முனி பள்ளம்

“அதோ பேய்..யி” என்று அலறினாள் ரதி!

சின்னியக்கா அவள் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டி,”இவளோட பெரிய ரோதனையா போச்சு மதனி, பகல்ல பசு மாட்டைப் பார்த்தா நடுங்குவா. ராவுல எரும மாட்டைப் பத்திக் கேக்கவா வேணும். வண்டை கண்டா பயம் , நண்டைப் பாத்தா பயம்! ஏண்டி அடுத்த வருஷம் ப்ளஸ்-1 போகப் போற, நியாபகம் வச்சிக்க!”

“அதுக்குதான் இந்த புள்ளைய சினிமாவுக்கு கூப்பிடாதன்னு சொன்னேன். காமெடி பேய் படத்தையே கண் இடுக்கால பார்த்த இவ, இவ நெசப்   பேயைப் பார்த்தா அவ்ளோதான்! “

“இவ அலறலைக் கண்டு பேய் ஓடிப் போயிடும்” – என்று சிரித்த மதனி, “எங்கடி பேய்?”

“அதோ மரத்தில தலகீழாத் தொங்குது!”

 சின்னி அருகில் போய் பார்த்தாள்

“அட போடி, இது எவனோ ரோடு வேலை செஞ்சுட்டு சட்டையைக் காய போட்டு போயிருக்கான், அதுக்கு போயி?”

கனகரதி, மதனியின் தோளில் முகம் வைத்து மருண்ட விழிகளால் எட்டிப் பார்த்தாள். இருளில் வீசும் மெல்லிய காற்றில் அந்த பழுப்பு மற்றும் அழுக்கேறிய வெள்ளை கட்டம் போட்ட சட்டை மரக்கிளை மேல் தொங்கலாக ஆடிக் கொண்டிருந்தது. திடீரென குளிர் காற்று வீச, நீளமான இரண்டு கைகளையும் அகல விரித்து, ‘இங்கே வா’ என்று ரதியை அழைப்பது போல் இருக்க, கண்ணை இறுக்க மூடிக்கொண்டாள். “போயிடலாம்கா” 

லை அடுக்குகளில் இருளை ஒளித்து வைத்து நட்சத்திரங்களை மட்டும் வானத்தில் விதைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தது அந்த நீலகிரி மலைக் கிராமம். அங்கங்கே வெளிச்சப் பூக்களை வரிசையாய் நட்டார் போல் க்வாட்டர்ஸ் வீடுகள். அதன்மேல் உலகம், எப்போதோ கைவிட்ட ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள். அவை காற்றுக்குப் பறக்காமல் இருக்க மணல் மூட்டைகள். இன்னும் கீழே நோக்கினால், இயற்கைக்கு பங்கம் விளைவிக்காமல் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது, நீர் மின்நிலையம். அங்குதான் ரதியின் அண்ணன் மேசன் வேலை பார்க்கிறான். கஷ்ட ஜீவனம்.

“அரிசி, உளுந்து ஊறப் போட்டா உடனே படம் பாக்க ஓடிப் போயிடு. கைக்குழந்தையை வச்சிச்சுட்டு நானே கஷ்டப்படறேன். ஒக்கார வைத்து ஓசி சோறு போடறதே ஜாஸ்தி. இதுல சினிமா வேற?”

‘மேல் கேம்பில் ப்ரொஜெக்டர் வச்சு ஃப்ரீயா சினிமா போட்டாங்க’ என்று சொல்ல வந்ததை நிறுத்தினாள் ரதி. திட்டுதான் அதிகமாகும். 

வீட்டுப்பாடம் எழுதி முடிக்கும் பொழுது மணி 11 ஆகிவிட்டது. கட்டம் போட்ட போர்வையை எடுக்கும் பொழுது, மீண்டும் காற்றில் ஆடிய அந்த சட்டை ஞாபகம் வந்தது. அந்த போர்வையை விலக்கி விட்டு, வேறு கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

பென்னிங்டன் எஸ்டேட் தேயிலை செடிகளுக்கு நடுவில் செல்லும் மண் பாதையிலேறி செல்லும் பொழுது மதனி எதிர்த்தாற் போலக் கீழிறங்கி வந்தாள். சின்னிக்குத்தான் அவள் மதனி, இருந்தாலும் ரதி’யொத்த பெண்கள் எல்லோரும் அவளை மதனி, என்றே அழைத்தார்கள். 

“எங்கடி போற? அண்ணியார் கிட்ட நேத்து ராத்திரி செம டோஸ் வாங்கின போல.. ராட்சசி,  தாயில்லாப் பொண்ணை வேலைக்காரி மாதிரி வச்சிருக்கா, ஒழுங்கா சோறு கீறு போடறாளா?   

“திட்டெல்லாம் வழக்கம்தான் மதனி, ஆனா சோறு போட்டுடும். ரேணு டீச்சர் வீட்டுக்கு டியூஷன் போறேன். காசு வாங்காம எனக்குச் சொல்லித்தருது”

“சரி சாக்கிரதை,  நம்ம ஆஸ்பத்திரி வாட்ச்மேன் காலடில எப்பவும் ஒரு கருப்பு நாய் இருக்குமே, அதுக்கு வெறி பிடிச்சுருச்சாம், கவனமா போ”

போகிற வழியில் அண்ணி சொன்ன மஞ்சத்தூள் பாக்கெட் வாங்கினாள். மளிகைக்கடை ராயப்பனின் பார்வையையும், கையைத் தொட்டு பாக்கெட்டைக் கொடுத்ததையும் வெறுத்தாள். தேயிலை காடுகளில் குறுக்குப் பாதைகள், எப்பொழுதும் வளைந்து வளைந்து இருக்கும். ஏறும்போதுதான் கஷ்டம். கீழே வரும்போது ஓட்டமும் நடையுமா இறங்கிடலாம்.

‘வர்ர போர்டு எக்ஸாமுக்கு எப்படியும் நீ ரெண்டு சப்ஜெக்ட்ல 100 வாங்கிடுவ. ஆனா மூணாவதா கணக்குல ரெண்டு, மூணு, மார்க் குறைய வாய்ப்பிருக்கு, அதை விட்டுட கூடாதுன்னுதான் இவ்வளவு தூரம் மேடேறி வரச் சொல்லறேன். பாவமாத்தான்  இருக்கு. ஆனா நம்ப ஸ்கூல் பொண்ணு மாவட்டத்தில மொதல்ல வரணும்னு ஆசையும் இருக்கு –  ரேணு டீச்சர் சொன்னது நியாபகம் வந்தது.

சரியாக மூன்றாவது முக்கில் அந்த கருப்பு நாயைப் பார்த்தாள்; மதனி சொன்ன அதே நாய்தான். நடக்கிற பாதையில படுத்து கிடக்கே, ஓரமாக போயிறலாமா? என்று யோசிக்கும் பொழுதே தலையைத் தூக்கி இவளைப் பார்த்தது. இரண்டடி பின்னால் எடுத்து வைத்தாள். நாய் எழுந்து நின்று உடம்பை ஓர் உருளை போல உதறியது. வாயிலிருந்து உமிழ்நீர் கொட்டியது. கீழே இறங்கி ஓடினால் துரத்துமோ என்று பயம். மேலே ஏறி போகணும்னா அதைக் கடந்து போகணும். 

“ஒரு காலத்தில வெறும் ஓநாய்கள்தான் இருந்துச்சாம். காட்டுவாசிங்க அதை சாதகமா பளக்கி வேட்டை நாய் மாதிரி ஆக்கி வச்சாங்களாம்” என்று அப்பன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அப்பனாத்தாவை ஒரு தடவை நாய் கடிச்சு குன்னூர் கூட்டிப் போய் பாஸ்டர் இன்ஸ்டியூட்ல தொப்புள சுத்தி முப்பது ஊசி போட்டாங்களாம் – போன்ற பழைய தகவல்கள் தேவையில்லாமல் நினைவலையிலிருந்து வெளிப்பட்டது.

நாய் அவள் வருகைக்குக் காத்திருந்து, அவள் வராததால் கால்களை பிராண்டி அது முன்னேறியது.

என்ன செய்வது என்று அறியாமல் கீழே கிடந்த நீளமான குச்சியை எடுத்தாள். அவள் குனிந்த நேரத்தில், நாய் சற்று வேகம் எடுத்து அருகில் வர ஆரம்பித்தது. தன்னைத் தாக்கப் போகிறாள் என்று தற்காப்புக்காக பெரிதாக ஊளையிட்டுக் குரைக்க ஆரம்பித்தது. 

ரதிக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. நடுக்கத்தில் குச்சி கீழே விழுந்து விடும் போல் இருந்தது. நாய் வெறி கொண்டு முன்னேற, ஏதேச்சையாகத் தேயிலைச் செடி மீது போடப் பட்டிருந்த அந்த வெள்ளை, பழுப்பு கட்டம் போட்ட சட்டையைப் பார்த்தாள். உடனே அந்த கம்பை சட்டைக்குள் செருகி சடக்கென, அந்த நாயை நோக்கி ஆட்டிக் காண்பித்தாள். நாய் தயங்கியது, இரண்டடி பின் வாங்கியது. 

பிறகு, பெரிதாக ஓலமிட்டு தலை தெறிக்க ஓடி மறைந்தது.

அந்த சட்டையைத் தூக்கி தேயிலைச் செடியிலேயே எறிந்து விட்டு ஓட்டமும் நடையுமாக டீச்சர் வீட்டை அடைந்தாள். வெளியே வந்த அவள் புருஷன் மூர்த்தி,

“என்ன புள்ள நோட்டுக்கு புது அட்டை போட்டிருக்க போல..? என்று ரகசியமாகக் கேட்டபடி மார்போடு அணைத்திருந்த நோட்டை எடுக்க முயன்றான். அவள் விலகி வீட்டுக்குள் ஓடினாள்

ரேணு டீச்சர், “என்னடி பதட்டமாக வர்ர?” 

“வழியில நாயி…!”

ன்று முனீஸ்வரன் கோவிலில் பூசை செய்து கயிறு வாங்க சின்னியக்கா, மதனி வந்திருந்தார்கள். கூட ரதியும் இருந்தாள். பொரி கடலை பிரசாதம் வாங்கிக் கொண்டு ரோடு வளைவிலுள்ள சிமெண்ட் கல்வெர்ட்டில் அமர்ந்தார்கள். நீலகிரியின் யூகாலிப்டஸ்  வாசனை கலந்த தென்றல் காற்று அவர்களைத் தழுவிச் சென்றது. 

“இந்தா புள்ள நீயும் கயிறு கட்டிக்கோ, பரிட்சை வேற வருது உனக்கு”

மஞ்சூர், கிண்ணக்கொரை  செல்லும்  வாகனங்கள் அந்த சிறிய பாறையடி கோவிலுக்கு 10 அடி முன்பாக நிறுத்தப்பட்டு,  டிரைவர்கள் கீழே இறங்கி சூடம் ஏற்றிக் கொளுத்தி விட்டு பிறகு வண்டியை இயக்கி சென்றார்கள். 

“நானும் கல்யாணமாகி இந்த ஊருக்கு வந்த நாளா பாக்குறேன் மதனி.. ஏன் எல்லா வண்டியும் இங்க நின்னு போகுது ?” – சின்னி 

“கீழ தெரியுது பாரு,  அதுதான் ‘முனி பள்ளம்..!’

– அந்த வழியா போனா  நம்ப க்வாட்டர்ஸ்.க்கு சுளுவா போயிடலாம். ஆனா யாரும் போவறதில்லை”

“ஏன்?”

“பயந்தான்..  கீழ வேப்ப மரம் பக்கத்தில ஒரு பெரிய புதர் மண்டிக்கிடக்கு, தெரியுதா?

“ஆமா , ஏதோ வளைவு மாதிரி புதர்ல தெரியுது”

“அங்கத்தான், 1949’ல ஒரு மிகப் பெரிய அசம்பாவிதம் ஆயிருக்கு. நீர் மின் நிலையத்துக்கு தண்ணீ கொண்டு போற பெரிய சுரங்கப்பாதை வெட்டிகிட்டு இருந்திருக்காங்க. அது மழை சீசன். ஒரு நாள் மத்தியானம் மேக வெடிப்பு ஏற்பட்டு எதிர்பாராத, கடுமையான மழை. தொடர்ந்து  பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு கல்லு மண்ணு பாறையெல்லாம் தண்ணியோட அடிச்சிட்டு  வந்து கட்டிட்டிருந்த குகையோட வாசலை மூடிடுச்சு! அப்ப உள்ளே கிட்டத்தட்ட 600 பேர் வேலை செஞ்சிட்டு இருந்திருக்காங்க”

“ஐய்யோ..!”

“ஆமா, அவங்க வெளியில வராதபடி அப்படியே மண்ணு சரிஞ்சி மூடிட்டுருக்கு. அந்த காலத்துல வாகன வசதி, நவீன கிரேன் மாதிரி கருவிகளோ, சரியான ரோடோ கிடையாது. மழை, இருட்டு. மருத்துவ வசதி ஊட்டி’ல இருந்துதான் வரணும். மழை விடாமல் மூன்று நாள் தொடர்ந்து அடிச்சதுல ஆத்துல வெள்ளம் வந்து பாலத்துக்கு மேல தண்ணி ஓடியிருக்கு. நிறைய பேரைக் காப்பாத்த முடியல. கிட்டதட்ட 400 பேர் அப்படியே உள்ளுக்குள்ள உயிரோடு சமாதி ஆயிட்டாங்க. அதுல பாவம் நம்ம ரதி’யோட தாத்தா கூட போயிட்டாராம். 

 “புள்ள, உங்க தாத்தன் நம்ம குலம் காக்கிற சாமி! ” ன்னு அடிக்கடி அப்பன் சொல்வது ரதிக்கு ஞாபகம் வந்தது. 

“..அதுக்குப் பிறகு அந்த ஒத்தையடி பாதை வழியா யாரும் போகிறது இல்லை. அப்படி போறவங்களுக்கு அப்பப்ப, ‘காப்பாத்துங்க,  காப்பாத்துங்கன்னு’ அழுகுரல் கேக்கிறதா சொல்லியிருக்காங்க. போன ஆளுங்களும் ஏதோ காரணத்தால ஒரு வாரத்துக்குள்ள செத்துப் போறாங்க..ங்கிற வதந்தியும் உண்டு. அதனால இந்த வழியை யாரும் உபயோகப்படுத்தறதில்ல”

சின்னி, கண் கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“முனீஸ்வரன் கோவில்  பூசாரி மட்டும் அந்த வழியா போயி வேப்பிலை ஒடிச்சிட்டு பக்கத்துல இருக்கிற சுனைலயிருந்து தண்ணி புடிச்சிட்டு வருவாரு. அந்த இடத்துல பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்குதுனு கத,கதையா சொல்லுவாரு. கேட்டா நமக்கே பயமாயிருக்கும். அதனாலதான் இந்த இடத்தைத்  தாண்டற போது டிரைவர்கள் இறங்கி சூடம் ஏத்தி, போகிற வழில ஏதும் விபத்து நேரிடக்கூடாதுன்னு வேண்டிகிட்டு போறாங்க “

வெள்ளரிக்காத்  தோட்டத்திலே 

விளையாட்டப் போவயிலே 

வட்டியியே சோறு போட்டு 

வாரி வாரி தின்னலாம்.. 

கத்திரிக்கா தோட்டத்தில 

களை புடுங்கப் போவயிலே 

கிண்ணியிலே சோறு போட்டுக் 

கீறி கீறி தின்னலாம்.. 

என்று பாடியபடியே தூக்குவாளி எடுத்துக்கொண்டு பாவாடை பறக்க ஆடிக் கொண்டு வந்தாள் ரதி. தூரத்தில் கெம்பே கவுடர் தோட்டத்தில் உருளைக்கிழங்கு செடி நடுவில் இருக்கிற களைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தான் அவள் அப்பன்.

“வாடி என் ராசாத்தி, இந்தா ரண்டு உருளைக்கிழங்கு சறுகு தணல்ல வேக வச்சிருக்கேன், எடுத்துக்கோ”

“அண்ணி, கேப்பைக்களி கொடுத்துவிட்டுச்சு, தூக்குல மோர் இருக்கு – என்ன அப்படி பாக்குற?”

“நீ தாமதமா பொறந்திருக்க வேணாம், உங்க அம்மா மகராசி விட்டுட்டுப் போயிட்டா. கிட்டத்தட்ட உன்ன போலத்தான் நானும் தினமும் சோற்றுக்கு திட்டு வாங்கிட்டு..”

“இப்ப என்னாத்துக்கு கண்ணு கலங்குற? நாந்தான் நல்லா படிக்கிறேன்ல; பெரிய படிப்பு படிச்சு உன்ன எங்கேயாவது டவுனுக்கு கூட்டிட்டு போய் ராசா மாதிரி பாத்துக்கறேன் “

“உன்னை மேல படிக்க வைக்கணுமே? இனி படிச்சு என்னா ஆகப்போவுது..கிறாளே உங்க அண்ணி”

ரதி, திடீரென, “ஐயோ அது என்ன?” 

பயந்துட்டயா புள்ள? அது சோளக்கொல்லை பொம்மை!”

தண்டுக்கீரைக்கு வெத போட்டிருக்கு, பறவைங்க  வந்து கொத்தாமயிருக்க நட்டு வச்சேன்! நல்லாருக்கா?”

ரதி அந்த உருவத்தை மீண்டும் ஒருமுறை பயத்துடன் பார்த்தாள். உடலில் வைக்கோல் அரை குறையாகத் திணிக்கப்பட்டு, தலையில் ஒரு கருப்புச் சட்டி கவிழ்த்து அதில் கண்களுக்காக இரண்டு வெள்ளை பொட்டுக்கள் வைத்து, சற்று கோரமான மீசை வரைந்து, அச்சத்தின் பிரதிநிதியாக இருந்தது. தலைக்கு மேலே ஒரு பழைய கிழிந்த தொப்பி! 

பழுப்பு கட்டமும், வெள்ளை கட்டமும் இணைந்த அந்த சட்டை. அதே அழுக்கு சட்டை!  அங்கு எப்படி வந்தது? அதன் கைப் பகுதியில் ஏதும் திணைக்கப்படாததால், திடீரென மலை காற்று வீச, கைகளை உயர்த்தி ‘ஏய்.. வா அணைக்க’ என்பது போல நீட்ட, “ஐயோ”! என்று அலறினாள் ரதி.

“இந்த சட்டை.. இந்த கட்டம் போட்ட சட்டை இங்க எப்படி வந்துச்சு?”  

“வர வழியில கிடந்துச்சு, சரின்னு கெடக்கட்டும்னு இதுக்கு மாட்டி வச்சேன். எதுக்குப் புள்ள பயப்படுற? உங்க அம்மா தைரியம் உனக்கு துளி கூட வரலையே”

தூக்கு வாளியை எடுத்துக்கொண்டு தோட்டத்து வேலியைக் கடக்கும் போது திரும்பிப்  பார்த்தாள்

அந்த சோளக்கொல்லை பொம்மை இவளைப் பார்த்துத் திரும்பி இருந்தது. காற்றில் தொப்பியின் முனை உயர, கண்கள் அவளை நெட்டுக் குத்தாகப் பார்க்க விழி வட்டத்திற்குள் நெருப்பு எரிவது போலத் தெரிந்தது. மீண்டும் கைகளை உயர்த்தி காற்றில் நீட்டி அவளை வா! என்றழைத்தது. பிரமையா, நிஜமா? இன்னொரு முறை பார்க்க அவளுக்கு தைரியமில்லை.

ண்ணன் மகளுக்கு காலையிலிருந்து ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. 

“மூர்த்தி கடைக்குப் போய் பிரட் வாங்கிட்டு வா, மாசம் பொறந்ததும் காசு தரேன்னு சொல்லு. உன் டீச்சர் புருஷன்தானே அந்த ஆள், கொடுப்பான் போ”, குழந்தை நெற்றியில் நீலகிரி தைலம் தேய்த்தவாறே சொன்னாள் அண்ணி. 

அந்த மலை கிராமத்தில் இருந்த ஒரே பேக்கரி. ‘T.V.V மூர்த்தி & சன்ஸ் (Est.1959), இங்கே ஊட்டி வர்க்கிகள் கிடைக்கும் என்ற கலைந்த எழுத்துகளுடன்  மெட்டாலிக் நீல நிற போர்டு பொலிவிழந்து துருப் பிடித்திருந்தது. டீயும் கிடைக்கும் என்பதால் உலக அரசியலில் ஆரம்பித்து உள்ளூர் வதந்திகள் வரை பேச ஒரு வெட்டி இளைஞர் கும்பல் எப்பொழுதும் இருக்கும். இன்று பாலஹட்டி ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு பெரும்பாலோர் போய்விட்டதால் கடை காலி.  

“வா ரதி, அடிக்கிற வெயிலுக்கு யாரும் ஸ்வெட்டர் போடுவாங்களா என்ன? என்றபடி மூர்த்தி, 

“பிரட்தானே இதோ அறுத்துத் தாரேன்”.   ஒரு பன்’னை எடுத்து இரண்டாக விலக்கி அதில் ஒரு பக்கம் வெண்ணெய்யால் மெழுகி, “இங்க பார்த்தியா புது ஜாம், செக்கச்சிவப்பா நல்லா இருக்கில்ல ..” என்று போட்டு, “டீ சாப்பிடுறியா? அக்கவுண்ட்ல எழுத மாட்டேன்” என்றவாறே ஒரு பிளேட்டை எடுத்தான். 

“பன் பட்டர் ஜாம் நான் கேக்கலை, பிரட்டை கொடுங்க நான் போகணும்” 

“டீச்சர் உன்ன வீட்டுக்கு மத்தியானம் வர சொல்லுச்சு. ஏதோ பேப்பர் திருத்த உதவணுமாம்”

“திருவிழாக்காக காலையிலேயே போயிடுவேன், ரெண்டு நாள் டியூஷன் கிடையாதுன்னு டீச்சர் ஏற்கனவே சொல்லிடுச்சு”

அவளே கண்ணாடி அலமாரியிலிருந்த பிரட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு விர்..ரென்று நடந்தாள்.

இவனைப் பற்றி சின்னியக்கா, ஜோதிராணி சொன்னதெல்லாம் சரிதான் போல..!

கனகரதிக்கு அன்று இரவு கன்னா பின்னாவென்று கனவு வந்தது. முனி பள்ளம் கல்வெர்ட்டில், பத்து பேர் முகம் இல்லாமல் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். பெரிய மழை கொட்டி நின்றது. எவரையும் காணவில்லை. அவள் உடைகள் மாறின. சிறுவர் புத்தகத்தில் வரும் ஸின்ரெல்லாவாக மாறியிருந்தாள். திடீரென மூர்த்தி வந்து கோத்தகிரி கேக் ஊட்டி விடவா? என்று நீட்டினான். அண்ணி பாத்திரம் கழுவாததால் இன்று உனக்கு சோறு கிடையாது என்று கத்த, அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தாள். கட்டம் போட்ட சட்டை மட்டும் அந்தரத்தில், காற்றுடன் அசைந்து கொண்டிருந்தது. “எனக்கு கேப்பைக் கூழ் ஊற்றாமல் ஏன் போனாய்?” என்று இவளை நெருங்கியது.

டுத்த நாள் போர்டு பரிட்சை என்பதால், ரேணு டீச்சர் வர சொல்லி இருந்தாள். மாலை நாலு மணிக்கெல்லாம் கிளம்பி விடலாம் என்று நினைத்திருக்க மணி ஆறு ஆகிவிட்டது. இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை தேயிலை பறிப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 

அப்பனையாவது அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம். பாவம் முட்டி வலியில்  மேலே ஏற கஷ்டப்படும். விடுமுறை நாட்களில் கட்டட வேலைகளுக்கு அண்ணன் ஊட்டி, குன்னூர் போயிடுவான். 

“ஜாக்கிரதையா போறியா?” என்று கேட்டபடி வாசல் வரை வந்து வழி அனுப்பினாள் ரேணு டீச்சர்.

சூரியன் மலைக்குள் பதுங்க ஆரம்பித்தது. யாரோ தள்ளாடிக் கொண்டு மேலேறி வருவது தெரிந்தது. மிகக் குறுகிய அந்த ஒத்தையடிப் பாதையில் திரும்பும் போதுதான் பார்த்தாள். பேக்கரி கடை மூர்த்தி!  ஐயோ இவனா..? என்று தயங்கினாள்.

“டியூஷன் முடிஞ்சு போச்சா ரதி,  நான் வேணா உன் கூட துணைக்கு வரவா? என்று வார்த்தைகளில் வழுக்கினான் 

சுற்றும் முற்றும் ஆள் அரவம் இல்லை. மெல்லிய இருட்டு படர்ந்தது. தூரத்தில் நாய் குலைக்கும் ஒலிகள். அவனுடைய நிதானமின்மை பயத்தைச்  சற்று அதிகப்படுத்தியது. 

“தேவையில்லை, வழியை விடுங்க, நான் போகணும்” அவனை விலகிக் கொண்டு நகரும்போது ஒரு பக்கம் தேயிலை செடி இடித்தது. அவன் கைகளை நீட்ட, புத்தகங்கள் நழுவின. குனிந்து எடுக்க அவள் முற்பட்டபோது, மூர்த்தி மிக அருகில் வந்திருந்தான். வாடை சரியில்லை.. கையைப் பிடிக்க, அவள் இதயம் திக் திக்  என்று அடித்துக் கொண்டது. கையை உதறினாள். அவன் துப்பட்டாவைப் பிடிக்க அது நழுவியது. அவள் ஓட ஆரம்பித்தாள்.

குறுகிய ஒத்தையடிப் பாதையில், மூர்த்தி தன்னிலை மறந்து அவளைத் துரத்த ஆரம்பித்தான். ரதி வேகம் எடுத்தாள். அவன் வளைந்து வரும் பாதையில் தேயிலை செடிகளுக்கு இடையில் புகுந்து துரத்த, மேலிருந்து கீழிறங்கும் பாதையைத் தவிர்த்து பாறையையொட்டியிருந்த மண் பாதையில் நுழைந்தாள். தடதடவென கீழே இறங்கினாள். தூரத்தில் சிறிய ஓடையின் சலசலப்பு கேட்டது. மூர்த்தி அவள் பாதையை மாற்றியதை உணர்ந்து, அவனும் குறுக்கு வழியாக நெருங்கி அந்தப் பாதையில் நுழைந்தான். அந்த இடத்தில் இருள் படர்ந்த பிரதேசங்கள் நிறைய இருப்பதைக் கண்டு, அவளைப் பிடிக்க வேகம் எடுத்தான்.

ரதி, நீர் ஓடையின் அங்கங்கேயிருந்த கற்பாறைகளில் கால் வைக்க, வழுக்கி தண்ணீரில் கால் சறுக்க ஜில்லென்று நீர் தெறித்தது. கல்லின் முனை குத்தி சுரீரென்றது . பின்னால் தண்ணீரில் கேட்கும் சலசலப்பு ஒலி மூர்த்தி நெருங்கி விட்டான் என்பதை உணர்த்தியது.  அடர்ந்த  வேப்பமரம் ஒன்றைக் கடந்து வேகமாக முன்னேறினாள். ‘THE  BAKER’s TUNNEL 1949’ என்ற சிமெண்ட் காரையால் செதுக்கப்பட்ட கரிய குகை வளைவு தென்பட்டது. அதன் வாய் முழுமையா மூடி ஒரு சிறிய பகுதி மட்டும் திறந்திருந்தது. ‘பகாசுரன்’ போல அத்தனை பேரையும் அள்ளியுண்ட இடம் இதுவாக இருக்குமா? – முனி பள்ளம்!! முகத்தில் அறைந்தது போல அட்ரீனல்கள் ஒட்டு மொத்தமாகப் பாய, குளிரிலும் வியர்க்க உன்னி செடியின் முட்கள் அவளுடைய அங்கங்களில் இரத்த துளிகளால் பொட்டு வைக்க வெறித்தனமாக ஓடினாள்..

“என்னடி பேயடிச்ச மாதிரி ஓடி வர?  நாளைக்குப் பரிட்சையை வெச்சுகிட்டு எங்க ஊர் சுத்துற? உங்க அண்ணன்கிட்ட நூறு தடவை சொல்லிட்டேன் பரிட்சை முடிஞ்சதும் தேயிலை பறிக்க போயிடணும். ஓசி கஞ்சி ரெண்டு பேருக்கு ஊத்த முடியாது” அண்ணி கத்திக் கொண்டேயிருக்க , படுக்கையில் போய் விழுந்தாள். இரவு முழுதும் உடம்பு அனலாகக் கொதித்தது.

விடியற்காலை எழுந்து பரீட்சை புத்தகங்களை எடுத்துக் கொண்டாள். நேற்றைய மாலை நிகழ்ச்சிகள் கனவு போல இருந்தது. 

“எழுந்துட்டியா புள்ள? என்றபடி கதவைத் திறந்து அப்பன் வந்தார். தலைக்கு மேல் போட்டிருந்த சாக்கு பை எடுத்து கீழே வைத்த படி, அவள் அண்ணனிடம்,

“பேக்கரி மூர்த்தி பய இருக்கான் இல்ல. அவன் முனி பள்ளத்துல இருக்கிற வேப்ப மரத்துல தொங்கிட்டு இருக்கான். எல்லாரும் கீழப்போக பயந்துகிட்டு மேலயிருந்து பார்த்துக்கிட்டு இருக்காங்க..”

“யாரு இவளோட ரேணு டீச்சர் புருஷனா?” 

“ஆமா, கதறி அழுதிட்டிருக்காங்க. அவங்க நல்ல மனசுக்கு இப்படி ஆயிருக்கக்கூடாது..” என்றவாறு ரதியை நோக்கித்  திரும்பி, 

நம்ம சோளக்கொல்லை பொம்மைக்கு மாட்டியிருந்த பழுப்பு கட்டம் போட்ட சட்டையைப் பாத்து நீ அன்னிக்குப் பயப்பட்டாயே – அந்த சட்டையைத்தான் மாலை போலக் கட்டித் தூக்கில் தொங்கி இருக்கான். அதை எப்ப, எப்படி அவுத்துட்டுப் போனான்..னுதான் ஆச்சர்யமா இருக்கு..?!

3 Replies to “முனி பள்ளம்”

 1. சில கதைகளுக்கு லாஜிக்கல் முடிவை தேடக்கூடாது என்பதை எடுத்துச்செல்லும் கதை. நல்ல வர்ணனை. நாமும் நீலகிரிக்கே சென்றது போன்ற உணர்வு.
  அப்படியே கதாநாயகி பரபரவென்று ஓடி தன் வீட்டை அடைவது போல, கதை நம்மை விறு விறுவென்று ஓட வைத்தது. பாராட்டுகள்+
  குமரன்

 2. சொல் வனத்தில் சொற்களின் வனப்புடன் ஒரு கதை

  கதை அருமை
  கதையின் நடை அருமை
  நீலகிரியின் வர்ணனை அருமை

  படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை
  விறுவிறுப்பாக இருந்தது

  கட்டம் போட்ட பழுப்பு நிற சட்டையு‌ம் ,ரேணு டீச்சர் கணவன் மூர்த்தியும் ரதியை துரத்த கதை முழுவதும் நானும் ஓடி கொண்டு தான் இருந்தேன் .என்னையும் சேர்த்து துரத்தியது கதையின் ஓட்டம்.

  முனி பள்ளம்!! முகத்தில் அறைந்தது போல அட்ரீனல்கள் ஒட்டு மொத்தமாகப் பாய, குளிரிலும் வியர்க்க உன்னி செடியின் முட்கள் அவளுடைய அங்கங்களில் இரத்த துளிகளால் பொட்டு வைக்க வெறித்தனமாக ஓடினாள் இந்த வரிகள் என்னையும் பின்னங்கால் பிடரி பட ஓடத் வைத்தது என்பது என்னவோ உண்மை

  ஐயோ ரதி எப்படியாவது வீட்டுக்கு போய் விட வே‌ண்டு‌ம் என்ற என் மனதின் பதை பதைப்பு

  “எழுந்துட்டியா புள்ள? என்றபடி கதவைத் திறந்து அப்பன் வந்தார். தலைக்கு மேல் போட்டிருந்த சாக்கு பை எடுத்து கீழே வைத்த படி, அவள் அண்ணனிடம்,

  என்ற வரிகளில் தான் அடங்கியது

  சூப்பர் ஓ சூப்பர்

  இந்த காலத்துக்கு ரேணு டீச்சர் கணவன் மூர்த்தி யை முழுங்கிய மாதிரி நிறைய முனி பள்ளங்கள் தேவை

  தலைப்பும் அருமை

  சாரதா ஸ்ரீ நிவாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.