மரியா சிபில்லா!

கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதான அரிய நீல நிற வைரக்கல்லான  ஹோப் வைரம் உள்ளிட்ட பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் (Smithsonian National Museum of Natural History) ஒரு மதிய வேளை அது. அறிவியலாளரான சினிச்சி நகஹரா (Shinichi Nakahara) தனது மேசையின் இழுப்பறையை திறந்து அந்த கண்ணாடிப் பெட்டியை கவனமாக எடுத்தார்.1981 லிருந்து  அதனுள் இருந்த பதப்படுத்தப்பட்டிருந்த  பட்டாம் பூச்சியை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார். 

பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகள் துறையில் வல்லுநரான நகஹராவால் அந்த பட்டாம் பூச்சியை வெகு காலமாக, 2018  டிசம்பர் மாதமான அப்போது வரை இனம் காண முடியாமல் இருந்தது. அந்த அரிய கருப்பு வண்ண ஆண் பட்டாம்பூச்சியின் உடல் பனாமாவில் கிடைத்தது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் மாணவன் பாப்லோ (Pablo Sebastián Padrón) அதை கண்டு பிடித்து அதன் உடலை புகைப்படம் எடுத்து நகஹராவுக்கு அனுப்பி அதை இனம் கண்டு சொல்லும்படி கேட்டிருந்தான்.  பின்னர் அது பாடம் செய்து அங்கே சேமித்துவைக்கப்பட்டது. அந்த பட்டாம்பூச்சியை இனம் காண்பது பெரிய சவாலாக அமைந்துவிட்டது நகஹராவுக்கு. மேலும் ஒரு பட்டாம்பூச்சி கிடைத்தால் ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டு காத்திருந்தார்.

பளபளக்கும் கரிய இறக்கைகளும், இறக்கைகளின் விளிம்புகளில் பாலாடை நிறப் புள்ளிகளின் வரிசையும் கொண்ட அந்த பட்டாம்பூச்சி மிக வசீகரமாயிருந்தது. இறகுகள் இணையும் இடத்தில் இருந்த செந்தீற்றல் அதை மேலும் அழகாக்கி இருந்தது.

அதன் உடல் அமைப்பு பட்டாம்பூச்சிகளின் மிகப்பெரிய குடும்பமான பியரிடேவை (Pieridae) சேர்ந்தது என தெரிவித்தாலும் அதன் கருப்பு நிறம் சந்தேகத்துக்கு இடமளித்தது. எனவே நகஹராவும் பாப்லோவும் காத்திருந்தனர். 

அதிர்ஷ்டவசமாக, இரண்டு மாதங்கள் கழித்து மிஸிஸிபி பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளரான ஜான் (John MacDonald) பனாமாவிலிருந்து தன்னால் இனம் காணமுடியவில்லை என்னும் குறிப்புடன் ஒரு கருப்பு நிற பட்டாம்பூச்சியின் புகைப்படத்தை நகஹராவுக்கு அனுப்பியிருந்தார்.

புகைப்படத்தில் இருந்த பட்டாம்பூச்சி தன்னிடம் இருந்த அதே கருப்பு பட்டாம்பூச்சியை போலிருந்ததால், நகஹரா, ஜானிடம் அந்த பூச்சி உடலின் ஒரு காலை மட்டும் உடனே  அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். இரண்டின் DNA சோதனைகளையும் செய்து அவை Catasticta  பேரினத்தை சேர்ந்த  மிக அரிய வகை பட்டாம்பூச்சிகள் என்பதை கண்டறிந்தார். 

அதுவரை விவரிக்கவும், கண்டுபிடிக்கப்பட்டும் அடையாளம் காணப்பட்டுமிராத அவற்றின் வேறு மாதிரிகள் எங்கேனும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதா என அடுத்த 30 மாதங்களும்  14  பட்டாம்பூச்சி அருங்காட்சியங்களில் தேடிப்பார்த்த போது எங்குமே அவை இல்லை. எனவே  புதிய கண்டுபிடிப்பான அதற்கு பொருத்தமான பெயரை தேடினார் நகஹரா

அத்தனை அரிய பட்டாம்பூச்சிகளான அவற்றிற்கு 17ம் நூற்றாண்டின் பிரபல ஓவியக்கலைஞரும் பூச்சியியலில் பெரும் கண்டுபிடிப்புக்கள் செய்தவரும் பட்டாம்பூச்சிகளில் பேரார்வம் கொண்டிருந்தவருமான  மரியா சிபில்லா மெரியனின் (Maria Sibylla Merian) பெயரை வைக்க முடிவு செய்து அந்தப் பட்டாம்பூச்சிக்கு  Catasticta sibyllae என்று பெயரிட்டார்

மரியா சிபில்லா அவர் வாழ்ந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் மற்றும் ஓவியக்கலைஞராக அறியப்பட்டவர். 17ம் நூற்றாண்டில் பெண்கள் இருந்த நிலைக்கு மாறாக பல அரிய சாதனைகளை தாவரவியலிலும், பூச்சியியலிலும் செய்தவர்.

17ம் நூற்றாண்டின் பிரபல  தாவரவியல் ஓவியக் கலைஞரான  ஜெர்மனியை சேர்ந்த மரியா சிபில்லா (1647-1717) மிக இளைய வயதிலேயே கம்பளிப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகளிலும் அவை வாழும், உண்ணும் தாவரங்களிலும்  வெகுவாக  ஆர்வம் கொண்டிருந்தார். மரியாவின் மாமா ஒரு பட்டுப்புழு உற்பத்தியாளர், எனவே அவருக்கு அப்புழுக்களை கவனிப்பதில் இயற்கையாகவே ஆர்வம் உண்டானது

மரியா தனது 11ம் வயதிலிருந்தே ஓவியங்கள் வரையத் துவங்கினார். அவரது பொழுதுபோக்கு இறந்த பூச்சிகளை பாடம் பண்ணுவதில்  அவரது தாய் மாமாவுக்கு உதவுவதும், அவற்றை அலமாரிகளில் அடுக்கி வைப்பதும்தான். எனவே மரியாவிற்கு பூச்சிகளின் உலகில் நல்ல பரிச்சயமுண்டானது, 

ஜான்ஸ்டன் (Jonston) உருவாக்கிய முதல் விலங்கியல் அகராதியை அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அச்சகம் மரியா சிறுமியாக இருக்கையிலேயே வெளியிட்டது. அந்த அகராதியின் அழகிய வண்ணப்படங்களால் மரியா வெகுவாக  ஈர்க்கப்பட்டிருந்தாள். 

மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டில் ஏப்ரல் 2,  1647 ல்  சிற்பியும் பதிப்பக உரிமையாளரும் ஓவியருமான மேத்யூஸுக்கும் (Matthaeus Merian) ஜோஹன்னாவுக்கும் (Johanna Sibylla Heim) பிறந்தார்.  ஜொஹன்னா மெரியனின் இரண்டாவது மனைவி. மரியாவுக்கு 3 வயதாக இருக்கையில் தந்தை மேத்யூஸ் இறந்த பின்னர் ஜோஹன்னா உருவப்பட ஓவியரான  ஜேகப்பை  (Jacob Marrel-1613/14 – 1681)   மணந்துகொண்டார். 

மரியா ஒவியம் வரைவதை அவரது தாய் மறுமணம் புரிந்துகொண்ட பிரபல ஓவியரும் அவளது வளர்ப்புத்தந்தையுமான ஜேகப்பிடமிருந்து  கற்றுகொண்டார் .   

ஜேகப் ஒரு மலர் ஓவியர், உருவ வரைபட நிபுணர் மற்றும் தேர்ந்த சிற்பி.

ஃப்ராங்க்ஃபர்ட்டின் பிரபல உருவ வரைபட நிபுணரான  ஜார்ஜின் (Georg Flegel -1566-1638),   மாணவராக இருந்து ஓவியக்கலையை கற்ற இவர்   Utrecht க்கு 1632 ல் குடிபெயர்ந்தார். அங்கு உயிர் ஓவியக்கலை வல்லுநரான  ஜேனின் (Jan Davidsz. de Heem -1606-1683/4) அறிமுகம் உண்டானது. அக்கலையையும் ஜேகப் கற்றுத்தேர்ந்தார்

ஜேகப்பின் படைப்புக்களில் மிகவும் பிரபலமானவை மேசையின் மீதிருக்கும் கூடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கனிவகைகளும், பூச்சாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மலர்களும் தான். குறிப்பாக கனிகளின் மேற்புறத்தின் நுட்பமான அமைப்புக்களை ஜேகப் துல்லியமாக வரைந்திருப்பார்.

அழகிய உலோகக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் பீச், ரத்தினக்கற்களை போன்ற விதைமுத்துக்களை காட்டிக் கொண்டிருக்கும் மாதுளை, தோல் மீதிருக்கும் மெல்லிய வெண்படலத்துடன் காணப்படும் கொத்து கொத்தான திராட்சைகள்  ஆகியவை மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்.

ஜேகப்பின் ஓவியங்களில் பூச்சி அரித்த இலைகளும், பழுத்து அழுகிய கனிகளும் காணப்படும். எத்தனை அழகியதாயினும் அழிவு என்பது இயற்கையில் தவிர்க்க முடியாது என்பதை அவரது ஓவியங்கள் உணர்த்தின

ஜேகப்,  ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பிறந்தார். எண்ணெய் ஓவியங்கள் அவரது தனித்த பிரியத்துக்குரியவையாக இருந்தன. 1641ல் ஜேகப் கேதெரினா எலியட்டை மணந்தார். 1649ல் எலியட் மரணமடைந்த பின்னர் ஃப்ராங்க்ஃபர்ட்டில் வாழ்ந்துவந்த   பிரபல சிற்பியான மேத்யூஸ் மெரியனின் (Matthäus Merian) விதவையான  ஜொஹன்னா சிபில்லாவை (Johanna Sibylla Heimius)  1651ல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் மனைவியின் மகளான மரியாவை தனது மாணவராக்கிக்கொண்டு ஓவியக்கலையை கற்பித்தார்.

அப்போதிலிருந்து  அவர் இறந்த 1681 வரை அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டிலேயே பெரும்பாலும் வாழ்ந்தார்.

ஜேகப்பின் ஓவியங்களில் குறியீடுகள் மிக சிறப்பானவை. மலர்களில் பல்லியோ  பட்டாம்பூச்சிகளோ இருந்தால் அவை உயிர்த்தெழுதலையும், நத்தைகள் சோம்பேறித்தனத்தையும் குறித்தன 

கூரிய இதழ்களுடன் இருக்கும் நீண்ட ஊதா மலர்மஞ்சரிகள் தூய ஆவியை, வாடிய மலர்கள் மரணத்தை,  லில்லிகள் பணிவையும் குறித்தன. ட்யூலிப் மலர்களே அவரின் சிறப்பு ஓவியங்கள் என கருதப்படுகின்றன. ட்யூலிப் மலர்களின் ஓவியங்களும் அவற்றின் விலைகளும் குறிப்பிடப்பட்டிருந்த ஜேகப்பின் நான்கு ஓவியத்தொகுதிகள் மிக புகழ்பெற்றவை. மரியாவும் அவரை போலவே ட்யூலிப்களின் ஓவியங்களை வரைந்தார்.

ஜேகப்பின்  மறைவுக்கு பின்னர் அவரது மகனும் மரியாவின் சகோதருமான கேஸ்பர் மெரியன் மரியாவுக்கு செம்புப் பட்டயங்களில் செதுக்கோவியங்களை வரைய கற்றுக்கொடுத்தார். அக்காலத்தில் ஜெர்மனியில் பெண்கள் ஓவியம் வரைவதும் விற்பதும்  சில நகரங்களில் தடை செய்யப்பட்டிருந்தது.  ஆனால் மரியா வாழ்நாள் முழுவதும் ஓவியங்களை வரைந்தார்

மரியா  சிறுமியாயிருந்த போதிலிருந்து கர்ப்பமுற்றிருந்த போதும் , குழந்தை வளர்ப்பு காலங்களிலும், இல்பேணிக்கொண்டிருக்கையிலும் எப்போதும் வரைந்துகொண்டே இருந்தார்.

மரியாவுடன் ஓவியம் வரைய கற்றுக்கொண்ட ஜேகப்பின் மாணவரான ஜோகன்ஸைத்தான் (Johann Andreas Graff)  மரியா  1665ல்  காதல் திருமணம் செய்துகொண்டார். மரியாவின் கணவரும் கட்டிடக்கலை ஓவியங்களில் வல்லுநர். அவரது 9 பெரிய தாள்களில் வரையப்பட்ட st. பீட்டர்ஸ்  தேவாலயத்தின்  ஓவியம் மிக பிரபலமானது. ஆனால் மரியாவுடையது தோல்வியுற்ற தாம்பத்யம் .  

 1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார்,  Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின்  அத்தகைய குழுமங்களில் மலர்களின்  ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. மேலும் பல பூச்சிகளை தாவரங்களை மரியா வரைய இவை உதவியாக இருந்தன

 பெரும்பாலான் ஐரோப்பிய பூச்சி இனங்களை ஆராய்ந்திருந்த மரியா எப்படி அவை பிறக்கின்றன, வளர்கின்றன,உணவுண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இறக்கின்றன என்பதை முழுமையாக ஆய்வு செய்து  ஓவியங்களாக ஆவணப்படுத்தினார். 

Maria Sibylla Merian, Plate 18 (from \”Dissertation in Insect Generations and Metamorphosis in Surinam\”, second edition), 1719; Hand-colored engraving on paper, 20 1/4 x 14 1/2 in.; National Museum of Women in the Arts, Gift of Wallace and Wilhelmina Holladay; Photo by Lee Stalsworth

மரியாவுக்கு புழுக்கள் அழகிய பூச்சிகளாக உருமாறுவதை காண்பதில் பெருவிருப்பம் இருந்தது.  மரியா பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புக்களை கவனித்து அவற்றின் ஆண் பெண்  வேறுபாட்டுடன் ஓவியங்கள் வரைந்தார்

பூச்சிகளை குறித்த பயமமேதுமில்லாமல் அவற்றை கைகளில் பிடித்து கவனமாக உற்று நோக்கி பல ஓவியங்களை அவர் வரைந்தார். பல வகையான பூச்சிகளை வீட்டில் பெட்டிகளில் வளர்த்தார்

மரியாவின் வீடு சீசாக்களிலும் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு வளர்ந்த பூச்சிகளாலும் தொட்டிகளில் வளர்ந்த பல வகையான செடிகளாலும் நிறைந்திருந்தது

1679 ல் தனது இரண்டாவது மகள் பிறந்த ஒரு வருடத்தில், இரு வருடங்கள் கூர்ந்து கவனித்து வரைந்த ஓவியங்கள், தகவல்கள் அடங்கிய  ’’கூட்டுப்புழுக்களின் அதிசய உருமாற்றம்’’ என்னும் தனது    Der Raupen wunderbarer Verwandlung (the wondrous transformation of caterpillars  and their curios diet of flowers )  நூலை வெளியிட்டார். அவர் கைகளால் வரையப்பட்ட, பல வண்ணங்களில் இருந்த, வெகு அழகிய, மிக துல்லியமான பூச்சிகள், அவை அமரும் தாவரங்களின் ஓவியங்கள் அறிவியல் இலக்கியத்தின் புது வரவாக கவனம் பெற்றன,

அந்நூலில் பிற பூச்சியியல் நூல்களில் இருப்பதைப்போல செடிகொடிகளின் பின்னணியில் பூச்சிகளை வரையாமல் ஒவ்வொரு பூச்சிக்கும் அவற்றின் வாழிடத்துக்கும், உணவுக்கான தாவரத்துக்குமான தொடர்பையும் காட்சிப்படுத்தினார். 

உண்மையில் உலகின் முதல் சூழலியாளர் மரியாதான்  1683ல் இதன் இரண்டாம் படைப்பையும் மரியா வெளியிட்டார். தாவரங்களுக்கும்  விலங்குகளுக்குமான தொடர்புகளை மரியா அவரது ஓவியங்களில் ஆவணப்படுத்தியிருந்தார்.

லத்தீன் மற்றும் டச்சு மொழிகளில் சூழியல் அடிப்படைகளை தெளிவாக கொண்டிருந்த அந்நூல்கள் ஐரோப்பாவில் பெரும அதிர்வலைகளை எழுப்பியது

1681ல் தந்து வளர்ப்புத்தந்தை ஜேகப் இறந்தபின்னர் மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு திரும்பி தன் அன்னையுடன் வசித்தார் அப்போதும் பல படைப்புக்களை வெளியிட்டார்

1686ல் தவளைகள் அவற்றின் முட்டைகள், தலைப்பிரட்டைகளின் ஓவியங்களுடன் மரியா வெளியிட்ட ஓவியங்களும் குறிப்புக்களும் அவருக்கு பின்னர் வந்த டச்சு நுண்ணோக்கியலாளரான ஆண்டனி வான் லூவன் காக்கின் (1632-1723)  அதேபோன்ற கண்டுபிடிப்புக்கு   வெகுவாக முன்னால் இருந்தது. மரியாவே முதன் முதலில் இருவாழ்விகளின் இனபெருக்கவியலை ஆவணப்படுத்தியவர் 

1698ல் மரியா  தனது ஓவியங்களை ஏலம் விட்டு பெருந்தொகை பெற்று பூச்சிகளை அவற்றின் வாழ்விடத்துடன் இணைத்து வரையத் துவங்கினார். அதன் பின்னர் மரியா உலகெங்கும் ஒரு தாவரவியலாளராக, பூச்சியியலாளராக ஓவியக் கலைஞராக, இயற்கையியலாலராக அறியப்பட்டார்.

 அக்காலகட்டத்தில் பிரபலமாக  இருந்த  அலங்கார ஓவியங்களைப் போலல்லாமல் தேவையற்ற  வரியோ, வண்ணமோ இல்லாமல் தன் கண்களால் கண்டவற்றை அப்படியே  கைகளால்  வரைந்தார் மரியா 

17ம் நூற்றாண்டின் பழமையான கலாச்சாரத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியல் குறித்த  பல ஆய்வுகள் செய்தார், ஆனால் .அக்காலத்தில் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு பெண்களுக்கானதல்ல  என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்

அப்போதிலிருந்து இன்று வரைக்கும் மரியா கலாச்சார தடைகளை உடைத்து வென்று முன்னேறிய பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் கருதப்படுகிறார். மரியாவின் ஓவியங்கள் மிக துல்லியமான அறிவியல் அடிப்படைகளையும் மிகச்சரியான வண்ணங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூச்சிகளையும் அவற்றின் முட்டைப் பருவத்திலிருந்து படிப்படியாக கவனித்து அவற்றின் இறப்பு வரை வரைந்து ஆவணப்படுத்தினார்

ஓவியங்களில்  இருந்த பூச்சிகள், தாவரங்கள் குறித்த இனப்பெருக்கவியல் உள்ளிட்ட பல   மிக விவரமான தகவல்களையும் மரியா எழுதினார் . மரியாவே பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் குறித்து ஓவியங்களில் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்திய முதல் பெண்மணி.   

 17 வருட மணவாழ்வு 1685ல் விவாகரத்தில் முடிந்த பின் மரியா நெதர்லாந்தின்  (Friesland) மதம்  சார்ந்த  Labadists என்னும் அமைப்பில் தன் சகோதர கேஸ்பருடன்  இணைந்துகொண்டார். அவ்வமைப்பு கிருத்துவம் சார்ந்த பல சேவைகளை செய்து வந்தது. அக்குழுவின் நோக்கமும் நம்பிக்கையும் இயற்கையின் படைப்புகளை நெருங்கி அறிவதன் மூலம் அவற்றை படைத்த கடவுளை அறியலாம் என்பது.  அங்கு மரியா மேலும் ஓவியங்கள் வரையலானார் இரண்டு வருடங்களில் மரியாவின் பல ஓவியங்களின் தொகுதிகள் அவ்வமைப்பின் அச்சுக்கூடத்தில் பிரசுரமாகியது.

அந்த மத அமைப்பில்  அவரது  கணவர்  Graff தானும் இணைந்துகொண்டு மீண்டும் மரியா தன்னுடன் வாழவேண்டுமென பல தகராறுகள் செய்தார். 1692 ல் தாயும் இறந்த பின்னர்  மரியா ஆம்ஸ்டர்டாமுக்கு சென்று  மகள்களுடன் வசித்தார். அங்குதான் பெண்களும் வணிகம் செய்யலாம் என்பதை கண்டுகொண்டார்   அங்குதனது  ஓவியங்களை விற்று கிடைத்த வருமானத்தில் சுயமாக வாழ்ந்தார். 

1698ல் மரியாவும் மகள்களும் ஆடம்பரமான ஒரு வீட்டில் வாழ்ந்தனர்.

ஆம்ஸ்டர்டாமில் மரியாவின் படைப்புகள் நல்ல விலைக்கு போனது. அங்கு அவர் உலகின் பல பாகங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பாடமாக்கப்பட்ட  பல பெரிய பட்டாம்பூச்சிகள் அருங்காட்சியகங்களின் கண்ணாடிச்சட்டகங்களில் ஊசியால் பிணைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.எனினும் அவர் அவற்றை ஒரு போதும் வரையவில்லை. பூச்சிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களில் வரையவே விருப்பம் கொண்டிருந்தார்.

1699ல் ஆம்ஸ்டர்டாம் அரசு  மரியாவிற்கும் மகள் டோரதியாவுக்கும் சுரிநாம் செல்ல அனுமதி அளித்தது. அங்கு ஐந்தாண்டுகள் இருப்பதாக பயணத்திட்டம் இருந்த்து எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மலேரியா தொற்று உண்டானதால் அவர் ஆம்ஸ்டர்டாமிற்கு திரும்பினார். அந்த  பயணத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு மரியா தனது 255 ஓவியங்களை விற்றிருந்தார். அப்போது அறிவியல் நூல்களுக்கான மொழியாக லத்தீன் இருந்தது. எனவே மரியா லத்தீன மொழியை கற்றுக்கொண்டார்

அப்போது அதிகம் அறியப்பட்டிருக்காத அறிவியல் ரீதியான தேடலுக்கென மரியா அந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஜூன் 1699ல்  தனது 52வது வயதில்  மகள் டோரதியாவுடன்     தென்னமெரிக்காவின் சுரிநாமிற்கு மரியா பயணப்பட்டார். அது ஒரு மிக துணிச்சலான பயணம் அதற்கு முன்பு வரை ஆண்களால் அரசியல், பொருளாதார ராணுவ காரணத்துக்காகவே அப்படியான தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில்  அரிய பொருட்களை தேடும் பொருட்டு கடற்பயணம் மேற்கொண்ட ஆண்களில் யாரும் மரியாவை உடனழைத்துச் செல்லவில்லை.

அப்போதைய ஆணாதிக்க உலகில் ஒரு 52 வயது பெண்ணாக அவர் அறிவியல் தேடலுக்கு ஒரு பயணத்தை முன்னெடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். தனது ஓவியங்களை விற்றுக்கிடைத்த நிதியை கொண்டே மரியா பயணத்தை செய்துமுடித்தார்.

சுரிநாமில் 2 வருடங்கள் மரியா தன் கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் சேகரித்தார். தலைநகர் Paramariboவின் பூங்காக்களில், சுரிநாம் ஆற்றின் கரைகளில், கரும்புத் தோட்டங்களில் மட்டுமல்ல அந்த ஆற்றை சிறு படகில் கடந்து மழைக்காடுகளிலும் தனியே பயணித்து அங்கு வாழ்ந்த தொல்குடிகளை சந்தித்து அவர்களிடமிருந்தும் பல பூச்சிகளை பெற்றார். பூச்சி, புழுக்கள் மூலிகைகள் குறித்த தகவல்களை சேகரித்தார்.  தொல்குடியினரும் மரியாவின் மீதான அன்பினால் காடுகளுக்குள் துணையாக வந்து அவரது ஆய்வில் உதவினார்கள்.

சுரிநாமில் இரு அடிமைப் பணிப்பெண்கள் மரியாவிற்கு உதவினர். மரியாவின் அத்தனை புகழுக்கும் இந்த அடிமைபெண்களே காரணம் என சொல்லப்படுகிறது. சில படைப்புக்களில் அவர்களிருவரின் பெயர்களை குறிப்பிடாமல் இரு இந்திய அடிமைப் பணிப்பெண்களுக்கும் தனது நன்றியை மரியா தெரிவித்திருக்கிறார்.

பல மரங்களில் மரியா ஏணியில் ஏறி உயரங்களில் வாழ்ந்த பூச்சிகளை சேகரித்தார்.  மலேரியா காய்ச்சல் வந்ததால் 1701ல் தான் மரியா மீண்டும் ஆம்ஸ்டர்டாமுக்கு திரும்பினார். இந்தப் பயணத்தின் ஆய்வு முடிவுகள் தான் மரியாவின் பெரும்படைப்பான Metamorphosis insectorum Surinamensium

 1705.ல் அவரது மிக பிரபலமான படைப்பான  ’’Metamorphosis Insectorum Surinamensium’’ வெளியானது அந்நூலில் சுரிநாமின் புழுக்கள், தேரைகள், எறும்பு, பல்லி, நாகம், சிலந்திகள் மற்றும் பலவித  பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் தெளிவாக ஆவணப்படுத்த பட்டிருந்தன

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட  பல செதுக்கு ஓவியங்களுடன் கூடிய அந்த ஆடம்பரமான வண்ணமயமான  இந்த  நூலிலிருந்த மழைக்காடுகளின், தாவரங்களும், பல்லி பாம்புகள் உள்ளிட்ட பூச்சி இனங்களும் பல நாடுகளின் இயற்கை ஆர்வலர்களின் வீடுகளுக்குள் நுழைந்தன.

மலர்மஞ்சரிகளில் அமர்ந்திருக்கும் நீல பட்டாம்பூச்சிகளும், உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டிருக்கும் அந்துப்பூச்சிகளும், முட்டைகளும் தலைப்பிரட்டைகளும் சூழ இருக்கும் கொழுத்த தவளைகளும், பல இலைகளை தின்று கொண்டிருக்கும் வரிகளுடன் கூடிய கூட்டுப்புழுக்களும், மரங்களின் மீது ஏறிக்கொண்டிருக்கும் எறும்புகளும் இருக்கும் அவரது ஓவியங்கள் தத்ரூபமாகவும் அழகாகவும் மட்டுமல்லாது, அறிவியல் ரீதியாக மிகச் சரியாகவும் இருந்தன. பல ஓவியங்களில் மலரிதழ்களில் பூச்சிகள் உண்டாகிய துளைகளும் பாதி கடிக்கப்பட்ட இலைகளும், இதழ்களே இல்லாத மலர்களும் இருந்தன.

மரியாவின் நூல் ஏதேன் தோட்டம்போல அழகாக உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையின் விதிக்குட்பட்ட உயிரினங்கள் உள்ளபடிக்கே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன

 மரியா இந்த நூலை வெளியிட்ட போது அவரது சமகால அறிஞர்கள் உயிர்களின் உயிர்களின் தன்னிச்சையான தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்து நம்பப்பட்ட ’’உயிர்கள் உயிரற்றவைகளிலிருந்து தன்னிச்ச்சையாக தோன்றின என்னும் கருதுகோளான spontaneous generation விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மரியாவின் படைப்புக்கள் பூச்சிகளின் சிறுவிலங்குகளின் இனப்பெருக்கத்தை துல்லியமாக காட்டின. ஆண்பெண் வேறுபாட்டை இனப்பெருக்க உறுப்புக்களை துல்லியமாக விவரித்த மரியாவின் நூல் அப்போது பெரிய பேசு பொருளாக இருந்தது.

மாமிசம் உண்ணும் பூச்சிகள் அழுகும் இறைச்சியிலிருந்தும், மேலும் பல பூச்சிகள் புத்தகங்களுக்குள்ளிருந்தும், பனித்துளிகளிலிருந்து அந்துப்புச்சிகளும்,  எலிகளும் தேள்களும் பழைய நைந்து போன கம்பளியிலிருந்தும் தோன்றுவதாக  பலர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கையில் மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியலை ஓவியங்களில் ஆவணப்படுத்தினார். 

 மரியா உலகின் பல அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரது படைப்புக்கள் பலநாடுகளின் நூலகங்களில் பெருமைக்குரிய சேகரிப்பாக காட்சிப்படுத்தப்பட்டன. ஜெர்மனியின் மிகப்புகழ் பெற்ற கவிஞரும், பூச்சிகளின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆர்வம் கொண்டிருந்தவருமான  கோத்தி (Goethe) மரியாவை கலைக்கும் அறிவியலுக்குமிடையில் வண்ணமயமாக பயணித்தார் என்று புகழ்கிறார்.

 17ம் நூற்றாண்டில் பெண்கள் எளிதில் செய்துவிடமுடியாத துணிச்சலான பலவற்றை செய்தவரும் அசாதாரணமான அறிவியல் படைப்புக்களை உருவாக்கியவருமான மரியாவின் படைப்புகளின் முக்கியத்துவத்தை அந்த நூற்றாண்டில் பலரறிந்திருகக்வில்லை  

மரியா  ஓவியங்களை வரைய துவங்கி இருக்கையில் அவரது ஓவியங்களில் இருந்த பல பட்டாம்பூச்சிகள் இனம் காணப்பட்டிருக்கவில்லை. மரியாவிற்கு பூச்சிகளை இனங்கண்டு வகைப்படுத்தலில் ஆர்வமில்லை அவரே ஒருமுறை சொன்னது போல அவை எப்படி உருவாகி உருமாறி வாழ்வை முழுமை செய்கின்றன என்பதில்தான் ஆர்வமிருந்தது.  வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் பிற்பாடு மரியாவின் பல படைப்புக்களை பூச்சிகளின் வகைப்பாட்டின்போது உதவியாக வைத்துக்கொண்டார்.  

ஜெர்மானிய விலங்கியலாளர்  Ernst Haeckel  சூழலியல் என்று பொருள்படும்  Oecologie என்னும் சொல்லிலிருந்து ecology என்னும் சொல்லை உருவாக்கியதற்கு இரு  நூற்றாண்டுகள் முன்னரே மரியா சூழலியல் தொடர்புடைய பல நூறு ஓவியங்களை வரைந்திருந்தார்

 பல ஓவியங்களில் மரியா உணவுச்சங்கிலியையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். 

Metamorphosis நூலின் 18 வது ஓவியத்தில் ஒரு கொய்யா மரத்தின் இலைகளை எறும்புகளும், இலை வெட்டும் பூச்சிகளும் கடித்து தின்றுகொண்டு, தண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எறும்புகள், சிறு சிலந்தியொன்று, ஒரு கரப்பான்பூச்சியின் அருகில் ஒரு டாரன்டுலா சிலந்தி ஒரு தேன்சிட்டுவை தின்று கொண்டிருக்கிறது,  சினைப்பையுடன் ஒரு டாரண்டுலாவும் காணப்படுகிறது. 

உயிரினங்களின் வாழ்விற்கான போராட்டத்தை,  சார்லஸ் டார்வின் தனது   Origin of Species, வெளியிடுவதற்கு 150 வருடங்களுக்கு முன்னரே மரியா  தனது படைப்புகளில் விவரித்திருந்தார்.

1670 ல் அவர் வெளியிட்ட கேட்டர்பில்லர் நூலில் ஆண் பெண் பட்டாம்பூச்சிகள் கூடி முட்டை இட்டு புழுக்கள் உருவாகின்றன என்பதை முதன்முதலில் எழுதி ஆவணப்படுத்தி இருந்தார்.

மரியாவின் படைப்புகள் பிற அறிவியல் படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. உதாரணமாக வாழைமரத்தின் ஓவியத்தில் அவர் அதன் தாவரவியல் பண்புகளுடன் வாழைப்பழத்தின் சுவையையும் விவரித்திருந்தார். ஐரோப்பா அதுவரை அத்தகைய படைப்புகளை கண்டிருக்கதில்லை.

 பனையின் வேரை வெட்டி வேகவைத்து உண்ணலாம் என்னும் குறிப்புடன், அவை ஆர்டிசோக்குகளின் மையப்பகுதியை காட்டிலும் சுவையானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பல ஓவியங்களில்  தாவரங்களின் மருத்துவ இயல்புகளையும் மரியா குறிப்பிட்டிருக்கிறார்.  

1715ல் பக்கவாதம் தாக்கி உடலின் ஒரு பாகம் செயலிழந்தது, அந்நிலையிலும் மரியா ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார். 

மரியாவிற்கு இரு மகள்கள் ஜொஹானா மற்றும் டோரதியா (Johanna Helena Herolt Graff&    Dorotea Maria Hendriks Graff).மரியாவின் மகளான  ஜொஹானாவும் மிகப்புகழ்பெற்ற ஓவியர். ஜொஹானாவின் பல படைப்புகளில் அவளது தாயின் கையெழுத்தையும் காணலாம்’

மரியா ஜனவரி 13, 1717 ல் அவரது 70 வது பிறந்த நாளுக்கு முன்னர் இறந்த போது அவரது இறப்புச்சடங்கிற்கு வந்திருந்த  ரஷ்யப் பேரரசர் முதலாம்  பீட்டர் அலெக்சியேவிச் ரொமானோவின் தூதுவர் மரியாவின் வீட்டில் மீதமிருந்த வண்ணக்கலவைகளை பெரும் விலைக்கு பெற்றுக்கொண்டார்.

மரியாவின் இறப்புக்கு முன்னரே அவரது படைப்புகளில்  ரஷ்ய பேரரசர் பீட்டர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குபின்னர் அவரது மீதமிருந்த பெரும்பாலான படைப்புக்களை அவரே பெருவிலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.  

மரியா இறந்தபின்னர் St. Petersburgல் அவரால் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில்  ஓவியரான டோரதியாவின் கணவர் ஜார்ஜுக்கு (Georg Gsell) நல்ல பதவியளித்து அரசவை ஓவியராகவும் வைத்துக்கொண்டார். டோரதியாவும் அங்கேயே பின்னர் வாழ்ந்தார்.

மிக சிறப்பான படைப்பாளியாக இருந்தும் உலகால் அங்கீகரிக்கப்படாத ஜேகப் மரணப்படுக்கையில் இருக்கையில் ’’இல்லை நான் முற்றிலும் உலகால் மறக்கப் படமாட்டேன், நான்தான் மரியாவின் தந்தை என உலகம் என்னை நிச்சயம் ஒரு நாள் கொண்டாடும்’’ என்றார், மரியா ஜேகப்பை காட்டிலும் பிரபலமானார்.

மரியாவின் caterpillars நூலின் மூன்றாவது  தொகுப்பை மரியாவின் மறைவுக்கு பின்னர் டோரதியா வெளியிட்டார். அவரது metamorphosis நூல் 18 ம் நூற்றாண்டில் பல  மறுபதிப்புக்கள் வெளியாகி அவர் பெயரை  உலகெங்கும் பரப்பின.

சிறப்புகள்

மரியாவின்றப்புக்கு வெகுகாலம் கழித்தே அவரது படைப்புக்களின்  முக்கியத்துவம் உலகால் அறியப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மரியாவின் படைப்புகள் மீண்டும்  உலகின் கவனத்துக்கு வந்தன. அவரது பல படைப்புகள் அப்போது சிறப்பு செய்யப்பட்டன

 • 1905ல்  Opsiphanes cassina meriana என்னும் பட்டாம்பூச்சியும் 1967ல்  பட்டாம்பூச்சியின் துணை சிற்றினமொன்றிற்கும் postman butterfly Heliconius melpomene meriana;  என்றும் மரியாவின் பெயரிடப்பட்டது. 
 • க்யூபாவின் ஒரு அந்துபூச்சிக்கு  Erinnyis merianae என்றும் ஒரு  வண்ணமயமான வண்டினத்துக்கு  Plisthenes merianae என்றும் பெயரிடஒபட்டது.  
 • கும்பிடு  பூச்சியின் பேரினமொன்று  Sibylla என்றும், ஆர்கிட் வண்டினமொன்று  Eulaema meriana என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.
 • Argentine black and white tegu (Salvator merianae), என்னும் வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்படும் பெரிய பல்லி வகைக்கும் அவரது பெயரடிப்பட்டிருக்கிறது.
 • மரியாவின் சிலந்திகள் குறித்த படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு  பறவைகளை பிடித்து உண்ணும் சிலந்தியொன்றிற்கு  Avicularia merianae  என்று பெயரிடப்பட்டது.
 • 2017ல் மற்றுமொரு சிலந்தி Metellina merianae என்று அவர் பெயரிடப்பட்டது 
 • ஒரு தேரை  Rhinella merianae என்றும் ஒரு நத்தை Coquandiella meriana  என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன
 • ஆப்பிரிக சிறு பறவையினம் இன்றிற்கு Saxicola torquatus sibilla.   எனப்பெயரிடப்பட்டிருக்கிறது.
 • ஒரு தாவர பேரினத்துக்கு  Meriania எனவும், ஒரு தாவர சிற்றினம் Watsonia meriana   எனவும் பெயரிடப்பட்டது.
 • 2009  வெளியான The Year of th Flood   என்னும் நாவலில் மரியா ஒரு துறவியாக காட்டப்பட்டிருந்தார்.
 • மரியாவின் உருவப்படம் ஜெர்மனியின் 500 DM நோட்டில் சித்தரிக்கப்பட்டது 
 • அதுபோலவே  0.40 DM தபால் தலையில் அவரது உருவப்படம் சித்தரிக்கப்பட்டு செப்டம்பர் 17 1987ல் வெளியிடப்பட்டது. மரியாவின் பெயரில்  ஐரோப்பாவில் பல பள்ளிகள் இருக்கின்றன,
 • மொசார்ட்டின் கச்சேரிகளில் இசைக்கருவிகளில் மரியாவின் மலரோவியங்கள் சித்தரிக்கப்பட்டன.
 • 2008ல்  பனாமாவின் அரிய கருப்பு பட்டாம்பூச்சியொன்றிற்கு Catasticta sibyllae  பெயரிடப்பட்டது.
 • 2013, ஏப்ரல் 2 ம் தேதி மரியாவின் 366 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது  பூச்சிகள், பல்லிகள் தாவரங்களின் ஓவியங்களிலேயே கூகுள் என வடிவமைத்து சிறப்பித்திருந்தது .
 • ஜெர்மெனியின் இரண்டாவது  பெரிய நவீனமயமாக்கபப்ட்ட ஆய்வுக்கப்பலுக்கு   மரியாவை கெளரவப்படுத்தும் விதமாக  RV Maria S. Merian  என்று பெயரிடப்பட்டது
 • 2016ல் மரியாவின், Merian’s Metamorphosis insectorum Surinamensium  மறு பிரசுரம் செய்யபட்டது.
 • 2017ல்  மரியாவின் ஓவியங்கள் குறித்த ஒரு கருத்தரங்கு ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்தது 
 • மார்ச் 2017ல்,  ஓஹியோவின் Lloyd நூலகம் மற்றும்   அருங்காட்சியகத்தில்  மரியாவின் பல ஓவியங்களின் முப்பரிணாம  கண்காட்சியையும், பாடம் செய்யப்பட்ட பல பூச்சிகளின் கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது
 • நியூயார்க் டைம்ஸின் 2017 ஜனவரி இதழில் மரியா உலகின் முதன் முதலாக பூச்சிகளை அவற்றின் வாழிடம் உணவு ஆகியவற்றுடன் வரைந்து ஒரு கூட்டு சூழலியல் தொகுப்பாக ஓவியங்களை வரைந்த முதல் ஆளுமை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது

மரியா அசாதாரணமான , மிக ஆர்வமுள்ள, அதிபுத்திசாலியான சுயசார்புள்ள பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.

மரியா உயிரனங்களுக்கான தொடர்புகளை ஆவணப்படுத்திய முதல் அறிஞரும் கலைஞருமாவார் 

அப்போது உருவாகி இருக்காத சூழலியல் துறையை நிறுவியவரகவும் மரியாவே கருதப்படுகிறார் ஏனெனில் மரியாவின் ஓவியங்கள் உணவுச்சங்கிலி, உயிரினங்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு, எவ்வாறு அவற்றின் வாழிடம் அவற்றின் வாழ்க்கையில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது, எப்படி வாழ்விற்கான போராட்டத்தில் வலியவை வெல்கின்றன ஆகியவற்றை  காட்டுகின்றன. இவற்றின் தொகுப்பைத்தான்  இப்போது சூழலியல் என்கிறோம்

 உயிரற்றவைகளிலிருந்து தானாகவே உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் கருதுகோளை முதலில் பொய்ப்பித்தவரும் மரியாதான்.

அறிவியலை தங்களது பாதையாக தீர்மானம் செய்யும் பெண்கள் மரியாவை முன்னோடியாக கொள்ளலாம், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாதையேதும் இல்லாத பிரதேசங்களில் மரியா புதிய பாதைகளையும், அறிவியலுக்கும் கலைக்குமிடையேயான பாலங்களையும் உருவாக்கினார் பூச்சியியலுக்கும் தாவரவியலுக்குமான  தொடர்புகளை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆர்டிஸ் லைப்ரரி அருங்காட்சியங்களில்  லின்னேயஸ், அரிஸ்டாட்டில், சார்லஸ் டார்வின் உள்ளிட்ட 35 ஆண் அறிஞர்களின் படைப்புக்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்களில்  M.S.Merian என்னும் பெயரைப்பார்த்தால் கூர்ந்து கவனியுங்கள்,  அறிவியல் வரலாற்றில் மரியா விட்டுச்சென்றிருக்கும் வண்ணச்சுவடுகள் அதில் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.