மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று 

2000 லண்டன்

வெள்ளிக்கிழமை பகலில் மழை எட்டிப் பார்த்து விட்டுப் போனபோது மருது கருங்குதிரை வீதியில்  வசிக்கும் மூன்று பெட்ரூம் அபார்ட்மெண்ட் அறைக்குள் மடிக் கணினியில் மூழ்கியிருந்தான். வாசலில் நான்கு ஐந்து முறை அழைப்பு மணி அடிப்பது காதில் விழாமல் மிளகு வாங்கி விற்கும் அப்ளிகேஷன் – செயலியில் முழுக் கவனத்தோடு இருந்தான் அவன். 

கதவைத் திறந்து உள்ளே வந்து தயக்கத்தோடு மருது என்று இன்னொரு முறை கூப்பிட்டாள் கல்பா. அது மருது இருக்கும் ஃப்ளாட் தானா என்று அடிப்படை சந்தேகம் வலுத்துக்கொண்டிருந்தது அவளுக்கு. 

முதல் தடவை இந்தக் குடியிருப்புக்கு ப்ரபசர் பிஷாரடியோடு வந்தபோது தவறான புரிதலின் காரணமாக ஏழடி நெடுமால் ஒருவரிடமிருந்து பிஷாரடி வசவு   வாங்கியது நினைவு வந்தது. இது மட்டும் மருதுவின் அபார்ட்மெண்ட் இல்லாத பட்சத்தில், பரிச்சயமில்லாதவர்களின் அபார்ட்மெண்டுக்குள் அதிரடியாக நுழைந்து நிற்கும் பெரும் சங்கடம் ஏற்படலாம். பெண் வேறே, கல்பா. சந்தர்ப்பங்கள் அவளுக்கு எதிராக சதி செய்து விடக்கூடும். 

வெள்ளிக்கிழமை பகலிலேயே விடுமுறைக்காலம் தொடங்கி விட்டது. திங்கள்கிழமை வசந்தம் வந்ததற்கான பேங்க் ஹாலிடே என்ற விடுப்பும் சேர, மூன்று நாள் தொடரும் நீண்ட விடுமுறைக் காலத்தில் கம்பெனி கொடுக்கப் பெண்களை அனுப்பும் நிறுவனங்கள் மும்முரமாகச் செயல்படும் வேளை.

 கல்பா தன் நிழலை பீரோ கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். கம்பெனி கொடுக்க வரும் பெண் இப்படி இருக்க மாட்டாள். பின்னே எப்படி இருப்பாள்? அவளுக்குத் தெரியாது. 

மருது ஹலோ மருது. 

எஸ் என்று சலித்தபடி ஒரு குரல் கேட்டது. அரை டிராயரும் டீஷர்ட்டுமாக மருது உள்ளே இருந்து வந்தான். கல்பாவைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. 

ஹாய் கல்பா நீ எப்படி வந்தே? 

அவள் கையைப் பற்றி இழுத்தபடி கேட்டான். 

சிங்கிள் சீட் ஏரோப்ளேன்லே எடின்பரோ டு லண்டன். மாடியிலே லாண்ட் ஆகி,   சுவர் வழியா உள்ளே வந்தேன். காலிங்பெல் சத்தம் உன் காதிலே விழாதா?

“ஆமா, அது அப்போ அப்போ ஸ்ட்ரைக் பண்ணிடும்” என்றான் மருது.

கல்பா அவன் கையை இறுகப் பற்றியபடி நாற்காலிக்கு இழுத்தாள். 

ஈசிஜெட் ஏர்வேஸ் ரொம்ப தண்டம்ப்பா. தாகத்துக்குத் தண்ணி கூட தரமாட்டேன்கிறான். காசு தரணுமாம் அதுக்கும். ஏய் ஏய் ஏய். 

அவளை அப்படியே தூக்கிப் போய் கட்டிலில் போட்டு பக்கத்தில் படுத்து தலை உச்சி வகிட்டில் முத்தமிட்டான் மருது. 

சார் தனியா இருக்காப்பலியா? இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா என்னை கர்ப்பமாக்கிட்டுத்தான் திருப்பி அனுப்புவே போல இருக்கே. 

கல்பா மருதுவின் கையை தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள்.  அவளுக்கு தீர்க்கமாக மார்பிலும் வயிற்றிலும் முத்தமிட்டு மருது தலையைத் தாழ்த்தினான்.

 ”ரெண்டு மாசமாச்சு எடின்பரோ போய். லீவு போட்டுட்டு ஃப்ளைட்டை பிடிச்சு உன்னை பார்க்க வர்றவ கிட்டே சாப்பிட்டியா, குடிச்சியா, தூங்கினியா, குளிச்சியான்னு கேட்காம மாரிலே முத்தம், வயத்துலே கிஸ், வேறே ஒண்ணு இதுதான் பண்ணுவியா” என்றாள் அவன் உதட்டை நாவால் ஸ்பரிசித்து. 

”நல்லவேளை ஃப்ளைட் லாண்ட் ஆகிறது கேட்விக் ஏர்போர்ட்டிலே, ஹீத்ருவிலே இல்லேன்னு நேற்றைக்கே கேட்டு வச்சுக்கிட்டேன். இல்லாட்ட அதுக்கு வேறே அலைச்சல்” என்றாள். 

இரு வர்றேன் என்று அவசரமாக எழுந்தான் மருது. 

“ஏய் வேணாம், காண்டோம் இருந்தாலும் இப்போ வேணாம். உக்ரமான பசியிலே இருக்கேன்” என்றாள் கல்பா மார்பு உயர்ந்து தாழ. 

“Silly, எப்பவும் நான் அந்த நினைப்பிலே தான் இருப்பேன்னு நினைச்சியா? You are terribly wrong. லாப் டாப்பில் அப்ளிகேஷன் திறந்து வச்சுட்டு வந்திருக்கேன். அதை மூடிட்டு வரேன் இரு”. 

“பசிக்குதுடா” என்று சிணுங்கினாள் கல்பா.

”சாப்பாடு வாங்கி வச்சிருக்கேன். நீ வந்து தான் நானும் சாப்பிடப் போறேன்”. 

அழகாக ஃப்யூ டாலர்ஸ் மோர் தீம் இசையை விசில் அடித்தபடி அவன் அடுத்த அறைக்குப் போகப் பின்னாலேயே கல்பாவும் ஓடினாள்.  என்னடா என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி உள்ளே போனான் மருது. 

“டாய்லெட்டை பத்திரமா பூட்டி வைக்கறவன் உலகத்திலேயே நீ மட்டும்தான் இருக்க முடியும். சாவி எடு” என்றாள் கல்பா. 

லேப்டாப் பக்கத்தில் மேஜையில் இருந்து சாவி எடுத்துக் கொடுத்து விட்டு கம்ப்யூட்டர் செயலி  உள்ளே போய்விட்டான் மருது.

கல்பா திரும்பியபோது அவன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு குஷன் வைத்த நாற்காலியில் கண்களை மூடி தியானம் செய்வதுபோல் அமர்ந்திருந்தான். 

“இன்னிக்கு லீவ் எடுத்திட்டியா?” 

பின்னால் இருந்து அவன் கழுத்தில் மாலையாகத் தன் ஈரக் கைகளைச் சார்த்தி அவன் தலையை வளைத்து மென்மையாக முத்தமிட்டாள் கல்பா. இரண்டு வினாடி கழித்து இன்னொரு முத்தம் அதே போல் கொடுத்தாள். Action replay-ஆ என்றபடி அவள் பின்கழுத்தில் முத்தினான் மருது. இது என்ன, trailer for the main movie-யா என்று கண்ணடித்தாள் கல்பா.

மருது ஆமாம் என்று புன்சிரித்தபடி அவளை முன்னால் இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு உதடுகளைத் தன் உதடுகளால் கவ்விக் கொண்டான். 

How about a french kiss? மருது கேட்டான். 

“சாப்பிட்டுத்தான் மீதி எல்லாம். வந்ததிலே இருந்து மொத்தமாக ஒன்பது முத்தம் பரிமாறிக்கிட்டிருக்கோம்” என்று புள்ளி விவரம் சொன்னாள் கல்பா. 

”நியுக்ளியர் ப்ரபசருக்கு எங்கே முத்தம் கொடுத்தா பிடிக்கும்?” மருதுவின் ரொமாண்டிக் கேள்விக்கு பதிலாக வந்தது – சுவிட்ஸர்லாந்த்லே.

கல்பா மருதுவின் காது மடலை நாவால் தொட்டு ”டேய் ராஸ்கல்  இது அசௌகரியமான சீட்டா இருக்குடா” என்றாள் காமம் மீதுர. 

அவன் எழுந்து, ”வா, சாப்பிட்டு வரலாம்” என்றபடி டைனிங் டேபிளுக்கு நடந்தான். கூடவே கல்பாவும்.  வேறு யாரும் இல்லாமல் அவர்கள் சந்திப்பது இதுவே முதல்தடவை என்பதால் இருவருக்கும், உடல் மனதையும், மனது உடலையும், கொண்டு செலுத்திக் கொண்டிருந்தது. 

”என்ன ஆப்லே முழுகிக்கிடந்தே?” 

கல்பா கேட்க, ”வேறே என்ன ஆப்ஷன்… ட்ரேடிங் தான்” என்றான் பூரியை மசாலா தொட்டு கடித்தபடி. ”pepper trade… மிளகு வர்த்தகம்”. 

மருது சொல்ல ஆச்சரியத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தாள் கல்பு. 

“ஒரு சின்ன மணி மிளகு கூட உன் ஃப்ளாட்டுலே காணோம். என்ன மாதிரி ட்ரேட் பண்றே?” 

“அதான் ஆப்ஷன் ட்ரேடிங்”. 

“எனக்கு புரியற மாதிரி சொல்லேன்”. 

  இருவரும் சாப்பிட்டு முடித்து Induction Electric Stowe-இல்   பால் காய்ச்சினாள் கல்பா. இன்ஸ்டண்ட் காஃபித் தூள் கரைத்து இரு குவளைகள் நிரம்ப காஃபியோடு கம்ப்யூட்டர் அறையா படுக்கை அறையா என்று நிச்சயம் செய்ய முடியாமல் நின்றான் மருது. 

“சாப்பிட்டாச்சு. இனி பேசிட்டு இருக்கணும். வேறேதும் பண்ணக் கூடாது” சிரித்தபடி கல்பா சொன்னாள். கம்ப்யூட்டர் அறையில் லேப்டாப்பை இயக்கியபடி ”உனக்கு ரொம்ப சிம்பிள் ஆக ஆப்ஷன்ஸ் ட்ரேடிங் சொல்லித்தரேன், வா”, என்றான் மருது. 

இரு வரேன் என்று உள்ளே ட்ராவல் பையோடு போய், நைட்டி அணிந்து வந்தாள் கல்பா. நைட்டி அணிந்த தேவதைகளின் ஆராதக தெய்வம் போல் இருப்பதாக மருது சொல்ல, போடா என்றாள் சீரியஸான முகத்தோடு.

”ஷேர் மார்க்கெட் பரிபாஷையிலே call கால் என்றால் கூப்பிடறது இல்லே வாங்கறேன்னு அறிவிக்கிறது. Put புட் அப்படீன்னா வைக்கறது இல்லே. விற்கறேன்னு அறிவிக்கறது. Option Seller ஆப்ஷன் செல்லர் ஒரு நிறுவனம் அல்லது தனி மனிதர். எனக்கு call option அல்லது put option விற்பவர்.

Call கால் ஒப்பந்தத்தை  ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால்,  எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு அதே அளவு அந்த பொருளை எனக்கு விற்கச் சொல்லி அவரை நான் கேட்கலாம். எனக்கு அப்படி விக்கறது அவர் கட்டாயம் செய்தாக வேண்டியது. 

Put புட் ஒப்பந்தத்தை  ஆப்ஷன் செல்லர் கிட்டே இருந்து நான் வாங்கினால்,  எதிர்காலத்துலே ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட தேதியிலே அல்லது அதுக்கு முந்தி, அவர் ஒப்பந்தம் போட்ட அதே விலைக்கு, அதே அளவு, அந்த பொருளை என்னிடம் இருந்து வாங்கச் சொல்லி அவரை நான் கேட்டால்,  வாங்கறது  அவர் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. 

அதே நேரத்திலே, ஆப்ஷன் வாங்கின நான் ஆப்ஷன் செல்லர் கிட்டே ஒப்பந்தப்படி வாங்கணும் அல்லது விற்கணும் அப்படின்னு கட்டாயம் இல்லை. ஆப்ஷன் வாங்கினவன்கிற உரிமை எனக்கு இருக்கு. ஆனால், அந்த ஒப்பந்தப்படி செயல்படணும்னு கட்டாயம் ஏதும் எனக்குக் கிடையாது.

கால் ஆப்ஷன் ஒன் மந்த் நூறு கிலோ பெப்பர் Call option one month one hundred kilos pepper at $1000 அப்படீங்கறது மிளகு விலை ஏறிட்டு இருக்கும்போது சகாய, ஒப்பந்த விலைக்கு அது கிடைக்க வழி செய்யும். மார்க்கெட்டுலே மிளகு விலை $1000-க்கு மேலே போனால், நான் $1000-க்கு எனக்கு விற்கச் சொல்லி ஆப்ஷன் செல்லரை அழைக்கலாம். அது $1000—க்குக் கீழே மார்க்கெட்டுலே போயிட்டிருந்தா, நான் சும்மா இருந்துடலாம். 

அதே மாதிரி புட் ஆப்ஷன் ஒன் மந்த் நூறு கிலோ பெப்பர் put option one month one hundred kilo pepper at $1000 அப்படீங்கறது மிளகு விலை சரிந்து வரும்போது வெளி மார்க்கெட் நிலவரத்தை விட அதிகமான ஒப்பந்த விலையான $1000-க்கு அவன் என்னிடம் இருந்து வாங்கிக்கொள்ள வழி செய்யும். இதுதான் ஆப்ஷன் வர்த்தகத்தோட சாறு”. கல்பா கைகூப்பி ’குரு’ என்று வணங்கினாள்.

மருது அவள் உள்ளங்கையில் முத்தமிட்டுப் பத்து என்றான். அப்படீன்னா? இது முத்தக் கணக்கு என்றபடி ஆப்ஷன் அப்ளிகேஷனை மேய்ந்தான் அவன். 

“நீ சகல விதமான பொருளையும் ஆப்ஷன் வர்த்தகத்திலே வாங்கிடுவியா?” என்று ஆவலோடு விசாரித்தாள் கல்பா. 

மருது சிரித்தபடி ”ஆப்ஷன்லே ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா எந்தப் பொருளோட விற்பனை, வாங்குதலுக்கு எவ்வளவு விலை   கைமாற்றணும் என்று ஆப்ஷன் காண்ட்ராக்ட் போடறோமோ அந்த தேதியும் விலையும் தான் முக்கியம். பொருள் கைமாற வேண்டாம். அதைவிட முக்கியம், சொன்னேனே, வாங்கவோ விற்கவோ ஆப்ஷன் வாங்கினால், நமக்கு வாங்கவோ விற்கவோ உரிமை கிடைக்கிறது. ஆனால் செய்தாகணும்ங்கிற கட்டாயம் எதுவும் இல்லை. கமோடிட்டி என்ற பொருட்கள் வைத்து, உதாரணத்துக்கு மிளகு – பெப்பர் ஆப்ஷன் என்றால் நான் வீட்டுலே மிளகு மூட்டை வாங்கி அடுக்கி வச்சு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்ய, வாங்க மண்டிக்கடை நடத்த வேண்டாம். ஆப்ஷன் செல்லரோடு ஒண்ணுக்கு மேற்பட்ட பரிவர்த்தனை இருக்கும்ங்கிறதாலே,  அவர் எனக்கு எவ்வளவு தரணும் நான் அவருக்கு எவ்வளவு தரணும்னு நிலுவைத் தொகையை அப்போ அப்போ தீர்மானிச்சுக்கிட்டு வர்த்தகம் நகரும். நீ ட்ரை பண்ணி பாரு கல்பா. ஒரு தடவை ஆப்ஷன் காண்ட்ராக்ட் உள்ளே போய்ட்டா திரும்பவே மாட்டே என்றான் மருது. 

“நீ என்ன பொருளுக்கு எல்லாம் ஆப்ஷன் காண்ட்ராக்ட் வர்த்தகம் பண்ணிக்கிட்டிருக்கே மருது? 

மிளகு மட்டும்தான். அதுவே சாகரம். வா, ட்ரை பண்ணலாம்”. 

கல்பா மறுபடி அசௌகரியமான இருக்கை கொண்டாள். 

“இப்போ மிளகு நிறைய கிடைக்கறதாலே விலை குறைந்த நேரம். நீ என்ன ஆப்ஷன் வாங்குவே?” அவள் இடுப்பைச் சுற்றி இரு கரங்களையும் வளையமிட்டுக் கொண்டு இறுக்கியபடி கேட்டான். 

“புட் ஆப்ஷன் அதாவது ஆப்ஷன் செல்லர் இன்றைய மார்க்கெட் விலைக்கு மேலே இருக்கற ஒப்பந்த விலை கொடுத்து நம்மிடம் வாங்க நமக்கு லாபம்” என்று கல்பாவின் மூக்கை நிமிண்டினான். 

அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். 

“நானும் நிமிண்டட்டாடா? எங்கே சொல்லு, நிமிண்டட்டாடா….பல்லும் நாக்கும் சுளுக்கிண்டுடும்… படுவா”

“படு வா. பிரஞ்சுநாட்டு முத்தம் அதெல்லாவற்றையும் சீராக்கும் பெண்ணே”.  

இரண்டு பேரும் சிரித்தபடி புது ஒப்பந்தம் ஒன்றை அப்ளிகேஷனில் பூர்த்தி செய்து கொண்டிருந்தார்கள். கல்பா மருதுவின் நெஞ்சில் படர்ந்தாள்.

“To Hell with pepper.   எனக்கு வேறே வேணும்” என்று தரைக்கு அவனை இழுத்தாள் 

அப்ளிகேஷன் க்ளோஸ் பண்ணு என்றபடி அவன் எழுந்து நின்றான்.

 புட் ஆப்ஷன் காண்ட்ராக்ட் பதிலாக கால் ஆப்ஷன் காண்ட்ராக்ட் என்பதாகத் தவறாகச் சுட்டி நிறைவு பெற ஐநூறு பவுண்ட் மருது தவறான காண்ட்ராக்டில் பெரும்பாலும் இழந்ததாக அப்ளிகேஷன் சொல்லி அமர்ந்தது. 

தரையில் படுத்து காதல் விளையாட்டில் திளைத்திருந்த இருவரும் அதைப் பார்க்கவே இல்லை.

 அவர்கள் விரிவாக, அவசரமின்றி முயங்கிக் கிடந்தார்கள்.

ராத்திரி எட்டு மணிக்கு மருதுவின் மொபைல் டெலிபோன் அழைத்தது. எடுத்து நான்கு தடவை ஹலோ சொல்லி, சிக்னல் வீக் ஆக இருக்கு என்று வாசலுக்கு பெரிய சவுக்கார சோப்பு மாதிரி நீளமும் வடிவமும் கொண்ட நோக்கியா மொபைல் ஃபோனை எடுத்துப் போய் ஹலோ என்று மறுபடியும் அழைக்க, அந்தப் பக்கம் இந்தியாவில் இருந்து வாசு. 

அவன் நம்பர் வராமல் மூன்றாம் எண் எதன் மூலமோ தொடர்பு ஏற்படுத்தி வந்திருக்கும் அழைப்பாக இருக்கலாம். குரல் சன்னமாகக் கேட்டது. காதோடு மொபைலை வைத்துக்கொண்டு மருது பேச, டர்க்கி டவல் அரையில் உடுத்து கட்டிலில் அவனுக்காக கல்பா காத்திருந்தாள்.

வாசு ஃபோனில் சொன்னான் – மருது நான் தான் அந்த குட்டியூண்டு பெப்பர் கால் ஆப்ஷன் விற்றது உனக்கு. ஐநூறு பவுண்டாவது ப்ரீமியம் உன் மூலம் எனக்கு வருமானம் வரப் போகுது. மருதுவுக்கும் அடி சறுக்கினது ஆச்சரியம்.

ஃபோனை வைத்து விட்டு மறுபடி கட்டிலில் சரிந்தான் மருது. தீர்ந்து போயிருக்கும் என்றாள் கல்பா. 

இன்னும் ஒண்ணு இருக்கு. 

சேர்ந்து குளிக்க மருது கொடுத்த யோசனையைத் தள்ளி முதலில் குளித்து வந்தாள் கல்பா. நேரம் ராத்திரி ஒன்பது. அடுத்து மருது குளித்துவிட்டு வரும்போது ஒன்பதரை ஆகியிருந்தது. பிட்ஸா ஆர்டர் செய்து அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. சாப்பிடும்போது, வாசு அழைத்தது நினைவு வந்தது. எச்சில் கையோடு லாப்டாப் கம்ப்யூட்டரை இயக்கினான் மருது.

ஆமாம்,  புட் ஆப்ஷனுக்குப் பதிலாக கால் ஆப்ஷன் வாங்கியிருக்கிறான் கலவி ஆர்வத்தில். 

ஐநூறு பவுண்ட் கூலி பெரிய தொகை இல்லை. மூன்று நாள் ஊதியம் அவன் நிர்வாகம் செய்யும் இந்திய இறக்குமதி நிறுவனத்தில். என்றாலும் அடிப்படை தவறை அவன் எப்படி நிகழ்த்தினான்? கல்பாவின் வடிவான உடல் இனியும் அவனை முழுக்கத் தன்வயப்படுத்தி இது போல் தவறுகளில் கொண்டு சேர்க்காது என்பதில் என்ன நிச்சயம்? கல்பா என்ன செய்வாள்? அவன் பிழைதான். புணர்ச்சி வேண்டியிருந்தால் அதோடு கூட ஆப்ஷன் ட்ரேடிங் எதுக்கு?  

அடுத்த ஆப்ஷன் வர்த்தகம் செவ்வாயன்று தொடங்கும்போது அது இந்த நஷ்டத்துக்கும் ஈடுகட்டி கூடுதல் லாபம் எடுக்கட்டும்.

படுக்கை அறையில் கல்பா கேயோஸ் தியரி பற்றிய புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தாள். பட்டாம்பூச்சி விளைவு என்ற கருதுகோள்படி, சிறு மாறுதல் மிகப் பெரும் மாறுதலை ஏற்படுத்தும். குருட்டு அதிர்ஷ்டம் என்று ஒன்றுமில்லை. அதற்கும் லாஜிக் உண்டு; எங்கேயோ எப்படியோ தொடங்கிய சம்பவம் வேறெங்கோ எப்படியோ எதிர்பார்க்காத முடிவுகளைத் தரும்.  பட்டாம்பூச்சியின் இறகுப் படபடப்பு ஒரு சுழல்காற்றில் முடியலாம். நிகழ்வுகளின் காரண காரியங்கள் முழுக்க விண்டுரைக்க முடியாவிட்டாலும், சிறிதாவது ஊகிக்கக் கூடும். இப்படி அந்தப் புத்தகத்தில் படித்து விட்டு கிறுக்குத்தனம் என்றான் மருது. அவனுக்கு இப்போது அது பிடித்திருந்தது.

ஆப்ஷன் நியூஸ் இண்டர்நெட் பத்திரிகை Here is a flash என்று திரையில் தலைப்பு மின்னியது. மருது என்ன என்று பார்த்தான். சந்தோஷ சமாசாரம்.

சீனாவும் தைவானும் அடுத்த வாரம்,  தொடங்கி ஒரு வாரம் கொண்டாடப் போகும் வசந்த விழா என்ற சீனப் பண்டிகைக்கு மிளகு தேவை.  

 பெருமழையால் ஏற்பட்ட யாங்ட்ஸீ நதியின் வெள்ளப் பெருக்கு காரணம் நதிக்கரை கோடவுண்களில் சேமித்து வைத்திருந்த இந்திய இறக்குமதி மிளகில் பாதிக்கு மேல் கெட்டுப் போய்விட்டதாக சீன அரசாங்க யந்திரம் அறிவிக்கத் தாமதமாகிப் போனது.  

தாய்வான் சமாளித்துக் கொள்ளும். சிறு நாடுதான். எனினும் செஞ்சீனத்துக்கு தைவான் மிளகு வேகமாக போய்க் கொண்டிருப்பதால் அங்கும் மிளகு   இன்னும் உடனடியாகத் தேவை. 

மிளகு தின்னும் போட்டி என்று நாடு முழுக்க, சின்னக் கிராமங்களில் இருந்து தலைநகர் பீஜிங்க் வரை வசந்தவிழாவில் எல்லாத் தெரு, பேட்டை, ஊர் அளவில் போட்டிகள் நடக்கும். வயிறு எரிய, வாய் உரைப்பில் எச்சில் வடித்திருக்க, கண்ணில் நீர் திரண்டு கொட்ட, மிளகுப் போட்டியாளர்கள் குறுமிளகாக அதைக் கடித்துச் சவைத்தும், அரைத்தெடுத்த மிளகு விழுதாகவும் உண்டு எரிச்சல் தணிய லிட்டர் லிட்டராக வெறும் பாலைக் குடிப்பார்கள். மிளகு உண்டது, பால் குடித்தது இரண்டுக்கும் சேர்த்து பரிசு நிர்ணயிக்கப்படும். 

அதோடு புத்தர் கோவில்களில் கபாடங்கள் மேலும், பிரகாரத்திலும், வரும் பாதையிலும், மரக்கிண்ணங்களில் மிளகும் உப்பும்  நிறைத்துக் காணிக்கையாக விடுப்பதும் நடக்கும். 

எல்லாம் மருது அலுவலகத்தில் உதவி நிர்வாகியாக இருக்கும் சாங் என்ற சீனருக்குத் தொலைபேசி அறிந்து கொண்டது. 

 நன்றி சாங். வசந்தவிழா வாழ்த்துகள். 

நன்றி மருது. 

எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள் வசந்த விழாவை சாங்? 

நானா, ஒரு பூவேலைப்பாடு அமைந்த பழைய காலக் கிண்ணத்தை எடுப்பேன். நல்ல காரமும் வாசனையும் கொண்ட கறுப்பு மிளகு ஒரு பிடி மிக்சியில் அரைத்து விழுதாக்குவேன். 

அதை விழுங்குவீர்களா? Extraordinary! 

நான் மிளகு விழுது சாப்பிடப் போகிறேன் என்று எப்போது சொன்னேன்? 

அப்போது அந்த மிளகு விழுதை என்ன பண்ண உத்தேசம் சாங்? 

மிளகு விழுதை அலங்காரமான கிண்ணத்தில் இட்டு, சகல மரியாதையோடும் எடுத்துப் போய் என் மாமியார் உட்காரும் இடத்தில் பூசி விடப் போகிறேன். 

மருது சிரிக்கத் தொடங்கும் முன் சாங்  டெலிபோனை வைத்துவிட்டார்.

நாளை சனிக்கிழமை, அடுத்து ஞாயிறு. ஆப்ஷன், பார்வேர்ட் வர்த்தகம் இல்லாமல் உடனடி மிளகு – பணம் கைமாற்றத்துக்கான ஸ்பாட் காண்ட்ராக்ட்கள் முளைத்து மிளகு விலையை எங்கோ கொண்டுபோகப் போகின்றன. அதுவும் இந்த ராத்திரிக்குள். ஆஸ்திரேலியாவிலும், நியூஸிலாந்திலும் commodities வர்த்தக மார்க்கெட் காலையில் திறக்கப்பட, மும்முரமான வர்த்தகம் தொடங்கி அடுத்தடுத்து மற்ற நாடுகளையும் பாதிக்கும், இந்தியாவில் இருந்தும், இந்தோனேஷியாவில் இருந்தும் பீய்ஜிங்-குக்கும், தைப்பே-க்கும் மிளகு உடனடியாக அனுப்பப்படும். சிலருக்குப் பின்னால் சந்தனத்தையும், மற்ற சிலருக்கு மிளகு விழுதையும் அப்பிவிட மிளகு வர்த்தகம் காத்திருக்கின்றது.  

மருது நினைத்தது சரிதான். அடுத்த  மூன்று மணி நேரத்தில் மிளகு மார்க்கெட்டில் உடனடி விற்பனைக்கான விலை கடகடவென்று உயர்ந்தது.

தவறாக ஏற்படுத்திய கால் ஆப்ஷன்படி மிளகு வாங்கி அதை லாபத்துக்கு விற்று மிளகு வர்த்தகம் ஆயிரத்து இருநூறு பவுண்ட் லாபம் சம்பாதித்துக் கொடுத்ததை எப்படி கொண்டாடலாம் என்று கேட்டாள் கல்பா. 

அவள் எதிர்பார்த்தபடி, அலமாரியைத் திறந்து எடுத்தபடி இன்னும் ஒண்ணு பாக்கி இருக்கு, ஒரு பாக்கெட் என்றான் மருது. 

Series Navigation<< மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டுமிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு  >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.