீட்டினான். நான் அதை வாங்கிப் பற்றவைப்பதைப்  பார்த்த ராபர்ட், “வேண்டாம் பிரதீப், ஸ்டாமினா போயிடும்,” என்றான். அவனருகே முருகன் கால்பந்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ராபர்ட் அமர்ந்திருந்த சுவரின்மேல் வலதுகாலை வைத்து கணுக்காலை அழுத்திக் கொண்டிருந்தான். 

“எனக்கு வலிக்கலையே” என்றான் முருகன். 

அவன் கன்னத்தைத் தட்டிக்கொடுத்த ராபர்ட், ”ஒன்னுமில்லடா மருமகனே. முட்டியில ஆரம்பிச்சு பாதத்தைத் தொடற கத்தி ஒண்ணு இருக்கு மாமா காலுக்குள்ள. கத்திக்குப் பொழுது போகாட்டி என் காலைக் குத்திப்பார்க்கும். இப்பப்பாரு, கத்தியை துணி போட்டு மூடிடறேன்,” என்று சொல்லி காலின்மேல் பேண்டை அகட்டி விட்டுக்கொண்டு சிரித்தான். 

அவன் சிரித்தான், ப்ரியா, அவன் சிரித்தான். ராபி இன்னும் சிரிக்கிறான். வாழ்க்கை அவன்மேல் வீசிய அத்தனைக் கத்திகளையும் ஏந்திக்கொண்டு, அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு ராபி இன்னமும் சிரிக்கிறான். 

நான் ராபியின் காலை இழுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன். அவன் கால்களை நகர்த்த முயன்றான். நான் விடவில்லை. எனக்கு அந்தக் கால்களைப்  பார்க்க வேண்டும், பிடித்துக்கொள்ள வேண்டும், கண்ணீரால் அவற்றைக் கழுவிவிட வேண்டும். உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்டக்காரன் ஒருவனின் கால்களை என் இருகைகளாலும் தொட்டுப் பார்த்து மார்போடு அணைத்துக் கொண்டேன். ராபி என் கைகளைப் பிடித்து விலக்கிவிட்டான். நான் அவனைத் தடுத்து, “நான் உன் நண்பன்தானே ராபி,” என்றேன். 

என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. ராபி உடலை தளர்த்திக்கொண்டு  இரு கைகளையும் முதுகுக்குப்பின் சுவரில் வைத்து சாய்ந்து அமர்ந்தான். அவன் கால்களை அழுத்திக் கொடுத்தபடி, “சத்தியமா நான் வேணும்னு பண்ணல ராபி.” என்றேன்.

“டேய், நீ பண்ணது ஃபவுல், ரெட்கார்ட் குடுத்து வெளியே உக்கார வெச்சிருக்கணும்.” என்றான் ராபி. நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். அவன் தொடர்ந்தான், “ரெட்கார்ட் ஒரு போட்டிக்குத்தான். அதுக்கடுத்த ஆட்டத்துல ஆடணும், தெரியுமில்ல? அதை விடு, விளையாட்டுன்னா எல்லாத்துக்கும் தயாராதான் இருக்கணும்.” என்றான் ராபி.  

தலை நிமிர்ந்து ராபியைப் பார்த்தேன். அவன் முகத்தில் வலியின் சாயல் தெரிந்தது. அவன் கால்களை மெதுவாக வருடிக் கொடுத்தேன். முருகன் எழுந்து பந்தைத் தரையில் வைத்து, “வாங்க மாமா,” என்றான். ராபி எழுந்து மைதானத்திற்குள் நுழைந்தான். முருகன் துரத்த, ராபி கால்பந்தைத்  தட்டிக்கொண்டு ஓடினான்.

பார்த்துக் கொண்டிருந்த நான், “வலிக்கலையா ராபி,” என்று கேட்டேன்.

திரும்பி என்னைப் பார்த்த ராபி, “வலிக்குதுதான். பிடிச்சதை செய்யறப்போ வலிச்சா தெரியாது. தெரிஞ்சாலும் பரவாயில்லை, விளையாடித்தானே வலிக்குது,” என்று சிரித்தான். பந்தைத் தட்டிக்கொண்டே “நீ இப்பவும் விளையாடறயா” என்று கேட்டான். 

“டிப்ளமோ சேர்ந்த கொஞ்சநாள்லயே நிறுத்திட்டேன்டா.” என்றேன்.  

“ஏன்டா?” என்று அவன் கேட்டதற்கு நான் பதில் சொல்லவில்லை. “சரி வா,” என்றான் ராபி. என்னால் அசைய முடியவில்லை. கையை நீட்டி விரல்களை மடக்கி, “வாடா, நாம சேர்ந்து விளையாடி எத்தனை வருஷம் ஆச்சு?” என்று ராபி சிரித்தான். 

ப்ரியா, ராபியின் ஆட்டத்தைப் பார்க்கும் வரம் உங்கள் யாருக்கும் அருளப்படவில்லை. உலகமே கண்கொட்டாமல் பார்த்து ரசித்திருக்க வேண்டிய அந்த அதியற்புதக் கால்பந்தாட்டக்காரனுடன் இன்று நானும் முருகனும்  விளையாடினோம். முகத்தில் சிரிப்புடன் ராபர்ட் கால்பந்து விளையாடும் ஒவ்வொரு நொடியும், “ராபி, ராபி” என்ற பெருங்கூட்டத்தின் குரல் காலி மைதானமெங்கும் எதிரொலிப்பது எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.